கனிவு





(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மல்லம்மாவுக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டமாதரி இருந்தது. தன் புருஷனை அவள் அதற்கு முன்பு பார்த்ததே இல்லை; அவன் குரலைக்கூடக் கேட்டதும் இல்லை. அவள் பிறந்த வீடு, வளர்ந்த ஊர், பழகிய சூழல் எல்லாமே வேறு.
கழுகுமலைச் சந்தையிலிருந்து அவர்கள் தொழுவுக்கு மாடு பிடித்துக்கொண்டு வந்தமாதரி, கழுகாசலப் பெருமான் சன்னதியில் வைத்துக் கழுத்தில் மாலை போட்டு இவளை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்கள்.
மல்லம்மாவின் தகப்பனார் நாலும் படித்தவர், மகளை அந்த வீட்டில் விட்டுவிட்டுப் புறப்படும்போது அவளைப் பார்த்து, “அம்மா, பொயிட்டு வாரேன்” என்று சொல்லும்போது தொண்டை கட்டிக்கொண்டது. இந்த நாக்கு இருக்கே…சமயத்தில் வம்பு பண்ணி விடும். மல்லம்மாவாலும் பேசமுடியவில்லை. தான் பிறந்ததிலிருந்து தன்னோடு கொண்ட அனைத்தும் இப்பொழுது தகப்பனாரோடு போய்விடப்போகிறது என்பதுபோல் விசும்பினாள். அவருக்கு மகரிஷி கண்வரின் வாக்கியம் ஞாபகத்துக்கு வந்தது.
மல்லம்மா தனியள் ஆனாள்.
தனது துக்கத்தைக் கொஞ்சம் ஆற்றிக்கொள்ளட்டும் என்று அந்தக் குடும்பத்தார் சிறிது விலகியிருந்தார்கள். ஆனால் தனிமை அவளை மேலும் அழுத்தவே செய்தது.
மூக்கைச் சிந்தி உதறிவிட்டுக் கண்ணையும் மூக்கையும் முந்தானை யால் துடைத்துக்கொண்டபோது அந்த வீட்டுப் பூனை அவளது கால் களில் வந்து முதுகை உயர்த்தி உராய்ந்து குரல் கொடுத்தது. அந்தப் பூனை அவளுக்குச் சொன்ன செய்தி என்ன?
அது மீண்டும் மீண்டும் குரல் கொடுத்துத் தன்மீது பிரியத்தோடு ஒட்டி உராய்ந்தது. அவளது முகத்தில் உடனே ஒரு மலர்ச்சியை உண்டாக்கியது. துக்கத்தின் ஒரு கோடியிலிருந்து குதூகலத்தின் மறு கோடியை உடனே எட்டித் தொடமுடிவது பெண்மைக்கே உரிய பாங்கு.
அந்தச் சிரிப்பில் அனைவருமே பங்குகொண்டு அவளிடமிருந்து அந்தப் பூனையை அழைத்தார்கள்.
“பாஸ் பாஸ் சங்கு பாஸ்”
அந்தப் பூனையின் பெயர் பாஸு:
அது அவளைவிட்டு நகராமல் மேலும்மேலும் அவளை உராய்ந்து மியாவ் மியாவ் என்றுகொண்டேயிருந்தது. புன்னகைகள் இப்போது உரத்த சிரிப்பாணிகளாக ஒலித்தன. இப்படியாக மல்லம்மா அந்தக் குடும்பத்தோடு முதல் ஒட்டுதலுக்கு அந்தப் பூனை துணை செய்தது.
அவள் புருஷனுக்குக் குளிக்க வென்னீர் எடுத்து வைத்தாள். அவன் குளிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தமாதரி கிராமங் களில் குளிப்பதற்குத் திறந்தவெளி அங்கணம் என்று உண்டே தவிர, குளியல் அறை என்று கிடையாது. புருஷனுக்கு முதுகு தேய்த்துவிட வேண்டும். அதைச் செய்ய அவளுக்குத் தயக்கமாகவும் நாணமாகவும் இருந்தது. முகூர்த்தத்தின்போது அவர்கள் இருவரின் கைகளையும் சேர்த்து வைத்தார்கள். உழைத்துக் காய்ப்பேறிய முரட்டுக்கை பற்றிய ஸ்பரிசம் ஒன்றைத்தான் அறிந்திருந்தாள். அவனுடைய ஒவ்வொரு வினாடி எதிர்பார்ப்பும் அவளுக்குக் கூச்சத்தை அதிகப்படுத்தியது. அந்தப் புதுமணப்பெண்ணின் காதுமடல்களில் ஜிவ்வென்று சூடான இரத்தம் பரவ, நாணத்தோடு அவனுடைய பரந்த முதுகைத் தொட்டு அழுக்குத் தேய்த்தாள்.
தேய்ப்புக்குத் தக்கபடி கொண்டையாவின் முதுகு அவனையறியா மலேயே வளைந்து இணைந்து கொடுத்தது. பிடரியின் பக்கங்களில் காதுகளின் கீழே அவள் சொறிந்து தேய்க்கும்போது அவன் கூச்சமும் புளகிதமும் அடைந்தான்; அப்படி அடைவதை அவளும் உணர்வது மாதரிப் பட்டது.
ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொருமாதரியான பழக்க வழக்கங் கள் நிலவி வருகிறது. இவர்களுடைய சமூக முறைப்படி கல்யாணம் முடிந்தவுடன் ஒரு நாள் பார்த்து முதல்இரவு என்ற ஏற்பாட்டைப் பெரியவர்கள் செய்விப்பது இல்லை. இங்குள்ள பெரியவர்களிடம் அதைப்பற்றிக் கேட்டால், “சை! அது என்னங்ஙெ அசிங்கம்; பசு மாட்டைக் கொண்டுவந்து நிறுத்தி காளையை அவுத்துவிடுகிற மாதரி….. நாம்பள்ளாம் மனுசனில்லையா” என்று கேட்பார்கள்!
கனிந்தவுடன் மணமக்கள் தாங்களாகவே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டியதுதான்! ஆனால் இப்படி உண்டாக அவர்களவர்கள் மனப்பக்குவத்தின்படி வாரக்கணக்கு மாசக்கணக்கு என்று நாட்களாகி விடும். அதோடு, சீக்கிரம் இணங்கிவிடுகிற பெண்ணுக்கு சமூகத்தில் மதிப்பில்லை. பெண்ணுக்கு ஆணும் இளைத்தவனில்லைதானே?
இந்த ‘விளையாட்டை’க் குடும்பத்தின் ‘நடுவர்கள்’ பார்க்காதது போல் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்பதை இவர்கள் அறிவார்கள்.
அது பெரிய குடும்பம்; சிறிய வீடு.
மாடுகள்; எருமை, பசுக்கள் என்று. ஆடுகள்; செம்மறி, வெள்ளாடு என்று. கோழிகள் பலவகை. இதுதவிர, நாய், புனுகுப்பூனை, வாத்து, புறா, புள்ளிமான், வெள்ளை முயல்கள் இப்படியாகக் குடும்பத்தை ஒட்டிய ஜீவன்கள் நிறைய.
கலகலப்பான அதிகாலை நேரம். மல்லம்மா இடுப்புயர மடாவில் ஆள் உயர மத்தினால், நின்றுகொண்டு தயிர் கடைந்துகொண்டி ருக்கிறாள். இரண்டு கைகளிலும் கயிற்றைப் பிடித்து இழுத்துக் கடையும் பொழுது அவளுடைய இடுப்பு அசையும் அழகைக் கொண்டையா பார்த்து அனுபவிக்கிறான். குடும்பத்தைச் சேர்ந்த மற்ற குழந்தைகள் வெண்ணெய் வாங்கித் தின்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடையும்போது மேலே தெறித்து விழும் துமி அவர்களிடையே ஒரு குதூகலச் சிரிப்பை உண்டாக்குகிறது.
கிடாரங்காய் அளவுள்ள பெரிய வெண்ணெய் உருண்டை அவளது உள்ளங்கையில் குதித்துக் குதித்து உருள்கிறது. அதைத் தண்ணீரில் மிதக்க விட்டுவிட்டு மத்திலிருந்து வழித்த வெண்ணெய் உருண்டைகளை, நீட்டிக் கொண்டிருக்கும் கைகளில் வரிசையாக வைத்துக்கொண்டு வருகிறாள். குழந்தைகளின் கைகளுக்கு மத்தியில் ஒரு பெரிய கனமான கை வெண்ணெய்க்காக நீளுகிறது. நீட்டிய அந்தக் கைக்கு மல்லம்மா வெண்ணெய் தராமல் அதன் கருஞ்சதையில் நறுக்கென்று பலமாக ஒரு கிள்ளு தருகிறாள். குழந்தைகள் குதித்து ஆரவாரமாகச் சிரிக்கின்றன. பெரியவர்கள் ஏதும் அறியாதவர்கள் மாதரி முகத்தை வைத்துக்கொண்டு அவர்கள் பாடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!
உணவு படைக்கும்போது மல்லாம்மாவிடம் மௌனமாகத் தன் கையை நீட்டிக் காண்பிக்கிறான் கொண்டையா. கையில் இரத்த விளாறுகளாக நகங்களினால் சீய்ச்சப்பட்ட காயங்கள். இரவில் அவள் படுத்திருந்த திசையில் அவனுடைய கை நீண்டதற்கு அவள் கொடுத்த பதில்கள் அவை. அதைப் பார்த்தும் பார்க்காததுபோல அவனுக்கு நெய் வட்டிக்கிறாள். வேண்டாம் போதும் போதும் என்று அவன் கை தடுக்கிறது; அப்போது அந்தக் காயங்களின்மேல் சொட்டுகிறது நெய்!
தாங்கமுடியாத வேலைப் பளுவின்போது அவளுக்குக் கொண்டையா வந்து உதவுவான். அவள் அதை வேண்டாம் என்று தடுப்பதில்லை; விரும்பி ஏற்றுக்கொள்வதும் இல்லை. அவனுடைய சரசமும் அவளது ஊடலும் பல வண்ணங்களில் தொடராக நீளுகின்றன. பல கோணங்களிலும் பல விதங்களிலும் அவர்கள் ஒருவரை மற்றவர் அறிந்துகொள்ள இந்தக் கெடு உதவியது.
இப்போது அவர்கள் முன்புபோல் பேசக் கூச்சப்படுவதில்லை. சொந்த நிலத்தில் நிறை பிடித்துப் போட்டி போட்டுக்கொண்டு களை செதுக்கினார்கள். வியர்வையால் குளித்ததுபோல் தெப்பமாக நனைந்தார்கள்.
மதிய உணவுக்காகக் கருவ மரத்தடிக்கு வந்தார்கள். அந்த முள் மரத்தைக் கடந்து காற்று செல்லும்போதெல்லாம் அது தனது மொழி யில் கிசுகிசுக்கும். பலமாகக் காற்றடிக்கும்போது எதையோ ஒன்றைத் தெரிவித்துவிட்டுக் குனிந்து சிரித்துவிட்டு நிமிரும். அந்த மண்ணைப் போலவே அந்த மரம் கறுப்பு நிறம் கொண்டது; அந்த மரத்தைப் போலவே அந்த மக்கள் கரிய நிறம் கொண்டவர்கள்.
நிழலில் உட்கார்ந்து, தலையில் கட்டியிருந்த துணியை உதறி முகத்தையும் உடம்பையும் துடைத்து வியர்வையை ஆற்றித் தகிப்பாறி னார்கள். சுகமாக வீசிய உப்பங்காற்று ஆனந்தத்தைக் கொடுத்தது. தனது அருகே அமர்ந்திருக்கும் மல்லம்மாவின் வியர்வை வாடை அவனுக்கு அவள்மீது மோகம் உண்டுபண்ணியது. அவள் அந்த மரத் தடியில் இருந்த தொட்டாமடக்கியைத் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தாள். அந்தச் செடி, தொட்டவுடன் தனது விரிந்த இலைகளை நாணத்தோடு மடக்கிக்கொள்ளும்.
சோற்றுக் கலயத்தை அவள் அவனுக்கு முன்னால் கொண்டுவந்து வைத்து நெருங்கி அமர்ந்தாள்.
பெண்மை ரொம்பவும் வினோதமானதுதான். கலயத்தை வைத்தவள் அவனை அப்படி ஒரு பார்வை பார்த்திருக்கவேண்டியது இல்லைதான்!
சில பெண்கள் ஒரு அசைப்பில் அழகாகத் தெரிவார்கள். சிலரைப் பார்த்ததுமே பிரமாத அழகாய்த் தெரியும். ஆனால் பார்க்கப் பார்க்க அழகு விட்டுக்கொண்டே வரும். மல்லம்மாவின் அழகு அப்படிப் பட்டதல்ல. முதல் பார்வையில் அவள் அழகாகத் தெரியமாட்டாள். கவனித்துக்கொண்டே இருந்தால், பார்க்கப் பார்க்கப் அவளுடைய ஒவ்வொரு அழகும் தனித்தனியாக அதிகமாகிக்கொண்டே வரும். கொண்டையாவுக்கு ரொம்பவும் பிடித்தது அவளுடைய பவழநிற உதடுகள்தான். கீழுதட்டில் அழகான கரும்பச்சை நிறத்தில் ஒரு சிறிய மச்சம் விழுந்திருந்தது. பார்த்துக்கொண்டே இருந்தவன் அதைத் தொடப்போனான். தொடவந்த கையை அவள் தட்டிவிட்டு விலகிக்கொண்டாள்.
அவன் உண்ணப்போகும் முதல் கவளத்தை அவளுக்கு நீட்டினான். அவள் மறுக்காமல் மௌனமாக இருக்கவே அவளுடைய வாயருகே கொண்டுபோனான். முகத்தைத் திருப்பி அவள் எழுந்து விடவே அவனும் கவளத்தைக் கலயத்தில் இட்டுவிட்டு எழுந்து விட்டான். திகிலுடனும் ஆச்சரியத்துடனும் அவள் பார்த்ததை அவன் லட்சியம் செய்யாமல் நேரே போய் களை சுரண்டியை எடுத்து பாக்கி நிறையைச் செதுக்கத் தொடங்கிவிட்டான். மல்லம்மாவுக்கு மனம் கூம்பிவிட்டது. தன்னைப் பேதை என நொந்துகொண்டாள்.
அவன் திரும்பவும் வருவான் என்று கலயத்தின் அருகே காத்திருந்தாள். அதை அறிந்து அவன் வர நினைத்தும் அவனுடைய ‘தான்’ அதற்கு இடம் கொடுக்கவில்லை. குறிப்பிட்ட அளவு நேரம் கடந்த பிறகு, இனி வரமாட்டான் என அறிந்து அவளும் பசியோடு, அவனுக்குச் சமமாக முன்னிலும் வேகமாகக் களை செதுக்கலானாள். இருவரும் பேசிக்கொள்ளாமல் போட்டியில் களை செதுக்கினார்கள். அவள் நெருங்கும்போது அவன் ஊடி விலகுவதும் அவன் நெருங்கும்போது அவள் ஊடி விலகுவதுமாக சென்றது காலம்.
பறவைகள் கூடு திரும்புகிற நேரம்.
பொழுது வேகமாக இருட்டிக்கொண்டு வந்தது. அது சிறிய பகல் களைக் கொண்ட உழைப்பாளிகளின் பொழுது. இயற்கை அன்னை பருவ காலங்களை அந்தமாதரி அமைத்திருக்கிறாள்; உழைத்துக் களைத்தவர்கள் சீக்கிரம் உறங்கச் செல்லட்டுமே என்று.
கொண்டையாவின் களைசுரண்டியையும் சேர்த்து எடுத்துக் கொண்டு, மரத்தடியிலுள்ள கலயத்தை எடுத்துவரப் போனாள் மல்லம்மா. அவளது காலடி விரிவுக்குழிக்குள் பதிந்தது. பதிந்த இடது பாதத்தைத் துள்ளி விழுந்து பதறிப்போய் வேகமாய் உதறினாள். உதறிய வேகத்தில் அவளுடைய அவளுடைய காலணி தொலைவில் போய் விழுந்தது. என்ன என்ன என்று கேட்டுக்கொண்டே ஓடிவந்தான் கொண்டையா. விரிவுக்குழிக்குள் பார்த்தவளுக்கு ஏதோ நெளிந்து மறைகிறமாதரி தெரிந்தது.
அந்த ஒரு கணத்தில் அவள் தன் முடிவை உணர்ந்தாள். அந்த மௌன வினாடிக்கு முன்னால் அவளுடைய அத்தனை பிகுத்தன்மை களும் கழன்று விழுந்தன. தனது புருஷனை இதுவரை அத்தனை வாஞ்சையோடு பார்த்ததில்லை. கைகளால் அந்தக் காலை இறுகப் பிடித்க்கொண்டு அவள் பார்த்த அந்தப் பார்வையை அவனால் செரிக்க முடியவில்லை.
மரணத்துக்குமுன் மனிதன் துரும்பிலும் கேவலம். தாங்கள் இதுவரை நடந்துகொண்ட விதமெல்லாம் எவ்வளவு பைத்தியமான போலித்தனம் என்று பட்டது. இந்த எண்ணம் தோன்றிய உடனே அவர்கள் ஆன்மா நெருங்கி ஒட்டிக்கொண்டது.
கடிவாயில் அவன் வாயை வைத்துக் கடித்து உறிஞ்சி விஷத்தைத் துப்பினான். தன்னை அவன் காப்பாற்றத் துடிக்கும் வேகமும் ஆர்வமும் அவள் இதயத்தைத் தொட்டன. தன்னைக் காக்கும் ரட்சகன் அருகே மரணம் அவளுக்குத் துச்சம் என்று பட்டது.
அவளை அப்படியே வாரி எடுத்துக்கொண்டு வைத்தியனின் வீட்டைப் பார்க்க ஓடினான். அவன் கழுத்தைச் சுற்றிக்கொண்ட அவளுடைய இறுகின. அந்த இறுக்கத்தில் அவளுடைய ‘தானு’ம் அழிந்தது.
வைத்தியர் கொஞ்சம் மிளகு எடுத்துக்கொடுத்து மல்லம்மாவை வாயில்போட்டு மெல்லச் சொன்னார். ‘மிளகின் காரம் தெரியிதா?” என்று கேட்டார். “தெரியிது”, என்றாள். கொஞ்சம் அரப்பு எடுத்துக் கொடுத்து மெல்லச் சொன்னார். கசப்பதாகச் சொன்னாள். வைத்தியர் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. பயப்படவேண்டாம் என்றார்.
கடிவாயிலிருந்த காந்தல் பாதம் பூராவும் பரவிப் பற்றி எரிந்தது. எரியும் அடுப்புக்குள் கால் இருப்பதுபோல் தீயாகப் பற்றி எரிவதாக அவள் சொன்னதை வைத்துச் சேடா கடித்திருக்கிறது என்று தீர்மானத்துக்கு வந்தார் வைத்தியர்; புகையிலைச் செடியின் பச்சை இலையைக் கொண்டுவந்து அரைத்துப் பூசினார். வேப்பங்குலையை அடித்து மந்திரித்தார். ஒரு சிறிய உருண்டை மை கொடுத்துச் சாப்பிடச் சொல்லி உப்பில்லாப் பத்தியம் இருக்கவேண்டும் என்று சொல்லி விட்டு, விஷமை சாப்பிட்டிருப்பதால் அகப் பத்தியம் காக்கவேண்டும். என்று கொண்டையாவைப் பார்த்துச் சொன்னார்.
அகப்பத்தியம் என்று அவர் சொன்னது அவனுக்குப் புரியவில்லை. “இவளைப் பிறந்த வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு இருபது நாள் கழித்துத்தான் கூட்டிக்கிட்டு வரணும். சொல்றது புரியுதா?” என்று அவர் சொல்லிச் சிரித்தபிறகுதான் அவன் தெரிந்து கொண்டான்.
மல்லம்மாவின் தகப்பனார் வந்து அவளை கூட்டிக்கொண்டு போனார்.
குணமாகி உடம்பு தேறிக்கொண்டு வந்தாலும் மனசில் சதா கொண்டையாவின் முகம் வந்து வந்து நிற்கும். நெஞ்சில் பாரம்போல் அழுத்தும் ஒரு வேதனை. தொண்டையில் வலியோடு கூடிய ஒரு வறட்சி, பிரிவால் மெலிந்து தனிமையில் வாடி அவனை நினைத்து ஏங்கி யாருக்கும் தெரியாமல் மௌனமாகக் கண்ணீர் வடிப்பாள். திங்களோடு திங்கள் எட்டு, செவ்வாய் ஒன்பது, புதன் பத்து என்று நாட்களை அடிக்கடி எண்ணுவாள். ராத்திரிகளில் கனவுகளோடு குழப்பமான அரைகுறைத் தூக்கம், ஏக்கமும் தவிப்பும் அவளைப் பேயாக அலைத்தன. இருபது யுகங்களைப்போல் இருபது நாட்கள் ஊர்ந்தன.
அவள் எதிர்பார்த்தபடியே கொண்டையா திடீரென்று வந்தான். அப்போதுதான் அவள் குளித்து தலையாற்றிக்கொண்டிருந்தாள். கறுப்பு அருவி தலையிலிருந்து பொங்கி வழிவதுபோல் ரோமக் கற்றை கள் உடம்பை உராய்ந்து தரையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. கண்டதும் எழுந்து நின்று இரு கைகளையும் அவனை நோக்கி நீட்டத் தான் முடிந்தது. கண்கள் பளபளத்தன. பேச முடியாமல் உதடுகளில் மட்டும் ஒரு துடிப்பு.
“மல்லம்மா….” என்று வாய் நிறைய அழைத்துக்கொண்டே ஓடிவந்து அவன் அவளைக் கட்டிக்கொண்டான். வாழ்க்கையில் இப்படிக் கணங்கள் ஒப்பற்றவை; உயிரோடு உயிர் ஒட்டும் நேரம் மிகவும் கொஞ்சம்.
அவ்வளவு ஈடுபாட்டிலும்கூடப் பெண்மை உஷாராய் இருக்கிறது! திடீரென்று அவனிலிருந்து பின்வாங்கி விலகிக்கொண்டாள். அவனு டைய ஆச்சரியம் விரிவதற்குள் முற்றத்தைக் கடந்து மல்லம்மாவின் தகப்பனார் வீட்டுக்குள் நுழைவது அவனுக்குத் தெரிந்தது. ‘பாம்புக் காதுகள்தான் உனக்கு’ என்பதைப்போல பார்த்தான் அவளை.
மாமனார் அவனை வரவேற்று முகமன் கூறினார். சுற்றுமுற்றும் பார்த்து அவன் மட்டுமே வந்திருப்பதை நினைத்து முகம் ஆச்சரியப் பட்டாலும் மனம் சிரித்துக்கொண்டது. தனியாக வந்ததுக்கு அவன் ஒரு காரணம் சொன்னான். பூரணமாக அது உண்மை இல்லை என்பது· அந்த நரைத்தலைக்குத் தெரியும்! அதுவும் ஒரு காலத்தில் அவர்களைப் போல ‘சிறுசு’ஆக இருந்ததுதானே? வருடத்துக்கு ஒருதரம் வசந்தம் வந்தாலும் வாழ்க்கையில் மட்டும் ஒரே தரம்தான் என்பதை அது அறியும்.
ஆனாலும் மல்லம்மாவையும் கொண்டையாவையும் பிரித்து வைப்பதற்குக் காரணங்களா கிடைக்காது இந்த உலகத்துக்கு. சில்லுண்டிக் காரணங்கள் போக, மலைபோல் ஆடிமாசம் குறுக்கிட்டது. இளம் தம்பதிகளுக்கு இது ஒரு கொடுமையான மாசம். என்ன காரணத்துக்காக ஆணும் பெண்ணும் இந்த மாசத்தில் மட்டும் பிரிந்திருக்கவேணும் என்று அவளுக்குத் தெரியவில்லை.
பாவம், அவர்கள் இதைக் கேட்டதும் ரொம்பவும் சோர்ந்து போனார்கள். ஆடிமாதம் தனது இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து அவர்களுக்கு ஊடே புகுத்தி அகலப்படுத்தி அவளை அந்தப்பக்கமும் அவனை இந்தப்பக்கமும் தள்ளிவிட்டது. அந்தச் சிறிசுகள் திரும்பவும் நாட்களை எண்ண ஆரம்பித்தார்கள்.
ஆண்டு பாதி ஆடி பாதியாகத் தெரிந்தது அவர்களுக்கு.
வந்தது ஆவணி மாசம். வானத்தில் சூல் கொண்ட மேகங்கள் படைபடையாக நகர்ந்து வர ஆரம்பித்தன. தோட்டக்காரன் குடத்தை ஏந்திச் செடிகளுக்கு நீர் வார்ப்பதுபோல் வேண்டிய இடங்களுக் கெல்லாம் பெய்தது மழை. தேன் கூட்டைப்போல் கரிசல் காடு சுறுசுறுப்படைய ஆரம்பித்தது.
மல்லம்மாவின் தகப்பனார் பலகாரப் பெட்டிகளுடன் ஒரு நாள் அவளைக் காடிவண்டியில் ஏற்றிக்கொண்டு காலைப்பொழுதில் வந்தார். விளைந்த மக்காச்சோளக் கதிரின் மணிகளைப்போல் நிறைந்த சிரிப்புடன் பற்களைக் காட்டிக் கொண்டையாவைப் பார்த்து பரவசத் துடன் சிரித்தாள் மல்லம்மா.
‘பத்துக்குறுக்கம்’ என்று அவர்களுக்கு ஒரு பெரிய விஸ்தாரமான புஞ்சை. மல்லம்மா தவிர, குழந்தை குட்டிகள் உட்பட எல்லோருமே அங்கே போயிருந்தார்கள். வீட்டில் அவள் சமையல் காரியங்களைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.
கற்களைப் பொறுக்குகிறது, முட்களைப் பொறுக்கிக் குவித்துத் தீயிட்டுப் பொசுக்குகிறது, செடிகளை வெட்டுகிறது, கரடுகளைத் தோண்டி கட்டாப்புகளைச் சரி பண்ணுகிறது, அரளைக் கற்களை ஒழுங்குபடுத்தித் தத்துக்களை பலப்படுத்துகிறது, இப்படியாக அங்கே வேலைகள் மும்மரமாக நடந்துகொண்டிருந்தன. உழுதுகொண்டிருந்த கொண்டையா மேழியைத் தகப்பனாரிடம் கொடுத்து ஏதோ ஒரு சாக்குச் சொல்லிவிட்டுத் தப்பி வீட்டுக்கு வந்துவிட்டான்.
திடீரென்று முன்னால் போய்நின்று அவளை ஆச்சரியப்பட வைக்க வேண்டுமென்று நினைத்து வந்தான். வீட்டுக்குள் நுழையும் போதே புத்துருக்கு நெய்யின் மணம் வந்தது. பூனைமாதரி அடிமேல் அடிவைத்து மெல்ல நுழைந்து எட்டிப்பார்த்தான். அவள் அடுப்புக்கு முன்னால் உட்கார்ந்து பானையின் வாய்க்குள் வடி மாரைச் செருகிச் சோற்றை வடித்துக் கொண்டிருந்தாள் கவனமாக. இவனைக் கண்டும் ஆச்சரியப்படவில்லை அவள்; இவன் இப்படி வரவில்லை யென்றால்தான் ஆச்சரியப்பட்டிருப்பாள்!
அவள் பக்கத்தில்போய் இவன் நின்றவிதமும் பரபரத்ததையும் குறுஞ்சிரிப்புடன் கவனித்துக்கொண்டிருந்தாள். அவளது நாடியைக் கைகளால் தாங்கி முகத்தை நிமிர்த்தினான். அவளது மூக்கிலும் மேலுதட்டிலும் வியர்வை முத்துக்கள் பூத்திருந்தன. அவள் பானையை நிமிர்த்தி வைத்துவிட்டு திடீரென்று எழுந்து அவனை அப்படியே ஆவிசேர்த்துக் கட்டிக்கொண்டாள். அவன் வாயில் தன் வியர்வை நனைந்த உதடுகளைப் பதித்து மிருதுவாக இடமும் வலமுமாகத் தேய்த்தாள். மூக்கினால் மூச்சை பலமாக முகர்ந்து அழுத்தி ஓசை எழ முதல்முதலில் அவனுக்கு ஒரு உப்பு முத்தம் கொடுத்தாள்.
கொண்டையா தம்பதியின் ‘முதல்பகல்’ இப்படியாகத்தான் ஆரம்பித்தது.
வட்டிலில் நெய்விட்டுப் பிசைந்த முதல் கவள அன்னத்தை, துவண்ட அவள் அவனுடைய தோளில் சாய்ந்துகொண்டு திருப்தி யோடு பெற்றுக்கொண்டாள்.
– குமுதம், 25-02-1970.
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க... |