கடவுளின் உதவிகள்…





”குருவே எனக்கு நிறைய கஷ்டங்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.
“கஷ்டங்கள் தீர நீ என்ன செய்கிறாய்?” என்று கேட்டார் குரு.
“என்ன செய்வது? கடவுளிடம்தான் வேண்டிக் கொண்டே இருக்கிறேன், ஆனால் அவர்தான் எந்த உதவியும் செய்யவில்லை” என்றான் வந்தவன். இதைக் கேட்டதும் குருவுக்கு அவனின் பிரச்சனை என்னவென்று புரிந்தது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
‘ஒரு ஊரில் ஒருவனுக்கு பக்தி அதிகம். எப்பவும் கடவுளை வேண்டிக் கொண்டே இருப்பான். கோயில்தான் அவனுடைய இருப்பிடம். ஒரு முறை கடுமையான மழை. ஊரை ஒட்டியிருந்த ஆறு நிறைந்து வெள்ளம் பெருகியது.ஊரே மூழ்கத் துவங்கியது. எல்லோரும் தப்பிக்கத் துவங்கினர். இவன் கோயில் மேல் ஏறி நின்றுக் கொண்டு கடவுளைக் கூப்பிட்டான். ‘கடவுளே என்னைக் காப்பாற்று’ என்று கத்தினான். அந்த சம்யம் வெள்ள நீரில் ஒரு படகு வந்தது. அதில் வந்தவர்கள் அவனை அதில் ஏறச் சொன்னார்கள். ஆனால் இவன் மறுத்தான்.’நான் வரலை.கடவுளிடம் வேண்டியிருக்கிறேன். அவர் என்னைக் காப்பாற்றுவார்’ என்றான். படகு போய்விட்டது. வெள்ள நீர் உயர்ந்துக் கொண்டே இருந்தது.
அடுத்து இன்னொரு படகு வந்தது. அதிலும் ஏற மறுத்துவிட்டான்.
கடைசியில் வெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற ஒரு ஹெலிகாப்டர் வந்தது. இவனை மீட்க முயன்றது. ஆனால் ‘கடவுள் வந்து காப்பாற்றுவார்’ என்று சொல்லி ஹெலிகாப்டரில் ஏற மறுத்துவிட்டான். இறுதியில் அவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டான்.
மேலோகம் சென்ற அவன் கடவுளை சந்தித்தான். ‘கடவுளே உங்களைக் காப்பாற்ற சொன்னேனே, ஆனால் நீங்கள் என்னை காப்பாற்றவில்லை’ என்று கோபமாய் கேட்டான். அதற்கு கடவுள், ‘உன்னை காப்பாற்றதான் நான் இரண்டு படகுகள், ஒரு ஹெலிகாப்டரை அனுப்பினேன். ஆனால் நீதான் அவற்றை பயன்படுத்திக் கொள்ளவில்லை.’ என்றார்.’
இந்தக் கதையை குரு சொன்னதும் வந்தவனுக்கு தன்னுடைய பிரச்சனை என்னவென்று புரிந்தது.
அப்போது குரு அவனுக்கு சொன்ன WINமொழி: கிடைக்கிற வாய்ப்புகள்தாம் கடவுளின் உதவிகள்.
– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)