கள்ளிப்பாலும் கண்ணீரும்!





அவள் வீட்டில் எல்லோரும் கூடியிருந்தார்கள். அவளுக்கு பெண் குழந்தை பிறந்து இருந்தது. அளவு கடந்த மகிழ்ச்சியில் அவள் இருந்தாள். அவை எல்லாமே அவளுக்கு ஒரு சிற்றின்பம் தான். ஏனென்றால் அந்த ஊர் வழக்கம் அது! அங்கே எல்லாம் மயான அமைதியாக இருந்தது.

எல்லோரும் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவள் சோகமாகவே அமர்ந்திருந்தாள். பத்து மாதம் பெற்றெடுத்த வலி அவளுக்கு மட்டும் தானே தெரியும்! கையில் கள்ளிப்பால் உடன் வீட்டிற்கு வந்தாள் பூவாயி பாட்டி.
குழந்தையை கையில் வாங்கிக் கொண்டு குழந்தைக்கு தாலாட்டு பாடினாள்.
“ஆராரோ நீ கேட்க ஆயுசு உனக்கு இல்லையடி!
விதை நெல்ல நான் அரிக்க விதி வந்து சேர்ந்ததடி!
தாய்ப்பாலு நீ குடிக்க தலையெழுத்து இல்லையடி!
கள்ளிப்பால நீ குடிச்சு கண்ணுறங்கு நல்லபடி!
அடுத்த ஒரு ஜென்மத்துல ஆம்பளையா நீ பொறந்தா!
பூமியில இடம் கிடைக்கும் போய் வாடி அன்னக்கிளி……
பூமியில இடம் கிடைக்கும் போய் வாடி அன்னக்கிளி…..
போய் வாடி அன்னக்கிளி….”
என்று அந்த கள்ளிப்பாலை குழந்தைக்கு ஊட்டினாள் அந்த பாட்டி!
குழந்தை அந்த கள்ளிப்பாலை குடிக்க முடியாமல் வாயில் கொப்பளித்து வெளியே தள்ளியது. ஒரு வழியாக சங்கில் அந்த குழந்தைக்கு பாலை கொடுத்து விட்டாள் அந்த பாட்டி. அழுது கொண்டிருந்த அந்த குழந்தையின் குரல் மெல்ல தாழ்ந்தது…
உயிர் பிரிந்தது…
கருப்பாயி பாட்டியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது….
அவள் முகம் வாடி கண்ணீர் குளங்கள் ஆகிப் போனது. அழுது புரண்டாலும் ஊர் வழக்கம் என்ன செய்ய முடியும்?
பெண் குழந்தை பிறந்தால் காதுகுத்து, சடங்கு ,கல்யாணம் போன்ற பல நிகழ்வுகளுக்கு செலவுகள் ஏற்படும் என்று சிறுவயதிலேயே கொல்லும் வழக்கம் அந்த ஊரில் இருந்தது.
அந்த குழந்தைக்கு தொட்டில் கட்டி சுடுகாட்டிற்கு சுமந்து சென்றனர்.
காலங்கள் கடந்தன…
சில நாட்களுக்கு பிறகு அந்தப் பெண்ணுக்கு ஒரு பட்டம் கொடுத்தார்கள் “மலடி” என்று…
– நீரோடை மின்னிதழ் ஜனவரி 2024