கருக்கு




(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தவத்திற்காக இப்படி அது ஒற்றைக்காலில் நின்று கொண்டிருக்கிறது என்பதில் யாருக்கும் அக்கறையில்லை. நீண்ட காலமாய் நின்றுகொண்டிருக்கிறது அது. என்ன உச்சந்தலையில் இருக்கும் ஓரிரு பச்சைத்தலைமுடிகளை வைத்தே அது உயிரோடுதான்இருக்கிறது என்பது நமக்குத் தெரியவரும். புச்சத் தலைமுடிகளுக்குக் கீழே ஒரு சில பட்டுப்போன தலைமுடிகள். பட்டுப்போன தலைமுடிகள் ஒரு பாட்டு பாடுகின்றன காற்றின் தாளத்தோடு. அது தன் வாழ்க்கைப் பாட்டாகக்கூட இருக்கலாம். எத்தனை தடவை தன் வாழ்க்கைக் குமிழ்கள் பருத்து பெருத்து வெறுமனே வெடித்துப்போயின என்பதைச் சொல்லும் பாட்டாயும் இருக்கலாம். ஆனால் எவருக்கும் அதை நின்று கேட்கத் தோன்றுவதேயில்லை.
கருக்கு ரொம்ப நேரமாய் அந்த ஒற்றைப் பனைமரத்தடியில் கால் கடுக்க நின்று கெண்டிருந்தாள். கால் கடுப்பது தொடர்ச்சியா யில்லை. கடுப்பதும் அவளுக்கு அவ்வளவு வேதனையாயும் இல்லை. அவ்வப்போது ஏதேதோ எண்ணங்கள் வந்து கால் கடுப்பை தற்காலிகமாய் ஒத்திவைத்தன. ‘ பாவம் இந்த பனைமரம்! இத்தனை காலம் இதுவும் இந்த வேகாத வெயிலில் கால் கடுக்க நின்று கொண்டிருக்கிறதே’ என எண்ணினாள்.
இருவருக்கும் பெரிதாய் ஒன்றும் வித்தியாசமில்லை உயரத்தைத் தவிர. மற்றபடி கலரெல்லாம் இருவரும் ‘ யானை செகப்பு’ . இன்னும் சொல்லப்போனால் கருக்கு கொஞ்சம் கருப்புதான் பனைமரத்தை விட. இருவரது வயிற்றிலும் அனுபவ ரேகைகள். பிரசவ ரேகைகள்.
இருவரும் நின்று கொண்டிருக்கிறார்கள். அதன் நிழல், மெல்ல பறந்து செல்லும் ஒரு பறவை போல கொஞ்சம் கொஞ்சமாய் அவளை விட்டு விலகிச் சென்று கொண்டிருந்தது. கை யை உயர்த்தி பொழுதைப் பார்த்தாள். ‘ வர்ற நாழியாச்சே’ என மனசு சொன்னது. சுருக்கம் விழுந்த முகத்தில் ஆங்காங்கு சின்னச்சின்னதாய் சந்தோச ரேகைகள்.
அது ரொம்ப வருஷத்து பனை மரம். கருக்கு தன் அப்பாவுக்கு சோறு கொண்டுபோகும்போது அவளின் பாவாடையை மோகம்கொண்ட ஆண்மகனைப்போலப் பிடித்து இழுத்திருக்கிறது. அவளின் ஸ்பரிசங்ளை ரசித்திருக்கிறது. இலையின் சரசரப்புக்கிடையே அவளது ஏச்சை ஒரு இன்பமாக அது ஏற்றுக்கொண்டிருக்கிறது . ஆனால் அவளின் மேல்சட்டையைப் பிடித்து இழுக்கமுடியாதவாறு அவள் தனக்கு இணையாக வளராதது அதற்கு எரிச்சலாகவே இருந்தது. ‘தான் மட்டும் இப்படி இருபதடி உயரம் வளர்ந்து என்ன புண்ணியம். எப்போதாவது ஒரு ஆண்மகன் இடையில் கசங்கிப் போன கோவணத்தோடு என் மீது ஏறி வருவான். அதற்காகவா நான் வளரவேண்டும், வாழவேண்டும்; பேசாமல் நீ எனக்கிணையாப் வளர்ந்து வாவடி கருப்பி. . என் செல்ல கருக்கி. ஜாலியாய் பேசிக் கொண்டே, சிரித்துக்கொண்டே, கதையாடிக்கொண்டே. .’ இப்படித் தான் அது அ டிக்க டி நினைக்கும். கருக் கை விட அ ஞ்சாறு வயது மூத்ததாயும் இருக்கலாம். அந்த வகையிலும், அப்பவே பனங் கொட்டை போட்டு முளைக்க வைத்ததிலும் அவளுக்கு அண்ணன் அல்லது அக்காவாகத்தான் அது. ஆனால் அவள் அ ப்படி நினைக்க வில்லை அதை. அதுவும் அப்படி நினைக்கவில்லை அவளை! தலையை உயர்த்தி அதன் தலையைப் பார்த்தாள். முன்னாடி இருந்த செழிப்பு இல்லை அதனிடம். தலைமுடிகள் கூட உதிர்ந்துவிட்டன. ஓரிரு பழுத்தவை அங்குமிங்கே அசைந்தன. வாழ்க்கை அதன் வரிகளில் தெரிந்தது. அடியில் இருக்கும் தூரத்து வரிகள்! வளர வளர நிறைய வரிகள்; வலிகள். சிறிய வயதில் அவளும் கூட ஒரு வரியை அதன் அடியில் வெட்டியிருந்தாள். வலியை உருவாக்கினாள். விளையாட்டாக அரிவளால் வெட்டி அவள் பெயரைப் பதித்திருக்கிறாள். ஆனால் ஒரு வயதில் அந்தப் பெயருக்கு மேலே இன்னொரு பெயரையும் வெட்டினாள். அது அவன் பெயர். இப்படி நிறைய வரிகள். ஒவ்வொரு வரியும் ஒரு வலியாய் இருக்கலாம்.
வாழ்க்கை தரும் வரிகள் இவை! வரிகள் தரும் நினைவு இவை! நினைவு தரும் சுகதுக்கங்கன் இவை!
‘கொஞ்சம் உக்காந்துக்கவா? என அதன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள் கேட்டாள் என்றால் உண்மையிலே கேட்டாள். வெறுமனே அவள் வாயிலிருந்து வந்த வார்த்தைகள், பனைமரத்திடம் அவள் அனுமதி கேட்பது போலத்தான் இருந்தன கொஞ்சம் பாவமாக இருந்தன. நெருங்கிய தோழனின் மார்பில் சாய்ந்து உட்காரும் ஆவலோடு கூடிய வார்த்தைகள் அவை. தேவையின் அங்கீகரிக்கப்பட்ட சுய வெளிப்பாடு அவை. எதற்காகவோ ஏங்கும் ஒரு ஆதரவற்ற பெண்ணின் தன்னிரக்க வார்த்தைகள் இப்படி பேசியும் பேசாமலும் வந்து விழுந்தான் மீண்டும் பனைமரத்தை மேல்நோக்கிப் பார்த்தாள்.
பனைமரம் ஒருநிமிடம் யோசித்தது போல! அதுக்கும் இவளை விட்டால் யாரிருக்கிறார்கள். இவள் கேட்டு அது இல்லை என்று எப்போதும் சொன்னதே இல்லை. ‘ என்ன வெசயம்? ஏன் ரொம்ப நேரமாய் இங்கெயே நின்னுக்கிட்டிருக்கெ?’ என்று சாதாரணமாய்க் கேட்டதன் அடுத்த வார்த்தை இப்படி நக்கலாக வந்தது. ‘ என்ன? இன்னொரு புருஷனைத் தேடுறியா?’
கருக்குவிற்கு காட்டமாய் வந்துவிட்டது. நாம் இருக்கும் மனநிலை தெரியாமல் நமக்கு வேண்டியவர்களே அ ல்லது நம்மைப்பற்றி நன்றாகத் தெரிந்தவர்களே இப்படி கேலியாகவும் கிண்டலாகவும் நக்கலாகவும் பேசினால் எப்படி இருக்கும்? கோபம் பொத்துக் கொண்டு வந்துவிடுமல்லவா! கருக்கு கண்களால் அதை எரிப்பது போல் பார்த்தாள். கருக்கும் ஒரு மனுஷிதானே! ‘ ச்சீ… நாயெ என்ன பேச்சிப் பேசிற? அதுக்குத்தானெ ஆண்டவென் ஒன்னை இந்த வேகாத வெயிலெ தனியா இப்புடி நிக்க வெச்சிட்டான். என்ன பேச்சுப் பேசிற? அததுக்கும் ஆண்டவென் அளந்துதான் வெச்சிருக்கான். . கருஞ்சிறுக்கி. இத்தினி காலமாயியும் ஒனக்கு புத்தி வெளங்கலியோ இன்னும் அந்த மாதிரியே பேசிக் கிட்டிருக்கெ கருஞ்சிறுக்கி. எத்தினி புருஷன் நீ எனக்கு பாத்துக் குடுத்தெ? எத்தினி ராசாமாரையும் தொரைமாரையும் எனக்கு கட்டிவெச்செ. கருஞ்சிறுக்கி. .. பேச வந்துட்டா பெருசா ’ நெஞ்சுக்குழியின் அதிர்வுகள் குமுறிக் கொப்பளித்தன.
‘என்ன? ரெம்பதான் சலிச்சுக்கிறெ? நா மட்டுந்தான் நிக்கிறே னாக்கும்? நீயுந்தானெ நிக்கிறெ! நீயும்தானெ நின்னெ. இன்னக்கி மட்டுமில்லெ. எத்தினி வருஷம் நின்னெ? அதுவும் எனக்குக் கீழேயே நின்னெ. .. நிக்கிறே! தாவணி மொனைய வாயிலை வெச்சுக்கிட்டு சாரை சாரையா கண்ணீரோட எத்தினி நாளு நின்னெ? சேலையை எடுத்து வயித்தை ப்போத்தி எத்தினி வருஷம் இங்கெ நின்னெ? சேலையை எடுத்து தலையப் போத்தி எத்தினி நாளு நின்னெ? அதுவும் உங்க ஊர்க்காரப் பயலுக இந்தப்பக்கம் வரும் போது எத்தின நாளு எனக்குப் பின்னாடி போயி வெளியே போறது மாறி குந்தவச்சி ஒளிஞ்சிருக்கெ? அதெல்லாம் மறந்து போச்சோ செரி அதை விடு. எத்தினி நாளு அந்தச் சின்னுப்பயலுக்கு முந்தானை விரிச்சிக்கிட்டு இங்கெ கெடந்தெ? இதெல்லாம் ரெம்ப நல்லதோ? என்னை மட்டும் குத்தஞ் சொல்லுறெ. அப்புறமென்ன? கருஞ்சிறுக்கியா? ஹா. .. ஹா. ..நா கருஞ்சிருக்கியா. ? அப்போ நீ மகாராணி.. . சேப்புக்கலரு மகாராணி. . அப்புடியா? மகாராணி. .. ஹா ஹா ஹ்ஹா. … நல்ல சோக்காத்தான் பேசுறெடி கருக்கு. பேசு.’
உள்ளத்தைக் குத்திக் கிழித்தன வார்த்தைகள். உதிர்ந்து விழுந்தன. வெந்து போயிருந்த மனதின் எண்ணங்கள். குபீரென்று எழுந்தன அடிமனத்து அழன்ற வாசனைகள். உயிரின் அடியில் இருந்து ஜிவ்வென அந்தப் பறவை பறந்து வயிற்றுக்குள்ளே கிறீச்சிட்டது. வயிறு ஒரு குலுங்கு குலுங்கி வெளியே வந்து எட்டிப்பார்த்தது. எட்டிக்குதித்து வெளியே பறக்க அந்தப் பறவை வந்தபோது மூச்சுக் குழாய் அடைபட்டுப்போக, சுவாசிக்க இ யலாமல் அதை உள்ளே தள்ளினாள். அது வயிற்றுக்கும் கழுத்துக்குமிடையே வந்துவந்து
விளையாடிக்கொண்டிருக்க, மூச்சு அடைபட்டும் வயிறு அழுத்தியும் பிரசவ நேரத்து வேதனைகள் வந்து அவளுக்குள் ஒரு புயலாய் சுருண்டன. ‘ மானக்கெட்ட சிறுக்கி. என்ன தெரியும் ஒனக்கு? அவரைத் தெரியுமா ஒனக்கு? அவரு தராதரம் தெரியுமா ஒனக்கு? என்ன பேச்சிப் பேசுறெ? கண்டவனுக்கெல்லாம் நா முந்திய விரிக்கலெ கட்டுன வனுக்குத்தான் விரிச்சென். ஒனக்கு என்ன தெரியும்? ஆம்பளையைப் பாத்திருக்கியா நீ? ஆம்பளை வாசனை தெரியுமா ஒனக்கு? எல்லாந் தெரிஞ்சவ மாதிரி எடுத்துப்பேச வந்துட்டா. போடி..போ. போயி பக்கத்து வீட்டை எட்டிப்பாரு. அதுக்குத்தான் நீ லாயக்கு. கண்கள் விசும்பின. மனம் கொதித்துக்கொண்டிருந்தது.
‘கட்டுனவனா? அது யாருடி அது? எனக்குத் தெரியாமெ? ரெண்டு மாசம் தெனமும் இங்கெ வந்து ரெண்டு பேரும் படுத்துக் கெடந்ததைப் பாத்துருக்கேன். அப்புறமா ஒரு அந்தி சாயல்லெ அவென் ஒன்னை எம்பக்கத்துலெ, இதோ இப்ப நிக்கிறியெ இந்த மாதிரி விட்டுட்டு கையில தகரப்பெட்டியோட வேகமா கௌக்கு நோக்கிப்போனது தெரியும். அதுக்கப்புறம் ஒரு அஞ்சி மாசம் கழிச்சி தெனமும் இந்தா வந்து நிக்கிறியே இந்த மாதிரி எம்பக்கத்திலெ வந்து முந்தானையெ தலையிலெ வெச்சிக்கிட்டு காத்துக்கெடந்தது தெரியும். அதுவே ஒரு பத்து மாசம் கழிச்சி வயித்துக்கு குறுக்கெ ஒரு தொட்டியெ கட்டிக்கிட்டு’ குவா குவா’ ன்னு என்னமோ கத்த. கண்ணீரும் கம்பளையுமா உக்காந்திருந்ததெ பாத்துருக்கேன். மத்தபடி அது யாருடி ஒம்புருஷன்? ஆம்பளையாமெ, எத்தினி மாசம் படுத்து அதைப் பாத்தெ அவென் ஆம்பனையின்று. ஆம்பளையா? படுத்துட்டு எந்திருச்சி ஓடிப்போறவந்தான் ஆம்பளையோ. எனக்கு என்னடியம்மா தெரியும்? ஆம்பளையே பாத்ததில்லெ நா. ஆமா.. ஆம்பளையின்னா எப்புடி இருப்பாக ஓஞ் சின்னு மாதிரியா? சும்மா சொல்லக்கூடாதுடியம்மா அவந்தான் ஒனக்கு செரியான சோடி கருங்கொரங்கு மாதிரி’ எகத்தானமாய் சிரித்தது அது.
கருக்குவிற்கு பத்திக்கொண்டு வந்தது. ‘ச்சீ… சனியனெ! என்ன பேச்சிப்பேசுறெ? கருங்கொரங்காமெ… கருங்கொரங்கு. நீதான் கருங்கொரங்கு. உங்கம்மா அப்பந்தான் கருங்கொரங்கு. அவுசாரித் தனமா பேசாதடி அள்ளிவெச்சி கொளுத்திருவேன். பட்டி முண்டை!
கோபத்தின் தொடர்ச்சியாய் அதற்குப் பிறகு அவள் எதுவும் பேச விரும்பவில்லை. எதைச் சொன்னாலும் இதனிடம் எடுபடாது. பாவம் என்று ஒருபோதும் எனக்கு ஆதரவாய்ப் பேசாது. எத்தனை தடவை செத்து செத்து இதன் காலடியில் விழுந்தாலும் இப்படித்தான். பேசும். சின்ன ஆறுதல் சொல்லத் தெரியாது இதுக்கு. மரம். பனைமரம். செத்துப்போனவனின் உடல் போல விறைப்பாய் நின்று கொண்டிருக்கும் பனைமரம். கரிய பேய் இது. நெட்டையான பிணம் இது. பிணவறையில் தான் இது பிறந்திருக்க வேணடும். எனன தெரியும்? இதுக்கு என்னைப்பற்றி என்ன தெரியும். என் உணர்வுகள் பற்றி என்ன தெரியும்? என் உள்ளம் பற்றி என்ன தெரியும்? அழுகை முட்டிக்கொண்டு வந்தது. உன்ளுக்குள்னே குமுறிக் குமுறி அழுதாள். ஒப்பாரி வைத்து அழுதாள் பெத்துப்போட்டவனுக்காக அழுதாள். படுத்துப்போனவனுக்காக அழுதாள். படைத்தவனுக் காக அழுதாள். அழுகைதான் நிரந்தரம். அழுகைதான் சுதந்திரம். அழுகைதான் நான். அழுகைதான் என் வாழ்க்கை என்பது போல் அழுதாள். கண்களின் கண்ணீர் கூட அவள் விருப்பத்தை பூர்த்தி செய்யாததுபோல அழுதாள். கண்ணீரும் வரவில்லை. மனம் அழுதது. நடந்ததை நினைத்து அழுதது. அழ அழ அதன் வேகம் அதிகரித்தது. குறைவதற்குப் பதிலாக அதிகமாகியது அது.
மனதுக்குள் ஒரு நீர்வீழ்ச்சி கர்ண கொடூர சத்தத்தோடு விழுந்து கொண்டிருந்தது. அது அடங்கி ஆறாய் ஓடுவதற்கு தூரமிருந்தது. அதுவரை அவள் பேச மாட்டாள். பேசுவதிலும் ஒரு பயனும் இல்லை. பொய்யைச் சொன்னால் பழித்து திட்டலாம் உண்மையைச் சொன்னால், என்ன செய்வது? இத்தனை நேரம் அவள் பேசிய தனைத்தும் உண்மைக்கெதிரே நடத்திய சாமர்த்திய தடுப்பு தர்க்கங்கள். எத்தனை இருந்தாலும் இறுதியில் அது உள்ளேயாவது குமுறும். பிளிரும். அதைத் தடுக்க முடியாது. அது உடனே , அடங்காது.
பனை மரம் காற்றில் அசைந்தது அது அதன் புன்னகை போல இருந்தது. வெறுப்பு வந்தது அவளுக்கு. ‘த்தூ’ என்று துப்பினாள். மறுபடியும் வேகமாய் அசைந்தது மரம். கலகலவென்று சிரிப்பது போலிருந்தது. கண்களை மூடிக்கொண்டாள். கண்களுக்குள்ளே ஒரு பிரளயம் பிரமாண்டமாய் விரிந்தது.
பனைமரத்தின் உயரம் சட்டென்று குறைய இளம் பனையோலைக் குருத்து சரசரத்தது. பருந்து ஒன்று மேலே வட்டம் போட்டது. எங்கெங்கும் பசுமைகள் பரவிக்கிடக்க கருக்கு அதனுள்ளே அனிச்சையாய் நுழைந்தாள்.
கன்னத்தோடு கன்னம் வைத்து, உதட்டோடு உதடு வைத்து, தலை பின்னி, மடி சாய்த்து, முடி கோதி, முதுகு வருடி, பின்பக்கம் கிள்ளி அத்தனையும் ஒருநிமிடம் கண்ணுக்குள் வந்து போனது அவளுக்குள். அதனைத் தொடர்ந்து கண்களுக்குள் திடுமென அந்த மாலைப் பொழுது மெல்ல இருட்டிகொண்டு வந்தது. கண்களில் நீர்த்துளிகள் கிழக்குப்பக்கம் திரும்பிப் பார்த்து ஏக்கத்தோடு, வேதனையோடு ‘ போறீங்களா? என்னைய விட்டுட்டுப் போறீங்களா? நம்ம வாரிசெ விட்டுட்டுப் போறீங்களா.. எப்பொ வருவீங்க சீக்கிரமா வாங்களெ. நா செத்துப்போயிடுவேனோ? உங்கள மறுபடியும் பாக்காமெ நா செத்துப்போயிடுவேனோ? என் கண்ணுக்குட்டியெ பாக்க .. சீக்கிரமா வாங்களே. நா செத்துப்போறதுக்கு முன்னாடி வந்துடுங்களே. வாங்களே..’ வாய் அரற்றிக்கொண்டிருந்தது. வார்த்தைகள் குழறி இடறி விழுந்தன மேலேமேலே பறந்து பேனாள் அவள். வானத்தின் அருகே போய்விட்டதைப்போன்று ஒரு உணர்வு . திடுமென சூரியனின் வெப்பம் அதிகமாகி அவள் தன்னைத்தானே எரித்துக் கொல்லலனாள். உடலும் மனமும் ஒருங்கே பற்றி எரிந்தன. தூரத்தில் ஒற்றையான உயர்ந்த கரிய உருவம் ஒன்று குலுங்கிக்குலுங்கி சிரிப்பது கேட்டது.
“அம்மா. .” உலகத்தின்ஒட்டுமொத்த தாய்ப்பாசத்தையும் ஒருங்கே கொண்ட ஒருவனின் குரல் போன்ற அது, இப்போது அந்த திசையில் இருந்து வந்தது.
“அம்மா. …”
“அம்மா, என்னம்மா பண்ணிக்கிட்டு இருக்கே? எவ்வளவு நேரமா இங்கெ காத்திருக்கெ. நாந்தான் அதெல்லாம் வேணாம் வீட்லே இருமான்னு சொன்னேன்ல்ல . ஏன் இந்த வெயில்லெ வந்து கெடக்குறெ..”
கருக்கு கண் விழித்தாள் ஒரு நரைத்த முடி அவள் கண்களுக்கெதிரே தவழ்ந்தது. அதை விலக்கிப் பார்த்தாள். சின்ன வயதில் அவளுடைய சின்னு அங்கே நின்றுகொண்டிருந்தான். வாரி அணைத்துக் கொண்டாள். ‘
பனை மரம் இப்போது அமைதியாய் இருந்தது. எதுவுமே அறியாதது போல; ஒன்றுமே தெரியாதது போல!
– மருதம், முதற் பதிப்பு: டிசம்பர் 2006, எம்.கே.குமார் வெளியீடு, சிங்கப்பூர்.