கருத்துக் கணிப்புகள்
கதையாசிரியர்: முத்தமிழ்ப்பித்தன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: May 22, 2026
பார்வையிட்டோர்: 447

ஏப்ரல் 2: மாலை 6 மணி.
சித்திரைச் செல்வன் தனது வீட்டு மாடியில் உள்ள தனி அறையில் மூங்கில் நாற்காலியில் அமர்ந்தபடி, எதையோ எழுதிக் கொண்டிருந்தார். அவரைப் பார்க்க வந்த அவரது நண்பர் பிரகதீஸ்வரன்,
“வணக்கம் நண்பரே!” என்று சொல்லிக் கொண்டே அவர் அருகில் அமர்ந்தார்.
“வாங்க பிரகதீஸ்வரன், இப்படி உட்காருங்கள்”
“சரி நண்பரே, உங்களோட “மூங்கில் தோட்டமும் அப்பாவும்” புத்தகம் எப்படி போய்க்கிட்டு இருக்கு?”
“எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்கு நண்பரே! இதுவரைக்கும் ஆயிரம் பிரதிகள் வித்துருக்கு”
“நான் அதை ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் படிச்சுப் பார்த்தேன். கதை நல்லா இருக்கு. ஆனா முடிவு தான் எனக்குக் கொஞ்சம் நெருடலா இருக்கிற மாதிரி தெரியுது”
“இல்ல, அந்த முடிவுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நான் அந்த முடிவுக்காக இரண்டு வாரம் எடுத்துக்கிட்டேன். இப்ப எனக்கு முழுத் திருப்தியா இருக்கு”
“சரி இப்ப என்ன எழுதிக்கிட்டு இருக்கீங்க, கதையா, இல்ல கட்டுரையா?”
“இல்ல, டெல்லியில் இருக்கிற என்னோட நண்பருக்கு ஒரு கடிதம் எழுதிக்கிட்டு இருக்கேன்”
“சரி, என்னோட நண்பர்கள் இரண்டு பேருக்கு உங்களுடைய புத்தகம் வேணும்னு கேட்டாங்க. அதை வாங்கிட்டுப் போலாம்னுதான் வந்தேன்.”
“ பதிப்பகத்தில் இருந்து புத்தகம் நாளைக்குக் கண்டிப்பா வந்துரும். நீங்க நாளைக்கு புத்தகத்தை வாங்கிக்கலாம். இப்ப என் கிட்ட ஒரு புத்தகம்கூட இல்லை.”
“ சரி நண்பரே! நான் நாளைக்கு வரேன். வரட்டுமா நண்பரே” எனச் சொல்லிவிட்டு, பிரகதீஸ்வரன் தனது வீட்டிற்குப் புறப்பட்டார்.
புறப்படும் முன் பிரகதீஸ்வர னுக்கு ஒரு சீப்பு வாழைப்பழத்தை ஒரு துணிப் பையில் போட்டுக் கொடுத்த பின், சித்திரைச் செல்வன் அவரை வழி அனுப்பி வைத்தார்.
ஏப்ரல் 05 ; மாலை 6 மணி
மருத்துவர் மகாதேவனின் வீட்டு மாடியில் நடந்த முத்தமிழ் இலக்கிய பேரவை கூட்டத்திற்கு பிரகதீஸ்வரனும் வரவில்லை. எழுத்தாளர் சித்திரைச் செல்வனும் வரவில்லை. பிரகதீஸ்வரன் பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றுள்ளார். சித்திரைச் செல்வன் மூர்த்தி உடல் களைப்பு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கின்றார். கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் என்னென்ன கருத்துக்களை முன் வைத்தார்கள் என்ற தகவலை அவரது இனிய நண்பர் குணசேகரன் சித்திரைச் செல்வனுக்குத் தெரிவித்தார்.
அன்றைய கூட்டத்தில் சித்திரைச் செல்வனின் “மூங்கில் தோட்டமும் அப்பாவும் ” எனும் புதினம் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கூட்டத்திற்கு வந்திருந்த பலரும் பலவிதமாய்ப் பேசினார்கள். சிலர் கதை நன்றாக இருக்கின்றது; ஆனால் முடிவு படு கேவலமாக இருப்பதாகச் சொன்னார்கள். சிலர் எழுத்து நடை நன்றாக உள்ளது; ஆனால் படிக்க சுவாரசியமாக இல்லை என்றார்கள். சிலர் எதார்த்தமாக இல்லை; நிகழ்வுகள் எல்லாமே செயற்கைத் தனமாக தெரிகிறது என்றார்கள். சிலர் அந்தப் புதினம் கூறும் ஆழமான கருத்துக்களை மேற்கோள் காட்டி மகிழ்ந்தனர். சிலர், “இந்த கதையப் படிக்கிறதுக்கு பதில் நாலு கழுதைகளை மேய்ச்செருந்தா கூட ஏதாவது பிரயோசனமா இருந்திருக்கும் என கிண்டல் செய்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த புத்தகத்திற்குச் சில மாத இதழ்கள் நன்கு பாராட்டி உள்ளதை சிலர் சுட்டிக் காட்டினர்.
ஏப்ரல் 10, மாலை 4 மணி:
“ஏங்க என்ன நெனச்சிட்டு இருக்கீங்க? இன்னைக்கு கும்பகோணத்துல என்னோட தூரத்து மாமா ஒருத்தர் இறந்துட்டாரு. அதுக்கு போயிட்டு வாங்கன்னு சொன்னேன். அதுக்கும் போகல. தஞ்சாவூர்ல என்னோட பெரியம்மா பையன் சிங்கப்பூர்ல இருந்து வந்திருக்கான். அவன போய் ஒரு தாட்டி பாத்துட்டு வாங்கன்னு சொன்னேன். அதுக்கும் போகல. பொழுதா பொழுதிணிக்கும்
எழுதுறேன், எழுதறேன்னு, இதே பொழப்பா இருக்கீங்க. என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்கீங்கன்னு தெரியல?”
இப்படிச் சொல்லிவிட்டு கூட்டுமாரை எடுத்துக் கொண்டு, தலைவாசல் கதவை திறந்து, தெருவாசலைக் கூட்டுவதற்காக, வேகமாக வெளியேறினார், சித்திரைச் செல்வனின் அம்மணி. அம்மணியின் வார்த்தைகளில் ஒன்றைக் கூட சித்திரைச் செல்வன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவர் தனது போக்கில், தனது எழுத்தில், தனது கற்பனைகளில் ஆழ்ந்திருந்தார். அவரது கவனம் எல்லாம் அவரது கதையின் அடுத்த அத்தியாயத்தை, எங்கே எப்படி தொடங்குவது என்பதிலேயே இருந்தது.
ஏப்ரல் 11 :மாலை 5.30 மணி
சித்திரைச் செல்வன், திருவள்ளுவர் இலக்கிய வட்ட மாதாந்திர கூட்டத்திற்கு சற்று தாமதமாகவே வந்திருந்தார். அவருடன் அவரது நண்பர் பிரகதீஸ்வர னும் வந்திருந்தார். இருவரும் நல்ல நண்பர்கள். சித்திரைச் செல்வன் தற்போது எழுத்தாளராகவும், பிரகதீஸ்வரன் ஓர் ஓவியராகவும் உள்ளனர். இருவரும் பக்கத்தில் இருந்த சமுதாயக்கூடத்தை நோக்கி நடந்தார்கள்.
திருவள்ளுவர் இலக்கிய வட்ட கூட்டம் மாலை 5 மணி முதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கே உள்ளே சென்று காலியாக இருந்த நாற்காலிகளில் இருவரும் அருகருகே அமர்ந்தனர். அங்கே நாகப் பட்டினத்தில் இருந்து வந்திருக்கும் நடன சிகாமணி என்பவர் நயமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
“ஓர் உண்மையை பொய்யாக்கிச் சொல்வதும், பொய்மையை உண்மையாக்கிச் செல்வதும், ஓர் எழுத்தாளனின் கைதேர்ந்த கலையாகி வெளிப்படுவது தானே அவனது படைப்பு. அது உண்மையாயினும், பொய்மையாயினும், அது படிப்பாளிக்கு ஏதோ ஒரு வகையில் ஒரு பயனை, ஒரு படிப்பினையை, ஒரு நெகிழ்ச்சியை ஏதேனும் மகிழ்ச்சியை அல்லது ஏதாவது ஓர் உணர்ச்சியை வெளிப்படுத்திச் செல்லாமல் வெறுமனே செய்திகளை மட்டுமே சிங்காரமாய் சிதற விட்டு வேடிக்கை பார்ப்பது எத்தகையது? அது செய்தித்தாள்களின் வேலை தானே?”
நாகை நடனசிகாமணி தொடர்ந்தார்.
”படைப்பாளி ஓர் இறைவனாய் இருந்து, பெரும்பாலானவர்களுக்கு பயனுள்ளவற்றை, ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்த வேண்டியதுதானே முறை. அவனது வெளிப்பாடு விதவிதமாய் வித்தியாசமாய் இருக்கலாம். அது விவேகமற்றதாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்த வெளிப்பாடு ஒரு வாசகன்
இடத்திலே ஒரு தாக்கத்தை, ஒரு விளைவை, ஏதேனும் ஒரு பயனை, ஏற்படுத்தக் கூடியதாக அது இருக்க வேண்டும். இது மிகவும் அவசியமான ஒன்று”
இப்படி நாகை நடன சிகாமணி சொல்வதைக் கேட்டதும், சித்திரைச் செல்வன், பிரகதீஸ்வரன் இருவரும் குழப்பம் அடைந்தனர். நாகை நடன சிகாமணி, திருக்குறளைப் பற்றி பேசாமல், வேறு திசையில் செல்கின்றாரோ என இருவரும் ஐயமுற்றபடி இருக்க, நாகை நாவுக்கரசர் தொடர்ந்தார்.
“திருக்குறளும் அய்யன் திருவள்ளுவனும் நமக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷங்கள். அவன் தமிழுக்காகவோ தமிழனுக்காகவோ மட்டுமே எழுதவில்லை. அவன் பறந்து பட்டவன். அவன் பறந்த மனப்பான்மை கொண்டவன். அவன் உலக மக்கள் அனைவருக்குமாக எழுதினான். திருவள்ளுவன் நமக்கு மட்டுமல்ல, இந்த பாருக்கே சொந்தமானவன். அதனால் உலக மக்கள் அனைவரும் இன்றுவரை திருக்குறளையும் திருவள்ளுவனையும் போற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அதனால்தான் அது உலகப் பொதுமறை என்று உன்னதமாய் அழைக்கப்படுகிறது. இப்படிச் சொல்லிவிட்டு கடைசியாக ஒரு குரலோடு தனது திருப்தியான பேருரையை முடித்துக் கொண்டார்.
“சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்”
இப்படி அவர் தனது பேருரையை முடித்தவுடன் கூட்டத்தில் பலத்த கைத்தட்டலோ தட்டல். கைத்தட்டல் ஓசையின் அதிர்வுகள், உழவர் சந்தை தொடங்கி பால் பண்ணை வரை எதிரொலித்தது. கூட்டம் முடிந்த பின் இருவரும் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தனர்.
ஏப்ரல் 16 : இரவு 8 மணி
“ஏங்க என்ன நான் சொல்றது காதுல விழுகுதா, இல்லையா? நாளைக்கு தஞ்சாவூருக்கு நடிகை நளினா தேவியும் நடிகர் குஞ்சுமணியும் வராங்களாம் நாம அவசியம் போய்ப் பார்த்துட்டு வரணுங்க. நுழைவுச்சீட்டு ஆளுக்கு 500 ரூபாய் தானாம். என்ன போயிட்டு வருவோங்களா?”
சித்திரைச் செல்வன் அம்மணியின் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், அவரது கதையின் கடைசி அத்தியாயத்தில் தீவிரமாக இருந்தார்.
“ஏங்க நான் பாட்டுக்கு இங்க கத்திக்கிட்டு இருக்கேன். நீங்க அங்க என்னத்த எழுதிக்கிட்டே இருக்கீங்க? இதுவரைக்கும், இப்படி எழுதி எழுதி என்னத்தக்
கிழிச்சு இருக்கீங்கன்னு தெரியல? எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்; படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்ற கதையால்ல இருக்கு”
அம்மணி தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தப்படியே, சித்திரைச் செல்வனிடம் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அம்மணியின் பேச்சிற்கோ, கேள்விகளுக்கோ, எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அம்மணி பல்லாண்டு காலமாய் தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கி, மூழ்கி, உடல் எடை மெல்ல மெல்லக் கூடிப் போக, அடிக்கடி அவரது இதயத்துடிப்புகள் ஏறுக்கு மாறாக, எகிறியபடி இருந்தது. அதனால் அவரால் தொலைக்காட்சித் தொடர்களில் சில காட்சிகளின் போது, கண்ணீர் விட்டு அழமுடியவில்லை. மனம் விட்டுச் சிரிக்கவும் முடியவில்லை.
ஏப்ரல் 20 : இரவு 10 மணி
பக்கத்து வீட்டு தொலைக்காட்சியில்
”இந்த ஆண்டிற்கான தமிழ் கூடம் விருது எழுத்தாளர் சித்திரைச் செல்வனின் “மூங்கில் தோட்டமும் அப்பாவும்,” எனும் புதினத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது “என்ற செய்தி ஓடிக்கொண்டிருந்தது. இச்செய்தியை அறியாத அம்மணி, அப்போது தொலைக்காட்சியில் ஒரு தொடரை தொடர்ந்து பரவசத்துடன் பார்த்தபடி இருந்தார். சித்திரைச் செல்வன், தனது அடுத்த கதையை அழகாக முடித்துவிட்ட திருப்தியில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
குறிப்பு: இக்கதை எனது “இசையின் எதிரொலிகள்” எனும் சிறுகதைத் தொகுப்பு நூலில் உள்ள 11 கதைகளில் நான் தங்களுக்கு அனுப்பும் 8ஆவது சிறுகதை. இந்த நூல் கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.
![]() |
எழுத்தாளர் பற்றிய குறிப்புகள்: பெயர்: கா. ஆசைத்தம்பி,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil., புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்: 1. English for Indian Pupils (2003) 2.மாண்புமிகு மாணவர்கள் (2019) (தொகுப்பு நூல்) 3.எண்பதுக்கு எண்பது (2022) (தொகுப்பு நூல்) 4.இசையின் எதிரொலிகள் சிறுகதைகள்(2025) இதுவரை (15.12.25) மின் இதழ்களில் வெளி வந்துள்ள எனது சிறுகதைகள்: 1. மாமோய் (மயிர்) 2. கருப்பு நிறத்தில் ஒரு மின்னல் (மயிர்) 3. ஆலமரத்தடியில் ஒரு அழகி (மயிர்) 4.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
சலுகை
எஸ்.மதுரகவி
May 22, 2026
ஞாபக கிடங்கு
பே.செல்வ கணேஷ்
May 22, 2026
அலமாரியில் ஒரு இடம்
சு.அப்துல் கரீம்
May 22, 2026
