கமலா வீட்டோடு பறந்து போனாள்




இரவு கனவில் தன்னுடைய தாத்தாவின் ஆவி சொன்ன அந்தப் பேருந்தில் ஏறினாள் கமலா. அவர் சொன்னதற்கு மாறாகக் காலியாக இருந்த அந்தப் பேருந்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்தாள். தன்னைவிட இருமடங்கு வயதையுடைய பத்துபேர் இருந்தது எண்ணியபோது தெரிந்தது. தாத்தா கானாமல் போனபோது அவர் பறந்து போனதாக அந்த ஊரில் பரவலாகப் பேசப்பட்டது. அப்போது அவள் சிறுமியாக இருந்ததால் அது பற்றிப் பெருசாக அலட்டிக்கொள்ளவில்லை. அதன் பிறகு பலமுறை தாத்தாவின் ஆவி நல்லிரவில் வந்து அவளைப் பார்த்து டாட்டா காட்டிச் செல்லும். ஆனால், நேற்றைய நாள் வழக்கத்திற்கு மாறாக அவளை அப்பேருந்தில் புறப்பட்டு வருமாறு கூறிச் சென்றது.
தாத்தா உயிருடன் இருந்த போது அவள் அவருடைய சுண்டு விரலைப் பிடித்துக்கொண்டு துள்ளிகுதித்து ஓடுவாள். இல்லை இல்லை காற்றில் பறப்பாள். அப்படி ஒருநாள் பறந்து கொண்டிருந்தபோது அவளுக்குப் பறக்கும் வீட்டில் அமர்ந்தபடியே ஆகாயத்தில் வலம் வரவேண்டும் என்று தோன்றியது. அந்த யோசனையை அவள் அவரிடம் கூறிய போது அப்படிப் பறக்க உனக்கும் ஒரு நாள் காலம் கனிந்துவரும் அது வரை அது பற்றி யாரிடமும் எதுவும் கூறாதே என்றார். அது அவளுடைய மனதில் பசுமையாகப் பதிந்தது. அது பற்றி அவள் யாரிடமும் மூச்சு விடவில்லை.
ஆமையாக நகர்ந்துகொண்டிருந்த பேருந்து வேகமெடுத்தது.
சிறுமியாக இருக்கும் போது மரம் செடி கொடிகள், பறவைகள், ஆடு மாடுகள் என எதைப் பார்த்தாலும் அப்படியே மெய்மறந்து நிற்பாள் கமலா. அவை எல்லாம் விரட்டி கட்டிடங்களால் அடிக்கப்பட்டதால், இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில மட்டுமே தாக்குபிடித்து இருக்கின்றன. அவையும் மோசமான நிலையில் உள்ளன. அவற்றைப் பார்த்த அவளுடைய முகத்தில் கவலை அரும்பியது.
சாலையோரம் இருந்த கருவேலமரத்தைக் கடந்த போது, அதில் தங்கியிருந்த கருங்குருவி பறந்துவந்து கமலாவின் தோள்மேல் அமர்ந்து கொண்டது. குருவியின் கால்களில் இருந்து சிதறிய வேங்கை மரத்தின் மணம் அவள் மேனி முழுதும் பரவியது. அதனால் அவள் முகத்தில் அரும்பியிருந்த கவலை விஸ்வரூபம் எடுத்துக் கண்களைக் கவ்வியது.
அப்போது அவள் கூந்தலில் பதுங்கியிருந்த வாள் உருவிக்கொண்டு வந்து அப்பறவையின் கழுத்தை வெட்டி இரு துண்டாக்கியது. உருவிய வாளின் முனை பட்டு அறுபட்ட அவள் கூந்தல் முகத்தை கவ்வியிருந்த கவலையைக் கட்டி இழுத்துக்கொண்டு காற்றில் பறந்து சென்றது.
திரும்பவும் அவள் பார்வை எவ்வித சலனமுமின்றிப் பேருந்தைக் கடந்து போய்க்கொண்டிருந்த வீடுகளை ரசிக்கத் தொடங்கியது.
அவள் சிறுமியாக இருந்தபோது அவளுடைய வீட்டைச் சுற்றிப் பச்சைப் பசேல் எனக் காட்சி அளிக்கும். அந்த அழகை ரசிக்கும் ஆர்வத்தில் உணவு உண்ணக் கூட மறந்து போவாள். அப்படி மறந்துபோய் அம்மாவிடம் பல முறை அடிவாங்கிய அனுபவம் அவளுக்குண்டு. ஆனால் இப்போது அப்படி இல்லை. வளர்ந்துவிட்டாள் அதனால்.
தன்னுடைய தாத்தா கானாமல் போனதற்குத் தன்னுடைய அம்மாவின் நடத்தையே காரணம் என்பதை அவள் மூளை கண்டுபடித்துவிட்டது.
ஆனால் அது பற்றி அவள் ஒரு போது அம்மாவிடம் வாய்த்திறக்கவில்லை. அதற்கான காரணம் அவளுடை அம்மாவுக்கு நன்கு தெரியும். அதனால் அவள் அது பற்றி மூச்சுவிடவில்லை. அத்துடன் அவள் கமலாவை அடிப்பதையும் நிறுத்திவிட்டாள்.
இவ்வாறான யோசனைகள் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தபோது அவற்றை விரட்டியத்தது அந்த வீடு. அதை உற்றுப்பார்த்தாள். மிக அற்புதமானதாக அது அவளுக்குத் தெரிந்தது. வீடு கட்டினால், அந்த மாதிரியான வீட்டைதான் கட்ட வேண்டும் என்று அவள் உடலில் குடியிருந்த ஆவி சொன்னது.
எவ்வித வண்ணமும் இல்லாத அந்த வீட்டின் அழகை வியந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, என்ன அம்மா வீடு கட்டபோறீங்களா? என்ற குரல் கேட்டுத் திரும்பினாள்.
அவள் அமர்ந்திருந்த சீட்டில் வந்து அமர்ந்திருந்தவரின் வாயிலிருந்து வெளியான வார்த்தை அது. அவ்வாறு கேட்டவர் அவளுடைய பதிலை எதிர்பாராமல் தொடர்ந்தார்.
“வீடுகட்டுவது மிகப்பெரிய கலை அம்மா! வீடு கட்ட ஏற்ற நல்ல நிலமாகப் பார்த்து வாங்க வேண்டும். வாஸ்து பார்க்க வேண்டும். மணல், ஜல்லி, கட்டுக்கல், செங்கல், சிமெண்ட், கம்பி எல்லாம் தரமானதாகப் பார்த்து வாங்க வேண்டும். நாங்கெல்லாம் வீடுகட்டும் போது ரொம்ப சல்லிசாக இருந்தது. ஆனால், மணிலில் இருந்து எல்லாப் பொருளும் கிடுகிடுனு விலை ஏறிப்போச்சு. அதனால் நிறைய பேர் வாடைகை வீட்டிலே காலத்தைக் கழித்து விட்டு போயிடுறாங்க” என்று பிரங்கம் மாதிரி தொடர்ந்து கொண்டிருந்த அவருடைய பேச்சுக்களைக் காதில் வாங்கிக்கொண்டே இருந்த அவளுடைய கண்கள் சன்னலுக்கு வெளியில் எதையோ தேடிக்கொண்டிருந்தன.
தன்னுடைய தாத்தாவின் கைகளைப் படித்துக்கொண்டு பறந்த போது வாழை, நெல், தென்னை எனக் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வயல்வெளிகளாக இருந்த அந்த இடம்தான் இது என்பதற்கு அடையாளமாக இருந்த அந்த ஆலமரத்தின் விழுதுகள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. அந்த மரம் எவ்வளவு காலமாக இருக்கிறது என்று அந்த ஊரில் இருக்கும் வயதான தாத்தாக்களுக்குக் கூடத் தெரியாது என்று அவளுடைய தாத்தா அப்போது கூறியதை அவருடைய ஆவி அவளுக்கு இப்போது கண்முன் கொண்டுவந்து காட்டியது.
ஆனால் இப்போது அந்த மரத்தைச் சுற்றிப் பெரிய பெரிய வீடுகள் முளைத்து வானளவு உயர்ந்து நின்றன. அவை மரத்தைச் சூழ்ந்து இருந்தன. அவற்றிற்கிடையே சிறு சிறு இடைவெளி மட்டும் இருந்தன. அங்கெல்லாம் கற்கள் முளைத்திருந்தன. அவை விரைவில் வளர்ந்துவிடும் என்ற செய்தியைக் காற்றில் தவழ்ந்து கொண்டிருந்த சொற்கள் பரப்பிக்கொண்டிருந்தன.
அவற்றைக் கடந்து பேருந்து போய்க்கொண்டிருந்தபோது அந்த ஆலமரத்தில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்த வவ்வால் ஒன்று பறந்துவந்து அவளுடைய தலையில் அறுபட்ட கூந்தலில் பதுங்கிக்கொண்டது.
அப்போது அவள் அணிந்திருந்த ஆடைக்குள் மழைப் பொழிந்தது. அதனால் அவளுடைய உடல் நடுங்கியது. ரோமங்கள் சிலிர்த்தன.
“பிரம்ம முகூர்த்தம். அதுதான் வீடுகட்ட உகந்த நேரம். அப்போதுதான் வீடுகட்ட ஆயாதி போடவேண்டும். அதைவிட அவசியம் வீடுகட்ட வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் நேரம். எத்தனை பேருக்குத் தான் கட்டிய வீட்டைப் பற்றிய கனவு முதல் முறையாக எப்போது தனக்கு வந்தது என்று தெரியும். இவருக்கு இந்த மாதிரியான வீடுதான் என்று மேலே இருப்பவன் அல்லவா தீர்மாணிக்கிறான். அப்படி இருக்கும் போது நாம் என்ன செய்ய முடியும். சிலருக்கு நல்ல வீடாக அமைகிறது. சிலருக்கு அப்படி அமைவதில்லை. சிலர் மிகவும் கஸ்டப்பட்டு வீடு கட்டுகிறார்கள். சிலர் சிரமமின்றி வீடு கட்டி முடித்துவிடுகிறார்கள். வீடு கட்டி முடித்தாலும் வண்ணம் அடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. சிலரால் வண்ணம் அடிக்க முடிவதில்லை. அதனால் அப்படியே விட்டுவிடுகிறார்கள். இன்னும் சிலர் வௌ்ளைச் சுண்ணாம்புடன் திருப்தி அடைந்து விடுகிறர்கள். தன்னுடைய வீட்டிற்குச் சிவப்பு வண்ணம் தீட்டி சிலர் அழகு பார்க்கிறார்கள். பச்சை, மஞ்சள் எனப் பல வண்ணங்களைத் தங்களுடைய வீட்டிற்குக் கொண்டுவருபவர்களும் உண்டு” என்ற பெரியவரின் நீண்ட பேச்சுக்கள் அவளுடைய காதுவரை சென்று உள்ளே நுழைய முடியாமல் தோற்று அவரிடமே திரும்பிச்சென்றன.
அப்போது பேருந்து ஆதியூரை நெருங்கிக் கொண்டிருந்தது. சாலையோரம் இருந்த பலகையில் ஆதியூர் இரண்டு கிலோமீட்டர் என்று வாசகம் பெரிதாக இருந்தது. அதைக் கடந்து போய்க்கொண்டிருந்த சில நிமிடங்களுக்குப் பிறகு பேருந்தில் “பயணிகளின் கவனத்திற்குத் தங்களுடைய உடைமைகளைப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இன்னும் சற்று நேரத்தில் பேருந்து ஆதியூரில் நுழைய போகிறது” என்ற குரல் ஒலித்து அடங்கியது.
அப்போது பேருந்தில் நான்கு பேர் மட்டுமே இருந்கிறார்கள் என்பதை உருதி செய்து கொண்ட நடத்துநர், ஓட்டுநருடன் பேருந்திலிருந்து இறங்கிவிட்டார் வேலைநேரம் முடிந்ததால்.
நுழைவு வாயிலைக் கடந்தபோது பேருந்து குலுங்கியது. ”ஆதியூர் கோட்டை அன்புடன் வரவேற்கிறது” என்ற வார்த்தையுடன் அங்குப் பேரமைதி நிலவியது.
ஆகாயத்தில் இருந்து வந்த நீர் துளி, கூம்பு வடிவமலை முகட்டில் மயங்கி இருந்த கமலாவின் நெற்றியில் வீழ்ந்தது. அந்த அதிர்வில் அவள் விழித்தாள். அவள் சிறுமியாக இருக்கும் போது கண்ட கனவு வீடு அவளுக்கு அங்குத் தயாராக இருந்தது.
அதில் ஏறிக்கொண்டாள். அவள் அந்த வீட்டின் உள்ளே சென்றதும் அவ்வீட்டின் வாயில்கள் ஒவ்வொன்றாகப் பூட்டப்பட்டன. அவற்றை அவள் எண்ணிக் கொண்டிருந்தாள். ஒன்பதாவது வாயில் பூட்டப்பட்டபோது அவளுக்குப் பேருந்தும் அதில் இருந்த மூன்று பேரும் என்ன ஆனார்கள் என்று நன்றாகத் தெரிந்தது. அத்துடன் அவள் இருந்த வீடு பறந்து கொண்டிருப்பதையும் அவள் உணர்ந்தாள்.
கமலாவைப் பற்றி இவ்வளவு விசயங்களைத் துள்ளியமாகக் கூறும் நான் யார் என்று கேட்கிறீர்களா? நான் தான் அளுடைய நிழல். நீங்கள் இக்கதையை வாசிக்கும் போது நான் காற்றில் கரைந்திருப்பேன்.
– சிற்றேடு (ஏப்ரல் –ஜீன் 2018)