கருவேப்பிலைப் பொடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 22, 2025
பார்வையிட்டோர்: 5,153 
 
 

விவசாயி முத்து

நீலகிரி மலைப்பகுதியில் விரைவாக நடந்து ஊதாப்பூ செடிகள் பரவிக்கிடந்த இடத்தில் நின்று பார்த்தான் முத்து. எவ்வளவு அழகான ஊதாப்பூக்கள்!  நீண்ட விரல்களை ஒத்த ஊதாப்பூக்கள், மணப்பெண் வெட்கப்படுவது போல, எப்போதும் கீழ் நோக்கி தொங்கும். சிலர் இவைகளை ஊமத்தம்பூக்கள் என்று தவறாக அடையாளம் காட்டுவர். ஊமத்தம் பூக்கள் மேல் நோக்கி பார்த்தவாறு வாயை பிளந்து கொண்டு பார்ப்போரை ஏளனம் செய்வது போல நிற்கும். 

கிராமத்து வாழ்க்கையின் பாடங்களில் ஒன்றுதான் எந்தெந்த செடிகள் நச்சுடைவை எது நச்சற்றவை என்பது. முத்துவுக்கு ஊதாப்பூ செடியைப் பற்றி  நிறையவே தெரியும். ஊதாப்பூ இலைக்கு தனியான மணமில்லை, சுவையில்லை ஆனால் நச்சுக்குக் குறைவில்லை. 

மடியில் சொருகியிருந்த துணிப்பையை எடுத்து ஊதாப்பூ செடிகளிலிருந்து முதிர்ந்த இலைகளை கிள்ளி பையில் அடைத்தான் முத்து. தேவையான அளவு நிரப்பிய பையை கவனமாக மேல்புறத்தில் நாடாவால் கட்டி எடுத்துக் கொண்டான். அவசரமாக அங்கிருந்து விரைந்தான்.

டாக்டர் சிங்காரம் 

கோவையை விட்டு நீலகிரி மலையடிவாரத்தில் கட்டப்பட்டிருந்த வளாகங்கள் ஒன்றில் ஓய்வுகால வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.  வேலை ஓய்வுக்குப் பின் இயற்கை உணவுகளை விரும்பி சாப்பிடுவது  வழக்கமாயிற்று. மணமிக்க தரமான கருவேப்பிலைப் பொடி அவருக்குப் பிடித்த ஒன்று. 

டாக்டர் சிங்காரம் தன் வழக்கமான பண்டத்துடன் பால்கனியில் உட்கார்ந்தார்.  தட்டில் சூடான இட்லி, அளவோடு வற்றல் மிளகாயுடன் சேர்த்து அரைக்கப்பட்ட கருவேப்பிலைப் பொடி, தரமான நல்லெண்ணை. பக்கத்தில் சூடாறிய குடி தண்ணீர். ஒவ்வொரு இட்லித்துண்டையும் எண்ணெயுடன் குழைக்கப் பட்டிருந்த பொடியுடன் சேர்த்து ருசித்து சாப்பிட ஆரம்பித்தார்.

நிதானமாக இட்லியை சாப்பிட்டு முடித்து சமையல்காரன் ராமுவை  கூப்பிட்டார்.  சீனி இல்லாத ஒரு கோப்பை  சூடான தேநீர் எடுத்து வரச்சொன்னார்.  கை கழுவ எழுந்தவருக்கு தலை சுற்றியது. மேசையைப் பிடித்துக்கொண்டே சற்று நின்றவருக்கு வயிற்றைக் குமட்டியது. தேநீருடன் வந்த ராமு அவர் தடுமாறுவதைப் பார்த்துவிட்டு அவரை கீழே விழாமல் பிடித்துக்கொண்டு மெல்ல உட்கார வைத்தான்.  

டாக்டர் சிங்காரம் ஆம்புலன்ஸ் வண்டியில் போகும்போதே இதயத் துடிப்பு மிக அதிகமாகி மரணமானார்.  அவசர சிகிச்சை எதுவுமே அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவருடைய தீடீர் மரணம் போலீசாருக்கு சந்தேகத்தை உண்டாக்கவே, பிரேத பரிசோதனைக்கு உடலை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மரணத்துக்கு காரணம் என்ன என்பதை போலீசார் மும்முரமாக விசாரிக்கத் தொடங்கினார்கள். 

சமையல்காரன் ராமுவை தீவிரமாகவே விசாரித்தனர். சிங்காரத்துக்கு பிடித்த சாப்பாட்டு பண்டங்கள் என்னென்ன, அவருக்கு திடீர் திருப்பம் ஏற்பட்ட மாலை என்ன சாப்பிட்டார் என விசாரித்து, அந்த அயிட்டங்களை பறிமுதல் செய்து, பரிசோதனை செய்தனர்.  சிங்காரம் சாப்பிட்ட எந்த பண்டத்திலும் எந்தவிதமான நச்சுப் பொருள்களும் கலக்கப் படவில்லை என்பதை ‘டாக்ஸிகாலஜி’ உறுதிப்படுத்தியது. சிங்காரத்தின் உடலிலிருந்து எடுத்த இரத்தத்தையும் சதைத் துண்டுகளையும் பரிசோதனை செய்தபோது அதிலும் எந்த நச்சுப் பொருளும் இல்லை என்பது தெளிவாகியது. அவருக்கு ஏற்கெனவே இரத்த அழுத்தம், இருதயக் கோளாறு மற்றும் சிறுநீரகக் கோளாறு இருந்த காரணத்தால் திடீர் மரணம் ஏற்பட்டதாக பிரேத பரிசோதனையில் முடிவு செய்யப்பட்டது.

டாக்டர் சிங்காரத்தின் விசாரணை கோப்புகள் மூடப்பட்டன. இயற்கை மரணமா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கேள்வி மட்டும் இன்றும் தொடர்கிறது. தீர்மானிக்கப்படாத மர்மங்களில் ஒன்றாக இதுவும் சேர்க்கப் பட்டது. 

விவசாயி முத்து

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்…

தன் ஐந்து வயது மகனை ஆம்புலன்சில் தூக்கிக் கொண்டு டாக்டர் சிங்காரம் வேலை செய்த மருத்துவமனைக்கு வந்தான் விவசாயி முத்து. பையனுக்கு ‘சாதாரண காய்ச்சல் முத்து, ரெண்டு நாளுலே சரியாயிடும்…சுர  மாத்திரை கொடுக்க சொல்றேன்’ என்று சொன்னவர் சிங்காரம்.  அவருடைய பேச்சை நம்பி பிள்ளையை வீட்டுக்கு அழைத்துப் போன அடுத்த நாளே முத்து மகனை இழந்தான். பிள்ளையை பறிகொடுத்த முத்துவின் மனைவி அடுத்த ஆறு மாதத்தில் கண்ணை மூடினாள். மகனுக்கு கடுமையான மூளைக்காய்ச்சல் என்று பிறகுதான் தெரிந்தது.  குழ்ந்தையை பலி கொடுத்து மனைவியையும் இழந்த முத்துவைச் சுற்றி உலகம் நகர்ந்தாலும் முத்துவால் நகர முடியவில்லை. ‘மகனைக் கொன்ற சிங்காரத்தை’ முத்துவால் மன்னிக்கவே முடியவில்லை. 

சமையல்காரன் ராமு

போலி ஆதார் அட்டையில் ‘ராமு’ என்ற பெயருடன் சமையல் வேலைக்கு வந்து நின்ற முத்துவை சிங்காரம் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. இயற்கை உணவு தயாரிப்பில் நிறைய அனுபவம் இருப்பதாய் ராமு சொன்னதும் சிங்காரம் ‘இனி கருவேப்பிலைப் பொடி கிடைக்குமான்னு கவலை இல்லை’ என திருப்தி கொண்டார். அன்றிலிருந்து ராமுவின் சமையல்தான்.

ராமு வற்றல் மிளகாயுடன் சேர்த்து அரைக்கப்பட்ட கருவேப்பிலை பொடியில் கணிசமான அளவு ஊதாப்பூ இலைப் பொடியைச் சேர்த்தான்.  அதை மிக சுவைத்து சாப்பிட்ட சிங்காரம் அன்று மரணமடைந்தார். ராமு சிங்காரத்தின் வீட்டு சமையற்கட்டில் இருந்த  தடயங்கள் அனைத்தையும் நீக்கி, துப்புரவு செய்தான். பிறகு தான் ஆம்புலன்சை அழைத்தான்.

மரணம் ஒரு முடிவு அல்ல; முத்துவுக்கு சிங்காரத்தின் மரணம் பதிலாகவே அமைந்து, ஏதோ ஒருவிதமான அமைதியைத் தந்தது. நீடிக்குமா?

(பி. கு. Digitalis Purpurea என்பதுதான் அந்த  ஊதாப்பூக்கள் கொண்ட நச்சுச்செடியின் தாவரயியல் இலக்கணப் பெயர். இது குளிர் பிரதேசத்தில் வளரும் வகை.  இந்தியாவில் நீலகிரி மலைப்பகுதியிலும் காஷ்மீர் மலையடிவாரப் பகுதியிலும் வளரும் ஊதாப்பூக்கள் அழகையும் அழிவையும் ஒருங்கே கொண்டது இயற்கையின் படைப்பு  மர்மம்.)

Washington Sridhar பிறப்பு: உத்திரன்மேரூர், தமிழ்நாடு வசிப்பு: வாஷிங்டன் டி.சி. அருகில் விழுப்புரத்தில் உயர்நிலைப்பள்ளி முடித்துவிட்டு, சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற்றபின், அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வேதியிலில்முனைவர் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகள் வேதியியலில் ஆராய்ச்சி முடிந்தபின், பால்டிமோர் வட்டாரத்தில்கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்வேலை ஓய்வு பெற்றார். வாஷிங்டன் - பால்டிமோர் வட்டாரத் தமிழச்சங்கத்தின் பொறுப்புகள் ஏற்று, பிறகு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *