கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 20, 2022
பார்வையிட்டோர்: 4,215 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1-2 | 3-4 | 5-6

3

சிங்கார முதலியார் வீட்டுக் குறட்டில் தருமன் ஏகப்பட்ட சட்டதிட்டமாக உட்கார்ந்திருக்கிறான் விசிப் பலகைமேல். வீரப்பக்கிழவர், எதிரில் போய் நின்று விநயமாக “தாங்க தானா சிங்கார மொதிலி யாரு?” என்கிறார்.

தருமன் : ஆமாங்க என்னா சேதி? எந்த ஊரு?

வீர: நானு செதம்பரங்க. வீட்லே பொண்டுவ காலமாய்ட்டாங்க, நமக்கிண்ணு ஒருத்தி பொறுப்பா இருந்தா நல்லது. திடீ ருண்ணு கொஞ்சம் வெந்நீரு வைச்சிக் குடுக்கணும். ஒருத்தி இருந்தா… ஹி ஹி…

தருமன் : அது மாத்ரமா நமக்கே ஒண்ணாச்சி: மேலே உழுந்து அழுவ ஒருத்தி ஒணுமே. நல்ல பொணம் இண்ணா என்னா அர்த்தம்? தாலியைக் கைலே தூக்கிக்கினு பூவே எடுத்து விசிறி எறிஞ்சி அழுவ ஒரு கட்டுக் கழுத்தி இருக்க வாணாமா? வெக்கக்கேடு.

வீர : கலியாணம் நானு பண்ணிக்கப் படா திண்ணு நம்ப பசங்க எகுத்தாளி பண்றானுங்க.

தருமன் : அவுனுவ ஆருண்ணேன்.

வீர : அதுக்கு மேலே ஒரு பொண்ணே பாத்தேனுங்க. கலியாணத்தே புதுச்சேரியிலே வைச்சி முடிச்சிப்புடலா மிண்ணு யோசனை. பொண்ணையும் பொண்ணு தகப்பனாரு துரைசாமி முதலியாரையும் கையோடகூட்டி வந்துட்டேன். செட்டித் தெருவுலே வீடு பேசி எறங்கி இருக் கோம். அந்தத் தெருவுலே போக்டாப் பசங்க ஜாஸ்திங்க.

தருமன் : நீங்க என்னா மரவு?

வீர: மொதிலியார் தானுங்க.

தருமன் : நம்ப மரபு தான்.

வீர : அதனாலே தான் இங்கே ……..

தருமன் : சரிதான். கடமைப் பட்டுட்டேன். அந்தத் தெருவிபோக்றித் தெருவுதான். இருக்கட்டும், எல்லாம் ஏற்பாடு பண்றேன். எடுத்தேன் கவத்தேனின்று கலியாணத்தே முடிச்சிப்புடணும், அப்டி வைச்சிக்கிங்க பன்னிப் பன்னி எங் கேக்றிங்க. இது ஒரு மாதிரி ஊரு. பயப்படவேண்டியதில்லே. இங்கே நம்ப எடத்லே ஆரும் ஒண்ணும் பண்ணிக்க முடியாது. இந்த ஒலகத்லியே நான் ஒரு ஜீவனுக்குத் தான் பயப்படுவேன். எங்க அண்ணனுக்கு, உள்ள தான் இருக்காரு. அவுரு ஒரு சிடுபடுப் பேர்வழி, அவ்ளவு தான். என்னை எதிலியும் கவனிக்காதே இண்ணு வாரு. நீங்க இருக்கிங்க ஒங்க சங்கதியைச் சொன்னீங்க. நான் கவனிக்கணுமே ஐயோ இண்ணு நெனைக்கிறேன். இதெல்லாம் அவருக்குப் புடிக்கவே புடிக்காது. தெரிஞ்சாலும் ஒங்களியும் வோட்டுவாரு. மத்தபடி பொண்ணுக்குச் சம்மதந் தானே?

வீர : உசுருங்க

தரு : பொண்ணு தகடபனாருக்கு?

வீர : மணவறையிலே. தம், மவளே ஏம் புக்கத்லே – குந்தவச்சி கண்ணாலே பாத்துட்டாப் போதும் இண்றாரு அவுரு.

தரு: சொச்சோ! அப்டியா? இப்ப ஏங்கிட்ட என்னா எதிர்பாக்றிங்க பணந்தானே? சரி, எவ்வளவு தேவை? நூறு ரூபாய்லே எலலாம முடிச்சிப்படலாமா ?

வீர : ஐயையோ! சொன்னதே போதுங்க…

தரு : வெக்கப்படாதிங்க…

வீர : எனக்குக் காசுபணம் வாணுங்க.

தரு : நம்ப மரபா இருக்கிற விஷயத்லே பணமா பெரிசு?

வீர : இல்லிங்கா ஏங்கிட்டப் பணம் இருக்கு. இல்லாட்டிப்போனா கேக்றேனுங்க..

தரு: நீங்க வெக்கப்படறதாத் தெரியுது.

வீர : வெக்கம் என்னாங்

தரு: நம்ப சாதி இருக்குதே ரொம்பக் கேவல நெலைக்கு வந்துட்டுது. அதுனாலே ஒருத்தருக்கு ஒருத்தர் நமக்குளளே உதவியா நடந்து கொள்ளணும், அதுக்காகத்தான் சொல்றேன். சரி, பொண்ணுக்கு ஏதாவது நகை நட்டு ஏற்பாடு பண்ணணுமே? அப்டி இல்லாட்டிப் போனா நல்லா இருக்காது.

வீர : நீங்களே செஞ்சிபுடுங்க அததுக்கு எப்டியோ அப்டி. ஒங்க கைலே குடுத்துடுறேன். எல்லாத்தையும் நீங்கதானே முடிச்சிவைக்கணும்.

தரு: இப்ப எங்கே நகை செய்றது, வேண்டாம். நம்ப ஊட்லே இருந்து செட்டா அனுப்பி வைக்றேன். மெதுவாச் செய்துகினு அப்றம் குடுங்க நகையை, அவுசரமில்லே.

வீர : உங்க தயவுங்க.

வீரப்பக் கிழவர் தம்மிடமிருந்த ரூபாயில் சில்லறையை மாத்திரம் எடுத்துக்கொண்டு மொத்தமாக 500 ரூபாயைப் பையுடன் தருமன் எதிரில் வைக்கிறார்.

தரு: இங்கியா வைக்றிங்க, சரி. ஒப்புக்கொள்றேன். ஒரு விஷயமாத்ரம் சொல்றேன். அது என்னாண்ணா இந்த ஊரிலே ஒருத்தன் மாத்ரம் இருக்கான் எனக்குவிரோதி. அவங்கிட்ட ஒரு முப்பது லக்ஷ ரூபா காசி கெடந்து கூத்தாடுது. பல காரியத்லே அவனைத் தலையெடுக்க வொட்டாதே அடிச்சேன். எதுக்குச் சொல்றேன் அவன் நான் கவனிக்ற காரியத்லே எதிரா வரக் கூடும். அந்தக் காலத்லே நீங்க பயந்து பூடக் கூடாது. காரியத்லே பின்னிடையக் கூடாது. அதுதான் நீங்க கவனிக்க வேண்டியது.

தரு: அதென்ன அப்டிச் சொல்றிங்க நம்ப மரபு! ஒரு போதும் இல்லிங்க. கிழிச்ச கோட்டெ தாண்டுவனா?

தரு: அதாங் கேட்டேன். சரி எல்லாம் நான் பாத்துக்றேன். நீங்க எறங்கி இருக்ற வூட்டுக்கு வாங்க போவலாம்.

வீர : நானே அவுங்களே அழைச்சிவரேனுங்க.

தரு: சரியல்ல. முன்னே போங்க இதோ வர்ரேன். நான் அங்கே தலையைக் காட்டிப் புட்டா எதிர்ப்பு மட்டா இருக்கும், அதுக்காக.

வீர : ஆமாங்க ஆமாங்க.

தரு: முன்னே போங்க.

வீரப்பக் கிழவர் முன்னே போகத் தருமன் பணப்பையை அடிமடியில் பத்திரப்படுத்திக் கொண்டு பின் தொடர்கிறான்.

4

வீரப்பக் கிழவர் “கற்கண்டு” என்று அழைத்துக்கொண்டே உள்ளே நுழைகிறார். துரைசாமி முதலியாரும் கற்கண்டும் “ஏன்” என்று முன்வந்து நிற்கிறார்கள்.

வீர : ஆரு வர்ராரு பாத்திங்களா? மொதிலியாரவாள்! நம்ப காரியம் இனிமே ஆராலும் தடைப்படாது. அந்தப் போக்கிறிப் பசங் களே இப்ப வரச்சொல்லுங்க. ஜோட்டால் அடிக்றேன்.

துரைசாமி முதலியாரும் கற்கண்டும் முதலியாரைத் தரிசனம் செய்கிறார்கள். பாய் கொண்டுவந்து போடுகிறார்கள். ஓடுகிறார்கள், ஆடுகிறார்கள்.

வீர : இவுங்க தான் இந்தப் புச்சேரிப் பட்டணத்துக்கு ராசா மாதிரி, “சிங்கார முதலியார் இண்ணா-கோவிச்சிக்காதிங்க-அழுத பிள்ளையும் வாயெ கெட்டியா மூடிக்கும் ஓடிப்போயி.

தருமன் : உம் நமக்கு மேலெல்லாம் ஒலகத்லே உண்டுங்க. ஓம்பேரென்னாம்மா?

கற்: கற்கண்டு. நாணிக் கொள்ளுகிறாள்.

தரு: அப்படியா கற்கண்டு இவரெ கல்யாணம் பண்ணிக் கொள்றதிலே அட்டிகிட்டி ஒண்ணுமில்லியே?

கற்: ஒங்குளுக்குப் பிரியமிருந்தா எனக்குப் பிரியந்தானுங்க.

தரு: நீங்க தானுங்களா துரைசாமி முதலியாரு? கலியாணத்தெ முடிச்சிப்புட வேண்டிது தானே?

துரை: சீக்கிரம் முடிச்சிப்புட்டா தேவலை.

தரு: ஒண்ணு பண்ணுங்க. வீரப்ப மொதலி யாரு மாப்பிள்ளை யாவும் இருக்காரு இங்கே சிலருக்குப் புடிக்காதவராயும் இருக்காரு. முதலியார் தெருவுக்கு மேலண்டைப் பக்கத்தில் ஒரு வூடு காலியா இருக்குது இண்ணு கேள்விப் பட்டேன். முன்னே அதெப் போயி முடிச்சி வீரப்ப மொதலியாரு அதிலே இருந்துடணும். ஒடனே செய்யுங்க இதெ.

நாளைக்கி முகூர்த்த நாளு. முடிச்சுட வேண்டியது தான். வேறே பேச்சில்லே.

துரை : நல்லதுங்க.

வீர : அதுக்குள்ள எப்டி?

தரு : எல்லாம் செட்டா நான் அனுப்பிடுறேன் அனுப்புறவன் நானில்ல? நாளெ வளத்தப்படாது

வீர : அப்டிண்ணா சரி. துரைசாமி மொதல்யாரே எழுந்திரும். நானும் வர்ரேன்.

தரு: நான் போகணும். ஆகவேண்டிய காரியம் அதிகம் இருக்குது.

தருமன் அவசரமாகச் சென்று வீதியின் முனையில் நின்று இரு கிழங்களும் வெளியில் போகிறார்களா என்று கவனிக்கிறான். இருவரும் போகிறார்கள். கற்கண்டைத் தனியாகச் சந்திக்க, வீட்டை நோக்கி வருகிறான். வழியில் ராமசாமியும் சீனிவாசனும் நிற்கிறார்கள்.

ராமசாமி : சிங்கார முதலியாரா?

தரு : ஆம் என்னா சேதி?

ராம : வாங்களேன்.

தரு : இல்லே அவுசரமாப் போகணும்.

ராம: என்னாங்க சிங்கார முதலியாரே ஒரு சேதி கேட்டுப் போகப்படாதா?

தரு : ஏன்? என்னா சேதியப்பா?

தருமன் நிற்கிறான்.

ராம்: அந்தக் கெழவனுக்கா அந்தச் சின்னப் பொண்ணெ கண்ணாலம் பண்ணி வைக்கப் போறிங்க?

தரூ : அதுபத்தி ஒங்களுக்கு என்னா கவலை? உம்?

ராம் : அப்படிங்களா? ஒங்களுக்கு என்னாங்க கவலெ? ஏதாவது தரவோ?

தரு: மரியாதையாப் பேசுங்கப்பா.

சீனு : மரியாதையாப் பேசு ராமசாமி.

தரு : நான் யார் தெரியுமல்ல?

சீனு : அவுரு யாருண்ணு தெரியுமல்ல ராமசாமி ஒனக்கு?

ராமசாமி சிரிக்கிறான் விழுந்து விழுந்து. சீனுவும் சிரிக்கிறான்.

ராம : ஏண்டா சிறுத்தொண்டப் பத்தன் கதை பாடுறவன் இண்ணு எங்களுக்குமாடா தெரியாது காமாட்டி?

தரு : தெரியுங்களா என்னை? தெரிஞ்சு தான் இருக்குதுங்க ஒங்களுக்கு, மன்னிக்கணுங்க

சீனு : நீ அந்தப் பொண்ணெ கட்டிக்கொண்டாக் கூடச் சம்மதம் எங்களுக்கு. தள்ளாத கெழவனுக்கு வேண்டாம்.

தரு: ஒங்களுக்குத் திருப்தியா முடிச்சுப் புடரேன் ஒரு மாதிரி. ஒங்க ஒதவி இருக்கணும் சாமி.

ராம : சாமியாவுது பூதமாவுது. முயற்சி எடுத்துப் பாரு. எங்க ஒத்தாசை நிறைய இருக்கும் ஒனக்கு போறியா? அப்பப்ப வந்து சொல்லு.

தரு : சரிங்க.

தருமன் கற்கண்டின் எதிரில் போகிறான்.

கற் : வாங்க.

தரு: அப்பா எங்கே?

கற் : ரெண்டு பேருந்தான் வூடு பாக்கப் போனாங்க.

தரு : கற்கண்டு, ஒன்னே தனியாக் கண்டு ஓ மனசை அறியணும் இண்ற எண்ணம். அந்தப் பெரியவரை நீ கட்டிக்கச் சம்மதிச்சதுக்கு என்னா காரணம்?

கற்: அதுவா. எங்கப்பா அவுருகிட்டே 300 ரூபா கடன்பட்டு இருக்காருங்க. அதுக்காக என்னெ தொந்தரவு செய்றாருங்க அந்தக் கெழவரெ கட்டிக்கச் சொல்லி.

தரு: நானு நெனைச்சேன்! அப்படிண்ணா ஒனக்குப் பிடிக்கலே?

கற்: ஆனா எங்கப்பா தனிக்கட்டெ. அவுரு மனசெ திருப்திப் படுத்தனும் நானு

தரு: சவுகரியமா வேறு ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கறத்லே தடையில்லே.

கற்: ஒங்களாலே தான் முடியுங்க. அவுரும் கெழவரா இருக்கப் படாதுங்க.

தரு :நல்லாச் சொன்னே. துள்ளுகாளை. என்னாட்டம் இருப்பான் அசல்.

கற் : சரிங்க.

தரு : நல்ல சம்பாதனைக்காரன்.

கற் : சரி தானுங்க.

தரு : ஒங்கப்பா அந்தக் கெழவருக்குக் குடுக்க வேண்டிய 300 ரூபாயை அந்தப் புள்ளை யாண்டான் குடுத்துப்புடுவான்.

கற் : அதாங்க வேண்டிதுங்க.

தரு : இதெ மனசிலே வை. கட்டவுத்து உட்டு டாதே, காரியம் கெட்டுடும்.

கற் : உறுதிங்க.

தரு: உம், பெண் புத்தி பின் புத்தி இண்ணு வாங்க. நான் சொல்ற ஆளே கண்ணாலம் பண்ணிக்கிறதாக் கைபோடு பாக்கலாம்.

கற் : (பரிதாபமாக) அவரெ ஒருதரம் கண்ணாலே பாத்தாத் தேவலைங்க.

தரு : என்னெ பாத்தா அவனெ பாக்கவேண்டி யதில்லே கற்கண்டு.

கற் : கெழவன் இல்லிங்களே? ஒங்களாட்டம் இருந்தாச் சரிதானுங்க.

தரு : சரி.

கற் : பெரிய அந்தஸ்துக்காரராய் இருக்கப்ப டாதுங்க.

தரு : அப்டியா? சரி. சாதாரண அந்தீசுதான்.

கற் : பிச்சை எடுக்கிறவரா யிருந்தாக் கூடம் பாதகம் இல்லிங்க கெழவராயில்லாமே கண்ணுக்குப் புடிச்சி இருந்தாப் போ துங்க. 300 ரூபா கெழவர்கிட்ட எறிஞ் சிப் புடணுங்க. கையை நீட்டுங்க.

(கையை நீட்டுகிறான் தருமன்)

கற் : ஐயோ நீங்க ஏழையா இருக்கப்படாதுங்களா?

தரு : கற்கண்டு ஏழையை நீ ஏன் விரும்புறே?

கற் : பணக்காரர் என்னெ ஏன் விரும்புறாரு? விரும்புனாலும் பின்னாலே? ஏழையா யிருந்தா அப்டியில்லிங்க என் உடம்பு உண்டு. பாடுபடத் தைரியம் உண்டுங்க,

தரு : அப்டியா! ஐயோ! பொண்ணே கற் கண்டு நான் சொல்ற அந்தப் பையன் சனங்களுக்கு, சிறுத்தொண்டப் பத்தன் கதை சொல்லி நல்ல வெதமாப் பொழைக் கிறான். இனிமே அந்த வேலையை உட்டுடச் சொல்றேன். வேறே வேலெ பாத்துக் குடுக்கறேன். அவன் கையிலே 500 ரூபா ரொக்கம் வைச்சிருக்கான். என்ன சொல்றே?

கற்: அவுரு எப்டி இருப்பாருங்க?

தரு : என்னாட்டமே

கற்: சத்தியமா அவுரெ கட்டிக்றேன். அவுரு சிறுத்தொண்டப்பத்தன் கதை சொல்ற வேலையை உடவேண்டிய தில்லிங்க. அவுரு கெழவரில்லியே?

தரு : சத்யமா இல்லை.

கற்: கண்ணுக்குப் புடிக்குங்களா?

தரு : என்னே ஒனக்குப் புடிக்குதா?

கற் : புடிக்குதுங்களே.

தரு: என் போலவே இருப்பான் இண்றேனே. ஆனா நெலமை நான் சொன்னதுதான்

கற் : ஐயா என் தாய்மேலே ஆணை. அந்த நெலமை எனக்குச் சம்மதம்.

தரு : அப்டியானா கை போடு.

கற் : ஒரு தரம் அவரெ என் கண்ணாலே பாத்துட்டாப் போதும்.

தரு : நாந்தாங் கற்கண்டு.

கற் : ஆ ! நீங்க பணக்காரராச்சே.

தரு : ஆர் சொன்ன திண்ணேன்.

கற் : கெழவர் சொன்னாரே என்னமோ மொதிலியாரிண்ணு .

தரு : சிங்கார மொதிலியார் தாங்கதானா இண்ணாரு. ஆமாங்க இண்ணேன். நான் சிறுத் தொண்டப் பத்தன் கதை பாடறவன் தானே. மனசிலே போட்டுவை. சம்மதமா கற்கண்டு?

தருமன் அவளெதிரில் கையை நீட்டுகிறான். அவள் கைபோட்டுக் கொடுத்ததோடு அந்தக் கைக்கு முத்தங் கொடுத்து,

“என் மைசூரு ராஜாவே! மாணிக்கக் கூஜாவே! என்னெ கண்ணாலம் பண்ணிக்கிறிங்களா?” என்கிறாள்.

தரு: அடி என் செவ்வாழப் பழச்சீப்பே! சீமை எலந்தந் தோப்பே! நான் சொல்றபடி கேக்கணும் நீ…

கற் : தங்கத்து வார்ப்படமும் தானாக வந்து நிண்ணு கோடு கிழிச்சுட்டா கொஞ் சோண்டு தாண்டுவனா?

தரு: கற்கண்டு இப்ப எனக்கு என்னா மகிழ்ச்சி தெரியுமா?

கற் : எனக்கு மாத்ரம் கசக்கு திண்ணு நெனைக்றிங்களா? மாம்பழத்தட்டு வா இண்ணு கூப்பிட்டாப்லே, நஞ்ச பெலாச்சொளே நாக்லே வந்து குதிச்சாப்லே, தேனான கொளத்லே, திட்டுண்ணு விழுந்தாப்லே, சோனெ மழையும் பவுனாச சொரிஞ் சாப்லே, கொடலை மல்லிகைப்பூ கொட்டி முடிச்சாப்லே, வடம்புடிச்ச தேரு வாசல்லே வந்தாப்லே, அப்டியே துள்ளுது மகிழ்ச்சி தெரியுங்களா?

தரு : கற்கண்டு ஒன் அழவுலே நானு அட்டை யாட்டம் ஒட்டிக்கப்டாது இதுங்காட்டியும். இண்ணையவரைக்கும் தெபாரு, சிரிக்காதே; சுருட்டி மடக்கிகினு இங் கியே உழுந்துட வைக்காதே சொல்லிப் புட்டேன். ஓங்கண்லே காந்தமா இருக் இருக்கும்போடி.

கற் : ஏங்க அப்டி சிடுசிடுண்ணு இருக்கிங்க.

தரு: காரியம் பெரிசி கொறையும் முடிக்க வாணாமா?

கற் : அதுக்குச் சொல்றிங்களா. பறிச்சித் திங்க றாப்லே சிரிச்ச மொகம் இப்டி மாறுச்சே என்னாடாப் பாண்ணு பாத்தேன்.

தரு : இப்ப ஒரே ஆபத்து.

கற் : என்னா ?

தரு : நாம்ப ரெண்டு பேரும் இப்பக் கொஞ்ச நேரம் பிரியணுமே.

கற் : ஆமாங்க என்னா பண்றதுங்க, ஒடனே வந்துடுங்க.

தரு :உசுரெ ஒரு கையாலே புடிச்சிக்சினு இரு என் பச்செ கிளியில்லே! கொஞ்சநேரம்.

கற் :வர்ரது நிச்சயமா இருந்தா நான் சாவாமே இருக்கறது நிச்சயந்தான்.

தரு : நிச்சயம் நூறு பங்கிலியும்.

கற் : அப்டிண்ணா துன்பமில்லை ஓ!

தரு : வரட்டுமா?

கற் : போறிங்க?

தரு : வந்துடுவாங்களே.

கற் : வந்துடு வாங்களா?

தரு : உம். வர்ரேன்.

கற் : போறிங்க?

தரு : ஆக வேண்டிது ரொம்ப இருக்குதே நாளை அதிகாலையிலே கலியாணமாச்சே.

கற் : கவனமாப் பாருங்க இங்கியே இருந்துட்டிங்களே.

தரு : போய் வர்ரேன்.

கற் : போறிங்க, ஒண்ணு கேக்க ஆசையா யிருக்கு.

தரு : என்னா அது?

கற் : நீங்க திட்டாதிங்க.

தரு : நானா, சே, சொல்லு சும்மா.

கற் : ஒங்க பேரு சொன்னா தருமமா இருக்கும்.

தரு : அதுதான் என் பேரு. நீதான் சொல்லிட் டியே தருமம் இண்ணு .

கற் : ஐயையோ பேரேச் சொல்லிப்புட்டேனே.

தரு : தெரியாதிருக்கும்போது ஆம்படையாம் பேரே சொன்னா குத்தமில்லே கற்கண்டு. நான் வர்ரேன் நாழி ஆவுது.

கற் : (வருத்தமாக) நான் கண்ணை மூடிக்கிறேன் சொல்லாமே பூடுங்க நீங்க.

கண்ணை மூடிக் கொள்ளுகிறாள். தருமன் அவளைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே போய் விடுகிறான்.

கற் : பூட்டிங்களா? (உரத்தி)

தரு : பூட்டேன்.

கற்: (தூரமாகச் சென்றவனை) இப்பவே வர்ரிங்களா?

தரு: (உரத்தி) வர்ரேன்.

– தொடரும்…

– கற்கண்டு, முதற் பதிப்பு: அக்டோபர் 1944, முத்தமிழ் நிலையம், கோனாப்பட்டு, புதுக்கோட்டைத் தனியரசு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *