காயத்ரி மந்திரம்




அயோத்தியில் அகன்ற ஸரயு நதி பிரவாகமாக ஓடிக் கொண்டிருந்தது.
அப்போது காலை ஒன்பது மணி. வானம் இருட்டி மழை பிசுபிசுத்துக் கொண்டிருந்தது.
நீளமான வெண் தாடியை நீவி விட்டபடி அந்தச் சாமியார் காவியுடையில் நதிக்கரை குடிலில் அமர்ந்திருந்தார்.
அப்போது ஒரு வயதான பெண்மணி குதிரை வண்டியில் வந்து இறங்கி குடிலின் உள்ளே மெதுவாக எட்டிப் பார்த்தாள்.
“வாங்கோ…”
பவ்யமாக உள்ளே நுழைந்த பெண்மணி, அங்கு தரையில் விரித்திருந்த வெண் பட்டுப் பாயின் மீது அமர்ந்தாள்.
“சுவாமி தாங்கள் தமிழகத்திலிருந்து வந்து அயோத்தியில் பூமி பூஜை முடிந்தவுடன் இங்கேயே தங்கிவிட்டதை நான் அறிவேன்… “
“ஆமாம்… பகவான் ஸ்ரீ ராமரின் கோயில் கட்டி முடியும்வரை இந்தக் குடில்தான் என் வாசம்…”
“சுவாமி நான் தங்களிடம் ஒரு சிறிய சந்தேகத்தை கேட்டுத் தெளிவு பெற வந்துள்ளேன்.”
“சொல்லுங்கோ.”
“நான் இங்கு அயோத்தியில்தான் பல ஆண்டுகளாக வசிக்கிறேன். பூர்வீகம் தஞ்சாவூர். என் கணவர் தன்னுடைய எண்பதாவது வயதில் போன வருடம் இறந்துவிட்டார்… அவர் தன்னுடைய இருபதாவது வயதிலிருந்தே தினமும் காலையும், மாலையும் நூற்றியெட்டு தடவைகள் காயத்ரி மந்திரம் விடாது சொல்லி வந்தார்…”
“ஓ அப்படியா? மிகப் பெரிய நல்ல விஷயம் அம்மா. தாங்களுக்கு இப்போது என்ன வேண்டும்?”
“அவர் விட்டுச் சென்ற அந்த காயத்ரி மந்திரத்தை நானும் என் உயிருள்ளவரை தினமும் இரண்டு வேளைகள் சொல்ல ஆசைப் படுகிறேன் சுவாமி. ஒரு பெண்ணான நான் தினமும் அதைச் செய்யலாமா?”
“ஓ தாராளமாகச் செய்யலாமே… உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? பல வருடங்களுக்கு முன், பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தில் குமாரி கல்யாணி என்னும் இளம் பெண் வேத மந்திரங்கள் பாடத் திட்டத்தை படிக்க விரும்பி விண்ணப்பித்தார். அவர் பெண் என்பதால் உடனடியாக அனுமதி மறுக்கப்பட்டது…
“இது ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டது. பத்திரிகைகள் வரிந்து கட்டிக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்தன. ஆர்ய சமாஜத்தைச் சேர்ந்தவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தை அணுகி இதை மறு பரிசீலனை செய்யுமாறு கூறினர். இதை ஆராய பண்டிட் மதன்மோகன் மாளவியா தலைமையில் ஏராளமான வேத பண்டிதர்கள், நிபுணர்கள் கொண்ட ஒரு கமிட்டி நிறுவப்பட்டது. பெண் என்பதால் வேதம் படிப்பதை மறுக்கக் கூடாது என்பதே அந்தக் கமிட்டியின் முடிவு. பெண்கள் காயத்திரி மந்திரத்தை ஜபிக்கலாம் என்கிற அவர்களின் அடிப்படை முடிவு அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது.”
“அப்படியா சுவாமி?”
“ஆமாம்… ரிக் வேதத்தில் மட்டும் கோஷா, கோதா, லோபமுத்ரா, சரமா, இந்த்ராணி, யமி, சூர்யா உள்ளிட்ட ஏராளமான பெண் ரிஷிகள் அதாவது ரிஷிகாக்கள் உள்ளனர். யாக்ஞவல்க்ய மஹரிஷியின் மனைவி மைத்ரேயி பிரம்மவாதினி என்றழைக்கப் படுகிறார். ஆதி சங்கரர் பாரதி தேவியுடன் நேருக்கு நேர் விவாதம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.”
“…………………………”
“தவிர, ஸ்வாமி விவேகானந்தர் பெண்களும் சந்தியா புரியவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ‘Complete works of Swami Vivekananda’ மூன்றாம் தொகுதியில் 451 முதல் 461 பக்கங்கள் வரை உள்ள கட்டுரையில் இதை விளக்கமாகக் காணலாம்…
“காயத்ரி பரிவார் அமைப்பை நிறுவிய ஸ்ரீராம் சர்மா ஆச்சார்யா பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்வதற்கு தடையேதுமில்லை என்று கூறியதோடு உலகெங்கிலுமுள்ள லட்சக்கணக்கான பெண்களுக்கு உத்வேகமூட்டி காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும்படி செய்தார்…
“இறுதியாக பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா கூறியுள்ளது மிக முக்கியமான விஷயம். காயத்ரி வேதங்களின் தாய். பெண்கள் அந்த மந்திரத்தை ஜபிப்பதை யாராவது தடை செய்தால் அது அவர்களது குறுகிய மனப்பான்மையையே காட்டுகிறது என்கிறார்…
“ஆக பண்டிதர்களாலும்; விவேகானந்தர் போன்ற பெரும் மஹான்களாலும்; ஸ்ரீ சத்ய சாய்பாபா போன்ற அவதார புருஷர்களாலும் பெண்கள் காயத்ரி மந்திரம் ஜபிக்கலாம் என்பது உறுதிப் படுத்தப்பட்ட விஷயமாகிவிட்டது.”
“இதில் இவ்வளவு இருக்கா சுவாமி?”
“ஆமாம்… இன்னும் எவ்வளவோ இருக்கிறது. காயத்ரி மந்திரம் விஸ்வாமித்திர மஹரிஷி அருளியது. இது சூரியனை நோக்கித் துதிக்கப்படுவது. இதை அனைவரின் நலனுக்காகவும் உச்சரிக்கிறோம். இடம், காலம், நாடு, இனம், ஆண், பெண் என்ற பாகுபாடு; அந்தஸ்த்து வேறுபாடு ஆகிய அனைத்திற்கும் அப்பாற்பட்டது காயத்ரி மந்திரம். அது அறிவு பூர்வமானதும் கூட. ஆகவேதான் பிரபல விஞ்ஞானியான ஜே.பி.ஹால்டேன் The Gayatri mantra must be carved on the doors of every laboratory in the world என்றார்.
சென்னையைச் சேர்ந்த பெரிய சட்டத்துறை நிபுணர் ஒருவரின் மகள் 1937 ம் ஆண்டு திருவண்ணாமலையில் உள்ள ரமணாசிரமத்திற்கு வந்து ரமணரை தரிசித்தார். அவரிடம், ‘எந்த மந்திரம் நல்ல மந்திரம்?’ என்று கேட்டார்.
பகவான் ரமணர், சந்தேகமில்லாது காயத்ரி மந்திரம்தான், அதை விஞ்சுவது வேறு ஒன்று உண்டா?” என்றார்.
“இப்படி பிரத்யஷ தெய்வமாய் விளங்கும் காயத்ரி மந்திரத்தில் இருபத்திநான்கு எழுத்துக்கள் உண்டு. தேவி பாகவதத்தின் பன்னிரெண்டாம் ஸ்கந்தம் முதல் அத்தியாயமே காயத்ரி ரஹஸியத்தை விளக்க ஆரம்பிக்கிறது. காயத்ரி ஹ்ருதயம், காயத்ரி சஹஸ்ரநாமம் உள்ளிட்டவற்றைத் தெளிவாகத் தருகிறது…
“இருபத்திநான்கு ஆஷரங்களுக்கும் ஒவ்வொரு ரிஷி உண்டு. வாமதேவர்; அத்திரி; வசிஷ்டர்; சுக்கிரர்; கண்வர்; பராஸரர்; விஸ்வாமித்திரர்; கபிலர்; செளனகர்; யாக்ஞவல்க்யர்; பரத்வாஜர்; ஜமத்கனி; கெளதமர்; முக்தவர்; வேதவியாசர்; லோமஸர்; அகஸ்தியர்; கொளசிகர்; வத்ஸர்; புலஸ்தியர்; மாண்டுகர்; துர்வாஸர்; நாரதர்; கஷ்யபர் ஆகிய இந்த இருபத்திநான்கு மகரிஷிகளும் ஒவ்வொரு ஆஷரத்திற்குரிய ரிஷிகளாவர்.
“இருபத்திநான்கு சந்தஸுக்கள் இந்த இருபத்திநான்கு எழுத்துக்களுக்கு உண்டு. காயத்ரி, உஷ்ணுக், அனுஷ்டுப், பங்க்தி, திரிஷ்டுப், ஜகத், அதிஜகதி, சக்வரீ, அதிசக்வரீ உள்ளிட்ட இருபத்திநான்கு சந்தஸுக்கள் இருப்பதாலேயே காயத்ரியை சந்தஸாம் மாதா என்று சிறப்பிக்கின்றனர்.
“ஒவ்வொரு ஆஷாரத்திற்கும் ஒரு தேவதை உண்டு; ஒரு முத்திரை உண்டு; ஒரு மலர் உண்டு; ஒரு சக்தி உண்டு !
“காயத்ரியை உச்சரிக்கும்போது இவர்கள் அனைவரின் அருளுக்கும் நாம் பாத்திரமாகிறோம்…”
அப்போது குடிலுக்கு வெளியே மழை வலுத்தது.
“சுவாமி இப்போதைக்கு என்னால் கிளம்பிச் செல்ல முடியாது… காயத்ரியை தினமும் உச்சரிப்பதால் நமக்கு என்ன பயன்கள்?”
“ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல? எனக்கும் இப்போது நிறைய நேரம் இருக்கிறது… விரிவாகப் பார்க்கலாம்…”
அந்த வயதான பெண்மணி ஆர்வத்துடன் கேட்கலானாள்…