கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 18, 2025
பார்வையிட்டோர்: 3,137 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவள் வாழ்வின் திருப்பங்களில் குளிர், குறி சொல்லியிருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு தோழியாக நெருங்கி, வருடிச் சேதி கொண்டு தந்திருக்கிறது! 

எப்போதும் இனிய சேதிகளே… 

”ஐ.சி.யூ. வரீங்களாம்மா? அப்பாவைப் பார்த்துட்டு வரலாம்?” – மகனின் குரலில் வழக்கத்தைவிட அதிகப் பரிவு. 

‘உள்ளே விடமாட்டாங்களேப்பா…” 

“இல்லை. இப்போ பர்மிஷன் தந்திருக்காங்க…” வழக்கமான வளைவின்றி அவன் உதடுகள் கோடாக இறுகியிருந்தன. 

கணவரைப் பார்த்து நான்கு நாட்களாகி விட்டன. ஒரு முறை பார்த்தால்… அவர் பாதங்களையேனும் தீவினால்… ஆவலுடன் எழுந்தாள். 

அவருக்குப் பத்து மணி நேரமெடுத்து இதய வால்வுகளைப் பழுது பார்த்திருந்தார்கள். சிகிச்சை முடிந்த கையோடு, ‘இட்ஸ்’ பீன் சக்ஸஸ்ஃபுல்’ என்றனர் டாக்டர்கள். 

அந்த மாதத்தில் அன்றிரவு நிம்மதியாக உறங்கினாள். மறுநாளே ‘இன்ட்டர்னல் ப்ளீடிங் – நிறைய ரத்தம் தேவை’ என்று ரத்த வங்கிகளுக்கு அலைமோதினார்கள். 

‘இனி பயமில்லை….! 

‘கிட்னி சரியாக வேலை செய்யலைம்மா.’ 

‘எங்களால முடிஞ்சளவு முயற்சி பண்றோம்.’ 

‘இப்போ நம்பிக்கையிருக்கு…’

‘எல்லாகுக்கும் மேலே கடவுள் இருக்கறார்மா.’ 

‘ஹார்ட்டும் ஃபெயிலாகுது.’ 

மருத்துவர்கள் மாறிமாறிப் பேசினாலும், அவன் மனம் ஆடாமல் கிடந்தது. ‘அவருக்கு ஒண்ணுமில்லை’ என்று குடும்பத்தை நின்று தேற்றினான். குறி வாக் காத்திருந்தான் – உடலும் மனதும் தீவிரமாகக் கவனித்திருந்தன. 

“போலாமாம்மா?” 

“இதோ…” எழுந்து மசுனுடன் நடத்தாள் படிகளும் நீண்ட தாழ்வாரங்களும் முன்னே விரித்தன. கஞ்சி தோய்த்த வெங்கடகிரி புடவையின் கத்திக் கொசுவ மடிப்புகள் விசிறுவதைப் பார்த்தபடி நடந்தாள். 

அடிக்கடி செய்வதுபோல மனம் பின்னடைந்து பதித்துபோன தடங்களைப் பார்த்து நின்றது. 

அவள் தாத்தா அந்தக் கால B.A. அவர் உடை, பேச்சு, வீடு கூட வெள்ளைக்காரப் பாணியில் இருக்கும். வீட்டிலிருந்து தோட்டத்துக்குப் போக தேன் நிறத்தில் ஃப்ரெஞ்ச் விண்டோஸ் உண்டு. 

ஜன்னலுக்கும் கதவுக்கும் பிறந்த கலப்புக் குழந்தை அது மூன்று படிகளேறி அவற்றைத் திறந்து வெளியே நடக்கலாம். இரவு, கதவைத் தாழிட்ட பிறகு காற்று தேவையானால், முதுகுத் தண்டு போன்ற அதன் மையத்தை இழுக்க, கதவின் மேற்பாதி ஷட்டர் அடுக்கடுக்காக விரியும். 

குழந்தையாக இருந்தவளுக்கு, அதைத் திறந்து மூடி, மாலைக் காற்றோடு கண்ணாமூச்சி ஆடுவதில் அலாதி இன்பம். அப்போது தான் காற்றின் சிநேகம்… ஆரம்பம்! 

தாத்தா வீட்டு ‘கோர்ட் – யார்டும்’ விசேஷம்தான். வீட்டின் மையத்தில், மேலே இரும்புக் கம்பிகள் அடைத்த திறப்பு அது. மழை நீர் வீட்டினுள் இழையாமல் தேங்கி வடியுமளவில் ஓரடி ஆழ சதுரப் பள்ளம், அதன் கீழே உண்டு. வாய்க்கால் துவாரத்தை ‘சிக்’கென அடைத்து விட்டால், நல்ல மழைக்குப் பள்ளம் திரம்பிவிடும். வானம் ஓய்ந்த பிறகு கம்பிகளிலிருந்து சொட்டும் நீரோடு பிள்ளைகளும் தத்தி, அனைந்து ஆடலாம். 

நிலா பொழியும் பிற இரவுகளில் அங்குதான் இரவுச் சாப்பாடு. பாய் விரித்துப் படுத்தால். கம்பிகளுக்குப் பின்னே சிறைப்பட்ட நட்சத்திரங்களை விழி செருரும்வரை பார்க்கலாம். 

தாத்தா இறந்த பத்தாம் நாள் மொத்தக் குடும்பமும் அந்த வீட்டில் கூடியிருந்தது. மறுநாள் ஊருக்குக் கிளம்ப மூட்டை கட்டிமுடித்து, இரவு படுத்த வேளை… மழை ஆரம்பித்தது. வழக்கத்தை மீறிய குளிர் ஒன்று பரவியதாக உணர்ந்தாள். நட்சத்திரங்களே உடைந்து சிதறியதைப் போல ‘சடசட’வென்று பனிக்கட்டிகள் வீட்டினுள் விழுந்தன. 

‘ஹையா ஐஸ் மழை!’ 

‘சிலீருங்குது’ – பிஞ்சு உள்ளங்கையில் அவள் ஏந்தி அழகு பார்க்கையில் குளுமை ஊடுருவி ஏதோ பேசியது – உறைந்து போனாள் ஒரு கணம். 

‘போட்டிரு செண்பா, நடுங்கற பாரு…’ 

பின்னால் வந்து நின்ற அத்தை மகன், அவளை அணைத்துச் சொன்னாள்.அவளைவிட எட்டு வயது மூத்தவன் பெயர் ராஜா.

ஐந்து வயதிலும் அந்த ஜில்லிப்புக்கும், வெதுவெதுப்புக்கும் இடையே இன்பத்தோடு தவித்தது நினைப்பிருக்கிறது. 

அடுத்த அனுபவம் பன்னிரண்டாம் வயதில். மழை பெய்து ஓய்ந்தமாலைநேரக்குளுமையில் ஒருகனமிருந்தது. கண்ணுக்குத் தெரியாத பூஞ்சாரல்… நனைந்ததால் கறுத்த தார்ச் சாலையும். இருமருங்கும் பசுமையாக அசைந்த மரம், செடிகளும் கண்ணைக் குளிர்வித்தன. 

முதுகில் வெயிலின் இதம் முன்னே… யப்பா…. இன்னும் கண்விரிய அதைப் பார்த்து மலைத்தது மறக்கவில்லை வானவில்! 

வானத்தின் கோடிகளுக்கு நடுவே பளீரிட்ட வண்ணப் பாலம். கடவுளின் கையசைப்பு போன்ற வசீகரம் – சாரலில் சிலிர்த்தாள். அடிவயிறுவரை குழைந்து கனிந்தது. அன்று அவள் பெரியவளானாள், 

ஆறு வருடங்கள் கழித்து ஒரு மார்கழி காலைப் பொழுது. அப்போதுதான் கோலமிட்டிருந்தாள். கொடிப் பிச்சியைப் பறித்துக் கொண்டிருந்தவளை பனி வந்து தொட்டுப் பேசியது. புரித்தும் புரியாமல் அவள் நிற்க, அத்தான் நுழைந்தார். ஈர முற்றத்தில் முத்து முத்தாகப் படர்ந்திருந்த கோலத்தை புரித்துவிட்டுக் கவனமாகத் தாண்டி நுழைத்தார். 

“வாங்க ராஜாத்தான்…” அழைத்தபோது பனி கன்னம் தட்டியது. பின்னாலேயே அத்தையும் மாமாவும் நுழைந்தார்கள், வந்த தையில் அத்தானோடு அவளுக்குத் திருமணம். ஆனால், தேனிலவு என்று தம்பதியாக வெளியூர் போக நேர்ந்தது ஐந்தாறு மாதங்கள் கழித்துதான், 

குற்றாலம் குளுகுளுவென மயக்கியது, சாரலோடு, நுங்கு பதனீரும், செண்பக மணமும் தந்த இன்பத்தில் தனைத்தனர். பனிச்சாரல் அவளுக்கு அன்றிரவு தனியாகச் சேதி பொன்னபோது புரிந்தது. 

மென்மையாகத் தன் பட்டு வயிற்றை நீவிவிட்டான். இதோ இப்போது உடன் நடக்கும் குமரன் பத்தாம் மாதம் பிறந்து விட்டான். பிறந்தது மூன்றும் பையன்கள்தான். பெண்ணில்லாத குறை உண்டு வரப்போகும் மருமகனின் வரவை எதிர்பார்த்தவள், குறிக்காகவும் கவனித்திருந்தாள். 

“அருமையான பொண்ணும்மா. அவ அப்பா கொடைக்கானல்ல தாசில்தாரு, அவங்க மதுரைக்கு வந்துடறாங்களாம். நீங்க வீணா மலையேறிச் சிரமப்பட வேணாம். பாதி வழிபோய், பொண்ணை சித்தி வீட்டிலேயே. பார்த்துட்லாம்.” 

இவள் மறுத்து விட்டான். 

“மலையேறியே மருமகளைப் பார்த்துடறது…” என்று சிரித்தாள். 

செண்பகனூர் வரை ஏறியதும், மலையோரம் காத்து நின்ற பனிமூட்டம் ஓடி வந்து பாதையில் கவிந்தது. 

“கண்ணாடியை ஏத்தி விடுங்கம்மா-எலும்பு வரைகுளிருது.”

இவள் அசையவில்லை! 

‘குடுக்’கென பஞ்சாக உள்ளே தாவிய அது அவனை அணைந்து முகர்ந்தது – யூகலிப்டஸ் மணம். அதுவரை மலைப்பாதையில் வளைந்து ஏறியதால் ஏற்பட்ட தலை நோவு நொடியில் விட்டது. 

கண்ணோரம் நீர் கோக்கப் புள்னகைத்தாள்- 

“நல்ல பொண்ணுதான்…” 

முன்னேயிருந்த பையனுக்குக் கேட்டு விட்டது போலும் – “என்னம்மா ஜோசியமாம் 

“ம்… சிநேகிதி சொன்னா.” 

வீட்டுக்கு வந்த சுலோச்சனா இவள் மனதிலும் விளக்கேற்றினாள். மகனைப் போல இவன் சேலையைப் பற்றி பின்னே சுற்றினாள். இயல்பாகப் பேசி, விளையாடி, கடைகளை அலசி, பலகாரம் சுட்டு, பரிமாறி… என்று ஒரு இடம் விடாமல் ஒளியேற்றினாள். 

மூத்த பேத்தி பிறந்ததும் கொடைக்கானலில் அன்று மழையூற்றிய இரவில் மின்சார வெட்டு. மெழுகுவர்த்தியின் ஒளியில் பரிதவிப்புடன் காத்திருந்தனர். மற்றவர்கள் சால்வைக்குள் ஒடுங்க, இவள் குளிரை அனுபவித்தாள். கண்ணாடி ஜன்னல், காற்றில் ‘பட்’டென விரித்தது. ஐஸ் காற்று அவளை முட்டியபோது பேத்தியின் முதல் அழுகுரல் கேட்டது – சிலிர்த்தாள்! 

அடுத்து வந்த மருமகளும் அம்சம்தான் – குடும்பம் பூரணமானது. கணவர் மடியில் சாய்ந்தபடி, “ஒரு குறையில்லீங்க எனக்கு” என்று விம்மியிருக்கிறாள்.

*** 

இப்போதும் குளிர்சுரம் ஒன்று உச்சந்தலையில் கவிந்த உணர்வு, ஆசியா? அல்லது விடைபெறுதலா? 

ஐ.சி.யூ என்றெழுதிய கதவின் முன் நின்ற போது மனதில் சலனமில்லை. 

செருப்பைக் கழற்றிவிட்டு, சிப்பந்தி’ தந்த ‘ஸ்டெரைல் கோட்’டைச் சுற்றிக் கொண்டாள். கண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளே அடி வைத்தாள். 

சிலீசெனக் குளிர் அவளைப் பற்றியது. ஒரு நொடி தடுமாறினாள். இந்த செயற்கை ஏ.ஸி. குளிர் வருடவில்லை… பேசவில்லை. ஏதோ ஒரு விநோதம். விரோதம் இதிலிருந்தது. திரும்பிப் பார்த்தாள். சுண்ணாடி தடுப்புக்கு வெளியே தலை கவிழ்ந்த மகன். முன்னே.. அவர் நீட்டிக் கிடந்தார். நெஞ்சில் கட்டு; மூக்கிலும் வாயிலும் குழாய்கள்; பூதாகர இயந்திரங்கள். 

“ஆபரேஷன் முடிஞ்ச மூணாம் நாள் இதயம் பலவீனப்பட்டிருச்சும்மா, வெண்டிலேட்டர்தாள் இப்போ அப்பாவுக்காகச் செயல்படுது – மறுபடி அப்பா இதயம் செயல்படலைன்னா…” வரும் வழியில் மகன் கூறியது. இப்போது புரிந்தது. 

உடல் தளர்ந்து நடுங்கியது. ஐந்து வயதில் ‘நடுங்கறியே’ என்று அணைத்துக் கொண்ட தன் துணையைப் பிரியும் நடுக்கம்… 

முத்துக் கோலத்தைக் கவனமாகத் தாண்டி வந்த பாதங்களைப் பார்த்தாள் – “நீங்க பிழைக்கணும் – இல்லை. என்னையும் கூட்டிக்கணும், என்ன ராஜாத்தான்” முனகினாள்.

மானிட்டர் மட்டும் கோடு கோடாக அசைந்தது.

அவர் பாதம் தொட்டான். ‘ஜிலீர்…’ – புரிந்து போனது.

குளிர் விரல் வழியே உச்சந்தலைக்குப் பாய்ந்தது – தெறித்தது.

துணியாக மடிந்து சரிந்தாள், 

வெற்று உறுமலுடன் ஏ.ஸி. குளிர் பரப்பியது. ஆனால் இனி அவர்கள் அனல் – குளிர் உணருவதில்லை! 

– அவள் விகடன். டிசம்பர் 1999.

– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *