ஓ! இந்த ஆண்பிள்ளைகள் என்னதான் செய்கிறார்கள்!?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 10, 2025
பார்வையிட்டோர்: 3,458 
 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அலுவலகத்திலிருந்து திரும்பிக் காரை நிறுத்தி விட்டு இறங்கும்போதே, வீட்டில் ஒரு அசாதாரணமான களை தட்டுவதாகப் பட்டது, ஈஸ்வரனுக்கு. 

‘என்ன ஒருவரையுமே காணவில்லை?’ என்ற கேள்வி எழும்போதே, 

‘ஓ… இன்று வெள்ளிக்கிழமை: அம்மா அப்பா கோவிலுக்குப் போயிருப்பார்கள்’ என்ற பதிலுங் கூடவே பிறந்தது. 

‘அப்படியானால், ராஜேஸ், விஜி, கலா எல்லோருமே கூடப் போய் விட்டார்களோ? இருக்காதே’. 

சிந்தனையுடன் ஈஸ்வரன் உள்ளே நுழையவும், கார்ச்சத் தங்கேட்டு அவன் மனைவி ராஜஸ்வரி வெளியே வரவுஞ் சரியாயிருந்தது. 

“எங்கே எல்லாரும்?” 

“மாமா மாமி, கலாவோடை கோவிலுக்குப் போட்டினம்'” என்ற ராஜேஸ், 

“விஜி” என்ற ஈஸ்வரனின் கேள்விக்குப் பதில் சொல்லாமலே உள்ளுக்குப் போய்விட்டாள். 


“ஆம்பிளையளெண்டா, எல்லாரும் ஒரு அச்சுத்தானோ?” ராஜேஸ் கோப்பியை நீட்டியபடி கேட்டாள். பத்திரிகையைப் பார்த்துக்கொண்டிருந்த ஈஸ்வரனுக்கு, அவள் கேள்வியோ அதில் ஒலித்த உணர்ச்சிகளோ ஒன்றுப் புரியவில்லை. 

”என்ன இது!… இருந்தாப்போலை…” 

அவள் தன் பாட்டில் தொடர்ந்தான்; அவன் கேள்விக்குப் பதிலில்லை 

“.. பெண்களெண்டா அதுக்கென்று உணர்ச்சிகள், ஆசாபாசங்கள், அவதிகள் ஒன்றுமில்லையே? ஆக, ஆம்பிளை யாய்ப் பிறந்தால்தான் ஒரு ‘இதே?’ உங்களெல்லாருக்கும் ஏதாவது பொறுப்புணர்ச்சி அல்லது மனுசத்தன்மையைக் கடவுள் வைக்க வில்லையே? உள்ளதெல்லாம் அவசரந்தான்; அந்தரந்தான?” 

மூச்சு விடாமல் பொரிந்த மனைவியைப் பார்த்த ஈஸ்வரனுக்கு ‘தான் செய்த தவறு, என்ன’, என்று புரியவில்லை. 

“என்ன, என்ன விஷயமெண்டு சொல்லிப்போட்டு ‘லெக்சர்’ அடியுமன்; கேக்கிறேன்…” 

“இது, ‘லெக்ச’ருமில்லை. ஒண்டுமில்லை… இருங்கோ சொல்லுகிறேன்.” – ராஜேஸ் முடிக்கு முன்பே, விஜியின் குரல் எங்கிருந்தோ கேட்டது. 

“மச்சாள்… ஒருக்கா இங்கே வாறியளே.” 

தங்கையின் குரலில் தொக்கி நின்ற கனம். ஈசுவரனுக்குப் புரிந்தும் புரியாமலுமிருந்தது. ராஜேஸ் போய்விட்டாள். 

கோப்பையைக் கீழே வைக்கும் போதே. பக்கத்தறையில் விஜியும் ராஜேஸுங் கதைக்கிற ஒலி கேட்டது. விஜியின் குரல் புரியவில்லை. ஏதோ ‘குசு குசு’ப்பதாகப்பட்டது. அதில். ஏதோ ஒரு பயம், கெஞ்சல் இரண்டும் தொக்கி நின்றனவோ? 

“அதுக்கென்ன விஜி!… என்ன நடந்திடும்?” ராஜேஸ் கேட்கிறாள் 

“…..” விஜியின்… பதில் கேட்கவில்லை. 

கொலையே பண்ணிவிடுவாரோ?..” ராஜேஸ் சிரிக்கிறாள். 

“எங்கே, அதையும் பார்க்கலாம்; என்னை மீறி உன்னிடம் வந்தால், கேள்” 

“எனக்கென்னவோ பயமாயிருக்கு மச்சாள்; அண்ணைக்குக் கோபம் வந்தா, அப்பா கூட கிட்ட வரார்” 

“இதுக்கென்ன விஜி, பயம்? நீ பாரேன்.” 

உரத்துக்கேட்ட ராஜேஸின் குரல், மீண்டுந் தணிந்து கேட்டது. 

“மாமா, மாமிக்குத் தெரியாதோ?” 

‘இல்லை” 

“கலாவுக்கு” 

“தங்கச்சிக்குத் தெரியாது..” 

தங்கையின் அறையை நோக்கி ஈசுவரன் நடக்கும் போதே கதவைச் சாத்தியபடி ராஜேஸ் வெளியே வந்து விட்டாள். கணவனி முகத்தைப் பார்த்ததும், ‘அவனுக்கு விஷயத்தின் முக்கியத்துவம் புரிந்திருக்கிறது’ என்பது. அவளுக்குத் தெளிவாகி விட்டது. 

‘ஆனாலும் என்னவென்று தெரியாதே!’ அவள் முகத்தில் ஒரு சிரிப்பு ஓடியது. அதில் குமிழியிட்டது கேலியா, வெறுப்பா? 

‘என்ன அமளி? இப்ப ஏன் இளிக்கிறீர்” ஈஸ்வரனுக்கு லேசாக சூடேறியது. 

“எங்கும் நடக்கிற அமளிதான்; எப்பவும் நடக்கிறது தான்” 

“என்ன எண்டு சொல்லுமன்?” 

“மேலே வாங்க சொல்ல…” – ராஜேஸ் மாடிப்படிகளில் ஏறினாள். 

“சரி, இப்ப சொல்லும்” 

“ஒண்டும் பெரிய விசயமில்லை…” – ராஜேஸ், சிறிது நிறுத்தி விட்டுச் சொன்னாள்; 

”விஜிக்கு யாரோ ‘லவ் லெட்டர்’ எழுதியிருக்கிறான்!” 

“என்னது?” – கதிரையில் சாயப்போன ஈசுவரன் துள்ளி எழுந்தான். 

“என்ன லவ் வெற்றரோ?….. காதல் கடிதம்! ஆர் எழுதினவன்? இவவும் மறுமொழி எழுதியாச்சோ, இல் லையோ…” கேள்விகளாக அடுக்கினான், முகம் சிவந்தது. 

“இதுதானா இரண்டுபேரும் ரகசியம் பேசினனீங்கள்?” 

கணவனின் கோபத்தைப் பார்க்க ராஜேஸ்வரிக்குச் சிரிப்பாயிருந்தது. 

அவன் ஆத்திரம் இரட்டிப்பாயிற்று. 

“எங்கும் ஒரே கதைதான்!” அவள் சொன்னாள். முகம், உணர்ச்சிகளற்று இறுகியிருந்தது. 

ஈஸ்வரனுக்கு, ‘சட்’டென்று ஏதோ நினைவிற்கு வந்தது. உள்ளத்தில் ஊமைக்காயமாக எதுவோ வலித்தது. 

நினைவில் நெருடிய அந்த ‘ஏதோ ஒன்று’ அவன் தன் மறதிக்காக வியந்து வருந்திய கணப்போதிற்குள் – விசுவரூபமெடுத்து அவன் சக்தியை உறிஞ்சி விட்டது. 

‘எங்கும் ஒரே கதைதான்’ என்ற ராஜேஸ்வரியின் வார்த்தைகளுக்கு, தெட்டத்தெளிவான அர்த்தத்தை அவன், விளங்கிக் கொண்டான். அந்த விளக்கத்தை அவளுக்கு அறிவிக்க அவன் நினைத்தானோ இல்லையோ, அவன் கண்கள் தாமாகவே சொல்லிவிட்டன. கணவனின் முகபாவத்திலிருந்தே, ‘அவன் பழைய நினைவுகளைப் பற்றிக் கழிவிரக்கத்தின் வாய்ப்பட்டு விட்டான்’ என்பதை அறித்த அவள் தன் அவசரத்திற்குத் தன்னையே நொந்தவளாய் – அவனைக் கழி விரக்கப்படச் செய்தற்குத் தானே வருந்தியவளாய்- 

“நான் சும்மா சொன்னேன், அத்தான்…” என்றாள். அவனது நினைவின் திசையை புரிந்துகொண்ட அவனும் “சும்மா இல்லை; உண்மைதான்” என்றான். 

இருவருக்குமிடைவில் நிலவிய மெளனத்திற்குத் துணையாய், காற்று அசைந்து கொடுத்தது. 


வீடு, தூங்க ஆரம்பித்து விட்டது. மேசை விளக்கின் வட்ட ஒளியில் ஏதோ படிக்க முயன்று கொண்டிருந்தவனை ராஜேஸ் நெருங்கினாள் 

“பதினொரு மணியாகுது ; நாளைக்குக் கந்தோரில்லையே?” ஈஸ்வரன் பதில் பேசாது திரும்பிப் பார்த்தான் திரும்பவும் அவன்தான் பேசினாள். 

”என்ன யோசிக்கிறீர்கள்?… நான் சொன்னதையோ. அல்லது விஜியைப் பற்றியோ?… இரண்டுமே சின்ன விஷயந்தான்!’ 

“சின்ன விஷயமோ?” – இவ்வளவு நேரமும் தன் பிழையையே எண்ணிக் குறைந்து கொண்டிருந்தபடியால், விஜியின் நினைவு பின்னணிக்குப் போய்விட்டிருந்தது. 

“விஜி! ஓ அந்தக் குழந்தைப் பெண்ணின் மனம் என்ன நினைத்ததோ?… அவளுக்கும் சிலவேளை இதிற் சம்மதமோ?” 

ஈஸ்வரனுக்கு, மனம் ஒரு நிலைப்படவில்லை. இந்த சாதாரண சம்பவத்திற்குத் தன் மனம் அலைபாய்வது, அவனுக்கே விசித்திரமாகப் பட்டது. இந்நிலையில், அதை வழிக்குக் கொண்டு வரவும், விஜியின் மன நிலையை அறிந்து சொல்லவும், ராஜேஸ் உதவக் கூடும் 

“ராஜேஸ்…” 

“என்ன?…” 

“நீர் சொன்னதாலை எனக்கொன்று மில்லை;ஆனா ஒரு உதவி செய்யும்” 

“இதென்ன இது?” அவளுக்குப் புரியவில்லை. அவன் தொடர்ந்தான். 

”நான், அப்ப உமக்கு ‘இப்படி ஒன்று’ எழுதினபோது நீ ரென்ன நினைத்தீர்? உம்முடைய மனம் அப்போது என்ன பதில் கூறியது என்று சொல்லும் . ஒன்றையும் ஒளியாமல், நினைவுக்கு வாறதெல்லாத்தையும் அப்படியே சொல்லும் என் மீது ஏதாவது கோபம் வந்திருந்தா அதையுஞ் சொல்லத் தான் வேணும்? சொல்லலாம். அன்றைக்கு நான் பிறத்தியான்; இன்றைக்கு, இரண்டு பேரும் ஒன்றல்லவோ? ஆனபடியால் நான் ஒன்றுக்கும் வருத்தப்பட மாட்டேன் – அப்படி அப்படியே சொல்லும் இதாலை இரண்டு பயன். ஒன்று. விஜியின் மனநிலை புரியும்; மற்றது, நான் முந்திச் பெய்த வேலையின் பயன் எப்படியிருந்ததென்று தெரியும்… 

அவனது இந்த நீண்ட பேச்சிலிருந்த உண்மைகளை அவளது மனமும் அப்படியே ஒப்புக்கொண்டு விட்டதாலும், இருவரது உணர்ச்சிகளும் ஒத்தே போன மையாலும், அவள் பேசத்தொடங்கினாள். 

“முதலிலை உங்கடை கடிதத்தைப் பார்த்த உடனே. எனக்கு அதிர்ச்சியாயிருந்தது, நான், அதை வெறுத்தேன் என்றில்லை: ஆனாலும், அதற்கு மிகவும் பயந்தேன். என் மனதில் அதுவரை ‘அப்படியான எண்ணம் எதுவுமே தலை யெடுத்திருக்கவில்லை ஆனால் உள் மனதில், என்னையறியாமல் ஏதேனும் பதிந்திருந்ததோ தெரியாது… நீங்கள் எழுதிய கடிதத்தை, ‘யாரது பார்த்து விட்டா’லென்கிற பயமே மேவி நின்றது. அதை ஏற்றுக் கொண்டுவிட்டால் என்ன என்று மனம் நினைத்தது. ஆனால், ‘அது ஒழுங்கற்ற செயல்’ எனப் பட்டதால் விட்டு விட்டேன்.. 

‘உண்மையிலேயே காதலென்றிருந்தாலும் ‘காதற் கடிதங்கள் காதலையே கொன்று விடும்’ என்று எங்கே? படித்திருந்தது என் நினைவிற்கு வந்தது… ஒருசமயம் நீங்களா – அறிவாளியும் குணவானுமாகிய நீங்களா – இதைச் செய்தீர்கள் என எண்ணினேன். கடிதத்தைக் கண்டவுடன், அதன் உள்ளிருந்த விஷயத்தை அறிந்தவுடன், ஒரு சலிப்பும் வியப்பும் தட்டியது உண்மைதான்… ஆனால். எல்லோரிடமிருத்தும் அதை மறைக்க முயன்றேன்; உங்களைக் காட்டிக் சொடுக்க மனம் ஏனோ விரும்பவில்லை இருந்தாலும், அண்ண எப்படியோ கண்டுபிடித்து விட்டார். அது வேறு கதை”. 

ராஜேஸ், சிறிது நிறுத்தி விட்டு. மேலே தொடர்ந்தாள் அரைமுறை இருளில், ஈஸ்வரன், அசையாமலிருந்து செவிமடுத்தான். 

“ஆனால் தினசரி. இந்தக் கடிதத்தின் நினைப்பு வரும். உணர்ச்சிகளேது மற்று, வெறுமனே நினைப்பேன்- சாதாரணமாக ஒவ்வொரு நாளும் நினைப்பேன். அதில், விருப்போ வெறுப்போ இருக்கரது. ஆனால், ஒவ்வொரு நாளும் இதை நினைக்கும் போதே மனம் என்னை யறியாம லேயே இருவரையும் இணைத்துப்பார்க்க ஆரம்பித்து விட்டது! ஆறு மாதங்களுக்குள்ளாகவே, எனக்கு உங்களிடம் ஈடுபாடு உண்டாயிற்று….” 

ராஜேஸ், இருந்தாற்போல மௌனமானாள். நாணல் அவளைக் கௌவி பிருக்கவேண்டும். ஈஸ்வரனின் முகத்திற் புன்னகை தவழ்ந்ததை அவள் கவனித்திருக்க முடியாது. பேச்சு, மீண்டுந் தொடர்ந்தது. 

“எனையறியாமலே இந்த ஈடுபாடு வந்ததற்குக் காரணம். ஏற்கெனவே உங்கள் மீதிருந்த அன்பும் மதிப்புமே. வெறுமையாயிருந்த என் உள்ளத்தில், உங்கள் கடிதம், மிகமிக மெதுவாக என்னையு மறியாமல் ஒரு சிறு பொறியைப் பற்ற வைத்துவிட்டது; அது நெருப்பாகக் கனிய வெகு நாட்களாகவில்லை”

”விஜீயின் விஷயத்தில், எப்படியோ என்னாகுமோ தெரியவில்லை. அவளுக்கு அவன் மேல் எப்படியான அபிப்பிராயம்” என்று தெரிந்தாற்தானே மீதியைச் சொல்லலாம்?” ராஜேஸ் கேள்வியில் முடித்தாள். 

இப்போதுதான் ஞாபகம் வந்தவனாக திடீரெனக் கேட் டான்; “யார் அவன்?” 

“சிவகுமாரன்!” 

“அவனா!” 

யாரென்று தெரியுமுன்பே-தனது சொந்த அநுபவத்தின் காரணமாக – அவனை மன்னித்து விட்டாலும், பெயரைக் கேட்டவுடன் ஈஸ்வரன் திகைப்புற்றான். 

” அவனா?!… நல்ல பொடியனாச்சே..” 

உங்களையும் முந்தி அப்படித்தான் அவள் முடிக்காமலே முறுவலித்தாள், ஈஸ்வரனும் புன்னகைத்தான். 

“பகிடியை விட்டுவிட்டு விஷயத்திற்கு வாரும். என்ன செய்யலாம்?”

”அவன், என்ன எழுதியிருக்கிறானென்று தெரியுமே?” விஜீ தன்னிடம் ஒப்படைத்த கடிதத்தை நீட்டினாள். 

அதில், அப்படியொன்றும் பைத்தியக்காரத் தனமான பேத்தல்களோ, சினிமா வசனங்களோ, இல்லை. சிவகுமார் சுருக்கமாகத் தனது மனத்துடிப்பை வெளிக்காட்ட முயன்றிருக்கிறான். ஒரு மாதத்தில், படிப்பு நிமித்தமாக வெளியூர் போகிறானாம். அதற்குள் அவள் மன நிலை தெரிந்தால் நிம்மதியாகப் போவானாம்…. 

ஈஸ்வரன், கடிதத்தை மனைவியிடம் நீட்டியபடி. “எல்லாம் காலையில் விஜியைக் கேட்ட பிறகு பார்த்துக் கொள்ளலாம்; எதுக்கும் விஷயம் எங்க மூன்று பேரோடையே இருக்கட்டும்” என்றான். 


அண்ணணின் குரல் கேட்டுப் பயந்து நின்றாள் விஜி, நேற்றே ஒரு பூகம்பத்தை எதிர்பார்த்தவள் அவள். 

ராஜேஸ்வரியின் பின்னால், அமைதியாகவரும் ஈஸ்வரனை அதிசயத்துடன் பார்த்தாள், விஜி. 

சிவகுமாரின் கடிதத்தை தங்கையிடம் நீட்டியபடி, அமைதியாக ஈஸ்வரன் கேட்டான். 

“இது என்ன?” 

அழுகையும் ஆத்திரமும் வெடித்துக் கொண்டு வந்தது விஜிக்கு. 

“யாரே மடையன்… காவலி ராஸ்கல்! கழுதை தனக்கு அப்படியிருந்தா எல்லோருக்கும் அப்படியே இருக்கும். என்று நினைச்சானோ? சத்தியமாக எனக்கொன்றும் தெரியாதண்ணை..” – விஜி ராஜேஸின் மேல் சாய்ந்தபடி கேவினாள். 

“அண்ணை, அவனைச் சும்மா விடதே” 

‘ஓ-விஜியின் மனம் இதுவா?’ – ஈஸ்வரனுக்கு, ஏதோ பாரங் குறைந்தாற் போலிருந்தது. 

‘அவனைச் சும்மா விடக்கூடாது.’ விஜி விம்மினாள்.

“போகிறான், கழுதை! விடு” 

கடிதத்தைத் தூளாக்கியபடி, ஈஸ்வரன் அறையை விட்டு வெளியேறினான். விஜியின் ஆத்திரம், அண்ணன் மேல் திரும்பினாலும் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. 

ராஜேஸ்வரிக்குப் புரிந்தது. 

– விவேகி, 01-09-1968.

– பார்வை (சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: சித்திரை 1970, யாழ் இலக்கிய நண்பர் கழகம், தெல்லிப்பளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *