காலை நேரக்காதல்!




ஒவ்வொரு நொடியும் தீண்டும் தென்றலின் சுகத்தை வேண்டும் மனுசியாகவே இருந்தேன். தேன் சுரக்கும் மலர்கள், அவை வெளியிடும் நறுமணம் வண்டுகளை ஈர்ப்பதற்காகத்தான் என்பதை அறிகையில் ‘மனிதர்களை விட மலர்களுக்கு ஓரறிவு கூடுதலோ…?’எனும் கேள்வி என் மனதுள் எழும். ‘ஒன்றையொன்று காதலால் ஈர்க்கவே மொத்த படைப்பும் என்பதே இயற்கை விதித்த நியதியோ….?’ மனப்புத்தகத்தில் கவிதை வரிகள் விரிவதைக்காண்பேன்.

‘புனித மலர்கள் நறுமணத்தை வெளிப்படுத்துவது போல், மனித மனங்கள் ஏன் நற்குணத்தை வெளிப்படுத்துவதில்லை? மலர்களின் நறுமணங்களுக்கு இணையானது மனிதர்களின் நற்குணங்கள். நற்குணங்கள் பொற்குவியல் போன்றவை. துர்குணங்களை வெல்பவை’ எனும் சிந்தனை தோன்றும்.
கம்பன் முதல் கண்ணதாசன் வரை கவிஞர்களின் எழுத்துக்களிலும், காதல் ஓவியம் முதல் காதல் தேசம் வரை சினிமாக்கள் பேசிய வசனங்களிலும் இந்த சிந்தனைகளைகள் தானே மேலோங்கியிருந்தது. காதல் என்பது நற்குணங்களின் வெளிப்பாடு. நம்பிக்கையின் மறு உருவம். வாழும் போது அடையும் மோட்சம்.
நறுமண வருகை நாசிக்கும், ஒலியின் பெறுகை செவிக்கும், இணையின் தொடுகை உடலுக்கும், ஒளியின் படுகை கண்களுக்கும், தேனின் இடுகை நாவிற்கும் ஐம்புலன்களை மகிழ்விப்பது போல் அவையனைத்தும் ஒருசேர பெறும் நிலை எதிர் பால் ஈர்ப்பு மொத்தமாக நம்மை கட்டிப்போட்டு விடுகிறது. இவற்றிற்குத்தான் மனம் இணங்குகிறது. மன இணக்கமே வாழ்வின் பூரணம். குமரிப்பருவத்தின் அபரிமிதமான சிந்தனையோட்டம் என்னை சில சமயம் அச்சப்படவும் வைக்கும்.
தினமும் ஐந்து மணிக்கு எழுந்து விடுவேன். அம்மா நினைப்பதுண்டு வாசல் தெளித்துக்கோலம் போட என்று. அப்பா நினைப்பதுண்டு படிப்பதற்கு என்று. பக்கத்து வீட்டு முகன் நினைப்பதுண்டு தான் வாக்கிங் போகையில் தன்னைப்பார்பதற்குத்தான் என்று. மலர்கள் கூட நினைப்பதுண்டு தம்மை பூஜைக்கு பறிப்பதற்கு என்று. எனக்கு மட்டும் தான் தெரியும் காதலோடு நம்மைத்தீண்ட வரும் காலைத்தென்றலின் சுகத்தை அனுபவிக்க என்று.
எத்தனை மனிதர்களுக்குத்தெரியும் அதிகாலை வேளையின் அற்புதங்கள்? நேரமே எழுதலின் சுகம் எட்டு மணி வரை உறங்குபவர்கள் பாவம் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. வாகனம் செல்லும் பாதைகளிலும் சரி, அலை பேசியின் நெட்வொர்க் பாதைகளிலும் சரி, நம் சிந்தனை செல்லும் பாதைகளிலும் சரி அதிகாலை நேரத்தில் டிராபிக் இருப்பதில்லை.
அதிகாலை சிந்தனையில் ஒரு நொடியில் கிடைக்கும் விசயம், அதன் பிறகு மணிக்கணக்கில் யோசித்தாலும் கிடைப்பதில்லை. ஞானிகளும், யோகிகளும், கவிஞர்களும், கதாசிரியர்களும், படிப்பாளிகளும் அதிகாலை நேரத்தில் எழும் நோக்கம் தற்போது எனக்கும் புரிய ஆரம்பித்தது. இதை ‘காலை நேரக்காதல்’ என மனப்புத்தக டிக்ஸ்னரியில் புதிதாக ஒரு வார்த்தையைக்கோர்த்திருந்தேன்.
“புவனா…. அடியே புவனா… எதுக்கடி காரங்காத்தாலே தூக்கத்தக்கெடுக்கறே…? முதல்ல போன்ல அலாரம் வைக்காதே… லைட் போடாதே…. நீ சாமத்துக்கு எந்திரிக்கோணும்னு நெனைச்சீன்னா போர்டிகோவுல போய் படுத்துக்கோ. சம்பளமில்லாம செக்யூரிட்டி கெடைச்சாப்லயும் இருக்கும், நல்லா தூக்கமும் எனக்கு வரும்” சொன்ன அக்கா பவுனாவைப்பார்த்து முறைத்தேன்.
“வேணும்னா மச்சானை தொணைக்கு கூப்புட்டுக்கட்டுமாக்கா…?
“அடி…. செ…. செவத்த புள்ளைன்னு சொன்னேன்” சொல்லி விட்டு ஈ…ஈ… என எகுறு தெரிய நரியைப்போல் பற்களைக்காட்டினாள்.
“எனக்குத்தெரியாதா…? மச்சானை யாரும் திருடிக்கப்படாதுன்னு நீ முந்தானைலையே முடிஞ்சு வெச்சிருக்கிறது. உனக்கு மட்டும் பெரிய சோசியரு கிட்டப்போயி அப்பா பொருத்தம் பார்த்திருப்பாரு போல. நம்ம பால்காரரு ஊத்தர பால்ல எப்பவும் தண்ணி கலந்தே இருக்கற மாதிரி கல்யாண வீட்டுக்குப்போனாலுஞ்சேரி, எழவு வீட்டுக்குப்போனாலுஞ்சேரி எங்க போனாலும் ஒன்னாவே போறீங்க, வாறீங்க. அது மட்டும் எப்படின்னு கொஞ்சம் எனக்குஞ்சொல்லிக்கொடே….”
“போடி….” எனக்கூறி வெட்கத்தை முழுமையாக வெளிப்படுத்தியவள், “கல்யாணமாகாத கழுதை கேட்ககற கேள்வியப்பாரு. மொதல்ல உனக்கு கல்யாணமாகட்டும். அப்பறமா கேளு…அந்த சீக்ரெட் விசயத்த சொல்லிக்கொடுக்கறேன்” சொன்ன அக்காவை கட்டியணைத்துக்கொண்டேன்.
அக்கா என்றால் அம்மா மாதிரி எனக்கு மட்டும்.
அம்மா நான் பிறந்த பின் நோயில் படுக்க, பத்து வயது மூத்தவளான அக்கா தான் என்னை அம்மாவைப்போல் வளர்த்தவள். அவளுக்கு கல்யாணத்துக்கு முன்பே இரண்டு குழந்தைகள். குழந்தையைப்போல் எந்த வேலையும் செய்யாமல் நோயால் பாயிலேயே படுத்திருக்கும் அம்மா, அம்மாவால் வளர்க்க இயலாத நான். பள்ளிக்கும் சென்று விட்டு வந்து வீட்டு வேலைகளையும் சடவில்லாமல் செய்வாள்.
அவளது நல்ல மனதுக்கு ஒரு நல்ல கணவனை கடவுள் கொடுத்து விட்டார். அவள் மனிதர்களில் தென்றலைப்போன்றவள். பிரதிபலன் பார்க்காமல் வெள்ளந்தியாக வேலை செய்வாள்.
அக்கா இப்போதெல்லாம் மாதம் ஒரு முறை மட்டுமே வருகிறாள். வரும் போது குழந்தைகளை அழைத்து வந்தால் என்னுடன் பேசுவது கெடும், அம்மாவுடனும் நேரம் செலவிட்டு, எங்களுக்கு பிடித்த ருசியான உணவு வகைகளை ஒரு நாளாவது செய்து கொடுக்க முடியாது என்பதால் பிரிய மனமில்லாத கணவனையும், குழந்தைகளையும் பிரிந்தே பிறந்த வீட்டிற்கு வருவாள்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே நல்ல நட்புகளைப்பெற முயற்சி செய்தும் கெமிஸ்ட்ரி ஒத்துப்போகிற, தென்றலைப்போல யாரும் கிடைக்கவில்லை. பணம், பணம், அழகு, அழகு என பலரும் அன்பு, அன்பு எனும் மனத்தென்றலை வெளிப்படுத்தாததவர்களாகவே வாழ்வை வீணாக்கினர்.
உள்ளூரில் அமைந்துள்ள ஒரு ஐடி கம்பெனிக்கு வேலைக்கு விண்ணப்பித்ததும் கிடைத்தது. குறைந்த சம்பளமானாலும் பிடித்த வேலையென்பதால் ஒத்துக்கொண்டேன்.
வேலை கூட என்னை தென்றலாகக்கடந்தது.
நூற்றுக்கணக்கானவர்களை தினமும் ஒரே கூறையின் கீழ் சந்திக்க நேர்ந்தாலும் ஒரு சிலர் பேசும் பேச்சு மனதை தென்றலாக வருடிச்செல்லும். தொடர்ந்து பேசத்தோன்றும். வேலை நேரத்தில் பேச இயலாவிட்டாலும் உணவு இடைவேளை நேரத்தை அவர்களுடன் செலவிட, அவர்களது பார்வை படுமாறு நடந்து கொள்வதில் எனக்கும் மனசுகம் கூடுவதை உணர்ந்து கொள்ள முடியும்.
கவின் அலுவலகத்துள் நுழைந்த பின் அதிகாலை தென்றலின் சுகத்தை அவனருகில் செல்கையில் கண்டு கொண்ட பின் அலுவலக நேரம் முடிவது மனத்துன்பத்தை அதிகரிக்கச்செய்தது. வெட்கத்தை விட்டுச்சொல்வதென்றால் இரவு அவனது நினைவில் உணவும் செல்லவில்லை, உறக்கமும் ரொம்பத்தொல்லை.
பிடித்தவர்களைப்பற்றி கவிதை எழுதுவார்கள். மிகவும் பிடித்துப்போனால் எழுத்துக்களே மறந்து போகும் என்பது போல் துன்பப்பட்டேன். எழ முடியவில்லை, அழ முடியவில்லை. விழுந்தேன் காதலில். இலக்கியங்களில் தலைவனைப்பிரிந்த தலைவி கைவளையல்கள் கழண்டு விழ உடல் மெலிந்து விடுவாள் எனப்படித்ததை என்னில் கண்டேன். ஆம் உடல் எடை நாளுக்குநாள் குறைந்து கொண்டே வந்தது.
அலுவலக நேரத்தில் எப்படியாவது அவனுடன் நான் பேசும் சந்தர்ப்பத்தை செயற்கையாக உருவாக்குவதை புரிந்து கொண்டவன், அடிக்கடி என் பார்வையில் அவனைப்படுமாறு அவனே நடந்து கொண்டது என்னை மேலும் உருக்கியது. இந்த நிலை அலுவலகத்தில் வேலை பார்போரின் கண்களை உறுத்தியது. பெற்றோரிடம் இந்த நிலையை நான் சொன்னது வீட்டையே உலுக்கியது.
தென்றலாக இருந்த அக்கா புயலானான். “இதுக்குத்தான் கதை, கவிதை படிக்கிற நீ காதல்ல மாட்டிக்குவீன்னு கல்யாணத்தப்பண்ணீட்டு வேலைக்கு போன்னு சொன்னேன்” என்றாள் என் முகத்தைக்கூட நேராகப்பார்க்காமல்.
அம்மா உற்றுப்பார்த்தவள் உடலாலும் எழ முடியாமல், வார்த்தைகளையும் வெளிப்படுத்த இயலாமல் கண்ணீரை வெளிப்படுத்தினாள். அப்பா பூஜையறையில் இருந்த தெய்வங்களை உற்றுப்பார்த்தார்.
ஒரு பெரிய அடி என் மேல் இடி போல் விழுந்தது. சாமி அடித்ததாக நினைத்து அரைத்தூக்கத்தோடு மனதால் அதிர்ந்து எழுந்தேன். அம்மா கம்பீரமாக பத்ரகாளியைப்போல் கையில் பூரிக்கட்டையுடன் நின்றிருந்தாள். “பேய், பிசாசுக தான் ராத்ரில முழிச்சுட்டு காத்தால தூங்கும்” என்றாள். முதுகு லேசாக வலித்தது. இப்போது புரிந்தது இதுவரை நடந்தது கனவென்று. நிஜத்தை விட கற்பனைகளும், கனவுகளும் தான் நம்மை பெரும்பாலும் ஆக்கிரமித்துக்கொள்கின்றன. அவற்றை நனவாக்க நம்மால் இயலுவதில்லை!