காதற்கிளியும் தியாகக்குயிலும்




(1936ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சம்பந்தன் திட்டத்தைக் குலைத்தது அந்த ஒரு வார்த்தை. அவன் எதிர்கால நல்வாழ்வுக்குச் சாவுமணி அடிப்பதைப் போலிருந்தது அந்தக் கடைசி வார்த்தை. அவன் தன் காதுகளையே நம்பவில்லை. என்றாலும், அவனுக்கு மாமனாராக வரவேண்டியிருந்த மணி வாசகம் எவ்வளவு நிதானமாக, ஆனால், எவ்வளவு உறுதியாகக் கூறுகிறார்!

“தம்பீ,நான் கூறுவது உனக்கு விநோதமாக இருக் கலாம்; வியப்பாகவும் இருக்கலாம். ஆனால், என் மகள் விசாலாட்சி கூறியதென்னவோ உண்மை. நீ இந்தி ராணியை மணம் புரிந்து கொள்வதை அவள் முழு மனதுடன் ஆதரிக்கிறாள். இந்தத் திருமணத்தை முடித்து வைக்கவேண்டியது தனது இன்றியமையாத கடமை யென்றும் கூறுகிறாள். ஆனால் ?…”
“ஆனால், அவள் மட்டும் திருமணமே இல்லாமல் கன்னிப்பெண்ணாகவே தன் காலத்தைக் கடத்தப்போகி றாள்!” என்று சீறினான் சம்பந்தன்.
“அவரவர் சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு நான் குறுக்கே நிற்காதவன் என்பது உனக்குத் தெரியாததல் லவே” என்று அவனையே மடக்கினார் மணிவாசகம்.
விசாலாட்சி சம்பந்தனின் சொந்த அத்தை மகள். சிறுபிறாயம் தொட்டு அவனுடன் ஒன்றாகவே உண்டு, உடுத்து, விளையாடிப் பழகியவள். இவர்களுடைய இணை பிரியா நட்பைக்கண்டு அந்தக் காலத்திலேயே சம்பந்தன் பெற்றோரும் விசாலாட்சி பெற்றோரும் மனம் பூரித்துப் போனார்கள். வயது வந்ததும் அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்துக் கண்குளிரக் காணவேண்டுமென்று ஆசைப்பட்டார்கள். அந்தப் பிஞ்சுப் பருவத்திலேயே அவர்களைக் கணவன்-மனைவி என்ற போக்கில் பாவிக்கத் தொடங்கினார்கள்.
கள்ளங் கவடறியாத அந்தக் குழந்தைகளுக்கு இது புரியாவிட்டாலும், “விசாலாட்சி, உன் வீட்டுக்காரர்- அவர்தான் உன் அத்தான் வருகிறார். போய்க் கவனி என்று தன் தாய் உத்திரவிடும்போது, விசாலாட்சிக்கு இனந்தெரியாத மகிழ்ச்சி ஏற்படும். அதேபோல் விசாலாட்சி சம்பந்தன் வீட்டுக்கு வரும்போது, “சம்பந்தா, இதோ உன் வீட்டுக்காரி வநதுவிட்டாள்.” என்று அவன் தந்தை கூறும்போது, அவனுக்கு உச்சி குளிர்ந்துவிடும். “போங்க மாமா,” என்று விசாலாட்சியும் நாணிக் கோணிக்கொண்டு ஓடிவிடுவாள். சம்பந்தனும் சிட்டா கப் பறப்பான்.
காலம் ஓடிக்கொண்டிருந்தது. சம்பந்தன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்துவிட்டான். ஆனால், விசாலாட்சியோ பள்ளி இறுதிப் படிப்புடன் நின்றுவிட்டாள். இப்போது தான் சம்பந்தன் – விசாலாட்சி என்ற இரு அன்பு மலர்களிடையே ஒருத்தி குறுக்கிட்டாள். அவள்தான் இந்திராணி. மயக்கமூட்டும் மணம் வீசும் மலர்.
இந்திராணி வகுப்பில் மட்டும் முதலாவதாக இல்லை. அழகிலும் ஈடு இணையற்று விளங்கினாள். அவளுடைய படிப்பில் போட்டியிட்ட சம்பந்தன் இறுதியில் அந்தக் காதற்கிளியின் அழகில் சொக்கி, தன் மனத்தைப் பறி கொடுத்துவிட்டான். அந்த எழிலரசியும் “கிடைத்தற்கரிய பாக்கியம் கிட்டிவிட்டது” என்று மகிழ்ந்தாள்.
அதன் பிறகு, கேட்கவேண்டுமா? காதலரிருவரும் வானத்தில் பறந்தார்கள்; மேகத்தில் தவழ்ந்தார்கள்; சந்திரனையே எட்டிப்பிடித்தார்கள்! ஆம்! அவர்கள் மனம் இந்த நிலையில்தான் இருந்தது.
விரைவில் திருமணத்தை முடித்து அவள் கைப் பிடிக்கத் துடித்தான் சம்பந்தன். அப்போதுதான் அவனுக்கு விசாலாட்சியின் நினைவு வந்தது. தன் உள்ளக் கிடக்கையை முதலில் விசாலாட்சிக்குப் பக்குவமாக கடித வழி தெரிவித்தான். பிறகு, நேரடியாகவே தன் கருத்தைத் தெரிவிக்க தன் மாமனார் மணிவாசகம் இல்லம் சென்றான்.
எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்ட மணி வாசகம், “தம்பீ, நான் எவர் விருப்பத்திற்கும் எந்தக் காலத்தும் குறுக்கே நிற்கமாட்டேன். நீ இந்திராணியை மணக்க விரும்புவதைத் தடுக்கமாட்டேன். உன் விருப்பத்தை விசாலாட்சியிடம் கூறினேன். அவள் ஒரு கணம் சிந்தித்தாள். பிறகு. உறுதியான குரலில், “அப்பா, அவர் அவளையே மணந்துகொள்ளட்டும். அந்தத் திருமணம் இனிது நடைபெற நாம் எல்லா முயற்சிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றாள். “அப்படியே செய்வோம், அம்மா” என்று கூறிவிட்டு, “நீ என்ன யோசித்துக்கொண்டிருக்கிறாய்? உன் திருமணம்…” என்று தயக்கத்துடன் கேட்டேன். “அப்பா, நான் இனி மேல் எவரையுமே மணம்புரிந்துகொள்ளப் போவதில்லை.” என்று கூறிவிட்டுப் போய்விட்டாள்!” என்றார்.
2
சம்பந்தன்-இந்திராணி திருமண ஏற்பாடுகள் வெகு துரிதமாக நடந்துகொண்டிருந்தன. ஒருநாள்..
மதன கோபாலன் என்ற வாலிபன் விசாலாட்சி யைத் தனிமையில் சந்தித்தான். “கண்ணே, இப்போது தான் என் மனம் அமைதி பெற்றது. என் காதலுக்குத் தடைக்கல்லாகயிருந்த சம்பந்தன் இந்திராணியைத் திருமணம் முடித்துக்கொள்ளப் போகிறான்! இனி, என்னை மணக்க உனக்கு என்ன தடை? அவனைப்போல் உறுதியற்ற உள்ளம் படைத்தவனல்ல நான். உன் பொருட்டு என் உயிரையும் கொடுக்கச் சித்தமாயிருக் கிறேன். என்ன சொல்லுகிறாய்? “சம்மதம் என்று ஒரு வார்த்தை சொல்லமாட்டாயா?” என்று கெஞ்சினான்.
இவனும் கலாசாலை மாணவனே. விசாலாட்சியின் தூர உறவினன் கூட. பண வசதியுள்ள குடும்பத்தில் பிறந்தவன். நீண்ட நாட்களாகவே இவனுக்கு விசா லாட்சி மீது ஒரு கண். தன் பணத் தகுதியைக் காண் பித்து, அவளை எளிதில் மயக்கி, மணம்புரிந்து கொள்ள லாமென்று அவளிடம் பலமுறை முயன்று ‘தோல்வி கண்டவன். “சம்பந்தருக்கு அர்ப்பணித்துவிட்ட எனது உள்ளம் வேறு ஒருவரை நாடாது,” என்று ஒவ்வொரு தடவையிலும் விசாலாட்சி உறுதியாக அவனிடம் தெரிவித்திருந்தாள்.
“ஆனால், சம்பந்தன் அந்த உறுதியுடன் இருந்தானா? இல்லையே! அவள் காதலைத் துச்சமாக மதித்துவிட்டன்றோ அவன் வேறொருத்தியின் கையைப் பிடிக்கப் போகிறான்! “இன்னும் நீ அவனை நினைத்து ஏங்குவது எவ்வளவு தவறு? உன் காதலை மதித்தால் அவன் இந்தி ராணியை மணப்பானா? சிந்தித்துப்பார்” என்றான் மதன கோபாலன்.
“அதற்கென்று காதலைக் கடைச்சரக்குபோல் விற்கச் சொல்லுகிறீரோ?” என்று நறுக்கென்று கேட்டாள் விசாலாட்சி.
அவர்கள் ஒரு பூங்காவில் நின்று பேசிக்கொண்டிருந் தார்கள். பக்கத்திலிருந்த செடி மறைவிலிருந்து சலசல வென்று சப்தம் கேட்டது. செடிகளை விலக்கிக்கொண்டு சம்பந்தனும் இந்திராணியும் தோன்றினார்கள்.
மதன கோபாலன் வாயடைத்து நின்றான்.
“விசாலாட்சி, நீ மாதருள் மாணிக்கம். என்மீது நீ இவ்வளவு உள்ளன்பு வைத்திருப்பாய் என்று எண்ணவே இல்லை” என்று சம்பந்தன் கூறி முடிப்பதற்குள், இந்தி ராணி குறுக்கிட்டு, “இவள் தானா அவள் ! எனக்குப் போட்டியாக முளைத்தவள் !” என்று உதாசீனத்துடன் மொழிந்தாள்.
“சகோதரி! நான் உன்னைப்போல் நேற்று முளைத்தவளல்ல. எனக்குக் கருத்துத் தெரிந்த காலத்திலிருந்து என் அத்தானை அறிவேன். நான் உனக்குப் போட்டியாகயிருக்கவில்லை யென்பதை உன் காதலரே அறிவார். வேண்டுமானால் நீயே அவரைக் கேட்டுப்பார். என் முடிவை என்றோ அவரிடம் தெரிவித்துவிட்டேனே?” என்றாள் விசாலாட்சி.
“இந்த நாடகமெல்லாம் நான் அறிவேன். சற்று முன்பு இந்த மதன கோபாலனிடம் கூறியதை நான் கேட்கவில்லை யென்றா எண்ணிவிட்டாய்? “சம்பந்தருக்கு அர்ப்பணித்துவிட்ட என் உள்ளம் வேறு ஒருவரை நாடாது” என்று நீ கூறவில்லையா?”
“கூறினேன். இப்போதும் கூறுகிறேன். என் உள் ளம் அவரையன்றி வேறு எவரையும் நாடாது என்று தான் சற்று முன்பு என்னிடம் காதற்பிச்சை கேட்ட இந்த மதன கோபாலனிடம் கூறிக்கொண்டிருந்தேன். இதில் ஏதும் தவறு இருப்பதாக எனக்குத் தோன்ற வில்லையே.”
“தவறு இல்லையா? எவ்வளவு துணிச்சல்! இன்னொருத்தியின் கணவராக போகிற ஒருவரிடம் தனது உள்ளத்தை அர்ப்பணித்துவிட்டாளாம்! சே! சே! மானமுள்ள ஒரு பெண் பேசும் பேச்சா இது? கேட்க சகிக்கவில்லையே!”
“சகோதரி, இன்னும் நீ மனப்பக்குவமடையாதவள் என்பது நன்கு தெரிகிறது. நான் என் அத்தானை என் உயிராகவே பாவிக்கிறேன். இது வெறும் வார்த்தையல்ல. அவர் வாழ்வே என் வாழ்வு. அவர் சுகமே என் சுகம். அவர் துக்கமே என் துக்கம். அவர் உன்னை மணப்பதின் மூலம் இன்ப வாழ்க்கையை ஆவலோடு எதிர் பார்க்கிறார் அதற்கு வழி வகுத்துக் கொடுப்பதே அவரிடம் மெய்யன்பு கொண்ட எனது கடமை. அதனால்தான் உங்கள் திருமணத்திற்குச் சம்மதித்தேன். இதற்கென்று அவர்மீது கொண்டுள்ள என் அன்பைத் துறக்கவேண்டும் என்பதற்கு என்ன அவசியம்? இந்த அன்பை என் உள்ளத்தில் வைத்தே என் காலத்தை ஓட்டிவிட முடியும். அந்த ஒரு பற்றுக்கோடு இல்லாவிட்டால் நான் உயிர் வாழவே முடியாது. இதை அறிந்துகொள்.” என்று கூறியவள் கோவென்று கதறிவிட்டாள்.
“ஆ! விசாலாட்சி! நான் கெட்டேன்; கெட்டேன். ஒப்பற்ற உன் காதலை யறியாமல், ‘வெளிப்பகட்டு’ என் னும் மாய வலையில் சிக்கி மோசம் போனேன்!” என்று கூவிக்கொண்டே வெறி பிடித்தவன் போல் ஓடினான் சம்பந்தன்.
3
இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்திராணி இடமிருந்து விசாலாட்சிக்கு கடிதமொன்று வந்தது. அதில் வருமாறு வரையப்பட்டிருந்தது:-
அன்புச் சகோதரி விசாலாட்சி,
அன்று, பூங்காவில் நீ நடித்த நாடகத்தால் என் காதலர் சம்பந்தம் மனம் மாறிவிட்டார். என்னி டம் எதையோ எதிர்பார்த்து ஏமாந்தவர்போல் காணப்படுகிறார். அடிக்கடி பெருமூச்செறிகிறார். தலை மயிரைப் பிய்த்துக்கொள்கிறார். பொருளற்ற வார்த்தைகளால் புலம்புகிறார். சுருங்கக் கூறும் இடத்து அவருக்குப் பயித்தியம் பிடித்துவிட்டது. முன்னெச்சரிக்கையாக நான் மனநோய் மருத்துவ மனைக்குப் ‘போன்’ பண்ணி, அவரை அங்குச் சேர்க் கச்செய்தேன். இப்போது அவர் அங்குத்தான் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார்.
நான் அவரைத் திருமணம் செய்துகொண்டி ருந்தால் என் கதி என்ன ஆகியிருக்கும்? நல்ல வேளை! பிழைத்தேன். இவ்வளவுக்கும் உன் கபட நாடகமே காரணம்.
அது போகட்டும். இனியும் அவரை – – அந்தப் பயித்தியத்தை நினைத்து ஏங்காதே. உனக்கு ஏற்ற கணவர் மதன கோபாலன் தான். விரைவில் அவரை மணந்து இன்பக் கடலில் நீந்தி விளையாடிவா யென்று எதிர்பார்க்கும்.
இந்திராணி.
விசாலாட்சி இந்தக் கடிதத்தைத் திருப்பித்திருப்பிப் படித்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகிற்று. மௌனமாக அக்கடிதத்தைத் தன் தந் தையிடம் கொடுத்தாள். அந்தப் பெரியவரும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுக் கண்ணீர்விட்டார்.
துக்கம் ஆறிய சில நாட்களுக்குப் பிறகு, மணிவா சகர் தம் மகளை யழைத்து, “அம்மா ! விசாலாட்சி ! இந் திராணிக்கு வேறு வரன் நிச்சயமாகிவிட்டது. அடுத்த மாதத் துவக்கத்தில் அவளுக்குத் திருமணம். ஆனால், நீ தான் இன்னும்……” என்று வார்த்தையை முடிக்கு முன், “கன்னிப் பெண்யில்லை அப்பா! என் கணவர் சம்பந்தம் விரைவில் நலமடைந்து மருத்துவமனையில் இருந்து வந்துவிடுவாரப்பா!” என்றாள்.
பெரியவர் மீண்டும் ஒருமுறைக் கண்ணீர்விட்டார். “இல்லையம்மா! அவன் அங்கேயே இறந்துவிட்டானாம்.”
“ஆ.” என்ற ஒரு ஓலம் – கல்லையும் கரைந்துருகச் செய்யும் ஒரு ஓலந்தான் கேட்டது. வாடிய கொடி போல் விசாலாட்சி துவண்டு விழுந்தாள். அந்தத் தியாகக் குயிலின் உயிர் காற்றோடு கலந்தது.
– 1936, காதற் கிளியும் தியாகக் குயிலும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.
– கவிஞர் ந.பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (தொகுதி 2), முதற் பதிப்பு: பெப்ரவரி 1999, ப.பாலகிருட்டிணன், சிங்கப்பூர்.