காலப் பயணிகளின் சந்திப்பு





2110 ஆண்டில் வசிக்கும் நான் அடிக்கடி காலப் பயணம் செய்வதுண்டு. இந்தப் பயணங்களின் போது, 2500-ம் ஆண்டில் இறங்கி அங்குள்ள பிரசித்தமான Time Travelers Cafeல் சிறிது நேரம் இளைப்பாறி விட்டு மறுபடி தொடர்வது என் வழக்கம். என்னைப் போலவே மற்ற காலப் பயணிகளும் அந்த cafeல் இளைப்பாற வருவார்கள். அங்கு தான் முதன் முதலாக ஹென்றியைச் சந்தித்தேன்.

நான் சென்ற அதே கல்லூரியின் டி-சர்ட்டை ஹென்றி அணிந்திருந்தார். நாங்கள் கை குலுக்கி ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டோம். நாங்கள் இருவரும் ஐந்து வருட இடைவெளியில் ஒரே கல்லூரியில் படித்தோம். இப்படி சந்திப்பது என்ன ஒரு தற்செயல்!
நான் 2985 ம் ஆண்டுக்கு பயணம் செய்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். அவர் எந்த வருடத்திற்கு பயணம் செய்கிறார் என்று கேட்டேன்.
ஹென்றி புன்முறுவலித்தார். “நான் காலப் பயணி அல்ல. நான் இந்த 2500 ஆம் ஆண்டில் தான் வாழ்கிறேன். இங்கு நான் உள்ளூர்வாசி.” என்றார்.
நான் குழப்பத்துடன் “அது எப்படி சாத்தியம்? நாம் இருவரும் ஒரே கல்லூரியில்…” என்று ஆரம்பித்தேன்.
அவர் குறுக்கிட்டு கிசுகிசுத்தார். “நான் காலப் பயணத்தை விட மிகப் பெரிய அற்புதம் ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறேன்.”
“அது என்ன?”
“அழியாத்தன்மை. மரணத்தை வெல்வது எப்படி என்று கற்றுக் கொண்டேன்.”