கண்டிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 1, 2025
பார்வையிட்டோர்: 3,159 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“எவ்வளவு நேரமாகிறது! கையில் சர்க்கரைக் கார் டும் பணமுமாய் நிற்கிறேனே ! இந்த வள்ளி அதை வாங்கிண்டு கடைக்குப் போகவில்லையே! நன்னா யிருக்கு !…… அடி வள்ளி !” என்று உரத்துக் கூப்பிட் டாள் ஜானகி. அவள் குரலில் கோபம் தொனித்தது. வரவர வள்ளி வெகு அலக்ஷ்யமாய் வேலை செய்கிறாள்; சொன்னதைக் கேட்பதில்லை என்கிற கோபம் அது. 

“இதோ வந்துட்டேம்மா என்று பதில் சொன்ன வண்ணம் வள்ளி வந்து எதிரில் நின்றதும், “நன்னாருக் குடி, உன்னை எத்தனை தரம் கூப்பிடறது? ஒய்யாரமா வரயே ! ஒரு நாழியாப் பணத்தை வச்சிண்டு நிக்கறேன் ; மெதுவா வந்து என்னம்மா எங்கிறயே! காலையில் சர்க் கரை வாங்காட்டா அப்புறம் தரானடி அங்கே? மத்தி யானக் காபிக்கு என்னத்தைப் போடறதாம்? நன்னாருக்கு, போ!” என்றான். 

“நான் சும்மா இருந்தேனாம்மா? ஐயா ரூமைப் பெருக் கச் சொன்னாரு. பெருக்கினேன்.” 

“அதுக்குத்தானா இப்போ அவசரம்? நாள் முழுக் கப் பெருக்கப்படாதோ? நான் சொன்னா உனக்குக் காதிலே ஏறுகிறதில்ல. காலை வேளையை விட்டாக் கடைக் காரன் சர்க்கரை தரமாட்டான். போடி சுருக்க, கடைக்கு!” 

“ஏதோ நான் சும்மாக் குந்திக்கிட்டு இருக்கிற மாதிரி தான் இந்தம்மாளுக்கு !” என்று முணுமுணுத்துக் கொண்டே சென்றாள் வள்ளி. 

அந்த வார்த்தைகள் காதில் விழுந்த ஜானகிக்குக் கோபம் தாங்காதுதான் வந்தது. இந்த வீட்டில் அவ ளால் குடித்தனம் செய்வது நாளுக்கு நாள் பெரும்பாடாக இருப்பதாகத் தோன்றிற்று. ஆட்கள் யாரும் அவ ளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதில்லை. அதுவும் வள்ளி வெகு மோசம். அவளுக்கு வெகுநாள் பழகிவிட்ட தென்பு. அம்மா என்ன பண்ணிவிடுவாங்க என்கிற தைரியம். எதற்கும் பதில் பேசுகிறாள். வேலையையும் சரியாகச் செய் கிறதில்லை. இப்பொழுதோ தொட்டதற்கெல்லாம் ‘ரேஷன்’. நித்தியம் கடைக்குப் போகவேண்டியிருக்கு. வள்ளி பழகினவளாயிற்றே, தெரியுமே என்று பார்த்தால், இவள் இந்தப் பாடு படுத்தறாளே! – என்று தனக்குத் தானே கோபமாய் எண்ணமிட்டுக்கொண்டு கூடத்து விசு பலகையில் வந்து உட்கார்ந்தாள் ஜானகி. 

“பொழுது விடிந்தா ‘ஆபீஸ்’ வேலை செய்யவிடாமல் என்ன சத்தம் ?” என்று கேட்டவண்ணம் அவள் கணவர் ராமசந்திரையர் அந்தச் சமயத்திற்குச் சரியாய் அங்கே வந்துசேர்ந்தார். 

“சத்தமா! இப்படி ஆட்கள் சொன்னபடி செய் யாட்டா, சத்தம் போடாமல் என்ன செய்யறதாம்?” என்றாள் ஜானகி. 

”அவர்களை வேலை வாங்கும் விதம் உனக்குத் தெரிய வில்லை. அதுதான் விஷயம்” என்றார் அவள் கணவர். நிதானமாய். 

“போகிறது! இவ்வளவு நாள் குடித்தனம் செய்த வளுக்குப் புத்திசாலித்தனமாய்க் கண்டுபிடித்துப் பட் டம் கொடுத்தேளே! அதுவே போதும். எப்படித்தான் ஏவணும்? அதையாவது சொல்லுங்கோ, கத்துக்கொண்டு பார்க்கறேன்!” என்றாள் ஜானகி ஆத்திரம் பொங்க. 

ஆட்களை வைத்து நிர்வகிக்கச் சாமர்த்தியமில்லை என்று தன்னைக் கணவர் சுட்டிக் காண்பிப்பதாக அவளுக்கு ஆத்திரம். 

“கோவிச்சுக்காதே! ஆட்களை ஏவுவதில் எவ்வளவோ இருக்கிறது. இப்பொழுது நான் சொன்னால் அவர்கள் உடனே செய்யவில்லையா?” 

“நீங்க எஜமான், சம்பளம் கொடுக்கறேள்; பயம் இருக்கு!” 

“நீ மட்டும் எஜமானி இல்லையா? அந்தச் சம்பளத்தை நீ கொடுக்கல்லையா? தனியா நான்தான் கொடுக்கறேனா?” 

“பின்னே என்னதான் விசேஷம் சொல்லுங்களேன்!” 

“ஏவறத்திலேதான் வித்தியாசம். வழவழன்னு சந் தேகமாகச் சொல்லாமே, கண்டிப்பாய் ஒரே வார்த்தையில் ஏவணும். நமக்கே அந்தக் காரியம் நடக்க வேண்டியதில் நிச்சயமில்லை போல் உத்தரவிட்டால், அவாளும் கண்டு கொள்கிறா. கால தாமதம் உண்டானதும் பண்றா ! இன்னும் ஒண்ணு; அவா காது கேட்கவே எப்பொழுதும் ‘சொன்னாச் செய்யறதில்லே’ன்னு நாமும் சொல்லிண் டிருந்தா அவர்களுக்கும் தைரியம் வந்துவிடுகிறது. ‘அம்மாதான் செய்யல்லேங்கிறாங்களே. முழுவதுந்தான் செய்யாமெ இருப்போமே. என்ன தலை போயிடும்?’ இன்னு ஆரம்பிக்கறா. முன் போலவா இப்போ ஆட்கள் எஜமானுக்குப் பயப்பட?” 

“அப்படி எப்பவெல்லாம் அவா காது கேட்கச் சொன்னேனாம்?” 

“ஏன் நீ இப்போ எங்கிட்டே சொல்றயே? அதை வள்ளி கேட்டுண்டுதானே போறா?” 

“ஆனா நான் வாயே திறக்கப்படாது. ஆட்கள் அப் படி இப்படிப் பண்றான்னு உங்க கிட்டக்கூடச் சொல்லப் படாது. சரிதான், உங்களுக்கென்ன ? சொல்லுவேள். வாசல் ரூமிலே உட்கார்ந்து ‘ஆபீஸ்’ பண்றேள்; கோர்ட் டுக்குப் போறேள். வீட்டைப் பத்தி என்ன விசாரம்? குடித்தனம் எப்படியோ நடந்துவிட்டுப் போறது. பாடு படறதெல்லாம் பட்டாச் சொல்லமாட்டேளா?” என்று ஜானகி சொல்லும்பொழுது அவள் தொண்டை தழு தழுத்துக் கண்களில் நீர் ததும்பிற்று. 

இனிப் பேச்சை நிறுத்திக்கொள்வதுதான் சரி என் பதை உணர்ந்த ராமசந்திரையர், தமக்குக் ‘கோர்ட்’ டுக்கு நாழிகையாகிவிட்டது என்கிற வியா ஜத்தில் ஸ்நானம் செய்து சாப்பிடச் சென்றார். 

ஜானகியின் மனம் நிம்மதியை இழந்தது. அவள் ஒருத்தியாய் அந்த வீட்டில் பாடு படும்பொழுது இந்த விசுவாசமில்லாத சொல்லா? அவளுக்குத் தன்னிடமே அங்கலாய்ப்புத் தாங்கவில்லை. ‘கண்டிப்பு இல்லையாமே, கண்டிப்பு ! எதற்கெல்லாம், எப்படியெல்லாம் கண்டிப் பாய் நடந்துகொள்கிறதாம்?’ என்று அவள் மனம் மத்தியான்னம் சாப்பாடான பிறகு படுத்திருக்கும் பொழு தெல்லாம் எண்ணமிட்டுக்கொண் டிருந்தது. வள்ளி வந்து மெதுவாய் ‘அம்மா’ என்று கூப்பிட்டதுகூட அவள் காதில் விழவில்லை. 

மறுபடியும் வள்ளி ‘அம்மா’ என்று அழைத்தாள். “என்னடி வேணும்?” என்று எழுந்து உட்கார்ந்தாள் ஜானகி. வள்ளி வழக்கம்போல் இல்லாமல் வெகு வணக்க மாக அறை வாசற்படியண்டை நின்றிருந்தாள். ஜானகி யிடம் அவளுக்கு ஏதோ ஆகவேண்டும் என்பதை அது நன்கு தெரிவித்தது. 

”அம்மா, சாயங்கால வண்டிக்கு நான் கொஞ்சம் ஊருக்குப் போய்விட்டு வாரேன்” என்றாள் வள்ளி. 

“என்னடி திடீர்னு இப்போ ஊருக்கு?” 

“என் மவ பொன்னி உண்டாயிருக்குதாம். ஊரி லிருந்து ஆள் வந்திருக்கு. என்னை வரச் சொல்லிச்சாம்.”

“பொன்னி உண்டாயிருந்தா அதுக்கு நீ போக ணுமா? எத்தனை மாசம்?” 

“ஒன்பது மாசம்.” 

“நீ இத்தனை நாளாச் சொல்லல்லையே ?” 

“எனக்கே தெரியாதே, அம்மா ! இப்பத்தானே எங்க மச்சான் வந்து சொல்லுது? எங்கேயோ பாத்துட்டு வரப்போன இடத்திலே தெரிஞ்சுதாம். உடம்பு நல்லாவே இல்லையாம்; காலெல்லாம் வீங்கிக் கிடக்கு தாம்.” 

“அது சரிதாண்டி! தீபாவளிப் பண்டிகைக்கு ஒரு வாரமில்லையே. நம்ம ஸரஸு அவ ஆம்படையான் எல்லோரும் வராங்க. பட்சணம் பாடி எல்லாம் செய்யணும். இடிக்கவும் புடைக்கவும் நிறையக் காரியம் இருக்கு. நீ என்னமாப் போறது! தீபாவளி ஆகட்டும், பிறகு போகலாம்!” 

“இல்லேம்மா!…… போய்ப் பார்த்து, இங்கேயே இ டாந்துடறேன். அவங்க சொல்றதைக் கேட்டாப் பட்டிக் காட்டிலே வச்சுக்கப்படாதுன்னு தோணுது. ஆஸ்பத்தி ரியா இன்னொண்ணா, என்ன இருக்கு அங்கே ?” என்றாள் வள்ளி கவலையுடன். 

ஜானகிக்கும் இதைக் கேட்க ஒரு மாதிரிதான் இருந்தது. இருந்தாலும் வள்ளி இப்பொழுது போனால் தீபாவளிக்குள் எவ்விதம் திரும்புவாள்? அவள் பெண் பொன்னியின் புக்ககம் ஏதோ நாட்டுப்புறம். அதற்குப் ‘பஸ்’ஸில் அரை நாள்; அப்புறம், வள்ளி வார்த்தையில், ‘ஒன்பது கல் நடந்தோ கட்டை வண்டி கிடைத்தால் அதிலோ தான்’ போக வேண்டும். போவதற்கு ஒரு நாள் முழுசாகப் பிடிக் கும். போக ஒரு நாள், வர ஒரு நாள். வண்டியோ ‘பஸ்’ஸோ சரியாகக் கிடைத்தால்தான் அதுவும். இல்லா விட்டால் இன்னும் ஒரு நாள் கூட. அப்புறம் அங்கிருக்க ஒன்றிரண்டு நாள். ஏது, அவள் சொன்னது சொன்னபடி வந்தால்கூடத் தீபாவளிக்கு முதல் நாள் தான் வர முடியும். ஆட்கள் போனால் சொன்ன நாளைக்கு எங்கேயாவது வரு கிறதுண்டா? ஒரு நாளும் இல்லை. உள்ளுக்குள் சமையலாளும் புதிது. வள்ளி இல்லாமல் என்ன காரியம் நடக்கும்? அதெல்லாம் வள்ளி இப்பொழுது போவது முடியாது. என்று பட்டது ஜானகிக்கு. 

“ஒன்பது மாசமென்று நிச்சயமாகத் தெரியுமாடி? அப்படி இருந்தா இத்தனை நாள் உம் மாப்பிள்ளை, பெண் யாருமேயா கடிதாசு போடாமே இருப்பா? எனக்குத் தோணலே?” என்றாள் சந்தேகத்துடன். 

“ஏன் அவுங்க போடல்லையோ தெரியல்லே ! அல்லாத்துக்கும் போனாத்தான் தெரியும்” என்றாள் வள்ளி. அவள் போகவேண்டுமென்பதில் நிச்சயமாக இருப்ப தாகப் பட்டது ஜானகிக்கு. ஆனாலும் காலையில் அவள் கணவர் சொன்னதை நினைத்துக்கொண்டாள். கண்டிப்பு வேண்டும் என்பதுதானே அது ? இப்பொழுது அதற்கு அவசியம் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றிற்று அவளுக்கு. ‘அது, இது’ என்று வார்த்தைகளை வளர்க்காமல், “அதெல்லாம் முடியாது! தீபாவளிப் பண்டிகை முடிந்துதான் போகவேண்டும்” என்று ஒரே வார்த்தையில் திடமாகச் சொன்னாள். அதற்காக வள்ளி இவ்வளவு நாள் வேலை பார்த்த வீட்டைவிட்டு நின்றுவிடவா போகிறாள்? அப்படி நிற்பதாக இருந்தாலும் பாதகமில்லை என்றுதான் திடம் செய்துகொண்டாள். 

“உன் மாப்பிள்ளைக்கு வேணாக் கடிதாசி போடு. பெண்டாட்டியைக் கூட்டிண்டு வரட்டும். உன் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்குங்கூடத் தீபாவளி இங்கேயே நடக்கட்டும்” என்றாள். அவள் குரலில் சந்தேகம் சிறிதும் தொனிக்கவில்லை. பிறகு அங்கே தயங்கி நின்ற வள்ளியை அவள் நிமிர்ந்து பார்க்கவும் இல்லை. 

வள்ளிக்கும் அம்மா திடமாக இருக்கிறாள் என்பது தெரிந்தது. கடிதாசு போட்டுப் பார்ப்போமென்று மெதுவாக அரைமனத்துடன் அவ்விடம் விட்டு நகர்ந்தாள். 

பிறகு தீபாவளியன்று வரையும் வள்ளி ஒன்றும் சொல்லிக்கொண்டு வரவில்லை. ஜானகிக்கும் தான் கண்டிப்பாக இருந்து காரியத்தைச் சாதித்துக் கொண்டதாக ஒரு திருப்தி. 

மாப்பிள்ளை, பெண் ஸரஸு, அவள் குழந்தைகள் எல்லோருமாக வீடு ‘ஜே ஜே’ என்று நிறைந்துவிட்டது. வள்ளிக்குக் காரியம் ஓய்வு ஒழிச்சலே இல்லை. ஜானகியும் வள்ளிக்கு எப்பொழுதையும்விட நல்லதாய் ஜரிகை போட்ட நூல் சேலை வாங்கி வைத்தாள். அவளைப் பெண்ணிடம் அனுப்பாததற்கு அதையாவது செய்ய வேண்டுமென்று தோன்றியது. 

தீபாவளியன்று காலை, புடைவையை வெற்றிலை பாக்கோடு வள்ளி கையில் கொடுத்து, “தலை முழுகிக் கட்டிக் கொண்டு வாடி!” என்றாள் ஜானகி. 

‘ஜிலு ஜிலு’ வென்று ஜரிகை மின்னும் அந்தச் சேலையை வாங்கிக்கொள்ளும்பொழுது வள்ளியின் பற்கள் எல்லாம் சந்தோஷத்தால் வெளிவரத்தான் வந்தன. பெண்ணைப் பற்றின கவலையெல்லாம் எங்கேயோ சென்றது. ‘புள்ளைத்தாச்சி’ப் பெண்ணுக்குப் புடைவையைக் கட்டிப் பார்க்க வேணுமென்றுகூட நினைத்தாள். பண்டிகைக்கு வீடெல்லாம் மெழுகியிருந்தாள். சடுதியில் செம்மண்ணிட்டுக் கோலம் போட்டுவிட்டுத் தலை முழுகிப் புடைவையை உடுத்துவர எண்ணிப் பரக்கப் பரக்க வேலை களை முடித்துக்கொண் டிருந்தாள். 

அப்பொழுதுதான் அவள் பெண்ணும் மருமகனும் வீட்டண்டை வந்திருப்பதாக அவளுக்குச் செய்தி வந்தது. அவள் வீட்டுக்குப் பக்கத்துவீட்டுப் பையன் ஓடோடியும் வந்து சொன்னான். இந்தச் சங்கதியை ஜானகியிடம் சொல்லிப் பறந்து வருவதாக அவள் கிளம்பினபொழுது, “பாத்தியா, நீ போகாமே உம் மருமவனே இட்டாந் துட்டான்!” என்று வள்ளிக்கு எடுத்துக் காண்பித்தாள் ஜானகி. அவளுக்குத் தன்னிடமே உண்டான திருப்திக்கு அளவே இல்லை. வீட்டு வேலையைத் திண்டாட விட்டு விட்டு வள்ளி போகவில்லை ; அவள் பெண்ணும் வந்து விட்டாள்; இனி வள்ளி ஊருக்குப் போகவே வேண் டாம்; எல்லாம் அவள் கண்டிப்பாய் இருந்ததால்தான்!- இவ்விதம் ஜானகி சந்தோஷப்பட்டுக்கொண்டாள். 

வீடு சென்ற வள்ளி திரும்பி வந்து, “அம்மா, கொஞ்சம் சுடச்சுடக் காபி கொடுக்கச் சொல்லுங்க. பொன்னி ரொம்பக் களைத்து உசிர் போறாப்பிலே வந்திருக்குது. வண்டி கிடைக்காமே நடந்து வந்திருக்காங்க. வழியெல் லாம் மழை வேறேயாம். ஐயர் ஊட்டுக் காப்பின்னா அவ ளுக்கு உசிரு ” என்றாள். 

“சரி, காபியைக் கொடுத்துவிட்டுச் சுருக்க வந்து சேரு. காரியம் அரைகுறையாக் கிடக்கிறது” என்றாள் ஜானகி. 

“அம்மா ! யாரையாவது சத்தேக் குறையும் பார்த்துக்கச் சொல்லுங்க. ஆஸ்பத்திரி வரையும் பொன்னியெ இட்டுப் போயிட்டு ஓடியாரேன்” என்றாள் வள்ளி. 

“என்னடி வரத்துக்குள்ளே ஆஸ்பத்திரி ? வந்த சிரமந்தான் தீரட்டுமே! சாயங்காலம் போகலாம்” என் ஜானகி சொன்னதற்கு, “இப்பொழுதேதான் போகட்டுமே!’ என்றார் அவள் கணவர் குறுக்கிட்டு. 

“நாளும் கிழமையுமாப் பாதிக் கோலம் போட் டிருக்கு; பத்துத் தேச்சபாடில்லே ; அப்படிப் போனால், யார் வந்து குறையும் செய்வா? அதைப் பண்ணிட்டுப் போகட்டும். நீங்க வந்து குறுக்கிடாதிங்கோ!” என்று அதட்டினாள் ஜானகி. தீர்மானம் வந்திருந்தது இப் பொழுது அவளுக்கு. ஐயாவுக்குக்கூட அம்மா பதில் சொல்லிட்டாங்களே! அப்புறம் வள்ளி என்ன செய்வாள்? முழு வேலையையும் செய்துவிட்டுத்தான் போனாள். 

மறுநாள் அவள் பெண் ஆஸ்பத்திரியில் பிரஸவிக்க முடியாமல் சிரமப்பட்டு, ஓர் ஆண் மகனைப் பெற்றுப் போட்டுவீட்டு உயிர்நீத்து விட்டதாகச் செய்தி வந்தது. 

“மூட ஜனங்கள்! ஹும்! முதலிலேயே கவனிக்கத் தெரிகிறதல்லை ” என்றார் ராமசந்திரையர். 

இந்த வார்த்தை ஜானகியின் மனத்தில் சுருக்கென்று பட்டது. ‘இவ்வளவு நாள் குடித்தனம் பண்ணிப் பழகின நமக்குப் புது வேலைக்காரி வைத்துக் கொண்டு சமாளிக்க முடிந்திராதா? வள்ளியை அவள் போகிறேனென்று கேட்டபொழுதே போக விடாமல் ஏன் தடுத்தோம்? வள்ளி பொல்லாதவ ளாயிற்றே. தன்னைக் குற்றம் சொல்லித் திட்டுவாளே’ என்று அவள் மனம் பயந்தது. 

ஆனால், வள்ளி பதினைந்து நாளும் கழித்து எல்லாம் முடிந்து வந்தபொழுது சும்மா அழுதுகொண்டு நின்றாளே ஒழிய, யாரையும் ஒன்றுமே சொல்லவில்லை. பெண்ணை இழந்த பெருந்துக்கம் அவளை மௌனியாக்கி விட்டது. 

“ஏண்டி, அவ்வளவு மோசமாகவாடி இருந்தது பொன்னிக்கு உடம்பு? வந்து ஒரு நாள் இருக்கல்லே; போயிட்டாளேடி?” என்று ஜானகி அங்கலாய்த்த. பொழுது, “மோசமாத்தாம்மா இருந்திருக்கணும்! அதோடு அந்தப் பாவி வேறே ‘பஸ்’ஸு வரைக்கும் நடத்தி இட்டாந்துட்டானே!” என்றாள் தீனமாய். 

“ஏண்டி அப்படிச் செய்தான்? அவனுக்குத் தெரியல்லையா? 

“ஆம்புள்ளைக்கு என்னாம்மா தெரியும், பொம்புள்ளேயோடே பாதை? வண்டி கிடைக்கலலே; தான் நடந்து வராப்போலே நினைச்சுட்டான். எம்மேலேதான் பிசகு. நான் வரச்சொல்லிக் கடுதாசி போட்டிருக்கப்படாது. பண்டிகெ கழிஞ்சு போகலாம்னு இருந்திருக்கணும். இனிமே என்ன! நம் பாவம், வேணும்னு செஞ்சானா? அதில்லே! அவனுந்தான் அடிச்சிக்கிறான். அல்லாம் விதி. ஆனா ஒண்ணு. ஐயா ஊட்டுக் காப்பின்னா அவளுக்கு உசிர். அதை லோட்டா நிறைய வாங்கிக் குடிச்சா. அம்மா புடைவையின்னாலும் கட்டிக்க ரொம்ப ரொம்ப ஆசை. ஒரு விசையும் தீபாவளிப் புடைவையை என்னெக் கட்டிக்க விடமாட்டா. தான் கட்டிப் பழசாக்கினப் புறந்தான் எங்கிட்டேக் கொடுப்பா. அத்தனை ஆசை அவளுக்கு அதிலே! அம்மா கோவிச்சுக்குவாங்களேன்னா, கேக்க மாட்டா. பூவும் மஞ்சளும் நெத்தியிலே குங்குமமுமா, இப்பவும் நீங்க கொடுத்த தீபாவளிப் புடைவையை ஆசை தீர மேலே போத்திண்டு போயிட்டா…!” என்று வள்ளி பெண்ணின் கடைசிக் கோலத்தை நினைத்துச் சொல்லி விடாது புலம்பினாள். 

ஜானகிக்கு அவளைச் சமாதானம் செய்யும் வகை ஒன்றும் தெரியவில்லை, ஒரு நொடியில் பெண்ணை இழந்த அவளுக்கு எதுதான் சமாதானத்தைக் கொடுக் கும்? இருந்தாலும், பொன்னி அவ்வளவு சீக்கிரம் இறந்து போவாளென்று யார் தாம் நினைத்தார்கள்? 

அது தெரிந்திருந்தால் ஜானகி ஒரு நாளும் வள்ளியை ஊர் போக விடாமல் இருந்திருக்க மாட்டாள். மேலும் கணவர் சொன்னபடி கண்டிப்பாயிருக்க எண்ணித்தான் அவள் அது மாதிரி முதல் முதல் சுயநலமாய் நடந்து கொண்டாள். இல்லாவிட்டால் அந்தத் தீர்மானம் அவளுக்கு வந்திராது. அதற்காக வள்ளியின் மகள் சாக வேண்டுமா?ஆனால், வள்ளி என்னவோ யாரையும் குறை கூறவில்லை. மழையில் நடத்தி அழைத்துவந்த மருமகனைக் கூட அதிகம் ஒன்றும் சொல்லிவிடவில்லை. விதியைத் தான் நொந்து கொள்ளுகிறாள். 

‘பாவம், வள்ளி ரொம்ப நல்லவள்!’ என்று தானே எண்ணமிட்டாள் ஜானகி. 

வாஸ்தவத்திலும், விதியை விட்டால் வேறு யார் தாம் பொன்னியின் பிரிவுக்குப் பொறுப்பாளியாக முடியும்?.

– தெய்வத்திற்கு மேல், முதற் பதிப்பு: பெப்ரவரி 1947, கலைமகள் காரியாலயம், சென்னை.

– இந்தப் புததகத்தில் வந்திருக்கும் கதைகள் கலைமகள், குமரிமலர், கல்கி தீபாவளி மலர், ஆனந்த விகடன், மங்கை ஆகிய பத்திகையில் வெளியானவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *