கற்கண்டு






(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஆக்கியோன் முன்னுரை
கற்கண்டு, பொறுமை கடலிலும் பெரிது என்னும் இவ்விரு சிறு கதைகளையும் பல ஆண்டுகளின் முன் எழுதினேன். அவைகளை என் பிள்ளை மன்னர் மன்னன் முத்தமிழ் நிலையத்தார்க்குக் காட்ட, முத்தமிழ் நிலையத்தார் அச்சுக்கு வரவேண்டுமென அவாவினர்! அவர்க்கு நன்றி! – கனக சுப்புரத்தினம் (பாரதிதாசன்)
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4
அத்தியாயம்-1
புதுச்சேரியில் முதலியார் வீதி என்பதொன்று.
அவ்வீதியின் முனையில் இருப்பது சிங்கார முதலி யார் வீடு. சிங்கார முதலியார் புதுச்சேரியில் உள்ள பணக்காரர்களில் ஒருவர்; செல்வாக்குள்ளவர்; நல்ல பரோபகாரியுமாவார்.

அந்தச் சிங்கார முதலியார் வீட்டுக் கெதிரில் ஒரு வாரமாகத் தருமன் சிறுத்தொண்டப் பத்தன் கதை பாடி முடித்ததில் அவனுக்கு நல்ல வரும்படி. அதனால் அதே இடத்தில் சிறுத்தொண்டப் பத்தன் கதையைத் துவக்கி யிருக்கிறான் மீண்டும்.
தருமனும் அவன் சிற்றாளாகிய சின்னான் என்ற சிறு பையனும் உட்கார்ந்திருக்கிறார்கள் வீதியோரத் தில் சாக்கை விரித்துப்போட்டு! அவர்கட்கு எதிரில் ஒரு திரை கீழே விரித்துப் போடப் பட்டிருக்கிறது. அத்திரையில், சிறுத் தொண்டப் பத்தன் கதையில் உள்ள பிரதான கட்டங்கள் சில சித்தரிக்கப்பட் டுள்ளன. கதை பாடுவதற்கு இடையில், பிரஸ்தாபத்தில் வரும் சித்திரத்தை அவன் கையில் உள்ள கோலால் ஜனங்கட்குக் குறிப்பிடுவான்.
தருமனின் இடது கை ஒன்றே இருதாளத்தை யும் பிடித்துப் போட்டுக் கொண்டிருக்கும். வலது கை தான படம் காட்டுகிறதே! பக்கத்தில் உள்ள சின்னான் ஒற்றைத் தந்தித் தம்பூராவை மீட்டுகிறான்.
பிள்ளையார் தோத்திரம் முடிந்துவிட்டது. கதை ஆரம்பமாகப் போகிறது. எதிரில் சிலர் உட்கார்ந்து கொண்டும் நின்று கொண்டும் ஆவலாயிருக்கிறார்கள் கதை கேட்க.
தருமன் : (எதிரில் உள்ளவர்களை நோக்கிக்)”கொஞ்சம் — வெத்திலை இருந்தா குடுங்க” என்கின்றான்.
பாக்குப் புகையிலை சகிதம் வெற்றிலை உடனே ஏற்பாடாகிறது. வாயிற்போட்டுக் குதப்பி அடக்கிக் கொள்ளுகிறான்.
தருமன் : போடடா தம்பூரை! –
திருச் செங்காட்டாங்குடியில் –
சிறுத்தொண்டப் பத்தன்-அந்தச்
சிறுத்தொண்டப் பத்தன்.
திருவெண்காட் டுநங்கையை..
மணம் புரிந்தான்.
கல்லாணம் செய்த பின்னே
இருவரும் கூடி – அந்த
இருவரும் கூடி
கனமாகச் சீராளனைப்
பெத்தெடுத்தார்.
சீராளன் வயசல்லோ
அஞ்சான வுடனே–நல்ல
அஞ்சான வுடனே
தெருப் பள்ளிக் கூடத்திலே
படிக்க வச்சார்.
சீராளன், பள்ளிக்கூடம் போவதாக எழுதப் பட்டிருக்கும் கட்டத்தைக் கோலால் குறிப்பிடுகி றான் தருமன்.
கேட்பவரில் ஒருவன் சொல்லுகிறான்: “அதானே படிக்காட்டிப்போனா என்னா பண்றது!
மற்றொருவன் : உஸ் சும்மா இரு!
இதற்குள் சிங்கார முதலியார் வெளிவந்து தம் வீட்டுக் குறட்டில் நிற்கிறார் ; முதலியாரின் குழந்தை யோகிய புஷ்பரதனும் முதலியாருடன் நின்று கதையைக் கவனிக்கிறான்.
தருமன்: “இப்படி இருக்கின்ற நாளையிலே பத்தன்
நாளையிலே பத்தன்-அவன்
ஈடில்லா அன்னதானம்
செய்ய நினைத்தான்.
அன்னதானம் என்று சொல்லிச்
சிறுத்தொண்டப் பத்தன்-அந்தச்
சிறுத்தொண்டப் பத்தன்
அன்னக் கொடி தன்னை
நாட்டி விட்டான்.”
தருமன் திரும்பிப் பார்க்கிறான். முதலியார் நிற்பதை அறிந்து அவரிடம் சொல்லுகிறான் :
காவற்காரர் இப்பதானுங்க போனாருங்க. நீங்க அவசரமாச் செக்கு மாத்த அனுப்பி னிங்க போல இருக்குதே “சிறுத்தொண்டப் பத்தன்”
தினந்தோறும் அன்னம்
பொசித்திடலானார் – அடியார்
பொசித்திடலானார்
சிவனடி யார்கூட்டம்
கூட்டமாக.
இந்தப் பையனே அனுப்பி அவசரமா அழைச்சி வரச் சொல்லட்டுங்களா? “கூட்டம் கூட்டமாக”
முதலியார் : அவனுக்கு இடந்தெரியுமா?
தருமன் : தெரியுங்க “கூட்டம் கூட்டமாக”
முதலியார்: அப்படிண்ணா அனுப்பு! நான் அவசரமா குப்புச்சாமி முதலியார் வீட்டுக்குப் போகணும்.
தருமன்: – ஓடு பையா “கூட்டம் கூட்டமாக”
நூறு பேருக்குத் தினம்
சிறுத்தொண்டப் பத்தன்- அந்தச்
சிறுத்தொண்டப் பத்தன்
நோகாமல் அன்னமிட்டான்
சிறுத்தொண்டப் பத்தன்.
முதலியார் : இப்பத்தானா அவன் போனான்?
தருமன் : ஆமாங்க “சிறுத்தொண்டப்பத்தன்”
முதலியார் : இங்கே என்னா பண்ணான்?
தருமன்: ஒருத்தன் கிட்ட பேசிகினு இருந்தானுங்க “சிறுத்தொண்டப்பத்தன்” (புஷ் பரதனை நோக்கி) பள்ளிக்கூடம் போகலே தம்பி,”‘ சிறுத்தொண்டப் பத்தன்” போவாணாம் இண்ணா சொன்னாங்க அப்பா? ‘ சிறுத்தொண்டப் பத்தன்”
புஷ்பரதன் : (தன் தகப்பனாரை நோக்கி.) அப்பா ! ஒங்களை இவன் சிறுத்தொண்டப் பத்தன் இண்ணாம்பா. என்னியும் அப்படியே சொல்றாம்பா. நம்ப காவக்காரனைக் கூடம்பா.
முதலியார் : இல்லையப்பா பாட்டைச் சேர்ந்த பகுதி அது.
தருமன் :
ஆயிரம் பேருக்குச்
சிறுத்தொண்டப் பத்தன்-அந்தச்
சிறுத் தொண்டப் பத்தன்
அனுதினமும் அன்னம் போட்டான்
சிறுத் தொண்டப் பத்தன்.
சிறுத்தொண்டப் பத்தன், அன்னக்கொ டியை நாட்டி, தினம் ஆயிரம் பேருக்கு ரெண்டாயிரம் பேருக்கு அன்னம் போட் டுவர்ரானாம்.
“இப்படி இருக்கின்ற”
நாளையிலே-கைலை
நாளையிலே-கைலை
ஈசனும் பார்வதியும் பேசுகின்றார்.
கேட்பவரில் ஒருவன்: அங்கே கைலாசத்திலியா? சரிதான்.
மற்றொருவன் : கைலாசத்திலே நடக்குது.
தருமன் : “என்னாடி பார்வதியே
சிறுத்தொண்டப் பத்தன்-அந்தச்
சிறுத்தொண்டப் பத்தன். இறுமாப்புக் கொண்டாண்டி
பார்வதியே.
அன்னக் கொடி நாட்டினாண்டி
பார்வதியே-அடி
பார்வதியே அது விபரம் காண வேணும்
பார்வதியே
பெருமைக்குச் சோறு போடும்
பேர் வழியும் உண்டு.
கேட்ப : 1 ஹுங்கும்.
கேட்ப : 2 பின்னே இல்லையா!
தருமன்:
சின்னத்தனம் மறைத்திடச்
சோறிடுவ துண்டு.
கேட்ப : 1 உண்டு உண்டு.
கேட்ப : 2 சொச் சோச் சோ!
தருமன் :
சிறுத்தொண்டப் பத்தனை நான்
தெரிஞ்சி வாரேன் பொண்ணே
தெரிஞ்சி வாரேன் பொண்ணே
அவனுக்குச் சிவபக்தி உண்டா என்று
தெரிஞ்சி வர்ரேன்.
பையனும் முதலியாரின் காவற்காரனாகிய குப்பனும் கனவேகமாக வருகிறார்கள்.
காவற்காரன்: (தருமனை நோக்கி) ரொம்ப கோவிச்சிகினாரா எசமான் ? என்று பயத்தோடு கேட்கிறான்.
தருமன் : ‘பின்னென்னா? “தெரிஞ்சு வாரேன் பொண்ணே”- நீதான் இங்கேயே வெகு நேரமாப் பேசிக்கினு இருந்துட்டியே? “தெரிஞ்சி வாரேன் பொண்ணே”
காவற்காரன் : நீ சொல்லிப் புட்டியே?
தருமன் :
“என்று பார்வதியிடம் சொல்லி விட்டே சாமி” நான் சொல்லவே யில்லியே
“சொல்லிவிட்டே சாமி” எழுந்து போனார் செங்காட்டாங் குடிக்கே
காவற்காரன்: ஏது ஏது. ஒன்னாலே எனக்கு ரொம்பத் தொந்தரவு. இந்த எடத்தே வுட்டுக் கௌம்பு.
தருமன்: “செங்காட்டாங் குடிக்கே”
என்னியா?
“செங்காட்டாங் குடிக்கே”
இதற்குள் எஜமான் வந்து விடுகிறார். அவர் காவற்காரனை நோக்கிக் கோபமாக : ஏண்டா எப்போ போனே இந்நேரம் என்னா பண்ணே?
காவற்காரன் : நேராப் போயி நேரா வந்தேனுங்க
தருமன் : “செங்காட் டாங்குடிக்கே”
முதலியார்: நீ பிரயோஜன மில்லே. வேறே எங்கியாவது வேலை பார்த்துக்கொண்டு போய்விடு
தருமன் : “செங்காட்
டாங்குடிக்கே,
டாங்குடிக்கே’
காவற்: இவனைப்பாருங்க நீங்க எமேலேகோவிச்சிகிறிங்க இண்ணு என்னைக் கேலி பண்றானுங்க ..
உடனே தருமன் ஜனங்களைப் பார்த்து உருக்கமாக
“சிவனடி யார் போலே உருவெடுத்தார்”. எஜமான் உள்ளே போய் விடுகிறார். காவற்காரக் குப்பனோ முதலியார் வீட்டின் குறட்டில் போட்டிருக் கும் விசிப்பலகையில் உட்காருகிறான். அச்சமயம் குப்புசாமி முதலியார் காரில் ஏறிக்கொண்டு அவ்வழி யாகப் போகிறார். குப்புசாமி முதலியாரைத் தேடிக் கொண்டு சிங்கார முதலியார் இப்போது அவசர மாகப் போகப்போகிறார் என்பது தருமனுக்கு நினைவி ருக்கிறது. சிங்கார முதலியார் உள்ளே உடுத்துகிறார். அவர் வெளியே வந்ததும் காவற்காரன் மேல் கோள் மூட்டிவிடத் தருமன் திட்டம் போட்டிருக்கிறான். அதற்கு, சிங்கார முதலியார் வெளியில் வருவதற்குள் காவற்காரனை அங்கில்லாமல் அனுப்ப ஒரு யோசனை செய்தான். ”ஆரையா காவற்காரரே” என்றான். காவற்காரன் “ஏன்” என்கிறான்.
தருமன் : அதோ முத்து கூப்புட்டுட்டுப் போராரு ஒங்களே.
இதைக்கேட்டுக் காவற்காரன் போகிறான். அச் சமயம் சிங்கார முதலியார் உடுத்துக் கொண்டு வெளியில் வருகிறார்.
தருமன் : சிறுத்தொண்டப் பத்தன் வீட்டுத் தெருவில் வந்தார் – சாமி தெருவில் வந்தார் சந்தன நங்கை என்னும் தாதி கண்டாள். முதலியாரை நோக்கி,
“நீங்க குப்புசாமி முதலியாரைத் தேடிப் போவதாயிருந்தாப் பயணத்தை நிறுத்த வேண்டியது தானுங்க.
சிங்காரமு: ஏன்? .
தருமன் : அவுரு இப்பதான் காரில் இப்டி போனாருங்க.
முதலியார்: ஓகோ அப்டியா நல்லதாப் போச்சி நீ சொன்னது. எங்கே காவற்காரன்?
தருமன் : இங்கே தான் இருந்தாருங்க. நான் சொன்னேன், “குப்புசாமி முதலியாரு இதோ காரில் போராரு எஜமாங்கிட்ட சொல்லியா ” இண்ணு, அவுரு சொன் னாருங்க நறுக்கிண்ணு ”போய் ஏமாந் துட்டு வரட்டுமே” இண்ணு, எழுந்து இப்பதான் எங்கியோ போனாருங்க. நான் சொன்னேன் இண்ணு அவுருகிட்ட சொல்லி புடாதீங்க.
முதலியார்: நீ நம்ப வீட்டுக்குக் காவல்காரனாக இருக்றியா?
தருமன் : சரிங்க. அவுரு அடிப்பாருங்க.
முதலியார்: அவன் கெடக்றான், நான் பார்த்துக் கொள்றேன்.
சின்னான்: சரிங்க,
“சந்தன நங்கை என்னும்
தாதி கண்டாள்.
தாதி கண்டாள் – சாமியைத் தயவு செய்தே உள்ளே
வாரு மென்றாள்.
முதலியார் உள்ளே போகிறார். காவற்காரன் வருகிறான். தருமன் வெகு உருக்கமாகப் பாட. ஆரம் பிக்கிறான் ஓடி :
“வெண்காட்டு நங்கையும்
ஓடி வந்தாள் அங்கே
ஓடி வந்தாள் அங்கே
விழுந்து பணிந்தாள் சாமி திருவடியில்”
காவற்காரன் (கோபமாக) எங்கடா முத்து கூப்பிட்டாண்ணியே?
தருமன் : ‘அன்ன முண்ண வேணு மென்றே
அடியில் வீழ்ந்தாளம்மை-அவர்
அடியில் வீழ்ந்தாளம்மை
சோறு திண்ண வேணு மென்றே
தொழுது நின்றாள்.”
காவற்: என்னாடா கேக்றேன் நீ பாட்டுக்குப் பாட்றியே?
தருமன் : சும்மா இரையா “சோறு திண்ணவேணு மென்றே தொழுது நின்றாள்.”
காவற்: என்னாடா பாட்றியே?
தருமன்: “சோறு திண்ண வேணு மென்றே
தொழுது நின்றாள்”.
இதற்குள் முதலியார் காவற்காரக் குப்பனுக்குச் சேரவேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து,
“இந்தா! புடி! போ நீ” என்கிறார்.
காவற் : நான் ஒரு குத்தமும் செய்யிலிங்களே. சோத்துக்கு வழியில்லாமே ஆக்கிப் புட்டிங்களே?
தருமன் : “சோறு தின்ன வேணு மென்றே
தொழுது நின்றாள்”
காவற்: நான் எப்படிப் பொழைக்கிறதுங்க?
தருமன் : “சோறுதிண்ணவேணுமென்றேதொழுது நின்றாள்”.
காவற்: பாருங்க அதியே அவன் திலுப்பித் திலுப்பிச் சொல்றானுங்க.
தருமன் : “தொழுது நின்றாள்.”
முதலியார்: நான் வேறு ஆள் வைச்சுட்டேன், பூடு!
முதலியார், வீட்டுக்குள் போய் விடுகிறார். காவற் காரன் மூக்கால் அழுது கொண்டே தருமன் குந்தி யிருக்கும் இடத்தைக் கடந்து போகிறான்.
தருமன் : “புருஷன் எங்கே என்று கேட்டா
ராம் சாமியார்
ராம் சாமியார்
போனார் வெளியில் என்றா
ளாம் அம்மை”
இந்தக் கடைசி அடியைக் காவற்காரனுடைய முகத்தைப் பார்த்துக் கேலியாகப் பலமுறை கூறுகிறான்.
காவற்காரன் மகா தொந்தரவோடு மறைகிறான்.
தருமன் : “ஆளனில்லா வீட்டிலே
அமுது ண்ணே னம்மா – நான்
அமுது ண்ணே னம்மா கணவனில்லா வீட்டிலே
உண்ணே னென்றார்.”
முதலியார் வெளியில் வருகிறார். தருமன் எதிரில் ஓடி நின்று கும்பிடுகிறான்.
முதலியார்: ஜாக்கிரதையா இரு. அவனாட்டம் நடக்காதே. வேறு என்ன தேவை உனக்கு?
தருமன்: எஜமான் தயவு இருந்தாப் போதும்.
முதலியார். சரி. இரு.
முதலியார் உள்ளே போகிறார். தருமன் பின்னி ருந்து வெகு பக்குவமாக,
“அந்தத் துண்டே இப்படி எறிஞ்சிட்டுப் போங்க’
என்கிறான்.
அவர் போட்டிருந்த காவியத் துண்டைத் தரும னுக்குக் கொடுத்துப் போகிறார். தருமன் வாசற்படி யின் விசிப்பலகையில் உட்கார்ந்து கொள்ளுகிறான் காவியத் துண்டைப் போர்த்துக் கொண்டு! அச்சம யம் அவனண்டையில், புஷ்பரதன் வருகிறான்.
புஷ்பரதன்: நீயா காவலு? அப்பா சொன்னாங்களே!
தருமன்: ஆமாந்தம்பி! உள்ளே போயி அப்பாவுது – வேட்டி இருந்தா ஒண்ணு எடுத்தா!
புஷ்பரதன் உள்ளே ஒடுகிறான்.
சின்னான்: ” அப்போது வெண்காட்டம்மை
ஏதுரைத்தாள்-அம்மை
ஏதுரைத்தாள்,
அவர் வெளியில் போயிருக்கார்
என்றுரைத்தாள்.”
“ஆளன் வந்தா லென்னிடம்
அனுப்பு மென்றார்-சாமி
அனுப்பு மென்றார் அழைத்தால் வருவேனென்றே
சாமி சொன்னார்.”
தருமன்: மகிழ்ச்சி ! போடு!
இதற்குள் புஷ்பரதன் ஒரு வேட்டியைக் கொண்டுவந்து கொடுக்கிறான். தருமன் தழைய வீட் நிக் கட்டிக் கொள்கிறான்.
புஷ்பரதன்: நீ பெரிய ஆளா இருக்றியே! எங்கப்பா சொன்னாங்க. முதலிலே ஒண்ணும் வாணாம் இண்ணியாம். ஒடனே துண்டு கேட்டியாம். இப்போ வேட்டி கேட்டியே.
தருமன்: அப்பாவா சொன்னாங்க? தோ பாருதம்பி வேட்டி எனக்கு அழுக்கா இருந்தது. அதோட்டு தான் தம்பி.
புஷ்பரதன் : கதயைச் சொல்லேன் கேட்போம்.
தருமன் : சாமியார் வேவுத்தோடு சாமி சிறுத் தொண்டன் வூட்டுக்கு வந்தாரா ?
புஷ்பரதன்: வந்தாரு.
தருமன் : சந்தண நங்கை பார்த்தாளா?
புஷ்பரதன் : பாத்தா.
தருமன்: ஒடனே கும்பிட்டு “உள்ளே வாங்க” இண்ணா. அப்றம் உள்ளே இருந்து வந்த திருவெண்காட்டு நங்கை பாத்தா. சாப்பி டச் சொன்னா. அதுக்குச் சாமி ‘ ஊட்டுக் காரர் எங்கே ” இண்ணார். ” வெளியில் போயிருக்காரு” இண்ணா. “ஆம்ளே இல் லாத ஊட்டிலே நான் சாப்பிட மாட் டேன், அவுரு வந்தா என்னைக் கூப்பிட்டு அனுப்பு;” இண்ணு சொல்லி புட்டு கோயில் திருவாத்தி மரத்தடியிலே போயி ஒக்காந்துக்கினாரு. புஷ்பர தன் : ஓஹோ ! அப்படியா ? தருமன்: தம்பி ஒரு விசிறி பிஞ்சி போனது கிஞ்சி போனது இருந்தா எடுத்தாயேன்.
புஷ்பரதன் எடுத்து வந்து கொடுக்க, தருமன் வெள்ளை வேட்டி, காவித்துண்டு. கையில் விசிறி யுடன் வீட்டு முதலியார் போலவே விளங்குகிறான்.
அத்தியாயம்-2
வீரப்ப முதலியாருக்கு 70 வயது நடக்கிறது.
அவருக்குத் தலைக்கு உயர்ந்த பிள்ளைகள் இருவர் இருக்கிறார்கள். வீரப்ப முதலியார் மனைவி இறந்து போகவே வேறு கலியாணம் பண்ணிக் கொள்ள நினைத்தார். இந்த எண்ணத்தில் கொஞ்சம் மூச்சு வீட்டார் தம் பிள்ளைகளிடம். பிள்ளைகள் சீறினார்கள். அது முதல் பிள்ளைகளிடம் அது விஷயத்தைச் சொல்லுவதே யில்லை.
துரைசாமி முதலியார் வீரப்ப முதலியாருக்கு 300 ரூபாய் பாக்கி செலுத்த வேண்டியதிருந்தது. வீரப்ப முதலியார் அதைக் கண்டித்துக் கேட்கவில்லை. ஏனென்றால் துரைசாமி முதலியாரால் வீரப்ப முதலி யாருக்கு முக்கியமானதோர் காரியம் ஆகவேண்டி யிருந்தது.
துரைசாமி முதலியாரும் தாரமிழந்தவர். அவருக்கு ஒரு பெண் இருக்கிறாள். அவள் பெயர் கற்கண்டு.
கற்கண்டை 70 வயது சென்ற வீரப்ப முதலி யார் கட்டிக்கொள்ளுவதாகத் துரைசாமி முதலியா ரிடம் கூறினார். கடன் தொல்லையாவது நீங்கட்டும் என்று நினைத்துத் துரைசாமி முதலியார் ஒத்துக் கொண்டார்.
கலியாணத்தைத் தம் ஊராகிய சிதம்பரத்தில் வைத்துக்கொள்வது சாத்தியமில்லை. வீரப்ப முதலி யார் பிள்ளைகள் மலை போல் வந்து குறுக்கே நின்று விடுவார்கள்.
வீரப்ப முதலியார் ரகசிய முறையில் அறுநூறே சில்லரை ரூபாய் எடுத்துக்கொண்டு துரைசாமி முதலியார், கற்கண்டு ஆகிய இரண்டு சீவன்களையும் அழைத்துக்கொண்டு புதுவைக்கு வந்துவிட்டார்.
செட்டித் தெருவில் ஒரு வீடு காலியாயிருக் கிறது. அந்த வீட்டுக் குடையவர் எதிர் வீட்டுக்காரர். அவரைக்கண்டு வாடகை பேசி முடிக்கச் சொல்லித் துரைசாமிமுதலியாரை அனுப்பி விட்டு அதே வீட்டின் எதிரில் தெருவில் வீரப்ப முதலியாரும், கற்கண்டும் நிற்கிறார்கள். இவ்விருவர் நிற்பதையும் பக்கத்து வீட்டின் நடைத் திண்ணையிலிருந்து ராம சாமியும் சீனுவாசனும் கவனிக்கிறார்கள்.
வீரப்பக் கிழவர் கற்கண்டை நெருங்குகிறார். கற்கண்டு விலகி ஜாடையாக கிழவரின் மறுபக்கம் மாறி நிற்கிறாள். பலதடவை இப்படி.
வீரப்ப : கற்கண்டும்
கற்கண்டு : ஏங்க.
வீரப்ப : வெத்திலை இருக்கா?
கற்கண்டினிடம் வெத்திலை இருக்காது என்பது வீரப்பக் கிழவருக்கே தெரியும்.
கற்கண்டு : இல்லிங்களே.!
வீரப்ப : வாங்கிவரச் சொல்லவா?
கற்கண்டு : எனக்குங்களா, நான் வெத்திலை போட்டுக்ற தில்லிங்களே.
வீரப்ப : ஏன் வெக்கப்படுறே? எல்லாப் பெரயாசையும் ஒனக்காகத்தானே. எல்லாம் கொண்டாந்திருக்கேன் ஒனக்கு. ஒத்துக் குடுத்தனம் பண்ணு .
கற்கண்டு : நல்ல குடுத்தனம் பண்ணணும் அது தான் எனக்கு ஆசைங்க.
வீரப்ப : – அப்படி சொல்லு.
இதற்குள் குறிப்பிட்ட வீடு திறந்து விடப் படுகிறது. துரைசாமி முதலியார் “வாங்க” என்று கூப்பிடுகிறார். இருவரும் போகிறார்கள்.
தெருப்பக்கத்து அறையில் கற்கண்டு நுழைந்து ஒரு புறமாக நிற்கிறாள். வீரப்பக் கிழவர் துரைசாமி முதலியாரிடம் ஒரு ரூபாயைக் கொடுத்து,
“நல்ல பலகாரமா பாத்து வாங்கி வாரும்” என்கிறார்.
கற்கண்டு: நானும் வர்ரேன் அப்பா.
வீரப்ப: நீ ஏன் ? அதெல்லாம் சரியல்ல கற்கண்டு.
துரைசாமி: வரட்டுமே?
வீரப்ப: அட சீ! என்னாங் காணும் உமக்கு புத்திகித்தி இருக்கா?
துரைசாமி: சரிதாம்மா நீ இரு! என்னா வாங்கிவரச் சொன்னிங்க?
வீரப்ப: கொஞ்சம் லட்டு, சிலேபி, அல்வா, பழம் இன்னும் என்னா ஓணும் கற்கண்டு ?
கற்கண்டு: போதுங்க ; புதுச்சேரி நெய்முறுக்கு நல்லா இருக்கும் இண்ணாங்களே.
துரைசாமி: அவுரு மெல்ல முடி………
வீரப்ப: ஓய் தூ! ஆருங்காணும்? வாங்கி வாங்காணும் முறுக்கும்.
துரைசாமி: சரி.
துரைசாமி முதலியார் வெளியில் போகிறார். வெளியில் புறப்பட்ட துரைசாமி முதலியாருக்கும் அடுத்த வீட்டின் குறட்டில் காத்திருந்த ராமசாமி சீனுவாசன் ஆகிய இருவர்க்கும் கீழ்வரும் பேச்சு நடக்கிறது:
ராமசாமி : ஏனையா நீங்க எந்த ஊரு?
துரை: செதம்பரம்.
ராமசாமி : அந்தக் கெழவர் ஆரு?
துரை: நம்ப சொந்தக் காரரு.
ராமசாமி : ‘அந்தப் பொண்ணு ?
துரை : நம்ப கொழந்தை
ராமசாமி : எங்கே போறிங்க இப்ப?
துரை : பலகாரம் வாங்க
ராமசாமி : கெழவரை அனுப்பறத்தானே ?
துரை: அது சரியல்ல.
ராமசாமி : வயசு பொண்ணையும் அந்த அயோக்யக் கிழவரையும் தனிக்க உட்டுட்டு நீர் போறது சரியோ ?
துரை: பாதகமில்லே அவர்தான் அந்தப் பொண்ணே கட்டிக்கப் போற மாப்ளே.
சீனிவாசன் : அட பாவிங்களா!
ராமசாமி : அப்டியா சரிதான். போய்வாங்க செதம் பரத்தாரே.
துரைசாமி முதலியார் தலை குனிந்தபடி போய் விடுகிறார். ராமசாமியும் சீனிவாசனும் அறையில் வீரப்பக் கிழவர் செய்கையை ஜன்னல் வழியாகக் கவனிக்கிறார்கள் வெளிப் பக்கமிருந்து.
வீரப்பக் கிழவருக்குக் குஷி அதிகரிக்கிறது. “வாக்குண்டாம் நல்ல மன முண்டாம்” என்று தொ டங்கும் வெண்பாவை விருத்தம்போல் மெதுவாகப் பாடிக்கொண்டே விரல் நொடிப்பால் தாளம் போடுகிறார்.
வீரப்ப : கற்கண்டு, இப்பதான் என் மனசு குளுந்துது பனிக்கட்டி மாதிரி. ஏன் இண்ணு கேளு.
அவள் ஏன் இண்ணு கேட்க வில்லை.
வீரப்ப : ஏன் இண்ணா நாம்ப ரெண்டுபேரும் நான் 100 நெனச்ச மாதிரி ஒரே ஊட்லே இருக்கோம் கற்கண்டூ ! ஒண்ணு கேளேன். கோகிலாம்பா இண்ணு ஒருத்தி, தங்கம் இண்ணு ஒருத்தி, முனியம்மா இண்ணு ஒருத்தி இப்படி பல பேரு ஐயையோ எனக்குக் கடிதாசிமேலே கடிதாசி எழுத றது. உம், எம்மனசு போவவே இல்தே அவங்ககிட்ட. ஒனக்கும் எனக்கும் பொருத்தம் இண்ணு இந்தத் தலையிலே எழுதியிருக்கும் போது எப்டி மனசு போவும். ஹி ஹி. இப்டி வா. ஒக்காரு!
கற்கண்டு : அக்றே இல்லிங்க.
வீரப்ப : கற்கண்டு இந்தா இந்தப் பணப்பையை தான் அந்த டிரங்கில் வை.
அவள் வந்து பையை வாங்குகிறாள். “இதென்னா ஓங் கன்னத்திலே கரி” என்று கூறி அவள் கன்னத் தைத் தொடுகிறார், அவள் பையைக் கொண்டுபோய் டிரங்கில் வைக்கிறாள்.
வீரப்ப : (தனக்குள் உரத்த குரலில்)
அங்கே….மொத்தம் அற நூத்தி அஞ்சி ரூபா கொண்டாந்தேன். துணிமணி முப்பது ரூபா போச்சி. சில்லறைச் செலவு அம்பது ரூபாபோச்சி. இப்ப ஒரு ரூபா. அன்னுத்தி இரவத்தி நாலிரூபா….கற்கண்டு எங்கே எடுத்துவா பையை. அவள் பழையபடி எடுத்து வந்து கொடுக்கிறாள்.
வீரப்ப: இதென்னா தலையிலே ஒட்டடை?
அவள் தலையைத் தொடுகிறார். உடனே பையை அவிழ்த்து ஒண்ணு ஒண்ணாக எண்ணிப் பார்த்து, “கற்கண்டு சரிதான் கொண்டுவை ” என்று கூறுகிறார்.
கற்கண்டு பையை வாங்குகிறாள். வீரப்பக் கிழவர் “மூணு பவுனுக்குக் காப்படிக்றதா இருந்தா” என்று கூறிக் கற்கண்டின் கையைப் பிடித்துக் “கை கனவாசியா இருக்குமோ” என்கிறார். அவள் பதமாகத் திமிறுகிறாள் என்று தோன்றவே கையை விட்டு விடுகிறார். கற்கண்டு பையை டிரங்கில் வைத்துவிட்டு மூலையிலேயே நிற்கிறாள்.
வீரப்ப : – எந்நேரம் நிப்பே ஒக்காரு. சொல்றேனே இப்டி வா! என்னா வெக்கம்? என் பக்கத் திலே வந்து ஒக்கார மாட்டே கற்கண்டு? என்னே வரச் சொல்றியா. வர்ரேன்.
கிழவர் கற்கண்டிடம் போகக் காலடி எடுத்து வைக்கிறார். ஆனால் கிழவரின் குடுமி பின்னால் இழுக் கப் படுகிறது. கிழவர் குடுமியை விடுவிக்க முயன்று கீழே விழுந்து மிகுந்த தொல்லையுடன் எழுந்து சன்னலின் வெளியில் பார்க்கிறார்.
ராமசாமி கூறுகிறான் :
“பெரியவரே, இளம் பெண்ணின் வாழ்வைக் கெடுக்க வேண்டாம்.” சிழவர் மலைத்து நிற்கிறார். கற்கண்டு நெஞ்சில் வியப்பும் மகிழ்ச்சியும், கண்ணில் துன்ப நடிப்பும்.
கற்கண்டு: நீங்க ரெண்டு பேரும் ஆரு. ஏன் அவரை இப்படித் துன்பப்படுத்தனும்?
சீனுவாச: தங்கச்சி ஒன் வாழ்வில் ஒனக்குப் பொறுப்பு இருக்க வாணாமா? தள்ளாத கெழவராச்சே!
கற்கண்டு : எப்படி சொல்றிங்க அவுரு தள்ளாத கெழவர் இண்ணு ?
சீனுவாச: தலை மயிரு, மீசை வெள்ளைக் கோராப்
பட்டு. அது கூடவா தெரியிலே? கற்கண்டு: கெழவருக்கு இப்படியா இருக்கும் பல்லு?
சீனுவாச: ஐயையோ தங்கச்சி சொந்தப் பல்லல் லம்மா. சைனாக்காரன் வேலை. அவுரு கண்ணே பாரம்மா, ஆழக் குழிதோண்டி அதிலே ஒரு முட்டையிட்ட மாதிரி. அவுரு செத்துப்போன மனிதர் கூட இல்லை யம்மா. செத்துப்போன மனிதரின் ஆவீ இன்றாங்களே அதுவா இருக்குமோ என்னமோம்மா.
கற்கண்டு: கண்ணா தெரியிலே அவுருக்கு?
சீனுவாச: தெரியுதா ? எங்கே தெரியுதம்மா? அவுரு உருவு நம்ப கண்ணுக்குத். தெரியுது. அதைக்கொண்டு நம்ப உருவு அவுருக்குத் தெரியறதா அர்த்தமா? வாசப்படிலே காலை வைக்க உத்தேசிக்கிறாரு. ஆனா காலைத் தூக்கி ஆகாயத்தை எட்டி எட்டி ஒதைக்கிறாரு.
கற்கண்டு: என்னா எனக்குச் சிரிப்புக் காட்டப் பாக்றிங்களா?
சீனுவாசு: சிரிக்காம இருக்கிற பந்தயத்லே ஒன்னை ஜயிக்க முடியாதம்மா
வீரப்பா : போங்கடாப்பா போக்கிறித்தனம் பண்ணாதிங்க.
சீனுவாச : ஆமாந் தாத்தா ஒரு சின்னப் பொண்ணெ – இப்டி ஏமாத்றிங்களே, நீங்கபோக்றியா? நாங்க போறிங்களா?” கெடுக்காதிங்க தாத்தா.
இராமசாமி சீனுவாசன் இருவரும் போகிறார்கள். துரைசாமி முதலியார் பலகாரங்களோடு வருகிறார்.
வீரப்ப: கற்கண்டு நீ போய் பலகாரம் சாப்பிடு. போ.
கற்கண்டு போகிறாள்.
வீரப்ப: என் காணும்! கற்கண்டு மேலே உசரெ வைச்சிருக்றது இப்பதிதாங்கறேன் தெரிஞ்சிது. இந்தத் தெருவு ரொம்ப மோசம். இந்த ஊர்லே “சிங்கார முதலியாரிண்ண ஒருத்தர் இருக்காரு. அவுரு நம்பளவுரு. அவரைப் பிடிக்கணும். எல்லாம் சாயும். அதான் சரி. நான் அவரைப் பாத்துட்டு வர்ரேன். மொதல்லே செய்ய வேண்டிய வேலெ அது தான். போய் வர்ரேன்.
துரை: பாத்திப் வோங்கிங்திரமாக : கேப்க
வீரப்ப: அப்ப நான் என்னா என அவ்வளவு கெழவனா?
துரை: அதுக்குச் சொல்லலே.
வீரப்ப: பின்னே எதுக்குச் சொன்னே?
வீரப்பக் கிழவர் போகிறார். ஆனால் தூணில் முடடிக் கொண்டு விழுந்து, நல்ல படியாக எழுந்து வலியை வெளிக்குக் காட்டிக்கொள்ளாமல் போய் விடுகிறார்.
வீரப்பக் கிழவர் போன பின்.
கற்கண்டு : எங்கே அப்பர் போறாரு ஒங்க மருமகப் – புள்ளே ?
துரை: அவருக்கு வயசு என்னமோ கொஞ்சந் தாம்மா.
கற்கண்டு : நல்ல பலசாலி கூட வயித்யம் செய்தா கண்ணு நல்லாய்டும். கடிக்காமல் இருந்தா பல்லு எங்கியும் பூடாது. பித்த நரை அவயசு என்னாப்பா இருக்கும்?
துரை : இந்தச் சித்ரை வந்தா நாப்பது.
கற்கண்டு : அட்டியா சித்ரை வர இன்னும் எத்னீ மாசம் இருக்கு?
துரை: இன்னும் மூணு மாசம் இருக்கு.
கற்கண்டு : அப்ப சித்திரை வரப்போறது நிச்சயம்? அது வரைக்கும் இவரு இருக்கப் போறது?
துரை : என்ன நாயே ஏன் அப்டி சொல்றே?
கற்கண்டு : ஆயிசு கெட்டிதான் இண்ணு சொன்னிங்களே.
துரை : சாதகம் பாத்தேன் ஆயிசு கெட்டிதான்
கற்கண்டு : அப்டிண்ணா சரிதான்.
துரைசாமி முதலியார் பலகாரம் சாப்பிடுகிறார்.
– தொடரும்…
– கற்கண்டு, முதற் பதிப்பு: அக்டோபர் 1944, முத்தமிழ் நிலையம், கோனாப்பட்டு, புதுக்கோட்டைத் தனியரசு.