கருப்பசாமி தர்மத்தின் சலங்கை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: September 24, 2026
பார்வையிட்டோர்: 8,366 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம் 7: அமாவாசைப் பூஜை

ரத்னவேலின் மாளிகைக்கு நள்ளிரவில் வந்திறங்கினான் பைரவன். அவனது தோளில் ஒரு அழுக்கான சாக்குப் பை. அதிலிருந்து பாதி எரிந்த சுடுகாட்டுக் கட்டைகள், துருப்பிடித்த எட்டுப் பெரிய இரும்பாணிகள் வெளியே விழுந்தன.

“என்ன பைரவா… எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டியா?” என்று கேட்டான் ரத்னவேல்.

“பண்ணையாரே… இது நான் கேரளாவுல இருட்டுக் குகையில பல வருஷம் உக்காந்து கத்துக்கிட்ட ‘அஷ்டபந்தனக் கட்டு’. அதுக்கு உசிர்ப்பலி வேணும். இந்த எட்டு இரும்பாணியும் சாதாரண ஆணி கிடையாது. இதை வச்சு சாமியோட எட்டுத் திசையையும் அடைச்சிருவேன். எந்தக் காத்துல போனாலும் சாமியோட ஆவேசம் வெளிய வராது.”

“உசிர்ப்பலியா? எவனையாவது போட்டுத் தள்ளணுமா?” என்று சாதாரணமாகக் கேட்டான் ரத்னவேல்.

“இல்ல. ஒரு கருப்பு ஆட்டுக்குட்டியோட ரத்தம் போதும். ஆனா… இதுல ஒரு நிபந்தனை இருக்கு பண்ணையாரே.”

“என்ன நிபந்தனை?”

“இந்தக் கட்டு தற்காலிகமானது தான். எப்பவாவது ஒரு நாள் இது உடையும். அப்போ சாமியோட கோபம் இன்னும் நூறு மடங்கு அதிகமா வரும். அதுக்கு நீங்க தயாரா இருக்கணும்,” என்றான் பைரவன்.

ரத்னவேல் சிரித்தான். “அது வரைக்கும் நான் இந்த ஊரையே சொந்தமாக்கிடுவேன் பைரவா. கவலைப்படாத.”

அமாவாசை நள்ளிரவு. கோவில் எல்லையை அடைந்த மூவரும், பதினெட்டடி உயரத்தில் நின்றிருந்த கருப்பசாமியின் சிலைக்கு நேர் கீழே வந்தனர். பைரவன் ஆட்டுக்குட்டியின் கழுத்தை அறுத்து, ரத்தத்தை தகடுகளின் மேல் பூசி, எட்டுத் திசைகளிலும் இரும்பாணிகளை அடித்தான்.

“டங்.. டங்.. டங்…”

“முடிஞ்சுச்சு பண்ணையாரே! இருப்பு ஆணி இறங்கிடுச்சு. உங்க காரியத்த நீங்க தாராளமாப் பாக்கலாம்!”

ரத்னவேல் கருப்பசாமி சிலையைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். “நாளைக்கு அந்தக் கண்மாய ஓரத்துல இருக்கிற அத்தனை குடிசைகளையும் தீயிட்டுக் கொளுத்துறேன். முடிஞ்சா வந்து தடுத்துப் பாரு!”

அத்தியாயம் 8: கண்ணைமூடிய கருப்பசாமி

மறுநாள் செவ்வாய்க்கிழமை. ஊர் மக்கள் கருப்பசாமி கோவில் வாசலில் கூடியிருந்தார்கள். பூசாரி சுடலை, மூலஸ்தானத்திற்கு முன் வந்து நின்று உடுக்கை அடித்தார். ஆனால் அரை மணி நேரம் ஆகியும் அவரது உடலில் சிறு நடுக்கம் கூட ஏற்படவில்லை.

“என்ன ஆச்சு பூசாரியப்பா? சாமி ஏன் வரலை?” என்று ஒரு பெரியவர் கேட்டார்.

“எனக்கே புரியல மாமா… எவ்ளோ கூப்பிட்டாலும் அருள் இறங்கல…” என்று சுடலையின் குரல் நடுங்கியது.

அவருக்குத் தெரியாது, சன்னதியைச் சுற்றிலும் நிலத்தடியில் புதைக்கப்பட்டிருக்கும் அந்தப் பைரவனின் எட்டு இரும்பாணிகள் ஒரு கண்ணுக்குத் தெரியாத இரும்புச் சுவரைப் போலத் தெய்வத்தின் சக்தியைத் தடுத்து நிறுத்தியிருக்கின்றன என்று!

சுடலை சாமியின் காலடியில் விழுந்து கதறினார். “அய்யா மாரநாடு கருப்பா… என் மேல என்ன குத்தம் கண்ட? ஊரு சனங்க இவ்வளவு கஷ்டப்படுறாங்களே, உனக்கு இறக்கம் வரலையா சாமி?”

“சாமி கண்ணைமூடிக்கிச்சு… நம்மளைக் கை விட்டுருச்சு!” என்ற விரக்தி ஊர் மக்கள் நெஞ்சில் விஷமாகப் பரவியது.

அத்தியாயம் 9: தர்மம் தோற்ற நாள்

கோவில் வாசலில் நடக்கும் இந்தக் கண்ணீர் நாடகத்தைத் தூரத்தில் பைனாக்குலர் மூலம் பார்த்துக் கொண்டிருந்தான் ரத்னவேல். “ஹா… ஹா… பாத்தியாடா மாயாண்டி? அந்தப் பைரவன் வித்த பலிச்சுடுச்சுடா!” என்று சிரித்தான்.

“ஆமாண்ணே… நீங்க நினைச்சா எதையும் சாதிக்கலாம்,” என்றான் மாயாண்டி.

“இல்லடா… இப்போ அவங்களுக்குப் பயம் வரணும். அந்தப் பழனிக் கிழவன் நேத்து என்கிட்டயே நியாயம் பேசி, சாமியக் கும்பிட்டானில்ல? அவன இன்னைக்கு இழுத்துட்டுப்போய் அந்தக்கண்மாய்க்கரையிலேயே வச்சு வெட்டுங்கடா.”

“அண்ணே… கொலை வரைக்கும் போகணுமா?”

“கேள்வி கேட்காம போ! எவன் வந்து தடுக்குறான்னு பாப்போம்!” என்று கொடூரமான கட்டளையிட்டான் ரத்னவேல்.

கண்மாய்க் கரையில், நேற்று நசுக்கப்பட்ட தன் நெற்பயிர்களைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த பழனி தாத்தா, ஜீப் வந்து நிற்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்தார். மாயாண்டியும் அடியாட்களும் அவர் மீது பாய்ந்தனர்.

“விடுங்கடா என்னை… நான் என்ன தப்பு செஞ்சேன்!” என்று பழனி கதறினார்.

“கிழவா, பண்ணையார் மேல வாய் வச்சதுக்கு இதுதான் தண்டனை,” என்றான் மாயாண்டி.

பழனி வானத்தை நோக்கிக் கருப்பசாமி கோவிலின் திசையைக் கைகூப்பினார். “சாமி… உன்னைய உசுரா நினைச்சுக்கிட்டு, இதுதான் நீ எனக்குக் கொடுக்குற கூலியா…” என்று அவர் வார்த்தையை முடிப்பதற்குள், மாயாண்டியின் வீச்சருவாள் பழனியின் கழுத்தில் இறங்கியது.

ஆனால் அவர்கள் அறியவில்லை… பழனி தாத்தாவின் அந்த இறுதி மூச்சும், மண்ணில் சிந்திய அந்தப் பச்சை ரத்தமும் காற்றில் கலந்து, நேராகக் கருப்பசாமி சன்னதிக்குள் புகுந்து, அந்த இரும்பாணிகளின் மீது ஒரு பெரும் தீப்பொறியை மூட்டத் தொடங்கியிருப்பதை!

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *