காலமறிதல்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 1,981
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
அரசன் பகைவர் மேற் செல்லுதற்கு ஏற்ற பொழுதை அறிதல்
ஆழ்ந்த அகழிகளையும், ஆகாயம்வரை உயர்ந்த மதிலையும் உடைய கானப்பேர் எயில் என்ற ஊரை அரசுபுரிந்தவன் வேங்கை மார்பன். இவன் பாண் டியன் வலிமை அறியாது பாண்டியன் உக்கிரப் பெருவழுதியைப் போருக்கு அழைத்தான். அவன் சிறு இடத்தை உடைய இவன் போருக்கு அழைப் பதால் இவனிடம் உள்ள வலிமை யாதோ? என்று அவ்வலிமை தெரியும் காலம் வரை போரில் வல்ல ஆடு, பகை ஆட்டின்மேல் நன்றாகப் பாய்வதற்குக் காலைப் பின்னே வாங்குவதைப்போலப் பேசா திருந்து ஒற்றரைக்கொண்டு வல்லமை யாவற்றை யும் அறிந்து போர் செய்து கானப்பேரெயிலையும், ஊரையும் தன் வசமாக்கி வேங்கைமார்பனைக் தோற்று ஓடச்செய்தான். வள்ளுவரும், “மனக் கிளர்ச்சி உடையவன், தன் பகைவர்மேல் செல்லா மல் தக்க காலத்தை நோக்கி ஒதுங்கி இருக்கும் இருப்பு போரில் வல்ல ஆடு, பகையாட்டின்மேல் பாயக் காலைப் பின் வாங்குதலைப் போன்றதாகும்” என்று கூறியுள்ளார்.
ஊக்கம் உடையான் ஒடுக்கம்; பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
ஊக்கம் உடையான் = மிக்க மனக்கிளர்ச்சி உடைய அரசன்
ஒடுக்கம் = (பகை மேற் செல்லாது) காலம் பார்த்திருக்கின்ற இருப்பு
பொருதகர் = சண்டை செய்கின்ற ஆட்டுக்கடா
தாக்கற்கு = (தன்பகை அழியும்படி) பாய்தற்பொருட்டு
பேருந்தகைத்து = பின்னே கால் வாங்குந்தன்மையை உடையது.
கருத்து: வலிமையுள்ள அரசன் பின் வாங்குதல் பகை வெல்லும் காலம் அறிவதற்கே ஆகும்;
கேள்வி: ஊக்கமுடைய அரசன் ஒடுங்குவதின் காரணம் என்ன?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.