காதோடுதான் நான் பாடுவேன்…!





மாலை நேரத்தில் பார்க்குக்கும் பீச்சுக்கும் அதிகம் யார் போவார்கள்?! இளவயசுக் காரங்கதானே?! தனியே வீட்டில் சுதந்திரமாய் பேச முடியாத ரகசியங்களைப் பேச…! ரகசியங்கள் என்ன? ரணங்களைப் பற்றியும் பேசப் போகலாம்தானே?! போனான் புருஷோத்தமன். ரணங்களைப் பேச !…அவனோடு கூட ஆளில்லாததால் ஒற்றையாளாய். பீச்சுக்கல்ல…! பார்க்குக்கு!

பார்க்கில் மரங்கள் தோப்புப்போல அல்லாமல் அவனைப் போலவே ஒற்றை ஒற்றையாய் ஒதுங்கி நின்றிருந்தன!. பார்க் எண்ட்டரன்சில் சிமிண்ட் சேரில் தனித்து அமர்ந்தான். வீதியில் உலாப் போகும் வாகனங்களையும், வருவோர் போவோரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி இருந்தான்.
இருட்டும் நேரம் தூக்க முடியாத பையைத் தூக்கியபடி வந்தாள் ஒரு நடுத்தர வயதுப் வியாபாரிப் பெண். அதற்கு முன்பாகவே, பொம்மை விற்பவன் கொழுக்கட்டை சுண்டல், பாப்கார்ன் வியாபாரிகள் என வீதியை வியாபித்திருந்தனர் சிலர். யாரும் இளைஞரில்லை. எல்லாரும் ஒரு ஐம்பது அறுபது தாண்டியவர்கள்.
இறக்கிவைத்த பெண் உரத்த குரலில்’ “ஹூம்!. இன்னைக்கு சனிப்பிரதோசம்னு கோயில் கோயிலா நின்னு அலுத்துட்ட்டேன். ஒருத்தி வாங்ககலை..! சரி…சரி! நம்பிக்கை இருப்பவனுக்குக் கோயில் நம்மள மாதிரி ஆளுக்கு பார்க்கு தானேன்னு இங்க கொண்டாந்துட்டேன்!”னு சொல்லிக் கொண்டே, தூக்கி வந்த பையிலிருந்து இறக்கினாள். கனகாம்பரம்… மல்லி.. முல்லை என சரம் கட்டின பூக்களை!
முப்பது வயதுக்குள்ளேயே கோயில் கோயிலாய்ப் போய் முட்டி மோதிப்பார்த்து வேலை கிடைக்கலையேன்னு அலுத்துக்கிட்ட புருஷோத்தமன் காதுகளில் கேட்டது உரக்கவே பூக்காரியின் உரத்த குரல் ஒப்பாரி பார்க் பாட்டு!
காதோடு கத்திப் பாடினாலும் மனதோடு மென்மையாகப் பேசியது…’ நம்பிக்கை இருப்பவனுக்குக் கோயில் ..! நம்மளமாதிரி ஆளுங்களுக்கு பார்க் தானே?! வரிகள் வசீகரித்தன. பூக்காரிக்கு கோயில்மீதில்லாத நம்பிக்கை, பார்க்கில் பாத்தியப்பட்டது… சாமிக்காக பூவாங்காதவனும் சம்சாரத்துக்காக வாங்கினான்.
முப்பது வயதில் வேலை இல்லையே என முடங்குவதா?! ஐம்பது அறுபது வயதுக்காரனெல்லாம்.. பூ விக்கறான்..! பொம்மை விக்கறான்! நான் மட்டும் விட்டேத்தியா வழிகாட்டாத கோயிலுக்கு தினம்தினம் படையெடுப்பதைவிட்டுட்டு, உழைக்க ஒரு வழிகாட்டிய பார்க்கை ஏன் பாடம் கற்றுக் கொடுத்த இடமாய் எண்ணக்கூடாது.?! மனதோடு மெல்லப் பேசியது பாட்டின் தொடர் குரல்! பார்க்கில் கூட எதாவது செய்து பிழைப்பது சும்மா இருப்பதைவிட சூப்பர்! தண்ணீர் பாட்டில் விற்கத் தன்னை தயார் செய்தான். டாஸ்மாக்கில் தண்ணி பாட்டில் விற்பதைவிட இங்கு விக்கலாம் தப்பில்லையே?! எனும் எண்ணம் உதித்தது!