காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 8, 2025
பார்வையிட்டோர்: 3,398 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஹே தேவி! 

கங்கா நதியை கங்காதேவி என்று தொழுகிறோம். யமுனையை யமுனாதேவி – 

கங்கா, யமுனா, சரஸ்வதி, நர்மதா, காவேரி – 

இவைபோலும் உன்னைச் சிந்தாதேவி என்றால் என்ன? 

இந்நதிகளைக் காட்டிலும் நீ எத்தனையோ முன்னவள். இவை மட்டுமா? அமேஜான், முஸ்ஸோரி,மிஸ்ஸஸிப்பி, நைல், ஜோர்டான், யாங்க்ட்ஸே, மஞ்சள் நதி – ஏன், சமுத்ரங்களே உனக்கு அப்புறம்தான். 

ஆனால், இத்துணை தழைந்த மூதும் உன்னைப் யாதிக்கவில்லை. நீ நித்ய யௌவ்வனி. அன்றன்று, அவ்வப் போது, புதுமையை வெளிப்படுத்திய வண்ணமாயிருக்கிறாய். எங்களுக்குப் புதிது. ஆனால் தன்னில் எத்தனை பழைமையோ? 

தேவி. சிருஷ்டிக்குப் பின் சிந்தனை உண்டாய்தா அல்லது சிந்தனைதான் சிருட்டித்ததா? “Lat there be light, and there was light.” அல்லது இரண்டும் எப்பவுமே ஏற் கெனவே ஒன்றுக்கொன்று ‘பேரலலா? அல்ல இணைந்தா? 

இந்தக் கேள்விக்கு மட்டும் நேர்ப்பதில் கிடைத்து விட்டால் – 

வேண்டாம், சிற்றலைகள் தவழும் உன் முறுவல் மயக்கும் மர்மமுமே எனக்குப் போதும். அறிந்துகொள்ள நான் ஆசைப்படவில்லை, ஆச்சர்யப்பட்டுக் கொண்டே உட் யிருக்கத்தான் விரும்புகிறேன்; உன் கரையோரம் கார்ந்து காயிதக் கப்பல்களை விட்டுக்கொண்டிருக்க, ஒரு நாள் உன் கரையோரம் செடியிலிருந்து கழன்ற பூவாய் உன்னில் விழுந்து, உன் அலைகள் மீது மிதந்து சென்று உன் சுழிப்பில் மூழ்கிவிட- 

தாயே! 
தாய் மட்டும்தானா நீ? 
தாயாய்ச் சுரக்கிறாய் 
பாசமாய்ப் பொங்குகிறாய் 
காதலாய்க் கசிகிறாய் 
காமமாய்ச் சுழிக்கிறாய் 

சிந்தாதேவி, காட்டாறின் வெறியில் உன்னை நினைக்கவே பயமாயிருக்கிறது. 

கோபாமுத்திரை. 

கண்ணீரின் ப்ரவாகமாக – வேண்டாம் வேண்டாம், மாட்டேன் எண்ணமே தாங்க முடியவில்லை. 

நீ நித்ய கல்யாணி. 

ஆனால் இவ்விரண்டு தன்மைகளின் – இல்லை, எத்த னையோ தன்மைகள், உன் தொப்புள் சுழிப்பில் சீறிக் கொப் புளித்து மேலே அமைதி பாயும் நதி நீ. சாந்தஸ்வரூபிணி. 

ஆனால் உன் சாந்தம் நம்புவதற்கில்லை. 

ஆனால் உன்னை நம்பாது எதை நம்புவேன்? 

நீயலால் கதி ஏது? 


ரிஷிகேஷில், ஒரு பாறை உச்சியிலிருந்து ஒரு அருவி யிறங்குவதைப் பார்த்தேன். பாறையையே நூல் கட்டி அளப்பதுபோல், அத்தனை சன்னம்; காற்றில் அலையும் ஜரிகைபோல், பாறைமேல் அதன் கதியில் நாணிக் கோணி நலுங்கி நெளிந்து… 

பாறைமேல் தாவரங்களின் அடர்த்தியிலிருந்து ஒரு மான் வெளிப்பட்டது. அருவி விளும்பில் நின்றது. குட்டி அல்ல, அந்த ஜாதியே அப்படித்தானோ? நவராத்ரி பொம்மை. சுருண்ட மாவிலை போன்ற காதுகள், கொம்புகள் இல்லை. அதன் உயரத்தில் என்னைச்சேற்று சிந்தித்து விட்டு, சாவகாசமாகத் திரும்பிப் பச்சையுள் மீண்டும் மறைந்தது. அப்படித் திரும்புகையில், அதன் பின்னழகில் மனம் பறிபோனேன். சொப்புகளைப் பதித்தாற்போல், இறுக்கமான, வழுவழுத்த சப்பைகளின் மேல் மொட்டை வால் ஆடி ஆடி அழைத்தது. எனக்கு! அங்கங்கள் முறுக்கேறின. 

ஓஹோ, மானோடு காதலா? 

ஏன், ஆகாதா? 

சீ, தூ! உன் வயதில் – வெட்கமாயில்லை? 

காதலுக்கு வெட்கமுண்டா என்ன? 

இல்லை, என் வயதில் காதல் எண்ணமே ஆகாதா?

சிந்தா நதிக் கரையோரம் உட்கார்ந்து, என் காயிதக் கப்பல்களை விட்டுக்கொண்டிருக்கிறேன். 


பெரிய கோவில் பிரம்மோற்சவம் போயிருந்தோம். காஞ்சிபுரம் அருகாமையில், கிராமத்தில் அப்பா ஹெட் மாஸ்டர். 

இரண்டு மூன்று நாட்கள் வேறிடத்தில் தங்கப்போற சந்தோஷம். அதற்கு ஏற்பாடு தடபுடல் என் அன்றைய (பன்னிரண்டு) வயதில் அந்த இருப்புக்கொள்ளாமைக்கு இணை கிடையாது. சமையல் சாமான், மூட்டை முடிச் சுடன், குடும்பமே ரெட்டை மாட்டு வண்டியில் ஜல்ஜல்ஜல் மாட்டுக் கழுத்துச் சலங்கை (கேட்கிறதா?) – அஞ்சு மைல் போக ரெண்டு மணி நேரமாவது ஆகும். கடகட கடகட கட- லொடக் கொடக் லொ – க் மேடு பள்ளமா ரோடு, ஜாலி ஜாலி. 

வழியில்- 

சந்தளியாத்தா சன்னதி, ஒரு கோரி, அரசமரத்துப் பிள்ளையார். கோவில் பிள்ளையார். நாகப்ரதிஷ்டை, அப்புறம் மாடன் சிலை, வண்டிச்சக்கரம் மாதிரி முழி, கையில் கத்தி, மைல் நீளம் மீசை, ஜாலி ஜாலி. 

வழிய வழிய பூசணிக்காய்களோடு ஒரு ரெட்டை மாட்டு வண்டியை நாங்கள் கடந்ததும், சொல்லி வெச்சாப் போல் ரெண்டு வண்டிக்கும் ரேஸ் வந்துடுத்து. அவ்வளவு தான்- 

ஜல்ஜல்ஜலஜலஜல – (சலங்கை சத்தம் கேக்கறதா? அங்கே இல்லியே! ஆனால் அதுகளுக்கும் கொம்புலே பூண்) கடகடாகடகடகடகடகடகடா- வண்டியுள் எழுந்து நிற்க முடியாமல், உக்கார்ந்த நிலையிலேயே நாங்கள் குதிக்கிறோம். மண்டையோடு மண்டை டணால் டணால் அம்மா சிரிக்கிறாள். மடியில் அங்கச்சிப் பாப்பா வீறிட்டு அழறது. அப்பா சிரிப்பை அடக்கிக்கிறார். அப்பா சிரிக்கக் கூடாது. அப்பா ஹெட்மாஸ்டர் “ஹைஹாய்! காத்தான் போடற சத்தத்துலே வாலை முறுக்கற முறுக்குலே அதுகள் மிரண்டு சாணியைப் போட்டுண்டு குதிரையாப் பறக் சுறதுகள். நாங்கள் தாண்டிட்டோம். குதூகலம் தாங்க முடியல்லே. அந்த வண்டி பின் தங்கினது தங்கினதுதான். நாலஞ்சு பூசணிக்கா சரிஞ்சு ரோடில் உருண்டோடிப் போச்சு. எங்களுக்கென்ன ஆச்சு? அதோ ஒரு வளைவிலே வண்டி மறைஞ்சும்போச்சு. 

மறுபடியும் பொடக் பொடக் தக்கடா புக்கடா’வில் விழுந்தாச்சு. 

ஒரு பாழ் மண்டபம் – டோல் கேட் உடனேயே சின்னக் காஞ்சிபுரம் பெருமாள் கோயில் மதில் – முடியவே முடியாதோ? ஒரு வழியா முடிஞ்சு, ஆடிசன் பேட்டை தேர் முட்டி இரட்டை மண்டபம், ராஜவீதி வந்தாச்சு. பெரிய காஞ்சிபுரம். எங்கள் இடம், சன்னதித் தெருவில் நாலுகால் மண்டபத்து எதிரிலேயே, தெருவெல்லாம் அந்தந்த வீட்டுக் கெதிரே செம் மண்ணிட்டு பிரம்மாண்டமான கோலம். 

வீடு வந்தாச்சு. வண்டியை விட்டு இறங்கறோம். கோவில் பட்டறை வெடி கேக்கறது. நெஞ்சு துள்ளறது. 

வாசலில் வீட்டுக்கார மாமாவும்,மாமியும் வரவேற்கக் காத்துண்டிருக்கா. 

“வரவேண்டும் வரவேண்டும்! எங்கள் குடிலை மிதித்து அனுக்ரஹிக்க வேண்டும் (ஐயோ இலக்கணமே, ஐயோ போலியே) இரண்டு கைகளையும் ஆராதனையில் காட்டிய படி மாமா வீட்டுக்குள்ள அழைச்சுண்டு போறார். 

“தாங்களுக்கு இந்த அறை ஏற்பாடு பண்ணப்பட்டிருக் கிறது. அசௌகர்யங்களுக்கு க்ஷமிக்கணும். உறவு மனுஷாள் வந்துட்டா. பிரம்மோத்ஸவமோன்னோ? அதுவும். நாளைக்கு அஞ்சாம் நாள் கைலாச வாஹனம் வெள்ளிக் கவசம் முதல் புறப்பாடு”. 

நாங்கள் வாசலுக்கு ஓடுகிறோம். ஜனம் நெரிசல் ஆரம் பிச்சாச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல வெறும் தலைகளும் இரைச்சலுமாக பன்மாதிரி ஒரு பெரிய மொத்தை ஆயிடும். வீட்டுக்கார மாமா ஏதோ ஸ்தோத்திரம் சொல்லியபடி, லாந்தர் சிமினிகளைத் துடைச்சுண்டிருக்கார். குறுக்கே குழந்தைகள் விழுந்தடிச்சுண்டு ஓடறப்போ, வாயில் வரத் தகாத வசவுகள் ஸ்தோத்தரத்தோடு கலக்கிறது. அதோஓஓ கொல்லையில் கிணறுமேல் தாம்பு தொங்கறது. 

அம்மாவின் வற்றல் குழம்பு வாசனை அறையிருட்டி லிருந்து கூடத்தைத் தூக்கறது. 

அறையிருட்டுத்தான். இடம் கீக்கடம்தான். படுக்கை யில், மார்மேல் இருட்டில் கரப்பான் பூச்சி பறக்கறது. கூரையில் பட்சிக் கூட்டில் குஞ்சுகள் அடிச்சுப் புடிச்சுண்டு குப்பையும் செத்தையும் உதிர்றது. முக்கல், முனகல் மொண மொணப்பு,புகார், இதெல்லாம் பெரியவாளுக்குத் தான். எங்களுக்குத் தெரியாது. சாப்பிட்டுப் படுத்தோமா, தூக்கம் வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. ஒவ் வொரு விழிப்பும் ஒரு புது உலகம், ஒரு புது கண்காக்ஷி. முதல் எண்ணமே – 

இன்னிக்கு அஞ்சாம் திருவிழா வெள்ளிக் கைலாச வாஹனம் புறப்பாடு. 

அமர்க்களமாயிருக்கும். எங்கள் பாடு ஜாலி ஜாலி. 

“ஆமா. தில் உங்கள் பாடு என்ன? கேக்கறேளா? கேக்காதீங்கோ எங்களுக்குத் தெரியாது. ஆனால் ஜாலி. 

பல் விளக்கப் புழக்கடைக்குப் போறேன். பின்கட்டுக் கூடத்தில் ஒரு காலை நீட்டி உக்காந்துண்டு படகாட்டம் பெரிசா ஒரு பாட்டி இரும்பு சொப்பு உரல்லே, இருப்பாணி யிலே வெற்றிலை இடிச்சுண்டிருக்கா. 

“என்னடா குழந்தை, நின்னு பாக்கறியா? பழக்கமாப் போச்சுடாக் கண்ணே, பல்லு போயும் பழக்கம் விடல்லே. ஒருநாளைக்கு நாலுவேளை,’ சிரிக்கிறா. பொக்கை வாயோரம் எச்சில் வழியறது. தலைநரை – அலைநுரை பொங்கறது. 

ஒரு மாமி, ஏணையில் குழந்தையைப் போட்டு ஆட்டிண்டிருக்கா. அது தூளியிலிருந்து தலையை வெளியே விட்டுண்டு என்னைப் பாக்கறது. 

“சனியனே தூங்கித் தொலையேன். தலைக்கு மேலே வேலை கிடக்கு”. 

கூடத்து அறையிலிருந்து பூஜை மணி. சாம்பிராணி வாசனை மூக்கைத் துளைக்கிறது. 

“ஏ பையா, எட்டிப் பார்க்காதே-” 

ஆனால், எட்டிப் பார்க்கிறேன். தண்ணி இருக்கிற டம் சட்டுனு தெரியல்லே. இருட்டு; ஆழம். 

ஒருவேளை வெய்யில் இன்னும் உசந்தால், உள்ளே பட்டால், மேனோக்கறேன். மாமரத்தில் இலைகள் சூரியனில் தங்க இலைகளாய்த் தகதகக்கறது. கொல்லை, தன் எல்லை யைத் தேடிண்டு, போயிண்டே இருக்கு. அத்தனை நீளம். 

கிணற்றடி ஒரே ‘கலீஜ்’ ஒருவர், தாம்புக் கயிறையும். பக்கெட்டையும் ஆக்ரமித்துக்கொண்டு குளிக்கிறார். ஒருவர் வேட்டி துவைக்கிறார். அவர் உடல் அசைவில் தொந்தி தனியாய் தொளக், தொளக். இரண்டு மாமிகள் பற்றுத் தேய்க்கிறார்கள். 

“அம்பி, எட்டிக்கறியா?” 

திரும்பிப் பார்க்கிறேன். இப்பத்தான் அவளைச் சற்று விவரமாகப் பார்க்க முடிகிறது. பின்கட்டில் தூளியில் குழந்தையை ஆட்டிக்கொண்டிருந்த மாமி; இடுப்பில் குடத்துடன், கொசுவக்கட்டில் நிற்கிறாள். அவளுடைய கோண வகிடுக்கும், புதுமையின் கலவை – என் கண்ணுக்குப் பழக்கமில்லையாகையால் வேடிக்கையாக இருந்தது. சிரிப்புக் கூட வந்துவிட்டது. 

நான் சிரிக்க, அவளும் சிரித்தாள். ஏனென்று சரியாக இருவருக்குமே தெரியாது. அது இன்னும் சிரிப்பு மூட்டிற்று. கிணற்றடியின் இத்தனை ரகளையில் எங்கள் சிரிப்பு, வாய் விட்டுச் சிரிக்காத சிரிப்பு, தனித்தனிச் சிரிப்புகள் அஸ்திர சந்திப்பில் நடுகதியில் ஒருமித்து ஒரு சிரிப்பாகி, எங்களது சிரிப்பு, எங்களுக்கு மட்டுமே தனித்துப் போனது. அவளுடைய கீழ் உதடு, அதனுடைய ஒரு மாதிரியான சிவப்பு ரஸ ஓட்டத்துடன் பளபளத்தது. சற்றுத் தடித்த உதடு. பற்கள் சற்றே பெரிசு; ஆனால் வரிசை. 

“மாமா தாம்புக் கயிறை விடுங்கோ” குரல் தாழ்ந் திருந்தாலும், அதில் அழுத்தம் தடித்தது. மாமா தோற்றுப் போனார். குடத்தைக் கிணற்றின் சுவற்றுக் கட்டைமீது நிறுத்தி, அதன் கழுத்தில் தாம்பைச் சுருக்கிட்டு, கிணற்றுள் விட்டு மொள்ளக் குனிந்தாள். பின்னல் பாம்புபோல் தடித்துக் கழுத்தில் சரிந்து நழுவிக் கிணற்றை நோக்கித் தொங்கிற்று. 

”ஏ குந்தளே, என்ன பண்ணறே, போனால் போன இடம்தானா?” உள்ளிருந்து குரல், புகாரில் உரத்த மொண மொணப்பில். 

“தோ வந்துட்டேன் அத்தே!” இடுப்பில் குடத்தை ஏற்றிக்கொண்டு, உள்ளே விரைந்தாள், அவள் கண்ட சதை யின் வெண்மை, மஞ்சள் வெய்யிலில் கண்ணைப் பறித்தது. அதைக் கொசுவம், மறைத்து மறைத்து விளையாடிற்று. 

என்னுள் ஏதோ நேர்ந்துபோச்சு. என்னென் புரியல்லே. ஒரே சமயத்தில் பயம், சந்தோஷம், துக்கம், பரபரப்பு எல்லாம் சேர்த்து அழுத்திற்று. ஒரே சமயத்தில் இத்தனையுமா? பல் தேய்த்தேன். காப்பி குடிக்க மறந்தேன். எதுக்கோ எரிச்சலோடு அம்மா முதுகில் ஒண்ணு வெச்சாள். அதுவும் வலி தெரியல்லே. திண்ணைக்குப் போய் உக்காந் துட்டேன். இந்த ஜன நடமாட்டம்,கோபுரம், பஜனை கோஷ்டிகள், கடைகண்ணி எல்லாமே தூர நிழல்கள். சுவத்துக்கு வெளியே சத்தங்கள். அப்படியும் மனசில் உரைக்கல்லே. ஒரு இடத்தில் இருப்புக் கொள்ளல்லே. மிதந் துண்டே நடக்கறேன். சாதம் வேண்டியில்லே. (‘என்ன உனக்குக் கேடு வந்துடுத்து?’) மிதந்துண்டு புழைக்கடைக்குப் போறேன். பின்கட்டு வழிப்போக சாக்கு. அவள் கண்ணில் படல்லே. ராக்ஷஸ உடம்பில் பாட்டி குறட்டை விட்டுண்டு தூங்கறா. 

அவள் படுவாளா? இல்லை, படமாட்டாளா? இல்லை. என்ன இல்லை இல்லை? தெரியல்லே. கிணறு தனி ஆயிடுத்து. எட்டிப் பாக்கறேன். உள்ளே வெய்யில் வந்திருக்கு. அதல பாதாளத்தில் தண்ணி தெரியுது. நிழலில் என் மூஞ்சிக்குப் பதில் அவள் முகம்– ‘வந்துட்டியா? திரும்பிப் பாக்கறேன். ஒருத்தருமில்லே. ‘கீச் கீச்’ பச்சைக் கிளி கேலியில் மரத்தில் ஒரு கொத்து மாவிலை மறைச்சு மூடி ஒரு மாங்காய். 

எவ்வளவு சுலபமாயிருந்தேன். திடீர்னு எப்படி இத்தனை சிக்கலானேன்? பயமாயிருக்கு. அழுகையை அடக்கிக்கிறேன். 


சாயங்காலம் மஞ்சள் வெய்யில் வேளைக்குக் கோயி லுக்குப் போகிறோம். இன்று சோமவாரம். சுவாமிக்கு மாவடி சேர்வைக் கவசம் பொருத்தியிருக்கு. தங்கக்கவசம். அந்த அலங்காரத்தில் அம்பாள் லிங்கத்தைத் தழுவிக் கொண்டிருக்கிறாள். காஞ்சி புராண ஐதீகம், தத்வம், தாத்பர்யம், தேவரஹஸ்யம் எல்லாமே இந்த நிலைதான் (இந்த பாஷை இப்போதையது. ஆனால் ப்ரவசனம் அப்பவே கேட்டது). 

“தானே தன் கைகளால் பிடித்து வைத்த மணல் லிங்கத்தைப் பேணி, தேவி செய்யும் தவத்தைச் சோதிக்க திருவுளம் பற்றி ஆண்டவன் ப்ரவாஹித்த கங்கா நதியாகப் பட்டது, லிங்கத்தை அழித்துவிடுமோ என்கிற பயத்தில் அம்பாள் லிங்கத்தைத் தழுவிக்கொண்டதும், தன்மேல் அவளுடைய மு…களின் குழைவில், பகவான் உடலும், மனமும் அப்படியே நெகிழ்ந்து போனார்.” 

புராணிகர் சொல்கையில் எனக்குக் கேலியாகவும் அசிங்கமாகவும் இருக்கும், சாமி கூடவா-? 

ஆனால், இப்போது கர்ப்பக்ருஹ இருட்டில், இருளை மங்கலாகக் கலைத்துக் கொண்டிருக்கும் பெரிய குத்து விளக்குச் சுடரில் அந்த அலங்காரம் உயிர்பெற்றுப் பிதுங்கியதும்…அப்பப்பா உடல் சிலிர்த்துப்போச்சு ஆனால் திடீரென்று அம்பாளிடத்தில் வேறு முகம் தோன்றிற்று. கோண வகிடு. பளபளக்கும் உதடுகள். மோவாய்க் குழியில் ஒரு மரு.எழுதினாற் போன்ற புருவங்கள். யாரை அப்படித் தழுவிக் கொண்டிருக்கிறாள்? நெஞ்சு தடுமாறிற்று. அங்கு என்னால் இருக்க முடியவில்லை. அகன்றேன். 


வாசற்கதவு திறந்திருந்தது. யாருமில்லை. ஆனால், இந்தப் பக்கம் இது ஒன்றும் புதிசு இல்லை. பின்கட்டுக்குச் சென்றேன். 

இருந்தாள். தூணை முட்டினாற்போல் உட்கார்ந்து கொண்டு, மடியில் குழந்தையைப் போட்டுக்கொண்டு, என்னைப் பார்த்ததும் முறுவலித்தாள். 

“ஏண்டா பையா, கோவிலுக்குப் போகல்லே? எல்லாரும் போயிருக்காளே!” 

எனக்கு நா எழவில்லை. வெற்றாக நின்றேன். 

“சரி வா, இப்படி உக்காரு கொஞ்சநாழி பேசலாம்”.

உட்கார்ந்தேன். 

“என்ன அப்படிப் பார்க்கறே?” சிரித்தாள். “எனக் கென்ன கொம்பா முளைச்சிருக்கு?” 

மேலுதட்டில் கறுகறுன்னு அரும்பு கட்டியிருக்கு. ஆனால் இவளுக்கு நன்னாயிருக்கு. 

“உற்சவம் பார்க்க வந்திருக்கேளா? வீட்டுக்காராளுக்கு சொந்தமா? எங்கேருந்து வரேள்? எல்லாருமே வந்திருக்கேளா? அம்மா, அப்பா, அண்ணன், தம்பி எத்தனை பேர்? உனக்கு அக்கா தங்கச்சி இருக்காளா? நான்தான் பேசிண்டிருக்கேன். ஏன் வாயே திறக்கமாட்டேன்கறே! ஊமையா?” 

எனக்குப் பேச வேண்டாம். எனக்கு ஒண்ணுமே வேண்டாம். உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும். ஆனால், இதை எப்படி உன்னிடம் சொல்வேன்? சொன்னால் என்ன புரியப்போறது? எனக்கே என் நிலை புரியல்லியே! இருட்டிலே தங்கச் சங்கிலியிலே குத்து விளக்கு தனியா ஆறது. அதில் சுடர் டான்ஸ் ஆடறது சந்தோஷமாயிருக்கு பயமாயிருக்கு… என்னவோ தூக்கமும், துக்கமுமா வரது. 

ஆமா என்னை ஏன் பையா என்கறே? கோவமா வரது. உன்னைவிட ஒரு பத்துப் பன்னிரெண்டு வயசுதானே சின்னவனாயிருப்பேன். 

உன் கண் முழுக் கறுப்பு இல்லை. வெளிர் மஞ்சளும், நீலமும் கலந்து பளப்பள இவ்வளவு கிட்ட, கொஞ்ச க்ராஸ் கூட. அதனால் என்ன? எதனால்தான் என்ன. என்ன உளர்றேன். இல்லை, இது உளர்றல் இல்லை. இது ஏதோ பாஷை புரியல்லை, பயமாயிருக்கு! 

குழந்தை அழுதது. அதை சௌகரியமா மடியில் கிடத்திக் கொண்டு ரவிக்கையை நெகிழ்த்திவிட்டுக் கொண்டாள். காம்பில் பால் துளித்தது. அவள் என்னைச் சட்டை செய்யவே இல்லை. மேலாக்கைக் குழந்தை தலைமேல் போட்டு மூடிக்கொண்டாள். 

“என்னடா வெறிச்சு இதையே பார்வை” திடீரெனச் சீறினாள். “என்ன அக்ரமம்டியம்மா. தீசத்தனத்தைப் பார்த்தியா? இந்த பிஞ்சிலேயே இப்படி முத்திப் போய் – “

அவளுடைய கோபம்கூட எனக்குப் பெரிதாயில்லை; ஆனால், அவள் கோபத்தில் கையை வீசி ஆட்டுகையில் அதில் ஆறாம் விரல்கட்டை விரலிலிருந்து அசிங்கமாத் தொங்கிற்று. என்னுள் என்னவோ இடிஞ்சு சரிஞ்சுது. அங்கு விட்டு ஓடினேன். அவள் வசவு துரத்திற்று. ஓடிப் போய் எங்கள் அறையிருட்டில் மூலையில் அடுக்கியிருந்த படுக்கை, பாய், தலையணையுள் முகத்தைப் புதைத்துக் கொண்டேன். மாரே உடைஞ்சிடும்போல் விக்கி விக்கித் தேம்பித் தேம்பி அழுதேன். ஏன்னு புரியல்லே, 

அன்றிரவு, வெள்ளிக் கைலாச வாஹனத்தில் சுவாமி எங்கள் வீட்டுக்கெதிரிலேயே இசைகேடாகச் சரிந்து – நல்ல வேளை கட்டு கெட்டியா இருந்ததோ விழவில்லை. ஏக ரகளை, கலாட்டா. பூசணிக்காய் உடைந்து, திருஷ்டி கழித்து, இடையில் போலிஸ் வந்து, விசேஷ தீபாராதனை கள் காட்டி, சுவாமி கிளம்ப மூணு மணி நேரம் ஆகிவிட்டது. ஒரு ஆள் காலின்னு கேள்வி. 

பின்கட்டுப் பாட்டி, திண்ணையில் ஒரு காலை நீட்டிய படி, அதை உருவி விட்டுக்கொண்டே, “கலி முத்திப்போச்சு. எல்லாம் தலையில்லாமல் வாலாடறதுகள். இல்லாட்டா இப்படி நடக்குமா என்ன?” 

அவளும் திண்ணைத் தூணை கட்டியபடி நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்துச் சிரித்தாள். ஆனால் எனக்குச் சிரிப்பு வரவில்லை. என்னுள் ஏதோ உடைஞ்சுபோச்சு. 

நாளைக்கு வீடு திரும்ப காத்தான் எப்போ வண்டி கட்டுவான்? 

– வளை ஓசை

– என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு… (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1992, வானதி பதிப்பகம், சென்னை.

லா.ச.ரா லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *