கதையாசிரியர்:
தின/வார இதழ்: தீபம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 4, 2025
பார்வையிட்டோர்: 678 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வெயில்மாதரி நிலவு. 

வாழைக்கன்றின் விரியாத இளங்குருத்தை விரித்து வெண்பட்டின் பிரகாசத்தையும் சேர்த்திருக்கிறது. 

தென்னையின் பச்சோலைகளுக்கெல்லாம் இப்படி எண்ணெய் பூசி வைத்தது யார்! 

ஓ; இன்றைக்குச் சனிக்கிழமை அல்லவா.

சரிதான்; சரிதான் 

கண்மாய்க்கரை வரிசை மரங்களின் நிழல் இருட்டு. வேகமாக நடக்கமுடியவில்லை. பலமான எதிர்காற்றில் முன்சாய்ந்து முன்னேறு கிறமாதரி ஒவ்வொரு எட்டையும் மிகவும் சிரமப்பட்டு எடுத்து வைக்க கற்றை வேண்டியதிருக்கிறது. ஆலமரங்களின் தொங்குகிற விழுதுக் கற்றை களைக் கைப்பற்றி ஒவ்வொன்றாக மாற்றி மாற்றிப் பிடித்து இழுத்து முன்னேறி நடக்கவேண்டியதிருக்கிறது. தரையில் மிதிக்கவேண்டிய இடங்களிலெல்லாம் கோணூசியின் கனத்தில் ஒரே பாம்புக்குட்டி களின் குவியல்கள். தூண்டி போடுகிறவனின் சிரட்டைகளில் நெளிகிற மண்ணுளிப் புழுக்கூட்டங்கள்போல் ஒன்றின்மேல் ஒன்று நெளிகிறது. 

விழுதுகளைப் பிடித்துக்கொண்டு கால்களை ஒசத்திக்கொண்டே எவ்வளவு நேரந்தான் தொங்கிக் கொண்டிருக்க முடியும்? கைப்பிடி களுக்குள் ஆலமரத்தின் பால்ப் பிசுபிசுப்பு. 

என்ன முட்டாள்த்தனம்! காலடியில் எட்டுத் தூர அருகில் மிதித்துக்கொள்ள நீட்டிக்கொண்டிருக்கும் கிளையைப் பார்க்காமல் தானே இவ்வளவு நேரமும் அவஸ்தைப் பட்டுக்கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறோம்! 

கிளைமீது கால்வைத்து மிதிக்கும்போது பெண்ணின் துடை மாதிரி மிருதுவாக இருக்கிறது. 

இந்தக் கிளைமீதே இப்படி குப்புறடித்துப படுத்துக்கொண்டிருப்பது சிரமந்தான். 

யாரோ ஒரு தொம்மரிச்சி, காதுகளில் செவ் ஓலைச் சுருள்கள். கைகளில் தண்டி தண்டியாய் அலுமினியக் காப்புகள், விரல்களில் பாசி படர்ந்த பித்தளை மோதிரங்கள். நீண்ட அழுக்கு நிறைந்த நகங்கள். குங்கும நிறத்திலுள்ள அவளுடைய உதடுகள் கன்னங்கரேலென்றி ருக்கிறது. காய்ந்த சோளத்தட்டையைத் தின்றுவிட்டுப் போட்ட மாட்டுச்சாணியின் நிறத்திலுள்ள கூந்தலை அள்ளிச் சொருகி குறுக்கும் மறுக்கும் நிறைய கொண்டை ஊசிகளைச் சொருகியிருந்தாள். முதுகில் பிள்ளையைக் கட்டித் தொங்க விட்டுக்கொண்டு, சுரைக் குடுக்கை நிறைய கம்பங்கஞ்சி, கேப்பைக்களி பொங்கப் பொங்க, இடது புஜத்தின்மேல் வட்ட வட்டமான வெண்மையான புரிமணைக் கட்டுகள் சகிதம் வந்து மரத்தடியில் அமர்ந்தாள். முதுகிலிருந்த குழந்தையை எடுத்து பால் குடிக்கவிட்டாள். அவளுக்கு நடு மார்பில் ஒரு முலை மட்டுமே இருந்தது. 

தாடிக் கிளையில் தூளிகட்டி குழந்தையை அதில் படுக்கப் போட்ட பின்னரும் அவளுடைய முலைக்காம்பிலிருந்து கள்ளியி லிருந்து சொட்டுகிறமாதரி பால் சொட்டிக்கொண்டே இருந்தது. மாராப்பை சரிசெய்து கொள்ளாமலே அப்படியே அந்தப் புரிமணைக் கட்டின்மீது தலை சாய்த்துப் படுத்து கண்ணை மூடினாள். 

கைத்தண்டி, ஒரு பாகத்துக்கும் அதிகமான நீளமுள்ள நல்லபாம்பு வந்து அவளுடைய இடையை ஒரு சுற்றுப்போட்டு அணைத்து, பால் சொட்டிக்கொண்டிருந்த அவளுடைய திறந்த முலையில் பால் குடித்தது. நன்றாக வாய் பதித்துச் சுவைத்துக் குடித்தது. அவளுடைய அடிவயிற்றின் கீழே வாலால் தடவிக்கொடுத்துக்கொண்டே சொ மாகப் பால் குடித்தது. 

தூளி, வெறும் தூளியாய்க் காற்றில் ஆடியது. குழந்தையைக் காண வில்லை. ‘சரி; இனி நாம் இங்கிருந்தால் விபரீதம்தான். எழுந்ததும் இந்த தொம்மரிச்சி சிறுக்கி குழந்தையைக் காணோமே என்று கத்துவாள்; நாம் இங்கிருக்கக்கூடாது. மெதுவாக இறங்கணும். குடித்துக்கொண்டி ருக்கும் பாம்பையும், தொம்மரிச்சியின் தூக்கத்தையும் கலைத்துவிடக் கூடாது’. 

கிளையைவிட்டு அசைய முடியவில்லை, உடம்பு ஒட்டிக்கொண்டு விட்டது! எண்ணெய் தேய்த்துக்கொண்டு வந்திருந்தால் ஆலம் பால் உடம்பில் ஒட்டியிருக்காது; சுலபமாய் இருந்திருக்கும். 

‘இந்தோல்’ 

சை. உடம்பை அசைக்கக்கூட முடியவில்லையே! ‘இந்தோல்’ ‘இந்ந்ந் தோல்’ 

குழந்தை எங்கோ வீல் என்ற கத்துகிறது. 

ஐயோ, பாம்பு கடித்துவிட்டது. 

பட் 

அப்ப்பா, நல்லவேளை! 

– தீபம், ஆகஸ்ட் 1975.

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *