(காதலின்) ‘ஏக்கம்’




கொழும்பு – இலங்கைத் தலைநகர் 1971
சூரியன் மறையும் மனோரம்யமான அந்த மாலை நேர அழகை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.அந்தக் காட்சியின் அழகையோ அல்லது அவள் உடலைத் தழுவி ஓடும் தென்றலையோ,அல்லது கோல எழில் தவழும் கொழும்பு- கால்பேஸ் கடற்கரையின் அழகிய காட்சிகளையோ புனிதாவின் மனம் ரசிக்கவில்லை.
அவள் வழிகள் வெறும் சூனியத்தை நோக்கிக் கொண்டிருந்தாலும்,மனம் மட்டும், இலங்கையின் வடக்கு நுனியான ஆனையிறவைத் தாண்டிப் போய் யாழ்ப்பாணத்தின் ஒரு செம்மண் கிராமத்தில் உலவிக்கொண்டிருந்தது.
‘அறிவு கெட்ட ஜென்மங்கள், நாங்க இரண்டுபெரும் வருஷக்கணக்காகக் காதலிக்கிறதென்டு தெரிஞ்ச கதையை அவைக்குத் தெரியாதென்டு நாடகம் போடுகினை. ஆட்டையும் மாட்டையும் விலை பேசி விக்கிறபோல மனிசரையும் விற்க யோசிக்குதுகள்.இவையின்ர பிள்ளைப் பாசம் என்கிறதே வெறும் அநியாயமான பொய்.’
புனிதாவின் கண்கள் கலங்குகின்றன. நினைவுகள் தொடர்கின்றன.
‘ நான் அவையின்ர சொல் கேளாட்டா நான் அவையின்ர மகள் இல்லையாம் அப்போது இவள் எங்கட மகள் என்கிற தாய் தகப்பனின் பாசமெல்லாம் எங்க போகுமோ தெரியாது.அவையின்ர சொல்லைக் கேட்டு யாரை அவை எனக்குக் கல்யாணம் பேசிக்கொண்டு வந்தாலும் நான் அந்த ஆளைச் செய்து போட வேணுமாம். இல்லையெண்டா அவையின்ர மானம் மரியாதை போயிடுமாம் என்னுடைய மனச்சாட்சி. என்னில் எனக்குள்ள மரியாதை மானம் எல்லாத்தையும் கல்லறையில் புதைச்சிப்போட்டு அவையின்ர மானத்தைக் காப்பாற்றட்டாம்’ அவளுக்கு தாய்தகப்பன் அவளிடம் எதிர்பார்க்கும் விடயங்கள் பற்றிய நினைவு தொடரத் தொடர மனம் எரிமலையாகக் கொதிக்கிறது.
‘என்னடி புனிதா, கால்பேஸ் கடற்கரைக்கு வந்து சந்தோசமாக இந்தப் பின்னேரத்தைக் கழிக்கலாம் என்டு சொல்லிக் கொண்டு வந்தவள். இப்ப வானத்தைப் பார்த்துப் பெருமூச்ச விட்டுக்கொண்டிருக்கிறாய்?’
காதைக் குடைந்து விட்டுக் காற்றோடு; வந்து காற்றோடு கலந்தோடும் வார்த்தைகளைத் தொடுத்துக் கேள்வி கேட்ட சினேகிதியையும், கல கலப்பாகவிருக்கும் கடற்கரைச் சூழ்நிலையையும் புனிதா வெறுத்துப் பார்க்கிறாள்.
அவளுக்கு மன எரிச்சல் தொடர்கிறது.
‘ஏன் இப்படி எல்லாரும் கல கலவெண்டு இருக்கினம்?’; ஒரு காரணமுமின்றி எல்லோரிலும் எரிந்து விழவேண்டும் போலிருக்கிறது. ஆனாலும் சினேகிதியின் கேள்விக்குப் பதிலாகப் போலியான ஒரு புன்சிரிப்பு அவள் அதரங்களில் தவழ்ந்து மறைகிறது.
பல தரப்பட்ட மக்களும் நிறைந்து வழியும் அந்தக் கடற்கரையில் தூரத்தே யாரோ ஒரு தெரிந்த பெண் வருவதுபோல்த் தெரிகிறது. வந்தவளை யாரென்று உற்றுப் பார்த்த புனிதா, வந்தவளை அடையாளம் கண்டதும் திடுக்கிடுகிறாள்.
வந்தவள் அவளின் சினேகிதியான சுந்தரி. ஒருசில மாதங்களுக்கு முன் சந்தித்தபோது தனது காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாக அழுதுகொட்டினாள்.
இப்போது?
புனிதத்திற்கு அருகில் வந்த சுந்தரி, தன்னுடன் வந்தவனைப் புனிதாவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறான். பல மாதிரியான சிருங்கார பாவங்களில் உடலை நெளித்து,வளைத்துப் போலி நாணத்துடன் அவள் போடும் நாடகத்தைப்பார்க்க,புனிதாவிற்குத் தனது துன்பங்களை மறந்து, வாய்விட்டுச் சிரிக்கவேண்டும் போலிருக்கிறது.
‘என்ன போலி வாழ்க்கையிது? இப்படி அடிக்கடி ஆண் சினேகிதர்களை மாற்றி இன்பம் கொண்டாடும் சுந்தரிபோன்ற பெண்களுக்கும் வெறும் தசையாசையே பெரிதாக மதிக்கும் மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்?’ புனிதாவின் மனம் தனது ‘புனிதமான காதலை’,மற்றவர்களின் காதலுடன் ஒப்பிட்டு யோசிக்கிறாள்.
‘எனக்கென்று ஒரு ஜீவன், அவன் தரும் அன்பான,பாசம் கலந்த இனிமையான பிணைப்பத்தான் எனக்குப் பெரிசு, வெறும் பாஷனுக்குப் புருஷன் பெண்சாதியாய் வாழும் உறவை நான் கேவலமாக நினைக்கிறேன்’ அவள் தனக்குள்ச் சொல்லிக் கொள்கிறாள். அவளின் நினைவுப் படகு தரை தட்ட, நெஞ்சம் நிறை துயரோடு. நடக்கிறாள்.அவளுடன் அவளின் பலசினேகிதள், இவள் மனம் படும் துயர் தெரியாமல் கல கலவெனப் பேசிக்கொண்டு வருகிறார்கள்.
அவர்கள் பஸ்ஸில் ஏறிக் கொள்கிறார்கள். ஓடிக்கொண்டிருக்கும்,பஸ்ஸில்,தன்னைச் சுற்றி நகரும் உலகத்தைக் கிரகிக்கமுடியாமல் வெற்று மனதுடன் நிற்கிறாள் புனிதா. பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு இளம்சோடி, ஒருத்தருடன் ஒருத்தர் மிக நெருக்கமாக இணைந்திருக்கிறார்கள். தங்களுக்குள்,மெல்லிய குரலில்; ஏதோ ரகசியம்பேசிச் சிரித்துக்கொள்கிறார்கள்.
அவர்களைக் கண்டதும் அவள் நினைக்கவிரும்பாத பல நினைவுகள்,அவள் மனதில் வேண்டாத நினைவுகள் விரட்டுகின்றன. அவளின் காதலனாக இருந்த சிவாவை நினைத்து.அவள் தனக்குள் வேதனையுடன் முனகிக் கொள்கிறாள்.
தனது நினைவைத் தடுக்க முடியாமல் அவளின் பார்வையை வெளியே செலுத்துகிறாள். கொள்ளுப்பிட்டி,காலி றோட்டிலுள்ள,பிரிட்டிஷ் லைப்ரரிக்கு முன்னால் பஸ் நிற்கிறது. சிவாவுடன் புனிதா அங்கு பல தரம் போயிருந்த ஞாபகங்கள் வந்ததும்,நெருஞ்சி முட்கள் அவள் நினைவிற் குத்துகின்றன.
‘சிவா, என்னிடம் இனி வரவே மாட்டீர்களா?’ புனிதாவிற்கு அவனின் நினைவு வந்ததும், வாய்விட்டுக்கதற வேண்டும்போலிருக்கிறது.
அடுத்த ஸ்டாப்பில் பஸ் நிற்கிறது. சில சினேகிதிகள் இறங்கிக் கொள்கிறார்கள். காலி வீதியில்,பின்னேரத்தில் திரளும் மக்கள் நெரிசலும் சப்தங்களும் அவளை நெருங்காத உணர்வுடன் சிலைபோல புனிதா அந்த பஸ்ஸில் உட்கார்ந்திருக்கிறாள். வித விதமான நாகரிக உடுப்புக்கள் அணிந்த கொழும்பு மாநகர மக்களில் ஒருசிலர், ஏதோ பித்துப் பிடித்தவள் போலிருக்கும் அவளை விசித்திரமாகப் பார்த்து விட்டுப் பஸ்ஸிலிருந்து இறங்குகிறார்கள்.
அவர்களிருக்கும் பெண்கள் ஹாஸ்டலுக்குப் பக்கத்திலுள்ள பஸ் ஸ்டாப்பில் பஸ் நின்றதும், இறங்கும் தனது சினேகிதிகளைக் கண்டு அவள் தானும் சுய உணர்வு வந்த அவசரத்தில். இறங்குகிறாள்.
அவளின் இருதயம்போல வானமும் இருண்டு தெரிகிறது. இருள் பரவும் நேரம் நெருங்குகிறது. விடுதிக்குப் போனதும், அங்கு, விசிட்டர்ஸ் ஹால் நிரம்பியிருக்கிறது. அங்கு இளம் பெண்களும் ஆண்களுமான இளம் சோடிகள் மிக நெருக்கமாகவிருந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒருசிலர், ஒருத்தரின் கையை மற்றவர் இணைத்துக் கொண்டு ஆசையாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கொழும்பு மாநகரப் பெண்கள் விடுதிகளின் சாதாரணக் காட்சிள் அவை. அவளையறியாமல், அவள் சிவாவுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கும் அந்த மூலையிலுள்ள இருகதிரைகளும் கண்களைப் பதிக்கிறாள்.
பின்னேரங்களில், ஓராயிரம் இன்ப நினைவுகளுடன் சிவாவின் வருகைக்காகப் புனிதா அந்த மூலையிலுள்ள கதிரையில் அவனுக்காகக் காத்திருப்பாள்.
அவையெல்லாம் கனவில் நடந்த நிகழ்ச்சிகளாகி விட்டனவா?
அங்கிருப்பது மரக்கதிரைகள்தான்,ஆனால், நேற்றுவரை, அவைக்கு உயிரும் உணர்வுமிருந்து அவளின் கற்பனை வாழ்க்கையுடன் கலந்திருந்தன என்ற பிரமை அவள் மனதை நெருடுகிறது.
இன்று அவளுக்கு எதுவுமே வெறுமையாக, விரக்தியாகத் தெரிகிறது.ஓடிப்போய் அந்தக் கதிரையிலிருந்து அவனை நினைத்துக் கதறவேண்டும் போலிருக்கிறது.
தனது அறையைத் திறந்தாள். அவளுடைய றூம் மேட் மிஸ் பெனடிக்ட்டும்; அங்கில்லை. தனிமையில் போயிருந்து அழவேண்டும் என்று நினைத்தவளுக்கு, யாருமற்ற அந்தத் தனிமை தாங்கமுடியாதிருக்கிறது.
அவளது. அறைக்கதவு திறந்திருப்பதைக் கண்ட,ஹாஸ்டல் ஆயா,எட்டிப் பார்க்கிறாள்.
‘மிஸ் பெனடிக்ட் கொயத கீயே? ( மிஸ் பெனடிக்ட் எங்கே போய்விட்டாள்)’ என்று புனிதா ஆயாவைக்; கேட்கிறாள்.
‘ எயா கிவ்வ நேத? ஏயா கெதற கீயா (அவள் சொல்லவில்லையா?,அவள் வீட்டுக்குப் போய்விட்டாள்) என்று ஆயா சொன்னாள்.
ஆயா, அறையின் லைட்டைப் போடாமல் நின்று பேசிக்கொண்டிருக்கிறாள்.
‘ஹரி, மந் தன்னின ‘(சரி. எனக்குத் தெரியாது ). என்று புனிதா சொன்னதும் ஆயா போய்விட்டாள்.
புனிதாவுக்குத் தனிமை நெருப்பாய்ச் சுடுகிறது. மிஸ் பெனடிக்ட. அவளுடன் அந்த அறையைப் பகிர்ந்து கொள்பவள். நேற்று, புனிதாவின் மனநிலை சரியில்லாததால் மிஸ் பெனடிக்ட்டுடன் அதிகம் பேசவில்லை.அவள் இன்று அந்த அறையில் இருக்கமாட்டாள் என்பதும்; அவளுக்கு மறந்துவிட்டது.
புனிதா, தன் அறையில் இருளை வெறித்தப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.
வெளியில் போகக் கட்டிய சேலையை மாற்றவேண்டும் என நினைத்துச் சேலையைத் தொட்டவளுக்குக் கண்கள் கலங்குகின்றன. போனவருடத் தீபாவளிக்குச் சிவா வாங்கித் தந்த சேலையது.
‘இப்போது,இதுமட்டும் என்னைத் தடவுகிறது. இதைத் தந்தவனின் அணைப்பு இனிக் கிடைக்காது’ தனக்குள்ச் சொல்லிக் கொண்டு,; விம்முகிறாள்.
‘ அநியாயமான பெற்றோர்கள்.. என்னை இப்படிச் சித்திரவதை செய்வதை விட, என்னைப் பெற்ற அன்றே சாக்காட்டியிருக்கலாம், அவர்களின் மானத்தை வாங்குகிறேன் என்று என்னைத் திட்டிக்கொண்டு, இப்போது அவர்களின் பேராசைக்காக என்னுடைய எதிர்கால வாழ்க்கையை அநியாயமாக்கிப் போட்டுதுகள். இவைக்குப் பணம்தான் பெரிசு. அந்த ஆக்களை அப்படி நடக்கப் பண்ணுற சின்ன அண்ணைக்கும் காசுதான் பெரிசாய்ப் போட்டுது’
அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.
‘ இவ்வளவு நாளும், எனக்காகத்தான் அவரும் கல்யாணம் பண்ணாம இருக்கிறதெண்டெல்லோ சின்ன அண்ணா கதைச்சுக்கொண்டு திரிஞ்சார். இப்பதான் விளங்குது அவரின்ர சுயநலம். எனக்கும் அவருக்கும் சரிவர்ற மாதிரி ஒரு மாற்றுச் சடங்குக் கல்யாணப் பேச்சு வந்திருக்காம். அதுக்கு நான் ஒப்புக் கொண்டா, எனக்கு நல்ல மாப்பிள்ளையும், சின்ன அண்ணாவுக்கப் பெரிய தொகையில சீதனமும் காரும் கிடைக்குமாம். சின்ன அண்ணா அவரின்ர பேராசைக்கு என்னைப் பலியாடாகக் கொடுக்கத்தான் இவ்வளவு காலமும் காத்திருந்தார் போல கிடக்கு.’
அவள் எரிமலையாயக் குமுறுகிறாள்.
‘எனது திருமணத்திற்காகக் காத்திருந்தவர் எண்டால்,சிவாவின்ர தங்கச்சி ஒருத்தியை மாற்றுச் சடங்கு செய்துவிட்டு, என்னைச் சிவாவுக்குச் செய்து கொடுத்திருக்கலாம்தானே? நான் அதை எத்தனை தரம் சின்ன அண்ணாவுக்குச் சொன்னன்? சீதனம் இல்லாத சிவாவின்ர தங்கச்சியைச் செய்த புண்ணியமெண்டாலும் அண்ணாவுக்குக் கிடைச்சிருக்கும்.’ அவள் நினைவுகள் கட்டறுந்த குதிரையாகப் பாய்கிறது.
கதவு தட்டப் படும் சப்தம் கேட்டதும் அவள் நினைவுகள் தடைப்படுகின்றன.
‘ஒங்களுக்கு அய்யா வந்தது’ ஆயா தனது அரைகுறைத் தமிழில்ச் சொல்கிறாள்.
யார் வந்திருப்பது என்ற புனிதாவுக்குத் தெரியும் அவள் மனம் எரிமலையாய் அனலைக் கொட்டுகிறது.
அவளின் தமயன் எதற்கு வந்திருப்பார் என்ற அவளுக்குத் தெரியும்.
வேண்டா வெறுப்பாக விசிட்டர்ஸ் ஹாலுக்குள் வந்தாள். அண்ணாவுக்கு முன்தலை வழுக்கை விழுந்திருக்கிறது.வெளிச்சத்தில் அதுபளபளக்கிறது.
புனிதாவைக் கண்டதும் தலையைத் தாழ்த்திக்கொள்கிறார்.அவர் விரல்கள்; கதிரையின் கைப்பிடியைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. அவள் மௌனமாக அவர் அருகிலிருந்த கதிரையில் உட்கார்ந்தாள்.
அவர் மெல்லமாக அவளை ஏறிட்டுப்பார்த்தார்.
.
‘அம்மா கடிதம் போட்டிருக்கா’ அவர் அவளை ஆராய்ந்தபடி முணுமுணுத்தார்.
அவள் ‘ உம்’ என்றாள். அவள் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியுமில்லை.
‘எனக்கும் அம்மா கடிதம் போட்டவ, கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்’ என்று புனிதா வெடிப்பாள் என எதிர்பார்த்தவருக்கு அவளின் வெறும் ‘உம்’ திகைப்பைத் தந்திருக்கவேண்டும்.
அவர் தனது வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டு, ‘பிறி போயாவுக்கு( பௌர்ணமிக்கு) முதல் ட்ரெயின் எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணம் வரச் சொல்லி எழுதியிருக்கிறா’ என்றார். அதற்கு மேல் எதுவும் பேசுவதற்கு இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை.
இருவருக்குமிடையில் பிடிவாதமான மௌனம். புனிதா, தனது இடது பக்கத்தில் திரும்பியபோது, அந்த மூலையில், அவள் சிவாவுடன் இருக்குமிடத்தில், பிரியாந்தியும் அவளின் போய்பிரண்ட பெரேராவும் இருக்கிறார்கள்.
‘அவர் வரவில்லையா?’ பெரேரா சைகையால் புனிதாவைக் கேட்கிறான்.
போலியான புன்முறுவலுடன் அவள்’ இல்லை’ என்று தலையாட்டகிறாள்.
‘சரி நான் வெளிக்கிடுறன். யாழ்ப்பாணம் போகவெளிக்கிட்டுக் கொண்டிரு’ தமயன் எழும்புகிறார்.
அவளின் பதிலை எதிர்பாராமற் செல்லும் தமயனைப் பார்த்தபடி எழுந்து செல்கிறாள் புனிதா.அந்த ஹாஸ்டலிலிருக்கும் இன்னொரு பெண்ணான, மிஸ் பார்க்லெட் எதிர் வருகிறாள்.
‘ ஹலோ புனிதா, சிவா டின்ட் கம் ருடே ( புனிதா,சிவா இன்று வரவில்லையா)?’
புனிதத்துக்கு தாங்க முடியாத சோகத்தால் அவளின் இருதயம் பட படவென அடித்துக் கொண்டது.
‘சிவா இனி இந்த ஹாஸ்டலுக்க வரமாட்டார். அந்த மூலையிலிருக்கும் இருகதிரைகளுக்கும் வாயிருந்தால் நேற்று எங்களுக்குள் நடந்த கதையை உனக்குச் சொல்லியழும். அவரின்ர குடும்பத்தில இருக்கிற இருக்கிற குமர்ப்பெண்களுக்காக எங்கட இருதயத்தைக் கல்லறையாக்கி அதில எங்கட காதலைச் சமாதி வைத்து விட்டம்’ என்ற மிஸ் பார்க்லெட்டுக்குச் சொல்லத் துடித்தாள் புனிதா.
ஆனால் ஒரு சிறு புன்முறுவலைப் பதிலுக்குக் கொடுத்து விட்டு விரைகிறாள்.
வழியில் சுந்தரி வழக்கமான குலுக்கலுடன் வருகிறாள்.
‘என்னடி புனிதா இண்டைக்கு உமக்கு மூட் சரியில்லையா?’
‘சரியான தலையிடி’ என்ற பொய் சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் நுழைந்தாள் புனிதா.
இந்த நிமிடம் வரை, தனது வேதனை, சிவாவைப் பிரிந்ததால் மட்டுமே எனப் புனிதா நினைத்திருந்தாள்.
இப்போது ஒரு புதிய பிரச்சினை தலைநீடடியிருக்கிறது.
சிவாவின் உறவு அறுந்து விட்டது என்ற சொன்னால்,புனிதாவைப் பற்றி யார் யார் எப்படியெல்லாம் நினைக்கப் போகிறார்கள்?
‘நீயும் சுந்தரி மாதிரி அடிக்கடி போய் பிரண்ட்ஸை மாற்றப் போகிறாயா? என்று யாரும் கேட்காமலிருப்பார்களா?;
கற்பு, காதல், புனிதம், எனற கதை, கவிதை, காப்பியங்களைப் போற்றும் மனிதர்கள்; தங்கள் சுயநலத்தக்காகப் புனிதா போன்றோரைக் கொடுமை செய்யும் இந்த சமுதாயத்தில் எந்தவிதமான நேர்மையும் இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை.
ஆயா சாப்பிடக் கூப்பிட்டாள். புனிதாவுக்கப் பசிக்கவில்லை என்று சொன்னாள். சுpவாவை நினைத்தால் பசி பட்டினி ஒன்றும் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.
புனிதா அவனை நினைத்துத் தன்pமையிலிருந்து அழுதாள்.
புனிதா-சிவாவின் காதல் அவர்களின் குடும்பங்களுக்கப் பல ஆண்டுகளாகத் தெரியும். இருவரும் படிப்பை முடித்துவிட்டுக் கொழும்பில் வேலை செய்யத் தொடங்கியதும், இருவரும், கொழும்பில் கால்பேஸ் கடற்கரையிலும்.படமாளிகைகளில் காதற் சிட்டுகளாயப் பறந்து திரிவது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
புனிதா, சிவாவைத் திருமணம் செய்தால், வசதி படைத் கடும்பத்திலிருந்து வந்த அவளுக்கு ஒரு சதமும் அவர்கள் குடும்பத்திலிருந்து கிடைக்காது. என்று சொல்லி விட்டார்கள். பக்கத்து வீடுகளில் பிறந்து வளர்ந்த,அவர்களின் காதலை அவர்கள் அப்படி நிராகரிப்பார்கள் என்பதை அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவளின் சந்தோசத்தை அவள் குடும்பம் முக்கியமானதாகப் பார்க்கும் என்று நம்பிக் கொண்டிருந்தாள்.
சிவராசாவின் குடும்பம் வசதியற்றது. அவனின் தகப்பன் ஒரு ஆசிரியர். அவனுக்கு இரு தங்கைகள் உள்ளனர். அவர்கள் இருக்கும் வீடு தவிர அவர்களுக்கு ஒரு சொத்தும் கிடையாது.
புனிதா, மலேசியாவில் எஞ்சினியராக வேலைபார்த்துப் பணம் சேர்த்தவரின் மகள். அரண்மனைமாதிரி ஒரு வீட்டுக்கு இளவரசி;.எவ்வளவு சீதனமும் கொடுக்க அவளின் குடும்பத்துக்கு வசதியுண்டு.
சிவாவுக்குப் புனிதா மூலம் கிடைக்கும் சீதனம் அவனின் தங்கைகளின் வாழ்க்கைக்கு உதவும் என்று புனிதாவும் சிவாவும் மனதார நம்பியிருந்தார்கள்.
ஆனால் புனிதாவின் குடும்பத்தின் பேராசையால் அவர்கள் காதல் தவிடுபொடியானதும், தங்களின் எதிர்காலத்தை, தங்களை ஒரு அந்நியர்களாக நினைத்துக்கொண்டு ஆய்வு செய்தார்கள்.
தாங்கமுடியாத தங்கள் வேதனையையும் தோல்வியையும், புனிதாவின் குடும்பத்தாரால் ஏற்பட்ட அவமானத்தையும் மறைத்துக் கொண்டார்கள். உண்மையான காதல் தியாகத்தால் புனிதமாகிறது என்ற நினைத்தாள் புனிதா.
‘ எனக்காகக் காத்துக்கொண்டு இருக்கவேண்டாம். நீங்கள் உங்கட தங்கச்சிகளுக்கு உதவி செய்ய,உங்களுக்கு நல்ல சீதனம் கிடைக்கிற இடத்தில சம்பந்தம் செய்யுங்கோ’ அவள் தனது வேதனையை மறைத்துக் கொண்டு சிவாவுக்குப் புத்திமதி சொன்னாள்.
அவன் ஏழை ஆனால் அவளைப் பார்த்த பெண்களைக் கவரும் கம்பீரமான தோற்றமுள்ளவன். ஓரளவு நல்ல உத்தியோகத்திலிருப்பவன். அவனை மாப்பிள்ளையாக்க,எந்தக் குடும்பமும் தயங்காது என்று அவளுக்குத் தெரியும்.
‘ எனக்கு நீ இல்லாத வாழ்வு ஒரு ஒருவாழ்வா புனிதா? கடைசிவரைக்கும் பொறுத்துப் பார்ப்பம்’ அவன் தனது கண்ணீரை அவளிடமிருந்து மறைத்துக்கொண்டு சொன்னான்.
‘இஞ்ச பாருங்கோ, எங்கட ஆக்கள் பணப் பைத்தியங்கள். எனக்கும் சின்ன அண்ணாவுக்கும் ஒரு பெரிய இடத்தில மாற்றுச் சடங்கு செய்ய முடிவு செய்தாயிற்று’ அவள் அவனை அணைத்தபடி சொன்னாள்.
‘உனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிடடுட இன்னொருத்தியை நான் என்னன்டு தொடுவன்’ அவன் அவளின் இணைவில் பெருமூச்சு விட்டான்.
‘நாங்கள் அவர்களுக்குச் சொல்லாமல் களவாகத் திருமணம் செய்தால் என்ன? அவன் கெஞ்சினான்.
அவள் அது முடியாத காரியம் என்று அவன் காதுகளில் கிசுகிசுத்தாள். அவள் குடும்பம் அவனைக் கொலைசெய்யத் தயங்காது என்று அவளுக்குத் தெரியும்.
‘நீ உனது குடும்பம் சொல்கிறமாதிரி கல்யாணம் செய்துகொள், நான் என்னுடைய தங்கச்சிகளுக்குக் கல்யாணம் செய்து கொடுத்து விட்டு உன்நினைவிலேயே வாழப்போகிறன்’ அவன் காதல் வேதனையில் பிதற்றினான்.
‘நீங்க கெதியாக நல்ல சீதனத்தில கல்யாணம் செய்யுங்கோ’அவள் அவனிடம் விம்மலுடன் வேண்டினாள். அவனின் அணைப்பு அவளையிறுக்கியது.
அவள் அவனின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். நீPரோடும் அவள் விழிகள் அவனின் நெஞ்சைக் குத்திப் பிழந்தது. ஆசைதீர அவளை அணைத்து கடைசி முத்தமிட்டான். இருவர் கண்ணீரும் அவர்களின் அதரங்களில் பதிந்து அவர்களின் ஆத்மாவை ஊடுருவியது.
வாழ்நாள் முழுக்க அவன் அணைப்பில் வாழ்ந்து முடிக்கவேண்டும் என்ற அவள் ஆசை நிர்மூலமாகிவிட்டது.
உண்மையான, ஒரு புனிதமான,ஒரு ஆத்மிகப் பிணைப்புடனான அவர்களின் சங்கமம்,அன்ற அளவிடமுடியாத தாப உணர்ச்சிகளுடன் பிரிந்தது.
சில மாதங்களின் பின்:
அவர்களின் கிணற்றுக் கட்டுக் கல்லில் அமர்ந்துகொண்டு பக்கத்திலுள்ள சிவாவின் வீட்டில் நடப்பதை,இரு வீட்டுக்கும் இடையிலுள்ள வேலிப் ‘பொட்டு'(ஓட்டை)க் குள்ளால்க் கேட்டுக் கொண்டிருக்கிறாள் புனிதா. அவளுக்குக் கல்யாணம் பேசிய காலத்திலிருந்து, கொழும்பில் அவளைப் பற்றி பலரும்,சிவாவை அவள் பிரிந்தது பற்றித் தேவையற்ற வாந்திகளைப் பரப்பமுதல்,அவள் வேலையை இராஜினாமா செய்துவிட்டு வீட்டிலேயே இருக்கிறாள்.
இவளின் பழைய காதல் கதை மாப்பிள்ளை வீட்டாருக்குத் தெரிய வந்ததால் இவளுக்குக் கல்யாணம் நடக்கவில்லை.ஆனாலும் என்ன விலை கொடுத்தும் ஒரு மாப்பிள்ளை ‘வாங்க’ அவள் குடும்பம் அலைகிறது.
சிவராசாவுக்குப் பெருமளவான சீதனத்தடன் பிரமாண்டமான திருமணம் நடந்தது.அந்த வைபோகத்தை வேலிப் ‘பொட்டு'(ஓட்டை) வழியாகக் கண்டு கண்ணீர் வடித்தாள் புனிதா.
அந்த வேலிப்’பொட்டு’தான்,ஒருகாலத்தில், புனிதாவும், சிவாவும் காதலிக்கக் காரணமாகவிருந்தது.
இப்போது அந்த வேலிப் பொட்டை வைத்த கண்வாங்காமற் பார்த்துக் கொண்டிருக்கிறாள் புனிதா.
ஓலையிலான அந்தப் பழைய வேலியை எடுத்துவிட்டுக் கல்மதில் கட்டவேண்டும் என்று புனிதாவின் வீட்டார் பேசிக் கொண்டிருக்கிறார்கள. கல் மதில் கட்டி,இருவீடுகளையம் மறைக்காவிட்டால், இந்த இருவீடுகளிலுமுள்ள அடுத்த தலைமுறைக் குழந்தைகள் இன்னுமொரு காதல்ப் பிரச்சினையை எழுப்புவார்கள் என்று மனிதமற்ற அந்தப் பணக்காhர்கள் பயப்படுகிறார்கள் போலும். புனிதா யோசிக்கிறாள்.
(யாவும் கற்பனையே)
‘சிந்தாமணி’ இலங்கை பிரசுரம் 04.03.1971 ‘ஏக்கம்’ என்ற பெயரில் வெளிவந்தது. சில வசனங்களும் மாற்றப் பட்டிருக்கின்றன.