கயவன் வேதநிதி மோட்சம் பெற்ற கதை!




மகன் வேதநிதியை நினைக்க நினைக்க பண்டிதருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
‘என்ன பாவம் செய்தேனோ, எனக்கு இப்படி ஒரு மகன்!’ – மனம் வேதனையில் விம்ம… வீடு நோக்கி தளர் நடை போட்டார்.
பண்டிதரின் ஒரே மகன் வேதநிதி. பெற்றோரை மதிக்காமல், கற்ற கல்வி யையும் மறந்து, எந்த நேரமும் மது- மாது என்று சிற்றின்பத்திலேயே திளைத்திருந்தான். எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவன் புத்தியில் ஏற வில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக… இன்று, அரண்மனையில் அவனால் ஏற்பட்ட அவமானத்தையே பண்டித ரால் தாங்க இயலவில்லை.
அப்படி என்ன நேர்ந்தது?
சில நாட்களுக்கு முன்பு, பண்டிதரைப் பாராட்டி விலைமதிப்பற்ற ரத்தினம் பதித்த மோதிரம் ஒன்றைப் பரிசளித் திருந்தார் அரசர். மிக்க மகிழ்ச்சியுடன் பரிசைப் பெற்று வந்த பண்டிதர், அதை மனைவியிடம் கொடுத்துப் பத்திரப்படுத்தச் சொல்லி இருந்தார்.
ஆனால், பெற்றோருக்குத் தெரியாமல், அதைக் களவாடிச் சென்ற வேதநிதி, தனக்குப் பிரியமான நடன மாது ஒருத்திக்கு அதைக் கொடுத்து விட்டான்.
இன்று காலை அரண்மனை கலை நிகழ்ச்சி ஒன்றில் ஆட வந்த நடன மாது, அந்த மோதிரத்தையும் அணிந்து வந்திருந்தாள். இதைக் கண்ணுற்ற அரசருக்கு சந்தேகம். அவளிடம் கடுமையாக விசாரித்தார். அரச தண்டனைக்கு பயந்து, உண்மையைக் கூறி விட்டாள். கோபமுற்ற அரசர், அனைவரது முன்னிலையிலும் பண்டிதரை கடுமையாகக் கடிந்து கொண்டார்!
‘தன் மீது அரசர் கொண்டிருந்த பெருமதிப்பு, மகனின் செயலால் களங்கமாகி விட்டதே!’ என்ற வருத்தமும், மகன் மேல் ஏற்கெனவே கொண்டிருந்த வெறுப்பும் ஒன்றுசேர… அவருக்குள் கோப பிரளயம்!
”எங்கே அவன்?” கண்கள் சிவக்க, வீடே அதிரும்படி கூச்சலிட்டார் பண்டிதர். குரல் கேட்டு ஓடோடி வந்தாள் மனைவி.
”சுவாமி… யாரைப் பற்றிக் கேட்கிறீர்கள்?”
”வேறு யார்? உன் அருமைப் புத்திரன் வேத நிதியைத்தான் கேட்கிறேன்” என்றவர், நடந்தது அனைத்தையும் மனைவியிடம் விவரித்தார்.
”வருந்தாதீர்கள் சுவாமி. வேதநிதியை அழைத்து, வேண்டிய அறிவுரைகளைக் கூறுகிறேன்!”
மனைவியின் வார்த்தைகளைக் கேட்ட பண்டிதர் இடி இடியென சிரித்தார். ”பெண்ணே, காளையிடம் கூட பால் கறந்து விடலாம். ஆனால், உன் மகன் திருந்துவான் என்பது கனவிலும் நடக்காது. அவன் இனி, ஒரு கணம் கூட இங்கு இருக்கக் கூடாது!” என்று ஆவேசத்துடன் கத்தினார்!
வீட்டை விட்டு வெளியேறிய வேதநிதி, நேராக தனது பிரியத்துக்குரிய வேசி ஒருத்தியின் இல்லத்துக்குச் சென்றான். ஆனால் அவன், அங்கு வருமுன்பே ‘வீட்டை விட்டு துரத்தப்பட்டான்!’ என்ற தகவல் வந்து விட்டிருந்தது!
‘இவனால், இனி பயன் இல்லை!’ என்று கருதி, அவளும் அவனை உதாசினப்படுத்தி, விரட்டினாள்.
வேதநிதி, மனம் நொந்தான். பெரும் அவமானத்தில் புழுவாக நெளிந்தான்! பகல் முழுவதும் அன்ன- ஆகாரம் இன்றி, தெருத் தெருவாகச் சுற்றித் திரிந்தவன், ஒரு கட்டத்தில், பசி பொறுக்காமல் மயங்கி விழுந்தான்.
மயக்கம் தெளிந்து அவன் விழித்தபோது, இரவு நெருங்கி விட்டிருந்தது. தெருக்களில், ‘ஹரஹர மஹா தேவா… சம்போ சங்கர மஹாதேவா… நமசிவாய!’ என்ற கோஷத்துடன் மக்கள் சாரிசாரியாகச் சென்று கொண்டிருந்தனர். மேனியெங்கும் திருநீறு, கழுத்திலும் கைகளிலும் ருத்ராட்ச மாலையுடன் திகழும் அவர்களது தோற்றமே அவனுக்கு விநோதமாக இருந்தது!
தன்னைக் கடந்து சென்ற பெரியவர் ஒருவரை அணுகியவன், ”ஐயா, இன்று என்ன விசேஷம்? எல்லோரும் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
வேதநிதியை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தவர், ”சரிதான்… உனக்கு விஷயம் தெரியாதா? இன்று மகா சிவராத்திரி புண்ணிய தினம்!” என்றார்.
மங்கையரே கதியென்று கிடந்த வனுக்கு, மாதொரு பாகனை பற்றியோ… அவருக்குரிய விசேஷங்கள் குறித்தோ என்ன தெரியும்? ஒன்றும் புரியாத வனாகக் கேட்டான்:
”சிவராத்திரியா… அப்படியென்றால்?”
‘இப்படியும் ஒருவனா?’ என்று மனதுக்குள் பரிதாபப் பட்ட அந்தப் பெரியவர், சிவராத்திரியின் மகிமையை அவனுக்கு விளக்கினார்: ”மாசி மாதத்து கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசி திதியில் வருவது மகா சிவராத்திரி; உமையரு பாகனுக்கு மிகவும் விசேஷமானது.
கோடி பிரம்மஹத்தி தோஷங்களைப் போக்கக் கூடியதும், ஆயிரம் அஸ்வமேத யாகங் களைச் செய்த பலனை தரக்கூடியதுமான மகிமை பொருந்திய விரத நாள். அப்பேர்ப்பட்ட மகத்துவம் பொருந்திய நாளான இன்று, அந்த மகேசனின் அருள் வேண்டி அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று கொண்டிருக்கிறோம்!”
அவரது வார்த்தைகள் கேட்டு, மகிழ்ந்தான் வேதநிதி. அவன் மனதில் ‘பளிச்’சென்று ஒரு யோசனை! வேக வேகமாக சிவாலயத்தை நோக்கி நடந்தான்.
ஆலயத்தில் முதற் கால பூஜை முடிந்து விட்டிருந்தது. இறைவனைத் தூய நீராட்டி, பொற்பீடத்தில் வைத்து, தாமரை, கரவீரம், சதபத்திரம் முதலான மலர்களால் அலங்கரித்திருந்தனர். அவர் முன் சுத்த அன்னம் மற்றும் காய்கறி ஆகியவை படைக்கப் பட்டிருந்தன. சுற்றுமுற்றும் பார்வையைச் சுழல விட்ட வேதநிதி, அடி மேல் அடி வைத்து, மெள்ள கர்ப்பக் கிரகத்துக்குள் நுழைந்தான்.
உள்ளே விளக்கொளி மங்கலாக இருக்கவே… ‘சட்’டென்று தனது வேஷ்டியில் இருந்து சிறிது துணியைக் கிழித்தவன் அதையே திரியாக்கி, விளக்கில் இட்டான். இப்போது, முன்பைவிட பிரகாசமாக சுடர் விட்டது தீபம். அந்த வெளிச்சத்தில்… ஸ்வாமிக்கு முன்னால் படைக்கப்பட்டிருந்த ஆகாரங்களை அள்ளி எடுத்துத் தனது மேல்துண்டில் கட்டிக் கொண்டு அவசர அவசரமாக வெளியேறினான் வேதநிதி.
இதைக் கவனித்து விட்ட காவலர்கள் சிலர், அவனைத் துரத்த ஆரம்பித்தனர். ”ஓடாதே, நில்!” என்றபடி தன்னைப் பின்தொடர்ந்த காவலர்களை லட்சியம் செய்யாமல், ஓடிக் கொண்டிருந்தான் வேதநிதி.
காவலர்கள் வேறு வழியின்றி, அவனை நோக்கி அம்பெய்தனர். மறுகணம் ‘ஆ’வென்ற அலற லுடன் சுருண்டு விழுந்த வேதநிதி, அங்கேயே உயிரை விட்டான். இதற்காகவே காத்திருந்த எமதூதர்கள், அவனை எமலோகத்துக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர்.
அப்போது, அங்கு தோன்றிய சிவகணங்கள் அவர்களைத் தடுத்தனர்: ”எம கிங்கரர்களே, நில்லுங்கள்! திரிபுரம் எரித்தவரும் அடி-முடி காண முடியாதவருமான எம்பெருமான் ஈசன், இவனை கயிலாயத்துக்கு அழைத்து வருமாறு கட்டளை இட்டிருக்கிறார்!”
உடனே எம தூதர்கள், ”சிவ கணங்களே, மன்னியுங்கள். உங்களது பேச்சு விந்தை அளிக்கிறது. கயிலையை அடையும் பாக்கியம் பெற இவன் புண்ணிய காரியம் என்ன செய்துள்ளான்? வேத சாஸ்திரங்களைக் கற்றிருந்தும், தான் கற்ற வித்தையை மறந்தவன்; பெற்றோரை மதியாதவன்; சிற்றின்பத்திலேயே உழன்றவன். இவனுக்கா கயிலாயப் பேறு?” என்றனர் ஆவேசத்துடன்.
அவர்களை ஆறுதல்படுத்திய சிவகணங்கள், ”நீங்கள் கூறுவது உண்மையே! எனினும், சிவராத்திரி தினமான இன்று சந்தர்ப்ப வசத்தால் அன்ன- ஆகாரமின்றி, நீர் கூட அருந்தாமல் தன்னை அறியாமலேயே உபவாசம் இருந்திருக்கிறான். அத்துடன் சிவாலயம் சென்று சிவ தரிசனம் பெற்றதுடன், அங்குள்ள திருவிளக்கு தீபத்தைத் தூண்டி, அது சுடர்விட்டு எரிய கைங்கரியம் பண்ணியிருக்கிறான். எல்லா வற்றுக்கும் மேலாக புண்ணிய தினமான இன்று தன் உயிரை விட்டிருக்கிறான்! எனவேதான், சிவலோகம் வரும் பாக்கியம் இவனுக்குக் கிடைத்திருக்கிறது!” என்று விளக்கினர்.
புரிந்து கொண்ட எமதூதர்கள் வழிவிட… சிவகணங்கள், வேதநிதியை சிவலோகம் அழைத்துச் சென்றனர். மட்டுமின்றி, மறு பிறவியில் கலிங்க நாட்டு மன்னனாகப் பிறந்த வேதநிதி சகல போகங்களையும் அனுபவித்து மகிழ்வுற வாழ்ந்தான்.
பெரும் பாவியே ஆனாலும், தன்னையும் அறியாமல் சிவராத்திரி விரதம் இருந்த வேதநிதிக்குக் கிடைத்த பாக்கியத்தைப் பார்த்தீர்களா? அதற்காக, வாழ்நாள் முழுவதும் பாவங்கள் செய்து விட்டு, சிவராத்திரியில் மட்டும் விரதம் இருந்தால் போதும் என்று பொருள் கொள்ளக் கூடாது!
அறியாமல் கடைப்பிடித்ததற்கே இவ்வளவு பலன் என்றால், சிவராத்திரி மகிமை அறிந்து உள்ளன்போடு அவனை வழிபட்டு விரதம் இருந்தால் எவ்வளவு பாக்கியம் பெறலாம் என்பதை உணர்ந்து பாருங்கள்.
சிவராத்திரி தினத்தில் அவன் தாள் பணிவோம்!