கடைசி மனிதன்!
கதையாசிரியர்: கிறிஸ்டி நல்லரெத்தினம்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
அறிவியல்
கதைப்பதிவு: March 15, 2026
பார்வையிட்டோர்: 141

2050 ஆம் ஆண்டு! பூமி சூனியமாய்க் கிடந்தது. ஒரு கொடிய வைரஸ் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் விழுங்கி, கோடிக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கி, பூமியையே ஒரு பெரிய கல்லறையாக்கிவிட்டது. எங்கும் அமைதி. அது மரணத்தின் அமைதி. வீதிகள் வெறிச்சோடி, கட்டிடங்கள் அநாதையாக, பறவைகளின் ஒலிகூட மறைந்து மௌனமாய்ப் போன உலகம் அது!
இந்த மரணக் கடலில், அவன் மட்டும் தப்பிப் பிழைத்திருந்தான். அவன் – கடைசி மனிதன்! அவனது பெயர் இப்போது அவனுக்கே மறந்துவிட்டது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம், அவன் மட்டுமே மிஞ்சியிருக்கிறான் என்பதுதான். இது அதிர்ஷ்டமா, சாபமா? இந்த கேள்வி அவனது ஒவ்வொரு மூச்சிலும் ஒலித்தது.
அவனுடைய நாட்கள் வெறுமையாக நகர்ந்தன. காலையில் எழுந்து, வெறிச்சோடிய வீதிகளில் அலைந்து, ஒரு காலத்தில் பரபரப்பாய் இருந்த கடைகளில் எஞ்சிய உணவுப் பொருட்களைத் தேடி, இரவில் ஒரு பாதுகாப்பான மூலையில் உறங்குவது. இதுவே அவனது வாழ்க்கை! தனிமையின் பாரம் அவனது இதயத்தை ஒரு பெரும் பாறையாய் அழுத்தியது. ஒரு குரலைக் கேட்க, ஒரு முகத்தைப் பார்க்க, ஒரு தொடுதலை உணர அவன் ஏங்கினான்.
அன்று அதிகாலையிலேயே எழுந்து விட்டான். வீதிக்கு வந்து அடிவானத்தில் உதிக்கும் சூரியனை ஒரு கணம் பார்த்து ஒரு பெருமூச்சை உதிர்த்தான்.
தூரத்தில் தெரிந்த அந்த கண்ணாடிக் கூரையுடன் கூடிய ஆராய்ச்சி நிலையம் அன்று அவனை அழைக்காமல் அழைத்தது. ‘ போய்ப்பார்!’ என்றது மனது.
அந்த பாழடைந்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தினுள் நுழைந்தான். ஒருவேளை, இங்கு ஏதேனும் உயிர் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைக்குமா என்ற ஒரு நப்பாசை. கணினிகள் செயலிழந்திருக்க, பேப்பரில் எழுதப்பட்ட குறிப்புகளும், மருத்துவக் கோப்புகளும் நிலத்தில் சிதறிக்கிடந்தன. அவன் தூசி படிந்த கோப்புகளைத் துழாவினான். சிகப்பு அட்டை போட்ட ஒரு கோப்பு அவனது கவனத்தை ஈர்த்தது. அதில், “திட்டப் பொருள் X-7: பிறழ்வு பகுப்பாய்வு” என்று எழுதப்பட்டிருந்தது.
அவனது இதயத்துடிப்பு வேகமானது. படபடப்புடன் அதைத் திறந்தான். உள்ளே, விஞ்ஞானிகள் விவாதித்திருந்த கடிதங்கள், வைரஸின் உருவாக்கம், அதன் பரவல், மற்றும் மனித உடலில் அதன் தாக்கம் பற்றிய தகவல்கள் இருந்தன. உலக அழிவின் முழு வரலாற்றையும் அவன் வாசித்தான். வைரஸ் ஒரு குறிப்பிட்ட மரபணு வரிசை கொண்ட மனிதர்களை மட்டுமே தாக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான மனிதர்கள் அந்த மரபணு வரிசையைக் கொண்டிருந்தனர்.
அடுத்த பக்கத்தில், ஒரு வரைபடமும், சில புள்ளிவிவரங்களும் இருந்தன. அங்கே, அவனது மரபணு வரிசை எண் குறிப்பிடப்பட்டிருந்தது. அவன் கைகள் நடுங்க, தொடர்ந்து படித்தான்.
அவன் அதிர்ச்சியில் உறைந்தான்!
அந்த கோப்பு தெளிவாகக் கூறியது: “X-7 வைரஸ், குறிப்பிட்ட மரபணு வரிசையற்ற நபர்களைத் தாக்குவதில்லை. மாறாக, அத்தகைய தனிநபர்கள் அறிகுறியற்ற கடத்திகளாக (Asymptomatic Carriers) செயல்படுவார்கள். அவர்கள் வைரஸை எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் பரப்பக்கூடியவர்கள். இந்த நோய்த்தொற்றின் ஆரம்பப் பரவலுக்கு, இந்த தனிநபர்களே முக்கியக் காரணம்.”
மறந்து போன அவனது பெயர், அவனது தனிப்பட்ட மரபணு வரிசை, அவன் ஒரு அறிகுறியற்ற கடத்தி என்பதற்கான அத்தனை தகவல்களும் அந்தக் கோப்பில் இருந்தன. அவன் தப்பிப் பிழைத்ததற்கு காரணம், வைரஸ் அவனது உடலைத் தாக்கவில்லை என்பதல்ல. மாறாக, அவன் தான் அந்த வைரஸை உலகமெங்கும் பரப்பியவன். அவன் தான் மரணத்தின் தூதுவன்!
கடைசி மனிதன், சுவரில் சாய்ந்து தரையில் சரிந்தான். அவனது கண்களில் நீர் திரண்டது. இது அதிர்ஷ்டம் அல்ல, அது ஒரு சாபம்! அவன் உயிர் பிழைத்த ஒவ்வொரு நொடியும், அவன் அறியாமலேயே அவன் கொன்ற கோடிக்கணக்கான உயிர்களின் அழுகுரல் அவனது செவிகளில் ஒலித்தது.
அவன் தனியன் அல்ல! அவன் இந்த மரித்த உலகின் ஒவ்வொரு ஆத்மாவையும் சுமந்தபடி, உயிருள்ள ஒரு கல்லறையாக வாழ்ந்து மடியப் போகிறான்.
தள்ளாடியபடி எழுந்து வீதிக்கு வந்து வானை நோக்கினான்.
தூரத்தே வானில் ஒரு முகில் கூட்டம் மிதந்து மறைந்தது!