காந்திமதியின் சீற்றம்




(இதற்கு முந்தைய ‘உறக்கம் வராதவர்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)
சுகுணா காலையிலேயே ஊருக்கு கிளம்பிவிட்டாள். யாருடைய பேச்சும் அருகாமையும் இல்லாமல் இருந்தால் போதும் என்ற மனநிலையில் இருந்த சபரிநாதனுக்கு மகள் சுகுணா கிளம்பிப் போனது நிம்மதியாக இருந்தது.
சுப்பையா ஒரு மரியாதைக்காக சுகுணாவை டவுன் பஸ் ஏற்றிவிட்டு திரும்பினான். வீட்டுத் திண்ணையில் நின்றவாறு எல்லாவற்றையும் காந்திமதி கவனித்துக் கொண்டிருந்தாள்.
எத்தனை அமைதியாக இருந்து ராஜலக்ஷ்மியை வீழ்த்தியிருக்கிறான் சுப்பையா… அவனுக்கு ராஜலக்ஷ்மி கிடைத்திருப்பது பெரிய விஷயமில்லை காந்திமதிக்கு. அந்த அழகு ராணிக்குப் போய் இவன் கிடைத்திருக்கிறானே! அதைத் தாங்க முடியவில்லை காந்திமதியால்.
சும்மாவே அவள்மேல் காந்திமதிக்குள் அணையாத பொறாமைத் தீ உண்டு. ராஜலக்ஷ்மியை கட்டிக்கொள்ள முடிவு செய்துதானே சபரிநாதன் காந்திமதியை அவருடைய மனதில் இருந்து தூக்கி எறிந்தார்… அந்த ஆத்திரம் அவள் மன ஆழத்தில் கனத்த திமிங்கிலம் மாதிரி அலைந்து கிடக்கிறது. இப்போது ராஜலக்ஷ்மி சுப்பையா காதல்வேறு சேர்ந்து திமிங்கிலத்தை உசுப்பி விடுகிறது!
திமிங்கிலம் வாலைச் சுழற்றினால் என்ன நடக்கும்? ஊர்க் கட்டுப்பாட்டு விதிகளின்படி சுப்பையா உடனே ஊரைவிட்டு வெளியேற்றப்படுவான். ராஜலக்ஷ்மியின் மேல் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொறுப்பை ஊர்ப்பஞ்சாயத்து சபரிநாதனிடம் விட்டுவிடும். சபரிநாதன் அவளை அடித்து உதைத்து சித்திரவதை செய்வாரோ, இல்லை கல்லிடைகுறிச்சிக்கு அடித்து விரட்டி அவளை வாழாவெட்டியா ஆக்குவாரோ, அது அவருடைய இஷ்டம்.
ஆனால் சித்ரவதை ராஜலக்ஷ்மிக்கு மட்டுமில்லை. சபரிநாதனுக்கும்தான். ஆசைப்பட்டு கட்டிய சின்ன வயசுக்காரி ஒரு சின்ன வயசுப் பையனுடன் ஓடிப்போகிற அளவுக்கு தொடர்பு வைத்திருந்தாள் என்ற மானக்கேடு ஒன்று போதுமே சபரிநாதனின் ஆயுசுக்கும்…
நினைக்க நினைக்க காந்திமதிக்கு தன் இரண்டு புஜங்களையும் தட்டிக்கொள்ள வேண்டும்போல இருந்தது. ஒரேயொரு கராத்தே அடியில் மூன்று எதிரிகளை அடித்து வீழ்த்த அவளுடைய மன ஆழத்து திமிங்கிலம் நீர் மட்டத்தை நோக்கி வேகமாக எழும்ப தலையை கொஞ்சம் உயர்த்தியது! அதற்குள் சுப்பையாவின் பைக் எரிக்கப்பட்ட புகார் விஷயமாக அந்தப் பகுதிக்கான காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிள் ஒருத்தருடன் பைக்கில் வந்து இறங்கினார்.
சபரிநாதன் உட்பட பலபேரிடம் எந்த சிரத்தையும் இல்லாத ஒரு விசாரணையை நடத்திவிட்டு இன்ஸ்பெக்டர் அரைமணி நேரத்தில் வந்த வேகத்தில் கிளம்பிவிட்டார். கிளம்பிச் செல்வதற்கு முன், சபரிநாதன் எதிரில் திரண்டிருந்த சிலரிடம், “எனக்கு ரெண்டு மூணுபேர் மேல சந்தேகம் இருக்கு. அவனுங்களா வந்து நாலு நாளைக்குள்ள சரணடைஞ்சிட்டா அடி உதை இல்லாம தப்பிக்கலாம். அப்படி வரேலே, முட்டிக்கு முட்டி பின்னிருவேன் பின்னி!” என்று ஒரு எச்சரிக்கை கொடுத்துவிட்டுப் போனதில் சபரிநாதனின் முதுகுத்தண்டு வெடவெடத்து வியர்த்துக் கொட்டி விட்டது. அவருக்குள் ஊசலாட்டம் ஆடிக் கொண்டிருந்த பிடிமானம் முழுவதுமாக அறுந்து விழுந்துவிடுவது போல அதிர்ந்து ஆடியது.
கூட்டத்தோடு கூட்டமாக காந்திமதியும் திண்ணையோரம் வந்து நின்று ஆர்வத்துடன் சபரிநாதனின் முகத்தைக் கவனித்துப் பார்த்தாள். அவளுடைய பார்வைகூட அந்த நிமிஷம் சபரிநாதனைப் பயப்பட வைத்ததால் காந்திமதியைப் பார்க்கப் பயந்து முகத்தைச் சட்டென வேறுபக்கம் திருப்பிக்கொண்டார்.
இதைத் தவறாக புரிந்துகொண்ட காந்திமதிக்கு அது பெரிய தப்பாகப் போய்விட்டது. சபரிநாதன் தன்மீது வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டார் என்று தோன்றிவிட்டது அவளுக்கு. அவ்வளவுதான்! அவளுக்குள் அந்தத் திமிங்கிலம் குலுங்கியது…
பைக்குக்கு தீ வைத்துவிட்டு ஒன்றும் தெரியாதவர் மாதிரி இருப்பதாக நினைத்து அவள் மனம் ஆவேசப்பட்டது. ஊர் பேருக்குத் தெரியாமல் பைக்குக்கு தீ வைத்தது மாதிரி, அவளுடைய மனசுக்குத் தீ வைத்தவரும் சபரிநாதன்தானே என்ற ஆத்திரம் பொங்கியது அவளுக்குள்…
உண்மையில் சபரிநாதன்தான் குற்றவாளி. அவர்தான் காந்திமதியின் எதிரி. சுப்பையாவோ ராஜலக்ஷ்மியோ எதிரிகள் இல்லை. யோசித்துப் பார்த்தால் ராஜலக்ஷ்மி சுப்பையாவுடன் ஓடிப்போவதுதான் நியாயம்! அந்தக் காதல் ஓட்டத்திற்கு அட்சதை போட்டு வாழ்த்துவதுதான் நீதியே தவிர அவர்கள் ஓட முடியாமல் முடக்குவது அநீதி! தனிப்பட்ட முறையில் அவர்களிடம் காந்திமதிக்கு எந்தப் பகையும் கிடையாது…
ஆனால் சபரிநாதனிடம் அடங்காத பகை உண்டு அவளுக்கு. அவள் தண்டிக்க வேண்டியது அழகான சின்னஞ் சிறுசுகளை இல்லை. கோரமான கிழவனைத்தான்! சின்னஞ் சிறுசுகளாவது எங்கேயாவது ஓடிப்போய் நல்லபடியாக இருக்கட்டும்…
என்ன செய்யலாம் ஏது செய்யலாம் என்று காந்திமதி ஒருநாள் பூராவும் கிறுக்குப் பிடித்தவள் போல யோசனை பண்ணிக்கொண்டே கிடந்தபின் அவளுக்கு ஒருவழி புலப்பட்டது. முப்பிடாதி அம்மன் கோயிலுக்குப் போய்விட்டு வந்து காரியத்தில் இறங்கினாள். தீய சக்தியை துவம்சம் பண்ண அந்த அம்மனின் அருள் வேண்டும்.
வேத பாடசாலைக்கு நேர் தென்கிழக்கே ஆற்றோரம் இருந்த பெரிய அரச மரத்தின் கீழ் அவசரமாக ஊர் பஞ்சாயத்துக் கூட்டம் நாளை நடக்கப் போகிற செய்தி திம்மராஜபுரம் ஜனங்களுக்கு பரபரப்பான செய்தி இல்லை. ஆனால் அந்த அவசர கூட்டத்தில் சுப்பையாவின் மோட்டார் பைக்கிற்கு யார் தீ வைத்தார்கள் என்ற உண்மை தெரிவிக்கப்பட இருப்பதாக அறிவித்திருந்ததில்தான் ஊர் ஜனங்கள் பரபரப்பாகி விட்டார்கள். உண்மையைத் தெரியப் படுத்தப்போவது யார் என்ற விஷயம்கூட பஞ்சாயத்துத் தலைவருக்கும் காந்திமதியின் தகப்பன் கோட்டைசாமிக்கும்தான் தெரியும்.
அவர்களுக்கும் கூட காந்திமதி யாரை குற்றவாளியாக தெரிவிக்கப் போகிறாள் என்பது தெரியாது. உண்மையை ஊர்க் கூட்டத்தில் மட்டும்தான் சொல்வதாக காந்திமதி கண்டிப்பாக சொல்லிவிட்டாள். உண்மையை அறிவிக்கிற சம்பவத்தை பெரிய நாடகக் காட்சி போல் பரபரப்பானதாகக் காட்ட அவளுடைய மனசு ஆசைப்பட்டது. ஆனால் காந்திமதி ஒன்றை மட்டும் பஞ்சாயத்துத் தலைவரிடம் உறுதியாகச் சொல்லி இருந்தாள். உண்மையைக் கூறிய பிறகு அவளுக்கு ஏதாவது ஆபத்து வந்தாலும் வரலாம். அதனால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பஞ்சாயத்துக்காரர்கள்தான் காந்திமதிக்கு ஏற்படுத்தித் தரவேண்டும். அதற்குத் தான் பொறுப்பு என்று பஞ்சாயத்துத் தலைவர் அவளுக்கு வாக்குக் கொடுத்தார்.
இந்தச் செய்திகள் எல்லாம்வேறு பரவி ஜனங்களிடையே பெரிய பதட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆள் ஆளுக்கு எதை எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஊர் கூட்டத்தில் உண்மையை தெரிவிக்கப்போவது யார் என்பதை யாராலும் ஊகிக்க முடியவில்லை. உண்மை நிஜமாகவே வெளிப்படுமானால் என்ன நடக்கும் என்பதை சுப்பையாவினாலும் கற்பனை செய்ய முடியவில்லை.
ராஜலக்ஷ்மியும் சமையலறை ஜன்னல் வழியாக பரபரப்பையும் சந்தோஷத்தையும் ஜாடையிலேயே சுப்பையாவுக்கு உணர்த்திக் கொண்டிருந்தாள். அவளுடைய முயற்சியும் பங்கும் இல்லாமலேயே உண்மை வெளியாகப் போகிற பரவசம் அவளுக்குள் படபடத்துக் கொண்டிருந்தது. தண்டனை பெற்று சபரிநாதன் ஜெயிலுக்குப் போய்விட்டால் ராஜலக்ஷ்மிக்கு சுப்பையாவுடன் தப்பி ஓடுவது ரொம்ப சுலபமானதாக இருக்கும். அந்தச் சுதந்திர ஓட்டத்திற்காக ராஜலக்ஷ்மியின் உணர்வுகள் வேகமாகத் தயாராகிக் கொண்டிருந்தன.
ஆனால் சபரிநாதன் ஊசலாட்டத்தின் கடைசி இழைகளில் தொங்கிக் கொண்டிருந்தார். உண்மை நிஜமாகவே யாருக்காவது தெரியுமா? அவரால் நம்பவும் முடியவில்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை. அவர் தீ வைத்ததை ராஜலக்ஷ்மி உட்பட யாருமே பார்க்கவில்லை என்பதுதான் அவருடைய நம்பிக்கை. ஆனாலும் யாரோ எதற்கோ புரளியைக் கிளப்பி விடுகிறார்கள் என்கிற மாதிரி நினைக்கிற ஸ்திரமான மனநிலையில் சபரிநாதனின் மனம் இல்லை.
ராத்திரியோடு ராத்திரியாக எங்காவது ஓடிப்போய் விடலாமா என்று யோசித்தார். ஓடும்போது யாராவது பார்த்துவிட்டால்? அப்படியே ஓடிப்போனால் கூட எங்கு ஓடிப்போவது? ஓடிப்போய் சாப்பாட்டுக்கு என்ன செய்வது? ஒருவேளை சாப்பாடு இல்லாமல் இருக்க முடியாது அவரால்! ராத்திரியில் தூக்குப்போட்டுக் கொண்டு செத்து விடலாமா என்ற எண்ணமும் அவரின் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அதற்கும் பயமாக இருந்தது.
மாற்றி மாற்றி மனதிற்குள் ஏற்பட்ட குழப்பத்தின் கனம் தாங்காமல் உச்சந்தலை கொதித்தது. ஒரு விளிம்பில் நிற்கிற தனிமை மனதை நடுங்க வைத்துக்கொண்டே இருந்தது. மரண தண்டன நிறைவேற்றப் படப்போவதற்கு முந்தின நாள் இரவு பூராவும் ஒரு சிறைக்கைதி எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பானோ அதே மனநிலையில் சபரிநாதனும் கிடந்தார். ராத்திரி பூராவும் வயிற்றுப்போக்கு வேறு ஏற்பட்டு எந்த விதத்திலுமே அவரால் சமாளித்துக்கொள்ள முடியவில்லை. பொழுது விடியவே கூடாது என்று பதட்டப் பட்டார். நடக்கிற காரியமா அது? என்றைக்கும் போல அன்றும் பொழுது விடிந்து விட்டது….
ஒருநாளும் இல்லாத அதிசயமாக அன்று காலையில் சபரிநாதன் ராஜலக்ஷ்மியிடம் ரொம்ப ரொம்பப் பிரியமாகப் பேசினார்! வார்த்தைக்கு வார்த்தை தாயி… தாயி என்று அன்பொழுக கூப்பிட்டுக் கொண்டிருந்தார். உடம்பு ரொம்ப ஒரு மாதிரியாக இருப்பதாகச் சொல்லி குளிக்காமல் இருந்தார். வயிறு சரியில்லை என்று சொல்லி சாப்பிடாமலும் இருந்தார். அவரைப் பார்க்க ராஜலக்ஷ்மிக்கே பரிதாபமாக இருந்தது. ஆனால் இதற்குமேல் அவளால் எதுவும் செய்ய முடியாது. சபரிநாதன் கடைசி நேரத்தில் சங்கரா சங்கராவென்று கத்துகிறார்! என்ன கத்தினாலும் இனி பிரயோஜனமில்லை…!
காலை எட்டு மணிக்கு முருகபூபதி அவரைத் தேடி வந்துவிட்டார். “என்னங்க அண்ணாச்சி பேயறைஞ்ச மாதிரி இருக்கீங்க? பஞ்சாயத்து கூட்டத்துக்கு வரலையா நீங்க?”
“என்னால நடக்க முடியாது பூபதி… தலையைப் போட்டு சுத்துது. நான் வரலை என் சம்சாரத்தைத்தான் அனுப்பறேன்.”
ராஜலக்ஷ்மிக்கு அவரின் குற்ற மனப்பான்மையின் பயத்தையும் பின் வாங்கலையும் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. இதற்குமுன் ஒருமுறை கூட ராஜலக்ஷ்மியை அவர் ஊர்கூட்டம் எதற்கும் போ என்று சொன்னதும் இல்லை. வா என்று கூட்டிக்கொண்டு போனதும் இல்லை. அவளாக சில கூட்டங்களுக்கு தன்னிச்சையான ஆர்வத்துடன் போய் வேடிக்கை பார்த்ததுண்டு. இன்று அவர் கிளம்பாமல் அவளை மட்டும் அனுப்புவது சில வினாடிகள் ராஜலக்ஷ்மிக்கு விகற்பமாகப் பட்டாலும், அவளுள் இருந்த பரவசப் பெருக்கில் எதையும் ஆழமாக நினைத்துப் பார்க்காமல் கூட்டத்திற்கு கிளம்ப அவசர அவசரமாக தயாராகிவிட்டாள்.
அவள் கிளம்பும்போது படுக்கையில் சுருண்டுகிடந்த சபரிநாதன், “கூட்டம் முடியும்வரை இருந்து என்ன பேசினாங்க, ஏது பேசினாங்கன்னு வந்து விவரமா சொல்லு தாயி… எனக்கு ஒடம்புக்கு ரொம்ப முடியலைன்னு தலைவர்கிட்ட சொல்லிடு…” என்றார்.
ராஜலக்ஷ்மி படிகளில் இறங்கியது தெரிந்ததும் விருட்டென்று எழுந்து உட்கார்ந்தார். யாருமற்ற தனிமை அவருக்குக் கிடைத்துவிட்டது. பயம் குழப்பம் எல்லாம் அவருள் இருந்து முற்றிலுமாகக் கலைந்து போயிருந்தது. யாருமே இல்லாத சூழ்நிலையில் இயங்கப்போகிற தீவிர நிலை மட்டும்தான் சபரிநாதனின் மனதில் நிமிர்கோடாய் நின்றது. கடிகாரத்தில் மணியைக் கவனித்துவிட்டு இன்னும் சிறிதுநேரம் ஆகட்டும் என்ற எண்ணத்தில் கைகளை பின்னால் கட்டியபடி முதல் மனைவி மரகதத்தின் பெரிய படத்தை நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்தபடி சில நிமிடங்கள் அமைதியாக நின்றார்….