கனவு




(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காலையில் அலுவலகத்திற்கு வந்ததும் அந்தச் செய்தி கிடைத்தது. அவளின் தந்தை கடந்த இரவில் செத்துப் போனாராம். பரபரப்பு மேலோங்கவில்லை. எப்படி..எப்படி..என்ற செய்தி அறியும் உணர்வே கிளர்ந்தது. துண்டு துண்டாக, அங்குமிங்குமாக, பொய்யும் மெய்யு மாக, ஒன்றுக்கொன்று முரணான தகவல்கள் கிடைத்தன. அப்படிப் பிரமாதப்படுத்தப்பட வேண்டியதாகவோ பெரிதாக அலட்டிக் கொள்ளத்தக்கதாகவோ ஏதுமில்லை. அவர் வயது போனவர்தானாம்; இரண்டு மூன்று நாட்களாக சிறிய சுகவீனமாகப் படுத்திருந்தவர், திடீரென்று…எதிர்பாராமல்…இப்படி…

அவள் என்னுடன் வேலை செய்யும் ஒரு சக ஊழியை; கண்ட நேரங்களில் மெல்லிதாக இதழ் மலர் கண்களினால் ஒரு சிரிப்பு. சில வேளைகளில் சில வார்த்தைப் பரிமாறல்கள். அவ்வளவுதான். அவளைப் பற்றியோ அவள் குடும்பத்தினரைப் பற்றியோ, அவளின் ஆர்வங்களைப் பற்றியோ , அவளின் மன அந்தரங்கங்கள் பற்றியோ வேறெதுவும் தெரியாது. என்னைப் பற்றியும் அவளுக்குத் தெரியாதென்றே நினைக்கிறேன்.
அவள் இனி என்ன செய்வாள்; பாவம். புத்திளமைப் பருவத்தின் அந்திமத்திலும் ஓர் அசையும் சிலை போல அழகாகத்தானே இருக்கிறாள். கண்களில் ஈரம் பளிச் சிடச் சிரிக்கிறாள். முகலாவண்யமும் வசீகரமும் கொண் டவள். பாவம்; ஆதரவான தந்தையை இழந்த பின் இனி என்ன செய்யப் போகிறாள்.
மற்றைய நண்பர்கள் முன்னரே சென்றுவிட்டார்கள். நானும் வேறிருவரும் எதிர்பாராமல் அல்லது ஒருவித அசட்டைத்தனத்தில் பிந்திப்போனோம். வஸ்சிற்காக ஓடி அதைத் தவற விட்டுக் காத்திருந்து வஸ் ஏறி, பின் அடுத்த வஸ்சிற்காகக் காத்திருந்து – சலித்து – பின் ஏறிச் செல்கையிலும் தவிப்பு; சரியான இடத்தைக் கண்டு பிடிப்போமா?
நகரத்தின் சனசந்தடி மறைந்து, சுற்றுநகர் கட்டிடங் களையும் தாண்டியாகி விட்டது. பெரிய பாலம் வந்து மறைந்தது. ஒரே சீரான பெரிய வெளி. நான்கைந்து நிமிடங்களுக்கொருமுறை கிளை பிரியும் கறுத்தத் தார் றோட்டுகள். லேசான சாய்வு வெயில் கண்களைக் கூச வைக்க வடலியடைப்புகள், பனம்புதர்கள். புளியமரச் சோலைகளைக் கடந்து அந்த முடக்கில் இறங்கினோம். சரியான இடத்தில் தான் இறங்கினோமா? சுற்றுமுற்றும் பார்த்துத் தயங்கித் திரும்புகையில், கொக்கி போட்டு இழுத்த கேள்வியாய்…
“இலட்சுமி வீட்டைதானே போறியள்?”
அவளும் பருவ வயதினள்தான்; எங்கேயோ படிப் பித்துவிட்டு வரும் வாத்திச்சி போல சடக்கென மனத்தில் பட்டது. நாலைந்து புத்தகங்களும், கைப்பையும் நிமிர்ந்த நடையுமாய்…உதடுகள் கறுத்துப்போய் கிடந்தன.
அவளின் வழிகாட்டலில் நடக்கையில் மேலும் பனம்புதர்கள்; பக்கத்து வயற் பரப்பில் மஞ்சளாய் பூத்து வாடும் சணற் செடிகள்; ஒரு ஆரம்பப் பாடசாலை; ஓரு சங்கக்கடை.
“இப்படித் திரும்பி நேராகப் போங்கோ”
டும், டும் என்பதாய் பறையொலி அதிர்ந்தது. படார். படாரென வெடிச்சத்தம் கேட்டது. நடந்தோம்; நடந் தோம்; நெருங்கி வரும் பறையொலியில் சைக்கிளை உருட் டிவரும் சில கிராமத்து மனிதர்கள்; என்ன செய்வதென்ற தயக்கத்தில், ஒழுங்கைக் கரையில் ஒதுங்குகையில் – வெள்ளைக் கடதாசிகளினால் அலங்கரிக்கப்பட்டு தொ டர்ந்து வரும் பாடை ; மேலும் சில மனிதர்கள்; அதிசய மாய் பார்த்து நகர்கையிலும் – ஒரு கௌரவம் போல – ஒரு பெருமிதம் போல தலை நிமிரல் (எங்கள் இலட்சுமிக்கும் நாகரீகமானவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள்)
ஒரு கையில் புகைகின்ற சுருட்டும், மறு கையில் அதி காரிகளின் கைப்பையுமாய், எங்கள் கந்தோரின் இடைத் தர அதிகாரியின் பின்னால், எங்களை விட்டுவந்த எங்கள் சக ஊழியர்கள்…
“வந்தனீங்கள் பக்கத்திலைதான் வீடு; போட்டு வாங்கோ”
“கவலை தோய்ந்த அவளின் முகத்தில் எப்படி விழிப்பது.”
படலையால் திரும்பியதுமே அதற்காகக் காத்திருந்த வர்போல, ஒரு கண்ணாடிக் கிழவர் வரவேற்றார். தூரத்தில் கண்ணீ ர் வடியும் முகமாய் இலட்சுமி; தயங்கித் தடுமாறு கையில் கைச் சுட்டலால் கதிரைகளைக் காட்டினாள்.
என்ரை அப்பு, என்ரை அப்பு என்று ஒரு பன்னி ரண்டு வயதுப் பையன் கத்திக் கொண்டிருந்தான். ஒரு வயது போன பெண் அவனை தேற்றச் சிரமப்பட்டாள். என்ரை அப்பு, என்ரை அப்பு என்று அவன் கேவிக் கொண்டேயிருந்தான். இலட்சுமியும் அவனைப் பிடித்துத் தேற்ற முற்பட்டாள். “குஞ்சியம்மா என்ரை அப்பு என்ரை அப்பு” என்று கேவிக்கொண்டே அவளின் அணைப்பில் அவன்; கண்களில் வடியும் கண்ணீரில் அவனும் அவளும் முகத்தோடு முகம் வைத்து மூன்னா லிருக்கையில்…
மனம் கனத்து கண்கள் கலங்குவதாய் ….
பிரேதம் வைக்கப்பட்டிருந்த கட்டில் பக்கவாட்டில் சரிக்கப்பட்டு கால்களை நீட்டிக் கொண்டு கிடந்தது. மரணச் சடங்கில் சிந்துண்ட தானியங்களை நாலைந்து கோழிகள் கொத்தித் தின்றன. இரண்டொரு காக்கை களும் எட்டி எட்டிப் பறந்தன.
றேயில் மூன்று கிளாஸ்களில் சோடாவுடன் ஒரு பெண். “குடியுங்கோ” என்றாள் இலட்சுமி. பையன் கேவிக்கொண்டே இருந்தான், இதென்ன என்பதாய் பார்த்து…ஒன்றுஞ் செய்ய முடியாமல்…எடுத்துக் குடிக்கையில் மனத்தில் ஏதோ குற்ற உணர்வாய்…
அந்த அணைப்பில் அவன் கேவிக்கொண்டேயிருந் தான்.
கட்டி முடிக்கப்படாமல் ஜன்னல்கள் இருக்க வேண்டிய இடம் மூளியாய், வீடு சின்னதாகத்தான் இருந்தது. முற்றத்தில் இரண்டு மூன்று பனை மரங்களைத் தவிர மரஞ்செடிகள் எதுவுமில்லை. இரண்டொருவர் அங்குமிங்கும் போய்க்கொண்டிருந்தனர். “எல்லோரும் என்னை விட்டிட்டுப் போறியளே” என்று அந்த வயது போன பெண் திடீரென அழுதாள்.
தூரத்து ஓசையாய் பறையொலி கேட்டது.
அப்ப..என்பதாய் எழுந்தோம். இலட்சுமியும் எழுந்தாள். பையன் அப்பு அப்பு என்பதாய் கேவிக் கொண்டே இருந்தான்.
நாங்கள் நடக்கையில் தலையசைத்து அவள் விடை தருகையில்…கண்ணீ ர் வடியும் அந்த முகத்திலும் – அப்பு அப்பு என்ற பையனின் கேவலூடு – அந்தப் பருவத்தின் வசீகரம் மின்னலாய் வெடிக்கையில், வாழ்வு காத்திருப்புகளும் கனவுகளுமாய் நீள்வதாய்…
– 1979, சாதாரணங்களும் அசாதாரணங்களும், முதற் பதிப்பு: அக்டோபர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.