கடவுளைத் தொலைத்தவன்!
சோனா, பப்லு ரெண்டு குழந்தைகளும் குறும்பென்றால் குறும்பு… அத்தனைக் குறும்பு! ஒரு நிமிஷம் சும்மா இருக்க மாட்டார்கள். என்னமாவது சேட்டை செய்து, அப்பா& அம்மாவுக்குச் செலவும் வேலையும் வைத்துக்கொண்டே இருப்-பார்கள். டி.வி. ரிமோட்டை எடுத்து நாலாவது ஃப்ளோரிலிருந்து கீழே போடுவார்கள். டி.வி. மேலிருக்கும் அழகான கதகளி பொம்மையைப் போட்டு உடைப்பார்கள். செல்போனை பக்கெட் தண்ணீரில் போடுவார்கள். வீட்டில் ஏதாவது ஒரு பொருள் காணாமல் போய்க்கொண்டே இருக்கும்.
அன்றைக்கு, ராஜேஷின் அப்பா கிராமத்திலிருந்து வந்திருந்தார். பப்லுவின் சேட்டையைப் பார்த்துக் கண்டிக்க விரும்பி, “டேய், இங்கே வா!” என்று அதட்டல் போட்டுக் கூப்பிட்டார். பப்லு தயங்கித் தயங்கி வந்து நின்றான்.
“கையைக் கட்டு! ஒழுங்கா நான் கேக்குற கேள்விக்குப் பதில் சொல்லணும், புரியுதா? கடவுள்னு ஒருத்தர் இருக்கார், தெரியுமா?” என்றார். பயல் திருதிருவென்று விழித்தான்.
“சொல்லுடா! தெரியுமா, தெரியாதா? கடவுள் எங்கே?” என்றார் மீண்டும் கோபமாக.
பப்லு சட்டென்று துள்ளிக் குதித்து ஓடிவிட்டான். நேரே அக்கா சோனாவிடம் போய், “சோனா, நாம மாட்டிக்கிட்டோம். கடவுளைக் காணோமாம். நாமதான் வழக்கம் போல எங்கேயாவது தூக்கிப் போட்டிருப்போம்னு தாத்தா என்னைக் கேக்கறாரு. கடவுளை நீ எங்கேயாவது தொலைச்சுட்டியா சோனா?” என்றான் அப்பாவியாக.
– 26th செப்டம்பர் 2007