காணாமற்போன காதோலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2025
பார்வையிட்டோர்: 482 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

லட்சுமிக்குத் தெரியும், அவள் கணவனிடமிருந்து எவ் வித ஒத்தாசையும் கிடைக்காதென்று. இருந்தாலும் பெட்டியில் நகையைக் காணோம் என்றதும் அவனிடம் ஓடிச் செய்தி தெரிவிப்பது தவிர அவளுக்கு வேறொன்றும் செய்யத் தெரியவில்லை. 

“ஐயோ, நகைப் பெட்டியில் இருந்த அம்மாவின் காதோலையைக் காணோமே” என்றாள் தவிப்புடன். 

மேஜையின் அருகில் புத்தகம் ஒன்றில் ஆழ்ந்திருந்த அவள் கணவன் பத்மநாபன், அவள் சொல்லுவது இன்ன தென்று விளங்காதவனாய் அவளை நிமிர்ந்து நோக்கினான். அவன் கவனம் முழுவதும் புத்தகத்தில் இருந்தது. 

“பெட்டிக்குள் எல்லாம் இருக்கிறதே. ஓலையை மட் டும் காணோமே ” என்று மேலும் லட்சுமி தவித்தாள். 

“இந்தா, எதைக் காணோம்? சற்று விளங்கச் சொல்லு” என்றான் பத்மநாபன், அப்பொழுதுதான் புத்தக உலகினின்றும் வெளிவந்தவனாய். 

“அதுதான்னா உங்கம்மாவின் காதோலை. உங்கப்பா சாகுமுன் கொடுத்த நகைப்பெட்டியில் இருந்தது. பெட்டியைப் பத்மாவிடம் கொடு’ என்று அவர் சொல்ல வில்லையா? ‘அவம்மா நகைகளெல்லாம் அதில் இருக் கின்றன. அவளுக்காக அப்படியே வைத்திருக்கிறேன். இப்பொழுது அவளால் வர முடியவில்லை. ஆகையால் அவளிடம் நேரில்கொடுக்க முடியவில்லை. நீ கொடுத்து விடு’ என்று என்னிடம் நம்பிக்கையாகக் கொடுத்தாரே. நானும் ‘ஆஹா’ என்று வாங்கி வைத்துக்கொண்டேனே. இப்பொழுது அதில் முக்கியமாகக் காதோலையைக் காணோமே. யார் எடுத்திருப்பா? எப்படிப் போயிருக் கும்?’ என்று லட்சுமி அங்கலாய்த்தாள். 

“ஒன்றும் போயிராது. நன்றாய்த் தேடிப் பாரு” என்றான் பத்மநாபன். 

“எத்தனை தரம் தேடிப் பார்க்கிறது? ஐயோ, எனக்கு வேர்த்துக் கொட்டுகிறது. தலையே சுற்றுகிறது.” 

“எங்கே,பெட்டியைக் கொண்டுவா, நான் பார்க்கிறேன்”. 

“நீங்க பார்த்தா மட்டும் அகப்பட்டுடுமா? அதுலே இருந்தால்தானே! அறை அறையாகக் கைவிட்டு ஒவ்வொன்றாகக் கீழே எடுத்து வைத்துக் கவிழ்த்துக்கூடப் பார்த்துவிட்டேன். காணலையே.” 

“இதில்தான் இருந்ததா? நிச்சயமாகத் தெரியுமா ?”

“நகைப் பெட்டியிலே இல்லாமல் வேறே தனியா இருக்குமா?” 

“நீ பார்த்தாயா?” 

”’வெல்வெட் பையில் போட்டு வைத்திருக்கிறேன்’ என்று அப்பா சொன்னது நன்றாய் நினைவிருக்கிறதே” 

”நீ பார்த்தாயா என்றால், வேறு ஏதோ சொல்லு கிறாயே.” 

“என்னைக் கேள்வி கேட்காதீங்கோ. மனுஷ்யாள் சாகிற வருத்தத்திலே எல்லாம் சரியாக யாருக்கு நினைவிருக்கிறது? என்னவோ பார்த்த மாதிரிதான் தோன்றுகிறது”. 

‘”அப்போ எங்கும் போகாது.” 

“அப்படிச் சொன்னா ஆயிடுத்தா? இப்போப் பெட்டியிலே இல்லை. பத்மா வருகிறதாகக் கடிதாசு வந்திருக்கு. அவள் வந்து நகைகளைக் கேட்டா என்ன பண்ணுகிறது?” 

“வீண் கவலைப்படாதே. நன்றாகத் தேடிப்பாரு; இருக்கும். நானும் பார்க்கிறேன். பெட்டியைக் கொண்டு வா. எங்கும் போய்விடாது” என்றான் பத்மநாபன் அவளைச் சமாதானப்படுத்திக்கொண்டு. 

லட்சுமி பெட்டியை எடுத்து வந்தாள். அது மரத்தினாலான சிறு கைப்பெட்டி. இருவருமாக அதன் அறைகளைத் துழாவி ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துப் பார்த்துத் தேடினார்கள். அகப்படவில்லை. 

சின்னத் திருகாணி முதல் லட்சுமி சொன்னதுபோலப் “பொடிபொட்டுக் ‘கூட அதது வைத்தபடி கிடந்தது. எண்ணெய் மெழுகேறிய திருமங்கிலியச் சரடு அப்படியே இருந்தது. யாராவது பெட்டியைத் திறந்து தொட்டுப் பார்த்திருந்தால்தானே? அன்று அவள் மாமியார் அற் பாயுசில் இறந்துபோன துக்கத்தில் அவள் நகைகளைக் காண மனம் சகியாமல் வைத்துப் பூட்டினது. பிறகு இன்று வரையிலும் பெட்டி திறக்கப்படவே இல்லை. பெண் ணுக்குப் புதிதாக நகைகள் செய்யும்பொழுது அதில் எதையாவது எடுத்து மாற்றிச் செய்து போடலாமென்று லட்சுமியின் மாமனார் நினைக்கவில்லை. பிள்ளையின் மனை விக்குக் கல்யாணப் பரிசாகக்கூட அதில் ஒன்றையும் அவர் கொடுக்கவில்லை. அவைகளைப் பொக்கிஷமாக மறைத்துவைத்துப் பூட்டிவிட்டார். அவர் மனைவிக்காகத் துக்கம் காத்தது அது. அவர் சாகும்வரையும் அந்தப் பெட்டியைக் கண்ணால்கூட யாரும் கண்டதில்லை. 

தான் இறப்பது நிச்சயம் என்று தெரிந்தபின்புதான் அவர் அதை லட்சுமியிடம் ஒப்பித்துப் பெண்ணிடம் கொடுக்கச் சொன்னார். பிள்ளை பத்மநாபனிடம் கொடுத் திருக்கலாம். ஏனோ அவர் அவ்விதம் செய்யவில்லை. ஒரு வேளை லட்சுமி நினைத்ததுபோல அவன் ஜாக்கிரதைக் குறைவை அவரும் உணர்ந்திருந்ததுதான் காரணம் போலும். 

யுத்தத்தில் பர்மா போன புதிது. சிட்டகாங்கில் மிலிடெரி டாக்டராக இருந்தான் பத்மாவின் கணவன். அவளும் அவனுடன் இருந்தாள். அவனுக்கு லீவு கிடைக்க வில்லை. அவளால் தனியே வருவது சாத்தியமாகவில்லை. ஆகையால் தந்தைக்கும் பெண்ணுக்கும் கடைசி முகமுழி இல்லாமல் போய்விட்டது. இப்பொழுது சண்டை முடிந்து விட்டது. ஆறுமாத ரஜா கிடைத்திருக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் வருவதாகப் பத்மா எழுதியிருக்கிறாள். 

அந்தக் கடிதந்தான் லட்சுமியை நகைப் பெட்டியைச் சோதிக்கத் தூண்டிற்று. நாத்தனார் வந்து அவளிடம் பெட்டியைக் கொடுத்து விடுமுன், சரிபார்க்க எண்ணித் திறந்து பார்த்தாள். அதன் பேரில்தான் காதோலை அதில் இல்லை என்பதைக் கண்டுபிடித்தாள். ஒலை ஒன்றும் விலைபெற்ற சீமைக் கமலமல்ல. வெறும் சிவப்புத்தான். இருந்தாலும் காணாமல் போவதென்றால் சரியா! 

லட்சுமிக்கு ஒன்றும் ஓடவில்லை. “அப்பாதாம் ஏதோ செய்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் எங்கே போகும்?” என்று ஒரே வார்த்தையில் அதைப்பற்றின கவலையைத் தீர்த்துவிட்டுப் பத்மநாபன் பேசாதிருந்தான். அதற்குமேல் செய்யக்கூடியது இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. 

லட்சுமிக்கு ‘அதெப்படிப் பேசாதிருப்பது?’ என்று கணவனிடம் கோபம் கோபமாய் வந்தது. ஏதாவது செய்ய வேண்டாமா? யாரிடமாவது சொல்ல வேண் டாமா ? ஒன்றும் செய்யாமலா இருப்பது ! அதைப்பற்றிப் பேசினாலாவது அவளுக்குச் சிறிது சமாதானமாக இருக் கும்போல இருந்தது. அதுகூட அவன் செய்யத் தயாராக இல்லை. சதா கொட்டியளப்பதில் என்ன பிரயோ ஜனம்?” என்று சொல்லிவிட்டான். அவள் மாமனாரே ஏதாவது செய்திருப்பாரென்று அவன் நினைத்ததை அவள் ஒரு நிமிஷங்கூட ஆமோதிக்கவில்லை. வெல்வெட் பையில் போட்டு வைத்திருக்கிறேனென்று அவர் சொன்னது அவள் காதிலேயே இன்னும் ஒலித்துக்கொண் டிருக் கிறது. அந்தப் பையையே காணோமே. உடலை மயான துக்குக் கொண்டுபோன பிறகு கழற்றிய ஒன்றிரண்டு நகைகளில் அதுவும் ஒன்று. மற்றதெல்லாம் அப்படியே இருக்க, அது மட்டும் எங்கே போகும்? கைப்பெட்டி மாமனாரிடமே இருந்திருக்கிறது. அதன் சாவி அவர் பூணூலை விட்டுப் பிரிந்ததே இல்லை. வேறொருவர் தொடு வதற்கு வழி இல்லை. அப்படி இருக்க, மாயமாய் மறைந் திருக்கிறதே! பெட்டி விழுங்கிவிட்டதென்று கதை சொல்வார்களே. அது போலல்லவா இருக்கிறது விஷயம்! அவள் மாமனார் அவள் கணவனைப்போல் சதா புத்தகத் தில் மூழ்கி மற்றக் காரியங்களில் அஜாக்கிரதையாக இருப்பவர் அல்ல. மறதி என்பதே அவரிடம் இல்லை. அவ சரப்பட்டு ஒரு காரியமும் செய்துவிட மாட்டார். அதை வைக்கவேண்டிய இடத்தில் வைத்து, செய்யவேண்டிய விதத்தில் செய்வார். அது எல்லோருக்கும் தெரியும்; அவரிடமிருந்து ஒரு நாளும் அது கெட்டுப்போயிராது. நிச்சயம். அவள் கைக்கு வந்தபின்தான் போயிருக்க வேண்டும். எப்பொழுது, எப்படிப் போயிருக்கும்? வெளித் திருடர்கள் செய்த வேலையில்லை : கன்னம் வைப் பதோ, இன்னொன்றோ நடக்கவில்லை. வேறு சாமானும் களவு போகவில்லை. வீட்டிலுள்ளவர்கள் கைவேலை தான்; சந்தேகமில்லை. 

அவள் மூளை புத்தகங்களில் துப்புத் துலக்குபவர் களின் மூளைபோல வெகு வேகமாய் விஷயங்களை அலசி ஆராயத் தொடங்கிற்று. அவள் பட்டணம் வந்தபிறகு களவு போவது சாத்தியமில்லை. ஏனெனில் பட்டணத்து வீட்டில் ‘பெட்டி பேழை’களுக்கென்று தனி அறை இருக்கிறது. அதில் வெகு ஜாக்கிரதையாகப் பூட்டின பெட்டியைப் பீரோவில் வைத்துப் பூட்டி, பிறகு அறை யையும் பூட்டி மூன்று சாவிகளையும் சாவிக் கொத்தோடு சேர்த்து இடுப்பில் செருகி இருக்கிறாள். அவள் மறந்தும் அதை எங்கும் வைத்துவிட மாட்டாள். அவள் மறந்தா லும் அவள் கை மறக்காது. பின்? மாமனார் இறந்து காரியங்கள் நடந்த பிறகு ஒரு மாதம் அவர்கள் கிராமத் தீல் தங்கினார்கள். அப்பொழுது ஒருகால் திருட்டுப் போயிருக்கக் கூடும். கிராமத்து வீட்டில் தனி அறையோ இன்னொன்றோ இல்லை. எல்லோருக்கும் பொதுவாகக் காமரா அறை ஒன்றுதான். சாவுக்கு வந்த பந்துக்கள் எல்லாரும் அதில்தான் ‘பெட்டி பேழைகள் வைத்துக் கொண்டார்கள். அவளும் நகைப் பெட்டியைத் தன் பெட்டியோடு அந்த அறையில்தான் வைத்திருந்தாள். மாமனார் மாமியார் இரண்டு வழிப் பந்துக்களும் நிறைய வந்திருந்தார்கள். மாமனார் நகைப் பெட்டியை அவளிடம் கொடுத்தது எல்லாருக்கும் தெரியும். அதில் யாருக் காவது திருட்டுப் புத்தி ஏன் ஏற்பட்டிருக்கக் கூடாது? உணவுக்குக்கூடத் தாராளமாய் இல்லாத பந்துக்களும் அவர்களுக்கு வேண்டிய பேர் உண்டு. 

ஆனால் ஒன்று. அத்தனை ஜனக் கூட்டத்தில் திருடு வதுதான் எப்படி? வீடு ‘ திமு திமு’ என்று நெறியும் பொழுது, பிறர் பெட்டியை யாரும் அறியாமல், அதன் திறவுகோலுமின்றித் திறந்து எடுப்பது சாத்தியமா? ஒருவர் இல்லாவிட்டால் ஒருவர் கண்ணில் அகப்பட்டு விடாதா? தேர்ந்த திருடருக்கு ஒருகால் முடியலாம், மற் றவர்களுக்கு எளிதல்ல என்று நிச்சயித்தாள் லட்சுமி. 

அவள் விஷயங்களைத் தெளிவு செய்துகொள்ளும் விதம் அவளுக்கே திருப்தியை அளித்தது. இந்த முறை யில் திருட்டையே உண்மையில் கண்டுபிடித்துவிட்டால்? இந்த எண்ணம், மேலும் அதிலேயே சிந்திக்கச் சுறு சுறுப்பை உண்டுபண்ணிற்று. 

கூட்டம் குறைந்த பிறகு வேண்டுமானால் எடுப்பது சாத்தியமாகலாம். அவர்கள் பட்டணம் வரும்வரையில்சிற் சில பந்துக்கள் பின் தங்கினதென்னவோ உண்மைதான். ஆனால் அவர்கள் மிகவும் நெருங்கின சுற்றத்தார்கள். மாமனாரின் தங்கை ஒருத்தி. அதாவது அவள் கணவனின் சொந்த அத்தை. அவளைத் திருடி என்று சொல்வதா? இல்லாவிட்டால் மாமியாரின் சகோதரி – இவர்களிடம் வெகு அன்பு கொண்ட சித்தி – அவளைச் சந்தேகிப்பதா? காலம் சிரமகாலம். யாரையும் நம்புவதற்கு இல்லை. சொந்தத் தாய்கூட மகளை நம்ப முடியாது. 

‘இது மாதிரி சொந்த மனுஷ்யர்களையே பற்றி எண் ணுவது பிசகு’ என்று அவள் மனம் எச்சரிக்காமல் விட வில்லை. அவளும் அதைத் திருத்திக் கட்டுப்படுத்த முயன் றாள். ஆனால் அது கேட்காமல் பின்னோடு, ‘அப்பொழுது சித்திப் பாட்டி அங்கிருந்தாளே, அவளைப்பற்றி என்ன?’ என்றது. அவளைச் சந்தேகிப்பது அவ்வளவாகத் தவ றாகவும் தோன்றவில்லை. காரணம், அவள் ஏழை என்பது மட்டுமல்ல. அவளுக்குக் கை கொஞ்சம் நீளமென்றும் கேள்விப்பட்டிருக்கிறாள். முன்பு எப்பொழுதோ அவள் கணவனும் நாத்தனாரும் சிறு குழந்தைகளாக இருந்த பொழுது ஒருவருடைய கையிலிருந்த தங்கக் காப்பு கொலுசு இரண்டும் களவு போய்விட்டனவாம். அப் பொழுது வீட்டிலிருந்த சித்திப் பாட்டி பேரில் சந்தேகம் பலமாய் ஏற்பட்டதாம். களவு என்னவோ கண்டுபிடிக்கப் படவில்லை. அதற்காக விஷயம் இல்லை என்று ஆகி விடுமா? 

இவ்விதம் எண்ணமிடும் பொழுது சித்திப் பாட்டி தன் பேத்திக்குச் சிவப்புத் தோடு செய்திருப்பதாகச் சொன்னது நினைவுக்கு வந்தது. ‘கல்யாணத்துக்கு நிற் கிறது. காதுத் தோடுகூட இல்லாமலிருந்தால் என்னமா இருக்கும்! அதற்காகப் பண்ணினேன் !” என்று யாரோ அவள் சொந்தப் பேத்திக்கு நகைசெய்து போட்டதற்குக் காரணம் கேட்டதுபோலச் சொல்லிக்கொண்டாள். அவ ரவர்கள் குழந்தைகளுக்கு நகை செய்வதற்குப் பிறரிடம் காரணம் எதற்கு? பிறர் அதற்கான பண த்தைப் பற்றிச் சந்தேகியாமல் இருக்கவேண்டும். ஏதோ தீராத செலவு; சிரமப்பட்டுச் செய்துகொண்டார்கள் என்று நினைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். அவள் பிள் ளைக்கு வெகு சொற்பச் சம்பளம். இப்பொழுது கொஞ்சம் உயர்ந்து இருப்பதாகச் சொன்னாள். அதற்குத் தகுந்த படி விலைவாசி ஏறிக் கிடக்கிறது. நாலு குழந்தைகளை வைத்துக்கொண்டு குடித்தனம் நடத்த வேண்டாமா? எல்லாம் இந்த நகையை எடுத்துப் பிரித்துத் தான் தோடு செய்திருக்கிறாள் ; சந்தேகமில்லை. கைப் பெட்டியின் பூட்டென்ன சாமான்யந்தானே! எந்தச் சாவி போட்டுத் திறந்தாலும் திறந்துவிடுகிறது. மேலாக வெல்வெட் பை இருந்திருக்கும், எடுத்துவிட்டாள். இன் னும் எதையாவது எடுப்பதற்கு வெகு நேரம் துழாவிக் கொண் டிருக்கமுடியாமல் யாராவது பார்த்துவிடப் போகிறார்கள் என்கிற பயம் இருந்திருக்கும். அந்த ஒரு மாதத்தில் எத்தனையோ தரம் சித்தியுடனும் அத்தை யுடனும் சித்திப் பாட்டியை வீட்டுக்குக் காவல் வைத்து விட்டுக் கோவிலென்றும் குளமென்றும் தான் போனது இப்பொழுது லட்சுமிக்கு நினைவு வந்தது.திருட வேண்டு மென்றால் அதைவிட நல்ல சந்தர்ப்பம் வேறு வேண்டுமா? 

இனி, சித்திப் பாட்டியின் பேரில் சந்தேகம் ஊர்ஜிதம் கொள்ளத் தொடங்கிற்று என்பதைச் சொல்லவும் வேண்டுமா? திருட்டைக் கண்டு பிடித்துவிட்டதாகவே அவள் மனம் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டது. ஆனால் அதை வெளிப்படுத்திப் பொருளைத் திரும்பப் பெறுவது எப்படி? அவள் கண வன் ஒரு தரம் தோட்டைக் கண் ணால் பார்த்தால் கண்டுபிடித்து விடக்கூடும். அவனுடைய அம்மா காதில் அதைச் சதா பார்த்திருப்பான் அல்லவா? அவன் அப்படியொன்றும் நினைவு தெரியாத குழந்தை யல்ல. அவன் தாய் சாகும்பொழுது, பன்னிரண்டு வய சுக்கு மேற்பட்ட பையன்தான். நகை உருமாறி யிருந் தாலும் சிவப்பை அடையாளம் கண்டுபிடித்துவிடலாமே! சித்திப் பாட்டியை எந்த விதத்திலாவது கடிதம் போட்டு வரவழைக்க வேண்டும். ஆனால் அவள் வரும்பொழுது தோட்டைக் கொண்டுவர மாட்டாளே. அதற்கு என்ன செய்கிறது? அவள் பேத்தியையும் கூடவே அழைத்து வரும்படி செய்யவேண்டும். வரன் பார்த்துத் தருவதாக ஆசை காட்டவேண்டும். சாமானைக் கண்ணால் பார்த்த பிறகு நேரிலேயே கேட்டுவிட வேண்டும். அப்பொழுது ஒப்புக்கொள்ளாமல் என்ன செய்வாள்? 

ஆனால் ஒன்று: தப்பித்தவறி அவள் எடுத்திராமல் இருந்துவிட்டால், அப்புறம் அவள் வசைமாரிகளை யார் கேட்கிறது? ஜன்மத் துவேஷமாகிவிடுமே ! ஆனால் தவறாக ஏன் போகிறது? அவளை விட்டால், வேறு யார் எடுத் திருக்கக்கூடும்? 

இப்படி எவ்வளவோ யோசித்து அதற்கான வழி செய்யப் பத்மநாபனிடந்தான் சொல்லவேண்டி வந்தது. அவள் யோசனைகளை அவன் கேட்டபொழுது அவன் ஒரே யடியாய் அவ்விதம் ஒன்றும் இராதென்று மறுத்ததோடு அவளுக்கு ஏதோ மூளைக் கோளாறு என்றும் பரிகசித்தான். 

“லட்சுமி, இனிமேல் அந்த நகையை அடியோடு மறந்துவிடு. போனால் போகிறது. அதொன்றும் அப் படிப் பிரமாதமில்லை. வீணாக மூளையைக் குழப்பிக்கொள் ளாதே” என்றான். 

“நானொன்றும் காரணமின்றிக் குற்றம் கண்டு பிடிக்கவில்லை” என்று லட்சுமி கோபமாய்ச் சொன்னதற்குக் கூட, “உன் காரணம் என்ன? சித்திப் பாட்டி பேத்திக்குத் தோடு செய்திருப்பதுதானே? அப்படிப் பார்த்தால் அத்தை பேரிலும் சித்தி பேரிலுங்கூட நீ நீ சந்தேகிக்கலாம். அத்தை பெண்ணுக்கு ராக்கொடி செய் திருக்கிறாள். சித்தி தனக்கே சிவப்பு வளையல் செய்து கொண்டிருக்கிறாள். அதற்கென்ன சொல்லுகிறாய்?” என் றான் பரிகாசமாக. இடமிருந்தால் அவர்களையும் அவள் சந்தேகிக்கத் தயார் தான் என்பதை அவன் கண்டானா? 

“ராக்கொடிக்கும் வளைக்கும் நிறையக் கற்கள் வேண்டுமே! இரண்டு ஓலைகள் போதுமா ?” என்றாள் லட்சுமி. இந்தப் பதில் அவனைத் திடுக்கிடச் செய்தது. முடிந்தால் அவர்களையும் அவள் சந்தேகிப்பாள் என்பதை அது விளக்குகிறதல்லவா? இந்த விபரீதக் கற்பனைகளை அவள் மனத்தினின்றும் அடியோடு போக்க எண்ணி, “இதோ பார் லட்சுமி, பத்மா உன்பேரில் இப்பொழுது சந்தேகித்தால் எப்படி இருக்கும்? யோசித்துப் பார். அதுபோலல்லவா இருக்கிறது, நீ நம் உறவினர்களையே திருட்டுப்பட்டம் கட்டுவது. முதலில் நகையே கெட்டுப் போயிருக்குமென்று நான் நினைக்கவில்லை. அப்பாதாம் ஏதோ செய்திருக்கிறார், நிச்சயம். வீண் சந்தேகப்பட்டுச் சொந்த மனிதர்களின் மனஸ்தாபத்தைச் சம்பாதித்துக் கொள்ளாதே” என்று எச்சரித்தான் பத்மநாபன். 

அவன் அவ்விதம் அவள் மனத்தைத் தெளிய வைக்க எண்ணிப் பேசினது இன்னொரு விபரீதமான பலனைத் தான் அளித்தது. 

‘இதுவரையிலும் எனக்குத் தோன்றாமல் போயிற்றே. ஆமாம், பத்மா என்னைச் சந்தேகித்தால்… ? ‘ என் நினைத்துக் கவலைப்படத் தொடங்கிவிட்டாள் லட்சுமி. 

அது மாதிரி ஏன் நடக்காது என்றுதான் அவளுக்குத் தோன்றிற்று. பெட்டியோ அவளிடம் இருந்திருக்கிறது. நகையையோ காணோம். இன்னும் என்ன வேண்டும்? சம்சயத்தைத் திடம் செய்வதேபோல் அவளுக்குச் சிவப்பு அட்டிகை வேறு புதிதாய் அவள் அம்மா செய்து போட் டிருக்கிறாள். கேவலம் அவளிடம் நம்பிக்கைதான் சம்ச யத்தை விலக்க வேண்டுமே தவிர, சந்தேகிப்பதற்கு என் னவோ காரணம் பலமாய்த்தான் இருப்பதாக அவளுக்குப் பட்டது. நகை அகப்பட்டாலொழிய, பத்மா தன்னைத் திருடி என்றுதான் நினைப்பாள். இந்த விபத்துக்கு என்ன செய்வது? லட்சுமிக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. செய்வது இன்னதென்றும் தெரியவில்லை. 

அவள்பேரில் சந்தேகம் ஏற்படக்கூடும் என்பது தெரிந்தும் பத்மநாபன் சும்மா இருக்கிறானே. திருட்டை வெளிப்படுத்த முயற்சி ஏதும் எடுத்துக்கொள்ளவில்லையே. அவனுக்கு எல்லாம் விளையாட்டாக இருக்கிறது. இது மாதிரி ஒரு புருஷன் கவலையற்று இருப்பதென்றால் லட்சு மிக்குக் கோபம் வராமல் என்ன செய்யும்? அவனோடு பேசக்கூட அவளுக்குப் பிடிக்கவில்லை. மனம் மட்டும் உள்ளூறத் தவித்தது. 

ஆனால் அவள் கோபத்துக்காகவும் தவிப்புக்காகவும் நாட்கள் செல்லாமல் இருக்குமா? அவைகள் ஓடிவிட்டன. பத்மா கணவனுடனும் குழந்தையுடனும் வந்து சேர்ந் தாள். மூன்று வருஷம் பார்க்காது இருந்து பார்த்த சந்தோஷம் எல்லாருக்கும் ; அளவளாவித் தீர்த்தார்கள். லட்சுமியும் தன்னை மறந்துதான் உத்ஸாகத்தில் இருந் தாள். பத்மாவைப் பார்த்தவுடனே அவளுக்கு இருந்த பயம் எங்கேயோ போயிற்று. 

ஆனால் அந்த மறதி ஒன்றிரண்டு நாளைக்குத்தான். பிறகு சதா நகைப்பெட்டியின் நினைவு ஏற்பட்டு அவளைத் துன்புறுத்தத் தொடங்கிவிட்டது. விஷயத்தைப் பத்மா விடம் சொல்லியாகவேண்டுமே. எப்படி, இப்பொழுது சொல்வது? அவளைத் திருடி என்று பத்மா சந்தேகிக்கத் தொடங்கினபின்பு அவர்கள் இருவரும் இப்பொழுதுபோல் களங்கமற்றுச் சந்தோஷமாக இருக்க முடியுமா? பத்மா அவளைத் தன் வாயால் திருடியென்று சொல்லமாட்டாள். இருந்தாலும் மனத்தில் நினைத்துக்கொள்ளாமல் இருப் பாளா? அவள் நிம்மதியைக் கலைக்க இதொன்று நேரிட வேண்டுமா? தந்தை இறக்கும்பொழுது பத்மா வர முடி யாமல் ஏன் போகவேண்டும்? அதுதான் அப்படியென்றால் நகையை இவள் மாமனார் ஏன் அவளிடம் கொடுக்கவேண் டும்? பத்மாவே நேரில் நகையை வாங்கிக்கொண் டிருந்தா ல் இந்த நிலைமை வந்திராதே. தெய்வமே சூழ்ச்சி செய்துதான் அபவாதத்தைத் தன்பேரில் கொண்டு வைத்திருக்கிறது. இனி மீள வழி இல்லை என்று தோன்றிற்று லட்சுமிக்கு. பத்மாவின் சந்தேகப் பார்வையை எதிர்பார்த்து அவள் மனம் துன்புற்றது. அவள் கண்முன் தன் சிவப்பு அட்டி கையை அணியவும் அவள் துணியவில்லை. அதிலுள்ள சிவப்புக் கற்கள் ஒருகால் ஓலையின் கற்கள்போலத் தோன்றினால்…? இவ்விதம் பலவாறு அவள் மனம் எண்ணமிட்டபோதிலும் விஷயத்தை வெளிப்படுத்தித் தானே தீரவேண்டும்? அதற்குப் பயந்து பின்வாங்கி என்ன செய்கிறது? 

கடைசியில் பத்மா சமாசாரம் கேட்டுக்கொண்ட பொழுது பத்மநாபனைப் போலவே நகை திருட்டுப் போயி ருக்கும் என்பதையே ஏற்றுக்கொள்ளவில்லை. ‘அப்பா தாம் ஏதாவது செய்திருப்பார். இல்லாவிடில் எங்காவது வைத்திருப்பார்’ என்று சொல்லிவிட்டாள். அவள் லட்சுமிபேரில் மட்டுமல்ல, மற்றப் பந்துக்கள் யார் பேரி லும் லட்சுமியின் காரணங்களைக் கேட்டபின்கூடச் சந் தேகப்படுவதாக இல்லை. 

லட்சுமிக்கு இதில் திருப்தி சிறிதும் ஏற்படவில்லை. அவளைப்பற்றி அவள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் போதுமா? எல்லாரைப் பற்றியும் அதே மனோ பாவத்தில் இருக்கிறாளே! சித்திப் பாட்டியைப் பற்றின சந்தேகத்தை அவள் எடுத்துச் சொல்லியும் பத்மா காதில் போட்டுக்கொள்ளவில்லையே ! இவ்விதம் இருப்பதில் திருட்டு, கண்டுபிடிக்கப்படாமலே யல்லவா போய்விடும்? 

இதில் லட்சுமிக்கு மிகுந்த மனவருத்தம். ஏமாற்றமோ சொல்லி முடியாது. 

பத்மா இருந்த ஆறு மாதமும் ஆறு நாட்கள் போலச் சென்றுவிட்டன. அவளைப் பார்த்துப்போக எல்லாப் பந்துக் களும் வந்துபோனார்கள். சித்திப் பாட்டியும் வந்திருந் தாள். எப்படியாவது சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொள்ளவேண்டுமென்று லட்சுமி துடியாய்த் துடித்தாள். ‘ஜாடைமாடை’யாக அதுபற்றி அவள் பேசினதை அந்தக் கிழவி புரிந்துகொள்ளாமலே இருந்தாள். அத்தனை சாமர்த் தியம் அவளுக்கு! தைரியமாக ஒளிவு மறைவின்றிக் கேட்டுவிடுவதென்று லட்சுமி தீர்மானித்தாள். ஆனால் அந்தத் தைரியம் அவளுக்குக் கட்டோடு வராமல் போயிற்று. யாருடைய பலத்தைக்கொண்டு அவ்விதம் துணிந்து கேட்பது? அவள் கணவனோ நாத்தனாரோ அவள் கட்சியில் இல்லை. காரியம் பலிக்காததுடன் எதி ராளி சண்டைக்கு வந்தால் சமாளித்துக்கொள்ளவாவது பக்க பலம் வேண்டாமா? இந்த மனப் போராட்டத்தின் நடுவில் சித்திப் பாட்டி என்னவோ ஊர்போய்ச் சேர்ந்து விட்டாள். ஒன்றையும் தெரிந்துகொண்டதாகவும் காண் பிக்கவில்லை. 

பிறகு என்ன? பத்மா ஊர் திரும்பும் நாளும் நெருங் கிற்று. எல்லாச் சாமான்களையும் மூட்டை கட்டும் பொழுது நகைப்பெட்டியையும் சேர்த்துக்கட்ட அதையும் கொடுத்தாள் லட்சுமி. வெள்ளிக் கிண்ணி ஒன்று பத்மாவினுடையது. அதையும் கொடுத்துவிட நினைத்து எடுத்தாள். அவை இரண்டு கிண்ணங்கள்; ஜோடியாக அவள் கணவனுக்கும் பத்மாவுக்கும் குழந்தையாக இருக் கும்பொழுது செய்தவை. ஒன்றுக்குள் ஒன்று போட்டு வைத்திருந்தது. அதுவும் மாமனார் சாகும்பொழுது, ஒன்று உன் குழந்தைக்கு (அதாவது அவர் ஆசீர்வாதம் அது) இன்னொன்று பத்மாவின் குழந்தைக்கு’ என்று சொல்லிக் கொடுத்தவைதாம். அவைகளை அப்படியே பீரோவில் வைத்திருந்தாள். அதில் மேல்கிண்ணியை எடுக் கவும் அடியில் என்ன அது… ? லட்சுமிக்குத் தூக்கிவாரிப் போட்டது. கண்களையே நம்பமுடியவில்லை. அவள் மாம னார் சொன்ன வெல்வெட் பை அங்கே எப்படி வந்தது? கையிலெடுத்துப் பைக்குள் பார்த்தார்கள். மாமியாரின் காதோலை பத்திரமாய் அப்படியே அதில் இருக்கிறது! 

லட்சுமிக்கு ஏற்பட்டது சந்தோஷமா? ஏமாற்றமா? அல்லது வருத்தமே தானா? மூன்றும் என்றுதான் சொல்ல வேண்டும். நகை கெட்டுப் போகவில்லை. கிடைத்து விட்டது என்பதில் சந்தோஷம். அவள் மூளை வெகுவாய் வேலைசெய்து கண்டுபிடித்த திருட்டு இல்லாமலே போய் விட்டதில் ஏமாற்றம். எல்லாவற்றுக்கும் மேலாக, தன் கணவனுக்கும் நாத்தனாருக்கும் வாய்த்த – பிறரைச் சந்தே கியாத – நல்ல மனம் தனக்கு இல்லையே என்கிற மன வருத்தமுந்தான். 

– தெய்வத்திற்கு மேல், முதற் பதிப்பு: பெப்ரவரி 1947, கலைமகள் காரியாலயம், சென்னை.

– இந்தப் புததகத்தில் வந்திருக்கும் கதைகள் கலைமகள், குமரிமலர், கல்கி தீபாவளி மலர், ஆனந்த விகடன், மங்கை ஆகிய பத்திகையில் வெளியானவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *