கவர்ச்சிக் கனவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 13, 2026
பார்வையிட்டோர்: 156 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

கோடை வெயில் வாட்டி வதைத்தது. பள்ளிகள் கோடை விடுமுறைக்காக மூடப்பட்டன. தானியேலுக்கு மூன்று பிள்ளைகள். அவர்களைச் சமாளிப்பதே மேரிக்கு பெரும் வேலையாய் போச்சு. அவர்களின் அன்றாடத் தொல்லை தாங்க முடியாமல் “ஏங்க நம்ம பசங்களைக் கூட்டிக்கிட்டு  எங்கேயாவது வெளியே போய் வரலாமா” என்று கேட்டாள். அவனும் சரி என்றுச் சொன்னதால் குடும்பமே சுற்றுலாவிற்கு ஆயத்தமாயினர்.

சென்னையிலிலுள்ள  வண்டலூர் மிருகக் காட்சிசாலைக்குச் சென்றனர். அங்குச் சென்றதும்  சிறியவன் பீட்டர், ஒவ்வொரு விலங்கையும் தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டு அதன் அருகே சென்று தொட முயற்சித்தான்.  துரு துரு என்று அங்கு ஓடுவதும் இங்கு ஓடுவதுமாக இருந்தான். பெற்றோர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். அவன் அடங்குவதாக இல்லை. அங்கே போகாதே இங்கே போகாதே என்று சொல்லச் சொல்ல அவன் அழ ஆரம்பித்து விட்டான்.

அப்போது அங்குப் பணி செய்து கொண்டிருந்த சேவகர் ஒருவர் அவர்களிடம் வந்து தம்பி ஏன் அழுகின்றான் எனக் கேட்டார்.  இருவரும் நடந்த விஷயத்தைக் கூறினர். அவர் பயப்படாதே என்று கூறி அவனை மான்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். பக்கத்திலிருந்த  மரத்திலிருந்துக் கிளையை ஒடித்து அவனிடம் கொடுத்து அதை அந்த புள்ளி மானிடம் கொடுத்து  லேசாக தடவி விடுமாறுக் கூறினார். பீட்டருக்கு ரொம்ப மகிழ்ச்சி.

ஆசையோடு அந்த இலைக் கொத்தை எடுத்துக் கொண்டு புள்ளிமானிடம் சென்றான். அதைப் பார்த்த புள்ளிமான் துள்ளிக் குதித்து அவனிடம் ஓடி வந்தது. கையிலிருந்த இலையை அதன் வாயருகே கொண்டு போனான்;. மான் வேகமாக  இலையை வெடுக்கெனப் பிடுங்க வந்து அவன் கை விரலைக் கௌவியது. உடனே பக்கத்திருந்த சேவகர் வந்து மானிடமிருந்து அவன் கையை விடுவித்தார். பயத்தில் பீட்டர், பக்கத்தில் இருந்த அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். அதற்குப் பிறகு அவன் பெற்றோரை விட்டு தூரத்திலிருந்தே எல்லா மிருகங்களையும் பார்த்து மகிழ்ந்தான்.

பிள்ளைகளின் ஆசைக்கு அளவே இருக்காது. கடைக்கு அழைத்துச் சென்றால் பார்க்கின்ற பொருட்களையெல்லாம் வாங்கித் தரச் சொல்வார்கள். விலை மிகுந்த விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தரச் சொல்லி அடம் பிடிப்பார்கள். ஆனால் அதை வீட்டிற்கு எடுத்து வந்து ஓரிரு  நாட்கள் விளையாடிய பிறகு அதன் கவர்ச்சி கரைந்துபோய் ஏதாவது ஒரு மூலையில் முடங்கிப் போய் விடும்.

கவர்ச்சியான விஷயங்களில்தான் சூழ்ச்சியும் மறைந்திருக்கும். வெளுத்ததெல்லாம் பால் என்ற எண்ணம் மிளிர்ந்திருக்கும். பிள்ளைகளுக்கு எது தேவை அதன் பயன் என்ன என்பதையும் எது நல்லது எது கெட்டது என்பதையும் பெற்றோர்கள் தான் சொல்லித் தர வேண்டும். அடம் பிடித்து அழுவது அவர்களுக்கு வாடிக்கை. அதைப் பார்ப்பது நமக்கு வேடிக்கைதான். ஆனாலும் அதை அடக்கி ஆள்வது நமது கடமை. அவர்கள் வழியில் நாமும் சென்றால் அதனால் வரும் விளைவுகளை நாம்தான் அனுபவிக்க வேண்டும்.

சமீபத்தில் நடந்த தேர்தல் திருவிழாவில் கவர்ச்சியைப் பார்த்து மயங்கிப்போன பிள்ளைகள் கொடுத்த தொல்லை தாங்காமல் படித்தவர்களும் அறிவு ஜீவிகளும் மயங்கி, தங்கள் புத்தியை இழந்து,  எடுத்த முடிவினை நம்மால் இப்போது ஜீரணிக்கவே முடியவில்லை.

பிள்ளைகள் அப்படித்தான் இருப்பார்கள். இக்காலத்தில் அவர்களைத் திசைத் திருப்ப பல ஆயிரம் வசதிகள் வந்து விட்டன. கவர்ச்சிக் கனவில் அவர்களை மூழ்கடிக்கும் கச்சிதமான வேலையைக் கவனமாகச் செய்வதில் கை பேசிக்கு ஈடு இணையே இல்லை.

இருப்பதை இல்லை என்றும் இல்லாததை இருப்பதாகக் காட்டுவதும் கைபேசிக்குக் கை வந்த கலை. அது தன் பணியைக்  கச்சிதமாகச் செய்து வருகின்றது. அதை நம்பி விட்டில்பூச்சி போல விடலைப் பிள்ளைகள்  தங்களை அறியாமலேயே அந்த மாயவலையில் விழுந்து மடிந்து போகின்றார்கள்.

எவரை, எப்போது, எப்படி விழுங்கலாம் என்று தேடித் திரியும் கூட்டம் கைபேசி மூலம் அவர்களைக் கவர்ச்சி வலையில் வீழ்த்தி அவர்களது கவர்ச்சிக் கனவிற்கு உரமிட்டு, உயிர் கொடுத்து அவர்களை மழுங்கடிப்பதைப் பார்க்கும்போது  மனசு மிகுந்த  வேதனை அடைகின்றது.

அத்தனைய வலையில் விழும் பிள்ளைகள்  தாங்கள் திசை மாறுவது மட்டுமல்லாமல் தன் குடும்பத்தினரையும் திசை மாற்றி அதனால் வரும் விளைவுகளைப் பார்க்கும் பெரியவர்கள்  ஐயோ தெரிந்தே தவறு செய்து விட்டோமே என்று புலம்ப வைக்கின்றார்கள்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் நமக்கு படிப்பு இருந்த போதிலும் எவ்வளவோ அனுபவம் இருந்தபோதிலும், நம்மை அறியாமலேயே நமது பிள்ளைகளின் தொந்தரவினால் நம்மால் சரியான முடிவு எடுக்க முடியாமல் நாமே அதில் முடங்கிப் போவதைப் பார்க்க முடிகின்றது.   

இனிவரும் காலங்களிலாவது பெற்றோர்களும் பெரியவர்களும் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று சிந்தித்து, சிறப்பான முடிவு எடுத்து, அவர்களின் அறியாமையை அகற்றி, அவர்களின் கவர்ச்சிக் கனவுகளைக் களைந்து, அவர்களைச் சிறப்பான முறையில் வளர்ப்பது வீட்டிற்கும் நல்லது இந்த நாட்டிற்கும் நல்லது.

நான் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மோசஸ். பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் மனிதவளத் துறையில் மேலாளராகப் பணியாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளாக வாரந்தோறும் சிறுகதைகள் எழுதி, புதுச்சேரியிலிருந்து வரும் வார இதழில் வெளியிட்டு வருகிறேன். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சென்னை மற்றும் மைலாப்பூர் பேராயரிடமிருந்து எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளேன். ஆரோவில் ஐடிஐயில் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளேன். தேரி உயர்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *