காலங்கள் மாறினாலும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 24, 2025
பார்வையிட்டோர்: 1,027 
 
 

ராஜசேகரன் வீட்டிலிருந்து கிளம்பி மிக மெதுவாக நடந்து வந்து பிள்ளையார் கோயில் அருகில் இருந்த ஒரு கடப்பா கல் பெஞ்சில் உட்கார்ந்தார்.அங்கிருந்தபடி பிள்ளையாரை வேண்டினார்.” அப்பனே கணேசா, விநாயகா, விக்னம் இல்லாமல் இந்த பேங்க் காரியம் நடக்கணும். நீதான் அருள்புரியணும். உன்னையே நம்பினேன். என்னால் இனிமேல் சமாளிக்க முடியாது” என்று மனதுக்குள் கூறியபடி கைகளை உயர்த்தி கும்பிட்டார்.

ராஜசேகரன் பூவரசத்தூர் கிராமத்து அந்த நாள் ‘கர்ணம்’ அல்லது ‘கிராம முன்சீஃப் ‘ ஆக இருந்தவர். இது தவிர சொந்தமாக இருந்த நான்கு ஏக்கர் நிலத்தில் விவசாயமும் செய்து வந்தார். அவருக்கு 42 வயது இருக்கும் போது அந்த பதவிகளை எல்லாம் அரசு ஆணை மூலம் நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ‘கிராம நிர்வாக அதிகாரி ‘ எனும் பதவியை ஏற்படுத்தி, தேர்வுகள் எழுதுவதன் வாயிலாக நியமிக்க ஆரம்பம் ஆனது.

அந்த தேர்வினை எழுதுவது ராஜசேகரனுக்கு எளிதுதான், அவர் அதில் முயன்றிருந்தால் ‘கிராம நிர்வாக அதிகாரி ‘ (VAO) ஒருவராக அப்போதே அமர்ந்திருக்க முடியும். ஆனால் அவருக்கு அதில் நாட்டம் இல்லை. எனவே தன்னிடம் இருக்கும் விளைச்சல் நிலங்கள், சிறிய அளவிலான தென்னந்தோப்பு, மாமரங்கள், பலா மரங்கள், காய்கறிகள் தோட்டம் இவைகளை நன்கு தீவிரமாக கவனித்து, உழைத்து அதில் வரும் வருமானங்கள் கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இப்போது வயது 75 முடிந்து மேலே சில மாதங்கள் ஆகின்றன.

ராஜசேகரன் மனைவி செண்பகவல்லி ஆரம்பப்பள்ளி ஆசிரியை பணி செய்து வந்தார். பூவரசத்தூரிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்மண்ணூர் நகரத்தில் இருந்த தனியார் ஆரம்பப்பள்ளி, பகுதி அரசு உதவியுடன் செயல்பட்டு வந்த பள்ளியில் பணியாற்றினார். தினமும் மிதிவண்டியில் சென்று வருவார். ராஜசேகரன் செம்மண்ணூரில் அக்காலத்திலேயே ஒரு பழைய வீடு விலைக்கு வந்த போது வாங்கினார். அதை நல்ல முறையில் புதுப்பிக்கவும் செய்தார்.அது தவிர சிறு சிறு காலி மனைகளையும் வாங்கி சேர்த்தார்.

ராஜசேகரன் தன்னுடைய முப்பத்தி எட்டாம் வயதில்தான் திருமணம் செய்து கொண்டார். அதுவரை அதில் விருப்பம் இல்லாமல் ஒரு உறவினர் திருமண வைபவத்தில் செண்பகவல்லியை பார்த்தவர் தன் முடிவை மாற்றிக் கொண்டார். அந்த நிகழ்ச்சியின் இடையிலேயே செண்பகவல்லியை நேரடியாக கேட்டும், அவளின் பெற்றோர்களிடமும் பேசி விட்டார். இவரைப் பற்றி எல்லோருக்கும் இருந்த நல்ல மரியாதை, இவரின் தன்மையான அணுகுமுறை, பேசும் பாங்கு இருவரையும் தம்பதிகள் ஆக்கிவிட சாதகமாக இருந்தது. ஏழு வயது வித்தியாசம் இருந்தாலும் சம்மதித்தனர். ஏனெனில் அன்றுவரை செண்பகவல்லியும் திருமணம் வேண்டாம் என்று நினைத்தவள் மாறிவிட்டாள். இவர்களுக்குப் பிறந்தவர்கள் விஜயா, வனஜா, மைதிலி என்ற மூன்று பெண்கள். அழகில் பஞ்சமில்லாமல் இருந்த பெண்கள் படிப்பிலும் சிறந்து விளங்கினர்.மூவரையும் நன்கு படிக்க வைக்க பெற்றோர்கள் முடிவு செய்து அதில் வெற்றி பெற பாடுபட்டனர். விஜயா கல்லூரி படிப்பில் மேல் பட்டப்படிப்பு முடிக்கும் சமயத்தில், செண்பகவல்லி வேலை பார்த்து வந்த பள்ளி மூடுவிழா காண ஆரம்பித்தது. நிறைய போட்டிகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அதன் நிறுவனர் விலக, சிறிது காலம் அரசு ஏற்று நடத்த முற்பட்டு அவர்களுடைய நடுநிலைப் பள்ளியுடன் இணைக்க, அங்கே ஆசிரியராகப் பணிபுரிய இன்னொரு படிப்பு சான்றிதழ் தேவை என்பதால் அது இல்லாத வேலை இழந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியைகளுள் செண்பகவல்லியும் ஒருவர்.

செண்பகவல்லிக்கு தையல்கலை தெரிந்ததால் அதில் முனைப்புடன் ஈடுபட்டு சம்பாதித்ததோடு மட்டுமல்லாமல் இட்லி, தோசை மாவு அரைத்து தரும் வியாபாரம் தொடங்கி நடத்தி வந்தாள். ராஜசேகரனும் இதற்கு ஒத்துழைத்தார். அதற்கு முன்பாக இவர்களுடைய இருப்பிடத்தை செம்மண்ணூர் வீட்டிற்கு மாற்றிவிட்டனர். ராஜசேகரன் மட்டும் ஒவ்வொரு வாரமும் பூவரசத்தூர் வந்து தோட்டம் மற்றும் விவசாய வேலைகளை கவனித்துச் செல்வார். அவருடைய நீண்ட கால நண்பர் கலியபெருமாள் அவருக்கு உதவியாக எல்லாமும் செய்து தருவார்.

இதைத் தவிர ராஜசேகரன் வங்கிக் கடன் உதவி மூலம் பெரிய நகரங்களில் இருந்து மொத்த விற்பனை வகை வழியே சேலைகள், டீ ஷர்ட்கள், மற்ற உள்ளாடைகள் தருவித்து சில்லறை வணிகம் செய்து வரத் தொடங்கினார். ஓரளவு அதில் பலன் கிடைத்தது.

வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது இந்த ராஜசேகரன் குடும்பத்திற்கு. பெண்களும் வளர்ந்து வந்து, கல்லூரி படிப்புகளின் செலவுகள் அதிகரிக்க ஆரம்பித்தது. செம்மண்ணூரில் அவர்கள் எதிர்பார்த்த கல்லூரி இல்லாததால், ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேதக்குடி நகரம் சென்று, கல்லூரி விடுதியில் தங்கி, ராஜசேகரனின் பெண்கள் மூவரும் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் ராஜசேகரன், செண்பகவல்லி இருவரும் சம்பாதிக்கும் தொகையில் கணிசமான அளவில் பெண்களின் கல்வி செலவுக்காக சென்றது. ‘சில நேரங்களில் விதியின் கடுமை’ எதிர்மறையாகவே தொடர்ந்து செயல்படும் சிலருக்கு என்பது போல இந்த குடும்பத்தினர்க்கும் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்டது.

திடீரென செண்பகவல்லி நோய்வாய்ப்பட்டு, அதனால் ஏற்பட்ட முதுகுத் தண்டு பாதிப்பால் படுத்து விட்டாள். அதிலிருந்து அவள் மீண்டுவர ஏழு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் அவளால் முன்பு போல் வேலைகள் செய்ய முடியவில்லை. இதனிடையே விஜயாவும், வனஜாவும் வேதக்குடி நகரத்தில் ஏற்பட்ட பேரூந்து விபத்தில் சிக்கி, படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ராஜசேகரன் இவைகளை சமாளிப்பதற்குள் பாதி உயிர் போய் விட்டது என்றே சொல்லலாம். அவர் நிறைய பேருக்கு உதவியிருந்தாலும், எல்லோரும் இப்போது வெவ்வேறு இடங்களில் இருப்பதால் அவர்களிடம் சென்று பணம் கடன் கேட்க அவருக்கு விருப்பமில்லை. இருந்தாலும் கஷ்டமான நிலையை கடந்து விட வேண்டும் என்று எண்ணி மிகுந்த யோசனைக்குப்பின் இரண்டு அல்லது மூன்று நபர்களிடம் கடன் வாங்கி சமாளித்தார். கொஞ்சம் கொஞ்சமாக எல்லா நடுத்தர குடும்பங்களுக்கும் ஏற்படும் நிதிப்பற்றாக்குறை, இதுநாள் வரையில் பார்த்திராத ராஜசேகரனுக்கு தொடர்ந்து பெரிய அளவில் உண்டானது. வருமானம் குறைந்ததால் ராஜசேகரனுக்கு தாக்குப்பிடிப்பது கடினமாகிப் போனது.

எப்படியோ ஒரு வழியாக மூன்று பெண்களும் படிப்பை முடித்து வேலை தேடும் படலம் ஆரம்பித்த நேரத்தில் ராஜசேகரன் அறுபதைத் தொட்டிருந்தார். நல்ல கடனாளியாகவும் ஆகிவிட்டார். சில சொத்துக்கள் அடகில் வைக்கப்பட்டிருந்தன. இந்த நேரத்தில் விஜயாவுக்கு வேறு நகரத்தில் வேலை கிடைத்து அதில் சேர்ந்து பணியாற்றி வந்தாள். ராஜசேகரனும், செண்பகவல்லியும் கொஞ்சம் பெருமூச்சு விட்டனர். ஒண்ணரை வருடம் சென்றபின் வனஜாவுக்கு வேதக்குடியில் உள்ள தனியார் அலுவலகத்தில் பணி கிடைத்தது. இன்னும் சிறிது சுமை குறைந்தாற் போல் ராஜசேகரனுக்கு தோன்றியது. அப்படியே இன்னும் ஒரு நான்கு வருடங்கள் ஓடின. சிறிதளவு நிதி நிலை சீராகும் போல் தெரிந்தது ராஜசேகரனுக்கு. செண்பகவல்லியும், ராஜசேகரனும் மூத்த இரு பெண்களுக்கும் திருமணம் செய்து விடலாம் வரும் வருடத்தில் என்று முடிவு செய்திருந்தனர். ‘ எங்களுக்கு இப்போது வேண்டாம் ‘ என்று பெண்கள் சொன்னதை இவர்கள் பொருட்படுத்தவில்லை.

ஆனால் நாம் எண்ணியபடி எல்லாம் நடந்துவிடுவது வாழ்வில் எவருக்கும் நடப்பதில்லையே! ஒரு நாள் வெளியில் வேலை விஷயமாகப் போய்விட்டு வீட்டிற்குள் நுழைந்த ராஜசேகரன் தலை சுற்றி மயங்கி விழுந்தார்.

எல்லோரும் அடித்து பிடித்து அவரை அள்ளிப்போட்டுக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்து பரிசோதிக்கையில் மாரடைப்பு என்று தெரியவந்து அதற்குண்டான சிகிச்சைகள் தொடங்கினார்கள். தொடர்ந்து மூன்று மாதங்கள் அவரால் எதையும் கவனிக்க முடியவில்லை. செண்பகவல்லி இச்சுமைகளை தன் தலையில் ஏற்றி சின்னப் பெண் மைதிலியின் உதவிகள் மூலம் தன்னால் முடிந்த வரை சரியாக செய்து வந்தாள். சம்பாதிக்கும் மற்ற பெண்களும் பெருமளவில் நிதி நிலையை சமாளிக்க முயற்சி செய்தனர்.

ராஜசேகரனை மருத்துவமனையில் சந்திக்க வந்த அவரின் மாமா, ” ராஜா, சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்காதே. உனக்கு உடல் நலம் முந்தி மாதிரி இல்லை. செண்பகமும் வீக்காகத்தான் இருக்கா.காலகாலத்தில இந்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணத்தை செஞ்சு வச்சிடு. அப்புறம் அவங்க லைஃப் நல்லா போய்டும். அதிகமா செலவு செய்யாதபடி வரனா பாப்போம். எனக்கு தெரிஞ்ச நாலைஞ்சு இடங்களில் பையன் இருக்கிறாங்க. நல்ல குடும்பம்தான். காசு ஆசையெல்லாம் இல்லாதவங்க. பசங்களும் அப்படித்தான். நல்ல உத்யோகத்தில் இருக்காங்க. நீ ஓகே சொன்னா, பேசிட்டு வரேன். என்ன சொல்றே, ராஜா?” என்று கேட்டார்.

இரண்டு நிமிடங்கள் யோசித்த ராஜசேகரன், முருகேசன் என்ற அவர் மாமாவிடம்” சரி முருகேசன் மாமா. ஆனால் நான் அதுக்காக சும்மா வெறுங்கையோடு பொண்ணை அனுப்ப முடியாது. முடிஞ்சவரை செஞ்சுடறேன் நல்லவிதமாக”. என்றார். “சரி, உன் இஷ்டம். நீ சம்மதிச்ச வரைக்கும் சந்தோஷம். இன்னும் ரெண்டு வாரத்தில் நல்ல சேதியோட வரேன். அதுக்குள்ள உனக்கு கொஞ்சம் உடம்பு நல்லாயிடும். கவலைப்படாம ரெஸ்ட் எடுத்துக்க. என் பசங்க, நம்ப கலியபெருமாள் பசங்க இவங்க எல்லாம் உதவி செய்வாங்க. எல்லாம் நல்லபடியாக முடியும். நான் கிளம்பறேன் ” என்று சொல்லி முருகேசன் சென்றார்.

அடுத்த பதினைந்து நாட்களில் முருகேசன் சொன்னபடியே நல்ல வரன்களை கொண்டு வந்தார். ராஜசேகரன், செண்பகவல்லி தம்பதிகள் விஜயா, வனஜா இருவரையும் வைத்துக்கொண்டு மாப்பிள்ளைகளை தேர்வு செய்து முடித்தனர். நல்ல குடும்ப பின்னணியில் அமைந்து நல்ல வேலையில் அமர்ந்திருந்த வரன்களை விட்டு விட மனமில்லாமல் ராஜசேகரன் சம்மதம் தெரிவிக்க எண்ணினார். ” ஏங்க, ரெண்டும் நல்ல மாப்பிள்ளைங்கதான். நம்மை விட கொஞ்சம் வசதி அதிகமா இருக்கறதாலே கல்யாணத்தை சிறப்பா நடத்தணும்னு அவங்க எதிர் பார்ப்பாங்க இல்லையா? அவ்வளவு செலவு செய்ய நம்ம கிட்ட இப்ப வசதி பத்தாதுங்களே, என்ன செய்யலாம், வேண்டாம், பின்னாடி பாத்துக்கலாம்னு சொல்லிடலாமா?” என்று செண்பகவல்லி கேட்டாள். “வேண்டாம் செண்பகம், கிராமத்து நிலத்தில பாதியையும், தோட்டத்தையும் அடமானம் வச்சு கல்யாணத்தை முடிச்சுடலாம். இவங்க வாழ்க்கை நல்லா அமைஞ்சிடும். எப்படியோ அதை நாம் அடைச்சுடலாம். இந்த சந்தர்ப்பத்தை விடவேண்டாம். நல்ல மனுஷங்களா இருக்காங்க.” என்று ராஜசேகரன் சமாதானம் சொல்லி அதன்படி செய்தும் விட்டார். விஜயா, வனஜா இருவருக்கும் இரண்டு மாத இடைவெளியில் திருமணம் நடந்தது.

இந்த நேரத்தில் மைதிலிக்கு வேலை கிடைத்து அவள் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூங்கிலம்பட்டி நகரத்திற்கு பணிக்கு போய் வந்தாள். ராஜசேகரன் முன்பு போல் வெளியூர் சென்று ஆடைகள் வாங்கி வர உடல் நலம் இடம் கொடுக்காததால், பார்சல் மூலம் தருவித்து விற்பனை நடத்தி வந்தார். கடந்த காலங்கள் போன்ற லாபம் பார்க்க முடியவில்லை அவரால். இப்படி ஒரு ஒண்ணரை இரண்டு வருடங்கள் தள்ளிய பின், மைதிலிக்கு திருமணம் செய்ய முற்பட்டார். ‘ வேண்டவே வேண்டாம் ‘ என்று பிடிவாதமாக இருந்த மைதிலியை தன்னுடைய மற்றும் செண்பகவல்லியுடைய உடல்நலக்குறைவுகளைக் காரணம் காட்டி அவளை சம்மதிக்க வைத்தார். பின்னர் ஒரு நல்ல இடமாகப் பார்த்து மைதிலியை திருமணம் செய்வித்தார்.

‘என் கடமைகளை நன்றாக முடித்து விட்டேன் ‘ என்று இருந்த ராஜசேகரனை கடன் தொல்லை விடாமல் துரத்தியது. சில நேரங்களில் விவசாய நஷ்டங்கள், சில நேரங்களில் மிகக்குறைவான வியாபாரம், சில நேரங்களில் செண்பகவல்லியின் உடல்நல பாதிப்பு செலவுகள் இவ்வாறு வருமானத்திற்கும் செலவுகளுக்கும் பெருத்த இடைவெளி ஏற்பட்டதால் சரியான முறையில் வங்கிகளுக்கு கடன் தவணைகளை செலுத்த முடியவில்லை. தெரிந்த நபர்களிடம் வாங்கிய கடனையும் உறுதி அளித்தபடி திரும்பத்தர இயலவில்லை. முடிந்த போதெல்லாம் பணம் வங்கிக்கு செலுத்தினார். ஆனால் அது வங்கியின் நிபந்தனைகளுக்கு ஒத்து வராததால் பலவித எச்சரிக்கை கடிதங்களுக்குப் பின்னர் தற்போது ஏலத்திற்கு வந்து விட்டது. பூவரசத்தூரில் விளைநிலங்கள் நல்ல விலைக்கு தற்போது விற்பனை ஆவதால், ஏலத்தில் அதிக விலைக்கு போகும் போது வங்கிக்கு தரவேண்டிய பணம் போக மீதி ராஜசேகரன் கையில் ஒரு கணிசமான தொகை இருக்கும். மற்ற சிறிய கடன்களை அடைத்து விட்டு மீதியில் வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்ற திருப்தியுடன் பூவரசத்தூர் வந்தவர் தான் எப்போதும் வேண்டும் பிள்ளையாரிடம் பிரார்த்தனை செய்தார்.

பிறகு கிளம்பி கலியபெருமாளைப் பார்த்து சொல்லி விட்டு செம்மண்ணூருக்கு புறப்பட்டார். “இரு ராஜா, நானே உன்னை கொண்டு விடறேன். நீ பஸ்ல போக வேண்டாம். உன் நல்ல மனசுக்கும், நீ எத்தனையோ பேருக்கு உதவி செஞ்சதுக்கும் உனக்கு நிச்சயம் நல்லது நடக்கும். கவலைப்படாதே.” என்று கலியபெருமாள் தைரியம் கூறி அவர் வண்டியில் ராஜசேகரனை உட்கார சொன்னார்.

செம்மண்ணூர் வந்து ராஜசேகரனுடன் அவரது வீட்டில் சற்று நேரம் இருந்து விட்டு கலியபெருமாள் கிளம்பிச் செல்ல வண்டியை எடுக்கும் போது, அங்கே வந்து நின்ற ஒரு காரிலிருந்து இறங்கிய கிட்டத்தட்ட ஐம்பது வயதிருக்கும் நபர்” சார், ராஜசேகரன் சார் வீடு இதுவா?” என்று கேட்டார். ” ஆமாம் இதுதான் ராஜசேகரன் வீடு. வீட்டுலதான் இருக்கார். நீங்க யாரு? நான் அவரோட நெருங்கிய நண்பர். கலியபெருமாள். ” என்றார்.

“ஓ, நீங்கதான் கலியபெருமாள் சாரா, நான் தங்கராஜ், பூவரசத்தூர்தான் என் ஊர். ஆனால் எனக்கு பதிநாலு வயசு இருக்கும் போதே இங்கேயிருந்து வேறு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துட்டோம். உங்க வீட்டுக்கு போனேன், ராஜசேகரன் சார் பத்தி கேட்க. அவங்கதான் உங்களோடு அவர் செம்மண்ணூருக்கு வந்திருக்கிறதா சொன்னாங்க. அவரை உடனே பாக்கணும் சார் நான் ” என்றான் தங்கராஜ் என்றவர்.

கலியபெருமாள் வண்டியிலிருந்து இறங்கி நிறுத்தி விட்டு “ராஜா, இங்கே உன்னைத் தேடி ஒருத்தர் வந்திருக்காரப்பா” என்று குரல் கொடுத்தார்.

அப்போதுதான் உள்ளே நுழைந்த ராஜசேகரன் உடனே அவசரமாக வெளியே வந்து “என்ன கலியா, யாரு என்னை பாக்க, பேங்க் காரனும் வர மாட்டானே இன்னிக்கு” என்று சொன்னபடி வெளியே வந்தார்.

அவரை பார்த்ததும் தங்கராஜ் “சார், என்னை ஆசீர்வாதம் செய்யுங்க.” என்று கூறி ராஜசேகரன் காலில் விழுந்தார். “ஐயா, இதெல்லாம் எதுக்கு, நீங்க யாரு, எழுந்திருங்கள்” என்று கூறி தங்கராஜ் தோளை பிடித்தார் ராஜசேகரன்.

தங்கராஜ் சொன்னார். “ஐயா, நான் தங்கராஜ். என் அப்பா பேரு மாரிமுத்து, அம்மா அஞ்சலை. பல வருஷங்களுக்கு முன்னாடி பூவரசத்தூர்லதான் இருந்தோம். உங்களோட தோட்டத்துல என் அப்பாவும் அம்மாவும் நிறைய நாள் வேலை பாத்திருக்காங்க. எங்க குடும்பத்துக்கு நிறையவே உதவி செஞ்சிருக்கீங்க நீங்க. பண்டிகைகள் மத்த விசேஷ நாட்கள்ல அம்மாவும் நீங்களும் எங்களுக்கு ட்ரெஸ் வாங்கி தந்திருக்கீங்க. எங்க அப்பா சொல்லிருக்காரு, நீங்க மட்டும் அன்னிக்கு பொருள் உதவி செய்யலேன்னா எங்க அக்கா மணிமேகலையோட கல்யாணம் நடந்திருக்காது அப்படின்னு.

நான் ஒன்பதாவது படிக்கும்போதே எங்கப்பா கொண்டலாறு மாநிலத்துக்கு குடி பெயர்ந்துட்டாரு. அவரு கட்டிட மேஸ்திரி ஆனதும் அந்த ஸ்டேட்ல நிறைய வேலை கிடைச்சது மட்டும் இல்லாம சம்பளமும் கூட கிடைச்சது. உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். நான் அங்கே போய் படிச்சுட்டு, வேலை பாத்துட்டே ஈவினிங் காலேஜ்ல படிச்சிட்டு இருக்கறப்போ, பேப்பர்ல ஒரு ஹார்ட்வேர் கம்பெனி ஏஜென்சி வேணும், அதுவும் கிராமத்து இளைஞர்களுக்கு முன்னுரிமைன்னு விளம்பரம் கொடுத்திருந்தாங்க. அதுக்கு நான் போனபோது அவங்க நான் பூவரசத்தூர் கிராமத்தில் பிறந்தவன்னுட்டு கிராம முன்சீப் சர்டிபிகேட் கேட்டாங்க. அப்போ நான் திரும்ப பூவரசத்தூர் வந்து உங்களை பார்த்து சர்டிபிகேட் வாங்கிப் போக வந்தேன். நீங்க அன்னிக்குதான் எல்லாத்தையும் அரசாங்கம் கிட்ட ஹாண்ட் ஓவர் செஞ்சு முடிச்சீங்க. நான் வந்து உங்களை கேட்டபோது ” எனக்கு பவர் இல்லேப்பா இப்போ.அந்த ஆபீஸரத்தான் கேட்கணும் நீ ” ன்னு சொல்லிட்டு என் நிலைமைய கேட்டு அவங்க கிட்ட போய் என்னவோ பேசினீங்க. அப்புறம் ஒரு பேப்பரில் நான் கேட்ட சர்டிபிகேட் அன்றைக்கு முதல் நாள் தேதி போட்டு சீல் வச்சு தந்தீங்க. ஞாபகம் இருக்கா ஐயா?” என்றார் தங்கராஜ்.

ராஜசேகரன் தன்னுடைய நினைவுகளை முப்பத்து மூன்று வருடங்கள் பின்னோக்கி தள்ளி யோசித்தார். “ஆமாம்ப்பா, லேசா ஏதோ நினைவுக்கு வருது. நீ எப்படி இருக்கே, மாரிமுத்து, அஞ்சலை , உன் அக்கா எல்லாரும் எப்படி இருக்காங்க? நீ எங்க இருக்கே, என்ன பண்றே” என்று அன்புடன் கேட்டார். பிறகு செண்பகவல்லியை கூப்பிட்டார். அவள் வந்ததும் ‘ நம்ப அஞ்சலை மகன்” என்று அறிமுகம் செய்தார்.

“ஐயா, அன்னிக்கு நீங்க கொடுத்த அந்த சர்டிபிகேட் எனக்கு எவ்வளவு பெரிய உதவி செஞ்சது தெரியுமா? எனக்கு அந்த ஏஜென்சி கிடைக்க ரொம்ப உதவியா இருந்தது. நான் சேர்த்த பணம், அப்பாகிட்ட கொஞ்சம் வாங்கி முன்பணம் தந்து ஏஜென்சி எடுத்து நடத்த ஆரம்பிச்சேன். கடவுள் அருளால் மட்டுமில்லாம உங்க நல்ல மனசு, கைராசியால வியாபாரம் நல்லா போச்சு. கோவிட் தாக்கத்தில அப்பா, அம்மா ரெண்டு பேரும் காலமாயிட்டாங்க. எனக்கு கல்யாணம் ஆகி ஒரு பொண்ணு, ஒரு பையன் இருக்காங்க. படிச்சிட்டு இருக்காங்க. இப்போ ஒரு கார் சர்வீஸ் சென்டர் மூங்கிலம்பட்டியில் ஓப்பன் பண்ணப்போறேன் அடுத்த வாரம்.

அங்கே உள்ள ‘வீ அண்ட் யூ’ பேங்க்ல தான் என் அக்கவுண்ட் இருக்கு. அந்த மேனேஜரைப் பாக்கப்போயிருந்தேன் இன்னிக்கு மார்னிங். அங்கே ஒரு நோட்டீஸ் போர்டில் ஏலம் விடப்போகும் அடமானம் வைத்த சொத்துக்கள் பற்றி யதேச்சையாக பாத்தப்போ அதில் உங்கள் பெயர் இருந்ததை கண்டு ஷாக் ஆயிட்டேன். உடனே மேனேஜர் அசோகனை கேட்டேன். அவர் விவரங்களை தெளிவா சொன்னாரு. உங்கள் மேல் ரொம்ப நல்ல அபிப்ராயம் அவருக்கு. மனசுக்கு கஷ்டமாகத்தான் இருக்குன்னாரு. நான் அதை ஸ்டாப் பண்றதுக்கு ஏதாவது வழி இருக்கான்னு கேட்டப்ப, நாளைக்கு மதியம் 12 மணிக்குள் அசல் பணத்தை கட்டிட்டா அதை லிஸ்ட்ல இருந்து எடுத்துடலாம். அப்புறம் ஐந்து நாளுக்குள் பாக்கி தொகை மத்த ஃபார்மாலிட்டி எல்லாம் முடிச்சு டாக்குமெண்ட் திருப்பி நம்ப பேருக்கு மாத்தி கொடுப்பாங்க ன்னு சொன்னாரு. உடனே நான் அந்த லோன் அக்கவுண்ட்டுக்கு பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செஞ்சேன். அசோகன் சார் அந்த ஏலம் லிஸ்ட்ல இருந்து உங்க ப்ராப்பர்டியை நீக்கிட்டாரு. இன்னும் ஒரு வாரத்தில் உங்க பத்திரத்தை மீட்டுடலாம் ஐயா. நான் நாளை மறுநாள் வந்து உங்களை பேங்குக்கு அழைச்சிட்டு போறேன். சில கையெழுத்துகள் நீங்க போடவேண்டி வரும்.

ஐயா இது மட்டும் இல்லை. இன்னும் உங்களுக்கு என்ன உதவி நான் செய்யணும்னாலும் சொல்லுங்க. நான் இருக்கும் வரைக்கும் நீங்க கஷ்டமான நிலையில் இருக்க விடமாட்டேன். ஒரு தகப்பனுக்கு மகன் செய்ய வேண்டிய உதவி மாதிரிதான் இதை நான் நினைக்கிறேன். தயவு செஞ்சு இதையெல்லாம் மறுக்காதீங்க ஐயா.” என்று கூறி அவரிடம் ஒரு கவரை தந்தார் தங்கராஜ்.

ராஜசேகரன் மட்டும் அல்ல சிறிது நேரம் முன்பு அங்கு வந்த செண்பகவல்லியும் வார்த்தைகள் வராமல் கண்களில் நீர் வழிய தங்கராஜை பார்த்தனர். பக்கத்தில் இருந்த கலியபெருமாள் தன் கண்ணீரை துடைத்து விட்டு, ” தங்கராஜ் உன்னைப்போல மனுஷங்களை பாக்கறதே அபூர்வமா இருக்குப்பா இந்த காலத்தில்! இவங்களுக்கு நீ செஞ்சிருக்கும் இந்த உதவி இமயமலைய விடப் பெரியது. காலத்தினால் செய்த உதவிப்பா. ராஜா, ஏதாவது பேசுடா” என்று ராஜசேகரன் கையைப்பிடித்து குலுக்கினார்.

ராஜசேகரன் “தங்கராஜ், எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. காலம் மாறிப் போச்சுன்னு எல்லாரும் சொல்றதை நானும் சொல்லிட்டுதான் இருக்கேன் இன்னி வரை. ஆனால் உன்னை பாத்ததும் புரிஞ்சு கிட்டேன் காலங்கள் மாறிப்போனாலும் உன் மாதிரி மனுஷங்க இன்னும் சிலர் இருக்காங்க அப்படிங்கற உண்மையை. இந்த கவர்ல என்னப்பா” என்று தழுதழுத்த குரலில் பேசினார்.

தங்கராஜ் “ஐயா, இதில் ஒரு லட்சம் ரூபாய் கேஷ் இருக்கு. இதை வச்சுக்கோங்க. எனக்கு உங்க பொண்ணு மைதிலி கிட்ட, அவங்க ஹஸ்பண்ட் கிட்ட பேசிட்டுதான் வந்தேன் ஐயா. மறுபடியும் சொல்றேங்க, ஒரு தந்தைக்கு மகனாற்றும் உதவியா நினைச்சு எடுத்துக்கோங்க.” என்று அவர் கையைப்பிடித்து தலையை குனிந்தபடி வேண்டினான்.

“அவருக்கு இந்த மாதிரி சமயங்களில் பேச்சு வராது தங்கராஜ். இந்த காஃபியை எடுத்துக்கோ. கொஞ்ச நேரம் பேசிட்டு இரு. சாப்பிட்டு விட்டு போகலாம். கலியபெருமாள் அண்ணே, நீங்களும் சாப்பிட்டு போகலாம்” என்று காஃபி டம்ளரை நீட்டியபடி செண்பகவல்லி சொன்னாள்.

” சரி தங்கச்சி, உன் அக்காவுக்கு போன் போட்டு சொல்லிடறேன். எனக்கு மனசு நிறைஞ்சு இருக்கு இன்னிக்கு” என்றார் கலியபெருமாள்.

தங்கராஜ் “நிச்சயம் அம்மா. நீங்க சமைச்சு ஐயா கூட உட்கார்ந்து சாப்பிட நான் கொடுத்து வச்சிருக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னான்..

ரா.நீலமேகம் பெயர்: நீலமேகம். வயது 71. பூர்வீகம்: திருவாரூர் மாவட்டம், கீழமணலி என்ற கிராமம். தந்தை: ராமஸ்வாமி அய்யங்கார். கிராமத்து கணக்கராக இருந்தவர். தாயார்: ஜானகி படிப்பு: பி.எஸ்சி (இயற்பியல்), திருச்சி தேசியக் கல்லூரி. வேலை தேடி மும்பைக்கு சென்று இருபத்தைந்து ஆண்டுகள் பல தனியார் கப்பல் துறை அலுவலகங்களில் பணிசெய்து கோயம்புத்தூர் இடமாற்றம். உலகின் முதல் பெரிய கப்பல் பணியகமான, 'மெர்ஸ்க் லைன்' (Maersk Line) கோவை அலுவலகத்தில் பொது மேலாளராக…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *