கருணையினால் தான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 18, 2024
பார்வையிட்டோர்: 2,310 
 
 

(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குளித்துக் கொண்டிருந்தபோது, மப்டியில் இருந்த போலீஸ் காரரால் கேசவன் கைது செய்யப்பட்டான். 

சிலேட்டில் எழுதி அழித்தும் அழியாத எழுத்து மாதிரி மங்கலான, இருள் பிரியாத சூரியனுக்கு முந்தைய காலைப் பொழுது, குளிப்பதற்கே உகந்த நேரம். பனி விழுங்கிய சீதளக் காற்று, உங்களைச் சட்டையைக் கழற்ற யோசிக்க வைக்கும்தான். இரவுக் குளிர்ச்சியில் குளத்து நீர் கால்களைப் பூச்சி கடிப்பது போல் கடிக்கும் தான். ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு முங்கல் போட்டு விட வேண்டும். அப்புறம் என்ன? குளத்தை விட்டு வெளியில் வர யாருக்குத் தோணும்? குளிப்பது அழுக்குப் போகவா? அழுக்குப் போகக் குளிக்க முடியுமா என்ன? குளிப்பது ஒரு சுகம். 

கேசவனுக்கு முன் வானம் ஒரு புத்தகம் போல விரிந்து கிடந்தது. நட்சத்திர எழுத்துக்கள். தூரத்தில் கறுப்பு மையால் எழுதியது மாதிரி கோபுரம். மார்பளவு நீரில் அவன் இருந்தான். மனம் லேசாகித் தக்கையானது போல் உணர்ந்தான். நிழல் மாதிரி விடாது ஒட்டிக் கொண்டிருந்த பயம் கூடத் தன்னை விட்டு ஓடி விட்டது மாதிரி இருந்தது அவனுக்கு. 

படி ஏற மனமின்றி நீரில் துழாவிக் கொண்டிருந்த அவன் கவனத்தை எதிர்க்கரையில் குளிக்க வந்த பெண்களின் பேச்சுச் சத்தம் கலைத்தது. விடிந்து கொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தான். கோபுரத்துக்குப் பின் இருந்து வெளிச்ச ரேகைகள் வானில் பரவி இருந்தன. சட்டென்று, அந்த ஊருக்குப் பொருத்தம் இல்லாத, வெள்ளைச் சட்டையும் பேண்ட்டும் அணிந்த நகரத்து மனிதர்கள் என்று சொல்லத் தக்க சிலர் குளத்தைச் சுற்றி, நான்கு படித்துறைகளுக்கும் மேலே தயாராய் இருந்ததைக் கவனித்தான். அவனுக்குப் புரிந்துவிட்டது. தான் அகப்பட்டுக் கொண்டு விட்டோம் என்பதை உணர்ந்தான். ஏற்கனவே தீர்மானித்து வைத்தி ருந்ததைச் செயல் படுத்துவது என்ற முடிவுக்கு வந்தான். 

படி ஏறினான். அவிழ்த்து வைத்திருந்த பேண்ட்டை அணிந்து கொண்டான். துண்டைப் பிழிந்து கீழே போட்டான். சட்டையை மாட்டிக் கொண்டு, துண்டையும் எடுத்துக் கொண்டு, மேலே நின்று கொண்டு இவனையே கவனித்துக் கொண்டிருந்த இருவரை நோக்கிப் போனான். 

வெளிச்சம் வந்து விட்டிருந்தது. அம்மைத் தழும்பும், பெரிய மீசையும், வளமான உடம்பும் கொண்ட ஒருவன் ‘நீ கேசவன் தானே?’ என்றான். 

‘ஆமாம்.’ 

கடைசி எழுத்தைச் சொல்லி முடிப்பதற்குள் கேசவன் முகத்தில், ராட்சசத்தனமான அறை ஒன்று விழுந்தது. இரண்டு நாட்களுக்கு முந்திதான் கேசவன் உணவு என்று இரண்டு இட்லிகளைச் சாப்பிட்டிருந்தான். படியை ஒட்டிய மண் தரையில் கேசவன் விழுந்திருந்தான். 

‘அவன்தான் கேசவன் என்று ஒப்புக்கொண்ட பின்னால் அவனை நீ அடித்திருக்க வேண்டியதில்லை’ என்று, உடன் தலைவன் போல் இருந்தவன் சொன்னான். அடித்தவன் மறுமொழி பேசாதிருந்தான். தலைவன் கைகொடுத்து எழுந்து உட்கார்ந்திருந்த கேசவனை நிற்க வைத்தான். நாலு துறைகளிலும் நின்றிருந்தவர்கள் வந்து சேர்ந்து கொண்டார்கள். 

தலைவன் முன்னால் நடக்க, கேசவனைத் தள்ளிக் கொண்டு போவது போல் மற்றவர்கள் நடந்தார்கள். வாய் ஓரம் வழிந்த இரத்தத்தை ஈரத் துண்டால் துடைத்தவாறு கேசவன் நடந்தான். 

நெடுஞ்சாலையில், ஒரு தூங்கு மூஞ்சு மரத்தின் கீழே போலீஸ் வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. கருநீல வண்ண வண்டி. அதுவே ஒரு சிறை போல் கம்பிகளும் கதவுகளுமாய் இருந்தது. நீள பெஞ்சுகள் மாதிரி இரண்டு இருக்கைகள். எல்லோரும் அமர்ந்தார்கள். கேசவன் இருக்கையில் அமரப் போனான். மீசை வைத்திருந்தவன், இரண்டு இருக்கைகளுக்கும் இடைப்பட்ட தரையைக் காட்டி, ‘அங்கே உட்காருடா’ என்றான். 

தலைவன், ‘சீட்டில் உட்காரட்டும். நடுவில் அவனும் இரண்டு பக்கத்திலும் ரெண்டு பேரும் அமருங்கள். நீ டிரைவர் பக்கத்தில் போய் உட்கார்’ என்றான் மீசைக்காரனைப் பார்த்து. 

இரண்டு பேர் முன்புறமாகப் போய் உட்கார்ந்தார்கள். கேசவன் எதிரே தலைவன். வண்டி புறப்பட்டது. தரையில் குழந்தையைக் கிடத்தியது போலத் துப்பாக்கிகளைக் கிடத்தியிருந்தார்கள். 

கேசவன் இடப்புறம் கம்பி வலை. வண்டியின் ஓட்டத்தில் துப்பாக்கிகள் குலுங்கி ஒன்றுடன் ஒன்று இடித்துக் கொண்டன. கட்டைகள் மோதும் சப்தம் எழுந்தது. 

தலைவன், கேசவனையே கவனித்துக் கொண்டிருந்தான். இளமையின் தலைவாசலில் நிற்கிற, இன்னும் குழந்தைத்தனம் போகாத முகம்; மீசையும் தாடியும் அரும்பியிருந்தன. குற்றவாளி களுக்கே உரிய, கெட்டிப் போன முகங்களையே பார்த்துப் பழகிய அவனுக்கு, ஒரு கல்லூரி மாணவனைப் போலத் தெரிந்தான் கேசவன். இந்தச் சிறுவனா கொலை அல்லது கொலைகளைச் செய்திருக்க முடியும் என்று தோன்றியது அவனுக்கு. 

‘உனக்கு என்ன வயசு?’ 

சாலைப் புளிய மரங்கள், மரங்களை அடுத்து விரிந்த குன்றுகள், மலைச்சரிவுகளையே சுவாரஸ்யமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த கேசவன் திடுக்கிட்டு, ‘என்ன சார்’ என்றான். 

தலைவன் மறுபடியும் கேட்டான். 

‘ஜனவரி வந்தால் இருபத்து மூணு சார்.’ 

தன்னைவிட ஏழு வயது சின்னவன் என்று நினைத்துக் கொண்டான். ஜனவரி வந்தால் என்கிறானே… வந்தால் தானே. அதிகம் போனால் இரண்டு அல்லது மூன்று நாள்களே, மண்ணில் அவன் வாழப் போகிறவன், நாளைக் காலையில் தலைமைக் கேம்ப்பில் கேசவன் ஒப்படைக்கப்படுவான். விசாரணை என்ற பெயரில் ஒரு பகல் நீளும். ஓர் இரவும் ஒரு பகலும் அவன் தோலை உரித்து, எத்தனை விதமான வன்முறைகள் சித்ரவதைகள் உண்டோ அத்தனையும் பிரயோகித்து, உண்மைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சிகள் நடக்கும். 

‘தேவா… பசி வயித்தைப் புரட்டுதப்பா… அடுத்த ஊருல சாப்ட்டுடலாமா…’ என்று மீசைக்காரன், கம்பிகளின் வழியாகத் தலைவனைப் பார்த்துக் கேட்டான். 

‘உம்’ என்றான் தேவா. பிறகு கேசவனைப் பார்த்து, ‘என்ன யோசிக்கிறாய்…’ என்றான். 

கேசவன், இரண்டு விரல்களைத் தேவா முன் நீட்டினான். 

‘ரெண்டுல ஒன்னைத் தொடுங்க சார்…’ 

‘எதுக்கு…’ 

‘தொடுங்க சார் இன்னா…!’ 

தொட்டான். 

‘க்ரெக்ட். நீங்க தேவநாதன் தானே?” 

‘இல்லை தேவகுமார்’ 

‘நான்தான் தப்பு. ஒன்று தேவராஜன். இல்லை தேவநாதன்னு நினைச்சேன்.’ 

சொல்லிவிட்டுச் சிரித்தான் கேசவன். 

தேவாவுக்கும், உடன் இருந்தவர்களுக்கும்கூட இது விந்தையாக, வித்தியாசமாகத் தோன்றியது. இது மாதிரி கைதிகள் பிடிபட்டதும், தப்பிக்க என்ன வழி என்று யோசிப்பார்கள். பின்னால் கேட்கப் படப்போகிற ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு ஆயிரக் கணக்கான பொய்களைக் கற்பனை செய்து கொண்டிருப்பார்கள். இந்த மாதிரி ஒத்தையா ரெட்டையா விளையாட மாட்டார்கள். 

வண்டி நின்றது. எல்லாரும் இறங்க, கேசவன் மட்டும் உட்கார்ந்திருந்தான். 

‘அவன் கூடக் காவலுக்கு யார் இருக்கப் போறா!…’ என்று மீசைக்காரன் கேட்டான். 

‘அவனும் வரட்டுமே’ என்றான் தேவா. 

‘நம்ம செலவுக்கே இடிக்குது. கொலைகாரப் பயலுக்குச் சோறு போடச் சொல்ற நீ…” 

‘உனக்கு மட்டும்தான் வயிறா? அவனுக்கு இல்லை?’ 

‘ப்ச்.’ 

தேவா கேசவனைப் பார்த்து இறங்கு’ என்றான். 

எல்லோரும் முதல் இட்லியில் கொஞ்சம் மிச்சம் வைத்தி ருக்கையில், கேசவன் மூன்றாம் இட்லியைப் பிட்டுக் கொண்டி ருந்தான். 

‘கடைசியாக எப்போ சாப்பிட்டே…?’ 

கேசவன் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருந்தது. ‘இன்னைக்கு வெள்ளிக்கிழமை. நேத்து பூரா ஒன்றும் சாப்பிடலை. புதன் கிழமை மத்தியானம் சாப்பிட்டேன். ஒரு தோழர் வாங்கி…!’ 

சட்டென்று நிறுத்திக் கொண்டான் கேசவன். எந்தச் சூழ்நிலை யிலும், யார் பெயரையும் அடையாளத்தையும் சொல்லக் கூடாது என்று சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்ததை மறந்துபோய் விட்டான். 

‘எந்தத் தோழர்?…’ என்று கேட்டான் மீசைக்காரன். 

‘……’

‘உம்…நாளைக்கு கேட்கிற முறையில் ஐயா கேட்பார். நீயும் கடகடன்னு அவனுங்க பெயரையெல்லாம் சொல்லத்தான் போறே..’ 

மீண்டும் இடைவிடாத பயணம் தொடர்ந்தது. வழி நெடுக மரங்கள். மனிதர்கள். இந்த ஆறு மாத காலத்தில் தலை மறைவாய் இருந்த நாட்களில், பகலில் எல்லாம் ஒளிந்தும், இரவில் நடந்தும் அல்லது புதிதாக வந்து சேர்ந்த நண்பர்களோடு உரையாடியும் கழித்திருந்த கேசவனுக்கு, ஒரு நாள் முழுக்க மனிதர்களைப் பார்த்தவாறு, மனிதர்களோடு செய்யும் பயணம் உற்சாகமாய் இருந்தது. ஒரு திருவிழாவுக்குப் போகிற சிறுவனின் களிப்போடு வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தான். 

தலைமை நிலையம் ஊருக்குச் சற்றே தள்ளி, ஒரு தோப்புக்குள் அமைந்திருந்தது. வெளியிலிருந்து பார்ப்போர்க்கு அப்படி ஒரு கட்டடம் கண்ணுக்குத் தெரியாது. 

‘விலங்கு போடலாமா?’ என்றான் மீசைக்காரன். 

‘இவன் அப்படிப்பட்டவன் இல்லை..’ என்றான் தேவா. 

‘ஏமாந்துடக்கூடாது தேவா…’ 

‘அது என் பொறுப்பு. நீ கவலைப்படாதே…’ 

‘காலையிலே ஆபீசர்கிட்டே ஆளை ஒப்படைப்பது…” 

‘என் பொறுப்புன்னு சொல்லிட்டேனே…’ 

‘அப்ப சரி…’ 

கேசவன் இருந்த அறையில் சின்னச் சின்ன மரப் பெட்டிகள் இருந்தன. காக்கிச் சட்டைகள் ஆணியில் தொங்கி ஆடின. காக்கி அரைக்கால் சட்டைகள் பெட்டிகளின் மேல் கிடந்தன. 

தேவா திரும்பி உடைமாற்றிக் கொண்டான். இளம் பச்சைக் காக்கியில் இருந்த தேவாவைப் பார்த்துக் கேசவன் சொன்னான். 

‘இந்த உடை உங்களுக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கு சார்…’

தேவா நிதானமாக அவனைப் பார்த்து, ‘எனக்குப் பொருந்தாத டிரஸ் இது. உம்… தலையெழுத்து…’ என்றான். 

மூலையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான் கேசவன். ‘இரு வர்றேன்’ என்று வெளியேறினான் தேவா. 

தனியாக விடப்பட்டிருந்ததால், கேசவனுக்குத் தன் நிலை நினைவுக்கு வந்தது. ஒரு வழியாக வந்து சேர்ந்து விட்டோம். இனி விசாரணைகள். தேவைப்பட்டாலும், இல்லையென்றாலும் 

சித்திரவதைகள். ஆயுள் தண்டனை தரப்படலாம். அல்லது உடன் தீர்த்தும் விடலாம். சிறைக் கம்பிகளுக்குப் பின்னால், மூத்திர நாற்றத்தோடு பன்னிரண்டு ஆண்டுகளா? அதைக் காட்டிலும் சாவது நல்லது? முதுகுத் தண்டு சிலிர்த்தது கேசவனுக்கு. காற்றே வரச் சாத்தியமில்லாத அந்த அறையில் உடம்பு சில்லிட்டது. 

‘சுமதி’ என்று ஒருமுறை முணுமுணுத்தான் கேசவன். சுமதி யைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், புத்தகத்தோடு பள்ளிக்குப் போகும், புள்ளிபோட்ட பாவாடையும், அரக்கு வண்ண தாவணியும் அணிந்த உருவம் கண்ணுக்கு முன்னால், இந்தா பிடித்துக்கொள் என்று வந்து நிற்கிறது. செப்புக் குடத்தை எடுத்துக் கொண்டு, ஒரு பெரிய செப்புக் குடமே நடந்து ஊருணிக்கு வருகிற மாதிரி உருவம்; விடியற்காலையில், உதிர்ந்த மகிழம் பூக்களைக் குனிந்து பொறுக்குகிற, ரோட்டில் ஒரு கூழாங்கல் கிடந்தாலும், ‘ஹை’ என்று ஆச்சரியத்தோடு எடுத்து, எச்சில் துப்பித் துடைத்து, துருவேறின பழைய ஜாமெட்ரி பாக்சில் போட்டுக் கொள்கிற சுமதி; அரசமரத்து அடித் தாழம்புதரில் செருகிக் கொண்டு, ஆடை குலைந்து, மார்பிலும், கன்னங்களிலும், தொடைகளிலும் இரத்தக் காயங்களோடு பிணமாகக் கிடக்கும் சுமதி. 

‘சுமதி…’ 

‘யார்?’ என்று தேவா கேட்டான். வாய் திறந்து தான் முணுமுணுத்து விட்டதை அறிந்து வெட்கம் வந்தது கேசவனுக்கு. 

‘என் சினேகிதி’ 

‘ஓ!’ 

218 # பிரபஞ்சன் சிறுகதைகள் 

புழுக்கம் தாங்காமல், ‘வாயேன்.. வெளியே உட்காரலாம்’ என்று தேவா அழைக்க, இருவரும் வெளியே வந்து உட்கார்ந்தார்கள். 

அந்தப் பழைய வீட்டை அடுத்த தோட்டம் வெகு தூரம் பரவி இருந்தது. வரிசையாக மதிலை ஒட்டிக் கிழ மரங்கள் வேம்பு, புன்னை, மா என்று பலவகை மரங்கள். நிலவு இன்னும் இரண்டு நாட்களில் நிறைய இருந்தது. 

கேசவன் மூச்சை இழுத்துக் கொண்டே கேட்டான். 

‘இங்கே தங்க அரளி மரம் இருக்கா..” 

தேவா ஆச்சரியத்துடன் ‘இருக்கு’ என்றான். 

‘வாசனை வருதே…’ 

‘தங்க அரளி உனக்குப் பிடிக்குமா?…’ 

‘சுமதிக்குப் பிடிக்கும். அதை முகரக் கூடாது. மூக்கில் இரத்தம் வருமாம்.’ 

‘யாரு சொன்னா.’ 

‘சுமதி.’ 

‘யார்?’ 

கேசவன் சில நிமிஷங்கள் சும்மா இருந்தான். “நாளைக்கு என்னை என்ன செய்யப் போறீங்க…?” 

தேவா வேறு பக்கம் திரும்பிக் கொண்டு, “விசாரணை நடக்கும்” என்றான். 

“என்ன விசாரணை?” 

‘தண்டபாணியைக் கொன்றது நீதானான்னு…’ 

‘ஆமா… நான்தான்னு ஒத்துக்குவேன். இப்பவே ஒத்துக்கறேன்.” “இதை ஆறு மாதத்துக்கு முந்தியே செய்திருக்கலாமே.’

‘முதல்லே பயம்மா இருந்தது. அப்புறமா ஒத்துக்க முடிவு பண்ணினேன். சரண் அடையலாம்னு நினைச்சேன். தோழர்கள்…’

‘தோழர்கள்…’

‘வேண்டாம்னு தடுத்துட்டாங்க… என்னை எப்படியோ தேடி வந்து அறிமுகப்படுத்திக்கிட்டாங்க. நான் செஞ்சது கொலை இல்லே, சமூக நன்மைகள்னு சொன்னாங்க!” 

‘அப்புறம் மேலக் காவேரி கொலை வழக்கு, திருவையாறு ரேஷன் கடை கொள்ளையெல்லாம் கூடச் சமூகப் பணிதானா.’ 

“எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல சார்… என்னையும் ஒரு சாட்சியா வச்சுக்கிட்டு அவங்க பேசிக்கிட்டாங்க…” 

“அவங்க இருக்கிற இடம் உனக்குத் தெரியுமா?” “தெரியாது சார்…” 

“பொய் சொல்றே.” 

“சத்தியமா சொல்றேன் சார். எனக்குத் தெரியாது. அதெல்லாம் என்கிட்டே சொல்ல மாட்டாங்க… அவங்க தான் என்னைத் தேடி வருவாங்க. நான் போனதில்லை…” 

அவன் பொய் பேசவில்லை என்பதைத் தேவா உணர்ந்தான். அந்த முகம் பொய் பேசுகிற முகமாய்ப் படவில்லை. ஆனால் நாளை விசாரிக்கப் போகிற அந்த ஆபீசர் நம்ப வேண்டுமே. நம்ப மாட்டார். நம்பக் கூடாது என்பதுதான் அவர்களுக்குக் கற்றுத் தந்த அரிச்சுவடிப் பாடம். 

‘சந்தேகி, எதையும், யாரையும் சந்தேகி’ என்பதே வேதம். தேவா பெருமூச்சு விட்டான். 

நாளை மதியம் சுமார் 2 மணி அளவில், இந்தச் சிறுவனின் விரல் நகக் கண்களில் ஊசி ஏற்றப்படும். மிளகாய்ச் சாந்து மென்மையான உறுப்புகளில் பூசப்படும். ரூல் தடி தொடை மேல் உருட்டப்படும். முரட்டு ஷூக்கள் அணிந்த பாதங்கள் அவன் விரல்களை நசுக்கும். 

வாதா மரத்தடியில், சாய்ந்து கொண்டிருந்தான் கேசவன். நிலவு நடுவானத்தில் இருந்தது. எங்கோ சில காக்கைகள் விடிந்து விட்டது என்று தப்பாக எண்ணிக் கரைந்து கொண்டிருந்தன. 

“நீ அந்தக் கொலையைச் செஞ்சு இருக்கக்கூடாது கேசவன்” என்றான் தேவா. 

“உண்மைதான் சார்… உங்களை மாதிரி ஒரு அண்ணன் எனக்கு இல்லை. இருந்திருந்தா புத்தி சொல்லித் தடுத்திருப்பார். கோபத்தைத் தூண்டி விடத்தான் நண்பர்கள் இருந்தாங்க. சுமதியைத் தாழம் புதர்ல பார்த்த மாத்திரத்துல அந்தக் கணத்துல நான் மிருகமா மாறிட்டேன். நான் மனுஷங்களையே மறந்துட்டேன். அப்பா மூங்கில் சீவ பளபளப்பா, பட்டு மாதிரி ஒரு கத்தி வச்சிருப்பார். 

எனக்கு ரொம்ப சௌகரியமா இருந்துச்சி. மூணு நாள் தாழங் கட்டிலேயே மறைஞ்சிருந்தேன். மூணாம் நாள்தான் சந்தர்ப்பம் கெடைச்சது. தண்டபாணி சாயங்காலமாத்தான் தாழங்காட்டுக்கு வருவான். எருக்கஞ்செடி மறைவா உக்காருவான். அன்னிக்கும் உக்காந்தான். கொஞ்சம் இருட்டு. முகம் தெரியற இருட்டுதான். நான் புதரை விலக்கிட்டு வெளியே வந்து அவன் கழுத்துக்குத்தான் குறி வச்சேன். சரசரன்னு சத்தம் கேட்டதும், திரும்பி என்னைப் பார்த்துட்டான். அவனுக்குத் தெரிஞ்சு போச்சு. ஓடத் தொடங்கி னான். நான் கத்தியை வீசிட்டேன். அது கால் கண்ட சதையில பட்டு அப்படியே நின்றது. ஐயோன்னு கீழே விழுந்தான் தண்ட பாணி. நான் ஓடிப்போய் கத்தியை எடுத்து…!” 

தலையைக் கவிழ்த்துக் கொண்டான் கேசவன். அவன் முதுகு சிலிர்த்தது தேவாவுக்குத் தெரிந்தது. 

“சார்… உயிர் பிரிந்தது. என் கண் முன்னால நடந்தது சார். லேசா அவன் உதடு கோணிச்சு. என்னவோ சொல்ல ஆசைப் பட்டான். சாகிற நேரத்துல எந்த மனுஷனும் உண்மைதானே பேச முடியும். உண்மையைத்தானே சார் நினைக்க முடியும். சுமதியைக் கெடுத்தது தப்புன்னு சொல்ல நினைச்சானோ என்னமோ? தலை துவண்டு போச்சு. அந்த நிமிஷத்துலதான் எனக்குத் தோணிச்சு. இந்த மனுஷனோட உயிரைப் பிரிக்க எனக்கு எந்த உரிமையும் இல்லைன்னு.. தப்பு செஞ்சதுக்கு தண்டனை தர நான் யாருன்னு… ஐயோ, எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன். தண்டபாணி முன்னால நின்று அழுதேன். என்னை மன்னிச்சுடுன்னு மன்றாடி னேன். யாரு கிட்டே நான் மன்னிப்புக் கேக்கறது?” 

தலையைக் கால்களுக்குள் புதைத்துக் கொண்டு கேசவன் குலுங்கி அழுவதைத் தேவா பார்த்தான். ஓயட்டும் என்று இருந்தான். ஓய்ந்ததும், “வீட்டுல யார் யாரெல்லாம் இருக்கா கேசவன்” என்றான். 

“அப்பா மட்டும்தான் சார்…” 

புது மலர்ச்சியோடு, புதிதாகச் சந்திக்கிற நண்பனிடம் கேட்பது போலக் கேசவன் கேட்டான். 

“உங்க குடும்பம் எங்க இருக்கு சார்?” 

“பெங்களூரில் அப்பா அம்மா இருக்காங்க. போன வாரம் வரைக்கும் தம்பி இருந்தான். உன் வயசு தான். காலேஜ்ல படிச் சிட்டிருந்தான். நல்ல வெயிட் லிஃப்ட்டர். பாரம் தூக்கும் போது வெயிட் கழண்டு பின் தலையில விழுந்திருச்சு. எங்களுக்குத் தெரியாது. 

அவனும் சொல்லலை. அடிக்கடி தலைவலின்னு படுத்துடுவான். மாத்திரை வாங்கிக் கொடுப்போம். ஒருநாள் திடீர்னு நினைவை இழந்தான். அப்புறம்தான் மூளையில் கட்டி இருக்கிறதைக் கண்டு பிடிச்சோம். ரொம்பத் தாமதமாயிட்டுது. செத்துட்டான்.” 

“எப்போ சார்…” 

“போன வெள்ளிக்கிழமைதான். நான் முந்தா நேத்து தான் டூட்டியில் திரும்பவும் சேர்ந்தேன். உனக்காகத்தான்!” 

“சாரி சார்…” 

விடிகிறநேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. கேசவன் சுருட்டி மடக்கிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான். 

தேவா அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். இந்த நாள் அவனுக்காக விடியவில்லை என்று அவனுக்குத் தோன்றியது. நாளை சூரியோதயத்தை அவன் பார்க்கப் போவதில்லை என்பதும் அவனுக்குத் தெரியும். 

மனிதன், எந்த ஜீவராசிக்கும் இழைக்கக் கூடாத இம்சைகள், இவனுக்கு நாளை இழைக்கப்படப்போவதை நினைத்துப் பார்த் தான். ஒருமுறை அவனக்கு உடம்பு அதிர்ந்தது. நியாய, அநியாயங் கள் பற்றியெல்லாம் தான் நினைக்கக் கூடாதவற்றைப் பற்றியெல் லாம் நினைத்தான். கேசவனைத் தப்பவிக்கலாம் என்று ஒரு கணம் தோன்றியது. தப்பிக்கும் மனநிலை இல்லாத, குற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அடைந்துவிட்ட மனிதனை என்ன செய்வது என்று தோன்றியது. சஞ்சலத்துக்குள்ளானான் அவன். 

திடீரென்று பறவைகளின் கூட்டுக் கரைசல் காரணமாகத் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான் கேசவன். 

“தூங்கிட்டேன் சார்.” என்று அசட்டுத் தனமாகச் சொன்னான். பரவிக் கொண்டிருந்த வெளிச்சத்தில் தேவாவைப் பார்த்துச் சொன்னான். 

“இன்னைக்குத்தான் ரொம்ப நாளைக்கு அப்புறம் நிம்மதியாத் தூங்கினேன். ஒவ்வொரு நிமிஷமும் செத்து, செத்து, எப்போ போலீஸ் வருமோ, எப்போ மாட்டிக்குவோமோன்னே நினைச்சுட்டு இருக்கிறதாலே தூக்கமே வராது!” 

மலர்ந்து வரும் புதிய வெளிச்சத்தில் பரவி விரிந்த தோட்டத்தை ஆச்சரியத்தோடு பார்த்தான். “எவ்வளவு அழகான தோட்டம் சார் இது…” என்றான். வெகு தூரத்தில் புறக்கடைக் கதவை ஒட்டிப் பெரிய மரமாய் இருந்த தங்க அரளியைப் பார்த்தான். பூக்கள் உதிர்ந்து கிடப்பதை இருந்த இடத்திலிருந்தே அவனால் பார்க்க முடிந்தது. எடுத்து முகர ஆசை எழுந்தது. 

“சார்… அந்த மரத்துகிட்டே போய் பூ பொறுக்கிட்டு வரட்டுமா…?” 

“செய்யேன்.” 

கேசவன் எழுந்து நடந்தான். 

அந்த நிமிஷத்தில்தான் தேவாவுக்கு அந்த யோசனை தோன்றி யது. பாய்ந்து அறைக்குள் சென்று துப்பாக்கியை எடுத்து வந்தான். எந்த நிமிஷத்திலும் பயன்படுத்தத் தக்கவாறு தயார் நிலையில் இருந்தது அது. 

கேசவன் குனிந்து பூக்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தான். தேவா குறிபார்க்க சில வினாடிகளே போதுமானவையாக இருந்தன. வெடிச்சப்தம் கேட்டு, மரப் பறவைகள் அலறிக் கொண்டு பறந்தன. சத்தம் இல்லாமல் சரிந்து விழுந்தான் கேசவன். 

‘என்ன… என்ன’ என்றவாறு பலர் ஓடிவந்தார்கள். ‘தப்பிச்சு ஓடினான்; சுட்டுட்டேன்!’ என்றான் தேவா. ‘வெல்டன்’ என்று கைகுலுக்கினான் மீசைக்காரன். ‘இல்லேன்னா நாம கம்பி எண்ண வேண்டியிருக்கும்’ என்றான். 

தங்க அரளி மரத்தடிக்குச் சென்றார்கள். கேசவன் உயிர் பிரிந்திருந்தது. பூ பொறுக்கின போது இருந்த புன்னகை மாறாமல் இருந்தது அவன் முகத்தில். 

ஒரு சிறுவனைக் காப்பாற்றிவிட்ட நிம்மதி தேவாவுக்கு. மனம் மட்டும் அழுது கொண்டிருந்தது. 

– 1984

– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

பிரபஞ்சன் பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *