கனவுகளை விதைத்தல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 31, 2026
பார்வையிட்டோர்: 175 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மனதும், அறிவும் உரையாடி தொகுத்த எக்கச்சக்கமான முடிவுகள் என்னுள் அடுக்கப் பட்டுக் கிடக்கின்றன. அதிலொன்று என் மகனுக் கானது. அதை உருவிஎடுத்து, அதற்காக நேரம் ஒதுக்கி செயற்படுத்தி விடுவதால் அவனின் பாதையின் சில முடிச்சுகளை அவிழ்த்து விடலாம் என என் அப்பா எனக்கு முன்னமொருமுறை தெரிவித்திருந்தார். அது அவர் உயிருடன் இருக்கும் ஒரு நாளில் இருள் பூமியை விழுங்கத் தொடங்கிய முன்னைய மாலையில் நிகழ்ந்தது. 

இன்று அதற்கான நாள்தான் என்பதை நேற்றைய இரவில் முடிவெடுத்துக் கொண்டேன். அதை அவனிடமும் தெரிவித்து விட்டேன். இரவு முழுவதும் அவனுக்கு அறியப்படுத்திவிட வேண்டியவற்றை ஒழுங்கமைத்து வரிசைக் கிரமப் படுத்தினேன், ஆனால் அது கிளைத்த முறையில் பரந்து கிடந்தது. 

இன்றைய நாள் எங்களை விழுங்கி விடப் போகின்றது என்பது தெரிந்திருந்தாலும், அதன் சுவையூறிய. நாவின் எச்சில் இழைகளுள் ஒட்டி விடாமல் அவனை அழைத்து அந்த மகத்தான நிகழ்வுகளை நடாத்தி மீண்டுவிட வேண்டு மெனத் தைரியத்தை எனக் கே கொடுத்துக் கொண்டேன். பனி துளிர்க்க இரவு ஒழுகிக் கொண்டிருந்தது. காலை ஆறு மணி. 

காலைக் கடமைகளை ஒழுங்குற முடித்து திட்டமிட்டபடி எட்டு மணிக்கு சைக்கிளிலேறிக் கையசைத்தோம். முன்னே அவனை இருத்தி மிதிக்கத் தொடங்கினேன். கங்காரு வயிற்றுக்குள் குட்டியை வைத்துக் கொண்டு பாய்ந்து போனது. மரங்களும், பாதையும் கலைந்து பின்னகர்ந்தன. 

“நாம் கதைகளினால் வழி நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் முன்னைய அனுபவங்கள் கதைகளை கனவுகளாக்குகின்றன.” என்றேன். 

கனவுகளை தான் ஒவ்வொரு நாளும்தின்னுவதாகவும் அவை ஆற்றொணாச் சுவையு டையது என்றான். 

“உனக்கு இன்னமும் சுவையுடன், உயிர்ச்சத்துக்கள் நிறைந்த கனவுகளை பரிசளிப்பதற்காகத்தான் அழைத்துச் செல்கின்றேன்” என்றேன். அவன் உற்சாகத்தைப் பருகிக் கொண்டு சீக்கிரமாய் மிதிக்கக் கட்டளையைப் பிறப்பித்தான். 

உண்மையாலுமே நாங்கள் செல்வது ஒரு வளவு காண் பயணம்தான். எங்கள் மூதாதையர் புதைந்த, என் சிறுவயதை உறிஞ்சிக்கொண்ட அந்த நிலத்தைத்தேடி. 

சைக்கிளின் வேகம் வீதியைச் சுருட்டி பின்புறம் அடுக்கப் பறந்தோம். வீதியின் நடுவில் நின்ற விவேகானந்தரின் தலையிலிருந்த காகம் எச்சமிட்டுப் பறந்தது. அவரோ “எழுமின், விழிமின், குறிசாரும்வரை ஓயாதிருமின்” என்றார். வேகத்தைக் குறைத்து, கால்குத்தி புழுதியை நிப்பாட்டினேன். புனித அன்னம்மாள் குழந்தையுடன் சாந்தம் ஒழுகநின்றாள். நெஞ்சு மேலும் – கீழும் ஏறி, இறங்க “உடலியக்கத்துக்குக் கூடுதலான பிராண வாயுவை உள்ளிழுக்கின்றீர்கள்” என்றான் அவன். 

இறங்கி, “முன்னிருந்த பாதையால் நடக்க வேண்டும்” என்றேன். போடப்பட்டிருந்த கிறவலை அழித்து மண் ஒழுங்கையாக்கி சைக்கிளை உருட்டினோம். அடர்ந்த பற்றைகள் முளைத்து, மரங்கள்படர ஒளி வடிகட்டப்பட்டது. “மகனே, நீ அந்த வாசனையை நுகர்கிறாயா?” 

“நாசியில்சுள்ளிடுகின்றது” வெள்ளைக் கீலங்களாகத் தொங்கி ஊர்முழுவதும் வாசனையை பரப்பும், “எண்ணம் பாலைக்குக் கீழால் நடந்து கொண்டிருக்கின்றோம்” என்றேன். 

இந்த வாசனை பாம்புகளுக்கு பிரியமானது. அவற்றின் காமக்கேளிக்கைகளுக்கு இந்த வாசம் தூ ண்டுகோலாய் இருக்கின்றது என்பதையோ, முன்னமொரு தடவை நாங்கள் இதன் கீழ் (நாம் கடந்து கொண்டிருக்கும் இடத்தில்) சாரையும், நாகமும் ஒன்றையொன்று பின்னிக் கொண்டு வால் நுனியில் நின்று புணர்ந்து கொள்ளும் அரியகாட்சியைக் கண்டு பயந்து ஓடியிருக்கின்றோம் என்பதையோ அவனிடம் கூறிவிடவில்லை. – அது இந்தப் பயணத்துக்கான மனநிலையை அவனிடமிருந்து சரித்துவிடும் என அஞ்சினேன். அவனது மெலிதான- சிறு உறுக்கலுக்கும் நீர் சொட்டும் மனதை நான் அறிந்து வைத்திருந்தேன். எண்ணம்பாலையில் சைக்கிளைச் சாத்தி பூட்டிவிட்டு நடந்தோம். 

எல்லையேதுமின்றிய வெளியொன்றின் முன்னால் கை நீட்டி “இது தான் வளவு” என்றேன். அவன் மனநிலை பிறழ்வானவனாக என்னை நினைத்துக் கொள்ளப் போகின்றான். 

ஞாபகத்துள் இருந்த எல்லையில் மரக்கட்டைகளை நட்டு முட்கம்பிகளை அடித்து, நடுவில் கல்வீட்டையும், அதன் இடது புறத்திலும்- எங்களுக்கு வலது புறத்திலும் பெரிய மாமரமொன்றையும், வீட்டின் முன்னால் பெரிய நிழல் மரவள்ளி ஒன்றையும் கீறினேன். மாமரத்தின் அருகில் தும்புத்தடிக் கம்பொன்றை ஆழ இறக்கி ஜிம்மியை கட்டி- கோழிக்காலை – வாத்துக்கள்- முயல்கூட்டையும் கீறி நிறைவுசெய்து காட்டினேன். அவனது கண்களில் ஆச்சரியம் முளைத்ததைக் கண்டேன். வீட்டுக்குள் இருந்து அம்மாவின் குரல் சாப்பிட அழைத்தது. 

முயல் கூட்டிற்கு பின்னிருந்து அக்காவும், அண்ண னும் வௌவால் சூப்பிப்போட்ட முந்திரியம் பழங்களைப் பிய்த்து கொட்டைகளை வீட்டுப் பின் மூலையில் புதைத்து விட்டு, கிணற்றுத் துலாவை அண்ணன் இழுத்து தண்ணியள்ள இருவருமாக கைகளைக் கழுவிக்கொண்டு உள்ளே ஓடினார்கள். புத்தக ஒற்றைகளை அடுக்கி கண்ணாடிக்குள்ளால் ஊசிக்கு நூல் கோர்க்க நூலின் தலையை வாய்க்குள் வைத்து எச்சில்படுத்தி நுழைத்துக் கொண்டிருந்த அப்பா “தம்பி எங்கே?” என்ற அதட்டலுடனான குரல் எனக்கும் கேட்டது. 

அப்பா என்றால் சரியான பயம். அவர் பார்வைக்குள் இருந்து தெறிக்கும் ஒளிக்கீற்றுக்கள் எங்களைக் கட்டிவிடும். பின் அவரது வார்த்தைகளே அதை அவிழ்த்து இயல்புக்குக் கொண்டுவரும். 

மகனின் கையை விட்டுவிட்டு வளவுக்குள் கால்வைத்தேன். இழகிச் சுருங்கிய நான், பாதி தொடை தெரியும் சின்னக் காற்சட்டையுடன் ஓடினேன். 

அக்கா வாயில் கோப்பையை வைத்து சத்தம் எழுப்பியபடி தண்ணியை உறிஞ்சிக் குடித்தாள். எனக்கான கோப்பையில் தண்ணிச்சோத்துடன் ஊறுகாய்த் துண்டும், கருவாட்டுப் பொரியலும் இருந்தன. என்னைச் சாப்பிடச் சொன்னவள் அவனுக்கு “வேண்டுமா?” என்றாள். அவன் குறுக்காக இல்லையெனத் தலையாட்ட “நல்லது நாய்க்குத் தெரியாது” என்று விட்டுச் சென்றாள். 

அவனை அழைத்துக் கொண்டு வீட்டின் அறைகளைச் சுற்றிக் காட்டினேன். அப்பாவின் அறைக்குள் நுழைந்து பெரிய மர அலுமாரியைத் திறந்தேன். அது புத்தகங்களால் நிறைந்து கிடந்தது. எனக்கான அடுக்கில் இருந்த சித்திரக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், முல்லா கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், நாடோடிக் கதைகளடங்கிய புத்தகங்களைக் காட்டி இவை எங்களின் விடுமுறைக்கானது என்றேன். 

நூலை தைத்துக்கொண்டிருந்த அப்பாவைக்காட்டி “இதுதான் அப்பப்பாவா?” என்றான். அவன் பிறக்கமுன் என் அப்பா இறந்து போயிருந்தார். அப்பாவிடம் அனுமதியை எடுத்து வைத்திருந்த அண்ணன் கூப்பிட்டான்- வெளியே வரும்படி வீட்டிலிருந்து பெற்றுக்கொண்ட விடுதலையுடன், மகிழ்ச்சியை அள்ளிக்கொண்டு மணலில் கால்புதைய ஓடினோம்.-அவனும் பின்னே வந்தான். 

அண்ணன் தலைவனாகி கட்டளைகளைப் பிறப்பிக்க நாங்கள் படைவீரர்களாய் பின் தொடர்ந்தோம் பாக்கியராசா அண்ணன் வளவுக்குள் ஒரு முட்கம்பியைக் காலால் மிதித்துக்கொண்டு, மேல்வரியைத் தூக்கிப்பிடித்தான் வாசலைப் பெருப்பித்தான் அண்ணன். 

அற்புதக்குகை வாசலினூடு அதிசய உலகத்தினுள் சென்றோம். நாங்கள் இளவரசர்களானோம், இடையில் வாள், நெஞ்சில் கவசம். எதிரில் வந்த பச்சைக் கிளை எதிரிகளை வெட்டிச்சிதறடித்து முன்னேறினோம். அண்ணன் சைகையில் பதுங்கும் போது கைகளில் துப்பாக்கிகள் இருந்தன. கிளை விட்டோடிய கொடியில் கிரனைட்டுக்கள் காய்த்திருந்தன. உண்மையிலும் அது மகா அதிசயமான உலகம். எங்களின் மனோ நிலைக்கமைய, தன்னை மாற்றிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு நாளும் புதுப் புதுவிதமாய் ஒரு உணர்வைப்பரிமாற, அதனுள்ளிருந்து எழும் சிலிர்ப்பு, இறக்கை முளைத்து நாளையிலும் கூட்டிவரும். 

எங்களின் வீர சாகசங்களுக்கான வளவு அது. விராலி, ஈச்சை, கண்ணா, காயான், பிரம்பு, கசகசா, காய்ஞ்சோண்டி, நாயுண்ணி பற்றைகளும், சுரவணை, விண்ணாங்கு, மதுர, பாலை, தேக்கு, விளா, புளி, சூர, கார, நாவல், கிளிசரியா, மஞ்சவண்ணா, வீர, புங்கை, பூவரசு மரங் களாலும் ஆக்கப்பட்ட அண்ணளவுக் காடு. அதன் நடுப்பகுதியில் பாக்கியராசா அண்ணனின் அம்மம்மாவின் கல்லறை இருந்தது. அந்த வளவிற்குள் எங்கள் கால்படாத சூனியப்பிரதேசம் அதுதான். நாங்கள் வீரம் நிறைந்தவனாக நினைத்துக் கொண்டிருந்த அண்ணன் மட்டும் எங்களைத் தூரத்தே பார்த்திருக்க விட்டு கல்லறையின் ஓரத்தில் ஊதாநிறத்தில் அல்லது வெள்ளையில் பூத்திருந்த பட்டிச் செடியை ஓடிச்சென்று புடுங்கிவருவான். 

பட்டிச்செடிகளைப்பிடுங்கி அதன் வேர்களை மருந்துக்கடைக்கு விற்கலாம் என்ற – விளையாட்டின்போது உழைக்கும் ரகசியத்தை அண்ணன்தான் சொல்லித் தந்தான். அதில் கிடைக்கும் சில்லறைகளைக் கொண்டு, பின்னேரம் கோயில டிக்கு விளையாடப் போவதாக கொட்டகைக்கு படம் பார்க்க போவோம். அண்ணன்தான் படத்தையும் தீர்மானிப்பான். பெரும்பாலும் அதிபயங்கர சண்டைக் காட்சிகள் நிறைந்த தாகவும் ஈஸ்ட்மென்கலராகவும் அது இருக்கும் “வெத்திலை போடுவம்” என அண்ணன் காரமரத்தில் ஏறினான். 

“நீங்க வெத்தில போடுவீங்களா?” மகன் கேட்டான். 

“நீயும் போடலாம்” என இழுத்துக் கொண்டு போனேன். இப்போது எந்த மரமும் அங்கிருக்கவில்லை. சிதைந்த வீடுகள், எல்லையிடப்பட்ட கம்பிச் சுருள், மஞ்சள் – கருப்பு பட்டிகள் தான் மிச்சம். 

காரக்காயை, கார இலையில் வைத்து மடித்துச் சப்புவோம். காரக்காய்கள் பச்சையாக இருந்து, முற்றி மஞ்சளாகி பழுத்துக் கபிலமாகும். 

அக்கா அதைக்கண்டு கூப்பிட்டாள். ஈச்சம் முட்கள் குத்தாமல் மட்டைகளை காலால் மடக்கி சிவந்து விரிந்து கிடந்த குலையை ஓட்டுச் சில்லால் அண்ணன் அறுத் தெடுத்தான். 

“இது தான் ஈச்சை”. 

“இது” பக்கத்தில் நின்ற பிரண்டையைப் பார்த்துக்கேட்டான். “இது சாப்பிடக்கூடியது” 

தேங்காய்ப்பூ, லெட்சவட்டை, குறிஞ்சா, சிறு குறிஞ்சா, முஸ்டை, முருங்கை, குப்பைமேனி, திராய், வாதராணி, மாம்பாஞ்சான், முள்ளி, முல்லை, அகத்தி, முடக்கொத்தான் என கீரைகளையும் அம்மா சமைப்பாள். 

“நாங்கள் மருந்தைச் சாப்பிட்டோம், நீங்கள்- நோய்களைச் சாப்பிடுகின்றீர்கள்” என்றேன். 

“உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன், அவைகள் எல்லாவற்றையும் உனக்கு காட்டிவிட முடியாமைக்கு, அவைகளில் பாதி நஞ்சாகக் காட்டப்பட்டு மறைக்கப் பட்டுவிட்டன, மகனே”. 

“நீ மழைபெய்து ஓய்ந்த நேரங்களில் மண்ணை அளைந்திருக்கிறாயா? அதன் சுவை அலாதியானது.” 

கார்த்திகைச்செடியில் கொக்கும், கோடைச்செடியில் வெய்காயமும்முளைத்திருக்கும். மந்திரமாரி, வெள்ளத்தினுள் இன்னும் மாயங்காட்டும். 

மின்னிக்கண்ணான், பனையான், விரால், குறட்டை, சுங்கான், ஏறுகெழுத்தி, பொட்டியான், வால்பறவை, உளுவை, கெவிழி, செங்கணையான், விலாங்கு, மீசைக்காரி என இழையும். 

வெள்ளத்துள் நடந்து மின்னிக் கண்ணானை ஓட்டை டின்னில் பொத்தி னேன். தங்கூசியில் அண்ணன் கம்பில் கட்டிய தூண்டிலில் பனையான் பிடித் தோம். அவன் டெனிம் நீளக் காற்சட்டை நனையும் என்றான். அழுக்கு நீரில் கிருமி என்று எதிர்ப்புசக்தியை உண்டாக்க பயந்த உலகத்துள் ஒழிந்து கொண்டான். கார்த்திகைப் பூவில் படைப்பின் அதிசயத்தைப் பார்க்கச் சொன்னேன். பூ தானே எனத் தூக்கிப்போட்டான். 

அவனை அழைத்துக் கொண்டு பண்ணை வீடாக இருந்த வளவைச் சுற்றினேன். கையில் முயற்குட்டியொன்றைத் தடவிக்கொண்டே நடந்தோம். அவனை ஜிம்மிக்குத் தெரியாததால் உறுமிக்கொண்டு இருந்தது. 

கருமேகம் கட்டிப்பிடிக்க பூமி இருண்டது. வீட்டைப் பார்த்து புயலை ஊதினேன். கூரை பறந்தது. சுவர்கள்சாய்ந்தன. எல்லோரும் கைகளைப்பிடித்துக்கொண்டு பக்கத்து யோகமக்கா வீட்டுக்கு ஓடினோம். அப்பா என்னைத் தூக்கி யிருந்தபோதும் அறுந்து வளைந்து கிடந்த கம்பி கையைக் கீறிய தழும்பை தடவிக் காட்டினேன். 

பக்கத்து வீட்டு வாசற்தட்டியை இறக்கி, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு புயலைக் கடந்த கதையை ஓட்டினேன். 

எங்களின் புத்தகங்கள் மழையை விழுங்கிப் பருத்து இறந்து போயின, காலத்தைக் கடத்த உறவினர் வீடொன்றில் தங்கியிருந்ததைச் சொல்லிவிட்டு வளவின் பின் பக்கத்தில் தரையுடன் பாதிச் சுவரையும், மேலே ஓலையாலும் வேயப் பட்ட வீடொன்றைக் கீறினேன். புத்தகங்களை இழந்த சோகத்தில் மூழ்கியிருந்த அப்பா எங்களை அழைத்து அவர் முன்னே இருக்கச்செய்து, எதிர்காலம்குறித்ததான கனவுகளை விசாரணை செய்தார். 

இப்போது – இந்த நிலையில் அப்பாவைப் பார்க்க வேண்டாமென அவனின் கண்களை மூடினேன். ஒளிவட்டம் சுற்றியது போல இரத்தவட்டப் பின்னணியில் கைகளை அகலவிரித்துக் கிடந்தார். அவரின் முகம் குத்துக்களைச் சுமந்து விகாரமடைந்திருந்தது. 

எஞ்ஜினியராக வருவேனென்ற அண்ணன் படகேறி இயக்கத்துக்குப் போய்விட்டதாக அம்மா தலையிலடித்துப் புலம்பிக் கொண்டிருந்தாள். எங்கள் கூடு சிதைந்துபோனது. அம்மாவும், அக்காவும் பரினாசுக்கு நூல் சுத்த வாழ்க்கை உருண்டது. நூல் வாங்கி வருவதும், சுற்றியதைக் கொண்டு கொடுப்பதும், பசைபோக நூலைக் கசக்கிக் கொடுப்பதும் என் வேலையானது. மாதமொருமுறை பரினாஸ் வீட்டு முற்றத்தில் தொலைக்காட்சியில் படம் பார்க்க மூவரும் சென்று வந்தோம். அண்ணன் ஒரு கோயில் படம் பார்த்த அன்று கதறியழுது அடுத்த நாள் காய்ச்சல் கண்டாள், அக்கா. 

இப்படியே ஒரு நேரக்கஞ்சியுடன் அல்லது அவித்த மரவள்ளிக்கிழங்கு அவியலுடன் நகர்ந்த பின்னைய நாட்களைக் காட்டாமல் வளவைவிட்டு வெளியேறி சைக்கிளில் அவனை ஏற்றிக்கொண்டு கோயிலடி வெட்டைக்கு மிதித்தேன். 

நான் வெளியேறியதும் வளவு சிதைந்து பற்றை களாலும், அழுகிய குப்பைகளாலும் நிறைந்தது. வேலிகள் அழிந்து எல்லையை இழந்தன. 

கோயிலடி வெட்டைக்குள் நுழைந்த நான் மீண்டும் இளையவனானேன். அண்ணனின் நெறியாள்க்கையில் படக்காட்சியொன்றை நடிப்பதற்காக பாத்திரங்கள் உருவாக்கப் பட்டன. சண்டை, சோகம் என நடிப்பை அவனுக்குக் காட்டினேன். நான் நாகேசாக செய்த சேட்டைகளைப் பார்த்து அவன் சிரித்தான். அவனைத் தள்ளியிருக்கச் செய்து விட்டு பந்தை எடுத்து உதைத்துத் தள்ளினோம். 

ஒழுங்கைகளுக்குள்ளால் வாகனத்தைச் செலுத்தி ஓடிக்கொண்டிருந்தேன். அவனோ மூச்சிரைக்க “அப்பா, அப்பா” கத்திக்கொண்டே பின்னுக்கு வந்தான். 

கோயிலடி வெட்டையில் பெரிய ஆலமரத்தில் கட்டப் பட்டிருந்த பத்தடி நீளமான ஊஞ்சலில் அவனை அமரச்செய்து, அவனை இறுக்கிக் கொண்டு நானும் அமர்ந்தேன்- அக்கா பின்னே இருந்தாள். முகம் தெளிவில்லாத நான்கு, ஐந்து பேரும்.இருந்தார்கள். அண்ணன் ஒரு பக்கமும், எதிர்ப்புறத்தில் பெரியம்மாவின் மகனும் உந்தினார்கள். அவன் மூச்சு ஏறி, இறங்கக் கத்தினான்.- அந்த ஒலிக்குள் பயமும், சந்தோசமும் பின்னியிருந்தது. இறங்கி தலைசுற்றி நின்றவன் வீட்டுக்குப் போய்விடுவோமென இழுத்தான். 

“குண்டடித்து விளையாடி விட்டுப் போவோம்” என்றேன். “வாசிப்பவர்கள் மீட்டிக்கொள்வார்கள் நாம் போவோம்” அடம்பிடித்தான். அவன் வயிற்றுக்குள் இருந்து பசியின் சத்தம் எழுந்ததை உணர்ந்தேன். 

பிற்பகல் மூன்று மணி. 

சைக்கிளில் அவனை இருத்திக்கொண்டு மிதித்தேன். அவன் அவனாகவே இருந்தான். நானோ ஒட்டிய நினைவுகளில் இருந்து மீளமுடியாமல் இழுபட்டுக் கொண்டே வந்தேன். 

2016.01.16.09.32 

– நவம்பர் 2018, மறுகா.

எழுத்தாளர் திசேரா, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர் மற்றும் கதைஞர் ஆவார். முக்கிய சிறப்பம்சங்கள்: படைப்புகள்: ஈழத்து இலக்கியச் சூழலில் நவீன சிறுகதை வடிவம் மற்றும் யதார்த்த கதைசொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியவர். இவரது 'ஏவிவிடப்பட்ட கொலையாளி' (2008) மற்றும் 'வெள்ளைத்தோல் வீரர்கள்' போன்ற படைப்புகள் பெரிதும் அறியப்பட்டவை. பின்னணி: மாற்றுப் பாலினத்தவரின் (ஓரினச் சேர்க்கையாளர்கள்) மன உணர்வுகள், யுத்தத்தின் பின்னரான வலிகள்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *