கலியுகப் பெருங்காவியம்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 11, 2025
பார்வையிட்டோர்: 167
(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பாஞ்சாலங்குறிச்சிக்குத் தெற்கே மிக அண்மையிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவன் நான். எனது நண்பர் முத்தையா ரெட்டியார் பழங்கால ஏட்டுச் சுவடியொன்றை கையில் வைத்துப் பாடிக்கொண்டிருந்தார்.
காருலாவிய கலியுகப் பெருங்காவியத் தொடு காந்தமும்
பாரதா கதை ராமாயணமும் பாடினோர் மொழி சேரவே
சேரபாண்டியர் சோழர் மூவர் தினந் தினந் தொழுஞ் செக
வீரபாண்டியப் பிள்ளையார் வெகு மேன்மையாய் வந்து காக்குமே
செகவீரபாண்டியர் என்று வரவும் நான் ஆர்வத்தோடு அவரண்டையில் உட்கார்ந்து, கட்டபொம்மு கதையா? என்றேன் ஆர்வத்தோடு.
அவர் என்னை ஏறிட்டுப் பார்த்து, நீர் ஒரு எழுத்தாளராச்சே, மேலும் கட்டபொம்முவைப்பற்றி நிறைய எழுதி இருக்கிறீரே… அதிலெல்லாம் படிச்சவனின் ஒட்டுச் சரக்குண்டு; இது ஜீவன் நிறைந்த உண்மை ஏடு, இது உமக்கு மிகவும் பயன்படும் என்று கொண்டே பாக்கை வாயில் போட்டு கடக்கென்று கடித்தார்.
இதை எழுதியது யார், எப்படி கிடைத்தது? என்று கேட்டுத் துடி துடித்தேன். அவர் உடங்குடி வெற்றிலையை உதப்பிக்கெண்டே சொன்னார்.
பாஞ்சைப்பதிமீது மிக விசுவாசம் காட்டிய வீர வயோதிபர் வீரண்ண மணியாரர். தொண்ணூற்றாறு வயதுள்ள தொண்டுக் கிழவரேயாயினும் கண்ணுறங்காது கட்டபொம்மு-ஊமைத்துரையைக் காவல் புரிந்து வந்தார். அவர்தான் அரண்மனையின் அந்தரங்கக் காவல்காரர்.
புலிக்குப் பிறந்தது பூனையாய்விடுமா? அவர் மகன் நமச்சிவாயம் தொட்டில் பிராயத்திலே துடியும் துடுக்குமாய் இருந்தான். சிறு பையனாய் இருக்கும் போதே அரண்மனை ஆடுமாடுகளை மேய்க்கும் பொறுப்பேற்றான். ஊமைத்துரையின் அஞ்சாமையையும் குழந்தைப் பிராய முதலே கூர்ந்து கவனித்துக் குயுக்தியாகப் பேசக் கற்றுக்கொண்டான்.
நூறு வயதாகியும் சுரிப்பு விழாத வீரண்ணமணியாரரின் முகம் கயத்தாறு கட்டைப் புளியில் கட்டபொம்முவைத் தூக்கியபோது (1799) கருத்துச் சுருங்கியது. குளிக்குள் கிடந்து கண்கள் ஒளிவீசின.
ஊமைத்துரை அவருக்கு மீண்டும் உயிர்கொடுத்தார்.
ஒரு துரும்பை எடுத்து உள்ளங்கையில் வைத்து அலட்சியமாக ஊதிக் காட்டி ‘இப்படியே வெள்ளைப்பரங்கிகளையும் ஊதிடுவேன்’ என்று சைகை மூலம் ஊமைத்துரை தோள் தட்டி சூள் உரைக்கும் போது வீரண்ணமணியாரர் தன் திருக்கு மீசையை முறுக்கி விடுவார். கையிலுள்ள நெற்றி மட்டக்கம்பை வைத்து சிலம்ப முறையில் ஒரு துள்ளு துள்ளுவார்.
குச்சி நாய்கள் போன்று எச்செலும்புகளுக்காக கும்பினியரை பச்சைக் கொடி காட்டி வரவேற்கும் நச்சுக்கூட்டங்கள் நிறைந்திருந்தன.
ஊமைத்துரையையும், உடன் வீரர்களையும் பிடித்து பாளையங் கோட்டை சிறையில் வைத்தனர். தன்மானத் தமிழ் மக்கள் கட்டிய கோட்டையை இடித்துத் தரைமட்டமாக்கினர்.
வெள்ளையரின் மண் ஆசையில் வெறுப்புக்கொண்ட தென்பாண்டி மக்கள் வேல் பாய்ந்த வேழங்கள் போல் வெருண்டெழுந்து வேல் கம்புகளோடு சென்று சிறைக் காவலைத் தகர்த்து நொறுக்கி தென்னாட்டுச் சிங்கங்களை மீட்டு வந்தனர். (2.2.1801) வியாரபாரம் செய்ய வந்த வெள்ளையனுக்கு அடிமையாவதை விரும்பாத பாஞ்சைப் பகுதி மக்கள் அதி அற்புதமாக ஒரு சில நாட்களில் ராட்சஸக் கோட்டையை மீண்டும் உருவாக்கினர், கோட்டை உயர்ந்து விட்ட செய்திகேட்டு வெள்ளைப் பட்டாளம் நடுங்கியது.
அன்றொரு நாள் கடும்போர். சுதந்திர தாகத்தால் துடிக்கும் தோள்களுக்கும், நாடு பிடிக்கும் சுரண்டல் வெறியால் துப்பாக்கி ஏந்திப் போர்புரியும் இரும்புக் கரங்களுக்கும் போர்நிகழ்ந்தது. பீரங்கிக் குழாய்களுக்கு முன்னால் பாஞ்சை மக்கள் வெஞ்சமர் புரிந்தனர்.
பீரங்கிகளுக்கு முன்னால் புஜபல பராக்கிரமம் எத்தனை நாளைக்கு? கோட்டைக்குள் பலர் குற்றுயிராய்க் கிடந்தனர். வெளியில் பிணமலைகள் குவிந்தன. ஊமைத்துரையும் சாய்ந்து விட்டார். என்ற செய்தி சூரைத் தீயாகப் பரவியது. காட்டிக்கொடுத்த எட்டையபுரத்தான் களிப்பு மிகுதியால் பேய்ச்சிரிப்பு சிரித்தான்.
அப்பொழுது, ஊமைத் துரையின் தர்ம பத்தினி வெள்ளையம்மாள் நிறை கர்ப்பிணி.வீரண்ணமணியர் மிகக் கலவரமுற்றார். புதியதொரு கவலை அவரை பலமாகப் பிடித்தது. பாஞ்சை மன்னர்களின் பரம்பரையே இல்லாமல் போய்விடுமோ? என்றெண்ணும் போது அவர் உள்ளத்தில் தீக்கனல்களை அள்ளிக் கொட்டுவது போன்றிருந்தது.
ஆனால் அவருக்கு தன் மகன் நமச்சிவாயத்தைப்பற்றி பரம திருப்தி. அவன் ஆடு மேய்க்கும் போதே பூனைக் கண் வெள்ளையரையும், யானைப் பலமுள்ள ஊமைத்துரையையும் பற்றி சுவைப்படப் பேசுவான். கட்டபொம்மு சண்டையைப்பற்றி அவன் சில வேளையில் சுயம்பாடுவதைக் கேட்ட பலர் வீரண்ணரிடம் வந்து, ‘உம்ம மகன் சீக்கிரம் புலவர் ஆகிவிடுவான். பாஞ்சைச் சண்டையைப்பற்றி புதியதொரு பாரதமே’ பாடிவிடுவான் போலும்! என்பர்.
அப்பொழுது வீரண்ணமணியாரரின் வாயெல்லாம் பல்லாகும்.
தன் பெயர் சொல்ல தன் மகன் வந்து விடுவான் என்பதில் அவருக்கு. சந்தேகமில்லை. ஆனால், பாஞ்சைச் சிங்கங்களின் பரம்பரையல்லாவா பிரதானம்? ஊமைத்துரையின் நேரடியான வாரிசை வேரறுக்க விட்டுவிடக் கூடாதே! பாஞ்சைக்கொடியை வெள்ளைப் பரங்கிகள் வந்து மேய்ந்துவிடக் கூடாதே, இதுதான் வீரண்ணரின் ஒரே ஏக்கம்.
அவசரமாக வீரண்ணரைக் கூப்பிட்டு வெள்ளையம்மாளிடமிருந்து ஆள் வந்தது. தொண்டு கிழவர் துள்ளிப்பாய்ந்து ஓடினார்.
வெள்ளையம்மாள் தன்தோழி சக்கம்மாளை கையில் பிடித்துக்கொண்டு இரகசியமாகத் தப்பிவிடத்தயாராய் நின்றாள். வீரண்ணரை உடனடியாகப் புறப்பட்டு துணைக்கு வரும்படி வேண்டினாள்.
கரும்பு தின்னக்கூலியா வேண்டும். வாழைத்தோட்டங்கள் நிறைந்த கோட்டையின் தெற்குவாசல் பக்கமாய் மறைந்தனர். பாஞ்சாலங்குறிச்சிக்குப் பக்கத்திலுள்ள இப்போது ஆவரங்காடு என்று வழங்கும் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் அந்தக் கிராமத்தில் தங்கினர். ஊமைத்துரையின் வீரபத்தினியை தங்கள் குலதெய்வமாகக் கருதி மறைத்து பாதுகாத்தனர்.
ஊமைத்துரையும் உயிர் தப்பிவிட்டார் என்ற செய்தி ஊரெங்கும் பரவியது. இருவரும் இறக்கவில்லை என்ற உண்மை இங்கிலீஷ்காரர்களை இஞ்சி தின்ற குரங்கு போலாக்கியது.
சுற்றிச் சூழ்ந்துள்ள கிராமங்களுக்கு பயங்கர ஆபத்து நேரவிருந்தது. கோட்டைக்குள் நின்ற பசுமாட்டைப் பிடித்துவரும்படி ஒரு ஆதிதிராவிடப் பெண்ணிடம் கூறிவிட்டு மூவரும் அங்கிருந்து பத்துமைல் தூரமுள்ள பேரூரணி என்ற கிராமத்திற்குச் சென்று விட்டனர்.
ஒரு மாதம் கழித்து இரட்டைக் குழந்தை பிறந்தது. இரண்டும் ஆண் குழந்தைகளே!
கும்பினியாரின் கொடுமுடியெல்லாம் குறையும் தருவாயில் கோட்டைக்குள் நின்ற பசுமாட்டை பிடித்துக்கொண்டு அந்தப்பெண் பேரூரணிக்குச் சென்றாள். பால் வேண்டிய நேரத்தில் கொண்டு வராமல் இப்பொழுது வந்திருப்பதைக் கண்டு வெள்ளையம்மாளுக்கு அந்த அரிஜன பெண்மீது ஒரே ஆத்திரம் எழுந்தது. ஆத்திரத்தில் என்னவெல்லாமோ பேசிவிட்டாள்.
ஊரை மூட முடியுமா? குசு குசு பேச்சுக்கள் குமைந்தன. கும்பினியாரின் காதிற்கும் எட்டியது. பாஞ்சாலங்குறிச்சி பரம்பரையா? என்ற வெஞ்சினத்தில் ஐவரையும் பிடித்து திருச்சி சிறைக்குக் கொண்டு போயினர். இரு சிங்கங்களையும் ‘கம்பெனிச் செல்வம்’ என்றே அழைத்தனர்.
பருந்து பறக்காத பாஞ்சாலையில் பரங்கி மேஜர் மக்காலேவுக்கு விருந்து பரிமாறினர். கோட்டை தரைமட்டமாக்கப் பட்டது.
வானம் பொழியுது, பூமி விளையுது
வெள்ளையனுக்கேதடா தீர்வை?
என்று கேட்ட மானாபிமான மக்கள் ஈனமுறையில் அழித்தெடுக்கப் பட்டனர். காகம் பறக்காத கட்டபொம்மு சீமை கட்டமண் ஆகி வேட்டைக் காடானது.
நமச்சிவாய்ப் புலவர் தகப்பனைத் தேடித்திரிந்தார். அப்பாவி போன்று அனாதையாய்த் திரிந்ததால் ஆங்கில ஆசாமிகளிடம் அகப்படவில்லை.
நமச்சிவாயப்புலவர் பிச்சைவாங்கிச் சாப்பிட வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது. பாஞ்சைப் போரைப்பற்றி யாராவது கேட்டால் தண்ணீர் குடியாமல் கவிமழை பொழிவார். கஞ்சிக்கும், வற்றலுக்கும், வெங்காயத்திற்கும், வேர்க்கடலைக்கும் பாஞ்சைப் புகழ் பாடினார்.
பாஞ்சைக்கு மேற்கே ஐந்துமைல் தூரத்திலுள்ள சண்முகபுரம் என்ற ஊரில் சென்னப்ப ரெட்டியார் என்பவர் சிறந்த தோசாபிமானி. அடிமை வாழ்வை அறவே வெறுப்பவர். பாஞ்சைப் போரைப்பற்றிக் கேட்பதே அவருக்கு வெகு வாஞ்சையாயிருந்தது. நமச்சிவாயப் புலவருக்கு தினம் ஒரு படி கம்பம் புல் தருவதாகக் கூறி ஏடு எழுதும்படி சொன்னார். பச்சை மிளகாயைக் கடித்து கம்பங்கஞ்சியைக் குடித்துக் கொண்டே பனை ஓலையில் கவிமழை பொழிந்தார். மூவாயிரம் பாடல்களில் கலியுகப்பெருங்காவியம் பாடினார். அதில் முதல் பாட்டுதான் ஆரம்பத்தில் பாடியது.
திரேதா யுகத்தில் கம்பர் ராமாயணம் பாடினார்.. துவாபர யுகத்தில் வேதவியாசர் பாரதம் பாடினார். கிரேதா யுகத்தில் கச்சியப்பர் காந்தபுராணம் பாடினார். கலியுகத்தில் நமச்சிவாயப்புலவர் கலியுகப் பெருங்காவியம் பாடி இருக்கிறார் இதுதான் பாடற்பொருள்.
இரண்டாம் பாடலில் அவருடைய தாழ்மையை பாருங்கள். சங்க காலப்புலவர்களைப் புலியாகவும் தம்மை எலியாகவும் கூறும் அவை அடக்கப்பாடல் எத்தனை அருமையானது. என்று சொல்லி கொண்டே பாடலைப் பாடலானார்.
கலியுகப் பெருங்காவிய மேன்மையை
வலிய செந்தமிழ் வாணர் முன்னோதினேன்
புலி புடைத்து மூழங்கப் பொறாமையால்
எலிபுடைத்து முழங்கிய தென்னவே
‘இந்த ஏடும் சண்முகபுரத்தில் ஒரு பழங்கால பானைக்குள் பத்திரமாய் இருந்தது. இதனைப் பெறுவதற்கு உங்கள் பிரயாசை அதிகம் இது உங்களிடம் இருக்க வேண்டிய ஏடு’ என்று கூறும் போது புகையிலை கலந்த வெற்றிலை துப்பிணியை இருவிரல் இடுக்கு வழியாய் நாணீகமாகத் துப்பினார்.
இந்நிகழ்வு என் நெஞ்சை அசைத்தது. பாஞ்சை மண்ணுக்கடியில் இன்னும் மறைந்து கிடக்கும் கூர்மையான ஆயுதங்கள் போன்று, ஜீவன் நிறைந்த எத்தனை எத்தனை எத்தனை இலக்கியப் புதையல்கள் மறைந்து கிடைக்கின்றனவோ? தமிழருமையை தரணியிலுள்ளோரைவிட நீரும் நெருப்பும் தானே நன்கறியும்?
நெல்லைக் கம்யூனிஸ்ட் சதி வழக்கில் என்னையும் பின்னிப்பிணைத்து இறையியலிருந்த போது 1950ல் நான் பிறந்த வீடு போலீசாரால் சோதனைக்குட்பட்டது.
தூத்துக்குடித் தோழர்கள் ஐசக், முருகானந்தம் ஆகியோரின் முன் எச்சரிக்கை காரணமாக என் தந்தை மாட்டுத் தொழுவுக்குள் ஒளித்து வைத்திருந்தார்கள்.
எந்தையைக் கொண்டு ஏட்டிலிருந்து 300 பாடல்களை நோட்டில் எடுத்தெழுதினேன். தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் தோன்றிய பின்பு அங்கே அனுப்பினேன். நமச்சிவாயப்புலவர் நினைவாக 200 ஆண்டுகளுக்கு பிறகாவது கலியுகப் பெருங்காவியம் மறுபிறவி எடுக்குமா? தமிழுக்குப் புது வரவு கிடைக்குமா?
– ஆகஸ்ட் 15, 1957 ஜனசத்தி சுதந்திரப்போர் மலரிலிருந்து.
– ஆர்.எஸ்.ஜேக்கப் சிறுகதைகள் (தொகுதி நான்கு), முதற் பதிப்பு: நவம்பர் 2005, ஜெயா பப்ளிகேஷன்ஸ், பாளை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
