கன்றை நோக்கிய கறவைப் பசு




தலையில் மாலை இல்லை. மேனியில் மெல்லிய ஆடை கிடையாது. முகமன் பேசும் வழக்கம் அவனுக்குத் தெரியாது. இத்தகைய மறவன்தான் போர்க்களம் புகுந்தான்.
போர் நடந்து கொண்டிருக்கிறது. முன்னணிப் படையிலே, தன்தோழனைப் பகைவர் சூழ்ந்து கொண்டனர். இதனைக் கண்டான் அம் மறவன்.
அவ்வளவுதான் அவன் கண்களில் தீப்பொறி பறந்தது. குதிரையின் கடிவாளத்தைப் பிடித்ததும் பாய்ந்தது முன்னணிப் படை மேல் . ஈட்டிமுனை பகைவரைக் குத்திக் குடல்களைச் சரித்தது. அக் குடல்கள் நழுவி வீழ்ந்து குதிரையின் கால்களைச் சுற்றிக் கொண்டன.
சங்கிலித் தொடர் போல் தொடர்ந்து செல்லும் யானை வரிசை போல் குடர்கள் அவன் குதிரையின் கால்களைச் சுற்றிக் கொண்டன. அதனைப் பொருட்படுத்தவில்லை. கன்றை நோக்கி விரையும் கறவைப் பசுவைப் போல் பாய்ந்தான்.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்