கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 12, 2025
பார்வையிட்டோர்: 6,167 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தக் காட்டில், அம்மா கரடியும் குட்டிக் கரடியும் இருந்தன. குட்டிக் கரடி ரொம்பவே துறுதுறு. அதைக் கட்டுப்படுத்துவது அம்மா கரடிக்குப் பெரிய வேலை.

கொஞ்ச நாட்களாக, குட்டி பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தது. தோளில் பையைத் தொங்கப்போட்டு டாட்டா சொன்னபடி செல்வதே அழகுதான். படிப்பிலும் படு சுட்டியாக இருந்ததால், அம்மாவுக்குப் பெருமிதம் தாளவில்லை. பள்ளி முடிந்து வரும் குட்டி, பள்ளியில் நடந்ததை மூச்சுவிடாமல் சொல்லி முடிக்கும்.

ஒரு நாள் பள்ளிவிட்டு வந்த குட்டிக் கரடி, “அம்மா, உனக்கு ஒரு சர்ப்ரைஸ்!” என்று கைகளைப் பின்னால் மறைத்துச் சொன்னது.

“என்ன சர்ப்ரைஸ்?”- அம்மா கரடி கேட்டது.

“இதோ” என்றபடி ஒரு குடுவையைக் காட்டியது. வாய் அகன்ற அந்தக் குடுவைக்குள், உயிருடன் பட்டாம்பூச்சிகள் பறந்தன.

அதைப் பார்த்த அம்மா கோபமாக, “குடுவையத் திறந்து, பட்டாம்பூச்சிகளை வெளியில் விடு” என்றது.

குட்டிக் கரடி, உடனடியாக குடுவையின் மூடியைத் திறந்துவிட்டது. புதுக் காற்று பட்டதும் பட்டாம்பூச்சிகள், வெளியே வந்தன. அந்த இடத்தை இருமுறை வட்டமடித்துவிட்டுச் சென்றன.

“பாரு, எவ்வளவு மகிழ்ச்சியா போகுதுங்க. எந்த உயிரினமும் தன் சுதந்திரத்தை இழக்க விரும்பாது” என்றது அம்மா கரடி.

“இனிமே, இந்த தப்பைப் பண்ண மாட்டேன்” என்றது குட்டி.

இன்னொரு நாள்… பள்ளிவிட்டு வந்ததும், “அம்மா, ஸ்கூலுக்கு நிறையப் பேர் பலாப்பழம் கொண்டு வர்றாங்க. எனக்கும் வேணும்” என்றது.

மலையின் மேற்குப் பகுதியில் விளையும் பழங்கள் சதைப்பற்றுடன் சுவையாக இருக்கும். மறுநாள் காலையில் குட்டியைப் பள்ளிக்கு அனுப்பியதும், மலைக்குச் சென்றது அம்மா. பழங்களைப் பறித்துக்கொண்டு குகைக்குத் திரும்பமாலை ஆகிவிட்டது.

வழக்கமாக அம்மா வரத் தாமதமானால், வாசலிலேயே குட்டி காத்திருக்கும். இப்போது, காணவில்லை. முயல் தம்பியும் அப்புவும்தான் அதன் ஃப்ரெண்ட்ஸ். அம்மா கரடி, அவர்கள் வீட்டுக்குச் சென்று கேட்டது.

“அவ அப்பவே போயிட்டாளே?” என்றன.

அம்மா கரடியை கலக்கம் பற்றிக்கொண்டது. அங்கும் இங்கும் தேடி அலைந்ததில் இருட்டிவிட்டது. சற்றுத் தூரத்தில் நெருப்பு வெளிச்சம் தென்பட்டது. அங்கே மனிதர்கள் இருக்கிறார்கள் என்று அர்த்தம். மனிதர்கள் காட்டுக்குள் வந்தால், பிரச்னைதான்.

அம்மா கரடி வெளிச்சம் வந்த திசைக்குச் சென்றது. அங்கே கண்ட காட்சி…

முகாமில், தீ வளையத்தைச் சுற்றி மூன்று மனிதர்கள் மனிதர்கள் அமர்ந்திருந்தார்கள். சற்று தள்ளி, இருட்டான இடத்தில் ஒரு கூண்டு. அந்தக் கூண்டில் குட்டிக் கரடி. அதன் அருகில் பெரிய பலாப்பழம்.

“ஐயோ கண்ணே! பலாப்பழத்தைக் காட்டி உன்னைப் பிடித்துவிட்டார்களா?” என்று அழுதது. மனிதர்கள் தூங்கிய பிறகு, கூண்டை நெருங்கியது.

அம்மாவைக் கண்டதும் குட்டி பரபரத்தது. அம்மா எப்படியும் தன்னை விடுவித்து விடுவாள் என்று நம்பியது. ஆனால், அந்தக் கனமான இரும்புக் கூண்டிலிருந்து குட்டியை விடுவிக்க அம்மாவால் முடியவில்லை.

“அம்மா, நான் என்ன தப்பு பண்ணினேன். எனக்கு ஏன் இப்படி நடந்தது?” என்று அழுதது குட்டி.

“உன் மேல தப்பில்லை… பிற உயிரினங்களைப் பாடாய்ப்படுத்தும் மனுஷங்க தப்பு” என்றது அம்மா.

விடியும் நேரம் ட்ரக் ஒன்று வந்தது. அந்த மனிதர்கள், கூண்டை அதில் ஏற்றினார்கள். அம்மா கரடி ஆர்ப்பாட்டம் செய்தது. தீப்பந்தங்களைக் காட்டி அதை விரட்டினார்கள். அவர்கள் கையில் துப்பாக்கியும் இருந்தது.

“அம்மா, உன்னை சுட்டுருவாங்க. போயிரு” என்றது குட்டி.

ட்ரக் நகரத் தொடங்கியது. அப்போது, டிரைவருக்கு வலப்புறம் வானில் புழுதிப்படலம் போல தென்பட்டது. அது நெருங்கியபோதுதான் தெரிந்தது.

ஆயிரம் ஆயிரம் பட்டாம்பூச்சிகள், தூசிப்படலம் போன்று தாழ்வாகப் பறந்து வர, வண்டியை இடதுபுறம் ஒடித்தான் டிரைவர். அதனால், தடுமாறி, அருகில் இருந்த பள்ளத்தில் ட்ரக் கவிழ்ந்தது. கூண்டு வெளியே வந்துவிழ, அதன் பூட்டு, பாறையில் மோதித் திறந்துகொண்டது.

வெளியே உருண்ட குட்டியை, அம்மா வாரி அணைத்துக்கொண்டது. இரண்டும் ஓட்டமாக ஓடி, எட்டாத தூரத்துக்கு வந்துவிட்டார்கள்.

“உனக்கு அடி ஏதும் படலியே?” கண்ணீர் மல்க கேட்டது அம்மா கரடி.

“எனக்கு ஒண்ணும் இல்லைம்மா” என்று மூச்சிரைக்கச் சொன்ன குட்டிக் கரடி, தலையை உயர்த்திப் பார்த்தது. தொலைவு வானில் பறந்து சென்றுகொண்டிருந்தன பட்டாம்பூச்சிகள்.

அம்மாவும் நிமிர்ந்து பார்த்தது. குட்டியை ஒரு கையால் அணைத்தவாறு, “இதை வலசைபோறதுனு சொல்வாங்க. பறவைகள், வெட்டுக்கிளிகள் போன்றவை வலசைபோவது அடிக்கடி நடக்கும். பட்டாம்பூச்சிகள் வலசைபோவது மிக அபூர்வமான காட்சி, இது, நமக்காக கடவுளே வலசை போகிற மாதிரி தோணுது” என்றது.

“உண்மைதான்” என்ற குட்டி, வானை நோக்கி கை அசைத்தது.

– 15.12.2014, சுட்டி விகடன்.

மா.பிரபாகரன் எனது பெயர் மா.பிரபாகரன். மதுரையில் வசித்து வருகிறேன் சித்த மருத்துவத்தில் பி.எஸ்.எம்.எஸ் இளங்கலைப் பட்டம் பெற்றவன்@ அரசு மருத்துவர். கடந்த ஆறு ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்தின் மாவட்ட சித்த மருத்துவ அலுவலராகப் பணியாற்றி ஜீலை - 2024 இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். பெரியவர்களுக்கான எனது படைப்புகள் தினமணிகதிரில் பல வெளிவந்துள்ளன. சிறுவர்களுக்கான எனது முதல் படைப்பு சிறுவர்மணியில் 2006 ஆம் ஆண்டு வெளியானது. எனது சிறுவர் சிறுகதைகள் குழந்தை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *