கண்ணுச்சாமி பாடியபோது…




பகுதி-1 | பகுதி-2
“மல்லிகைப்பூ மலர்ந்த போது மனதை கொள்ளை கொள்ளுதடி
மகிழம்பூ மலர்ந்ததெல்லாம் மணல்மேட்டில் உதிர்ந்த தடி
சம்மங்கி பூத்த வாசம் சாலை வரை அடிக்கு தடி
செம்பரத்தி பூக்கிளையில் சிட்டு ஒண்ணு பேசுதடி
மருதாணி பூக்கிளையில் மைனா ஒண்ணு அமருதடி
தாழம்பூ பூத்த மணம் தெருவெல்லாம் வீசுதடி
ரோஜாக்கள் தோட்டத்திலே தேனீக்களின் கூட்டமடி
செவ்வந்திப்பூ கூட்டங்களும் மின்னுதடி கதிரொளியில்!”
கண்ணுச்சாமி பாடிக்கொண்டே பூ தொடுத்துக் கொண்டிருந்தான்.

கத்தரியூர் செழிப்பான கிராமம். கடவாறு நதி அருகே அமைந்த அந்த அழகான கிராமத்தில் கிட்டத்தட்ட மூவாயிரம் மக்கள் வசிக்கின்றனர் புள்ளி விவரங்கள் கணக்கின் படி. அங்கிருந்து அருகில் உள்ள நகரங்களில் அன்றாடம் வேலைக்காக செல்பவர்கள் பலர். அங்கேயே விவசாயம், மற்ற குடிசைத் தொழில்கள் செய்யும் குடும்பங்களும் இருந்தன.
சிவன் கோவில், பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், அய்யனார் கோவில் இவைகளும், உயர்நிலைப்பள்ளியும், நூல் நிலையமும் அமைந்திருந்தன.அழகான குளமும் அதன் கரையில் ஒரு பகுதியின் ஓரத்தில் சிறிய பிள்ளையார் கோவிலும், அருகில் இருந்த நூறு வருடங்களுக்கு மேலான அரசமரத்தடியில் இளைப்பாற வசதியாக சிமெண்ட் பெஞ்சுகளும் இருந்தன.அங்கேதான் பஞ்சாயத்து விவகாரங்களும் நடக்கும்.
கத்தரியூர் மக்கள் நவீன கால விஞ்ஞான வளர்ச்சியினால் ஏற்பட்ட வாழ்க்கை முறையை தேவையான அளவில் கடைபிடித்தாலும், தொன்று தொட்டு வந்த பாரம்பரிய வாழ்வு வழிகளை நிறைய செயல்களில் மாற்றிக் கொள்ளவில்லை. அவர்கள் ஆங்கிலமும் பேசுவார்கள். ஆழ்வார்கள் பாசுரங்களையும் படிப்பார்கள். திரைப்பாடல்களையும் பாடி ரசிப்பார்கள். திருக்குறள்களையும் மனனம் செய்வார்கள். நகைச்சுவை உணர்வுடனும் இருப்பார்கள். நாகரிகமாகப் பேசவும் செய்வார்கள். கனிவை காட்ட வேண்டிய இடத்தில் கனிவாகவும், கண்டிப்பாக இருக்க வேண்டிய விஷயங்களில் கண்டிப்புடனும் இருப்பவர்கள்.
அவ்வூரில் கண்ணுச்சாமி அம்மன் கோவில் அருகில் பூக்கடை வைத்திருந்தான். திருமணம் செய்து கொள்ளவில்லை. கத்தரியூர் குளத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு சந்தில் உள்ள சிறிய வீட்டில் வசித்து வந்தான். எப்போதும் நாட்டுப்புற பாடல்களையும், தானே எழுதிய பாடல்களையும் ராகத்துடன் பாடுவதில் மகா திறமைசாலி. அவன் பாடுவதை கத்தரியூர் மக்கள் மிகவும் ரசிப்பார்கள். எந்த நிகழ்விலும் கண்ணுச்சாமியை கண்டிப்பாக பாடச்சொல்வார்கள். சுயமாகவே கண்ணுச்சாமி சின்ன சின்ன பாட்டாக நிறைய பாடுவான். எல்லோரும் அன்புடன் அவனுக்கு உணவளிப்பார்கள்.
கத்தரியூர் மக்கள் மிகவும் ஒற்றுமையானவர்கள். பிரதான சாலையில் இருந்து நூறடி தூரத்தில் கத்தரியூரின் முதல் தெரு. பஞ்சாயத்து அலுவலகம், நூலகம், நியாய விலைக்கடை, மளிகைக் கடைகள் இரண்டு, காய்கறிகள் கடை இவைகள் தாண்டிச் சென்று முதலில் உள்ள பெரிய வீட்டில் பஞ்சாயத்து தலைவர் நாகராஜ். அவர் மனைவியின் பெயர் கலாவதி. அவர்களுக்கு இரு வாரிசுகள்.ஒரு பையன் பூபதி, பத்தாம் வகுப்பு படிக்கிறான். ஒரு பெண் பானுமதி, எட்டாம் வகுப்பில் படிக்கிறாள்.
அடுத்த வீட்டில் நாகராஜின் உதவியாளர் வேலாயுதம். அவரும் மனைவி சாந்தா, மகள் மணிமொழியுடனும் வசிக்கிறார். மணிமொழி ஏழாவது படிக்கிறாள்.
அந்த ஊர் பள்ளியில் உயர்நிலை ஆசிரியராக பணி புரியும் மூர்த்தி தன் குடும்பமான மனைவி கோகிலா, பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் மகன் கேசவன் இவர்களுடன் எதிர்த் திசையில் உள்ள வீட்டில் இருக்கிறார் . அதற்கு பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் உள்ளது.அதனருகில் இருக்கும் சிறிய வீட்டில் அஞ்சல் நிலைய அதிகாரி துரைசாமி வாடகைக்கு தங்குகிறார். அவர் குடும்பம் இங்கிருந்து பனிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள முல்லைப் புரம் நகரத்தில் வசிக்கின்றனர். வார இறுதியில் துரைசாமி அங்கே சென்று விடுவார்.
இவர்கள் தவிர அடுத்தடுத்த வீடுகளில் சிவன் கோவில், அம்மன் கோவில் இவைகளுக்கு பூஜைகள் செய்யும் சிவாச்சாரியார் கணேசன் குருக்கள், மனைவி நீலாயுதாட்சி, மகள்கள் சுந்தரி, ஜனனி இவர்களுடனும் மற்றும் பெருமாள் கோவில் பட்டாச்சாரியார் தேவநாதன் அய்யங்கார் மனைவி பூமாவுடனும் வசிக்கிறார்கள். கணேசன் குருக்களின் பெண்கள் முறையே
ஆறாம், ஏழாம் வகுப்பில் படிக்கிறார்கள். தேவநாதனின் ஒரே மகன் சிரஞ்சீவி வெளிநாட்டில் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை செய்கிறான்.
இவர்கள் அனைவரும் கத்தரியூரில் நுழைந்தவுடன் வரும் முதல் தெருவில் இருக்கிறார்கள். அந்த தெரு திரும்பிய இடது புறத்தெருவில் முதல் வீட்டில் தாமோதரன் அய்யங்கார், அவர் மனைவி செங்கமலம் என்ற முதியோர்கள் வசிக்கின்றனர். தாமோதரன் அவர்களுக்கு வயது எண்பத்தி இரண்டு. செங்கமலத்தம்மாளுக்கு எழுபத்தொன்பது நடந்து கொண்டிருக்கிறது. அவர்களின் பெண் வாரிசுகள் அனுசுயா, இந்திரா இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வெளிநாட்டில் வசிக்கின்றனர்.
எதிர்த்திசையில் உள்ள வீட்டில் அம்மணி ஆச்சி தனியாக வசிக்கிறார். அவர் இட்லி வியாபாரம் வீட்டிலிருந்தே செய்து வருகிறார். அவ்வூரின் பிரசித்தம் அம்மணி ஆச்சி தயாரிக்கும் இட்லி. அதற்கு பக்கத்தில் ஒரு சந்து. அதற்குள் சென்றால் வரும் தெருவில் வரிசையாக கோவில்கள். சந்துக்குள் நுழைகையில் இருக்கும் முதல் வீட்டில் மாரியப்பன், மரகதம் அவர்கள் மகள் காஞ்சனா மூவரும் இருக்கிறார்கள். மாரியப்பன் தச்சு வேலைகள் செய்வதில் திறமை பெற்றவர். சில பெரிய மரப்பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மர வேலைகள் செய்து தருகிறார்.காஞ்சனா படித்து முடித்து விட்டு அருகில் உள்ள நகரத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். நல்ல அழகும் திறமையும் உள்ள காஞ்சனாவை அக்கம் பக்கத்தில் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும். அவள் எல்லோருடனும் மிகவும் நட்புடனும் உதவி செய்யும் மனப்பான்மையுடனும் நடந்து கொள்வாள்.நாகராஜ் வாரிசுகள் முதல் எல்லோருக்கும் ஆங்கிலம், கணக்கு இவற்றை ஆவலுடன் கற்பிப்பாள்.
முதல் தெருவோடு நேராகப் போனால் இரண்டு தோட்டங்களுக்குப் பின் மற்ற வீடுகள் எல்லாம் இருக்கின்றன. அவைகளில் ஒன்றில் நூறு வயதை நெருங்கும் தியாகி சிவநேசன் வசிக்கிறார். வீட்டின் பின்புறம் சிறிய தோட்டம்.தோட்டம் முடியும் இடத்தில் ஒரு கிணறு.இரண்டு மூன்று வாழைகள், இரு தென்னை மரங்கள், எலுமிச்சை மரம், தானாகவே வளர்ந்த நித்திய முல்லை, செம்பருத்தி செடிகள், இதன் நடுவே சிறிய கீரைப்பாத்தி,கத்தரி, கொத்தவரை, புடலை செடி கொடிகள் சிவநேசனால் உருவாக்கியவை இருந்தன. தன் வயதை பொருட்படுத்தாமல் தோட்டத்தில் தினமும் வேலை செய்வார். கண்ணுச்சாமிதான் அவருடைய உற்ற நண்பன். அவன் அவருக்கு எல்லா உதவிகளையும் செய்வான்
.அந்த சிறிய சாலை நேரே அங்கிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் மாங்கனூர், ஒரு கிலோமீட்டர் தொலைவில் அரளிக்காடு, இரண்டு
கிலோமீட்டர் தொலைவில் எலந்தனூர் இந்த குக்கிராமங்கள்வரை நீள்கிறது. இந்த கிராமத்து மக்களுக்கும் கத்தரியூர்தான் பஞ்சாயத்து ஆட்சி.பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள முல்லைப்புரம் நகரத்தில் இருந்து சிற்றூந்து வசதி கத்தரியூர் வரையில் உண்டு. ஒரு நாளைக்கு நான்கு முறை வந்து செல்லும். கத்தரியூர் கோவில்களில் திருவிழா என்றால் ஐந்து அல்லது ஆறு முறை கூட சிற்றூந்துகள் வசதி இருக்கும்.
பக்கத்து கிராமங்களில் வாழும் அனைவருக்கும் கத்தரியூர்தான் முக்கிய ஊர். அஞ்சல் அலுவலகம், ஊராட்சி, மளிகைக் கடைகள், பள்ளிக்கூடம், மற்றும் பல வசதிகளுக்கு கத்தரியூரை நாடுவார்கள். நாகராஜ் அடிக்கடி அந்த கிராமங்களுக்கு விவசாய மற்றும் இதர பஞ்சாயத்து சம்பந்தப்பட்ட அலுவல்களுக்காக சென்று வருவான்.
சென்ற ஒரு மாதம் முன்பு மாங்கனூரில் இருக்கும் செங்கல் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் பழனிவேலின் மகள் இந்திராணி திடீரென விசித்திரமான முறையில் இறந்தது, அடுத்த வாரத்தில் எலந்தனூரில் மூங்கில் தட்டுகள், பாக்கு மட்டை பொருட்கள் செய்து வசிக்கும் கலியமூர்த்தியின் மகள் மணிமேகலை அரளிக்காடு கிராமத்து குளத்தில் இறந்து கிடந்தது எல்லோருக்கும் மிக்க அதிர்ச்சி தரும் செய்தியாக இன்றுவரை இருக்கிறது. காவல்துறையில் கிராமத்து மக்கள் தகவல் தெரிவித்ததால் அடிக்கடி அவர்கள் வந்து எல்லோரையும் விசாரித்து வருகின்றனர். அது தொடர்பாகவும் நாகராஜ் அலைந்து வருகிறான். அவர் சார்ந்த கட்சியின் தலைவர் தனநாதன் இந்த கிராமங்களுக்கு வருகை தந்து ஆறுதல் கூறியும், விரைவில் இந்த மரணங்களுக்கு காரணமானவரைக் கண்டுபிடிக்க ஆவன செய்வதாக உறுதி கூறியும் இருக்கிறார். இதனால் நாகராஜுக்கு இன்னும் வேலை அதிகமாகியது.
இன்னும் மூன்று நாட்களில் அம்மன் கோவிலில் கார்த்திகை சிறப்பு பூஜைகளும், திருவிழாவும் நடைபெற உள்ளது. அதன் பிறகு அடுத்த நாள் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற சிவன் கோவிலில் நாற்பத்தெட்டாம் நாள் மண்டல பூஜையின் நிறைவுநாள் பணிகள் பெரிய அளவில் நடக்கவிருக்கிறது.அக்கம் பக்க கிராமத்து மக்கள், முன்பு இங்கு வசித்து பின்னர் முல்லைப்புரம் நகருக்கு சென்று வசிப்பவர்கள் என்று நிறைய கூட்டம் வரும். நாகராஜுக்கு இந்த வைபவங்களை எவ்வித குறையும் இல்லாமல் தான் முன்னின்று சிறப்பாக நடத்த வேண்டும் என்ற பதட்டம் இருந்தது.
அன்றைக்கு காலை பூஜைகளுக்கு வேண்டிய மாலைகளைத் தொடுத்து வைத்து விட்டு, காலை உணவுக்காக கடையிலிருந்து வெளி நடந்தான்
கண்ணுச்சாமி. கோயிலில் அர்ச்சனை சீட்டு தருபவரான வேலு விடம் ” தம்பி வேலு, கடைய பாத்துக்க.யாராவது பூ கேட்டா அங்க மூங்கி தட்டுல வச்சிருக்கறதில கொடுத்துட்டு காச மேசை டிராயர்ல போடு. ஆச்சி வீட்டுக்கு போய் இட்லி தின்னுட்டு வரேன்” என்று சொல்லி விட்டு சுறுசுறுப்புடன் சென்றான்.
” கண்ணூ, என்ன இன்னிக்கு இவ்ளோ சீக்கிரமே வந்துட்ட, பசி கூட்டி வந்துடுச்சோ?” தன் வீட்டு திண்ணைக்கு வந்த கண்ணுச்சாமியை அம்மணி ஆச்சி சிரிப்புடன் கேட்டாள். ” ஆச்சி அது இல்லை.கோவில் வேலை ஏதாவது இருக்கும் பாருங்க.அதான் மாலையெல்லாம் கட்டி வச்சுட்டு வந்தேன்.சாப்டுட்டு போய்ட்டேன்னா தெம்பா இருக்கும். அப்புறம் நேரம் கிடைக்காது. அதான் இப்பவே வந்துட்டேன். நல்ல பசி.இட்லிய வைங்க ஆச்சி” என்று பதிலளித்தான் கண்ணுச்சாமி. எதிர்த்திசையில் இருந்து தேவநாதன் பட்டாச்சார்யாரும், தாமோதரன் அய்யங்காரும்” இட்லி சாப்டுட்டே ஒரு நல்ல பாட்டை எடுத்து விடு, கண்ணுச்சாமி. ” என்றனர்.
“ஆச்சி கைப் பக்குவத்தில் அருமையான இட்லிங்க
மூச்சு முட்ட தின்னாலும் திகட்டாது, திகட்டாதே!
ஆவி பறக்கும் இட்லியும் ஆசையை தூண்டிவிடும்
தூவிய பொடியுடனே எண்ணெயுடன் மின்னுதுங்க
காவிபோல நிறத்துடனே தாளிச்ச கடலை சட்னிங்க
மூவிரண்டு முழுங்கி விட்டு முன் பசி அடக்கிடலாம்.
கூவிக் கூவி கூப்புட்டாலும் காதுல வாங்க மாட்டேன்.
அம்மணி ஆச்சி தரும் இட்லி அன்போடு தந்ததுங்க
நம்ம வயிறு நிறைஞ்சுதான்னு நூறு முறை கேப்பாங்க
சும்மா காசு பாக்க செய்யாமே சேவை போல செய்றாங்க
அம்மா நீங்க நல்லாயிருக்க ஆண்டவனை வேண்டிக்கறேன்.”
இலையில் அம்மணி ஆச்சி சுடச்சுட கொண்டு வந்து வைத்த இட்லி களைப் பார்த்து கண்ணுச்சாமி சந்தோஷமாகப் பாடினான். ஆச்சி சிரித்தபடியே” சரிப்பா கண்ணு, சாப்டு முன்னாடி, பொறவு பாடுடா” என்று சொன்னாள்.
இப்படித்தான் கண்ணுச்சாமியை கத்தரியூரில் அன்பாக ஆதரித்து, உணவளித்து தன் குடும்ப உறுப்பினர் போல் நடத்தி வந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் கண்ணுச்சாமி நன்றியுடன் வேண்டிய உதவிகளை தன்னால் முடிந்தவரை செய்வான்.காஞ்சனா மீது கண்ணுச்சாமிக்கு நிறைய பிரியம். தன் சொந்த மகள் போல் பாவித்து பேசுவது வழக்கம். காஞ்சனாவிற்கும் அதே போல் அவன் மீது பாசம். ‘கண்ணு அப்பா’ என்று அழைத்தே பேசுவாள். இருவரும் ஒருவரை ஒருவர் கேலி செய்து விளையாட்டாக பேசி வருவதை ஊர் மக்கள் ரசிப்பார்கள். அன்றும் அப்படித்தான்.
“பாட்டு சத்தம் பொளக்குதய்யா பத்து இட்லி முழுங்கி விட்டு காட்டெருமை குரலுடனே கண்ணு அப்பா பாடினாரே”
என்று தெருவிலிருந்து காஞ்சனா குரல் கொடுத்தாள். ” இதோ வரேன், கைய கழுவிட்டு வந்து உன்னை என்ன செய்றேன் பாரு, எம்பாட்டுக்கு எதிர் பாட்டு பாட ஆரம்பிச்சிட்டியா, வம்புக்காரி” என்று கண்ணுச்சாமி சிரிப்புடன் காஞ்சனாவை பார்த்து சொன்னான்.
“கண்ணு அப்பாவ நான் கிண்டல் பண்ணாம யார் பண்ணுவாங்க, சரி, சீக்கிரம் சாப்பிட்டு வாங்க, அப்பா கூப்டாரு.உங்க கடைக்கு ஒரு சின்ன பெஞ்சு செஞ்சிருக்காரு. உங்க பழங்கால டேபிளை சரி செஞ்சு நல்லா புதுசு மாதிரி இருக்கு இப்போ, வந்து பாத்துட்டு எடுத்துட்டு போறீங்களா கண்ணு அப்பா? ” என்று கேட்டாள் .
“இதோ இப்பவே வரேன்னு சொல்லு. நீ கோவிலுக்கு வரியா, இப்ப எங்க கிளம்பிட்டே, லீவு சொல்லிட்டு வர்லையா?” என்று கேட்டான் கண்ணுச்சாமி.
“இல்லே கண்ணு அப்பா, நாளைலேர்ந்து நாலு நாள் லீவு போட்டிருக்கேன். இன்னிக்கு அர்ஜன்ட் வேலை. முடிக்கணும். அதான் சீக்கிரமே கிளம்பிட்டேன்.நான் போய்ட்டு வரேன். பஸ் வந்திடுச்சு ” என்று வேகமாக ஓடி சென்றாள் காஞ்சனா.
“ஆச்சி நான் கிளம்பறேன். நாளைக்கு காசு சேத்து தரேன்.” என்றான். ” ” ஒங்கிட்ட காசு கேட்டேனா இப்ப? நீ எம்புள்ள மாதிரிடா, இருக்கும் போது கொடு, இல்லையா, கவலைப்படாதே, நீ வந்து சாப்புட்டு போ” என்றாள் அம்மணி ஆச்சி.
கண்ணுச்சாமி, மாரியப்பன் செய்து வைத்திருக்கும் வேலைப்பாட்டை பார்த்து மிகவும் சந்தோஷமாகி,
“உயிரிழந்த மரப்பலகை இங்கே பெஞ்சியாகி பேசுதய்யா
உயிரப்போல தன் பணியை நேசிக்கும் மாரியண்ணன்
வாய் பேச்சு கொஞ்சம்தான், அவர் கை பேசும் பல வித்தைகளை
மாய்ந்து போன மரங்கள் இப்போ பல தோற்றத்திலே மின்னுதய்யா”
என்று பாடினான். ” உன் பாட்டு சத்தம் கேட்டா எனக்கு இன்னும் சுறுசுறுப்பு அதிகமாகுது கண்ணு. இதை எடுத்துட்டு போ, மேஜைய நான் என் ஆள் மூலமா கொண்டாந்து தரச்சொல்றேன்” என்று மாரியப்பன் புன்னகையுடன் கண்ணுச்சாமியிடம் கூறினார். கண்ணுச்சாமி ” சரியண்ணே” என்று கூறி பெஞ்சை தூக்கி தலையில் வைத்து தன் கடையை நோக்கி நடந்தான்.
முல்லைப்புரம் காவல் துறை உயர் நிலை காவல் ஆய்வாளர் சேகர், உடற்கூறாய்வு மருத்துவர் தெய்வநாயகம், புலன் விசாரணை அதிகாரி ஜெகன்னாத் மூவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
“முதலில் வந்த பெண்ணோட உடம்பில் முள்ளு கிழிச்ச மார்க்ஸ் இருக்கு. உள்ளங்கையில ஏதோ ஷார்ப்பான மெடல், ஸ்கின் ஸ்பிலிட் செஞ்ச மாதிரி இருக்கு.எங்க கணிப்பில அந்த பொண்ணை பலவந்தப்படுத்தியதும், ரேப் செஞ்சதும் உறுதி. ஆனால் போராடும்போது அந்த பொண்ணு எதிராளியோட எதையோ பலங்கொண்ட மட்டும் பிடிச்சு இழுத்திருக்கா. அது கிழிச்சிருக்கு. அது தவிர ஒரு சில இடங்களில் அந்த பொண்ணோட துணியில் ஸ்லைட் சந்தனம் ப்ளஸ் காய்ச்சிய எண்ணெய் ஸ்மெல்லும் அங்கங்கே இருக்கு. அவளை அழித்தவன் இந்த பொருட்கள்ல ஏதாவது யூஸ் பண்ணுவான் என்பது எங்களோட கன்குளூஷன்.” என்றார் உடற்கூறாய்வு மருத்துவர் தெய்வநாயகம்.
இதன் பின்னர் சேகர் “தடயவியல் நிபுணர் தேவிகா அந்த முதல் பெண் இறந்து கிடந்த இடத்துக்கு பக்கத்துல ஏதோ ஒரு தாயத்துக்கயிறு போல் ஒன்றையும், மணிபர்ஸின் கிழிஞ்ச பார்ட் ஒன்றையும் எடுத்து வச்சிருக்கார். பக்கத்தில் கொஞ்ச தூரத்தில் ஒரு பைக் நிறுத்தி வச்சிருந்த அடையாளம் இருந்ததையும் போட்டோ எடுத்து வச்சதை காண்பிச்சார்.இரண்டாம் பெண் இறந்து கிடந்த குளம் பக்கத்துலயும் இதே போல ஒரு பைக் நிறுத்தப்பட்டிருந்த அடையாளம் காணப்பட்டிருக்கு.அந்தப் பெண் உடல் ஆய்வில் ஏதாவது தென்பட்டதா?” என்று கேட்டார்.
தெய்வநாயகம் சொன்னார். ” அந்தப் பெண்ணை பலங்கொண்ட மட்டும் கழுத்தில் கை வைத்து அழுத்தி தண்ணீரில் முழுக விட்டு மர்டர் செஞ்சிருக்காங்க. அந்தப் பெண் உடையின் சில பார்ட்ஸ் குளத்தங்கரையில் இருக்கும் ஈச்சை மரங்கள் பக்கத்தில இருக்குற புல்வெளிலேருந்து எடுக்கப்பட்டவை. எல்லாத்திலயும் அது போன்ற சந்தனம் ஸ்மெல் அதனுடன் ஏதோ ஒரு வித்யாசமான எண்ணெய் போல ஸ்மெல்லும் இருந்தது.அவள் கையிலும் தோல் கிழிஞ்ச அடையாளம் இருக்கு .அவளையும் பலாத்காரம் செஞ்சிருக்கான்கறது நிச்சயம்.”
“என் கணிப்பில யாரோ அந்த இரு பெண்களுக்கும் அறிமுகமான நபர்தான் இதை செஞ்சிருக்கணும்.அவன் இந்த கிராமங்களிலேயே வசிப்பவனாகவோ அல்லது வேறு இடத்திலேர்ந்து தினமும் இந்த கிராமங்களுக்கு வந்து போகும் நபராகவோ இருப்பான்னு நினைக்கிறேன்.” ஜெகன்னாத் கூறினார்.மேலும் ” இதை இப்படியே விடக்கூடாது. ஆனால் அதேசமயம் அங்குள்ள யாருக்கும் எந்த சந்தேகமும் வராதபடி டீல் செய்வோம். எதுவுமே நமக்கு தெரியாத வகையில் நடந்துப்போம். யாராக இருந்தாலும் இதனால் தன்னம்பிக்கையுடன் ஏதாவது இன்னொரு தவறு செய்ய முனைவான். அப்போது பிடித்து விடலாம் ” என்று சொன்னார்.
சேகர் அதற்கு சம்மதித்தார். ” தலைவர் தனபாலன் வேற ப்ரஷர் கொடுக்கறாரு.நாளைக்கு மறுபடியும் கத்தரியூர் போய் இன்னும் சிலரை விசாரிக்கலாம்” என்று கூற ஜெகன்னாத்” ஓ.கே.நானும் வரேன்” என்றார்.
“கலா, நாளைக்கு அம்மன் கோவில் கரகாட்டம், அம்மன் ஊரை வலம் வரும் வைபவம் எல்லாம் நடக்கும். நான் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு கிளம்பிடுவேன். தலைவர் வரச்சொல்லி இருக்காரு ஏதோ முக்கியமான விஷயமா. அதனால நீ அங்கேயே இருந்து எல்லாத்தையும் சரியா பாத்துக்க. வேலாயுதத்தை இங்கயே இருக்கச் சொல்றேன். அந்த காஞ்சனா பொண்ணையும் உதவிக்கு கூப்பிடு.” என்று நாகராஜ் கலாவதியிடம் கூறினான். ” சரிங்க, சாயந்திரம் நம்ப பேருக்கு அர்ச்சனை செய்யும்போது இருக்கப் பாருங்க. நம்மளுதுதான் முதல் அர்ச்சனை” என்றாள் கலாவதி.” ஆமாம், அப்புறமாத்தான் கிளம்புவேன்” என்றான் நாகராஜ்.
அப்போது வேலாயுதம் உள்ளே வந்து,” ஐயா, முல்லைப்புரத்திலிருந்து சீனுப்பிள்ளை வந்திருக்கார். நீங்க வரச்சொன்னீங்களாம். ” என்றான். ” யாரு, நம்ப தங்கநகை வேலைகள் செய்யுற சீனுப்பிள்ளையா, அவரை எதுக்கு வரச்சொன்னீங்க? ஏதாவது எங்களுக்கு புதுசா நகை செஞ்சு தர ப்ளான் வச்சிருக்கீங்களா?” என்று புன்னகையுடன் கலாவதி கேட்க, “நீ ஒண்ணு, இப்பத்தானே நாலு மாசம் முன்னாடி சங்கிலி, வளை எல்லாம் செஞ்சு
வாங்கினீங்க,அது பத்தாதா? நான் நம்ப அம்மனுக்கு ஏதாவதும் சின்ன சிவலிங்கத்திற்கு தங்க முலாம் பூசிய கவசமும் செஞ்சு தரலாமான்னு யோசனை பண்ணி அவரை வரச்சொல்லிருந்தேன். அதைத்தவிர எலந்தனூர் முருகையன் அங்க இருக்குற பிள்ளையார் கோவிலுக்கும் ஏதோ செய்யணும்னான். சீனுப்பிள்ளைய நேரா அழைச்சிட்டு போய் காமிக்கலாம்னு முடிவு பண்ணேன். சரி, வேலு நீ அவரை போஸ்ட் ஆஃபீஸ் கிட்ட இருக்க சொல்லு. நான் வந்துடறேன்.” என்றான் நாகராஜ். பிறகு ஐந்து நிமிடங்களில் யாருடனோ பேசிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் கிளம்பி விட்டான்.
அன்று மாலை காஞ்சனா சீக்கிரமே வந்துவிட, அவளின் தோழிகள் மாங்கனூரில் இருந்து செண்பகம்,அரளிக்காடில் இருந்து பாக்கியம் இருவரும் அவள் வீட்டுக்கு வந்தனர். மூவரும் அம்மன் கோவிலுக்கு சென்றனர். அதனருகே இருந்த கண்ணுச்சாமி கடைக்கு சென்று அவனை வம்பிக்கிழுத்தனர். ” கண்ணு அப்பா, எல்லார பத்தியும் பாடறீங்களே, என்னைப் பத்தி பாட மாட்டீங்களா?” என்று காஞ்சனா கேட்டாள்.
“அதெல்லாம் அவரால் முடியாதுடி, அவரு இப்படி பூ, பறவை, சாப்பாடு, வயசானவங்க, இதெல்லாம் பத்திதான் பாடுவாரு. ” என்றாள் செண்பகம். ” அவரை விடுங்கடி, நீங்க சொல்றத கேட்டு அவரு பாடறதயே நிறுத்திடப்போறாரு.” என்றாள் பாக்கியம்.
கண்ணுச்சாமி உடனே ” உங்களுக்கு வேலையே இல்லை. நீங்க பேசறதை யாரும் கேக்க மாட்டாங்க என்னைத் தவிர. எனக்கு நல்லா தெரியும். ஒன்னப்பத்தி பாடணும், அவ்வளவுதானே, இது ஒரு பெரிய விஷயமா, பொழுது போகலன்னு இங்கே வந்து வம்பு வளக்கறீங்க, இல்லையா?” என்று சிரித்தபடியே கேட்டுவிட்டு
“சுட்டிப்பொண்ணு காஞ்சனா சும்மாவே இருக்க மாட்டாள்
வெட்டி வம்பு வளத்திடுவா வேகமாவே எங்கிட்ட
கட்டித் தங்கம் அவ மனசு, கலைமகளின் அருள் கொண்டவள்
கெட்டிக்காரி கேட்டதால இந்த பாட்டு பாடினேன் நான்.
ஒருநாள் அவள பாக்கலேன்னா உள்மனசில் சங்கடமே
பொறுமையுள்ள பொண்ணவள்தான், பொறாமையே இல்லாதவ
அருமையான அவளச்சுத்தி அன்பான தோழிகள் உண்டு.
உரிமையோட சொல்லிடுவேன் அவ எனக்கு மகள் என்று.”
கண்ணுச்சாமி பாடி முடித்ததும் அவன் கைகளைப் பிடித்து முத்தமிட்டு சிறிய கண்ணீருடன் அவனைப் பார்த்து ” அருமை கண்ணு அப்பா, எக்ஸலன்ட், எப்படி இது உங்களால் முடியுது? என்னை ரொம்பவே புகழ்ந்துட்டீங்க. எனக்கு அழுகைதான் வருது” என்று காஞ்சனா தழுதழுக்க கூறினாள். செண்பகமும், பாக்கியமும்” கண்ணு அப்பா, எக்கச்சக்க திறமை உங்ககிட்ட, கடவுள் கொடுத்த வரம் இதெல்லாம்.இல்லாட்டினா இப்படி ஒரு செகண்ட்ல பாட முடியுமா? நீங்க நல்லா இருக்க அந்த அம்மனை வேண்டிக்கறோம்.” என்றனர்.
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லேம்மா, ஏதோ அந்த நேரத்தில் தோணறதை பாடிடுவேன். பழக்கமா போயிடுச்சு ” என்ற கண்ணுச்சாமி தொடர்ந்து ” நாளைக்கு கரகாட்டம் ஒயிலாட்டம் எல்லாம் இருக்கு, அம்மனுக்கு சிறப்பு பூஜை அதெல்லாம் பாக்க வந்துடுவீங்க இல்லையா?” என்று கேட்டான். ” நாங்க வராம இருப்போமா, சாயங்காலம் நான் இங்கே வந்து தரிசனம் முடிச்சிட்டு நேரா மாங்கனூருக்கு போய் செண்பகம் வீட்டுல நாங்க எல்லாரும் சேர்ந்து அம்மனுக்காக ஒரு பெரிய மாலை தயார் செய்து எடுத்து வருவோம். அம்மனுக்காக பாயசமும் தயார் செஞ்சு எடுத்து வருவோம். குருக்கள் கிட்ட சொல்லிட்டோம். ” என்றாள் காஞ்சனா.
“சரி, நானும் வந்து உங்களுக்கு உதவி செய்றேன், அதையெல்லாம் எடுத்து வர” என்றான் கண்ணுச்சாமி.
மறுநாள் அதிகாலையில் கண்ணுச்சாமி எழுந்து அவனுடைய வேலைகளை சுறுசுறுப்புடன் செய்து கொண்டிருந்தபோது, கணேசன் குருக்கள் வேகமாக வந்தவர், ” கண்ணுச்சாமி, நம்ப தியாகி சிவநேசன் அய்யாவுக்கு நேத்து நைட்லேர்ந்து உடம்பு சரியில்லைப்பா. நல்ல ஜுரமாவும் இருக்கு. மாமி கஷாயம் போட்டு கொடுத்தா. நான் கோவில்ல வேலை இருக்கறதால வந்துட்டேன். நீ போய் பாத்துட்டு ஒரு பாட்டு பாடு. அதைக்கேட்டு கொஞ்சம் நிம்மதியா தூங்குவார். பொழுது நன்னா விடிஞ்சப்புறம் பக்கத்தில் இருக்கற தாழைக்குடிலேர்ந்து டாக்டரை கூட்டிண்டு வந்து காமிக்கலாம்.” என்றார் பரபரப்புடன்.
“ஐயோ, அப்படியா சாமி, இப்பவே போய் பாக்கறேன்.நைட்டே கூப்டிருக்கலாமே என்னை?” என்று அவரைக் கேட்டு விட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக தியாகி வீட்டை நோக்கி விரைந்தான்.
தியாகி சிவநேசன் மிகவும் பலவீனமான குரலில் ” வாடா, கண்ணு, இதான் என்னோட கடைசிக்கட்டம் போல இருக்கு. நான் போற வரைக்கும் பக்கத்தில இருடா. ஏதாவது பாடு. நாக்கு வரண்ட மாதிரி இருக்கு. அங்கே இருக்கற தண்ணிய எடுத்து கொடுப்பா.” என்று கண்ணுச்சாமியிடம் சொன்னார்.
“இதோ தரேன்யா. உங்களுக்கு ஒண்ணும் ஆகாதுங்க. இன்னும் பத்து வருஷம் நல்லாவே இருப்பீங்க.” என்று தண்ணீர் குவளையில் எடுத்து மெதுவாக அவரை சாய்ந்து இருக்குமாறு உட்கார வைத்து அவர் வாயில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றினான்.
“சோறு, தண்ணி காணாமல், சொந்த பந்தம் சேராமல்
வேறு நாட்டின் ஆதிக்கத்தை வீரத்தோடு போராடி
சுதந்திரத்தை வாங்கிடவே, சுயநலமே காட்டாமல்
நிதந்தோறும் உழைச்சீங்கய்யா, நீங்கதான் என் கடவுள்.
கள்ளமில்லா மனசு கொண்டு காலமெல்லாம் வாழ்ந்தவரே, என்
உள்ளமெல்லாம் சந்தோஷம், உங்களுக்கு துணையா இருக்க.
எனக்கு கிடைக்கும் துணிச்சல் எல்லாம் உங்க பேச்சைக் கேட்டுதானே,
தனக்கு என எண்ணாத தியாகி அய்யா, தீர்க்கமா வாழுவீரே!”
மெல்லிய புன்னகையுடன் சிவநேசன் கண்ணுச்சாமியின் பாட்டை ரசித்துக் கொண்டிருந்தார்.
காலை பத்து மணியளவில் தாழைக்குடியிலிருந்து வேலாயுதம் டாக்டரை அழைத்து வந்து, சிவநேசனைப் பரிசோதித்து, ‘ இது கடுமையான ஜுரம்தான் வேறு ஒன்றும் பயப்படுவதற்கில்லை’ என்று கூறி ஒரு ஊசியைப் போட்டுவிட்டு சில மாத்திரைகளை வாங்கித் தரச் சொல்லி எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார். தான் முல்லைப் புரம் போய் வாங்கி வருவதாக வேலாயுதம் உறுதியளித்தான். பிறகு நீலாயுதாட்சி கொண்டு வந்த கஞ்சியை சிவநேசன் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு தூங்க ஆரம்பித்தவுடன் கண்ணுச்சாமி கடைக்கு திரும்பினான்.
அன்று மதியம் முல்லைப்புரம் சென்ற வேலாயுதம் மருத்துவர் எழுதிய மாத்திரைகளை வாங்கியபின், அடுத்த தெருவிற்கு சென்று யாருக்கோ அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினான். பிறகு அங்கிருந்த ஒரு பெட்டிக்கடை அருகே நின்றிருந்தான். அப்போது ஒருவர் சுமாராக ஐம்பது வயது போல் இருந்தவர், வேலாயுதம் அருகில் வந்து “இந்தாங்க சார், இப்போதைக்கு இந்த ஒரு சிறிய குப்பியை வச்சுக்கோங்க.அடுத்த மாசம் வேற ஏற்பாடு பண்றேன்” என்றார். ” நல்லா சேண்டல் உட் ஸ்மெல்
வருமுல்ல” என்று கேட்டான் வேலாயுதம். ” “நிச்சயமா சார், ஒரிஜினல் இது.” என்றார் வந்தவர். ” ஓ.கே.” என்று சொல்லி விட்டு அவரிடம் ஒரு கவரைக் கொடுத்து விட்டு, அந்த சிறிய அலுமினியம் குப்பியை பத்திரமாக தன் பையில் வைத்துக் கொண்டு, மனதில் மகிழ்ச்சி பொங்க கத்தரியூர் திசையில் வண்டியை செலுத்தினான் வேலாயுதம்.
– தொடரும்…