கங்காஸ்னானம்!






“மாமா…”
ஈ.ஸி.சேரில் கண் மூடி சாய்ந்திருந்த சாரங்கன் குரல் கேட்டு கண் திறந்து பார்த்தார்.
எதிர்வீட்டு சடகோபன் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.
சடகோபன் தொடர்ந்து பேசினார். “மாமா! தீபாவளி வாழ்த்துகள். கங்காஸ்னானம் ஆச்சா?”
விறைப்புடன் நிமிர்ந்து உட்கார்ந்த சாரங்கன் “தீபாவளி வாழ்த்துகள் சரி. இதென்ன கங்காஸ்னானம் ஆச்சான்னு கேள்வி?”
கிழவர் எடக்கு மடக்காக பேச ஆரம்பித்தது தெரிந்தது. உஷாராக டீல் பண்ண வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது சடகோபன் மனதில்.
“அதில்ல மாமா! தீபாவளி ஸ்னாத்த கங்கா ஸ்னானம்னு ஆச்சான்னு எல்லாரும் ஃபார்மாலிடிஸூக்காக கேட்பாளோன்னோ…அது மாதிரி கேட்டேன்..”
“அது சரி. இங்க சென்னையில கங்கையா ஓடறதுது! ஏதோ ஸ்னானம் ஆச்சான்னு கேக்க வேண்டியது தானே! இப்படித்தான் தப்பு தப்பா பேசவேண்டியது. அப்புறமா ஃபார்மாலிடிஸூன்னு ஏடா கூடமா சொல்லி தப்பிச்சுக்க வேண்டியது…”
‘இதென்னடா வம்பாப் போச்சு! கங்கா ஸ்னானம் என்கிற வார்த்தைக்கு ஒரு வியாக்கியானமே கற்பிக்கிறாரே’ என நினைத்து சடகோபன் வேர்த்துப் போய் மலங்க மலங்க விழித்தார்.
சாரங்கன் தொடர்ந்தார். “ஓய்! நான் எஸ்.எஸ்.எல்.சி படிக்கற காலத்துல இங்க்லீஷ் பாடம் நடத்தற வாத்தியார். பேர் நியாபகம் இல்ல. ‘If you does not know grammar you can’t write or speak English well’ அப்படீன்னு ஆரம்பிப்பார். இங்க்லீஷ் தெரிஞ்சவா அமுக்கமா சிரிப்பா. தெரியாதவா அதையே ஃபாலோ பண்ணுவா. ஆனா மனுஷன் எழுதற போது சின்ன மிஸ்டேக் கூட செய்யமாட்டார். க்ளாஸ்ல அடிக்கடி உதாரணம் காட்டி அப்படியே தான் பேசிண்டுருந்தார். இதுக்கென்ன சொல்றீர்?”
சரிதான் விட்டால் கி.பி.யிலிருந்து கி.மு. வுக்கு மனுஷன் போனாலும் போவார் என நினைத்து தலையை சொரிந்து கொண்டவர் மனதில் சீக்கிரமே இடத்தை காலி செய்ய வேண்டும் என்ற உறுதியான எண்ணம் எழுந்தது.
“ஒரு இங்கிலீஷ் ஆசிரியர் அப்படி பேசினது தப்புதான் மாமா! ஒரு வேளை வேகமாகப் பேசும் போது டங் ஸ்லிப்பாகி வார்த்தைகள் தவறாக வெளிப்பட்டிருக்கலாம். இதை யாராவது பாயிண்ட் அவுட் பண்ணி அவர் கிட்டே சொல்லியிருக்கலாம். அதனால் தன் தவறை உணர்ந்து அவர் திருத்திக்க ஏதுவாக இருந்திருக்கும். அதைப் பற்றி இப்போ நாம பேச வேண்டியது இல்ல..சரி ரெஸ்ட் எடுங்க. நான் கிளம்பறேன்”
“ஓய்..இரும், இப்பவும் நீர் தப்பாத்தான் பேசறீர்.”
திடுக்கிட்ட சடகோபன், “மாமா..என்ன சொல்றீங்க, தப்பா பேசறேனா?” திரு திரு வென்று முழித்தார்.
“பின் என்ன! ரெஸ்ட் எடுக்காம நான் ஓடிண்டா இருக்கேன்!”
“சாரி மாமா! தப்புதான். மன்னிச்சிடுங்க!” இருகரம் குவித்து வணங்கினார்.
சடகோபனை கூர்ந்து பார்த்த சாரங்கன், “இது ஆத்மார்த்தமான பேச்சுதானே! உதட்டளவிலேர்ந்து வரல்லயே?” என கேட்க,
“சத்தியமான வார்த்தை! ஆளை விடுங்க சாமி!” என கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமல் தலைதெறிக்க ஓடினார் சடகோபன்.