கரும்புலி




கங்கா நித்திரையில் இருந்து விழித்தபோது கடிகாரத்தில் பன்னிரண்டு மணி காட்டியது. தனது பக்கத்தில் படுத்திருந்த முரளியின் தோளைக் கையால் தொட்டுப்பார்த்தாள். அவன் அசையாமல் படுத்திருப்பதை உணர்ந்ததும், அவனது குஞ்சாமணியருகே கையை வைத்தாள்.
வெம்மையாக இருந்தது. பாயில் கையால் தடவியபோது பாய் ஈரமில்லை. மூக்கின் அருகே கையை வைத்து உறுதிசெய்தாள்.
சில நாட்களாக நித்திரையில் அவன் சிறுநீர் கழித்துவிடுகிறான். இதுவரையும் இல்லாத பழக்கம் ஐந்து வயதில் அவனுக்கு ஏற்பட்டிருக்கு. அவனைக் குறை கூறமுடியாது. தாயோடு இருக்கும்போது எனது விடயங்கள் அவனைப்பாதிக்காதா? ஆம்பிளைப்பிள்ளை தகப்பன் இல்லாது வளர்ந்து வருகிறான். ஊரினது வாய், வெத்திலையை குதப்பியபடி தொடர்ச்சியாக துப்பியபடியே இருக்கிறது. அதனது தூவல் அவனது பாடசாலைக்கும் காற்றுவாக்கில் பரவியிருக்கும். அவைகளைப் பரியாத வயதுஎன நினைத்தாலும், அவைகள் எல்லாம் நல்லதற்கல்ல என்பது புரிந்திருக்கும்.
திரும்பிப் பார்த்தபோது அவன் வாயில் பெருவிரலை வைத்து சூப்பியபடி ஆழமான தூக்கத்திலிருந்தான். படுக்கையில் சிறுநீர் போவதுபோல் இதுவும் புதுப்பழக்கம். தகப்பனற்ற பிள்ளை என்ற குறை தெரியாமல் அவனை வளர்க்க முயன்றாலும் அது முடியவில்லை. மரம் அசையாது இருக்க நினைத்தாலும் காற்று விடாது என்பார்கள்.
இவனின் தகப்பன் பொறுப்பாக ஊரில் இருந்தால் இப்படி நேர்ந்திருக்குமா? கரும்புலியாக இருந்தபோது எதற்கும் தயாராக உயிரைத்துச்சமாக மதித்து போர்க்களத்தை எதிர்கொண்டிருந்த எனக்கு ஏன் வாழ்வதற்கு துணிவில்லை. குடும்பவாழ்வு என்பது, உயிர் கொடுத்து நடத்தும் ஆயுதப்போராட்டத்திலும் கடுமையாக இருக்கிறதே? அக்காலத்தில் மரணத்தைத் துச்சமாக எண்ணிய எனக்கு இப்பொழுது வாழ்வதற்கு மட்டுமா, சாவதற்கும் துணிவற்று போய்விட்டதே? உரிமைக்காக உயிரை விடத்துணிந்து இயங்கிய நான் இப்பொழுது உணர்வற்று சடலமாக வாழும் நிலைக்குத் தள்ளிவிடப்பட்டிருக்கிறேன்.
கையை இடுப்பிலும் அடிவயிற்றிலும் மாறிமாறி வைத்தாள்.
குப்புறப்படுக்க முடியாது. இது மேலதிகமாக வந்திருக்கிறது. இது தேவைதானா? இதற்கு யார் அழுதார்கள்? ஏற்கனவே இருப்பவர்களுக்கு உணவில்லை. பயல் உடுப்புக்கு அழுகிறான்.வரும் பிரச்சினைகள் தனியாக வருவதில்லை என்பது சரிதான். ஆனால், எனக்கு கூட்டமாக வருகிறது. ஓடுவதோ, தப்பவோ முடியாதென வரும்போது என்ன செய்வது? போர்க்காலத்தில் இப்படியாக மாட்டியது கிடையாது.
இதற்கெல்லாம் யார் காரணம்?
அக்காலத்தில் எதிரியை இனம் காண்பது இலகுவானது. அன்னியமொழி, இராணுவ உடை, அதற்குமேல் அவர்கள் தாங்கிய ஆயுதங்கள் என எமக்குத்தெரிந்தது. இப்பொழுது எதிரிகள் எமது மொழிபேசும் எமது உறவினர்கள், எமது சமூகம், எனக்கு நெருங்கியவர்கள். அது மட்டுமா? பல எதிரிகளுக்கு உருவமே கிடையாது. அரூபமாகவும் தோன்றுகிறார்கள். இவர்களை கைக்குண்டோ துப்பாக்கியே எதுவும் செய்யாது. காற்றைப்போல் எங்கும் நிறைந்தவர்கள்.
மார்கழி மாதத்தின் புற்றீசல்களாக மனதில் எழுந்த கேள்விகளுக்கு விடையில்லை. அவை முகத்தையும் கண்ணையும்சுற்றியும் மெதுவான இரைச்சலுடன் தொடர்ந்து பறந்தன. நித்திரை கண்ணைவிட்டு விலகியதுபோல் இமைகள் இலகுவாக இருந்தன.
அடுத்த பக்கம் திரும்பிப்படுத்தபோது “அம்மா நாளைக்கு புதுச்சட்டைவேண்டும் ” எனக்கேட்டு அந்த நடு இரவில் எழுந்து கழுத்தில் கையை வைத்து கட்டிப்பிடித்தான்.
அவனுக்கு ” நாளைக்குப்பார்ப்போம்” என சொல்ல வாயெடுத்தபோது அவன் நித்திரையாகவிருந்தான்.
நித்திரையில் பேசியிருக்கிறான். பிள்ளையின் மனதில் இந்த உடுப்புத்தான் நிறைந்திருக்கு. கடன்பட்டாவது இம்முறை வாங்கிக் கொடுக்கவேண்டும். ஆனால், யாரிடம் வாங்குவது? அக்காலத்தில் ஹோட்டலில் வேலை செய்தபோது கடன் இலகுவில் வாங்கமுடியும். இப்பொழுது வேலையில்லை. அதுவும் ஏலாதே.
நினைக்கவே கண்கள் ஈரமாகி தலையணையை நனைத்தது.
அந்த பாலத்தில் இருந்து பாய்ந்த பின்பு முரளியின் நினைப்பு வந்ததால், நான் ஒரு கையை தொடர்ந்து அடித்ததால் குமாரின் பாரத்தையும் இழுத்தபடி எப்படியோ மிதக்க முடிந்தது. அந்தக்காலத்தில் பெற்ற கடற்புலிப்பயிற்சி என்னை உயிர் பிழைக்கவைத்தது. நீந்தத் தெரியாத குமார் தண்ணீரை குடித்தான்.அவனது திணறலை பாரக்கமுடியாது அடுத்த பக்கம் திரும்பியபடி மிதந்தபோது மிகவும் பாவமாக இருந்தது. அவன் விரும்பினால் உயிர் காப்பது இலகுவாக இருந்திருக்கும். ஆனால், அவன் சாகவரும்பியிருந்தானே!
எனக்கு எவ்வளவு இக்கட்டான நிலைமை.
புரண்டு படுத்தவளுக்கு நித்திரை வரவில்லை. வாழ்க்கை அத்தியாயங்கள் இராணுவ செக்கிங்கில் காத்திருப்பவர்கள்போல் மனதில் தொடர்ந்தது.
இப்பொழுது நினைத்தால் இன்று நடந்ததுபோல் இருக்கிறது.
அந்த இரவு நேரத்தில் யார் அங்கிருப்பார்கள்? நடு இரவைக் கடந்ததால் வாகனப்போக்குவரத்து அதிகம் இருக்கவில்லை. தெரு லைட்டுகளும் வாவியின் கரைகளில் உள்ள ஹோட்டல்களில் இருந்து வரும் குருட்டு லைட்டுகளும் சோம்பல் முறித்தன.
இடைக்கிடையே குலைத்தும், ஊளையிட்டும் சில நாய்கள் மட்டுமே இரவின் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியாளர்களாகின்றன. அந்த நேரத்தில் நாங்கள் செய்தது ஒரு அசாத்திய துணிச்சல் என நினைக்கவில்லை. சமூகத்தை முற்றாக மறந்து, அன்னியமான மனநிலையில் குமாரும் நானும் ஒன்றாக இருவரது கைத்துண்டால் இறுக்கமாக கட்டியபடி கல்லடிப் பாலத்தில் இருந்து குதித்தோம்.குதித்தபோது தூண்டில் போட்டபடி எம்மைப்பார்த்த ஒருவனது அலறல் அந்த இரவின் நிசப்தத்தை சுக்குநூறாக்கியது. அவனது குரல் மணவர்களை வெளிக்கொணரும் பாடசாலைமணிபோல் எதிரே அமைந்திருந்த ஹோட்டல்களில் வேலை செய்தவர்கள் வள்ளத்தில் வந்து என்னைக்காப்பாற்றினார்கள். குமாருக்கு அவர்கள் வருகை தாமதமாக இருந்தது. அவர்கள் சில நிமிடநேரம் தாமதித்திருந்தால் குமாரின் பாரம் என்னைக் கீழே இழுத்திருக்கும்.
ஏதோ நான் பிழைக்க வேண்டுமென்று விதியிருந்திருக்கு. இப்படி பல உயிராபத்துகளில் யமனது கயிற்றை ஏமாற்றி தப்ப வைக்கப்பட்டிருக்கிறேன். சாதாரண கடற்புலிப்போராளியான என்னை கரும்புலியாக்கிய நாளை இன்னமும் நினைக்கும்போது நம்பமுடியாது இருக்கும்.
ஆனையிறவு முகாமை இயக்கம் அடிப்பதற்கு இரு கிழமைகள் முன்பாக மேகலாவும் அந்த அமாவாசை முன்னிரவில் இருளையே எமது உலகமாக்கி, கருமையான பிளாஸ்ரிக் மிதவையில் மிதந்தபடி சாலையில் இருந்து ஆனயிறவு முகாமிற்கு சென்று வேவு பார்த்தோம்.
அந்த இரவு இராணுவத்தின் சமையல் அறைக்குள் சென்று வாழ்க்கையிலே கண்டிராத அளவு சீஸ், பிஸ்கட், சொக்கலேட் என பல தரப்பட்ட உணவை அருந்திவிட்டுத் திரும்பியபோது அதிகாலையாகிவிட்டது. கரையோடு கடலில் நீந்தியயடி வந்த எங்களைத் தூரத்தே வந்த கடற்படையின் ரோந்துக்கப்பல் இனம் கண்டு எங்களை நோக்கி சுட்டார்கள். அதைப்பார்த்து விடுதலைப்புலிகளும் சுட்டபடி தங்கள் வள்ளங்களில் கடற்படைப்படகுகளை நோக்கிச் செல்ல கடற்படைப்படகுகள் விலகிவிட்டன.
நான் காயப்பட்ட மேகலாவை இழுத்தபடி சாலைவரையும் ஒரு கையால் நீந்தியபடி வந்தேன். பல தடவை ‘என்னை விட்டுப்போடி. நீயாவது தப்பி முகாமினது விவரத்தை சொல்லு. எனது இடுப்பில் பாய்ந்த குண்டால் நான் இயக்கத்திற்கு எந்தப்பயனுக்கும் தகுதியாக இருக்கப்போவதில்லை. வீணாக பாரமாக இருப்பேன். உனக்குப் புண்ணியம் கிடைக்கும்’ எனக் கெஞ்சினாள்.
ஏதோ அன்றிருந்த பயிற்சி மற்றும் துணிவால் மட்டுமல்ல, எமது நட்பு ஆழமானது. நாங்கள் இருவரும் ஒரே ஊரில் சிறுவயதில் ஒன்றாகப்படித்து இயக்கத்தில் சேர்ந்தவர்கள். அவளைக் கடலில் சமாதியடைய விட்டுச் செல்வது எனது உயிரை விட்டுச்செல்வதற்குச் சமம். அதற்குமப்பால் அவளைக் காயத்துடன் கடற்படையினர் பிடித்திருந்தால் அதன் விளைவுகளை அவளாலோ, இயக்கத்தாலோ தாங்கமுடியாதிருக்கும். முகாம் தாக்கப்படும் என்ற தகவலே தெரிந்திருக்கும்.
மேகலாவை கரைக்கு இழுத்து வந்தபோது பெரும்கூட்டமே கரையில் காத்திருந்தது. மாமாங்கேஸ்வரருக்கு நன்றி சொல்லி கடைசியாக அவளை இழுத்து முழங்கால்த்தண்ணிவரையும் வந்தவர்களிடம் ஒப்படைத்து விட்டு மணலில் விழுந்து படுத்தேன் . அதன் பின்பு முகாமில் விழித்தபோது அம்மான் வந்து பாராட்டியதுடன் பின்பு மேஜராக உயர்த்தப்பட்டேன். அன்று மேகலாவின் இடுப்பில் துளைத்த சன்னம் என்னைத்துளைத்திருந்தால் மேகலாவால் என்னை காப்பாற்ற முடிந்திருக்குமா? இல்லை இருவரும் இறந்திருக்கலாம். ஏதோ நான் மட்டும் காயமின்றி தப்பி வரும் விதியிருக்கிறதே!
மேஜர் தரத்துக்கு உயர்த்தப்பட்டபின்பு நடந்த சண்டைகள் ஏராளம். அப்போதெல்லாம் ஒரு காயமுமற்றுத் தப்பினேன். என்னோடு வந்தால், உயிர்தப்பமுடியும் என்று நம்பிக்கொண்டு என்னைச் சுற்றி பலர் வருவார்கள்.
இயக்கத்தில் நடந்த அம்மானின் பிரிவால் பலர் பிரிந்துபோனாலும் நான் இயக்கத்திற்கு விசுவாசமாக இருந்தேன். மட்டக்களப்பில் சண்டை தொடங்கியபோது கொழும்புக்கு கரும்புலியாக வந்தேன். இயக்கத்தின் கட்டளையை எதிர்பார்த்து எந்த சந்தர்ப்பத்திலும் நான் மனித குண்டாக மாறத் தயாராக இருந்தேன். இரண்டு தாக்குதலில் முதலாவது கரும்புலி தவறினால் அதற்கு மாற்றாக செல்வது எனது பொறுப்பாக இருந்தது. ஆனால், முதலில் தாக்கியவர்களே ஒழுங்காக தங்களது இலக்கில் தாக்கியதால் எனது முறை வரவில்லை.
நான் யுத்தகாலத்தில் இரண்டு வருடங்களாக கட்டளையை எதிர்பார்த்து கொழும்பில் காத்திருந்தேன். ஆனால், அக்காலத்தில் என்னை உளவுத்துறை தொடர்பு கொள்ளவில்லை. கரும்புலியாக மாறிய பின்பும் எனது உயிர் பாதுகாக்கப்பட்டது.
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. நான் கொழும்பில் தங்கியிருந்த லொட்ஜ்ஜில் எல்லோரும் தமிழர்கள். அதிலும் பெண்கள் பலர் வெளிநாடுகளுக்கு செல்லவும், வெளிநாட்டில் வாழும் உறவினருடன் பேசவும். சிலர் நோய்க்கு மருத்துவம் பார்க்கவும் பல நோக்கங்களுடன் வந்திருந்தார்கள்.
இரவு பத்து மணிக்கு மேல் உணவை அருந்தியவர்கள் தொலைகாட்சியை பார்த்தபடி இருந்தபோது பொலிசும் இராணுவமும் வெள்ளை வாகனத்தில் வந்திறங்கினார்கள. மற்றவர்கள் தங்கள் அறைக்கு சென்றார்கள். நான் மட்டும் எதிரிலிருந்த வாளித்தண்ணீரோடு நிலத்தை தும்புக்கட்டையால் துடைத்து கழுவத்தொடங்கினேன்.
எல்லோரையும் வெள்ளை வானில் ஏற்றியபோது ஒரு உயரமான பொலிஸ் என்னை நோக்கி கையைக்காட்டி அழைத்தபோது, ‘என்னங்கையா’ என மலையகத்தமிழில் கேட்டதும் ‘நீ வேலையை செய்’ என விட்டுச்சென்றார்கள். இந்த நாட்களில் பல இடங்களில் இப்படியாக விசாரிப்பு நடந்தது. ஆனால், நான் மட்டும் தொடர்ந்து தப்பினேன். சண்டைக்காலத்தில் லொட்ஜ்ஜை நடத்தியவர்கள் என்னை அங்கு துப்பரவாக்கும் வேலையை செய்வதற்கு நியமித்து பணமும் தந்தார்கள்.
யுத்தம் முடிந்த பின்பு மட்டக்களப்பு வந்தபோது அம்மானுடன் பிரிந்த ஆளாகக் கருதப்பட்டதால் பாதுகாப்புப்படையினரிடமிருந்து எந்த கரைச்சலும் இல்லை.
அப்படியே இருக்கவிட்டார்களா?
ஊருக்கு வந்ததும் உறவினர்கள் திருமணம் முடித்து வைத்தார்கள். முதல் தடவையாக இல்லறத்தில் புகுந்தாலும் அக்கால எண்ணங்கள் வராமலிருக்குமா? அந்தக்காலத்தில் ஒழுங்கான வேலை இல்லையென்று எனது கணவர் சுந்தரம் அவுஸ்திரேலியாவுக்கு வள்ளத்தில் ஏறிவிட்டான். நாலு வயதான முரளியையும் என்னையும் விட்டு சென்றவனிடம் இருந்து ஒரு வருடமாகத்தகவல் இல்லை. ஏதோ ஒரு தீவில் இருப்பதாக பிற்காலத்தில் தகவல் வந்தபோது வயிற்றுப்பாட்டுக்கு எதுவுமில்லை.
மீண்டும் மட்டக்களப்பில் ஹோட்டலில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்தேன். அக்காலத்தில் ஓட்டோசாரதியாக என்னை சந்தித்தவன் குமார். வைத்தியரிடம் முரளியை ஓட்டோவில் கொண்டு செல்லும்போது பணம் வாங்க மறுப்பான். நான் வற்புறுத்திக் கொடுத்தால் அதில் பாதியை எடுப்பான். பிற்காலத்தில் அவனே முரளியை பாடசாலைக்கும் வைத்தியரிடமும் கொண்டு சொல்லும்போது உருவாகிய நட்பு காதலாகியது.
ஊரைப்பொறுத்தவரை சுந்தரத்தின் மனைவி. கொழும்புக்கு சென்று வாழயோசித்தபோது அதுவும் பிரச்சினையை உருவாக்கும்.
குமார் விடாமல் நச்சரித்தான். இந்த நிலையில் வயிற்றில் கர்ப்பம் தரித்தது. சமூகத்தை எப்படி எதிர்கொள்வது?
ஒரே வழியாக கல்லோடைப்பாலத்தில் இருந்து குதிக்க தீர்மானித்து போது மீண்டும் தப்பிவிட்டேன். இப்பொழுது ஊரே அறிந்துவிட்டது. இரண்டு மாதமாக குமாரின் குழந்தை வயிற்றில் வளர்ந்தபடியிருக்கிறது.
உடலெல்லாம் வியர்வையாகவும், வாய் கசந்தபடியும் இருந்தது.
முரளி அமைதியாக ஆழ்ந்த சயனத்திலிருந்தான். கரும்புலியாக மரணத்திலிருந்து நான் தப்பியதற்கு இதுவே காரணம். அவனுக்காக நான் வாழவேண்டும். ஊரென்ன சொன்னாலும் அல்லது ஊரைவிட்டு கலைத்தாலும் நான் வாழ்வேன் என உறுதியெடுத்தாள்.
கடிகாரம் ஒரு மணிகாட்டியது.
முரளி மட்டும் பாயில் பெருவிரலை வைத்து சூப்பியபடி ஆழமான தூக்கத்திலிருந்தான்.