காற்றில் கரைந்தாயே என் தேவதையே…
கதையாசிரியர்: காஞ்சி.தங்கமணி
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 31, 2026
பார்வையிட்டோர்: 211
பகுதி – 1 | பகுதி – 2

எஸ்.ஆர் கே. டூவீலர் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப்.. என்ற பெயரைத்தாங்கிய போர்டோடு கூடிய அந்த பத்துக்கு எட்டு அளவிலிருந்த கடையின் வெளியே நான்கைந்து டூவீலர்கள் பழுது நீக்கப்படுவதற்காகக் காத்துக்கொண்டு நின்றிருந்தன.
கடையின் உள்ளே புத்தம்புது டூவீலரொன்றை அக்குவேறு ஆணிவேறாய் பிரித்துப் போட்டு வெகு மும்முரமாய் ஆராய்ந்து கொண்டிருந்தான் தினேஷ்.
கண்கள் டூவீலரின் குறைபாடுகளை மும்முரமாய் ஆராய்ந்தன..கைகள்.. கண்களின் ஆராய்வை நம்பி குறை பாடுகளைக் களைய முற்பட்டு வேலை செய்து கொண்டிருந்தன.
ஆனால் மனம் மட்டும் ஒருநிலையிலில்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தது.
அந்தத் தடுமாற்றத்தால்.. என்னதான் வேலையில் கண்களும் கைகளும் மும்முரம் காட்டினாலும் மனம் அவ்வேலையில் முழுமை யாய் ஈடுபட மறுத்து சண்டித்தனம் செய்தது.
மனதின் சண்டித்தனத்தால் கடையில் அப்போது கரண்ட் இல்லை என்பதைக்கூட தினேஷ் உணராமல்.. அறியாமலிருந்தான்.
கரண்ட் இல்லை என்பதைக் கூட அறியாதவனாய் இருந்ததால் தினேஷின் முகமெங்கும் முத்துமுத்தாய் வியர்த்துப் போய் வியர்வை முத்துக்கள் ஒன்றாகி நெற்றி யின் இரு புறத்திலிருந்தும் கோடுபோட்டு இறங்க ஆரம்பித்தது.பின்னந்தலை வியர்த்து கழுத்தில் இறங்கி முதுகில் வடிந்தது.
அப்படி வியர்வை குறுகுறு வென்று கோடு போட்டுக் கொண்டு இறங்க ஆரம்பித்த போதுதான் அந்த குறுகுறுப்பு கரண்ட் இல்லை.. அதான் இப்புடி வேர்க்குது என்பதை புத்திக்கு விளக்கியது.
சண்டித்தனம் செய்து கொண்டிருந்த மனம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
விரலால் வியர்வையை வழித்து உதறினான்.
முதுகும் வியர்த்துப்போய் அணிந்திருந்த ஷர்ட் வியர்வையால் முதுகோடு ஒட்டியிருந்தது.
உஸ்..என்றபடி சீலிங் ஃபேனை நிமிர்ந்து பார்த்தான். அசைவற்று தொங்கிக் கொண்டிருந்தது தூசி படிந்து பழுப்புநிறமாய் மாறிப் போயிருந்த அந்த வெள்ளை நிற சீலிங் ஃபேன்.
ஓ..கரண்ட்டு இல்லியா?எப்பபோச்சுன்னே தெரியல..வேக்கவும்தா கரண்ட் இல்லேனு தெரியுது.
வெய்யிலானா அடிச்சி கொளுத்துது..காத்துமில்ல அனலா வீசுது..சொல்லிக் கொண்டே ஷர்ட்டின் முன்புறத்தை முன்னால் இழுத்து சட்டைக்குள் வாயால் ஊதிக்கொண்டான்.
ஷர்ட்டனா கழற்றிடுவமா அதா பனியன் போட்ருக்கோ மில்ல..
நினைத்துமுடிப்பதற்குள் சீலிங்ஃபேன் வேகமாக சுழல ஆரம்பித்துக் காற்றை அள்ளி வீசியது.
அப்பாடா கரண்ட் வந்திடுச்சி.. சொல்லிக் கொண்டே ஷர்ட்டின் மேலிரண்டு பட்டனைக் கழற்றிப் பின் கழுத்துப் பகுதியை கொத்தாய்ப் பிடித்து நடு முதுக்கு இறக்கினான்.
உடலெங்கும் ஃபேன்காற்று புகுந்து வெக்கையைத் தணித்து இதமாக்கியது.
பக்கத்தில் வைத்திருந்த செல்ஃபோனை ஆன் செய்து நேரம் பார்த்தான்.மணி பதினொன்னரை.
என்ன அம்மாவோ.. ராஜி அக்காவோ இன்னும் ஃபோன்பண்ணுல.. டாண்ணு பதினோரு மணிக்குலாம் கெளம்பிடுவோம்னாங்க. கெளம்பினதுமே ஃபோன் பண்றேன்னாங்க.. லேசான ஏமாற்றம் மனதில் எட்டிப் பார்த்தது.தவிப்பாய் இருந்தது.
வெண்ணிலாவின் முகம் மனதில் எட்டிப்பார்த்துப் புன்னகைத்தது.
என்னா தினேஷு.. அதுக்குள்ளார ஏமாந்து போவுறாப்புல ஃபீல் பண்ணிக்கிற?..அய்ய..அவசரப்படுறியே..ஃபோன் பண்ணுறதா சொன்ன நேரத்தவிட ஒரு அரமணி நேரந்தானே கூடப் போயிடுச்சி..அதுக்குப்போய் ரொம்ப அலட்டிக்குற?..
ஃபோன் பண்ணுவாங்க.. பண்ணுவாங்க..நம்பிக்க எழக்காத..
மனம் கிண்டலடித்தது. வெட்கப்பட்டுக் கொண்டான் தினேஷ்.
வெண்ணிலா..மனதுக்குள் சொல்லிப்பார்த்துக் கொண்டான்.தலையும் மேலுடலும் தானாய் இப்படி யும் அப்படியும் லேசாய் ஆடியது சந்தோஷத்தில்.
வெண்ணிலாதா எத்தினி அழகா இருந்தாங்க?பேருக்கு ஏத்தாப்லயே வானத்து நிலாபோல அவ்வளவு அழகு அவுங்க.
தினேஷு..ரெண்டுநாளு முன்னாடி..அதா ஞாயித்துக் கெழம..அந்தப்பொண்ணப்.. பொண்ணுபாக்கப் போனாலும் போன..அப்பத்துலேந்து மந்திரிச்சி விட்ட சேவலாட்டம் ஆகிட்ட? தானா தலைய ஆட்டிக்குற..
தோள குலுக்கிக்குற..அந்த பொண்ணுபேர சொல்லிச் சொல்லிப்பாத்துக்குற? அம்புட்டு புடிச்சிப்பேட்டா அந்தப் பொண்ண?..
பேரென்ன பேரென்ன?ம்…என்னவோ பேரு சொல்லிப்பாத்தியே? என்னது? என்னது? ம்..ம்.. வெண்ணிலா.. வெண்ணிலா? சரியா? மனம் கிண்டலடித்து ஒரு வழி பண்ணியது.
ரொம்பவும் வெட்கப்பட்டுக் கொண்டான் தினேஷ்.
பார்வை மீண்டும் செல் ஃபோனில் நிலைத்து ஏமாற்றதோடு திரும்பியது.
கைகள் பழுதுபார்த்துக் கொண்டிருந்த டூவீலரில் குறிக்கோளின்றி வேலையைத்தொடர்ந்தன.
மனம் இரண்டு நாட்கள் முன்னதாக வந்த ஞாயிரன்று அம்மா.. அக்கா ஒன்றுவிட்ட சித்தப்பா..சித்தியோடு கல்யாணபுரோக்கர் அழைத்துச்சென்ற வீட்டுக்குப் பெண்பார்க்கப் போயிருந்த நிகழ்ச்சி நெஞ்சில் பயாஸ்கோப் காட்டியது.
பெண்பார்க் வீட்டிலிருந்து கிளம்பியபோதே தாயிடம் சொல்லிவிட்டான்.அம்மா பொண்ணு நல்லா அழகா இருந்தாதா நா ஓகே சொல்லுவே..சொல்லிப் புட்டேன்..
ராஜிக்கா ஒன்னாண்டையும் சொல்லிட்டேன்..பொண்ணு எனக்கேத்தாப்புல அழக்கா இருக்கணும்.
அப்பசப்பையான பொண்ண அழக்கா இருக்காப்லனு சொல்லி எந்தலேல கட்டிப்பிடாதிங்க..
அட ஏண்டா தினேஷு..நீ எம்மவ..எம் மவந்தா எம்புட்டு அழகு?ஆரடி ஒசரம்.. ஆம்பளைக்கே அழகயும் கம்பீரத்தையும் குடுக்குற கோதும நெறம்.. சுருட்டசுருட்டையா தலமுடி தீர்க்கமான மூக்கு.. வாட்டசாட்டமா ராசாமாரி..
அழகுல அந்தஸ்துல படிப்புல..எல்லாத்துலயும் ஒஸ்திதா எம்மவன்..
பியெஸ்ஸில்ல படிச்சிருக் கானு .. கைல தொழிலு..ஒரு கெட்டபழக்கம் கெடையாது.. விக்ரமாதித்தன்மாரி கம்பீரமா இருக்குற
எம்மவ எதில கொறச்சலு?நா அப்பசப்பையா பொண்ணு பாக்க?தாய் கமலம் சொல்லவும் சிரித்துவிட்டாள் தினேஷின் அக்கா ராஜி..
அதென்ன சினிமா ஹீரோவதா உதாரணத்துக்கு சொல்லு வாங்க..நீ என்னம்மா தம்பிய விக்ரமாதித்தன்மாரினு சொல்லுற?புதுசா.. வித்தியாசமா இருக்கும்மா நீ சொல்ற உதாரணம்.
சிரித்தார்கள் மூவரும்.
பெண்பார்க்கும் படலம்.
ஃசோபாவில் வலப்பக்கம் அம்மா இடப்பக்கம் அக்கா ராஜி..நடுவில் அமர்ந்திருந் தான் தினேஷ்.
பெரியவர்கள் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
இன்னும் பெண் அறையை விட்டு வெளியே வரவில்லை.
மிகுந்த எதிர்பார்ப்பும் பரபரப்புமாய் அமர்ந்திருந் தான் தினேஷ்.
பொண்ணவரச்சொன்னீங்கனா பாத்துடலாமே சித்திதான் ஆரம்பித்தார்.
ஆமா பாத்துடலாமே.. பெண்வீட்டைச்சேர்ந்த கிழவர் ஒருவர் வழிமொழிய..
நிலாவ அழச்சிட்டுவா சரோஜா..பெண்ணின் தந்தை சமயலறை பார்த்துக் குரல் கொடுத்தார்.
நிலா.. ஓ..இப்பிடிதா பேர்சொல்லி கூப்புடு வாங்களா பொண்ண?கேக்கும்போதே ஜில்லுனு இருக்கு..
ஆனா பேருக்குடைய பொண்ணு.. பாக்க
அழகாருக்கணுமே?
கடவுளே..கடவுளே..சத்தம் வெளியே வராமல் உதட்டை அசைத்து அசைத்துக் கடவுளை வேண்டிக் கொண்டான் தினேஷ்.
பார்வை.. பெண்ணிருக்கும் அறை அதாகத்தான் இருக்கும் என்ற கணிப்போடு கூடத்தின் கோடியிலிருந்த அறையையே பார்த்தபடி இருந்தது.
அறையின் கதவு திறந்தது.
முதலில் ரெண்டு வாண்டுகள் வெளியே ஓடிவந்தன.
அடுத்து ஒரு வயதான அம்மா வெளியேவந்தார்..
வந்தவர் சரோஜா நெலாவ அழச்சிட்டுவா..அறைக்குள் திரும்பிப் பார்த்துச் சொல்ல..
பரபரப்பானான் தினேஷ்.
தேவையே இல்லாமல் பேன்ட் பாக்கெட்டிலிருந்து கர்சீப்பை உருவி கழுத்து..முகம்.. மீசையை தொட்டுத்தொட்டு ஒற்றியெடுத்தான்.வலதுகையால் தலைமுடியை லேசாக தடவி சீர்படுத்திக்கொண் டான்.
ஆனால் கண்களை இமைக்கவும் இல்லை. பார்வை அறைவாசலையே பார்த்தபடி இருந்தன.
ஜூஸ்கப்புகள் வைக்கப் பட்டிருந்த ட்ரேயைக் கையிலேந்தியபடி தலை குனிந்தபடி பையப் பைய நடந்துவந்த அழகோவியம் போலிருந்த பெண்ணைப் பார்த்து அசந்துபோனான் தினேஷ்.
உடல் தானாக சோஃபாவின் நுனிக்கு வந்தது.யம்மாடீ..
என்னவொரு அழகு?
வெண்ணிலாங்குற பேரு ரொம்ப பொருத்தமான பேருதா..நிலாமாரி அப்பிடியே..ஜம்முனு..ஜில் லுனு..வாய் தானாகத் திறந்து கொண்டது. பார்வையை நகர்த்த முடியவில்லை.
தினேஷின் தொடையில் லேசாய்த் தட்டினாள் அக்கா ராஜி..
டேய்..வாயமூடிக்கடா..
பொண்ண இப்பிடியா பட்டிக் காட்டான் முட்டாய்க் கடைய பாத்தாப்ல. வெச்சகண்ணு வாங்காம பாப்ப?தப்பா நெனைக்கப் போறாங்க..கிண்டலடித்தாள்.
வெட்கப்பட்டுப்போனான் தினேஷ்..சட்டெனப்பார்வையை நகர்த்திக்கொண்டான்.
நிலா குனிந்து பெரியவர்களில் ஆரம்பித்து ஒவ்வொருவரிடமும் ஜூஸ் கப்புகளிருந்த ட்ரேயை நீட்டிக்கொண்டே வந்தாள்.
தினேஷின் எதிரில் வந்து நின்று லேசாய்த் தன் முகம் நிமிர்த்தினாள் நிலா.. வெண்ணிலா..
தடுமாறிப்போனான் தினேஷ்.என்னது வானத்து முழுநிலவு பூமிக்குவந்து நமக்கு நேரா வந்து நிக்கிதா?
ட்ரேயிலிருந்து ஜூஸ் கப்பை எடுக்க வலக் கையை நீட்டியவனின் கை ட்ரேயின் வெற்றிடத்தில் ஜூஸ் கப்பைத்தேடியது..பார்வை நிலாவின் முகத்தைப் பார்த்தபடி இருந்தது.
லேசாய்ப் புன்னகைத்தாள் நிலா.சட்டெனக்குனிந்து மிச்சம் நான்கு ஜூஸ் கப்புகள் ட்ரேயில் இருக்க..
அவற்றிலிருந்து ஒன்றை அவன் கையிருக்கும் பகுதிக்கு நகர்த்திவிட்டாள்.
கப்பை எடுத்துக்கொண்டான் தினேஷ்.
நகர்ந்து சென்றாள் நிலா.
நல்லா வழிஞ்சிட்ட போலருக்கு..தம்பியை விளையாட்டாய் கிண்டலடித்து வம்பிழுத்தாள் ராஜி.
ஹி..ஹி..போக்கா..
குரலில் ஏகத்துக்கும் சந்தோஷம் அலையடித்தது.
வலப்புறம் அமர்ந்திருந்த தாய் கமலம்..என்னடா தினேஷு..பொண்ண நன்னா பாத்துக்க..அப்புறம் வீட்டுக்கு வந்து நா பொண்ண சரியா பாக்குல..
பொண்ணு நல்லாருக்கா.. நல்லால்லாத பொண்ண ரம்ப ஊர்வசி மேனக.. அப்பிடி இப்பிடினு சொல்லி அம்மாவும் அக்காவுமா சேந்து எனக்கு முடிச்சி வெச்சுடாதிங்கனு சொல்லக் கூடாது.சொல்லிட்டேன்.இப்பவே நல்லா பாத்துக்க சொல்லிட்டேன்.
அம்மா நீ வேற..இப்பவே அந்தப்பொண்ணு நிலா கழுத்துல தாலிகட்டுனு சொல்லு..தம்பி வினாடி நேரங்கூட தாமதிக்காது..
ஓடிப்போயி தாலியக் கட்டிடும்.அந்த நெலமேல இருக்கு தம்பி.
போக்கா..க்கும்..வெளிவந்த வார்த்தைகளில் சம்மதத் தின் வெளிப்பாடு வெட்கத்தோடு வந்து விழுந்தது.
ஆணென்றாலும்..வெட்கம்.. தினேஷின் முகத்தைச் சிவக்க வைத்தது.
ஓ..அப்பிடிப்போவுதா கத?சரிசரி..சரிசரி..என்றாள் கமலம் மகிழ்ச்சியோடு.
பெண் தங்களுக்குப் பிடித்திருப்பதாக தினேஷ் குடும்பம் சம்மதம் தெரிவிக்க
பெண்வீட்டாரும் தினேஷைப் பிடித்திருப்பதாகச் சொல்ல..
அந்த இடமே கவகலப்பா யிற்று.
அக்கா..பொண்ணுவீட்டுக் காரவுங்க என்னைய புடிச்சிருக்குன்றாங்க..சரிதா..
ஆனா பொண்ணுகிட்ட புடிச்சிருக்கானு கேக்கணும்ல..
இவுங்க புடிச்சிருக்குனு சொன்னத நம்பி..
என்னடா சொல்லுற தம்பி..
சினிமாவுல..சீரியல்ல வர்ராப்புல நீ நேரக்க பொண்ணுகிட்டபேசணும்.. அதும் சம்மதத்த தெரிஞ்சு கணும்ன்றியா? என்றாள் ராஜி.
என்னாசொல்றாரு மாப்ள பைய? பெண்வீட்டைச் சேர்ந்த கிழவியொருத்தி அருகில் வந்து கேட்க..
ஒன்னுமில்ல..மழுப்பினாள் ராஜி.
என்னயிப்ப?அந்தப் பொண்ணுவாயால சம்மதம்னு வார்த்த வரணும்.அதானே நாம்போய் கேக்குறேன்..என்றபடி நிலா
இருக்கும் அறைக்குச் சென்றார் கமலம்.
அறையிலிருந்து வெளியே வரும்போது வாயெல்லாம் பல்லாக சிரித்தமுகத்தோடு வந்த தாயைப்பார்த்து உயிர் வந்தது தினேஷுக்கு.
பேசவேண்டியதெல்லாம் பேசிக்கொண்டார்கள் இருவீட்டாரும்.
முகூர்த்த ஓலை எழுத நாள்பார்த்துச் சொல்லும்படி பெண்வீட்டார் சொல்ல..
தினேஷ் குடும்பம் நாள் பார்த்துத் தெரிவிப்பதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பி னார்கள்.
கிளம்பியாச்சு..ஒருமொற வந்து எட்டிப்பாக்கக்கூடாது?..
நிலா இருக்கும் அறையின் சாத்தியிருக்கும் ஜன்னலையே அவன் கண்கள் பார்த்துப்பார்த்து மீண்டன.
கூடத்தில் அனைவரோடும் அமர்ந்திருந்த..மாப்ள பைய என்ன சொல்றாரு என்று சற்று நேரம் முன்பு ராஜியிடம் கேட்ட அந்தப்பாட்டி..சட்டென எழுந்து நிலா இருந்த அறைக் குள் சென்றார்.ரெண்டே நிமிஷத்தில் ஜன்னல் கதவு திறந்தது.வெவரமான பாட்டி போலும்.
நிலவென நிலாவின் முகம்.
சட்டென தினேஷின் கண்கள் நிலாவின் பார்வையை சந்தித்தன.நிலாவின் முகத்தில் வெட்கப் புன்னகை.தினேஷும் லேசாகப்புன்னகைக்க.. புன்னகை பரிமாற்றம் நடந்து முடியவும்..
தினேஷு கிளம்புவமா?ரெண்டுநாள் தங்கிட்டுனா போவமா?அக்காவின் கிண்டலில் அசடு வழிந்தான் தினேஷ்.
விடைபெற்றுக்கொண்டு வீடுவந்தாயிற்று.
புதன் கிழமை அய்யிரைப் பார்த்து முகூர்த்த ஓலை எழுத நாள் பார்த்துக் குறித்துக் கொண்டு வந்து பெண்வீட்டாரிடம் தெரிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
இன்று புதன் கிழமை.
காலையிலிருந்தே பரபரப்பாய் இருந்தான் தினேஷ்.இன்னிக்கு அம்மா வும் அக்காவும் சித்தப்பா சித்தியும் முகூர்த்த ஓலை எழுத நாள் குறிக்க அய்யிரப் பாக்கப் போவுறாங்க..
அய்யிரே..அய்யிரே..இன்னும் ஒருவாரத்துக்குள்ள இருக் குறாப்புல நல்லநாளா பாத்து சொல்லுங்க.. ஒங்குளுக்குக் கோடி புண்ணியம் உண்டு..
அய்யரிடம் மனதால் வேண்டு கோள் வைத்தான்.
அவனுக்கே அவனை நினைத்து சிரிப்பு வந்தது.
தினேஷு நாங்க சரியா டாண்ணு பதினோரு மணிக்குலாம் அய்யிரப் பாக்க கிளம்பிடுறோம். கிளம்பினதுமே ஒனக்கு ஃபோன் பண்ணிடறோம்.
நீ கடேலேந்து மத்தியானம் சாப்புட வரும்போது அநேகமா நாங்க. வீட்டுக்கு வந்திடுவோம். அப்ப அய்யிரு சொன்ன தேதிய சொல்றோம்.நீ மதியம் வீட்டுக்கு வந்தும் நாங்க வல்லேன்னா..வர லேட்டாச்சுனா..ஃபோன் பண்ணி வெவரத்த சொல்லுறோம்.சரியா?
ஒர்க் ஷாப்புக்குப் போறியா இல்லையா?
தினேஷு..அங்கபோய் இன்னிக்கு வேல செஞ்சாப்புலதா..நிலாநிலா ஓடிவா..நில்லாமல் ஓடிவான்னு.. யுகேஜில தமிழ் டீச்சர் சொல்லிக் குடுத்த பாட்ட பாடிட்ருக்கப்போறான்.. அதுக்கு வீட்லயே இருந்து பாடிட்ருக்கலாம்..
அக்கா ராஜியின் கிண்டலால்..அம்மா பாருங்கம்மா அக்காவ..
அம்மாவைத் துணைக் கழைத்தான்..
அக்கா சரியாதானே சொல்லுது என்று மகளின் பக்கம் தாயும் சேர்ந்து கொள்ள..
சிரித்துவிட்டான் தினேஷ்.
காலையில் வீட்டில் நடந்த தெல்லாம் மனதில் எழுந்தது..
அம்மாவும் அக்காவும் போனாங்களா இல்லியா?ஃபோனே பண்ணக்காணும்.
நாமதா நிலாநிலானு நெனைக்கிறோமோ..அந்தப்பொண்ணு நெனைக்குமா?
யோசனையோடு வேலை செய்துகொண்டிருந்தவனின் கைகள் அதுபாட்டுக்கு தன் இஷ்ட்டப்படி அந்த புத்தம்புது டூவீலரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தன.
சின்னக் குறைபாட்டுக்காக..
அதனைச் சரி செய்யக் கொடுக்கப்பட்டிருந்தது அந்த வண்டி.
அண்ணே..அண்ணே..
என்னண்ணே வண்டிய இப்பிடியாகிட்டீங்க?தினேஷின்பின்னால் வந்துநின்ற ஒர்க் ஷாப்பில் வேலை செய்யும் பையன் முருகு கத்தினான்.
திடுக்கிட்டுப்போய் இயல்புக்குவந்த தினேஷ்..
சட்டென வண்டியிலிருந்து கைகளை எடுத்துவிட்டு வண்டியைப்பார்த்தவன் அதிர்ந்தே போனான்.
அந்தப் புத்தம்புது வண்டியின் முக்கால் வாசிப்பகுதி பெயின்ட்டை யும் தேய்த்துத்தேய்த்து அழித்திருந்தான்.
அண்ணே என்னாச்சுண்ணே
ஒங்குளுக்கு..இப்பிடி புதுவண்டியோட கலர் முச்சூடையும் தேச்சுதேச்சு அழிச்சு வெச்சிருக்கீங்க?
இதப்போல செய்யிற அளவுக்கு என்னாண்ணே யோசனயாகிப்போச்சி?
கவலையா?சந்தோஷமா?
ரெண்டுல எதுவொண்ணு அதிகமானாலும் என்ன செய்யிறோம்னு தெரியாம போய்டும்.
சொல்லுங்கண்ணே என்னாச்சுண்ணே..நா நாலுநாளு வேலைக்கு வல்ல..லீவு சொல்லிட்டு தானே போனே?..
திரும்பி வர்ரதுக்குள்ள இப்பிடியோரு வேல செய்யிறாப்ல ஆகிட்டீங்க?..
ஒங்களப்பாத்தா ஏதோ வருத்தத்துல இப்பிடி செஞ்சாப்ல தெரியி லண்ணே..
ரொம்ப சந்தோஷத்துல திக்குமுக்காடிப்போயி தன்வசத்துலயே இல்லாம..
மனச கேக்காம கைங்க தானா வேல செஞ்சாப்ல தெரியுது?
நா வேலைக்கு வராத நாலுநாள்ள நீங்க சந்தோஷத்துல திக்குமுக் காடிப் போறாப்புல ஏதோ நடந்திருக்கு..சொல்லுங்கண்ணே..சொல்லுங்கண்ணே..
இல்லாட்டி இப்பிடியோரு வேல செய்யமாட்டீங் கண்ணே..
எலேய் முருகு பேசி முடிச்சிட்டியா?மொத்தமா கேள்வி கேட்டாச்சா?
நானே..ஊம கனாக்கண்டா ஒருத்தருட்டையும் சொல்லமுடியாதுன்னு சொல்லுறாப்ல.. இருக்கேன்.
நீங்க ஊமயில்லண்ணே..பேசமுடியும்ல..எங்கிட்ட சொல்லுங்கண்ணே..
ப்ச்..போடா முருகு..
எப்ப உச் கொட்றீங்களோ அப்ப ஏதோ மேட்டர் இருக்குனு அர்த்தம்.. மேட்ர சொல்லுங்கண்ணே..
ஞாயிற்றுக்கிழமை நிலாவைப் பெண் பார்க்கப் போனது..சம்மதம் தெரிவித்தது..இன்று அம்மா அக்கா சித்தப்பா சித்தி நால்வரும் நிச்சயத்துக்கு நாள்பார்க்க பதினோரு மணிக்கு அய்யிரைப் போய்ப் பார்க்கச் செல்வதாய் இருப்பதாகவும்..ஆனாலும் அவர்கள் அய்யிரைப் பார்க்கப் போனார்களா இல்லையா என்று தெரிந்துகொள்ள அவர்களிடமிருந்து ஃபோன் வரவில்லை என்றும் சொன்னான்.சிலவற்றைச் சொல்லாமல் தவிற்தான்.
அண்ணி எப்டீன்ணே இருக்காங்க என்று கேட்டுச் சில நடிகைகள் பேரைச்சொன்னான் முருகு.
டேய்..நிச்சயமே முடியல அதுக்குள்ள அண்ணி கிண்ணீங்காதடா..
நடக்கும்ணே..சொல்லுங் கண்ணே எப்பிடி இருக்காங்க?அவுங்க பேரென்ன அண்ணே?
அவுங்க பேரு நிலா.. நிலாபோலவே அவ்வளவு.. முடிக்காமல் வெட்கத்தில் நெளிந்தான்.
புரிஞ்சிட்டு.. புரிஞ்சிட்டு..
அதா..வண்டியோட அம்மாம் பெயின்டையும் அழிச்சி வெச்சிருக்கீங்க..
இப்பென்ன வீட்டுலேந்து அம்மாவோ அக்காவோ ஃபோன் பண்ணுல..அதானே வருத்தமா இருக்கீங்க?
வழக்கமா சாப்புடப் போவீங்கள்ள?அதாட்டம் வீட்டுக்குப் போங்கண்ணே..
வெளியே ஒரு காரியமா போரவங்க..வேல முடிஞ்சிதானேவரணும்?
அய்யிருவீட்ல நெறையா பேரு அதுக்கு இதுக்குனு நாள் பாக்க வந்திருந்தா..
காத்திருந்து பாத்துட்டுதானே வரணும்?அவசரப்பட்டா முடியுமாண்ணே.
மணி மூணாகப்போவுது..
ஒரு எட்டு வீட்டுக்குப்போய் பாத்துட்டு.. சாப்ட்டு வாங்கண்ணே..விஷயம் தெரிஞ்சிக்கிலாம்ல..
சரி.. லேட்டாவுதுன்னா.. அதையாச்சும் ஃபோன் பண்ணி சொல்லுலாம்ல?
கவலயா இருக்குல்ல.. என்றான் தினேஷ் வருத்தமுடன்.
சரி விடுங்கண்ணே.. வீட்டுக்குக் கிளம்புங்க..
வரக்கொள்ள நல்ல சேதியோட வாங்க.. நல்ல சேதியோடதா வருவீங்க பாருங்க..
நீங்க வர்ரதுக்குள்ள வண்டிக்கு பெயின்ட்ட ஸ்ப்ரே பண்ணி வெக்கிறேன்.நல்லா சொரண்டி வெச்சீங்க..
அண்ணியகூப்ட்டு ஒங்க நெனப்புல எங்கண்ண வண்டிய எப்பிடி சொரண்டி வெச்சுருக்காரு பாருங் கன்னு காமிக்கணும்.
வேண்டா வேண்டா.. செல்லுல வண்டிய போட்டோ எடுத்து வெக்கிறே. ஃபோட்டோவ காமிக்காம இருக்கமாட்டேன்.
டேய் அதிகப்பிரசங்கி.. அதுக்குள்ள அண்ணி அண்ணிங்காத..அது தப்புடா..செல்லமாய் முருகின் தலையில் லேசாய்த் தட்டினான்.
ஆனாலும் மனது இனிக்கத்தான் இனித்தது.
வண்டியை வீட்டின் வாசல் கேட்டருகே கொண்டுவந்து நிறுத்தி வீட்டின் கதவைப் பார்த்தான்.கதவில் பூட்டு தொங்கவில்லை.கதவு முழுவதும் மூடாமல் ஒருக்களித்து வைக்கப் பட்டிருந்தது.
அப்ப.. அம்மா அக்கால்லாம் வீட்லதான் இருக்காங்க..
அய்யிரப்பாத்துட்டு வந்துட்டாங்கபோல..அப்ப ஏ ஃபோன் பண்ணல..
லேசாய்க் கோவம் எட்டிப் பார்த்தது.
வண்டியை ஸ்டேண்ட் போட்டுவிட்டு..கேட்டைத் திறந்து..ஒருக்களித்திருந்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
சித்தப்பா சித்தியைக் காணவில்லை.
அக்கா ராஜி காய்ந்த துணிகளை மடித்துவைத்துக் கொண்டிருந்தாள்.
இவனைப் பார்த்துவிட்டு அம்மா தம்பி சாப்புட வந்தாச்சி என்று சமையலறை நோக்கிக் குரல் கொடுத்தாள்.
குரலில் அய்யிரைப் பார்த்துவிட்டு வந்தாயிற்று என்று தெரியப்படுத்தும் பரபரப்பு இல்லை.
கமலம் சமையலறை யிலிருந்து வெனியே வந்தார்.
ஏ தினேஷு இம்மா நேரம் சாப்புடவர..மணி மூன்ர ஆவுது என்றார் சர்வ சாதாரணமாய்.குரல் தினமும் இருப்பதுபோல் சாதாரணமாய் இருந்தது.
குழம்பிப்போனான் தினேஷ்.
இவுங்க நாள்குறிக்கப் போனாங்களா இல்லையா?
போயிருந்தா உள்ளாற நாம வந்ததுமே படபன்னு விஷயத்த சொல்ல ஆரம்பிச்சிருப்பாங்க.. ரொம்ப சாதாரணமா இருக்காங்க..
அக்காவும் தேமேன்னு துணிய மடிச்சிவெச்சிக் கிட்ருக்கு..சித்தப்பா சித்தியையும் காணல..
தலை வெடித்துவிடும்போல் இருந்தது தினேஷ்க்கு.
ஷர்ட்டைக்கழற்றி கொடியில் போட்டான்.பேன்ட்டை உருவிவிட்டு வேட்டிக்கு மாறினான். துண்டை எடுத்துத் தோளில் போட்டான்.
ஊஹும்..அதுவரை அம்மாவோ அக்காவோ எதுவும் சொல்லவில்லை.
கொல்லைப்புரம்போய் கைகால் முகம் கழுவி வந்தான்.
தினேஷு இன்னிக்கு ஒனக்குப்புடிச்ச மட்டன் கொழம்பும்.. உருளக் கெழங்கும் சமச்சிருக்கேன்.
சுடச்சுட இருக்கு..ஒரு புடிபுடி..
சொல்லிக்கொண்டே சாப்பிடும் தட்டை டேபிளில் கொண்டு வைத்தார் கமலம்.
வெறுத்துப் போனான் தினேஷ்.அய்யிரப்பாக்கப் போனாங்களா போகலியா?
கேட்டுக் கத்தவேண்டும் போல் இருந்தது.அம்மா அக்காவின் மௌனம் அவனைத் தாக்கியது.
தட்டின் முன் அமர்தவன் தட்டில் வைக்கப்பட்ட மட்டன் துண்டுகளையும் உருளைக்கிழங்கையும் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
சாப்பிடப் பிடிக்கவில்லை.
சாதாரணமாய் இருந்தால் தட்டு சீக்கிரம் சீக்கிரம் காலியாகும்.அம்மா வைக்கவைக்க சாப்பிடு பவன் விரலால் கூட மட்டனயோ கிழங்கையோ தொடவில்லை.
தினேஷு ஏ சாப்புடாம ஒக்காந்திருக்க?ஒனக்குப் புடிச்ச அயிட்டமா சமச்சிருக்கே.. ஒடம்புகிடம்பு சரியில்லயா?ஏ காலேல இட்லிதானே சாப்ட்ட? வயித்து உபாத ஒன்றுமில்லையே?
தவிட்ட தின்னக் கோழியாட் டம் முழிச்சிக்கிட்டு ஒக்காந் திருக்க..
க்ளுக்..மெலிதாய் அக்கா ராஜி சிரிக்கும் சப்தம் கேட்டது.
பட்டென எழுந்தான் தினேஷ்.
சரக்.. கொடியிலிருந்து பேன்ட்டை உருவி மாட்டிக் கொண்டான்.
வேட்டியைத் தாறுமாறாய் கொடியில் போட்டான். துண்டை மூலையில் வீசினான்.
ஷர்ட்டை எடுத்து மாட்டி பட்டனைப் போட்டுக் கொண்டே வாசல் நோக்கி நடந்தான்.
தினேஷு என்னாச்சு?சாப்பாட்டத் தொடவே இல்ல..
விருக்குனு எழுந்துகிட்டு ஓடுற?அம்மா கேட்கவும் திரும்பிப்பார்த்து முறைத்தான்..
ஒங்குளுக்கெல்லாம் நல்ல மவனா இருந்தா மதிக்கத் தோணாது.ரௌடி மகனா இருந்தாதா மதிப்பு மரியாத..
அய்யோடி ஏ என்னன்னவோ பேசுர?
பின்ன எப்புடி பேசுரது?அய்யிரப்போய் பாத்தோம்..பாக்குலன்னு ஏதாச்சும்..நீங்களோ..ஒங்க மவளோ சொன்னீங்களா?
டாண்ணு பதினோரு மணிக்குலாம் கிளம்பிடு வோம்..கிளம்பினவொடனே ஃபோன் பண்ணுறே.. லேட்டானா அதையும் ஃபோன் பண்ணி சொல்லு றோம்னீங்க..
மணி என்னாவுது? இதுவர வெவரம் எதாச்சும் சொன்னீங்களா?என்னப் பாத்தா ஈனப்பிறவியா தெரியுதா? நல்ல மவனா.. பையனா இருக்குறது தப்பு.
ச்சே..பெத்ததாயே இப்பிடி
இருந்தா..சொல்லிக் கொண்டே நகர்ந்தான்.
தினேஷு..இரு..இரு..நா ஒன்னு சொல்லணும் ஒங்கிட்ட..
எதுவும் சொல்ல வேண்டா..மேலும் இரண்டடி வைத்தான்.
அட..நில்லுங்குறே..போய்ட்டே இருக்குற..மகனின் அருகே வந்தாள் கமலம்.
இந்தால பாரு தினேஷு..
பொண்ணுபாக்கப் போன அன்னிக்கி நா அந்தப் பொண்ணாண்ட எம்மவ தினேஷ புடிச்சிருக்கானு கேக்கப்போனேல்ல..
அப்ப அந்தப் பொண்ணுக் குப் பக்கத்துல போய் நின்னேனா..அப்ப அந்தப் பொண்ணக் கிட்டத்துலப் பாத்தப்ப..அந்தப்பொண்ணு ஒன்னும் அத்தினி அழகால்ல..லேசா பல்லு எடுப்பாருக்கு..மேட்டு நெத்தி..வளஞ்ச மூக்கு..
காதுகூட கொஞ்சம் தொன்னக்காது போல.. மொத்தத்துல..ஒனக்கு அம்புட்டு பொருத்தமா..
அம்மா..கத்தினான் தினேஷ்..
அநியாயமா பேசாதிங்க..
அவுங்க குடுக்குற காசு போதானு நெனச்சா விடுங்க..ஆனா அந்தப் பொண்ண அபாண்டமா பேசாதீங்க..பாவம் வந்துசேரும்.
தம்பி..அம்மாவ ஏ கோச்சுக்குற..அம்மா நெசந்தா சொல்றாங்க.. அந்தப்பொண்ணு சுமார்தா..
ரொம்ப சுமாரு.. சொல்லிக் கொண்டே தம்பியின் அருகில் வந்தாள் ராஜி.
ச்சே..அம்மாவும் பொண்ணும் சேந்துக்கிட்டு..வெறுப்பாருக்கு..சொல்லிக்கொண்டே விறுவிறுவென்று வாசலை நோக்கி நடக்க ஆரம்பித் தான்.
ஹோவென்று சிரித்தார்கள் கமலமும்.. ராஜியும்.
டேய்..தினேஷு நாங்க பேசினத நெசம்னு நெனச்சியா?
ஒன்ன சும்மா நோட்டம் விட்டுப்பார்த்தோம்.வெளையாடிப் பாத்தோம்.
நாங்க அய்யிரப் போய்ப் பார்த்து நாள் குறிச்சிக்கிட்டு வந்துட்டோம்..
சட்டென நின்றான் தினேஷ்.
கமலமும் ராஜியும் அவனருகில் வந்தார்கள்.
எலேய்..தினேஷு அந்தப் பொண்ணு நெசமாவே ரொம்ப அழகுடா..லேசா சிரிச்சாக்கூட சிரிப்பே அம்மாம் அழகுடா.. அதப்போய் அப்பிடி இப்பிடீன்னு சொல்லுவமா?
சும்மா நானும் ராஜியும் ஒன்ன கலாய்ச்சோம்டா..
மகனின் முதுகை ஆதூரமாய்த் தடவி விட்டாள் கமலம்.தலையை வருடினாள்.அம்மாம் புடிச்சிருக்கா அந்தப் பொண்ண ஒனக்கு..
எஞ்செல்ல மகனே..ஒ விருப்பம்தாண்டா இந்த அம்மா விருப்பம்.
ஆமாம் தம்பி.. அந்தப் பொண்ணு ரொம்ப அழகு..மரியாத தெரிஞ்ச பொண்ணுங்கூட…நானும் அம்மாவும் சும்மா ஒன்ன ஓட்டிப்பாத்தோம்டா..
அம்மா..அக்கா..என்றபடி இருவரையும் தன்னோடு அணைத்துக்கொண்டான் தினேஷ்.
கண்களில் மகிழ்ச்சியால் கண்ணீர் நிரம்பியது.
– தொடரும்…
தொடர்புள்ள சிறுகதைகள்
மாதுரியம்
சந்திரா மனோகரன்
August 31, 2026
கனவுகளை விதைத்தல்
திசேரா
August 31, 2026
எனக்கெனவே… நீ… கிடைத்தாய்!
ஆர்.மணிமாலா
August 31, 2026