கங்கை இன்னும் வற்றிவிடவில்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2024
பார்வையிட்டோர்: 1,366 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் தாய்நாட்டுக்குத் திரும்புகிறவனுடைய மன நிலையை உங்களால் அநுமானம் செய்ய முடியுமானால்தான் என்னுடைய மன நிலையைச் சரியாக நீங்கள் புரிந்து கொள்ள முடியும்! நான் ஓர் இந்தியன் என்று மட்டும் சொல்லிக் கொள்வதைவிட, இந்தியன் என்று சொல்லிக்கொள்வதிலேயே பெருமைப்படுகிறவன்’- என்று சொல் வதுதான் பொருத்தமாக இருக்கும். வெளிநாட்டு வர்த்தகக் கம்பெனி ஒன்றில் பணி புரியும் நான் அநேகமாக உலகின் எல்லா முக்கிய நகரங்களிலும் சில மாதங்களாவது இருந்திருக்கிறேன். உலகிலுள்ள எல்லா முக்கிய நதிகளின் தண்ணீரையும் ருசி பார்த்திருக்கிறேன். ஆனாலும் எனக்கு என்னுடைய இந்திய நகரங்களின் மேல் தான் தீராக்காதல். ஆயிரம் நதிகள் ஓடுகிற இடங்களைப் பல்லாயிரம் முறை சுற்றிப் பார்த்தாலும் என் இதயத்தில் என்னவோ கங்கைதான் ஓடிக்கொண்டிருக்கிறது. 

பதினைந்து ஆண்டுகளுக்குமுன் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்த ஒரு முன்மாலை வேளையில் ஹரித்துவாரத்தில் கங்கைக் கரையில் படிக்கட்டில் உட்கார்ந்து முழங்காலளவு நீரில் நனைய மணிக்கணக்காக நான் கங்கையைப் பார்த்துக் கொண்டிருந்ததுண்டு. இந்த விநாடியிலும், எந்த விநாடியிலும் நான் அப்படித்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதாக எனக்குள் ஒரு பாவனை. அன்று அந்த முன்மாலை வேளையில், நேர்ந்துகொண்டவர்கள் தொன்னைகளில் ஏற்றி மிதக்கவிட்ட அகல் விளக்குகள் கங்கையில் அங்கங்கே மிதந்து கொண் டிருந்தன. ஒருபுறம், மலைச்சரிவு, ஆசிரமங்களின் கட்டிடங்கள், குளிர்ந்த காற்று, சின்னஞ்சிறு விளக்குகள் மிதக்கும் கங்கை பார்க்கச் சலிப்படையாத காட்சி. கங்கை என் உடம்பை நனைக்கும் போதெல்லாம் என்னுள்ளிருக்கும் சத்தியமும், தர்மமும், கருணையும் கிளர்ந்திருக்கின்றன. உலகத்தின் மாபெரும் நதிகளுக் கும் என் கங்கைக்கும் ஒரு வேறுபாடு உண்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தேசத்தின் பூர்வ கால ஞானி கள் சத்தியத்தையும், தர்மத்தையும் – அவையிரண்டின் விளை வாகிய கருணையையும் – கங்கையின் கரைகளில் தான் கண்டு கொண்டார்கள். கங்கையின் ஒரு கரை சத்தியம். மறுகரை தர்மம். நடுவே ஓடும் கங்கைதான் கருணை – என்று உணர்ந்தவன் நான். என்னுடைய தேசத்தின் புனித உணர்வுகள் எல்லாம் இந்த நதியின் பிரவாகத்தோடு உடனிகழ்ச்சியாகப் பிரவாகித் தவை என்பதை நான் அறிவேன். 

இந்த நதி பெருகுகிறவரை இதன் கரையில் அல்லது கரை யாக ஏற்படுத்தப்பட்ட சத்தியமும், தர்மமும் என் தேசத்தை விட்டுப்போய்விட முடியாது என்பதில் எனக்கு அழுத்தமான நம்பிக்கை உண்டு. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் மறுபடி யும் நான் எதற்காக இந்தியாவுக்குப் புறப்படுகிறேன் தெரியுமா? சொன்னால் ஒருவேளை நீங்கள் சிரிக்கலாம், அல்லது என்னைப் பைத்தியக்காரன் என்று நினைக்கலாம். ஹரித்துவாரத்தில் இரண்டு நாட்கள் கங்கைக் கரையில் இருந்துவிட்டு வரவேண்டும். ஊரில் எனக்கு உறவினர்கள், வீடு, வாசல், தாய், தந்தை, யாரும் கிடையாது. இப்போது வயது நாற்பத்திரண்டு. இது வரை திருமணமும் ஆகவில்லை. அப்படி ஓர் ஏற்பாட்டிற்கு இனி அவசியமும் இல்லை. ஊர்சுற்றுகிறவனால் குடும்பத்தைக் கட்டிக்காக்க முடியாமற் போனாலும் போகலாம். எனக்குப் பூர்வீகம் இராமநாதபுரம் மாவட்டத்தில் சாத்தூர் தாலுகாவில் ஒரு சிறிய கிராமம். அந்தக் கிராமம் இப்போது இருக்கிறதோ இல்லையோ ? இளம்வயதில் தாய்தந்தையரை இழந்துவிட்ட என்னை ஜில்லா போர்டு பள்ளி ஆசிரியரான என் தாய்மாமன் வளர்த்துப் படிக்கவைத்து ஆளாக்கினார். அவரும் ஒரு ஊர் மாற்றுகிற ஜில்லாபோர்டு உத்தியோகத்திலே இப்போது எந்த ஊரில் இருக்கிறாரென்று எனக்குத் தெரியாது. படித்ததும் டெல்லியிலுள்ள வெளிநாட்டு வர்த்தகக் கம்பெனியின் கிளை ஒன்றில் வேலை கிடைத்தது. பிறகு அதே கம்பெனியில் ஸ்டெனோ கிராபராக முடிந்தது. கம்பெனிக் காரர்களுக்கு என்னை மிகவும் பிடித்ததனால் பதவிஉயர்வு கொடுத்தார்கள். கல்கத்தா, பம்பாய், ஹைதராபாத், பங்களூர் ஆகிய நகரங்களில் ரீஜனல் மானேஜ ராகச் சிறிதுகாலம் இருக்கச் செய்தார்கள். பிறகு வெளிநாட் டுக்குப் போகச் சம்மதமா என்று கேட்டார்கள். புறப்பட்டு விட்டேன். டில்லியிலிருக்கும்போது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையாவது ஹரித்துவாரம் போய்வருவேன். 

அதே ஹரித்துவாரத்தைப் பன்னிரண்டு வருடங்களாகக் காணாமல் இருந்துவிட்ட தவிப்புடன் இப்போது ஊர்திரும்பு கிறேன். இப்போது நான் வேலை பார்க்கிற இடம் தாய்லாந்தி லுள்ள பாங்காக் நகரம். அரிய முயற்சியுடன் இந்தியா சென்று வருவதற்காகக் கம்பெனியில் பதினைந்து நாள் லீவுவாங்கியிருக் கிறேன். என்னுடைய தேசத்தைப் பற்றிப் பத்திரிகைகளில் நான் படிக்கும் செய்திகள் எனக்குத் திருப்தியை அளிக்கவில்லை. முந்தா நாள் மாலை ஒரு யூதன் என்னைக் கேட்டான்:- 

“யூ ஆர் இண்டியன் ! ஐ ஹேட் இண்டியன்ஸ்… என்று தொடங்கி உங்களை வெறுத்து அவமானப்படுத்தும் சீனாவுடன் கூட நீங்கள் டிப்ளமேடிக் உறவுகளை விடவில்லை. ஆனால் இஸ்ரேலுடன் உறவுகளை விட்டுவிட்டீர்களே?” என்று ஆங்கிலத் தில் கோபமாக வினாவினான் அவன். 

“பொறுத்திருந்து பார், நண்பனே ! எனது நாடு கங்கை பாயும் நாடு. எனது நாட்டில் கங்கை இன்னும் வற்றிவிடவில்லை. நாங்கள் யாருக்கும் கெடுதல் செய்யமாட்டோம்…” என்று ஆங்கிலத்தில் சாந்தமாக மறுமொழி கூறினேன். 

“யார் கண்டார்கள்? உங்கள் கங்கை ஒருவேளை இப்போது வற்றியிருக்கலாம்” என்று மறுபடியும் கோபமாகவே ஆங்கிலத் தில் இரைந்தான் அவன். ஒருநாளும் இல்லை” என்றேன் நான். அவன் என் பதிலில் திருப்தியடையவில்லை. 

இரண்டு வருடங்களுக்கு முன் நான் டோக்கியோவில் இருந்த போது, ‘கிராண்ட் ஒஸாகா பார்’ இல் எனக்கும் ஒரு ஜப்பா னியனுக்கும் சண்டையே மூள இருந்தது. 

“உனது இந்திய நகரங்களில் இரவு சூனியமாக இருக்கிறது. பெரிய நகரங்கள் கூட இரவில் இருளடைந்து கிடக்கின்றன. இரயில்கள் சுத்தமாக இல்லை, டாக்ஸிகளோ அழுக்கு மயம்… ஹாங் காங், டோக்கியோ போல் இரவில் ஒளிமயமாக மின்னும் நகரம் ஒன்று கூட உன் இந்தியாவிலே இல்லை” என்றான் அவன். 

“உங்களைப் போல் வெளிச்சம் போட எங்களுக்குத் தெரியாது” என்றேன் நான். 

”நோ… நோ…யூ ஆர் ராங். ஏ ஸிடி இஸ் லைக் எ வுமன். ஷி மஸ்ட் ஹேவ் ப்யூடி, ப்ரைட்னெஸ் அண்ட் ஆல் கைண்ட் ஆஃப் அட்ராக்ஷன்ஸ்…ஷீ மஸ்ட் ட்ரை டு கெட் அட்டென்ஷன் ஆஃப் அதர்ஸ், “ என்றான் அவன். 

இந்தியப் பெண்களும் அப்படி இல்லை. இந்திய நகரங் களும் அப்படி இருக்க முடியாது…எங்கள் நாட்டில் கங்கை இன்னும் வற்றிவிடவில்லை……” என்று ஆத்திரத்தோடு பதில் கூறினேன் நான். குடிவெறியில் அவன் என்னைக் கண்டபடி திட்டினான். 

ஆனால் அவன் அன்று கூறியதில் ஒருபகுதி உண்மை என்பதை இன்று பாங்காக்கிலிருந்து இரவு விமானத்தில் சிங்கப்பூருக்குப் புறப்பட்டபோது தற்செயலாக உணர்ந்தேன். ‘பாங்காக்’ விமான நிலையத்திலிருந்து விமானம் மேலெழும்பிய போது கீழே வண்ணவண்ண ஒளிகளை வாரிவீசிய நகரின் இரவுத் தோற்றம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. கண்ணுக் கெட்டிய தூரம் வரை பளிச் பளிச் சென்று மின்னும் பல நிற வைரக்கற்களை நெருக்கமாக வாரிக் குவித்ததுபோல் எத்தனை அழகான காட்சி! 

இந்திய நகரங்களுக்கு இத்தனை ஒளிக்கவர்ச்சி இல்லைதான்! வேண்டுமானால் கல்கத்தா பம்பாய் சென்னை டில்லி போன்ற சர்வதேச நகரங்கள் கொஞ்சம் பிரகாசமாக இருக்கலாம். ஆனால் அவைகளும் டோக்கியோ, நியூயார்க், லண்டன், பாரிஸ், பெர்லின், பாங்காக், ஹாங்காங், சிங்கப்பூர் போல அவ்வளவு ஒளிமயமாக இருக்க முடியாது தான்! 

உலகின் சர்வதேச நகரங்களிலுள்ள கவர்ச்சிகள் என்னுடைய ஏழை இந்தியாவில் இல்லாமல் போகலாம். ஹோனலூலுவின் இரவு விடுதிகள், பாரீஸின் பகட்டு, நியூயார்க்கின் நேர்த்தி, பாங்காக்கிலும், மலேயாவிலுமுள்ளவை போல் அழகிய சாலை கள், ஜெர்மனியின் ஆட்டோபான் ரோடுகள் போல எல்லாம் என் இந்தியாவில் இருக்க முடியாது. ஆனால் என்னுடைய இந்தியாவில் கங்கை இன்னும் ஓடுகிறது. 

‘இன் நறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே’-என்று நான் தலைநிமிர்ந்து கூறமுடியும். ஒரு தேசத்தின் பண்பாடாகவே பெருகிவரும் இத்தகைய புனிதந்தி உலகில் வேறெங்குமே இருக்க முடியாது. ஒவ்வொரு இந்தியனுடைய மனத்திலும் கங்கை சுரக்கும் போது அது கருணையாகவே சுரக்கிறது. நீண்ட நாட்கள் அடிமைப்பட்டுக் கிடந்தபின் முதல் முதலாக எங்கள் காந்தியின் மனத்தில் கங்கை சுரந்தது. அது கருணையாக, விடுதலை வேட்கையாக, தரித்திர நாராயணர்களுக்கு உதவும் நெகிழ்ச்சி யாகச் சுரந்து பாரத தேசமெங்கும் பெருகி நனைத்தது. அதே கங்கை இன்னும் வற்றியிருக்காது அல்லவா? 

பாங்காக்கிலிருந்து புறப்பட்ட விமானம் பினாங்கில் இறங்கு கிறது: என் பக்கத்தில் அமர்ந்திருந்த மலாய்க்காரர் விமானத்திலிருந்து இறங்கத் தயாராகிறார். பினாங்கு விமான நிலையத்தில் கொஞ்சம் இறங்கி நிற்கலாம் என்று தோன்றவே நானும் இறங்கினேன். இறங்கும் போது விமானப் பணிப்பெண் மலாய்க் காரரை வாழ்த்தி வழக்கமான உபசரணைச் சொற்களை உரைத்து விடை கொடுக்கிறாள். 

‘த்ரி மா காஸி’ (உதவிக்கு நன்றி) என்று மலாய் மொழி யில் மெல்லக் கூறிவிட்டு நிதானமாகப் படியிறங்குகிறார் மலாய்க்காரர். பினாங்கு நாற்புறமும் கடல் சூழ்ந்த தீவு. மிக அழகான – சுத்தமான – தூசி படியாத நகரம். நான் பலமுறை பார்த்திருக்கிறேன். மலேசியாவில் தமிழர்கள் அதிகமாக இருக்கும் நகரம் என்ற ஞாபகம் வரவே அந்த விநாடியே என் மனத்தில் கங்கை சுரந்தது. 

மறுபடி விமானம் புறப்பட்டது. கோலாலும்பூரில் இறங்கி வேறு விமானம் மாறிச் சிங்கப்பூருக்குப் போக வேண்டும். கோலாலும்பூரில் சிங்கப்பூர் போகிற மலேசியன் ஏர்வேஸ் விமானம் தயாராயிருக்கும். 

நினைத்துக் கொண்டிருக்கும் போதே விமானம் கோலாலும்பூர் கபாங் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி விட்டது. 

கோலாலும்பூர் விமான நிலையத்தில் இறங்கி சிங்கப்பூருக்கு விமானம் மாறியபோது என்னுடன் முத்திருளப்பன் என்பவர் பயணம் செய்தார். அவரிடம் பேசிக் கொண்டிருந்ததில், “தமிழ்நாடு தலை எடுக்கமுடியாமல் வடவர் ஆதிக்கமும், வட இந்திய ஆதிக்கமும் தடுத்து வருவதாக’க் குறைப் பட்டுக் கொண்டார். 

“அப்படிச் சொல்லாதீர்கள், ஏக இந்தியா என்ற மனப் பான்மையை நாம் வளர்க்க வேண்டும். பிரதேச மனப்பான்மை நமது ஒற்றுமையைக் குலைத்துவிடும்” என்றேன் நான். 

“சும்மா நாமாக அப்படி நினைத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். அவனவன் தன் பிரதேசத்துக்காக மற்றவர்களைச் சுரண்டுகிறான்” என்றார் முத்திருளப்பன். 

‘சுதந்திரம் பெற்றுக் கால் நூற்றாண்டு நிறைவதற்குள் தான் எத்தனை அபிப்ராய பேதங்கள்? எத்தனை ஒற்றுமைக் குலைவுகள்?’ என்று எண்ணிய போது தேசத்தையே தெய்வ மாக நினைக்கும் என் கண்களில் ஈரம் நெகிழ்ந்தது. தேசத்தில் கங்கை வற்றி விட்டதா? என்ன? 

சிங்கப்பூர் விமான நிலையத்தை அடைந்ததும் அதிர்ச்சி தரும் ஒரு செய்தி எனக்காக அங்கே அப்போது காத்திருந்தது. சிங்கப்பூரிலிருந்து அடுத்த மூன்று நான்குமணி நேரத்தில் அன்றிரவே சென்னை போய்விடலாம் என்று எண்ணியிருந்த என் எண்ணத்தில் மண் விழுந்தது. 

“ஏர் இந்தியா விமானிகள் திடீரென்று வேலை நிறுத்தம் செய்துவிட்டதால் சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு ஏர் இந்தியா செர்வீஸ் இல்லை” என்று அறிவிக்கப்பட்டது. நான் திகைத்தேன். அப்போது அங்கே என் காது கேட்கவே ‘ஏர் இந்தியா’ வைக் குறை சொல்லிப் பேசிய வெளிநாட்டுப் பயணிகளின் சொற்கள் என்னைத் தலைகுனிய வைத்தன. 

“இந்திய விமானக் கம்பெனியில் மட்டும் திடீர் திடீரென்று இப்படி மூன்று நாளைக்கொருதரம் ஸ்டிரைக் வந்து விடும். இந்திய விமானத்தை நம்பினால் தெருவில் நிற்க வேண்டியது தான்” என்று ஒரு வெள்ளைக்காரன் மற்றொருவனிடம் கூறியதைக் கேட்க எனக்கு அவமானமாக இருந்தது. தேசத்தின் மேலுள்ள பிரியத்தைத் தெய்வத்தின் மேலுள்ள பிரியத்தைவிட அதிகமாக வளர்த்துக்கொண்டு விட்ட என் இதயத்தில் நித்தியமாக ஓடிக் கொண்டிருந்த கங்கை அந்த விநாடியே மெல்ல மெல்ல வற்றுவது போல் ஒரு பிரமையை உணர்ந்தேன். 

“பி.ஒ.ஏ .சி .விமான மூலம் கொழும்பு போய் அங்கிருந்து சென்னைபோக விரும்புவதானால் அதற்கு உடனே ஏற்பாடு செய்து தருவதாக” விமானக் கம்பெனிக்காரர்கள் கூறினார் கள். நானோ இந்திய விமானத்திலேயே செல்ல விரும்பினேன்.

“வேறு வெளிநாட்டு விமானத்தில் போவதானால் கல்கத்தா போய்ச் சேரக்கூட உடனே ஒழுங்கு செய்யமுடியும்” என்றும் கூறப்பட்டது. 

“இல்லை! நான் சிங்கப்பூரிலேயே சில நாட்கள் தங்கிப் பின்பு செல்கிறேன். அதற்குள் ஸ்டிரைக் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்” என்றேன். 

சிங்கப்பூரில் நான் ‘சவுத் ஈஸ்ட் ஏஷியா’ ஓட்டலில் தங்கினேன். பக்கத்து அறையில் ஃப்ராங்பர்ட்டைச் சேர்ந்த வர்த் தகக் கம்பெனி ஒன்றின் பிரதிநிதியாகிய ஜெர்மானியன் ஒருவன் தங்கியிருந்தான். அவனோடு எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. 

பழகத் தொடங்கிய சிலமணி நேரங்களுக்குள்ளேயே அவன் என்னைக்கேட்ட முதல் கேள்வி : 

“உங்கள் நாட்டில் பீகார் மாநிலத்தில் தினம் ஆயிரக் கணக்கான மக்கள் உணவுப் பஞ்சத்தினால் செத்துப் போய்க் கொண்டிருக்கிறார்களாமே?” 

“பஞ்சம் இருக்கலாம்! ஆனால் அந்தச் செய்தி உங்களுக்கு மிகையாகத் திரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது” என்றேன். 

“நோ, நோ,ஐ யாம் டெல்லிங் தி ட்ரூத்.ஐ ஸா இட் இன் டெலிவிஷன்.” என்றான் ஜெர்மானியன். 

“டெலிவிஷனில் வெளிநாடுகளில் எங்கள் நாட்டைப்பற்றிக் காண்பிக்கிற எல்லாமே மிகைப்படுத்தப்பட்டவை. இரவில் ரெயில்வே பிளாட்பாரத்தில் போர்த்திக்கொண்டு தூங்குகிற ஏழை மக்களையும், நடைபாதை வாசிகளையும் படம்பிடித்து ‘இதோ பாருங்கள்! இந்தியாவில் பஞ்சத்தினால் மக்கள் கூட்டம் கூட்டமாகச் செத்துக் கிடக்கிறார்கள்,’ என்றெல்லாம் கூடக் காட்டுகிறீர்கள். ஒரு கௌரவமான இந்தியன் என்ற முறையில் அதை நான் ஒப்புக்கொள்ள முடியாது” என நான் கூறியதை அவன் ஒப்புக்கொள்ளவில்லை. 

மறுநாள் மாலை சிங்கப்பூரில் நிரந்தரமாக நடைபெறும் ‘கிரேட் வோர்ல்ட்’ பொருட்காட்சியைப் பார்க்கப் போயிருந்த போது தற்செயலாக ஓர் அமெரிக்க டூரிஸ்ட்டைச் சந்தித்தேன். அவனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, 

“உங்கள் இந்தியாவில் மகாராஜாக்களும், பாம்பாட்டி களும் தான் நிறைய இருக்கிறார்களாமே? பெரிய நகரங்களில் ‘லிக்கர்’ கூடக் கிடைக்காதாமே?” என்றான். 

இதைக் கேட்டதும் எனக்கு வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதுவரகங்களின் மேல் தாங்கமுடியாத கோபம்தான் வந்தது. இந்தியாவைப்பற்றி நல்ல முறையில் செய்திகளைப் பரவச் செய்யாமல் தூங்கும் இந்தியத் தூதரகங்களால் வருகிற வினை இது. தாஜ்மகாலிலிருத்து தஞ்சைக் கோயில்வரை இமய மலையிலிருந்து கோடைக்கானல் வரை-கங்கைக் கரையிலிருந்து காவிரிக்கரை வரை இந்தியாவைப்பற்றி அழகிய படங்களோடு கூடிய பிரசுரங்களையும் ஃபோல்டர்களையும் விநியோகித்து உலக யாத்திரிகர்களைக் கவரத் தெரியாத நிலைக்காக வருந்தினேன். இந்தியாவிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் செயல்படும் விதத்தைப் பார்த்தும் வெளிநாடுகளிலுள்ள இந்தியத் தூத ரகங்கள் உறங்குவதை என்னவென்று சொல்வது? 

“எனது மாபரும் தேசத்தில் கங்கை பாய்வதை டெலிவிஷனில் காட்டாதவர்கள் சாக்கடை பாய்வதை மட்டும் காட்டி ஏன் இழிவு படுத்துகிறார்கள்?” என்று மனம் நொந்தேன்: 

காளிதாசன், கம்பன், துளசிதாசர், தாகுர்,பாரதி- போன்ற கவிமேதைகளும், வள்ளுவர், காந்தி, நேரு, சுபாஷ் போன்ற தேசபக்த மேதைகளும் எங்கள் பாரத பூமியினர் என்பதைக் காட்டிலும் பாம்பாட்டிகளும், மகாராஜாக்களும் பிரபலமாகி யிருப்பதைக் கேட்டுத் தலைகுனிந்தேன் நான். 

ஆனாலும்கூட ஓர் இந்தியன் என்று சொல்லிக்கொள்ள நான் தயங்கவில்லை, தளரவில்லை. என் இதயத்தில் கங்கை வற்றுகிற வரை அது தளராது. கங்கை இன்னும் அங்கே வற்றி விடவில்லையே? 

ஐந்து நாட்கள் கழிந்து விட்டன. நான் எடுத்த விடுமுறை யில் இன்னும் பத்தே நாட்கள் தான் மீதமிருக்கின்றன. பதி னோராவது நாள் காலை விடிந்தால் நான் மறுபடி பாங்காக்கில் இருக்க வேண்டும். சென்னைவரை செல்வதற்கும், சென்னையி லிருந்து திரும்புவதற்கும்தான் விமானப்பயணம் ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். சென்னையிலிருந்து டில்லி, டில்லியிலிருந்து ஹரித்துவார் எல்லாம் இரயில் பயணம்தான் செய்யவேண்டும். சிக்கனத்திற்காக அல்ல; என் தாய்நாட்டு மண்ணைப் பறந்தே கடக்க விருப்பமில்லை. சென்னையிலிருந்து டில்லிவரையும் டில்லி யிலிருந்து ஹரித்துவார் வரையும் இரயிலில் சென்றால்தான் எனது தாய்நாட்டின் வாழ்க்கை வனப்புகளை, அல்லது துயரங் களை நான் அறியமுடியும். அதை இழக்க விரும்பாமல்தான் இந்திய மண்ணை அடைந்தபின் முழுவதும் இரயில் பிரயாணமே செய்ய விரும்பினேன். இரயில் பயணம் நாட்களை விழுங்கும். என் லீவிலே மீதமிருப்பவையோ பத்தே நாட்கள். ‘என்ன செய்யலாம்?’ என்று நான் கவலைப்பட்டுக்கொண்டிருந்தபோது இந்திய விமானக் கம்பெனியிலிருந்து ஃபோன் வந்தது. ‘இன்றிரவில் ஏர் இந்தியா செர்வீஸ் மறுபடி தொடங்குகிறது. பயணத்துக்குத் தயாராயிருக்கவும்’ என்றார்கள், உற்சாகமாகப் பயணத்துக்குத் தயாரானேன். 

இந்திய நேரப்படி ஒன்பது மணி நாற்பத்தைந்து நிமிடங்களுக்குச் சென்னையிலிருப்போம் என்று நினைக்க நினைக்க மகிழ்ச்சியாயிருந்தது. 

சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா விமானம் மேலெழும்பிய போது கீழே தெரிந்த ஒளிமயமான நகரக்காட்சி மறுபடியும் என் அருமை இந்திய நகரங்களின் நினைவை உண்டாக்கியது. விமானத்தில் அருகில் அமர்ந்திருந்த ஆங்கிலப் பெண்மணி திடீரென்று தான் படித்துக்கொண்டிருந்த ஏதோ ஓர் ஆங்கிலச் செய்தித்தாளைக் காட்டி, “இது உண்மையா? இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் ‘நக்ஸல் பாரி’ என்ற இடத்தைச் சீனர்கள் கைப்பற்றி ஆள்கிறார்களாமே…?” என்று வியப்போடு வினவினாள். 

“அது உண்மையாயிருக்காது! டோண்ட் பிலீவ் ரூமர்ஸ்…” என்று மறுமொழி கூறினேன். அதே சமயத்தில் என் மனம் நினைத்தது. ‘இந்தியாவுக்கென்றிருக்கும் தத்துவங்களை நம்பாமல் அந்நிய நாட்டுத்தத்துவங்களை வீரவணக்கம் புரியும் தீவிரவாதிகளால் என் நாட்டின் ஒற்றுமை பாதிக்கப்படுவதை என்ன வென்று சொல்வது?’ 

சீனாவில் இந்தியத் தூதரக அதிகாரிகள் கொடுமைப் படுத்தப்பட்ட செய்தியும் அதே பத்திரிகையில் வந்திருந்தது. அதையும் அந்தப் பெண்மணி எனக்குச் சுட்டிக் காட்டினாள். 

நாட்டுக்கு விடுதலை வாங்கிக்கொடுத்த சொந்த நாட்டுத் தேசபக்தியை மறந்து எந்த நாட்டுத் தேசபக்தியையோ முத லாகச் கொண்டு இந்த நாட்டைப் பாழாக்குகிறவர்களை எண்ணி எண்ணிக் குமுறினேன். 

வேறுநாட்டுத் தத்துவங்களைப் பருகி வாழும்படியான ஈன நிலைக்குக் கீழிறங்கும்படி – எனது நாட்டில் கங்கை இன்னும் வற்றி விடவில்லையே? 

விமானத்தில் – முறையாக வழங்கப்படும் ‘டிஸ்எம்பர்கேஷன்’ கார்டு வழங்கப்பட்டது. பாஸ்போர்ட் எண்ணைக்குறித்து சிடிசன் என்பதற்கு நேரே ‘இந்தியன்’ என்று ஒவ்வொரு கேபிடல் எழுத்தாக எழுதும்போது என் மெய்சிலிர்த்தது. எங்கிருந்தாலும் நான் இந்தியன் தான். இந்தியாவின் கஷ்ட நஷ்டங்களில் எனக்கும் பங்கு உண்டு. மனப்பான்மையினாலும் சிந்தனையினா லும் கூட நான் இந்தியன். 

வெளிநாட்டில் எங்காவது இருபத்தைந்து முப்பது மாடிக் கட்டிடங்களைக் கண்டால் இப்படி ஒரு கட்டிடம் இந்தியாவி லும் கூட எங்காவது தோன்றியிருக்கும், தோன்ற வேண்டும் என்று நினைப்பேன். வெளிநாட்டில் அழகிய விரிவான சாலை களைப் பார்த்தால் இப்படி அழகிய பெரிய சாலைகள் இந்தியா வில் வரவேண்டும் என்றெண்ணுவேன். வாழ்க்கைத்தரம் உயர்ந்த வெளிநாட்டு மனிதனைப் பார்த்தால் இந்தியனின் வாழ்க்கைத் தரமும் அப்படி உயர வேண்டும் என்றெண்ணுவேன். 

“லுக்கிங் டயர்ட்…ஹேவ் ஸம் டிரிங்…” என்று ஆதரவாக வந்து கூறினாள் விமானப் பெண். 

“நோ… தாங்ஸ்…” அவள் சிரித்துக்கொண்டே போய் விட்டாள். விமானத்தில் மெல்லிய இசை எழுந்தது. சென்னை நிலயத்தில் இறங்குவதற்கான அறிவிப்பும் இந்திய நேரமும் கூறப்பட்டன. சில விநாடிகளில் விமானம் இறங்கியது. தாய் நாட்டு மண்ணில் இறங்கும் போது தான் எத்தனை பெருமிதமாக இருக்கிறது? 

கஸ்டம்ஸ் பரிசோதனைக்கு முன் ‘அரைவ்ட் இண்டியா’ என்று எண்ட்ரி குறிக்கிறார்கள். கஸ்டம்ஸில் நான் வெளிநாட்டில் எந்த விமான நிலையத்திலும் பார்த்திராத முறையில் ஒரு வழிப்பறிக்காரனை விடக் கடுமையாக எல்லாவற்றையும் உதறிப் பார்த்தார்கள். இது என் பொறுமையைச் சோதித்தது. 

நிலையத்திற்கு வெளியே வந்ததும் டாக்ஸி பிடித்து நகருக்குள் புறப்பட்டேன், டாக்ஸிக்காரன், “மீட்டர் வேலை செய்யாதுங்க! மொத்தமா இருபது ரூபா கொடுத்திடுங்க!” என்றான். 

கிண்டி வருவதற்குள் அவன் என்னிடம் என்னென்னவோ கேட்டுவிட்டான். 

“அருமையாவுள்ள இடங்கள்ளாம் இருக்குது சார்!” 

“…”

“சார் ‘பர்மிட்’ வச்சிருக்கீங்களா ? பர்மிட் இருந்தா ‘கன்னிமரா’விலேயே தங்கலாம்…” 

டாக்ஸி தேனாம்பேட்டையை நெருங்கியதும் தெருவில் ஒரே கூப்பாடாயிருந்தது. ஆட்கள் கம்பும் கடப்பாரைகளுமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் குடிசைகள் சில எரிந்து கொண்டிருந்தன. 

“என்னப்பா இது?…” 

“இதுங்களா? அதான் ஊர் பூரா ஒரே காபராவாக் கிடக்குதுங்களே?” 

“என்ன காபரா?” 

“எந்த நாசமாப் போறவனுவ்ளோ ஒவ்வொரு ஸ்லம்மா நெருப்பு வச்சுட்டு ஓடிடறான். யாரு என்னன்னே புரியலே? ஊர் பூராத் தெருவிலே திண்டாடறாங்க…” 

என் மனம் நினைத்தது: 

“இப்படிப்பட்ட குடிசைகளில் எல்லாம் மங்கல விளக்குப் பிரகாசமாக எரிய வேண்டுமென்றல்லவா எங்கள் காந்தி இந்த நாட்டுக்கு விடுதலையை வேண்டினார்!” 

என் மனத்தில் ஒரு வாரத்துக்கு முன் பாங்காக்கில் அந்த யூதன் கேட்ட கேள்வி நினைவு வந்தது. 

“யார் கண்டார்கள்! ஒருவேளை உங்கள் கங்கை இப்போது வற்றினாலும் வற்றியிருக்லாம்…” 

“ஒரு போதும் இராது. கங்கையாவது வற்றுவதாவது?” 

ஆனால்…? 

‘கங்கை பெருகியுள்ளதா? வற்றி விட்டதா என்று பார்த்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது…’ 

“எங்கே சார்… போகணும்…” 

டிரைவரின் கேள்விக்குப் பதிலாக ஒரு சாதாரண இந்திய முறையில் நடத்தப்படும் ஹோட்டலின் பெயரைச் சொன்னேன். ஏனென்றால் சென்னையில் அதிக நேரம் தங்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. மறுநாள் காலையில் நான் டில்லி புறப்பட வேண் டும். டில்லி போய் ஹரித்துவாரம் சென்று மறுபடி சென்னை திரும்பி விமானமேற ஏற்றபடி என் நாட்கள் சரியாக இருந்தன. டாக்ஸி டிரைவர் ஹோட்டலில் இறக்கி விட்டுஎண்ணி ரூபாய் இருபது வாங்கிக் கொண்டு போய்விட்டான். அந்த ஹோட்டல் இருந்த இடத்திற்கு விமான நிலையத்திலிருந்து வர மீட்டர்படி எட்டு ரூபாய் கூட ஆகாது என்பதை நான் உணர்ந்தேன். 

அந்த அகாலத்தில் ஹோட்டல் ரிஸப்ஷன் அழுது வடிந்தது. அதிக நேரம் கூச்சலிட்டபின் படுக்கையிலிருந்து எழுந்த கோலத் தில் ஆஃப் டிராயருடன் மாரில் புஸு புஸுவென்று ரோமம் சிலிர்த்த ஆள் ஒருவன் வந்து, “என்ன சார்! ரூம் வேணுமா? ரூம்ஸிங்கிளா இல்லே!…’காட்டேஜ்’ இருக்கு ஒரு நாளைக்கு நாற்பத்தைஞ்சு ரூவா ஆகும்! கொடுக்கவா?” 

“ரூபாயைப் பற்றி என்ன? ரூம் கொடு…” 

அவன் அழைத்துக் கொண்டு போய் விட்ட இடம் கார் ஷெட் போலிருந்த ஒரு டபுள் பெட்ரூம். பாத்ரூம் உள்ளேயே இருந்தது. ஒரே நாற்றம். சுவரில் பல கறைகள். ஓர் இரவு தானே என்று பொறுத்துக் கொள்ள எண்ணினேன். 

காலையில் காபி கொண்டு வந்து கொடுத்த சர்வர் பையனி டம் நாலணா டிப்ஸும் கொடுத்து ஒரு நியூஸ் பேப்பர் வாங்கி வரச் சொன்ன போது, “சாரே! உங்களிடம் ஒரு விஷயம் பறையணும். இந்த ரூமுக்கு மானேஜர் என்ன சார்ஜ் பண்ணினான்? ஞான் அறியலாமா?” என்று ஆவலோடு கேட்டான். 

நான் பதில் கூறியதும் அவன் முகத்தில் வியப்புத் தெரிந்தது: 

“இந்த மானேஜர் ஒரு அக்கிரமக்காரன். டபுள் ரூமுக்கு இங்கே வழக்கமான சார்ஜு பந்தரண்டரை ரூபாதான். நீங்க வெளியூரான்னு நாற்பத்தஞ்சு கொள்ளையடிச்சிருக்கான்…” 

எனக்குக் கோபம் வந்தது. இந்திய டாக்ஸி டிரைவருக்கு, இந்திய ஹோட்டல் முதலாளிக்கு, இந்திய வியாபாரிக்கு, ஏன் சராசரி ஒவ்வொரு இந்தியனுக்கும் சக இந்தியனைச் சுரண்டி வாழும் மனப்பான்மை இருப்பதை உணர்ந்தேன். தான் சொகுசாக வாழ அடுத்தவனைச் சுரண்டும் தேசத்திற்கு என்று முன்னேற்றம் வரப்போகிறது என்பதை என் சிந்தனையால் கணிக்க முடியவில்லை. ஏ! இந்தியாவே! உன் பழம்பெருமை வாய்ந்த கங்கையும் அதன் சத்திய தர்மக்கரைகளும் வற்றிப் போய் விட்டனவா? 

செய்தித் தாள் வந்தது. விஜயவாடாவுக்கு அருகே ஆந்திர மாணவர்கள் ஏதோ பெருங் கிளர்ச்சி நடத்துவதால் ரயில்கள் வழிமறிக்கப் படுகின்றனவாம். அதனால் நான்கு நாட்களுக்குச் சென்னை செண்டிரலிலிருந்து டில்லி, கல்கத்தா ரயில்கள் புறப்படாது என்றிருந்தது. இப்போது எனது நிலை தர்மசங்கடமாகி விட்டது. என்ன செய்வதென்று யோசித்தேன். திரும்புகாலையில் டில்லியிலிருந்து விமானத்தில் திரும்பினால்கூடத் திட்டம் சரியாக வருமா என்று தயக்கம் தோன்றியது. 

ஆனால் மனம் என்னவோ சரியாக இல்லை. செய்தித் தாளைக் கூர்ந்து கவனித்துப் படித்த போது பல விவரங்கள் தெரிய வந்தன. சுதந்திரத்திற்கு முன்பும் சுதந்திரம் கிடைத்த உடனேயும், ஒரு இந்தியன் அவன் வங்காளியாயிருந்தாலும், மலையாளி யாயிருந்தாலும், பீஹாரியாயிருந்தாலும், தமிழனாயிருந்தாலும், ஆந்திரனாயிருந்தாலும் – தான் முதலில் இந்தியன் என்பதை மனப் பூர்வமாக நம்பினான், உணர்ந்திருந்தான். இன்று அந்த மனத்திடம் ஒவ்வொரு மாநிலத்திலும் நலிந்து விட்டதாகத் தோன்றியது. கல்கத்தாவிலுள்ள ‘கேராவ்’ வேலை நிறுத்தங்கள் திடுக்கிட வைப்பனவாயிருந்தன. பம்பாயின் ‘சிவசேனை’ பயமுறுத்தியது. பக்கம், பக்கமாகக் கதவடைப்பு, வேலை நிறுத்தம், பீகார்ப் பஞ்சத்துக்கு உதவ வேண்டுகிற பிரதம மந்திரியின் அறிக்கை எல்லாவற்றையும் பார்க்கப் பார்க்க எனது இந்தியாவை நினைத்துக் கோவென்று கதறி அழ வேண்டும் போலிருந்தது. 

சுதந்திரப் போராட்டக் காலத்தில் இமயம் முதல் குமரி வரை ஒற்றுமைப்பட்டு ‘வெள்ளையனே வெளியேறு’ என்று குரல் கொடுத்ததெல்லாம் இத்தனை ஆண்டுகள் கழித்து இப்படிப் படிப் படியாக மொழியின் பெயரால், பிரதேசத்தின் பெயரால், ஜாதி யின் பெயரால் வேறுபடுவதற்காகத்தானா ? இன்று வேறு படுவதற்காகவா அன்று ஒன்றுபட்டோம்? 

ஏ! இந்தியாவே ! உன் கங்கை ஒரு வேளை வற்றி விட்டதோ? வறண்டு விட்டதோ? 

நான்காம் நாள் காலை இரயில்கள் புறப்படு மென்று தெரிந் தது. பன்னிரண்டு மணிக்கு மேல் கிராண்ட்ரங்கில் டில்லி புறப் பட வேண்டும். அன்று வெள்ளிக்கிழமையாதலால் காந்தி மண்டபத்துக்குப்’ போய்வர எண்ணினேன். நான் தங்கியிருந்த ஹோட்டல் வாசலில் ஒரு டாக்ஸி பிடித்து, “காந்தி மண்டபத் துக்கு விடு…” என்றதும் “அது எங்கே இருக்குங்க…” என்று கேட்டான் அவன். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. 

“இந்தியாவில் இவ்வளவு வேகமாகக் காந்தியை மறந்து விட்டார்களா?” என்றேன். 

“ஓ! கிண்டிலே கீதே அத்தைச் சொல்றியா…?” என்று சிரித்தான், டாக்ஸி டிரைவர். 

என் இதயத்தில் கங்கை வறண்டது. குருதி வடிந்தது. 

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் இந்தப் பதினைந்து ஆண்டுகளில் தன்மொழி, தன்தேவை, தன்பிரச்னைகள், என்று மட்டுமே கவனிக்குமளவிற்கு மனப்பான்மையால் சுருங்கியிருப் பதைப் பத்திரிகைச் செய்திகள் எனக்கு உணர்த்தின. தேவை யானால் புதிய மாநிலங்களைப் பிரிப்பதற்குப் போராடும் மனநிலை கூடச் சில பகுதிகளில் இருப்பதாகத் தெரிந்தது. 

ஜனத்தொகையைக் குறையுங்கள்! ‘ப்ளான் யுவர் ஃபேமிலி’, என்ற குடும்பக் கட்டுப்பாடு விளம்பரங்கள் எங்கும் தென் பட்டன. 

சென்னையில் இருந்தபோது நான் ஒரு தமிழ் சினிமாப்படம் பார்த்தேன். அதில் மதுரையைச் சேர்ந்த கதாநாயகன் கும்ப கோணத்தைச் சேர்ந்த மாலதியைத் திருச்சி கல்லூரியில் படிக் கும் போது காதலித்து சேலம் ஏர்காட்டுக்கு எக்ஸ்கர்ஷன் போகிறபோது ட்விஸ்ட், கோ, கோ, முதலிய நடனங்களை ஆடிக் கொண்டே மலையேறுவதாக வருவதற்குள் இடைவேளை வந்து விட்டது. அதற்குமேல் நானும் எழுந்து வந்துவிட்டேன். ஒரு வேளை இடைநேரத்திற்குப் பின் இன்னும் என்னென்ன வருமோ? என் தேசத்துப் படங்களில் என்னுடைய மண்ணின் பழக்க வழக்கங்களோ, நடையுடை பாவனைகளோ இல்லை என்பதற்காக நான் வெட்கப்படத்தானே வேண்டும்? மறுபடியும் அன்று பாங்காக்கில் அந்த யூதன் கூறிய வாக்கியம் என் செவிகளில் ஒலித்தது. 

“யார் கண்டார்கள்? உங்கள் கங்கை ஒருவேளை இப்போது வற்றிப்போனாலும் போயிருக்கலாம்”. 

இரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் என்னோடு ஒரு பார்லிமெண்ட் உறுப்பினர் பயணம் செய்தார். 

ஓங்கோலில் டிபன் வரவழைத்துச் சாப்பிடும்போது இருவரும் மெல்ல அறிமுகமானோம். நான் பாங்காக்கிலிருக்கிறேன் என்று தெரிவித்ததும் அவர் சிறிது நேரம் பிரியமாக உரையாடினார். 

பாங்காக்கில் உள்ள நைட் கிளப்புக்களைப் பற்றி ஆர்வமாக விசாரித்தார்; ‘அமெரிக்காவில் ‘டாப்லெஸ்’ கூடாது என்கிறார் களாமே?’ என்று வருத்தப்பட்டார். 

“இந்தியாவைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள். நான் மிக வும் ஆவலாயிருக்கிறேன்…” என்றேன். 

‘இந்தியாவைப் பற்றியா? இந்தியாவிலே பேசறதுக்கு ஒரு மண்ணுமில்லே! ஒவ்வொரு நாடா உணவுக்கு கப்பரை ஏந்திக் கிட்டிருக்கோம்…” என்றார் அவர். 

எங்கள் இரண்டு பேரைத் தவிர எதிர்த்த வரிசையில் ஒரு கர்ப்பிணி தன்னுடைய பத்து வயதுச் சிறுவனுடன் அமர்ந்திருந் தாள். அடுத்து கௌபாய் சூட்டில் ஓர் இளைஞன். அவன் கையில் ஒரு ஃபிலிம்பேர் பத்திரிகை. அதைச் சுவாரஸ்யமாகப் படித்துக்கொண்டிருந்தான் அவன். படிக்காத நேரங்களில் கையோடு கொண்டு வந்திருந்த டிரான்ஸிஸ்டரை மெதுவாகத் திருகி இசையை இரசித்தான் அவன். 

கர்ப்பிணியோடு பேச்சுக் கொடுத்ததில் அவள் நாக்பூர் போக வேண்டுமென்று தெரிந்தது. மகாராஷ்டிரப் புடவைக் கட்டுக் கட்டியிருந்தாள். ஆங்கிலம் அவளுக்குச் சரளமாகப் பேச வந்தது. 

கௌபாய் சூட் பையன்-ஏதோ வெளிநாட்டு ஸ்காலர்ஷிப் பிற்காக டில்லியில் ஒரு இண்டர்வ்யூவுக்குப் போவதாகக் குறிப் பிட்டான், சென்னையில் ஏதாவதொரு பணக்காரக் குடும்பத் தைச் சேர்ந்தவனாயிருக்க வேண்டுமென்பதை அவன் தோற்றம் சொல்லியது. 

விஜயவாடா வருவதற்குள் அவன் என்னிடம் ஒரே ஒருமுறை தான் ஒரு கேள்வி கேட்டான்; 

அது வருமாறு: 

“பாங்காக்லே டெரிலீன் ரொம்ப சீப்பா கிடைக்குமில்லே…?” என்பது தான் அந்தக் கேள்வி. 

விஜயவாடா வந்ததும் மற்றோர் அதிர்ச்சி காத்திருந்தது. விஜயவாடா ஸ்டேஷனில் கலவரம் வலுத்திருந்தது. ஸ்டேஷனில் ஒரே சூன்யம். ரெஸ்டாரெண்ட்’ மூடிக்கிடந்தது. கடைகள் எதுவும் இல்லை. பிளாட்பாரத்தில் சோடாபாட்டில்கள் உடைந்து கிடந்தன. இரயில்கள் மேலும் போவது உறுதியில்லை என்ற நிலையை அறிந்தோம். ‘கார்டு’ ஒவ்வொரு கம்பார்ட்மெண் டாக வந்து கதவுகளையும் ஜன்னல்களையும் ஜாக்கிரதையாக மூடிக் கொண்டு உள்ளே இருக்குமாறு கூறிவிட்டுப் போய் விட்டார். 

பார்லிமெண்ட் உறுப்பினர், கார்டைத் தன்னைக் கட்டி ஸ்டேஷனிலிருந்து உள்ளூர் ஆந்திர பார்லிமெண்ட் உறுப்பினர் ஒருவருக்குப் ஃபோன் செய்து வரவழைத்து அவரோடு காரில் ஊருக்குள் போய் விட்டார். கர்ப்பிணியின் முகத்தில் பீதி தெரிந்தது. கௌபாய் சூட் பையன், “அடாடா! நாளன்றைக்கு இண்டர்வ்யூ வீணாகி விடுமே?” என்று அலுத்துக் கொண்டான். 

விஜயவாடா ஸ்டேஷனில் தொடர்ந்து நடந்த கலகங்களின் சின்னமாக வீசி எறியப்பட்ட கற்கள், பாதி எரிந்த ரயில் போகி கள், எல்லாம் தென்பட்டன. ஸ்டேஷனில் சரியாக விளக்குள் எரியவில்லை. பல இடங்களில் விளக்குகள் கல்லால் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. கர்ப்பிணியின் பையன், ‘பசிக்கிறது என்றான். அவள் பையனைக் கோபித்துக் கொண்டாள். கௌபாய் சூட் பையனிடம் கொஞ்சம் பழங்களும், பிஸ்கட்டும் இருந்தன. அங்கேயே வைத்துச் சாப்பிடக் கூசியவனாக அவன் அதை எடுத்துக் கொண்டு காரிடார்’ பக்கம் போய்விட்டான். 

பிறர் பசித்துக் கிடக்கும்போது தனியே தின்பதற்கு எடுத்துக்கொண்டு ஓடும் அந்த மனப்பான்மை என்னைத் துணுக்குறச் செய்தது. என்னிடமோ, அந்தக் கர்ப்பிணிப் பெண்ணிடமோ சாப்பிட ஒன்றுமில்லை. 

வெளிநாடுகளில் சகபிரயாணி புகைப்பிடித்தால் கூட ‘ஸிகரெட்’ என்று அருகிலிருப்பவரையும் வேண்டிவிட்டுப் புகைக்கத் தொடங்கும் பழக்கத்தைக் கண்டிருக்கிறேன். இந்தியா விலோ அருகிலிருப்பவர்களுக்குக் கொடுக்கத் தயங்கித் தனியே தின்பதற்கு எடுத்துக்கொண்டு ஓடுகிறவர்களைக் காண்கிறேன். இந்த நாட்டிலா கங்கை ஓடுகிறது? என்று மனம் கொதித்தது. கீழே இறங்கிப் போய், உணவுக்கு ஏதாவது வழி செய்ய முடியுமா? எனது கம்பார்ட்மெண்டில் ஒரு கர்ப்பிணியும் அவள் பையனும், நானும் பட்டினி’ என்று கார்டிடம் கேட்டேன். 

“இப்போதுள்ள நிலையில் எதுவும் முடியாது” என்று கைவிரித்து விட்டார் அவர். 

“நகருக்குள் போய் வாங்கவும் முயலாதீர்கள். நிலைமை ஆபத்தானதாக இருக்கிறது” என்று என்னை எச்சரிக்கவும் செய்தார் கார்டு. துணிந்து நானாக நகருக்குள் போகலாம் என்றாலும் ஸ்டேஷனைச் சுற்றி ஒரே இருட்டு. எதுவும் தெரிய வில்லை. அந்த நிலையில் போகவும் முடியாது. சோர்வோடு வண்டியில் வந்து உட்கார்ந்தேன். ‘கௌபாய் சூட் மேல் பெர்த்தில் படுக்கை விரித்துக் கொண்டிருந்தான். கர்ப்பிணி பயங்கலந்த குரலில் ஆங்கிலத்தில் ‘உணவுக்கு வழியுண்டா? என்று கேட்டாள். 

“ஒன்றும் சரியாயில்லை. எதுவும் கிடைக்காது போலிருக்கிறது! ஊருக்குள்ளும் போக வழியில்லை…” என்றேன். 

“நாக்பூரில் இந்தப் பையனின் அப்பா ஒரே கவலையாயிருப் பார். தகவலும் தெரிவிக்க முடியாது…” 

“கவலைப்படாதீர்கள்! எல்லாம் சரியாகிவிடும்… விடியட்டும்! பார்க்கலாம்!” 

விடிந்தது! ஆனால் எங்களுக்குத்தான் ஒரு வழியும் விடிய வில்லை. 

கார்டிடம் கேட்லாம் என்றால் கார்டையே காணவில்லை. இரயிலில் பல போகிகளில் ஆட்களே இல்லை. இறங்கிப் போய் விட்டார்கள் போலிருக்கிறது. 

என் பசி, என் எதிரே இருந்த கர்ப்பிணியின் பசி, குழந்தை யின் பசி, எல்லாமாகச் சேர்ந்து என்னைக் கவலைப்படச் செய்தன. எனது தாய் நாட்டிலா இப்படி நிகழ்ச்சிகள் ? அந்த யூதன் அன்று கூறியது மீண்டும் நினைவுக்கு வந்தது. ‘உனது தேசத் தில் இப்போது கங்கை வற்றினாலும் வற்றியிருக்கலாம்…” 

ஆம்! கங்கை வற்றித்தான் போயிருக்க வேண்டும். 

நான் சோர்ந்து உட்கார்ந்துவிட்டேன். கர்ப்பிணி சுருண்டு படுத்து விட்டாள். அவள் பையனும் தூங்கிவிட்டான். 

கௌபாய் சோப் டவல் சகிதம் பாத்ரூமுக்குள் நுழைந்தான். 

அடுத்த இரவும் விடிந்துவிட்டது. நான் இரயிலிலிருந்து இறங்கி நடக்கவும் சக்தியின்றியிருந்தேன். கர்ப்பிணியின் பையன் பெரிதாக அழுது கொண்டிருந்தான். அவளுடைய கண்களும் பஞ்சடையத் தொடங்கியிருந்தன. 

“டில்லிக்கும் ஹரித்துவாருக்கும் போகும் ஆசை இப்போது எனக்கு இல்லை. எப்படியாவது அந்தக் கர்ப்பிணிக்கு உணவு வாங்கிக் கொடுக்க வேண்டும். அந்த ஆசை நிறைவேறினாலே போதும்.”

நடுப்பகலில் சில ஆட்கள் ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாக வந்து, “இரயில் இன்னும் இரண்டு நாட்களுக்குப் புறப்படாது! சென்னைக்குக் திரும்பப்போகிறவர்கள் யாராவது இருந்தால் தலைக்கு ஐம்பது ரூபாய் கொடுத்து லாரியில் போகலாம் …” என்றார்கள். கௌபாய் சூட் உடனே புறப்பட்டு விட்டான். “நீங்கள் வரவில்லையா?’ என்று என்னைக் கேட்டான். நான் கர்ப்பிணியின் முகத்தைப் பார்த்தேன். 

அவள் பீதியோடிருந்தாள். ‘கௌபாய்’ ஐம்பது ரூபாய் கொடுத்து லாரிப் பயணம் புறப்பட்டுப் போய்விட்டான். 

இரயிலில் விளக்குகள் எரியவில்லை. பாத்ரூமில் தண்ணீர் வருவது நின்றது. 

மூன்றாவது நாளும் விடிந்து விட்டது. 

காலையில் யாரோ சமூக சேவகர்கள் உணவுப் பொட்டலம் கொண்டு வந்து வழங்கினார்கள். ஒரே கூட்டம்: கர்ப்பிணி நைப்பாசையோடு கீழே பிளாட்பாரத்தில் இறங்கி நின்றாள். 

“கூட்டத்தில் நீங்கள் போக வேண்டாம்! நான் வாங்கி வருகிறேன்,” என்று விரைந்தேன். மூன்று நாட்களாகப் பசித்த கூட்டம் முண்டியடித்துக் கொண்டு நின்றது. சிலர் உணவுப் பொட்டலங்களைக் கொடுப்பவர் வழங்கு முன் தாமாகவே புகுந்து சூறையாடினர். நாகரிகமடைந்த நாடுகளில் இப்படி வேளைகளில்கூட ‘க்யூ’வில் நிற்பார்கள். இங்கே ஏது அந்த நல்ல வழக்கம்? 

இடி மிதி பட்டது தான் மிச்சம். என்னால் உணவுப் பொட்டலம் வாங்க முடியவில்லை. என் நெஞ்சு வறண்டது. என் இதயத்திலிருந்த கங்கை ஏற்கெனவே வறண்டிருந்தது. 

நான் வெறுங்கையோடு தலைகுனிந்தபடியே அந்தக் கர்ப்பிணிக்கு முன் போய் நின்றேன். அப்போது அந்தப் பாதையாகத் தலைக்கு மேல் தலையை விடப் பெரிய முண்டாசு கட்டிய ஒரு முரட்டுத் தெலுங்கர் தாம் சிரமப்பட்டு வாங்கிய உணவுப் பொட்டலத்துடன் தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தார். 

அவர் கர்ப்பிணியைப் பார்த்ததும் தயங்கி நின்றார். தெலுங்கில் ஏதோ கேட்டார். எங்களுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. பேசாமல் தன் கையிலிருந்த உணவுப் பொட்டலத்தை அக்கர்ப்பிணியை நோக்கி நீட்டினார். அவள் வாங்கிக் கொள்ள மறுத்தாள், பையனிடம் கொடுத்துவிட்டு அந்த முரட்டுத் தெலுங்கர் மறுபடி உணவு கொடுக்கும் இடத்தை நோக்கி நடந்தார். 

“பாவம்! யாரோ பரோபகாரி! கொடுத்து விட்டுப் போகிறார். சாப்பிடுங்கள் அம்மா! பையனுக்கும் கொடுங்கள் ! நான் போய்த் தண்ணீர் கொண்டு வருகிறேன்” என்று புறப்பட்டேன். 

தண்ணீர் பிடித்துக் கொடுத்த பின், “நீங்களும் கொஞ்சம்…” என்று அந்தப் பொட்டலத்தைப் பங்கிடத் தொடங்கிய அவளை மறுத்து, ”நான் போய் மறுபடி முயன்று வாங்கிக் கொள்ள முடியும். இதைப் பங்கிட்டால் ஒருவருக்கும் காணாது…” என்று கூறிவிட்டுப் பொட்டலம் வழங்கும் இடத்தை நெருங்கினேன். 

அங்கே அசாதாரணமான அமைதி நிலவியது. இரண்டு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள். கூட்டத்தை விலக்கிக் கொண்டு புகமுயன்றேன். “யாரோ இரண்டாவது தடவை உணவுப் பொட்டலம் வாங்க முயன்றானாம். முதல் முறையே உணவு கிடைக்காத கோபக்காரன் ஒருவன் பக்கத்திலிருந்த ஸ்டேஷனின் மணியடிக்கும் இரும்புத் தண்டினால் இரண்டாம் தடவை வாங்க வந்தவனின் மண்டையைப் பிளந்து விட்டான். அங்கே போகாதீர்கள்! வீண் வம்பு!” என்றார் ஒருவர். 

எட்டிப் பார்த்தேன். 

ஆம்! அந்தப் பெரிய தலைப்பாகையோடு கூடிய முரட்டுத் தெலுங்கர்தான் இரத்தம் ஒழுக விழுந்து கிடந்தார். தலைப் பாகை விலகிச் சிறிது தொலைவு தள்ளிக் கிடந்தது. மண்டை யிலிருந்து குருதி பெருகித் தரையை நனைத்துக் கொண்டிருந்தது. என் உடல் நடுங்கியது. கண்கள் நீரைச் சிந்தின. 

“எனது தேசத்தில் கங்கை இன்னும் வற்றிவிட வில்லை! அதை நான் ஹரித்துவாரம் வரை போய்த் தெரிந்து கொள்ள வேண்டியது அநாவசியம். இதோ பெருகி வருகிறதே இந்த ஏழை விவசாயியின் குருதி; இதுவே கங்கைதான்” என்று எனக்குள் முணு முணுத்துக் கொண்டேன் நான். 

நான்காவது நாள் விடிந்தபோது என்னுடைய விடுமுறை நாட்கள் மிக மிகக் குறைந்து விட்டன. நான் பாங்காக் திரும்ப மட்டுமே போதுமான நாட்கள் இருந்தன. எனவே நான் விஜயவாடாவிலேயே இறங்கிப் பயணத்தை ரத்துச் செய்து சென்னை திரும்பிவிட்டேன்: கார்டிடம் அந்தக் கர்ப் பிணியையும் குழந்தையையும் ஒப்படைத்துவிட்டுத் தெற்கே புறப்பட்ட முதல் இரயிலில் நான் சென்னை வந்தேன். 

மறுநாள் பகலில் நான் மறுபடி பாங்காக் போவதற்காக விமானமேறிய போது, தற்செயலாக அன்று என்னிடம் கேட்கப் பட்ட அந்த யூதனின் கேள்வி நினைவு வந்தது. 

‘யார் கண்டார்கள்! உனது தேசத்தில் கங்கை இப்போது வற்றியிருக்கலாம் அல்லவா? ‘ 

‘இல்லவே இல்லை ! கங்கை என்பது ஒவ்வொரு இந்தியனின் இரத்தத்திலும் ஓடுகிற கருணையாக இருக்கும் வரை அது வற்றவே வற்றாது! கருணை பெருகாத இந்தியனை நான் இந்தியனாகவே நினைக்கமாட்டேன்’ என்று என் மனம் எண்ணியது. விமானம் மேலே பறந்தது. நாளை இரவு நான் மீண்டும் ‘பாங்காக்’கில் இருப்பேன். போய் வருகிறேன். வணக்கம்.

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

NaPa2 'நா. பா' என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப் பெறும் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1932ல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நதிக்குடியில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'பண்டிதர்' பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடும் சமர்ப்பித்தவர். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் சுமார் 50 நாவல்களையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *