காதல் சிறகை காற்றினில் விரித்து…
தன் மடியில் பொத்தென்று லட்டு மாதிரி வந்து விழுந்த கிரிக்கெட் பந்தை அப்படியே இரண்டு கைகளாலும் ஏந்தி அணைத்த அமலா,
‘சிக்சர்’! ‘வெல் டன் ஆனந்த்!’
என்று பெரிதாக கத்தினாள்…
‘தாங்யூ ஆன்ட்டி ‘
பதிலுக்கு ஆனந்தும் கத்தினான்.
லண்டன் லார்ட்ஸ் மைதானம் என்று நினைப்பு…
“கமான்… விடாத…சென்சுரி அடிக்கணும்..”
ஆட்டம் தொடர்ந்தது..
ஒவ்வொரு சனி , ஞாயிற்றுக் கிழமைகளில் அமலாவுக்கு கிடைக்கும் அற்புத அனுபவம் இது…
பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் அருகே ஒரு சின்ன திடல்…பூங்கா என்றும் சொல்லலாம்..
நாலைந்து இருக்கைகள்.. கொஞ்சம் செடி கொடிகள்.. பூக்கள்…விளையாட சிறு மைதானம்..
கிரிக்கெட் சீசன் தொடங்கி விட்டாலே ஒரே அமளி தான்..
ஐ.பி.எல்..ரேஞ்சுக்கு காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு மட்டையும் பந்துமாய் கிளம்பி விடுவார்கள்…
குறைந்தது மூன்று நாலு குழுக்கள்.
மாலையில் டெண்டுல்கர், தோனிகள் மட்டுமே… மற்றவர்களை கிட்ட அண்ட விடமாட்டார்கள்..
காலை பத்து மணிக்கு மேல் குட்டீஸ்..
பத்து வயது பாலகர்கள்..
இரண்டு டீமுக்கு ஐந்து பேர்களுக்கு மேல் தேறமாட்டார்கள்.
ஆனாலும் படு சீரியசாய் ரோகித் சர்மா , விராட் கோலியாகவே மாறிவிடுவார்கள்..
முக்கியமான பார்வையாளர்களில் ஒருத்தி அமலா..
சியர் லீடர்..
அவள் வந்தப்புறம்தான் ஆடவே தொடங்குவார்கள்..
அவள்தான் டாஸ் போடவேண்டும்.அம்பயரும் அவள்தான்..
“டேய்..அமலா அக்காவே கையத்தூக்கிட்டாங்க.. நரேன் உன் போங்காட்டமெல்லாம் செல்லாது..அவுட்டுன்னா அவுட்டு தான்..க்ளீன் பௌல்ட்…!”
நரேன் அழ ஆரம்பித்து விடுவான்..
“அக்கா..! நான் அவுட்டு இல்ல.பாருங்க..ஸ்டம்ப் அப்பிடியே இருக்கு..
நரேனுக்கு ஏழு வயது கூட நிரம்பவில்லை..அவுட்டானால் அழுது விடுவான்..
“இங்க வா செல்லம்..அக்கா மடில உக்காருவியாம்..அவுட்டானவங்களுக்கு மட்டும்தான் சாக்லேட்..”
அமலா தனது கைப்பையிலிருந்து ஒரு கேட்பரீஸ் சாக்லேட்டை எடுத்துக் கொடுத்தாள்..
எல்லா குழந்தைகளும் அமலா விடம் ஓடி வந்தன.
“டூ பேட் அக்கா..! அவுட்டானவுங்களுக்கு யாராவது சாக்லேட் தருவார்களா ? நான்தான் டாப் ஸ்கோரர்.எனக்குத்தான் தரணும்…
“சரி..போனாப்போவுது.. நீயும், ஹமீதும் பாதிப் பாதி எடுத்துக்கோங்க…!“
“சரி அக்கா… பட் நீங்க டூ மச்…!”.
சரி..மணி பன்னிரண்டாச்சு..ஒரே வெயில்..பசிக்குமே..எல்லோரும் வீட்டுக்கு போங்க..!
மதன்..! நரேனையும் , கபிலையும் பாத்து ஜாக்கிரதையா வீட்ல எறக்கி விட்டுட்டு போங்க..”
“பை அக்கா..”
“பை குட்டீஸ்….”
***
வாசலில் ஆட்டோ சத்தம்.மனோஜ் வந்துவிட்டான்.
இன்றைக்கு நேரமாகிவிட்டது..
மனோஜ் பொறுமையில்லாமல் இரண்டு தடவை ஹார்ன் அடித்தான்..
“மனோஜ்.. வெயிட்..ஒரே நிமிஷம்…”
ஒருவழியாக ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தாள்..
“இந்நேரம் பசங்க துடிச்சு போயிருப்பாங்க..நீங்க வராம ஆட்டத்த ஆரம்பிக்க மாட்டாங்களே…!”
“என்ன மனோஜ்.? நீயும் பசங்களுக்கு மேல அலட்ற…? இது என்ன 20 / 20 யா..?? பத்து பேர் கூட தேறமாட்டாங்க..ஆனா பாவம்..சமத்து குட்டிங்க…! பாரு இதுல நிச்சயம் ஒரு கபில்தேவோ , தோனியோ இருப்பாங்க…!”
இருபது நிமிடத்தில் மைதானத்தில் இருந்தான்..
“அம்பயர் வந்தாச்சு! காச எடுங்க..!”
பெஞ்சில் போய் உட்கார்ந்தாள் அமலா..!
பத்து நிமிடத்தில் ஆட்டம் ஆரம்பித்து விட்டது..
முதல் பேட்ஸ்மேனாய் களத்தில் இறங்கினான் விஜய்…
முதல் ஷாட்டே பவுண்டரி..
உம்..உய் என்ற விசில் சத்தம்…
“ஹலோ…! உங்களுக்கு ஆட்சேபம் இல்லைனா , நான் இங்க உட்காரலாமா..??”
குரல் கேட்டு நிமிர்ந்தாள் அமலா…
ஒரு இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன்.. நல்ல உயரம்… கறுப்பு நிற டீஷர்ட்டில் ஒரு மரத்தின் படம்…பாதி வெட்டுப்பட்டு நிற்கிறது.
“My life matters “என்ற வாசகம்..!
“இது பொதுவுடமை… என்னோட பெர்மிஷன் அவசியமேயில்லை…”
“பெஞ்சு எல்லோருக்கும் பொதுவாயிருக்கலாம்…ஆனா ஒரு அழகான பொண்ணு பக்கத்தில் உட்கார அனுமதி வேணுமே…!”
“எதுக்கு இந்த ஐஸ் எல்லாம்.. வெறும் பொண்ணுன்னு சொன்னாக்கூட ‘பர்மிஷன் கிராண்டட்….”
“தன்யனானேன்.!”
“வாட்..? வாட். ?”
“பரவாயில்ல..ஐயம் ஹாப்பி…’
“எனக்கு தமிழ் நல்லா தெரியாதுன்னு முடிவே பண்ணிட்டீங்க போல…”
அதற்குள் பசங்களின் ஆரவாரம்…
“சிக்சர்…”
“ஹாய்… பரத் சிக்சர் அடிச்சுட்டான்…””
“உம்..உய்..”என்று விசிலடித்தாள் அமலா..!
“நாட் பேட்… இதெல்லாம் கூட தெரியுமா..??”
“ஏன்..விசிலடிப்பது ஆண்களின் பிறப்புரிமையா..?”
“சாரி..சாரி… நான் அப்படி நெனைக்கவேயில்ல..! உங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே பேசணும் போலியே…! பெ.மு.க. வா?”
“அப்படின்னா. ??”
“பெண்கள் முன்னேற்றக் கழகம் “
அவனை ஒரு முறை முறைத்தாள் அமலா…
“பெண்கள் இப்போ ஆண்கள விட ரொம்ப தூரம் முன்னேறி போயாச்சு…!
திஸ் இஸ் வெரி ஓல்ட் ஜோக்…”
“ஓக்கே…ஓக்கே..! லெட்ஸ் பீ சீரியஸ்…என் பேரு முகிலன்… பயோடெக்னாலஜி… ஒரு ஃபார்மா கம்பெனி ஆரம்பிச்சிருக்கேன்…யுவர் குட் நேம் ப்ளீஸ்….சொல்ல விருப்பம் இருந்தால்..!”
“பக்கா ஜென்டில்மேனா இருப்பீங்க போலயே..இல்ல. ..என்ன இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்றீங்களா..?”
“ஒரு பேரு கேட்டதுக்கு பின்னால இவ்வளவு இருக்கும்னு தெரியாம போச்சே….!”
“கூல்.. கூல் டவுன்… ஐயம் அமலா….”
கையை நீட்டினாள்…
அதற்குள் கிரவுண்டிலிருந்து பலத்த கை தட்டல்…
“ஹாய்.. ஆனந்த்..இந்த தடவையும் நாமதான் வின்னர்…”
ஆட்டம் முடிந்து எல்லோரும் அமலாவை ஓடிவந்து கட்டிக் கொண்டார்கள்..
“என்னாச்சு அக்கா ?? புது ஃப்ரெண்ட் கெடச்சுட்டாங்களா… ???இன்னைக்கு நீங்க சியர் பண்ணாம …நல்லாவேயில்ல…!”
“சாரி பரத்..இது மிஸ்டர் முகிலன்..இனிமே இவரும் மாட்ச் பாக்க வருவாரு…
என்ன முகிலன்..?? டிக்கெட் வாங்குவீங்க இல்ல?
சீசன் டிக்கெட் ஆயிரம் ரூபாய்..
டெய்லி டிக்கெட். நூறு..?
எப்படி சவுரியம்…?”
“ஹல்லோ அங்கிள்….”
“அவுங்க அக்கா…! நான் மட்டும் அங்கிளா…. ??”
“எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு…”
நரேன் முகிலனை அப்படியே கட்டிக் கொண்டான்..
“எனக்கும் உங்களையெல்லாம் ரொம்பவே பிடிச்சிருக்கு…
அதுவும் அமலா அக்காவ நிறையவே பிடிச்சிருக்கு….!”
“உங்கள பக்கத்தில உக்கார விட்டது பெரிய தப்பா போச்சு….”
“இப்ப புரியுதா..? நான் ஏன் பெர்மிஷன் கேட்டேன்னு..??”
“அக்கா… உங்களுக்கு சரியான ஜோடி தான்..”
அமலா விஜய் காதை பிடித்து திருகினாள்..
“சாரி..எனக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட் இருக்கு! மறந்தே போயிட்டேன்.. நான் வரேன்….சீ யூ ஆல் நெக்ஸ்ட் வீக் எண்ட்….”
அவன் முதுகில்..
‘Like your life “என்று எழுதி இருந்தது..
அமலாவுக்கு முகிலனை ரொம்பவே பிடித்து விட்டது…
***
அமலா அன்று புதிதாய் பிறந்தாள்… மனம் விசிலடித்துக்கொண்டே இருந்தது..
தனிமை அவளை பயமுறுத்தியதே இல்லை.
பிறந்ததிலிருந்து தனிமைப்பட்டு போனவளுக்கு தனிமை ஒரு தோழி…
ஆனாலும் சில நாட்கள் அவளுக்குள் ஒரு வெறுமை.சலிப்பு.துக்கம்.ஆதங்கம்..!
ஆனால் விரக்தியோ பயமோ என்றும் இருந்ததில்லை..
இன்றைக்கு இதுவரை அனுபவிக்காத புளங்காகிதம்.. ஒரு இனிமை… இனம்புரியாத மகிழ்ச்சி…
‘அமலா…உனக்கென்னாச்சு ? எனக்கு தெரியும்….சொல்லவா…?’
தனக்குத் தானே பேசி சிரித்துக் கொண்டாள்..
இன்னைக்கு உனக்குப் பிடிச்ச கார்லிக் பிரட்டும் லசானியாவும் பண்ணலாமா? ‘
தக்காளி , வெங்காயம் , சீஸ் , எல்லாவற்றையும் கிச்சன் மேடையில் எடுத்து வைத்துக்கொண்டு வேலையைத் துவங்கினாள்..
‘அவன் பெயரென்ன ? ‘
‘ஏய் நடிக்காத..! இதோட ஆயிரம் தடவை அவன் பேர சொல்லி சொல்லி உன் வாயே வலிச்சிருக்குமே….!ஒண்ணுமே தெரியாத மாதிரி..! ‘
ம்ம்.. முகிலன்…அவனுக்கு மறக்காம கொண்டு போகணும்…!”
இன்றைக்கு வழக்கத்துக்கு முன்னதாகவே மனோஜை வரச்சொல்லி விட்டாள்..மைதானத்தில் யாருமே இல்லை…
“தாங்யூ மனோஜ்..சீ யூ லேட்டர்…”
“ஹவ் எ குட் டே மாடம்…””
ஐந்து நிமிடத்தில் மழலைப் பட்டாளம் வந்துவிட்டது..
“என்ன அக்கா. ?? இவ்வளவு சீக்கிரம் ஆஜராயிட்டீங்க..?“
“டேய் லுசு விஜய்…உனக்காக இல்ல….”
பரத் அவனை கேலி செய்தான்..
“ஐ நோ..ஐ நோ….”
“நரேன் கண் சிமிட்டி சிரித்தான்..
“ஏண்டா இப்படி? குழந்தையக் கூட கெடுத்து வச்சிட்டீங்க ?”
“ஐய்யய்யோ…இவனா குழந்த ? இவன்தான் எங்க குரு…!”
“அங்க பாருங்க….”
முகிலன் அமலாவின் வயிற்றில் பட்டாம்பூச்சிகளைப் பறக்க விட்டான்!.
“கமான் பாய்ஸ்..லெட்ஸ் ஸ்ட்டார்ட் தி கேம்….தி சீஃப் கெஸ்ட் ஹஸ் அரைவ்ட்….!
***
அன்றைக்கு அந்த மைதானமே அமைதிப் பூங்காவாக இருந்தது.அமலா ஒரு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாள்.ஒரு வரிகூட மனதில் பதியவில்லை..
“ஹலோ.. என்ன வொர்ல்ட் கப் மேட்ச் ஆரம்பிக்கலயா….? “
“ஓ …சுத்தமா மறந்தே போனேன்…இந்த வாரம் மேட்ச் கேன்ஸல்ட்…பள்ளிக்கூடத்தில பரீட்சையாம்..”
“போனவாரம் சொல்லவேயில்லையே…”
“எதுக்கு சொல்லணும்…?”
மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்..
“அமலா…. கொஞ்ச நேரம் நாம பேசிட்டு போவோமே…! பரவாயில்லையா…??”
அமலா அவன் கண்களையே உற்று நோக்கினாள்….
“அமலா…உங்களைப் பத்தி நீங்க ஒண்ணுமே சொன்னதில்லையே….!”
“சொல்லும்படி ஒண்ணும் இல்லைன்னு தானே அர்த்தம்….”
“கமான்… யூ ஆர் டூ ஹம்பிள்….”
“முகிலன் … நான் இந்த ஊர்ல இருக்கிற ஒரு கான்வென்ட்ல வளர்ந்தேன்..
எனக்கு நாலு வயசு இருக்கும்போதுதான் எனக்கு கொஞ்சம் கொஞ்சம் புரிய ஆரம்பிச்சது..
என்ன மாதிரி நிறைய குழந்தைகள்..நாங்க’ மதர்.. மதர்..’னு கூப்பிடற மதர் ரோஸ் உண்மையிலேயே எங்க அம்மான்னு நினைச்சுக்கிட்டு வளர்ந்த எங்களுக்கு, நாங்கெல்லாம் அனாதை குழந்தைகள்னு புரியும் போது வயசு பத்து…
ஆனா ஒருத்தருக்கு கூட வருத்தமோ , துக்கமோ இல்லைனா நம்புவியா முகிலன்….?
ஏன்னா எது கிடைக்கணுமோ அது கொட்டிக் கிடந்தது…!
சின்ன வயசிலேயே எனக்கு மத்தவங்களுக்கு உதவி செய்யணும்னா ரொம்ப பிடிக்கும்..
எங்க மதர் என்ன நர்சிங் படிக்க வச்சாங்க..”
“வெரி இம்ப்ரெஸிவ் …இப்போ சொந்தக்காலிலேயே நிக்கறீங்கன்னு சொல்லுங்க….”
“ம்ம்ம்…அப்படி சொல்லிக்கணும்னுதான் ஆசை!”
“ஒய் நாட்…?”
அமலா முகிலின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டாள்.
தொப்பென்று அமலா மடியில் ஏதோ விழுந்தது..
நிச்சயமாக கிரிக்கெட் பந்தாக இருக்க வாய்ப்பில்லை..
“முகிலன்.. முகிலன்…இங்க பாரு…குஞ்சு..!ஐய்யோ… பாவம்… என்னாச்சு..??”
அமலாவுக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது..
“பாவம்..அடிபட்டிருக்கு..இறக்க பிஞ்சிருக்குமா..? பறக்க முடியாதா…? “
மளமளவென்று கண்ணில் நீர் வழிய என்ன செய்வதென்று அறியாமல் தவித்தாள்..
“டோன்ட் பானிக்..ஒரே நிமிஷம்..இப்ப வரேன்…”
சொன்னபடி உடனே வந்தான்… கையில் சிறிய அட்டைப் பெட்டி.. அதற்குள் கொஞ்சம் புல்.. வைக்கோல்…
கையிலிருந்த கைக்குட்டையால் பிறந்த குழந்தையைத் தூக்குவதுபோல் கழுத்தில் கைகளை அண்டக்கொடுத்து சிறகுகளை அணைத்தபடி பெட்டிக்குள் வைத்து மூடினான்..
“முகிலன்..! முகிலன்..! நானே ஒரு நர்ஸ்… ஆனாலும் ஒரு குஞ்சுக்கு இப்படி முதலுதவி செய்ய எனக்கே தெரியாது…! உனக்கு எப்படி…?”
“சார்.. பெங்களூரு பர்ட் வாச்சிங் க்ளப் உறுப்பினராக்கும்…இது பேரு ‘பேல் விங்ட் ஃப்ளவர் பெக்கர்’ ரொம்ப சின்ன பறவை… பாவம்..ஏதோ கொத்திப் போட்டிருக்கு…!”
“முகிலன்…இது பறக்குமா…?”
“ஒரு வாரத்தில பாரு….!”
முதல் வேலையா இத வீட்டுக்கு எடுத்துட்டு போயி வைத்தியம் பண்ணனும்..வரட்டுமா…? அடுத்த வாரம் பார்க்கலாம்..”
அமலா அவன் போன திக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள்….
இவன் ஒரு அதிசயப் பிறவி
***
தேர்வுகள் முடிந்த உற்சாகத்தில் கிரவுண்டில் ஒரே ஆரவாரம்..
“அக்கா… ஒரு வாரம் லீவு.. தினமும் வருவோம்….
அக்கா. …என்ன யோசனல இருக்கீங்க..? எங்க உங்க நண்பர் முகிலன்…?”
அமலாவுக்கு காதில் எதாவது விழுந்தால்தானே…!
வெறித்து நோக்கியபடி உட்கார்ந்திருந்தாள்.. வாடி வதங்கிய பூப்போல….
தீடீரென பூ மலர்ந்தது…. மணம் வீசத் தொடங்கியது…
அதோ முகிலன்.. கையில் அதே அட்டைப் பெட்டி..
“ஹையா….முகில் அண்ணா….!”
“ஹலோ அமலா..! ஹாய் பாய்ஸ்….!”
“அண்ணா..கையில் என்ன பெட்டி…!?”
“உங்க அக்காவுக்கு ஒரு பரிசு….! அமலா..இந்தா நீயே பிரி…”
பெட்டிக்குள் என்ன இருக்குமென்று அவளுக்குத் தெரியாதா..?
மெள்ள திறந்தாள்…பயந்து நடுங்கியபடி உட்கார்ந்திருந்தது அந்த குஞ்சு பறவை…
“நாங்க பாக்கலாமா….?”
“ஓ எஸ்..ஆனா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க….”
“அமலா.. உன் கையாலேயே எடுத்து பறக்கவிடு…”
அமலா கையிலிருந்த அந்த குஞ்சு அடுத்த வினாடியே சிறகுகளை விரித்தபடி..உயரே..உயரே….
“முகில்.. முகில்…!”
அவனை அப்படியே கட்டிபிடித்து இரண்டு கன்னத்திலும் மாறி மாறி முத்தமழை பொழிந்தாள்..
“ஐ லவ் யூ முகில்.. லவ் யூ வித் மை ஹோல் ஹார்ட்…”
அதற்கு மேல் பேச முடியாமல் விக்கி விக்கி அழுதவள்….
“ஐயம் சாரி… நான் இப்படி பண்ணியிருக்கவே கூடாது…. சாரி முகில்..”
சிறுவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தார்கள்..
“எதுக்கு சாரி அமலா… ?காதல சொல்றதுக்கு இதவிட சிறந்த மொழி இருக்கா….? ஐ டூ லவ் யூ சோ மச்…”
“நோ..நோ… அப்படி சொல்லாத… நான் அதுக்கு தகுதி கெடையாது… என்னப் பத்தி உனக்கு தெரியாது…!”
“அமலா… என்ன சொல்ற…? நீதான் உன்னப்பத்தி எல்லாமே சொல்லிட்டியே…!”
“இல்ல… ஒரு நிமிஷம்…
கைகளை நீட்டி பெஞ்சின் ஒரு ஓரத்தில் சாய்த்து வைத்திருந்த இரண்டு ஊன்றுகோல்களை எடுத்தாள்..
“நீ சொன்னியே.. நான் சொந்தக் கால்ல நிக்கிறேன்னு..இல்ல..எனக்கு இதுதான் கால்… முகில்… ஒரு விபத்தில் இரண்டு காலையும் இழந்தவ நான்…
அதுனாலதான் எனக்கு உயிரா இருந்த நர்சிங் தொழில விட்டுட்டு ஒரு தனியார் மருத்துவமனையில அட்மிஷன் செகஷன்ல வேல பாக்க வேண்டிய கட்டாயம்….
முகில்….இப்போ சொல்லு…காலில்லாத இந்த பொண்ண உன்னால ஏத்துக்க முடியுமா….?”
அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள்…
“அக்கா.. ஸ்டாப் இட்… நீங்க சியர் லீடர் அக்கா..உங்க கண்ணுலேர்ந்து சொட்டு கண்ணீர் கூட வர விடமாட்டோம்… சியர் அப்…!
முகிலன் உறைந்து போய் நின்றான்…
அடுத்த நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தது..
முகிலன் வாயிலிருந்து வரப்போகும் வார்த்தைகள் என்னவாயிருக்கும்…?
யாரும் எதிர்பார்க்காமல் தனது இடத்திலிருந்து எழுந்து திரும்பிப் பார்க்காமல் போகிறான் முகிலன்….!
“அக்கா.. போகட்டும் விடுங்க…!அண்ணாவுக்கு உங்க அரும தெரியல…!
அமலா இதை எதிர்பார்த்தவள்போல், “ஓக்கே… கமான்… லெட் தி கேம் கோ ஆன்.. கம் வாட் மே..! நரேன்..காச எடு… டாஸ் போடலாம்…!
****
அடுத்தநாள் முகிலன் வரவேயில்லை…
“ஐ டூ லவ் யூ!”என்று சொன்னவன் மனம் மாறியதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை… உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுவும்….’ இது பொய்..இது பொய்.. ‘என்று அரற்றியது…
ஒரு குஞ்சு பறவைக்கு இத்தனை பரிவு காட்ட முடிந்தவனுக்கு தன் வாழ்க்கை என்று வரும்போது எப்படி இது சாத்தியம்…? ஆனால் இதுதானே நிஜம்…உண்மை சுடும்.. கசக்கும்…!
இவன் ஒன்றும் அதிசயபிறவி இல்லை…. எல்லோரையும் போல… ம்ம்ம்…
வேண்டாம்… பரிதாபப்பட்டு சரி என்று சொல்லுவதை விட இது எவ்வளவோ மேல்…! ‘
இரண்டு நாட்கள் விடுப்பில் இருந்தாள்.. முடியவில்லை…
பழைய அமலவாக மாற மீண்டும் வேலைக்கு போவதுதான் ஒரே வழி….
அடுத்த சனிக்கிழமை மனோஜ் வந்து கூப்பிடமலிருந்தால் மைதானத்துக்கு போயிருக்க மாட்டாள்..
“ஹாய்….அமலாக்கா… நான் சொன்னேன் இல்ல… நிச்சயமாக வருவாங்கன்னு…!”
குழந்தைகளைப் பார்த்ததும் பழைய அமலா கொஞ்சம் கொஞ்சமாய் எட்டிப் பார்த்தாள்…
“ஹமீத் க்ளீன் பௌல்ட்..”
ஆட்டம் களைகட்டி விட்டது…
ஏன் திடீரென்று எல்லோரும் ஆட்டத்தை நிறுத்தி விட்டார்கள்…?
அமலா கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தாள்..நிஜமாகவே முகிலன்.. ஒரு சக்கர நாற்காலியியைத் தள்ளிக் கொண்டு..பின்னால் ஒரு நடுத்தர வயது தம்பதிகள்..
“அமலா… என்ன எதிர்பார்க்கல இல்ல…இது என் அம்மா..அப்பா…!
இவங்க கிட்ட ஏற்கனவே பர்மிஷன் வாங்கி வச்சிருந்தேன்….
அன்றைக்கு நடந்த நிகழ்ச்சியால என் முடிவுல எந்த மாத்தமும் இல்ல…
உனக்கு இந்த ஸ்பெஷல் வீல்சேர் ஆர்டர் பண்ண ஒரு வாரம் ஆயிடிச்சு…
யார் உதவியும் இல்லாம எங்க வேணா நீயே போகலாம்…
கூடிய சீக்கிரம் நீ பழையபடி நடக்க எல்லா முயற்சிகளையும் செய்ய தொடங்கியாச்சு…
“மீட் மை பேரன்ட்ஸ்…ஐ மீன் யுவர் பேரன்ட்ஸ்…”
அமலா வை சேர்த்து அணைத்தபடி சக்கரநாற்கலியில் உட்கார வைத்தான் முகிலன்..
“ஒரு குஞ்சு பறவையே தன்னம்பிக்கையோட பறக்கும்போது என் அமலாவால மேகத்தையே தொடமுடியாதா…? கமான் பாய்ஸ்.. சியர் ஹர் அப்….”
சிறுவர்களின் கரவொலி விண்ணைப் பிளந்தது…