கனவுகள் ஜாக்கிரதை!




“என்னப்பா ! ஏதோ முக்கியமான விஷயம் பேசணுன்னே..வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு. இன்னும் வாயைத் திறக்கல்ல….” பார்க்கில் அமர்ந்துகொண்டிருந்த நண்பன் கணேசன் கேட்க எங்கேயோ இலக்கின்றி பார்த்துக் கொண்டிருந்த கண்ணன் கணேசனை நோக்கித் திரும்பினான். அவன் கண்களில் கலக்கமும் முகத்தில் இறுக்கமும் தெரிவதைக் கண்டு துணுக்குற்றான் கணேசன்.

“மைகாட் ! என்னாச்சு உனக்கு? உன்னைப் பார்க்கவே சகிக்கல்ல…எனி திங் ராங் ?”
கணேசனின் கேள்விக்கு பெருமூச்சொன்று விட்டபடி கண்ணன் பதில் சொன்னான்.
“நண்பா ! நான் சொல்லப் போகும் விஷயம் உனக்கு வேடிக்கையாக இருக்கும். ஏன்,
விநோதமாகவும் இருக்கும்…அது என்னன்னா கொஞ்ச நாளா எனக்குக் கெட்டக் கெட்ட கனவுகளா வர்றது…” கூறும்போதே குரல் ஒரு மாதிரியாக ஒலித்தது.
“சரி, கனவுகள்தானே ? அதுக்கு ஏன் இவ்வளவு சீரியசாக இருக்கே ?” கேவலம் கனவு
ளுக்காக ஏன் இப்படி கிடந்து தவிக்க வேண்டும் என்ற ஆதங்கம் கணேசன் மனதில் எழுந்தது.
“ஆனால் அந்தக் கனவுகள் அப்படியே அடுத்தடுத்து பலிச்சிட்டுது நண்பா !”
“வாட் ? ” அதிர்ந்தான் கணேசன்.
“ஒண்ணில்ல ரெண்டில்ல, மூணு. விளக்கமாச் சொல்றேன்.” என்றவன், ” எங்க வீட்டுக்கு எதிர்வீட்டில இருப்பவர் கோபாலுன்னு பேர். தினமும் அந்தக் கோபால் அஞ்சு கிலோமீட்டர் தூரத்தில இருக்கற பெருமாள் கோயிலுக்கு தன்னோட டூ வீலர்ல போவார்.”
” என்னவாயிருக்கார்?”
“அர்ச்சகராக இருக்கார். “
“சரி.”
“அவர் வழக்கம்போல ஒரு வாரம் முன்னாடி டூ வீலர்ல போகும்போது ஆக்ஸிடெண்ட்டுல அடி பட்டு சாகற மாதிரி கனவு வந்தது. மறுநாளே அதே மாதிரி ஆகி மனுஷன் ஸ்பாட்டுலேயே அவுட் !”
கிலியுடன் கணேசன் பார்த்துக் கொண்டிருக்க கண்ணன் தொடர்ந்தான். “ரெண்டு மூணு நாள் கழிச்சு இடி விழுந்து கொட்டிலில் அடைச்சு வெச்சிருந்த அத்தனை ஆடுகளும் எரிந்து பஸ்பமாகிப் போகுற மாதிரி கனவு. அடுத்த நாள் பேப்பரில் அந்தச் செய்தி வெளியா கியிருந்தது. அப்புறம் ஒரு நாள் ஒரு பஸ் பிரேக் பிடிக்காமல் தறி கெட்டு ஓடி பிளாட்ஃபாரம் மேல் ஏறி, பூ, பழம் விற்கறவங்க, வாங்கறவங்க சில பேரை இடிச்சு கீழே தள்ளி நசுக்கி கூழாக்குவது போல கனவு வந்தது. அந்தக் கண்றாவியும் பலிச்சிடுச்சு கணேசா !” கண்ணன் குரலில் நடுக்கம்.
அதிர்ச்சியில் ஆடிப்போனான் கணேசன்.இவ்வளவு நாளாக இல்லாமல் திடீரென்று ஏன் இப்படி நடக்க வேண்டும் என்ற கவலை தோன்றியது. தூங்கும் போது ஆழ் மனதில் தோன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத காட்சிகளே கனவுகளாக வரும் ! நல்லதும் வரும். கெட்டதும் வரும். ஆனால் அவற்றால் பாதிப்பு எதுவும் ஏற்படாது.
கணேசனுக்கே ஒரு கனவு வந்தது. அதில் நோயில் இறந்து போன சித்தப்பா கனவில் தோன்றி தன்னுடன் உரையாடுவது போல் காட்சி ! சே ! உயிரோடிருக்கிற சித்தப்பாவை
போய் மாண்டு விட்டதாக நினைத்தது எவ்வளவு பெரிய மடத்தனம் என எண்ணினான்.
ஆனால் காலையில் கண் விழித்ததும் தான் கண்டது கனவு என்றும், சித்தப்பா போனவர் போனவர்தான் என்பதையும் உணர்ந்த போது நெஞ்சில் வேதனை தோன்றியது.
ஆனால் கண்ணன் விஷயத்தில் கனவில் கண்ட கெட்டவைகள் அப்படியே நடக்கின்றன. அதுவும் மூன்று கனவுகள்! ஏன்இப்படி….குழம்பியவன் மூளையில் சட்டென பொறி தட்டியது.
“ஒரு வாரத்திற்குள் அடுத்தடுத்து மூன்று சம்பவங்கள். இப்படிக் கூட நடக்குமான்னு ஆச்சரியமாயிருக்கு!”
“சத்தியமான உண்மை, என்னை நம்பு கணேசா !” சொன்னவன் வார்த்தைகளில் தென்பட்ட வீரியம், மற்றும் கண்ணன் முகத்தில் காணப்பட்ட அசாத்திய பீதியின் சாயல் கணேசனை நம்பும்படி செய்தது.
“ஆல்ரைட் நண்பா ! நீ சொல்றத வச்சு பார்க்கறபோது உனக்கு இ.எஸ்.பி.பவர் வந்திருக்
குன்னு சந்தேகமில்லாமல் தெரியுது. ஆங்கிலத்தில் extra sensory perception ன்னு சொல்லுவாங்க. அதாவது நடக்க இருக்கிறத முன்கூட்டியே அறியும் சக்தி ! அதன்படி கனவுல வரும் காட்சிகள் அப்படியே உண்மையாகவே நிகழும்! அந்த அனுபவம்தான் உனக்கு ஏற்பட்டிருக்கு! நல்ல கனவுகள் தோன்றும்போது நல்லதும் நடக்கும். ஆனால், உன் விஷயத்தில் கெட்ட நிகழ்வுகளே கனவுகளில் வந்து அப்படியே நிஜமாகவே நடந்திருக்கு.”
விழிகள் அசையாமல் திகிலோடு கேட்டுக் கொண்டிருந்த கண்ணன், சட்டென கணேசன் கரங்களைப் பற்றிக் கொண்டான். “நண்பா, இதிலேர்ந்து எனக்கு விடுதலை வேண்டும். ப்ளீஸ் ஹெல்ப் மி!” கெஞ்சினான் .
“ஓ.கே! சைக்கியாட்ரிஸ்ட் சக்ரவர்த்தியை கன்ஸல்ட் பண்ணினால் பலன் கிடை க்கும். ஆனால் அவர் இப்போ ஊர்ல இல்லை. செமினார் அட்டெண்ட்பண்ண ஜெனிவா போயிரு க்கார்.திரும்ப ஒருமாசமாகும்..அவர் வந்ததுக்கப்புறம் உன்னை நான் கூட்டிக்கிட்டுப் போறேன். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இரு..”
“அய்யோ..இன்னும் ஒருமாசமா…அதுக்குள்ள எத்தனைபேரை காவு வாங்கப் போகிறதோ இந்தப் பாழாய் போற கனவு !” மிகுந்த கவலையுடன் சொன்னான் கண்ணன். பார்க்கவும் பரிதாபமாயிருந்தது.
“கண்ணா!…மனச தளர விடாதே… ஒண்ணு செய்..தினமும் படுக்கப்போறதுக்கு முன்னாடி கந்தசஷ்டி கவசம் படி. மனசில வேண்டாத எண்ணமெல்லாம் ஏற்படாது. நல்லாத்தூக்கமும் வரும். கெட்டக் கனவு எதுவும் வராது .”
நண்பனின் அறிவுரை கண்ணனுக்கு தென்பைத் தந்தது. மனத்தில் இருந்த பாரம் குறைந்து லேசாகிப் போனது. ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் கழிகின்றாற் போல் உணர்வு !
பத்துநாள் எந்தவித கெட்டக் கனவும் தோன்றவில்லை. நிம்மதியாக இருந்தது கண்ணனுக்கு. அன்று மிகவும் களைத்துப் போய் வந்தவன் அம்மாவிடம் டின்னர் வேண்டாமென்று சொல்லி படுத்துவிட்டான். படுத்தவுடன் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்தான். ஆனால் பத்து நாட்களாய் பதுங்கியிருந்த இ.எஸ்.பி. அன்று மீண்டும் கிளர்ந்தெழுந்தது
இந்தத்தடவை கனவில் மாட்டிக் கொண்டவன் வேறு யாருமல்ல, கண்ணன்தான். கனவில் டூ வீலரில் செல்லும்போது வழியில் தன் டூ வீலரை ஏதோ ஒரு கார் இடித்து தள்ளிவிட, அதனால் தான் தரையில் விழுந்து உருண்டோடுவதுபோல் பயங்கரமான காட்சி மங்கலாகத் தெரிந்தது. ஆஃபிஸ் போகும்போதா அல்லது மாலை வீடு திரும்பும்போதா என்று தெரிய வில்லை. பதறியடித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தவனுக்கு அதன் பிறகு தூக்கமேயி ல்லை. உடல் பூராகவும் வியர்வைக் குளியலில் இருந்தது.
‘அய்யோ ! கடைசியாக என்னையே காவு வாங்கற மாதிரி கனவு வந்திடுச்சே. இதென்ன
சோதனை ? ‘ நினைக்க நினைக்க நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது கண்ணனுக்கு.
கண்ணீர் பொத்துக் கொண்டு வந்தது.
அதனால் பயந்து போய் அன்று பேசாமல் ஆஃபிஸுக்கு லீவு போடலாம் என்ற நினைப்பு
தோன்றியது. பிறகு அதை மாற்றிக் கொண்டான். கொஞ்ச நாள் பஸ்ஸில் போகலாம் ; வீண் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்ற முடிவு அவன் மனதில் எழுந்தது. அம்மாவிடம் சொல்லிக்கொண்டு பஸ் பிடித்து ஆஃபிஸ் சென்றான். பஸ்ஸிலிருந்து இறங்கி, பிளாஃ பார்மில் நடந்து, ஆஃபிஸூக்குள் நுழையும் வரை கூடுதல் கவனத்துடன் இருந்தான்.
ஆஃபிஸில் வேலையில் மூழ்கியவனுக்கு கனவைப்பற்றி நினைப்பு அறவேயில்லை.
கவனம் முழுவதும் ஒரு முக்கியமான ஸ்டேட்மெண்ட் தயாரிப்பதிலேயே இருந்தது.
பதினொரு மணியிருக்கும். பியூன் வந்து ஏ.ஜி.எம். அழைப்பதாக கண்ணனிடம் வந்து சொல்ல பார்த்துக்கொண்டிருந்த ஸ்டேட்மெண்ட்டை அப்படியே வைத்து விட்டு விரைந்தோடி, ஏ.ஜி.எம். அறைக்குள் நுழைந்தவன், ” எக்ஸ்யூஸ் மி ஸார் !” என்றான்.
கம்ப்யூட்டரில் வேலையாய் இருந்த ஏ.ஜி. எம். கண்ணனை நோக்கித் திரும்பினார். ” கண்ணன் ! என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க ?”
“ஸ்டாக் அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட் பிரிபேர் பண்ணிக்கிட்டிருக்கேன் ஸார் !” ஏ.ஜி.எம்.
கேள்விக்கு கண்ணனிடமிருந்து பவ்யமாக பதில் வந்தது.
“சரி, அதை அப்புறம் பார்த்துக்கலாம். நுங்கம்பாக்கத்திலிருந்து ஆடிட்டர் ஃபோன் பண்ணினார். ரிப்போர்ட் ரெடியாயி டுத்தாம். நீங்க உடனே போய் வாங்கிட்டு வாங்க.!”
கண்ணன் திடுக்கிட்டான் .” ஸார்.. நானா ஸார் ?”
“யெஸ், நீங்கள்தானே ஸ்டாஃப் கன்ஸர்ண்ட் ! அதனால் நீங்கள்தான் போகவேண்டும்.
புறப்படுங்க.”
ஏ.ஜி.எம். தீர்த்துச் சொல்லிவிட, கண்ணன் வேர்த்துப் போய் சில வினாடிகள் மலங்க மலங்க விழித்தான். பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டவன், “அதில்லை. ஸார்… வந்து.. இன்னிக்குன்னு பார்த்து நான் டூ வீலர்கொண்டு வரல்ல ஸார் ! அதான் எப்படி போகறதுன்னு …” மென்று விழுங்கினான்.
அவனை எரிப்பதுபோல் பார்த்த ஏ.ஜி.எம். ” இந்த நொண்டி சாக்கெல்லாம் சொல்லாதீங்க. ஹவுஸ்கீப்பிங் செக்ஷ்ன்ல இண்டெண்ட் போட்டு ஒரு டூ வீலரும் ஹெல்மட்டும் வாங்கிட்டு கிளம்புங்க !” எனக் கூறிவிட்டு கம்ப்யூட்டரில் தன் வேலையைத் தொடர்ந்தார்.
கண்ணன் நொந்துபோய் திரும்பினான். விதி வலியது..இல்லையென்றால் இப்படியொரு இக்கட்டான நிலைமை தனக்கு ஏற்படுமா..விசனப்பட்டான். ‘சரிதான் நேற்று தான்
கண்ட கனவு இன்னும் கொஞ்ச நேரத்தில் பலிக்கப் போகிறது. அதனால்தான் இப்படி
யெல்லாம் நடக்கிறது..அய்யோ ! அம்மா, உன்னை விட்டுப் போய் விடுவேன் போலிருக்கு.’
மனதில் குழப்பலைகள் கூடிய அழுகை !
ஆனால், அந்த இக்கட்டான சூழ்நிலையில் அவன் ஒரு ஆட்டோ பிடித்து போய் வர முடியும்.
அதற்கான செலவை ஆஃபிஸ் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை தானே பார்த்துக்
கொள்ளலாம் என்று சிந்தித்துச் செயல்பட்டிருக்கலாம். இருக்கும் மனக்குழப்பத்தில் அந்த யோசனை கண்ணனுக்குத் தோன்றவில்லை.
ஹவுல் கீப்பிங் செக்ஷ்னிலிருந்து டூ வீலர் சாவியும் ஹெல்மட்டும் வாங்கிக் கொண்டு புறப்பட்டான். கனவின் நினைப்பு அவனை பயமுறுத்தியது . அதனால் உடலில் அசாத்திய நடுக்கம் ! மிதமான வேகத்தில்தான் வண்டியைச் செலுத்தினான். அடிக்கொருதரம் இரண்டு பக்கக் கண்ணாடிகளையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் கழிந்தது. உடலில் நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பினான்.
அண்ணா சாலையில் சென்றுகொண்டிருந்தவன் கன்னிமாரா லைப்ரரி இருக்கும் இடதுபுறம் திரும்பி மெதுவாக வண்டியைச் செலுத்தினான். அப்பொழுது பின் பக்கம் காலியாக வந்த கால் டாக்ஸி ஒன்று கண்ணன் வண்டியை உராசிட நிலை தடுமாறி வண்டியிலிருந்து விழுந்து உருண்டவன் உடனே மயக்கத்துக்குச் சென்றான்.
சட்டென டியூடியில் இருந்த டிராஃபிக் கான்ஸ்டபிள் பொறுப்புடன் செயல் பட்டார். மட மடவெ ன்று ஆம்புலன்ஸூக்கு ஃபோன் பண்ணினார். கண்ணன் கழுத்தில் தொங்கிக் கொண்டி , ருந்த ஐ,டி.கார்டில் காணப்பட்ட அலுவலக போனில் தகவல் அனுப்பிவிட, கண்ணன்
செக்ஷ்னைச் சார்ந்த சிலர் விரைவாக விபத்து நடந்த இடத்திற்கு வந்தபோதுஆம்புலனுஸூம் ஸ்பாட்டுக்கு வந்து சேர்ந்தது.
கண் திறந்து பார்த்தான் கண்ணன். தான் ஒரு மருத்தவமனையில் படுத்திருப்பது
தெரிந்தது. சுற்றிலும் அலுவலக நண்பர்கள். அம்மாவும் அழுதழபடி ஓரத்தில் நின்று கொண்டிருந்தாள்.
அப்போதுதான் தனக்கு நடந்த விபத்து பற்றி கொஞ்சம் கொஞ்சமாக நியாபகம் வந்தது.
தான் இன்னும் உயிரோடு இருப்பதை நம்பவே முடியவில்லை.
“கண்ணன் ! தலையில் ஹெல்மட் அணிந்திருந்ததால் நல்லவேளையாக அடி ஒண்ணும் பலமாக இல்லை. கை கால்களில் சிராய்ப்புதான். கால் டாக்ஸி டிரைவரை மடக்கியாச்சு. டாக்ஸி ஓனர் உன்னோட ஆஸ்பிடலைஸேஷன் செலவை ஏத்துக்கிட்டாரு. ஸோ நத்திங் டு ஒர்ரி. யு ஆர் ஆல்ரைட் !” என்றார் கண்ணனின் செக்ஷ்ன் ஹெட். நண்பர்கள் புன்சிரிப்போடு கண்ணனின் கை பற்றி குலுக்கினர்.
அனைவரும் சென்றதும் கண்ணனின் அம்மா குய்யோ முறையோவென்று கதறியழுதபடி அவனருகில் வந்தாள்.
“என்னடா கண்ணா….இப்படி படுக்கையில விழுந்துட்டே…அடி பலமாடா .” புலம்பியவாறு கண்ணீர் விட்டாள்.
“ஐயோ…எனக்கு ஒண்ணுமில்ல..சின்ன காயம்தான். இன்னும் ரெண்டு நாள்ல வீடு திரும்பிடுவேன்.கவலைப்படாதேம்மா !”
ஸ்கேன் ரிப்போர்ட் பயப்படும்படியாக ஒன்றுமில்லை என்பதை உறுதி செய்தது.
வெளிக்காயங்களுக்காக ஓரிரு நாட்கள் தங்கினால் போதும் என்று மருத்துவக்
குழு கூறியது.
ஒருவழியாக டிச்சார்ஜ் ஆனான் கண்ணன்.
நாட்கள் ஓடியது. இப்பொழுதெல்லாம் கண்ணனுக்கு கனவுகள் வந்தாலும் நல்லதோ
கெட்டதோ அவை எதுவும் பலிப்பதில்லை. விபத்து வடிவில் வந்த விதி நல்ல வேளையாக இ.எஸ்.பி. பவரை இழக்கச் செய்தது பெரிய நிம்மதி கலந்த ஆஸூவாசத்தைத் தந்தது.
……………………………………….