காதலின் உயிர் மீட்டல்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 5, 2026
பார்வையிட்டோர்: 173 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

என் உயிர் காதலே…

நலம் என்று பொய் சொல்லி உன் நலம் அறிய ஆவலாக இருக்கும் காதலின் கடிதம்…

என் மீதான கோபம் உனக்கு இந்த கடிதம் உன் கைகளில் தவழும் போதே மறைந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

நாம் நினைத்தது போலவே எதுவும் இங்கே நடக்கும் என்று விதியில்லை என்று முதலில் உனக்கு சொல்லி கொள்ள விழைகிறேன்..

வாழ்வின் சூட்சம விளையாட்டில் சிக்கிக் கொண்ட சிறுவர்களாக நாம் இங்கே பயணிக்கிறோம்..

உன் சம்மதம் இல்லாமல் இங்கே நான் எதையும் முன்னெடுக்க போவதில்லை… அதனால் உன் காதலின் தீவிரத்தை பொறுத்து நான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்… அதற்காக நான் உன்னை கை விட்டு விட்டதாக நினைத்து விட வேண்டாம்…

உன் முடிவு எதுவாக இருந்தாலும் என் காதல் பிரியத்தை உன்னிடம் இருந்து நான் குறைத்து போக போவதில்லை..

நீ உன் வீட்டில் பார்க்கும் வரனை ஒத்துக் கொள்ள உனக்கு எல்லா வகையிலும் உரிமை உள்ளது…

ஆனால் அதற்காக நான் அதை பற்றி மட்டுமே யோசித்து கவலை கொண்டு ஓரிடத்தில் அமர போவதில்லை…

வாழ்வெனும் பாதையில் நான் அமைதியாக என் வழியில் சென்று கொண்டிருந்த சமயத்தில் எதிர் பாராத விதமாக ஒரு வழி துணையாக நீ என் பாதையில் குறுக்கிட்டாய்… நான் அதை ஒரு அற்புதமான நிகழ்வாக இப்போதும் நினைத்து மகிழ்கிறேன்…

எப்போதும் காதல் எனும் நிகழ்வில் இரு உள்ளங்கள் தோற்று விட்டதாக சரித்திரம் இல்லை…

ஏதோவொரு நடைமுறை சிக்கல் காரணமாக ஒரு உள்ளம் பிரிந்து செல்லும்… இன்னொரு உள்ளம் அந்த நிகழ்வை அசைபோடும்…

இது தான் நியதி…

பிரிந்து சென்ற காதல் ஜீவனின் கதையை இங்கே ஆயிரம் ஆயிரம் சுவாரஸ்யமான சினிமாவாக எடுத்து செல்ல காத்திருக்கும் இயக்குநர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்..

அவர்களிடம் நமது கதையை சொல்லி காவியம் ஆக்கி விட முயற்சி செய்வேன்… அதனால் அது பற்றி எல்லாம் நீ கவலைப்படாதே…

உன் நிலையை முழுவதும் யூகிக்க முடியாமல் போனாலும் ஓரளவு ஊகிக்க முடிகிறது…

இங்கே வாட்ஸ்அப் இமெயில் மூலம் ஆயிரம் ஆயிரம் காதல் கதைகள் நடந்து, நடந்த சுவடு தெரியாமல் முடிந்ததும் உண்டு..

நம் காதல் எப்போதும் உணர்வின் அதீத பிடியில் சிக்கித் தவிக்கும் ஒரு எழுதப்படாத காவியம்… அதனால் நாம் இணைந்து பயணித்த நாட்களை இந்த கடிதங்கள் மூலமாக நினைவு கூற எனக்கு ஒரு நல் வாய்ப்பாக இந்த கடிதத்தை எழுதி வருகிறேன்…

உன் நிலையை நீ மிகவும் நிதானமாக யோசித்து சொல்… ஆனால் அது உன் முடிவாக மட்டுமே இருக்க வேண்டும்..இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் உன் சொந்த முடிவாக இருக்கும் போது எதுவும் இங்கே உன்னை பாதிக்காது.. அடுத்தவர் சொல்லி எடுக்கும் முடிவுகளால் நீ எதிர் காலத்தில் துயரத்தை நிச்சயமாக சந்திப்பாய்…

எதுவாக இருந்தாலும் நான் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருக்கிறேன்…

இங்கே குழப்பம் அடைய தேவையில்லை… உன் உண்மையான நேசத்தில் நான் அகப்பட்டு கழித்த நாட்கள் வழி துணையாக கொண்டு மீதி நாட்களை மிகவும் அமைதியாக வாழ்ந்து விடுவேன்.. அது ஒன்றும் பெரிதில்லை எனக்கு ஒரு ஆணாக…

ஆனால் நீ ஒரு பெண்ணாக அதை ஏற்றுக் கொள்வதில் ஆயிரம் ஆயிரம் சிக்கல்கள் உள்ளது.. இந்த சமுதாயத்தில் எப்போதும் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக வசைபாடி அவர்கள் துயரத்தில் குளிர் காயும் அகோர மனிதர்கள் வாழும் இந்த பூமியில் பாவம் நீ என்ன செய்ய இயலும் என்று எனக்கு நன்றாக புரிகிறது…

நான் இங்கே சொன்ன விசயங்களை நீ நன்றாக புரிந்து கொண்டு உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்… ஆனால் அதை முழு மனதோடு செய்…

நம் காதலின் தீவிரத்தை இங்கே எவருக்கும் புரிய வைக்க அவசியம் இல்லை என்று உணர்ந்து செயல்படு…

உணர்வுகளை பிச்சை எடுத்து வாழும் நிலையில் நம் காதல் இல்லை..

மிகவும் தெளிவான நீர் நிலையை போல தான் நாம் நமது காதலை கட்டமைத்து இருக்கிறோம்…

உடனே நீ என்ன செய்ய போகிறாய் நீ வேறொரு திருமணம் செய்து கொள்ள போகிறாயா என்று கேட்காதே… நான் தற்போது அது பற்றி எல்லாம் யோசிக்க நேரமில்லை..

இங்கே உன்னோடு முழுமையாக பயணித்த அந்த காதல் நாட்களை நினைத்துக் கொண்டே வாழும் உரிமை எனக்கு உள்ளது…

உன்னை போல உன் நினைவுகள் ஞாபகப்படுத்தும் ஒரு பெண் இங்கே இருந்தால் நிச்சயமாக அவளும் என்னை நேசித்தால் நான் திருமணம் செய்துக் கொள்வேன்… இங்கே காதல் எப்போதும் புதிய பரிமாணத்தில் ஜனிக்கும்…

மனிதர்கள் மாறலாம் காதல் மாறாது…

நீ இந்த வரியை வாசிக்கும் போது நிச்சயமாக கோபப்படுவாய் என்று எனக்குத் தெரியும்…

ஆனால் சற்றே அதன் உள்ளார்ந்த புரிதல் உடனே உனக்கு வரும் என்றும் எனக்கு தெரியும்…

பலவீனமான மனதை கொண்டவர்கள் தான் காதலை சாகடிக்க முயற்சி செய்வார்கள்.. காதல் எனும் உணர்வில் உருகி ஒரு நதியாக பயணிக்கும் போது அதில் கால் நனைத்து இன்பம் காணும் ஒவ்வொருவரும் அந்த உணர்வின் அதீத அன்பின் பிடியில் இறுக அணைத்துக் கொண்டு மெய் மறந்து பயணிப்பார்கள்…

நமக்கான ஊடலில் தீர்மானிக்க வேண்டிய விசயம் இல்லை இது… தீவிரமாக ஆராய்ந்து நமக்கு பொதுவாக உள்ள காதலின் வெளியில் நாம் எந்தளவுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் பயணித்தோம் என்று யோசித்து முடிவெடுக்க வேண்டிய காலம்…

காதல் எனும் நதி எப்போதும் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் அமைதியாக பயணித்துக் கொண்டு தான் இருக்கும்… அங்கே மூழ்கி பரவசம் அடைந்தவர்கள் சலிப்படைந்து சிறிது காலம் கரை மீது ஏறி இளைப்பாறலாம்… ஆனால் மீண்டும் அந்த நதியில் கரைந்து தன்னை அதில் தொலைத்து பயணிக்கும் வரை இந்த மாதிரியான நிகழ்வுகள் எல்லாம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்…

சரி… நான் என்ன சொல்ல வருகிறேன் என்று நீ யோசித்து முடிவெடு…

அது எதுவாக இருந்தாலும் எனக்கு முறையாக தெரியப்படுத்து…

அது போதும் எனக்கு…

நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ அங்கே இருந்து கட்டளையிட முடியாது… நான் ஒரு சுதந்திர பறவை… அந்த பறவை காதல் எனும் நதியில் தன்னை முழுமையாக தொலைக்கும் வரை நதியின் கரையில் இங்கே அங்கே பறந்து திரியும்.. அதற்கான ஆழ்ந்த நுட்பமான புரிதல் வரும் போது அது தானாகவே அந்த நதிக்கு தன்னை சொந்தமாக்கிக் கொள்ளும்…

எப்போதும் காதலின் 

உணர்வுகளை மதிக்கும் 

காதலன் நான்…

இப்படிக்கு 

இப்போது வரை உன் காதல் பிடியில் வாழும் காதலன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *