கவலை எனும் நோய்!





ஒரு வாரமாக கடுமையான காய்ச்சல் காரணமாக வேலைக்கு செல்லவில்லை ராகவன். நாற்பது வயதில் இப்படியொரு முடக்கத்தை அவன் சந்தித்திருக்கவில்லை. சொல்லப்போனால் உடல் நிலை சரியில்லையென நினைவு தெரிந்து இரண்டு முறை மருத்துவரை சந்தித்து மாத்திரை மட்டும் வாங்கி போட்டுள்ளான். இதுவரை ஊசி கூடப்போட்டதாக ஞாபகம் இல்லை.
தற்போது குளுக்கோஸ் ஊசி மூலமாகச்செலுத்தியதால் இரண்டு நாட்கள் மருத்துவ மனையிலேயே தங்கியதும், உறவுகளும், நட்புகளும் பழங்களாக வாங்கி வந்து பார்த்துச்சென்றதும், மனைவி மாதவி குழந்தைகளை தாய் வீட்டில் விட்டு விட்டு சோகமே உருவமாக தன்னருகில் தூங்காமல் ஒரு தாயைப்போல அமர்ந்திருந்ததும் புதிதாக இருந்தது. ‘காய்ச்சல் வந்தது கூட நம்மைப்பார்த்துக்கொள்ள அன்பான மனைவி இருக்கிறாள், அவளுக்கு சிரமமென்றால் இதே போல் நாமும் பார்த்துக்கொள்ள வேண்டும், மனைவி என்பவள் ஆண் பெற்று வந்த வரம்’ என புரிய வைத்ததாக நினைத்து உடல் சோர்விலும் மனம் பூரித்ததை உணர்ந்தான்.

மருத்துவ மனைகளில் பல பேர் பல நோயுடன் வருகின்றனர். நமக்கு மட்டும் நோய் வரவில்லை என்பதை தற்போதுதான் புரிந்து கொண்டான்.
நிழலில் இருப்பவர்களுக்கு வெயில் கடுமையானதாகவும், கொடுமையானதாகவும் தெரியும். வெயிலிலேயே வேலை பார்த்துப்பழகியவர்களுக்கு நிழலைப்பற்றிய யோசனையே இருக்காது. கடுமையான நோயால் அவதிப்பட்ட ஒருவர் சாதாரண காய்ச்சலைக்கண்டு பயப்பட மாட்டார். ராகவனுக்கு காய்ச்சலே பெரிய நோயாகத்தெரிந்தது.
காய்ச்சல் சரியான பின் உறவினர் வீட்டுத்திருமணத்துக்கு சென்றவன் அங்கு வந்திருந்த அனைவரும் சிரித்து, சிரித்து பேசுவதைப்பார்த்து ‘தன்னால் இவர்களைப்போல் சிரிக்க முடியவில்லையே. இவர்கள் மகிழ்ச்சியாக பேசுகிறார்களே…. அதையும் மீறி சிரித்தால் ‘சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மனையில் இருந்தவன் சிரிக்கிறான் பாரு, என தவறாக நினைத்து விடுவார்களோ….?’ என நினைத்து சோகமாக முகத்தை வைத்து இருக்கையில் அமர்ந்து கொண்டான். ஒரு வாரமாக வளர்ந்திருந்த தாடியைக்கூட ஷேவ் பண்ணாமல் வந்திருந்தான்.
ராகவனை திருமண மண்டபத்தில் பார்த்த அவரது மாமா முறையுள்ள கந்தன் என்பவர் அருகில் வந்து சிரித்தவாறு அமர்ந்தவர் ,”என்ன மாப்ளே… எங்க பார்த்தாலும் நல்லா சிரிச்சு பேசுவே….? இப்ப சோகமா இருக்கறே…? கல்யாண வீட்ல கலகலப்பா இருக்கோணும்” என்றார்.
“நீங்க எப்படி இருக்கீங்க மாமா….?”
“பார்த்தா தெரியலை… சூப்பரா இருக்கறேன் மாப்பிள்ளை…” நன்றாக ஷேவ் பண்ணிய முகத்தை வலது கையால் தடவியபடி பேசினார்.
‘வயதாகியும் எந்த நோயும் வரவில்லை போலிருக்கிறது மனுசனுக்கு. நம்மைப்போல் ஒரு வாரம் காய்ச்சலைப்பார்த்திருந்தால் இப்படி சிரித்துப்பேசியிருப்பாரா….? இப்படி பளப்பளன்னு ஷேவ் பண்ணியிருப்பாரா…?’ என நினைத்தவன் அவரைப்பார்த்து வறட்சியாக, செயற்கையாக சிரித்தான்.
அப்போது மாமா கந்தனது மனைவி சுமதி அங்கே வந்து ராகவனை நலம் விசாரித்தவள், “இந்த வயசுலயே உன்ற ஒடம்ப நல்லா பார்த்துக்க ராகவா. கல்யாண வீட்ல போடற அத்தனை ஐட்டத்தையும் சாப்பிடாதே…. உங்க மாமன் நாஞ்சொன்னா கேட்காம ஆசப்பட்டதையெல்லாம் கட்டுப்பாடில்லாம கட்டு கட்டுனு கட்டிப்போட்டு போன நாலு மாசம் முன்னால ஹார்ட் அட்டாக் வந்து நெஞ்சையே பொளந்து ஆபரேஷன் பண்ணியிருக்கறாரு. அஞ்சு லட்சம் செலவு வேற. போய் சேர்ந்திருந்தா நாலு மாசம் ஆயிருக்கும். என்ற மாங்கல்யத்த அந்த பண்ணாரியாத்தா தாங்காப் பாத்தியிருக்கறா…இப்ப பாரு ஒன்னுமே நடக்காத மாதர உங்கூட சிரிச்சு பேசறத….” என மாமன் கந்தனின் மனைவி சொல்லக்கேட்டு தான் மட்டுமே நோயால் பாதிக்கப்பட்டவன் எனும் கவலை மன நிலை மாறி, தன்னை விட பலர் உயிர் போகும் நிலைக்குச்சென்று தப்பித்து குணமாகி வந்தாலும் அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் மறுபடியும் நோயை மறந்து சிரித்து வாழ்கிறார்கள் என்பதைப்புரிந்தவனாய் இயல்பாக முகம் மலர மனைவியோடு சென்று மணமக்களை வாழ்த்தி, சிரித்தவாறு புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தான் ராகவன்.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |