கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் (இலங்கை)
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 11, 2025
பார்வையிட்டோர்: 4,247 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கலியாண முருங்கை. இலை கொள்ளாமல் நூல் இழுத்திருந்தது. நூற்றுக் கணக்கில் காய்கள். நுனிக்கிளை வரை வெண்ணுரையாய்ப் பூக்கள். அவையும் இன்றும் நாளையும் நூலிழுத்து விடும். அப்புறம் மரங்களே தெரியாமல் காய்கள் காய்கள் 

பாடசாலை வளவு பூராக வேலியோரமாக அதனையே நட்டுப் பயிர் போல் ஆக்கிவிட்டேன். இந்த ஆறு வருட ஆசிரிய சேவையில் நான் மட்டுமே கற்பிக் கின்ற இந்தப் பாடசாலையில் கலியாண முருங்கையை வளர்ப்பதை ஒரு நித்திய கடமை யாகவே கொண்டிருந்தேன். 

ஊரின் வடமேற்கில் புறந் தள்ளிய கிராமப் பாடசாலை அது. சுற்றிவர மரமுந்திரிகை தோட்டங்கள். பாலாற்றில் மழை பொழிந்து வெள்ளம் பாயும்போது மட்டும் சேனைப்பயிர்கள் செய்ய கூட்டம் முண்டி அடிக்கும். மழை முடிந்து பங்குனி மாத வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியதும் கூட்டம் பனியாக அகன்று விடும். 

அப்புறம் மரமுந்திரிகை தோட்டத்துக் காவலாளிகள் சிலரும் நானும் மட்டுமே. பகலில் ஐம்பதுக்குள் மாணவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்து சேருவார்கள். வைகாசி மாதத்தில் மரமுந்திரிகை தோட்டத்தில் பழம் பறிக்கவும் கொட்டை பொறுக்கவும் என்று கொஞ்சப் பிள்ளைகள் அதில் பராக்காகி விடும். முந்திரிப் பழங்களை கடகத்தில் அடுக்கி ஊருக்குள் ரூபாய்க்கு இத்தனை யென்று விற்கக் கொண்டுபோய்விடும்…

நான் வந்த புதிதில் முந்திரிக்கொட்டை நாளிக் கணக்கில்தான் விலை. ஒரு நாளிக் கொட்டைக்கு பத்து ரூபா கொடுத்தாப் போதும். இப்போது அப்படி இல்லை. கிலோக்கணக்கு வந்து விட்டது. விலையும் ஏறிக் கொண்டது. வியாபாரிகள் சீசனக்கு வந்து மொத்தமாக வாங்கிப் போய் விடுவார்கள். ஏற்றுமதிப் பொருளாம். பணம் காய்க்கும் மரம். 

மாலை கவியும் செக்கல். பொழுது மெயின் கேற்றைச் சாத்தி விட்டு திரும்பிய போது பெண்ணின் சத்தம். 

“ஐயா உங்களிட்டதான்” 

சொப்பிங் பேக் நிறைய முந்திரிக் கொட்டைகளோடு இளவயதுப் பெண் ணொருத்தி. ஒரு கையால் முக்காட்டை இழுத்து சரி செய்து கொண்டு…. 

க்ரு “என்னம்மா இந்த நேரத்தில…. எதுக்கும் காலையில பள்ளிக்கூடம் தொடங்கியதும் வாவன் புள்ள” 

“இல்ல ஐயா…. காலையில வர ஏலாது…..அது தான் இப்ப வந்த நான். கோபிக்காதீங்க ஐயா” 

இவளை நான் இந்தப் பக்கம் கண்டதும் கிடையாது. தனியாக இருள் கவியும் நேரத்தில் – ஊரின் ஒதுக்குப்புறத்தில் அவளோடு கதை பேசுவதில் உள்ள சங்கடம் எனக்குப் புரிகிறது. 

“என்ன விசயம் புள்ள?” 

“என்ர மகள பாடசாலையில் சேர்க்கோணும்” 

“எத்தனையாம் வகுப்பு?” 

“முதலாம் வகுப்புத்தான். புதுசாச் சேர்க்கோணும்” 

“இப்ப ஐந்தாம் மாதம். முதலாம் மாசத்திலதான் புதுப் புள்ளகளெச் சேர்க்கிறது. எதுக்கும் காலையில புள்ளயக் கூட்டிட்டு வா புள்ள” 

“காலையில வர ஏலாது ஐயா” 

“ஏனம்மா” 

தயங்கித் தயங்கி வார்த்தை வருகின்றது. 

“நான் நாளைக்கு சவூதி போறன்.” 

அவளது அவசரத்திற்கு எனக்கு இப்போதுதான் காரணம் புரிகிறது. என்றாலும் அவளது மகளை பாடசாலையில் சேர்ப்பதில் எனக்கும் கடமை இருக்கின்றது. ஆனாலும் அவள் சவூதி போவதில் எனக்கு எந்த முக்கியத்துவமும் இருப்பதாகப் படவில்லை. 

“பிள்ளையிட வாப்பாவோட காலையில அனுப்பி விடம்மா.” 

எனக்கு அவளுடன் அந்த இடத்தில் நின்று தொடர்ந்து உரையாட விருப்பம் ஏற்படவில்லை. காலையில வேறு யாரோடவாவது வரட்டுமே….. 

அவள் தயங்கி நின்றாள். 

“ ஏன் வாப்பா இல்லியா?” 

“இருக்கார். ஆனா இங்க இல்ல. வெளியூர்ல…” 

“வேற யாரும் உறவுக்காரங்க இல்லியா?” 

“உம்மா இருக்காங்க. எங்கட வீடு பாலாற்றுப் பக்கம். உம்மா அவ்வளவு தூரம் நடக்கமாட்டாங்க” 

“சரி. சரி. நீங்க வராட்டா புள்ளயையாவது காலையில யார் கூடவாவது அனுப்பி வையுங்க. என்ன சரியா?” 

“சரி ஐயா. பெரிய உபகாரம்…. இதை வெச்சுக் கோங்க” சொப்பிங் பை நிறைய முந்திரிக் கொட்டை, உடைக்காதது. வேலியோரத்தில் குனிந்து வைத்து விட்டு நிமிர்கிறாள். 

“இதெல்லாம் எதுக்கம்மா. நான் இஞ்ச தனிக்கட்ட. சுடவும் தட்டவும் ஏன் சாப்பிடவும் ஆளில்லை. நான் பிரசர்காரன். எடுத்துட்டுப் போம்மா. போய் காலையில புள்ளய அனுப்புற வழியைச் செய்து முடி” 

அவள் பதிலுக்குக் காத்திராமல் வெளிக்கேற்றைப் பூட்டிவிட்டு பாடசாலை அலுவலக அறைக்குள் நுழைந்து விட்டேன். அலுவலக அறை. குவார்ட்டர்ஸ் எல்லாம் அதுதான். வகுப்பறைக் கட்டிடத்தினுள் பத்தடிக்குத் தெரித்து தனிமைப்படுத்தப்பட்டது. 

இரண்டு நாள் ஆயுளுக்குப் பிறகு இந்தப் பகுதியை எட்டிப் பார்க்கிற தினசரிகளில் மூழ்கிப் போனதில் நான் பெண்ணை மறந்து போனேன். 

அடுத்த நாள் பாடசாலை முடியும் நேரம் வரை அந்தப் பெண் வரவில்லை. பிள்ளையும் வரவில்லை. பள்ளிக்கூடம் முடிந்து சோறு சமைத்து, அதிகாலையில் ஆக்கிய கருவாட்டுக் குழம்போடு சாப்பிடக் குந்தியபோது அவள் வந்தாள், கையில் பிள்ளையையும் நடத்தியவாறு…. 

“ஏன் காலையில வரலை?….சவூதிக்குப் போறனெண்ட…. புள்ளை யையாவது அனுப்பி இருக்கலாம்.” 

அவள் கதவுக்கு வெளியே தயங்கி நின்றாள். 

“வெளிக்கிட்டுப் போன நான்தான். இடையில ஏதோ கர்த்தாலாம். வேனை மறிச்சிப் போட்டாங்க. இடையில திரும்பிட்டன்.” 

“பிள்ளையை அனுப்பி இருக்கலாம்.” 

“உம்மாவுக்குக் கொஞ்சம் ஏலாது.” 

“சரி. சவூதிக்குப் போனால், புள்ளைய யாரு பார்க்குறது?” 

அவள் குனிந்து பிள்ளையை உச்சி முகர்கிறாள். கண்கள் பனிக்கத் தொடங்கின. கைகளால் இறுக அணைத்துக் கொண்டாள். 

எனக்குச் சங்கடமாக இருந்தது. 

இப்போதுதான் நான் பிள்ளையை முழுமையாகப் பார்க்கிறேன். அழகுப் பிள்ளைதான்.சுருள் சுருளாக முடியும் நாவற்பழக் கண்களும், மலங்க மலங்கப் பார்க்கும் பார்வையில் அச்சமுமாக… இவளை எப்படி இந்தத்தாய் பிரிஞ்சிருக்கப் போகிறாள்?…. 

“உம்மா பார்த்துக் கொள்ளுவாங்க.” 

“புள்ளைக்கு எத்தனை வயசு, உண்மையாக புதுப் பிள்ளைகளை தைமாதம் தான் சேர்க்கிறது. அப்பதான் புத்தகம், புதுத்துணியெல்லாம் குடுக்க வசதியாக இருக்கும்…இப்ப என்னெ செய்யிறது?…ஏன் யாரும் இதெல்லாம் சொல்லித் தரயில்லயா?” 

“சொன்னவங்கதான் ஆனா கூட்டிக் கொண்டு விட ஆளில்லை…. அதாலதான் சேர்த்துக் கொள்ளலை….”

“நல்லா இருக்கு. இப்ப மட்டும் எப்படி கூட்டி வந்தீங்க?….இந்தப் பிள்ளைக்கு இப் என்ன வயசு ஆகுது?” 

“ஏழு” 

“ஏழு வயசா?…. புள்ள இப்ப இரண்டாம் ஆண்டல்லவா படிக்க வேணும்?….. உண்மையாப் போனவருசம் சேர்த்திருக்க வேணும்.” எனக்கு அவளுடன் கோபமாகப் பேச விருப்பம் வரவில்லை. கொஞ்சம் கடினமாகப் பேசினால் அழுது விடுவாள் போலத் தெரிந்தது. 

“சரி, சரி, நாளைக்கு புள்ளய அனுப்பி விடுங்கோ. வசதி எண்டால் வெள்ளைச் சட்டை போட்டு அனுப்புங்கோ.” 

“சரி, நான் வாரன் ஐயா.” 

அவள் அடுத்த நாள் வரவில்லை. பிள்ளையும் வரவில்லை. அவள் சொல்லியபடி சவூதிக்குப் போயிருக்க வேணும். அதுதான் வரவில்லை. 

அவளது புருசனைப் பற்றி ஏதோ சொன்னாளே… அவர் தன்னோடு இப்ப இல்லை என்ட மாதிரி…தன்னோட இல்லையென்றால் எங்கே இருக்கிறார்? சே…..சரியாகக் கேட்டுக் கொள்ளவில்லை…… 

வீடு கூட தூரத்தில் என்றவள். வயதான தாயைப் பற்றியும் சொன்னவ. எப்படி இருக்கிறாவோ?…. 

மூன்று பெண் விருத்திகள். அப்டி என்றால் வருமானத்திற்கு என்ன செய்வார்கள்?… முந்திரித் தோட்டம் எதையாவது குத்தகைக்கு பார்வைக்கு எடுத்திருப்பார்களோ?… அதுவும் வருசத்திற்கு ஒருமுறைதானே வருமானம் தரும். தினசரி செலவுகளுக்கு என்ன செய்வார்கள்?…. எனது சிந்தனை பூராகவும் அவர்களைச் சுற்றியே இருந்தது. 

ஒருவாரம் சென்ற பிறகு சிறுமியை அழைத்துக் கொண்டு அவளது உம்ம ம்மா வந்திருந்தாள். வயதான தோற்றத்தோடு – நடக் முடியாமல் கைத்தடியை ஊன்றிக் கொண்டு…

“போன கிழமை ஏன் வரவில்லை?…. புள்ளயிட படிப்பெல்லாம் வீணாகுதே…பாவமில்லையா?….” சத்தமாகக் கேட்டேன். 

மெல்லிய குரலில் உம்மம்மா சொன்னாள்: 

“புள்ளக்கி வெள்ளைச்சட்டை தேடி எடுக்கக்காலம் போயிட்டுது. அதோட எனக்கும் சுகமில்லை. வாப்பா…. இன்டைக்குத்தான் கூட்டி வரக் கெடச்சுது…. மகள் சவூதிக்குப் போறதெண்டு கொழும்புக்குப் போன பிறகு வீட்லயும் தனியா விட்டு வர ஏலாமப் போச்சு….” 

மேற்கொண்டு அந்த மூதாட்டியோடு பேசுவதற்கு விசயம் ஒன்றும் இருக்கிறமாதிரி தெரியவில்லை. சிறுமியை உம்மம்மாவின் கைகளில் இருந்து பிரித்து முதலாம் வகுப்பில் தரையில் இருப்பாட்டி விட்டு வந்தேன். 

“புள்ளைக்கு என்ன பெயர்?” 

“அலிமா” 

“சரி பிறப்புப் பதிவுத் துண்டு தாங்க.” 

“அது இல்லிங்க. பதிவுத்துண்டு அலிமாட வாப்பாட்டத்தான் இருக்கு” 

“அவர் இங்கே வருவாரா?” 

“இல்ல வாப்பா… அவர் வந்து மிச்ச நாளா போயிட்டுது…அவர் அவங்கட ஊர்லதான் இருக்கிற…இங்க இப்ப வாறதில்ல….” 

“சரி அவர் வராட்டாப் பரவாயில்ல…வார கிழமை பதிவுத்துண்ட கொண்டு வந்து தாங்க. அதுக்குப் பிறகுதான் இடாப்பில பேர் எழுதுவன். என்ன சரியா?…. அதுவரைக்கும் புள்ளய ஒழுங்காப் பள்ளிக்கு அனுப்பப் பாருங்க…” 

அந்தத்தாய் போய் விட்டாள் 

சிறுமி தனிமைப்பட்டாள். மற்றப் பிள்ளைகளோடு சேரவில்லை. ஒரு மூலையில் ஒதுங்கி, புதிய புத்தகங்களை மார்போடு அணைத்துக் கொண்டு என்னையே பார்த்துக் கொண்டு மறுகி நின்றாள். 

“அலிமா இஞ்ச வாங்க…” 

தயங்கித்தயங்கி வந்தாள். 

“வாப்பாட பேர் என்னம்மா?….” 

அவள் சொல்லவில்லை. பயமும் வியப்பும் வழிந்த கண்களோடு என்னையும் மற்றப் பிள்ளைகளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருக்க, விழியோரம் எந்நேரமும் நீர் சொரிய ஆயுத்தமாகிக் கொண்டிருக்க….நான் அவளை மெதுவாக அணைத் துக் கொண்டேன். 

“வாப்பா இங்க உங்களைப் பார்க்க வாறதா?” 

அவள் பேசவில்லை. அழத் தொடங்கி விட்டாள். அத்துடன் அவளது பூர்வீகத்தை அறியும் முயற்சியை விட்டு விட்டேன். 

ஒரு வாரம் கழித்து உம்மம்மா வந்தாள். 

“பதிவுத்துண்டு எடுக்கல வாப்பா. அலிமாட வாப்பாவுக்கும் வெசவளம் அனுப்பிக் கொள்ளயில்ல….” 

“அவர் இந்த ஊர்ல இல்லியா?” 

“இல்லப்பா. அவர் வெளியூர். முந்தி முத்திரிக் கொட்டையா பாரத்துக் கெண்டு வந்து போறவர். அப்பதான் நாங்க கண்டு பேசி கலியாணம் செய்தனாங்கள். நல்ல மனுசன். பாலாற்றுக்குப் பக்கத்தில சேனைப்பயிர்கூட நல்லாச் செய்தவர். ஆனா…முந்திரிக் கொட்டை யாபாரம் பணக்காரங்கட தொழிலா மாறிப் போனவுடன தொழில் விழுந்து போட்டுது. வருமானம் இல்ல. அதோட அவர் அவர்ர ஊர்லயே தங்கிட்டார். இப்ப எங்களோட இல்ல… இங்க வாரல்ல யா அல்லா….” 

“தொழில் இல்ல என்டதுக்காக கட்டின பெண்டாட்டி, குடும்பத்தையும் பாக்கப் பொடாது என்றிருக்கா?…. நல்ல ஆளா இருக்கு…… அப்படியே விட்டாச்சா? மகள் போய் கூப்பிட்டுப் பார்க்கயில்லியா……? 

“இல்ல வாப்பா. போகல வாப்பா….” 

“ஏன்?” 

அந்தத் தாய் என்னைவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள். 

“அவர் அங்கேயும் முந்தியும் ஒரு கலியாணம் செய்தவர் வாப்பா. அது பொறகுதான் எங்களுக்குத் தெரிந்தது. அங்கேயும் இப்படித்தான் தொழிலில்லை. வறிய சனங்கள்.. பாவம்….” 

வாய்க்குள் சீலைத் தலைப்பை வைத்துக்கொண்டு விசும்பத் தொடங்கி விட்டாள். எனக்கு பாவமாக இருந்தது. வேதனையான பக்கம் ஒன்றைக் கீறி ரணப்படுத்தி விட்டோமா என்று எனக்குக் கவலையாகி விட்டது. 

“சரி…சரி…கவலைப் படாதீங்க…. வசதியான நேரம் பதிவுத் துண்டை எடுத்துத் தாங்க. சரி போயிட்டு வாங்க” 

நான் உள்ளே திரும்பி விட்டேன். 

அன்று வெள்ளிக்கிழமை. எனக்கு நித்திரை வரவில்லை. குவளைக் கண்களுடன் மிரட்சியான பார்வையுடன் அலிமாவும், புருசன் இருந்தும் வாழா வெட்டியாக தாயும் தள்ளாத வயதில் உம்மம்மாவும் வருமானமற்ற குடும்பச் சூழலும் எதிர்காலத்தில் எவ்வித நம்பிக்கையுமின்றி….. சவூதிக்குச் சென்று உழைத்து வந்தாலொழிய வாழ்க்கையை நடத்திக் கொள்ள எந்த மார்க்கமுமின்றி…… எனக்கு அவர்களது சிந்தனையே திரும்பத் திரும்ப வந்தது. 

…. இவர்களுக்கு ஏதாவது உதவி செய்யலாமா என்றுகூட சிந்தனை புரண்டது…. 

யானை வெள்ளாப்புத் தோன்றும்வரை கொட்டுகொட்டென்று விழிதிருந்து பொழுது புலர்ந்தவுடன் கல்யாண முருங்கைகளுடன் கதைகள் பேச மண்வெட்டியுடன் புறப்பட்டு விட்டேன். 

முன்னிரல் பெய்த இலேசான மழையில் நனைந்து கல்யாண முருங்கைகள் பூவும் காய்களுமாக சிலிர்த்துக் கொண்டு நின்றன. பாடசாலை வளவு மூலைக்குள் பதப்படுத்தியிருந்த கூட்டெருவை அள்ளி வந்து முருங்கைகளுக்கு பக்கமாக இரண்டடி ஆழத்தில் கிடங்குகள் வெட்டி அதற்குள் புதைத்து விட்டு நிமிர்ந்த போது நூற்றுக் கணக்கான முருங்கைக்காய்கள் தலைக்கச்சான் காற்றில் ஒரே சீராக ஆடி நன்றி தெரிவித்துக் கொண்டன. 

இதில் நன்றி கூறிக் கொள்வதற்கு என்னதான் இருக்கின்றது?….. முருங்கைக் காய்கள் முற்றுவதற்கு முன் மனிதர்களால் உண்ணப்பட்டு விடும். அப்படியே முற்றிப் பழுத்துத் தேறினாலும் – அந்த வித்துக்களால் புதியதொரு மரத்தை – புதியதொரு பரம்பரையை உருவாக்கிவிட முடியுமா?…… முருங்கை விதைகளில் இருந்து புதிய மரம் உருவாவ தில்லையே….. கிளைகளில் இருந்துதானே புதிய மரம் உருவாகிறது?….. 

எனது சிந்தனையில் முருங்கை மரங்களின் ஆராய்ச்சி தீவிரம் கொள்ள அலிமாவையும் அவள் குடும்பத்தையும் மறந்து போனேன். 

இரண்டு வாரங்களாக அலிமா பாடசாலைக்கு வரவில்லை. 

இந்த இரண்டு வாரத்தில் வேகம் கொள்ளத் தொடங்கிய கச்சான், தென்மேற்குத் திசையிலிருந்து வீசியதில் கல்யாண முருங்கையெல்லாம் தலைவிரி கோலமாகி விட்டன. காய்களெல்லாம் உதிர்ந்து கிளைகளெல்லாம் ஒடிந்து…. எனக்கு அவைகளுடன் நின்று கதைகள் பேசும் எண்ணங்களும் வரவில்லை. 

மாலை நேரமொன்றில் பொழுது போகாமல் அலிமாவை பார்த்து வருவோம் என்று புறப்பட்டேன். 

பாலாற்றின் வடக்குத் திசையில் சின்னதாக குடிசை போட்டிருந்தது. திடல் சார்ந்த பூமி. குடிசைக்குப் பின்னால் அலிமாவும் அவள் தாயும் (சவூதிக்குப் போக வில்லையா?) தட்டாமாலை சுற்றிக் கொண்டிருந்தார்கள். 

வளவு முழுக்க மரமுந்திரிக்கை பூத்து, காற்றின் வீச்சுத் தாங்காமல் கீழே சொரிந்து கிடந்தது. குடிசைக்கு அப்பால் இரண்டு கோழிக் குடில்கள். திக்குக்கு ஒன்றாக சில தென்னை மரங்கள்…ஓ…இவைதான் அவர்களது வருமானமா?……. 

என்னைக் கண்டதும் அலிமாவை விட்டுவிட்டு முக்காட்டைச் சரி செய்து கொண்டு முன்னால் வந்து தென்னை மரத்தில் தன்னை பாதியாக மறைத்துக் கொண்டு நின்றாள். 

“அலிமா பள்ளிக்கு வரவில்லை. அதுதான் என்னெண்டு கேட்டுட்டுப் போக வந்தனான். ஏதும் சுகமில்லையோ?” 

“அவளுக்கு வேர்க்குரு போட்டிருக்கு. உடம்பெல்லாம் மசமசவென்று கடி. வார கிழமை பள்ளிக்கு வந்துவிடுவாள்?” 

“அது சரி வரட்டும் வரட்டும்…. ஒன்று கேக்கலாமோ?….. உங்கட சொந்த விசயம்….” 

அவள் பதில் சொல்லவில்லை. உடம்பு படபடக்கத் தொடங்கிவிட்டது. 

அவளது உம்மாவுக்கூடாக தெரிந்து கொண்ட பழைய வாழ்க்கையை கிளறப் போகிறேன், என்று பயப்பட்டாளோ?…… 

“சவூதிக்குப் போகப் போறன் என்டு புறப்பட்டனீங்கள்?…… 

“ஓம் ஐயா…….. வெளிக்கிட்ட நான்தான். பத்துநாள் டிரெயினிங்கு கூட எடுத்தனான். ஆனாப் போகலை” 

“அதுதான் ஏனென்டு கேட்டனான். வீணா மெனக்கெட்டு காசு செலவழிச்சு” 

நீண்ட பெருமூச்சு விட்டாள். வார்த்தைகள் வரவில்லை. அதற்குள் அலிமா வந்து கால்களைக் கட்டிக் கொண்டாள். என்னைப் பார்த்து சினேகமாகச் சிரித்தாள். 

“இந்தப் புள்ளய விட்டுட்டு என்னால போக முடியல. நான் ரெண்டு நாள் இல்ல யெண்டோன அலிமா ஏங்கிப் போனாள். இப்போ பாட்டுக்கு சுகமில்லாம ஆயிடுச்சு. என்னால இவவ விட்டுட்டு இருக் ஏலா ஐயா…..” இப்போது அவள் முழுமையாக அழவே தொடங்கி விட்டாள். 

எனக்கு சங்கடமாகப் போய்விட்டது. அழுது முடிக்கட்டும் என்று காத்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் அவள் தன்னைத் தேற்றிக் கொண்டாள். 

“ஐயா. நிக்கிறீங்க…… இருங்க ஐயா….” 

“பரவாயில்ல புள்ள. வீணா உங்களை அழப் பண்ணிப் போட்டன். மன்னிச்சுக் கொள்ளுங்க. நான் வாரன்…. பிறப்புப் பதிவுத் துண்டோட அலி மாவை திங்கட்கிழமை அனுப்பி விடுங்க….. என்ன சரியா… நான் வாறன்…..” 

“ஐயா” 

நான் நிதானித்து திரும்பிப் பார்க்கிறேன். 

“பதிவுத் துண்டு எனக்கிட்ட இல்ல. ஐயா, அது அவருக்கிட்டதான் இருக்கு. எப்படி எடுக்கிறது என்டுதான் விளங்கவில்லை….. அதான் யோசிக்கிறன்” 

“அலிமா இங்கதானே பிறந்திருப்பா. இங்கேயே பதிவுகாரர்கிட்ட இன்னொரு பதிவுத்துண்டுப் பிரதி எடுக்கலாம்தானே….” 

“இல்லை ஐயா” – மறுபடி விசும்பத் தொடங்கினாள். எனக்கு பதட்டமாகப் போய் விட்டது. இதில் அழுவதற்கு என்ன இருக்கின்றது?….. 

“ஏன் ஏன்…… ஏனம்மா?” 

அவள் முகத்தை வேறு பக்கமாகத் திரும்பித் கொள்கின்றாள். பார்வை, மரமுந்திரிகையையும் தாண்டி வேலியோரமாகப் பதிந்து நிலைக்கின்றது. 

“அலிமா என்னோட புள்ள இல்லை ஐயா…. இவ, அவருக்கும் அவருடைய மூத்த தாரத்திற்கும் அவங்கட ஊர்ல பிறந்தவ. நான் வளக்கன்” 

எனக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. 

தனது வயிற்றில் பிறக்காத – தனக்கு ஒரு குடும்ப வாரிசைத் தரமுடியாத தன்னை உதறி விட்டுப் போன ஒருவனின் குழந்தைக்காகவா அவள் இவ்வளவு சிரமப் படுகிறாள். மாற்றான் குழந்தையை பிரிந்து செல்ல முடியாமலா தனது பிரயாணத்தையும் நிறுத்தி இருக்கிறாள்…. என்னால் நிலைமையை சீரணிக்க முடியவில்லை. 

அவள் பார்வை நிலைத்து நின்ற இடத்தில் நேற்றைய கச்சான் காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல், காய்களை உதிர்த்துவிட்டு வெறும் கிளைகளோடு சோகமாக ஒரு கல்யாண முருங்கை மரமொன்று வேலியோரமாக ஆடி கொண்டிருந்தது. 

– தினகரன் ஜூன் 16, 2002.

– வரால் மீன்கள் (பரிசு பெற்ற சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2013, வானவில் வெளியீட்டகம், திருக்கோணமலை.

அமானுல்லா பெயர்: எம்.எஸ்.அமானுல்லா பிறப்பிடம்: மூதூர் பிறப்பு: மே 27 1962 படைப்பாற்றல்: இந்திய முஸ்லிம் எழுத்தாளர், ஆளுர் கன்னியாகுமரி மாவட்டத்தைப் பிறப்பிடாகவும் சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஒரு கட்டுரையாளராவார். திறனாய்வு, நாட்டுப்புறவியல் முதலிய துறைகளில் அதிக ஆர்வமிக்க இவர் சென்னை புதுக்கல்லூரி நூலகராகவும், பல்வேறு அமைப்புகளின் வாழ்நாள் உறுப்பினராகவும் பணியாற்றுகிறார். படைப்புகள்: சிறுகதைகள்: வரால்மீன்கள்இருதுளிக் கண்ணீர்கருவேலங்காடுகள் தாண்டி – என்பனஇவரது குறிப்பிடத்தக்க சில சிறுகதைகள். சிறுகதைத் தொகுப்பு: வரால்மீன்கள் -…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *