கலாட்டா கல்யாணம்




ஆறுமுகம் தன் அண்ணனுக்கு போன் செய்யும் பொழுது அண்ணன் “தம்பி உனக்குத்தான் போன் செய்யணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன், அதுக்குள்ளே நீயே போன் பண்ணிட்டே
நம்ம பொண்ணுக்கு சம்பந்தம் பேசிகிட்டு இருக்கேன், அனேகமா முடிஞ்சுடும்னு நினைக்கிறேன். அப்புறம் பேசறேன், போனை துண்டித்து விட்டார்.
இவனுக்கு தான் அண்ணனிடம் சொல்ல வந்த விசயத்தை சொன்னோமா என்ற சந்தேகம் வந்து விட்டது. சரி அண்ணன் கல்யாண விசயமாக பேசிக்கொண்டிருக்கும் போது நாம் எதற்கு குறுக்கே போக வேண்டும். முடிவு செய்தவன் அந்த பிரச்சினையை அப்படியே விட்டு விட்டான்.
மனைவியிடம் இரவு இந்த விசயத்தை சொல்லும்போது அவள் சரி முடிஞ்சா
சந்தோசம் அத்துடன் முடித்துக்கொண்டாள்.
இரண்டு நாட்கள் கழித்து போன் வந்தது, எடுத்து பார்த்தான், அடுத்த சகோதரன்
“டேய் விசயம் தெரியுமா? சுப்பண்னன் பொண்ணுக்கு சம்பந்தம் ரெடியாயிடுச்சுன்னு நினைக்கிறேன், உனக்கு இதை பத்தி தெரியுமா?
அன்னைக்கு எனக்கு போன் பண்ணினான், பேசிகிட்டு இருக்கோமுன்னு, சொன்னான். இருக்கட்டும் ஒரு வார்த்தை நம்ம அண்ணன் தம்பிகளை கூப்பிட்டு இப்படி ஒரு சம்பந்தம் வருது, பாக்கலாமா அப்படீன்னு கேட்டிருக்கலாமில்லை, விடாது பேசினார் அண்ணன், உங்க அண்ணி கூட பயங்கர கோபமா இருக்கா, நம்மளை மதிக்காதவங்க வீட்டு கல்யாண விசேசத்துக்கு நாம ஏன் போகணும்னு. ஆறுமுகத்துக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. சரி பொறுத்து பாக்கலாம், சொல்லி விட்டு தொடர்பை துண்டித்தான்.
மறு நாள் ஆறுமுகத்தின் அக்காவிடமிருந்து போன், “இங்க பாரு நம்மளை மனுசனா மதிச்சிருந்தா இப்படி செய்திருப்பானா? அவன் கூட பிறந்த அக்கா எனக்கு ஒரு வார்த்தை சொன்னா என்ன? உங்க மாமா பயங்கர கோபமா இருக்கறாரு. அவனே நம்மளை மதிக்கலை. அப்படீன்னு. நீயும் அதே மாதிரி இரு. அவன் எது சொன்னாலும் எங்க கிட்ட கலந்து பேசிகிட்டு சொல்றேன்னு சொல்லிடு, சரியா? பட படவென பேசி விட்டு போனை வைத்தாள்.
இவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை? இப்பொழுது யாரை குறை சொல்வது. அண்ணனுக்கு தன் பெண் விசயம், நல்லபடி நடக்கவேண்டும் என்பது அவன் எண்ணம். இவர்களுக்கோ தன்னை மதிக்கவில்லை என்ற கோபம்.
மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து பெரியவனிடமிருந்து போன், தம்பி மாப்பிள்ளை
வீட்டுக்காரங்க நம்ம வீட்டுக்கு வராங்களாம், சம்பிரதாயமாத்தான். நீங்க எல்லாரும் வரணும். சொன்னவரிடம் இவன் வர்றேன் என்றவுடன், குடும்பத்தோட வரணும் சரியா?
“ஏங்க கொஞ்சம் போனை கொடுங்க” அண்ணி அண்ணனிடமிருந்து போனை கேட்பது இவனுக்கு கேட்டது. இங்க பாருங்க, எத்தனை பேர் வர்றீங்கன்னு சொன்னாத்தான் வண்டி ஏற்பாடு பண்ணறதுக்கு சரியா இருக்கும். அவங்க நம்ம வீட்டுக்கு வந்து போன உடனே நாமும் அவங்க வீட்டுக்கு போகணும். இவன் மனைவியிடம் போனை கொடுத்து விட்டு ஒதுங்கினான்.
இருவரும் ஏதோ பேசிக்கொண்டார்கள். போன் பேசி முடித்தவுடன் இவன் மனைவியின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.” என்ன பேசறாங்க? வர்றதுன்னா வாங்க? வரலையின்னா இப்பவே சொல்லிட்டா நல்லதாம் வண்டி ஏற்பாடு பண்ணறதுக்கு வசதியா இருக்குமாம். என்னஙக அநியாயம், ஒரு நல்லதுக்கு கூப்பிடறது இப்படியா? இவன் இந்த சர்ச்சையில் சிக்காமல் அலுவலகம் கிளம்ப தயாராவது போல் கிளம்பினான்.
ஒரு வழியாக இவனும், மகனும் தயாராகி அண்னனின் வீட்டுக்கு போகும்போது
அங்கு யார் எல்லாம் “கலந்து கொள்ள வேண்டாம்” என்று இவனுக்கு போன் செய்தார்களோ அவர்கள்தான் இவனை வரவேற்றார்கள். எப்படியோ மாப்பிள்ளை வீட்டார் வந்து சென்ற பின் இவர்கள் அவர்கள் வீட்டுக்கு சென்று சம்பிரதாயத்தை முடித்து வைத்தார்கள். முடிந்து வரும்போது தாய் மாமன் இவனிடம் “ எல்லாம் இவனுங்களே பேசி முடிச்சுட்டானுங்க, எங்களை மாதிரி பெரிய மனுசனுங்களை சும்மாவாச்சும் கூப்பிட்டு நாடகம் போடறானுங்க.
இவனுக்கும் அவரின் ஆதங்கம் ஏற்றுக்கொள்ளும் விசயமாகத்தான் இருந்தது. காரணம் பெண்ணை பெற்றவனும், பையனை பெற்றவர்களும் அடுத்து என்ன செய்ய போகிறோம், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற சொற்பொழிவு மட்டுமே செய்தார்கள். மற்றவர்கள் இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டுதான் இருந்தார்கள் அவ்வளவுதான். அப்படி இருக்கும்போது தான் “பெரிய மனுசன்” என்ற தோரணையில் இருக்கும் மாமன், சித்தப்பாமார்கள் இவர்களின் பேச்சு எல்லாம் எடுபடாமல் அங்கு வாய் மூடி மெள்னிகளாகத்தான் இருந்தார்கள்.
இப்பொழுது ஆறுமுகத்துக்கு அடிக்கடி போன், அவன் சொந்தங்களிடமிருந்துதான்
பெரியவனை பற்றி ஒரே புலம்பல், இவனும்,மாப்பிள்ளை வீட்டுக்காரனும், பேசி வச்சு பண்ணறதுக்கு நாம எதுக்கு?
ஆனாலும் அடுத்தடுத்து நடந்த சம்பிரதாய சடங்குகளுக்கு குறை சொல்லிக்கொண்டிருந்த எல்லோரும் கலந்து கொண்டதுதான் வேடிக்கை. ஆறுமுகம் கூட இந்த விசேசங்களில் கலந்து கொண்டவன், தனக்கு பிடிக்காத ஒருவர் அந்த சடங்குகளில் கலந்து கொண்டதால், மூஞ்சியை தூக்கி வைத்து கொண்டே இருந்தான்.
அது உறவுளிடையே பரபரப்பாய் பேசப்பட்டு, ஆளாளுக்கு இவனுக்கு அறிவுரை சொன்னார்கள். பொது இடத்திலே அதெல்லாம் பாக்கலாமா? கேட்டவர்களுக்கு நேரிடையாய் பதில் சொல்லாமல், பொது இடம் என்றால், “நாமெல்லாம் ஒண்ணு” என்ற வார்த்தையை ஏன் உபயோகப்படுத்தனும்? பேசாம என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன் வாங்கன்னு சொன்னா போதுமே? நாம் எல்லாம் அண்ணன் தம்பி, இது நம்ம வீட்டு கல்யாணம் அப்படீன்னு சொல்றது, அப்புறம் நம்ம குடும்பத்துக்கு ஆகாதவங்களை கூட்டி வச்சு நடத்தறது” மனதுக்குள் புழுங்கிக்கொண்டான்.
எப்படியோ கல்யாண நாளும் வந்தது. மாப்பிள்ளையின் தந்தை கல்யாண செலவுகளை, செய்து கொள்வதாக சொல்லி விட்டாலும், “உங்களால முடிஞ்சதை கொடுங்க” என்ற வார்த்தையையும் இடைச்செருகலாய் சொருகியிருந்தார். இதற்கு மட்டும் எப்படியும் மூன்று நான்கு லகரங்கள் தேவைப்படும் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள் அண்ணி.
அடுத்த பிரச்சினை ஆரம்பமானது, மாப்பிள்ளை வீட்டார் அதிக பட்ச “அறைகளை” தங்களுக்கு ஒதுக்கிக்கொண்டார்கள் என்று அண்ணனிடம் சொல்ல,. பெண்ணை பெற்றவன் “அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க” சொல்லி விட்டு நழுவிக்கொண்டான். அவனுக்கு அவன் கவலை. பல லகரங்கள் செலவு செய்து மாப்பிள்ளை வீட்டார் கல்யாண விழாவை நடத்தும்பொழுது “அறைகளை கைப்பற்றுவதில் தீவிரமாய் இருப்பார்கள் என்பது தெரிந்ததுதானே.
இரவு “நலங்குகள்” போன்ற சம்பிரதாயங்கள் நடக்கும்போதும், ஊர்வலம் நடக்கும் போதும் கவனித்தான், இவனிடம் இந்த கல்யாணத்தை பற்றி அத்தனை தூரம் புலம்பியவர்கள், தங்களை அலங்கரித்துக்கொண்டு கேமராவுக்குள் தன்னுடைய முகமும் உருவமும் வருவதற்கு பிரயாசப்பட்டுக்கொண்டதை.
தாலி கட்டுதல் மற்றும் அனைத்து சடங்குகளும் முடிந்த பின்னால், மாப்பிள்ளை பெண்ணுடன் போட்டோவுக்கு நிற்க உறவுகள் போட்டி போட்டுக்கொண்டு நிற்பதை பார்த்தான்.
“போஸ்” கொடுத்து இறங்கியவர்கள் “இது எங்க பொண்ணு கல்யாணம் மற்றவர்களிடம் சொல்லிவிட்டு மேடையில் இருந்து இறங்கி வேக வேகமாய் சாப்பாடு பந்திக்குள் அடித்து பிடித்து நுழைந்தார்கள்.
உறவுகளிடம் கைகாட்டி விட்டு ஆறுமுகமும், அவனது குடும்பமும், அந்த மண்டபத்தை விட்டு வெளியே வந்து அப்பாடி என்றார்கள். இப்பொழுதுதான் பன்னிரெண்டு வயதுக்குள் இருக்கும், தங்கள் மகளுக்கு, “நம்ம பொண்ணு கல்யாணத்தை எப்படி நடத்தப்போறோமோ” இந்த கவலை வந்து மனதுக்குள் நுழைந்து கொண்டது.