கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 8, 2024
பார்வையிட்டோர்: 2,381 
 
 

(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தக் காலத்தில் வேடர்கள் தனித் தனியான கூட்டங் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒவ்வொரு தலைவன் உண்டு. அவனை அவர்கள் வேட அரசன் என்று கூப்பிடுவார்கள். அவன் ஆணைப்படி மற்ற வேடர்கள் நடப்பார்கள். வேட்டைக்குப் புறப்பட்டுப் போகும் போது அவன் முன்னே நடக்க அவன் பின் மற்றவர்கள் நடந்து செல்வார்கள். அவன் எங்கு சென்றாலும், அவனை இரண்டு வேடர்கள் தொடர்ந்து செல் வார்கள். வேடர்களுக்கு அவன் தலைவனாயிருந்தாலும், நகரத்தில் உள்ள அரசர்களுக்குக் கட்டுப்பட்டவன் தான். காட்டில் விளையும் பொருள்களில் ஒரு பகுதியை அவன் நகரத்தையாளும் அரசனுக்குக் கப்பமாகக் கட்டவேண்டும். இன்னும் வில் வளைக்க, அரசன் படையில் உள்ளவர்களுக்கு அவன் தன் ஆட்களை அனுப்பிச் சொல்லித்தர வேண்டும். இது போல் காட்டரசர்களுக்கும் நாட்டரசர்களுக்கும் ஒரு வகையான ஒப்பந்தம் இருந்து வந்தது. 

கொல்லிமலைக் காட்டில் இது போல் ஒரு வேடர் கூட்டம் இருந்து வந்தது. அக்கூட்டத் தலைவனுக்கு ஒரு மகன் இருந்தான். அவீனுக்கு நம்பி என்று பெயர். நம்பி எப்பொழுதும் காடுகளைச் சுற்றிக் கொண்டு திரிவான். அவன் கையில் வில்லும் அம்பும் எப்பொழுதும் தயாராக நாணேற்றிய படிஇருக்கும். குடிசைக்கு வராமலே அவன் பல நாட்கள் காடுகளைச் சுற்றுவான். அப்பொழுது கணக்கில்லாத மிருகங்களைக் கொன்று குவிப்பான். மலைகளின் மீது ஏறி இறங்குவது அவனுக்கொரு விளையாட்டு. நம்பி, வேடர் தலைவனுக்கு ஒரே மகனாகையால், அவன் விருப்பப்படி தனியாகச் சுற்ற விட்டிருந்தான். அவனை என்ன குற்றம் செய்தாலும் கண்டிக்கவே மாட்டான். அவ்வளவு உரிமை யளித்திருந்தான். மற்ற வேடர்களும் அவன் தங்கள் தலைவர் மகன் என்று அவன் செய்யும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுவார்கள். 

சில சமயங்களில் அவன் புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மரத்திலிருந்தபடி வேடர்களுக்கு மத்தியில் குதிப் பான். ‘அவர்கள் எங்கிருந்தோ புலிபாய்கிறது என்று எண்ணிப்பயந்து பதைபதைத்துச் சிதறி ஓடுவார்கள். உடனே புலித்தோலை நீக்கிவிட்டு வெளியில் வந்து சிரிப்பான். இப்படிப் பல வேடிக்கைகள் செய்துகொண்டே அவன் தன் வாழ்க்கையை இன்பமாகச் செலுத்தி வந்தான். 

ஒரு நாள் நம்பி, ஒரு மரத்தின் மேல் ஏறிப் பழம் பறித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது கீழே ஒரு குதிரை நிற்பதைப்பார்த்தான். குதிரையில் வந்த ஆள் அதை மரத் தடியில் கட்டிவிட்டு எதற்காகவோ இறங்கி நடந்து கொண்டி ருந்தான். நம்பி மரத்தைவிட்டுக் கீழே இறங்கினான் குதிரையை அவிழ்த்து அதன் முதுகில் ஏறிக்கொண்டு கிளம் பினான். அது பாண்டிய மன்னனின் குதிரை அவனுடைய படை வீரர்கள், சிறிது தூரத்தில் தங்கியிருந்தார்கள். எல்லோரும் காட்டில் வேட்டையாடுவதற்காக வந்திருந்தார்கள். பாண்டியனுடைய குதிரை பஞ்சாய்ப் பறப்பதைக் கண்ட வீரர்கள், அரசன் தான் ஏதோ கொடிய மிருகத்தை விரட்டிச் செல்கிறான் என்று எண்ணி அந்தக் குதிரையைத் தொடர்ந்து தங்கள் குதிரைகளையும் தட்டி விட்டார்கள். நம்பியும் குதிரையும் சென்ற வழியில் பாண்டியன் படைவீரர் அனைவரும் பறந்து விட்டார்கள். 

குளத்தில் நீர் அருந்துவதற்காகச் சென்ற பாண்டியன் குதிரைகள் கிளம்பும் சத்தத்தைக் கேட்டுத் திரும்பி வந்தான். அங்கே தன் குதிரையையும், படை வீரர்களையும் காண வில்லை. எதற்காகத் தன்னைவிட்டு அனைவரும் கிளம்பி விட்டார்கள் என்பதும், தன் குதிரையை யார் எதற்காகக் கொண்டு சென்றார்கள் என்பதும், அவனுக்குப் புரியவில்லை. கால் நடையாக ஊருக்குள் போவதற்கு அவனுடைய உயர் தன்மை இடங்கொடுக்க வில்லை. என்ன செய்வதென்று புரியாமல், வேடர் தலைவன் தங்கியிருந்த குடிசை நோக்கி நடந்தான்.. 

இதற்கிடையில், நம்பியை அரசனென்று நினைத்துப் பின் தொடர்ந்த வீரர்கள், அந்தக் குதிரையின் வேகத்தைப்பிடிக்க முடியாமல் பின் தங்கி விட்டார்கள். விரட்டிய ஆட்கள் நின்று விட்ட பிறகு நம்பி, வேறு வழியாகக் குதிரையைத் திருப்பித் தன் குடிசை நோக்கித் தட்டினான். வீரர்கள், எவ்வளவோ நேரம், ஓரிடத்தில் காத்திருந்தும், அரசன் திரும்பி வராததால் அடுத்த நாட் காலை நகர் நோக்கிக் கிளம்பி விட்டார்கள். 

நம்பி குதிரையை ஓரு மரத்தில் கட்டிவிட்டுத் தன் குடிசைக்கு வந்தான். அங்கே, பாண்டியனும், வேடர் தலைவனும் உட்கார்ந்திருந்தார்கள். அங்கே வந்த நம்பி! ”அப்பா! இன்று காலையில் மாமரத்தடியில் ஒரு குதிரை நின்றது. அதைப் பிடித்துக்கொண்டு, சவாரிக்குக் கிளம் பினேன். அந்தக் குதிரைக்காரன், அவனுடைய ஆட்களை விட்டு விரட்டினான். நான் அகப்படவே இல்லையப்பா.” என்று தன் திறமையைக் கூறினான். “ஏண்டா, அரசருடைய குதிரையை, ஆணையில்லாமல் சவாரிக்குக்கொண்டு போகலாமா?’ என்று அதட்டினான் வேடத் தலைவன். அவன் உடனே பாண்டியனைப் பார்த்து, “ஏனையா, நீரே சொல்லும், சவாரி செய்து பார்த்தால் என்ன குறைந்து விடும். இதற்கெல்லாம், உத்தரவு கேட்டால் நடக்குமா?” என்று தட்டிக் கேட்டான். பாண்டியனுக்கு ஒருபுறம் கோபமும், ஒருபுறம் வருத்தமுமாக இருந்தது. அவன் வேடர் தலைவனை முறைத்துப் பார்த்தான். உடனே வேடர் தலைவன், “டே நம்பி,எட்ட நின்று பேசு! அரசரிடம் இப்படித்தான் பேசுவதா?” என்று அதட்டினான். உடனே நம்பி, ஓகோ இவர்தான் பாண்டியரா? ஏனையா நீர் ஐநூறு குதிரை வைத்திருக்கிறீரே, இந்தக் குதிரையை எனக்குத் தந்துவிடும். இது மிக அருமையான குதிரை. என் சவாரிக்கு ஏற்ற குதிரை ! நானே வைத்துக் கொள்கிறேன். சரிதானே?” என்று கேட்டான். அரசன் என்று தெரிந்த பிறகும் சிறிது கூட அஞ்சாமற் பேசும், நம்பியின் மீது பாண்டியனுக்கு ஒரு வகையான அன்பு பிறந்தது. சரி நாளைக்கு வேறு குதிரை யனுப்புகிறேன். இப்பொழுது இந்தக் குதிரையைக் கொடு, நான் ஊர் போக வேண்டும். என்று கெஞ்சினான். “இந்தக் குதிரைதான் பாண்டியரே நல்ல குதிரை. இதை நாளையனுப்புவதானால் இன்று தருகிறேன். இல்லாவிட்டால் கிடையாது” என்று சொல்லி விட்டான் நம்பி! “சரி” யென்று சொல்வதைத் தவிரப் பாண்டியனால் அப்பொழுது வேறொன்றும் செய்ய முடிய வில்லை. கடைசியில் குதிரையை வாங்கிக்கொண்டு அரண்மனை போய்ச் சேர்ந்தான். அடுத்த நாள் பாண்டியன் அரண்மனையிலிருந்து ஒரு வீரன் வந்து குதிரையைக் கொடுத்து விட்டுப் போனான். அது முதல் அந்தக் குதிரையுடன் காடு மேடு சுற்றுவதே தொழிலாகக் கொண்டான் நம்பி ! 

ஒரு நாள் கொல்லிமலையைச் சுற்றிக்கொண்டு வந்தான் தம்பி ! ஓரிடத்தில் மலைச்சாரலில் ஏதோ மனிதர்கள் பேசும் அரவங்கேட்டது. சட்டென்று தன் குதிரையை நிறுத்தி ஒரு புதருக்குப் பின் கட்டிவிட்டு மரத்தின் மேல் ஏறி நின்று பார்த்தான். மலைச் சாரலில் ஓரிடத்தில் மூன்று ஆசாமிகள் கூடி நிற்பதும், ஒருவன், மலைக்குக் கீழ் அடிக்கடி போய் வருவதும் போலத் தோன்றியது. மலைக்குக் கீழ் எப்படி போய்வர முடியும் என்று அவனுக்குப் புரிய வில்லை. அன்று முதல் தினமும் அதே நேரத்திற்கு அங்கே வருவான். மரத் தின் மேல் ஏறுவான்: அந்த மூன்று பேரும் பேசிக் கொள் வதைப் பார்ப்பான். பிறகு போய்விடுவான். இப்படியாகப் பல நாட்கள் சென்றன. 

ஒரு நாள் அவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்து விட்டுச் சென்ற பிறகு, அங்கே ஏன் கூடிப் பேசுகிறார்கள், அந்த இடத்தில் அப்படி என்ன இருக்கிறது,என்று தெரிந்து கொள்வதற்காக, மெதுவாக அந்த இடத்தை நோக்கி நடந் தான்.அந்த இடத்தைச்சுற்றி ஒரே புற்றும் புதரும் செடியும் கொடியும், மரமுமாக வளர்ந்திருந்தது. வெளியில் நின்று கொண்டு பார்த்தால் சாதாரணமாக அந்த இடம் யார் கண் ணுக்கும் தெரியாது. அந்த இடத்தைச் சுற்றிச்சுற்றி நன்றாகக் கவனித்தான் நம்பி; மலையியின் நடுவில் ஒரு பாறை துண்டாக இருப்பதுபோல் தெரிந்தது, அதற்குச் சற்றுத் தூரத்தில் ஏதோ ஒன்று மின்னிக்கொண்டு கிடந்தது. போய் அதை யெடுத்துப் பார்த்தான், வைரக் கற்கள் பதித்த தங்கச் சங்கிலி அது. நல்லவேலைப் பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சரி, மீதியை நாளைக்குப் பார்த்துக்கொள்ளுவோம் என்று அதை எடுத்துக்கொண்டு திரும்பி வந்துவிட்டான். அவ னுக்கு அந்த மூன்று ஆட்களைப் பற்றியும் விவரமாகத்தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஒரு ஆசை யுண்டாகியது. 

அதன் பிறகு மறுநாள் மறுபடி வந்து பார்த்தான், அன்று அவர்கள் வருவதற்கு முன்பே அந்த இடத்தில் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு நின்றான். அந்த மூன்று ஆசாமி களும் வந்தார்கள், அவர்களில் ஒருவன்தான் தமிழன். மற்ற வர்கள் இரண்டுபேரும் தலையைத் திட்டுத் திட்டாக வழித்து, முடியிருக்கும் இடத்தில் இரண்டு சடைகள் பின்னித் தொங்க விட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மங்கோலியர்கள், அவர்கள் மூவரும் வந்து மங்கோலிய மொழியில் ஏதேதோ பேசிக் கொண்டார்கள். அதெல்லாம் நம்பிக்குப் புரியவில்லை. ஆகையால் அவர்கள் செயல் ஒவ்வொன்றையும் ஊன்றிக் கவனித்தான். நெடுநேரம் ஏதேதோ பேசிக்கொண்டிருந்து விட்டு, அந்த மங்கோலியர்களில் ஒருவன், தனியாக நின்ற பாறாங்கல்லின் அடியில் எதையோ அழுத்தினான். மற்றொரு ஆள் அதை மெதுவாகச் சாய்த்தான். பிறகு மூவரும் உள்ளே சென்றார்கள். உள்ளே என்ன செய்தார்களோ தெரியவில்லை. சிறிது நேரம் சென்றபிறகு மூவரும் வெளியில் வந்தார்கள். மங்கோலியர் இருவர் கையிலும் தங்கப் பாளங்கள் மின்னின. அவற்றை மடியில் கட்டிக்கொண்டனர். பிறகு எல்லோரும் நடந்தனர். தூரத்தில் ஒரு கால்வாய் இருந்தது. அதில் அப்பொழுது தண்ணீர் கிடையாது. அதில் இறங்கி அந்தக் கால்வாய் ஓடிய திசையில் நடந்து சென்றார்கள். நம்பி, திரும்பிப்போய்க் குதிரை மீது ஏறிக்கொண்டான். அந்தக் கால்வாய்க்குச் சிறிது தூரத்தில் அதையொட்டியவாறே குதி ரையை நடத்திக்கொண்டு பறந்தான். 

அந்தக் கால்வாய் ஒரு ஆற்றங் கரையில் போய்முடிந்தது அந்த இடத்தில் ஒரு மரத்தடியில் மறைவாகக் குதிரையைக் கட்டிவிட்டு ஒரு மரத்தின்மேல் ஏறி உட்கார்ந்துகொண்டான். கால்வாய் வழியாக நடந்துவந்த ஆட்கள் ஆற்றங்கரை வந்த தும் வணக்கம்கூறிக் கொண்டார்கள் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆள் கரை வழியாகவே மேற்கு நோக்கி நடந்தான். மற்ற இருவரும் அங்கு கட்டிவைத்திருந்த படகை அவிழ்த்துக் கொண்டு புறப்பட்டனர். படகு ஆற்றில் மேற்கு நோக்கி அதன் போக்கில் சென்றது. சிறிது தூரம் சென்றவுடன் அதில் இருந்த ஒரு மங்கோலியன் நம்பி – யிருந்த மரத்தைச் சுட்டிக் காட்டி என்னவோ சொன்னான், அவனும் திரும்பிப் பார்த்து விட்டு ஏதோ பேசிக்கொண்டான். நம்பி அவர்கள் சென்ற திக்கையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மங்கோலியர் இருவரும் தான் அவர்களைக் கவனித்ததைக் கண்டுகொண்டு விட்டார்கள் என்பதை நம்பி உணரவில்லை. பிறகு இறங்கிக் குதிரையைத் தமிழ் ஆசாமிபோன திசையில் தட்டிவிட்டான். வெகு தூரம் போயும் அவனால் ஒன்றும் கண்டு பிடிக்க முடிய வில்லை. பிறகு மனம் சலித்தவனாக வீடு திரும்பினான். அடுத்த நாள் காலையில் எழுந்த உடன் குதிரைமீது ஏறிக்கொண்டு, வழக்கம்போல் அந்த மூன்று பேர் சந்திக்கும் இடத்திற்கு வந் தான். மரத்தின்மேல் ஏறிக் கீழ் நோக்கினான், அந்தத் தமிழ் ஆசாமிமட்டும் அங்கே நின்று கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அவன் மலைக்குக் கீழே மறைவதுபோல் தோன்றியது, 

தம்பி மரத்தைவிட்டுக் கீழே இறங்கினான். மறைந்து மறைந்து அந்த இடத்திற்குப் போய் மரத்தின் பின் ஒளிந்து கொண்டு, நடப்பதைக் கவனித்தான். தமிழ் ஆசாமி ஒரு ஆளே. கீழே உள்ள ஒரு கல்லைக் காலால் அழுத்தி மேலே உள்ள பாறாங்கல்லை நிமிர்த்தி அந்த இடை வெளியை மூடினான், பிறகு அவன் அந்தக் கால்வாயை நோக்கி நடந்தான். 

அவன் சென்ற பிறகு தம்பி மெதுவாக வெளியில் வந் தான். சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்துக் கொண்டான். அந்த அடியில் இருந்த கல்லை அழுத்திக்கொண்டு, மேலே யிருந்த பாறாங்கல்லைப் புரட்டினான். உள்ளே ஒரே இருட்டாக இருந்தது. கொஞ்ச தூரம் தட்டித் தடவியபடி நடந்து சென் றான். பிறகு எங்கிருந்தோ வெளிச்சம் வந்தது. அந்தக் குகை முழுவதும் தகதகவென்று ஒளிவீசியது. அங்கு குவிந்திருந்த தெல்லாம், தங்கம், வெள்ளி, வைரம் முதலிய விலையுயர்ந்த பொருள்கள். அவற்றில் சிறிது சிறிது அள்ளித் தன் வேட்டி யில் மடிகட்டிக்கொண்டான். விறுவிறுவென்று வெளியில் வந் தான். நேராகக் குதிரையேறித் தன் குடிசைக்குப் புறப் பட்டான். 

அப்படிப் புறப்பட்டுப் போனவன் அந்தப் பாறையை மூடி வைக்காமல் போய்விட்டான். அதன் பிறகு அன்று மாலையில் சந்தித்த மூன்று ஆசாமிகளும் யாரோ, தங்களைக் கண்டு பிடித்துவிட்டார்கள் என்பதைத் தெரிந்துகொண்டார்கள். அதற்குத் தகுந்தபடி ஏற்பாடு செய்துகொள்ளத் திட்டமிட் டார்கள். அடுத்தநாள் காலையிலிருந்து மூன்று பேரும் மரங் களுக்குப் பின்னால் ஒளிந்திருந்து. அங்கு வரும் ஆளைப் பிடித்துவிடுவது என்று திட்டமிட்டுக்கொண்டார்கள். 

நேராகத்தன் குடிசை சென்ற நம்பி, அங்கே தன் அப்பா இல்லாத படியால் மறுபடியும் மனம்போன போக்கில் குதிரை யைத் தட்டிவிட்டான், கடைசியில் நகரத்தின் அருகில் வந்து விட்டான்.போய்ப் பாண்டியமன்னனிடம் இந்தச் செய்தியைக் கூற வேண்டுமென்று தோன்றியது. நேராக அரண்மனைக்குச் சென்றான். 

வாயிலில் நின்ற காவலரிடம் அரசரை நம்பி பார்க்க வேண்டும்’ என்று சொல்லுங்கள்! என்றான், “”இப்பொழுது யாரும் பார்க்கமுடியாது. நாளை வர” என்று மறுத்தனர். “என்னுடைய அரசரை நான் விரும்பிய போது பார்க்க முடியாதா?” என்று கேட்டபடி வேகமாக உள்ளே நுழைந் நான் நம்பி. காவலர்கள் ஓடிவந்து அவனைப் பிடித்துக் கொண்டார்கள். அரசனை உடனே பார்க்க வேண்டும் என்றி ருந்த நம்பிக்கு இது பெரிய தடையாகப் பட்டது. அவர்களை உதறித் தள்ளிவிட்டு உள்ளே ஓடினான், அப்பொழுது என்ன சத்தம் என்று கவனிப்பதற்காக ஒரு அறையிலிருந்து எட்டிப் பார்த்த அரசர், நம்பியைப் பார்த்ததும், மகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டார். “அவசரமாகப் பார்க்க வந்தால் இந்த முட்டாள்கள் தடுத்து விட்டார்கள். சண்டை செய்யவேண்டி வந்துவிட்டது அரசே என்று நம்பி தன் வருத்தத்தைக் கூறினான். பாண்டியன் தலையசைத்தவுடன் அந்த வீரர்கள் அகன்று விட்டனர். பிறகு ” என்ன அவசர வேலையாக வந் தாய்? உனக்கென்ன வேண்டும்?” என்று அன்போடு கேட்டான் பாண்டியன். நம்பி,” எனக்கொன்றும் வேண் டாம். உங்களுக்குத் தான் ஒன்று கொண்டுவந்திருக்கிறேன் என்று மடி கொண்ட மட்டும் கட்டி வைத்திருந்த, வெள்ளி வைரம் தங்கத்தால் ஆனபொருள்களை எதிரில் கொட்டினான். ”நம்பி,இதெல்லாம் ஏது ?” என்று அதட்டிய குரலில் கேட் டான் அரசன், “ஓரிடத்தில் திருடிக் கொண்டு வந்தேன். அதைத் தங்களிடம் கொடுக்க வெண்டுமென்று காட்டி லிருந்து அவசரமாகப் புறப்பட்டு வத்தேன் அரசே! என்றான் நம்பி. 

பாண்டியனின் முகம் கறுத்தது. அவன் மனதில் சுழன்ற எண்ணங்கள் நம்பிக்கு எப்படித்தெரியும்? அவையெல்லாம் பாண்டியனுடைய பொருள்கள். அவை எப்படி நம்பிகைக்கு வந்தன என்று அவன் தெரிந்து கொள்ள நினைக்கவில்லை. ஆனால், மிகத்திறமையாக நம்பியே அவற்றைத் திருடிவிட்டுத் தன் திறமையை அரசனிடமே எடுத்துக்காட்ட நினைத்து விட்டான் என்று தான் பாண்டியன் நினைத்துக் கொண்டான். இப்படி நினைத்தவுடன் அவன் கண்கள் சிவந்து சுழன்றன. அங்கிருந்த ம ணியை ஓங்கியடித்தான். அந்தப் பழைய காவவர் இருவரும் வந்தார்கள். “நம்பி? நீ தீயோடு விளை யாடுகிறாய். உனக்கு இது விளையாட்டாக இருக்கலாம். ஆனால் தீ சுட மறந்துவிடாது” என்று சொல்லிவிட்டுக் காவலர்களே, நம்பியைச் சிறையில் வையுங்கள்” என்றான். நம்பிக்கு ஒன்றும் புரியவில்லை. ”அரசே எதற்காக என்னைச் சிறையில் வைக்கிறீர்கள்?” என்று கேட்டான். “எல்லாம் நாளைக்குப் புரியும் ” என்று கூறிவிட்டுப் பாண்டியன் போய்விட்டான். 

பாண்டியன் வேடர் தலைவனுக்குச் செய்தி அனுப்பினான். அவன் வந்து சிறையுள்ளே ஆத்திரத்தோடு ஒன்றும் புரியா மல் நின்றுகொண்டிருந்த நம்பியைப் பார்த்தான். “டே! நம்பி, அரசர் கோபப்படும்படி ஏன் நடந்துகொண்டாய்? என்று கேட்டான். நம்பி நடந்த விஷயத்தை எல்லாம் வரி சையாகச் சொன்னான். உடனே வேடர் தலைவன் பாண்டிய னிடம் போய்க் காட்டில் குகையிருப்பதைப் பற்றிக் கூறினான். 

பாண்டியன் தன் முன் கோபத்திற்கு வருந்தி, நம்பியை விடுவித்து. நம்பி, என் முன் கோபத்தால் இப்படி நேர்ந்து விட்டது. இதை நீ மனதில் போட்டுக் கொள்ளாதே ” என் றான். ” அரசே. தீ அணைக்க வருபவனையும் சுடுகிறது. ஏற்ற வருபவனையும் தான் சுடுகிறது அதற்காக அதன்மேல் கோபங்கொள்ளலாமா?” என்றான். பாண்டியனுக்குச் சுருக்கென்றது. 

பிறகு பாண்டியனும், வேடர் தலைவனும் 50 வீரர்களும், நம்பி வழி காட்ட அந்தக் குகையை நோக்கிச் சென்றார்கள், குகையின் அருகில் வந்தவுடன் எல்லோரும் மரங்களின் பின் மறைந்து கொண்டார்கள்.நெடு நேரம் வரை யாருமே வர வில்லை. உண்மையில் அந்த மூன்று ஆசாமிகளும் வந்திருந் தார்கள். யாரும் குகைக்கு வருகிறார்களா என்று பார்ப்பதற் காக அவர்களும் ஒளிந்து கொண்டிருந்தார்கள். கடைசியாகப் பொறுமை. இழந்து விட்ட நம்பி மரத்தைவிட்டு வெளியில் வந்து நேராகக் குகைச்கெதிரில் சென்று பாறையைப் புரட்டி னான். அப்பொழுது திடீரென்று அந்த மூன்று பேரும் பாய்ந்து வந்து நம்பியைப் பிடித்துக் கொண்டார்கள். இதைக் கண் டவுடன், பாண்டியனும் வேடர் தலைவனும், வீரர்களும் மறைந்திருந்த மரங்களினின்றும் வெளிக்கிளம்பி அவர்கள் மூவரையும் சூழ்ந்து கொண்டார்கள். அந்த மூன்று ஆசாமி களுக்கும் மனம்’ ‘திக்திக்’ என்று அடித்துக்கொண்டது. வீரர்கள் அந்த ஆசாமிகளைக் கைது செய்தார்கள். பாண்டியன் குகைக்குள் சென்று பார்த்தான். தன், நகரத்தில் களவு போன பொருள்கள், அரண்மனைப் பொருள்கள், இன்னும் யாராருடைய பொருள்களோ குவிந்திருந்தன. ‘திரும்பி வந்து இந்த மூன்று ஆசாமிகளையும் பார்த்தான் பாண்டியன். 

அவர்கள் மூவருமே அவனுக்குத் தெரிந்தவர்கள்தான். தமிழ் நாட்டு ஆசாமி, ஒரு பெரிய பணக்காரன். அரசர் குலத்திற்கு மிகவும் வேண்டியவன். ஆனால் அவனுடைய பண ஆசைதான் இத்தனை பொருள்களையும் திருடிக்குவித்து வைக்கத் தூண்டியிருக்கின்றது. அந்த மங்கோலியர்கள் இருவரும், வட நாட்டிலிருந்து பாண்டி நாட்டுக்குப் பிழைக்க வந்தவர்கள். அவர்கள் அந்தப் பணக்காரன் வீட்டில் வேலைக்கமர்ந்தார்கள். கடைசியாகத் தாங்கள் கொள்ளை யடிக்கும் திறமையைக்காட்டவே, பணக்காரன் அவர்கள் உதவியால் கொள்ளையடிக்கத் தொடங்கினான். பொருள்களில் அவர்களுக்கும் அவ்வப்போது கொள்ளையடித்துக் கொடுத்த தற்குக் கூலியாகக் கொடுத்து வந்தான். 

பாண்டிய நாட்டில் பல நாட்களாக நடைபெற்றுவந்த இந்த மாயக் கொள்ளையைப் பாண்டின் இன்றுதான் கண்டு பிடித்தான். அவர்களை அரண்மனைக்கு அழைத்துப்போய்ச் சிறையில் அடைக்கும்படி வீரர்களுக்குக் கட்டளையிட்டான். அங்கிருந்த பொருள்களையெல்லாம் அரண்மனைக்குக் கொண்டுவரச் செய்தான். 

பொருளைக் காணவில்லை என்று முன் முறையிட்ட குடி மக்களை அழைத்து அவரவர்கள் பொருளைக் கொடுத்து விட் டான். தன் அரண்மனைப் பொருள்கள் எப்படித் திருட்டுப் போயின என்பது இன்னும் அவனுக்குப் புரியவில்லை. அந்த லிமங்கோய ஆசாமிகள் அந்த முறையைச் சொல்ல மறுத்து விட்டனர், செத்தாலும் சொல்ல மாட்டோம் என்று கூறி விட்டார்கள். 

நம்பி, இந்தத் துப்புத் துலக்கியத்திற்கு நன்றியாக அவ னுக்கு அரண்மனைப் படையிலேயே ஒரு பெரியவேலை கொடுத்தான் பாண்டியன். வேடர் தலைவன் உள்ளம் பூரித்துப் போனான். நம்பியும் மகிழ்ச்சியுடன், “நான் பிறந்த நாட்டுக்கும். என் அரசர்க்கும் என்னாலான நன்மைகளைச் செய்வேன்” என்றான். 

அன்று நம்பியும் பாண்டிய மன்னனும் பல்லக்கேறி ஊர் வலம் வந்தார்கள். 

மிகத் திறமையாகத் திருடியவர்களைக் கண்டுபிடித்துப் பொருளைத் திருப்பித் தந்த நம்பியை மக்கள் வாயார வாழ்த் தினார்கள். தனி ஆளாக நின்று, அந்தக் குகைக் கள்வர்களைப் பிடிக்க வழிகண்ட நம்பியை எல்லோரும் பாராட்டினார்கள். 

அன்று முதல் பாண்டிய நாட்டில் களவு அற்றுப் போய் விட்டது. மக்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

– கள்வர் குகை, முதற் பதிப்பு: 1987, கலைப் பிரசுரம் வெளியீடு, தேவகோட்டை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *