கட்டுண்டு இருப்பது யார்?





ஜுனைத் ஒரு திறமை மிக்க சூஃபி ஞானி. எத்தகைய சூழ்நிலையையும் தனக்கு ஏற்றபடி பயன்படுத்தி, தத்துவங்களை போதிப்பார்.

ஒரு முறை தனது சீடர்களுடன் அவர் சந்தைப் பகுதிக்கு சென்றுகொண்டிருக்கும்போது, எதிரே ஒருவர் மாட்டை கயிறு கட்டி இழுத்துக்கொண்டு வந்தார். அவரை சற்றே நிற்கச் செய்த ஜுனைத், தனது மாணவர்களிடம், “இதில் கட்டுண்டு இருப்பது யார்? மாடா அல்லது இந்த மனிதனா?” என்று கேட்டார்.
“மாடுதான் கட்டப்பட்டிருக்கிறது. இந்த மனிதர் அதன் எஜமானர். மாடு இவரது அடிமை” என்றனர் சீடர்கள்.
உடனே ஜுனைத், மாட்டைக் கட்டியிருந்த கயிற்றை ஒரு கத்திரியால் துண்டித்தார். விடுபட்ட மாடு தப்பித்து ஓடியது. மாட்டின் உரிமையாளர், அதைத் துரத்திக்கொண்டு ஓடினார்.
“பார்த்தீர்களா! மாடு கட்டுண்டு இருக்கவில்லை. அந்த மனிதன்தான் கட்டுண்டு இருக்கிறான். அவன்தான் அதன் பின்னால் இப்போது துரத்திச் செல்கிறானே தவிர, மாடு அவனைப் பற்றி கவலை கொள்ளவில்லை. அது தன்னிச்சையாகவே இருக்க விரும்புகிறது.”
இது என்ன தத்துவம், எந்த மாதிரி விளக்கம் என்று சீடர்கள் எரிச்சல் அடைந்தனர்.
“இதுதான் உங்களுடைய மனதின் நிலையும்!”என்றார் ஜுனைத். “உங்கள் மனதிற்குள் நீங்கள் கொண்டிருக்கிற சகலவிதமான அபத்தங்களும், உங்கள் மீது சற்றும் ஆர்வம் காட்டுவது இல்லை. நீங்கள்தான் அவற்றின் மீது ஆர்வம் காட்டுகிறீர்கள். சில சாமயம் அதற்காக பைத்தியக்காரத்தனமாகக் கூட நடந்துகொள்கிறீர்கள். ஆகவேதான் அவை உங்களுக்குள் இருக்கின்றன. அந்த அபத்தங்கள் மீதான உங்களுடைய ஆர்வத்தை நீங்கள் கைவிட்டுவிட்டால், அவைகளும் இந்த மாட்டைப் போல தப்பித்து ஓடி விடும். நீங்களும் விடுதலை அடைந்துவிடுவீர்கள்!”