கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 4, 2025
பார்வையிட்டோர்: 699 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வேம்புலுக்கு இப்போது எங்கே போகிறது என்று தெரியவில்லை. கால்போன திக்கில் நடந்தான். 

வேப்ப மரங்கள் பூத்திருந்தன. கறிவேப்பிலைகூடக் கொத்துக் கொத்தாய்ப் பூத்திருந்தது. அதில் ஒரு கொத்தை இழுத்து முகர்ந்தான். கறிவேப்பிலைப் பூக்கொத்து இவ்வளவு மணமாக இருக்கும் என்று அவனுக்கு இதுவரை தெரியாது. அப்படியே ஒரு கொத்தைத் திருகி எடுத்து முகர்ந்துகொண்டே நடந்தான். 

குளத்தங்கரையைக் கடக்கும்போது அதைத் தண்ணீரில் எறிந்தான். மீன்கள் ஓடிவந்து அதை முகர்ந்து பார்த்துவிட்டு ஒன்றும் பிரயோஜனமில்லை என்று திரும்பிப் போய்விட்டன. 

ரோட்டைப் பார்க்க நடந்தான். சித்திரை வெயில் மண்டையைப் பிளந்தது. பருத்தி மறிகைகளைப் பாரம் ஏற்றிக்கொண்டு வரிசையாய் வண்டிகள் போய்க்கொண்டே இருந்தன. 

வேம்புலு பார வண்டிகளில் ஒன்றிலேறி மறிகைகளின்மேல் உட்கார்ந்துகொண்டான். 

“என்ன தம்பி, தீர்த்தத்துக்கா?” என்று வண்டிக்காரர்கள் கேட்டார்கள். ‘ஆமா’ என்று தலையை ஆட்டினாலும் தீர்த்தத் திருவிழாவை இவன் நினைத்திருக்கவில்லை. 

எவ்வளவு நல்லவராக இருந்தார் இந்த மாமா. அம்மா அவருக்குக் கொடுக்கும் தின்பண்டங்களிலிருந்து கொஞ்சம் எடுத்துத் தனக்கும் பிரியமாகக் கொடுப்பாரே? 

சுப்பாலு மதினிக்குக்கூட சொல்லிமுடியலை. அவள் முந்திமாதிரி இல்லை. அவளோடு மாவாட்டும்போது தோசைமாவைத் தள்ளி விட்டுக்கொண்டே வருவான். மதினி ஆட்டிக்கொண்டே இவனை நமுட்டுப் புன்னகையோடு பார்த்துக்கொண்டே இருப்பாள். அந்தப் பார்வை புரிந்துகொள்ள முடியாதது. மனசுக்குள் ஒரு திடுக்கிடல் ஏற்படுத்தும். ‘மதினி! நீ வழக்கம்போல் இருக்கக்கூடாதா?” 

மாவைத் தள்ளிவிட்டுக்கொண்டே வரும்போது அவள்பக்கம் கையைக் கொண்டுபோகும்போது என்னவோ போலிருக்கும். அந்த மேலிலிருந்து பழுத்த பெண்வாடை மனசை என்னவோ செய்கிறது. 

“சர்தான், என்னமோ பொட்டப்பிள்ளைமாதிரிதான் வெக்கப் பட்டுக்கிடுதே!” 

பொட்டைப்பிள்ளை ஆயிட்டாக்கூடத் தேவலைதான் என்றி ருந்தது. காலையில் சீக்கிரமாகவே எழுந்திருக்க முடிகிறதில்லை. பொழுது நன்றாக வெளுத்துவிடுகிறது. அப்பா வந்து தட்டி உசுப்புவார். 

“எந்திலெ; ஏலேய், எந்தி,” எழுந்து, படுக்கையிலேயே உட்கார்ந்து கொள்வான். போர்வையைக் குவியலாக மடியில் போட்டுக்கொண்டு அப்படியே இருப்பான் திகைத்து. ‘இப்போ என்ன செய்கிறது. ஒண்ணுக்குவேற முட்டிக்கிட்டு இருக்கு. எப்படி எந்திருச்சி நிக்க?” 

அப்பா, நீங்களும், என்மாதிரி வயசில் இப்படி அவஸ்தைப் பட்டிருக்கணுமே. 

‘ஏ, மாவைப் பார்த்துத் தள்ளிவிடு. கையைக் குடுத்துக்கிடப் போறே?’ வீசிய மெல்லிய உப்பங்காற்று மதினியின்மேல் பட்டு அவளைக் கடந்து வந்தது. மதினி நன்றாக வேர்த்திருந்தாள். 

இந்தப் பிராயம் அவனைக் குடும்பத்திலிருந்தும் – சூழலிருந்தும் ஒரு அந்நியம் ஆக்கிவிட்டதுபோல உணர்வு, மலர்கள் வித்தியாசப் பட்டுவிட்டதுபோலத் தெரிவு. 

நிலைக்கண்ணாடிக்கு முன் போய் நிற்க ஆரம்பித்தால், அங்கிருந்து வசவு வாங்காமல் மீளமுடியாது. 

“குளிச்சீட்டு வர என்னலே இம்புட்டு நேரம்?” 

குளிப்பறைக்குள் போய் தாழிட்டுக்கொண்டால் தன்னையே தனிமையில் பார்த்து மாளலை. உடம்பு புதுசாக தன்னிலேயே புதுமை கட்ட ஆரம்பித்திருந்தது. 

தலைமுடி சீவச் சீவ படியமாட்டேங்கிறது. ஒரு நெளிவாவது வரக்கூடாதா? சில பயல்களுக்கு என்னமாய் நெளிவு விழுந்திருக்கிறது? எப்படிச் சீவினாலும் திருப்தி இருப்பதில்லை. 

இந்தப் பருக்கள் மனசை ரொம்ப ரொம்ப சங்கடப்படுத்துகிறது. முகம் இப்படி பலாப்பழ முட்காளகும்ன்னு யாரு நினைச்சா? தன்மேலேயே நினைக்க நினைக்க வெறுப்பும் வந்தது. 

வேம்புலு அப்போது அசிங்கமாக மாற ஆரம்பித்திருந்தான். குரல், தொண்டைகட்டிக் கரகரக்க ஆரம்பித்தது. நன்றாக இருந்த மார்பின் நுனிகள் தெல்லுக்காய்போல் திரண்டு கனமாகியது அவனைப் படுத்தியது. 

இந்தச் சம்மந்தக்காரர்களுக்கு என்னதான் வந்ததோ தெரியலை; அழிச்சாட்டியம் தாங்கமுடியலை. 

ஊஞ்சல் பலகையிலேயே இருப்புகொண்டிருக்கும் இந்த நொண்டி மாமா கொடுக்கிற ‘தும்பம்’ கணக்கில்லை. இப்போதைக்குள் செத்துத் தொலையமாட்டார் இவர். ரொம்பவும் பலசாலின்னு நினைப்பு. 

“நா நீட்ற கையெ மடக்குங்க பிலே பாப்பம்,” 

என்ன செய்தும் மடக்கமுடியாது கையை. மாமாவுக்கு சந்தோஷம் இதுதான். அவர் கலியாணம் கட்டிக்கிடலை. நொண்டிக்கு யாரு பொண்ணு கொடுப்பா. அவருண்டு அந்த ஊஞ்சல் பலகை உண்டு. கிட்டெப் போனா ஒரே போயிலை நாத்தம்; வியர்வைகூட புகையிலை நெடிதான். “மாப்பிளே! இந்தா பொடி வாங்கீட்டு வா.” எப்ப பாத்தாலும் தனியா இருக்கிறப்போ அசந்து மறந்துகிட்டே போயிட்டா அவ்வளவுதான்; சுத்தமோசம்! தந்திரமாய் ஏமாற்றி வேம்புலுவை எட்டிப் பிடித்துக்கொள்வார். இதனால் எப்போதும் அவன் சட்டை போட்டு உடம்பை மறைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. 

வீட்டிலே முன்னமாதிரி இல்லை. வெடுவெடு என்று விழுந்து கொண்டிருக்கிறார் அப்பா. 

சிறுவனாக இருந்தபோது பண்ணின அப்பாவைப்பற்றிய கற்பனை உருவம் உடைந்துபோனது. மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. இப்போது அவர் ரொம்ப சாமானியமாகப்படுகிறார். 

அண்ணாவின் அறைக்குள் அவருடைய உற்ற நண்பர்களோடு முழக்கமும் கலகலப்புக் கெச்சட்டமுமாக இருந்தது. அங்கே போய்க் கொஞ்சம் உட்காரலாமே என்று போனான். இவன் உள்ளே வந்ததும் எல்லோரும் சொல்லிவச்சதுபோல் சிரிப்பை நிறுத்திவிட்டு, ‘இவன் எங்கே வந்தான். இந்நேரத்திலே?’ என்று பார்ப்பதுபோலிருந்தது. 

“போடா, போய்ப் படி. பெரியாட்கள் என்னமும் பேசுவாக, இங்கென்ன சோலி! போய்ப் படி” 

வீட்டுத் தோட்டத்துப்பக்கம் மெள்ள நடந்தான். மரத்து நிழலில் அவனுடைய குட்டித் தங்கச்சியும், பக்கத்துவீட்டு இவள்சோட்டுப் பெண்குழந்தைகளும் வீடு கட்டி பொண்ணு மாப்பிளை வைத்து ‘ரகசியமாக’ விளையாடிக்கொண்டிருந்தார்கள். இந்தப் ‘பெரிய மனுசனைக்’ கண்டதும் அதுகளுக்கு ஒரே வெட்கமாகப்போய்விட்டது. 

“சின்னப்பிள்ளை விளையாடுற இடத்துலே பெரிய பிள்ளைகளுக்கு என்ன சோலியாம்?” என்று குட்டித்தங்கை அவனை விரட்டினாள். சிரிப்புதான் வந்தது வேம்புலுவுக்கு. தோட்டத்து வேலியைத் தாண்டி தன் சேக்காளி அர்ஜ்ஜுலுவைத் தேடிப்போனான். அங்கே வீட்டில் அவன் இல்லை. எங்கே தொலைந்து போனானோ நாசமாய்ப்போற பயல். 

வந்த தடம் தெரியாமல் திரும்பி வந்துவிட நினைத்தபோது ஒரு காட்சி அங்கே அவனைச் சற்று நிறுத்தியது. 

கண்ணாடியின் முன் நின்றுகொண்டு அர்ஜ்ஜுலுவின் தங்கை சுபத்ரா ஒரு நாளுமில்லாதபடி பெரிய மனுஷியாட்டம் ஒரு சேலையைச் சுற்றிக் கட்டிக்கொண்டு ஜடையை முன்பக்கமாக இழுத்து வைத்துக்கொண்டு அப்படி தன்னை அழகு பார்த்துக் கொண்டிருந்தாள். 

“வேண்டியதுதான், லச்சணத்துக்கு!” என்று நினைத்துக் கொண்டான். இவர்கள் மூவரும் ஒரே வகுப்பில் படிக்கிறவர்கள். 

தற்செயலாக அவள் திரும்பியபோது, இவனைப் பார்த்ததும் இவன் இருக்குமிடத்துக்கு ரொம்ப ஒயிலாக, ஆனால் சிரிக்காமல் நடந்து வந்தாள். வழக்கமில்லாத அவளுடைய அந்த முகவைப்பு அவமதிப் பாகப்பட்டது இவனுக்கு. 

இவனுடைய குறுகுறுத்த மௌனம் அவள் முகத்தில் ஒரு நமுட்டுச் சிரிப்பை வரவழைத்தது. 

“அர்ஜ்ஜுலு எங்கே?” வெடுக்கென்று கேட்டான். 

“வந்துருவான். வா; உக்காரு.” ஒரு மேட்டிமை கலந்த நளினத்தில் சொன்னாள். 

“நா போகணும்.” 

சங்கடமாய் இருந்தது அவளுக்கு. ரொம்பச் சிரமப்பட்டு சிங்காரித்துக்கொண்டிருக்கிறாள். பார்த்தவன் கேலியாகக்கூட ஒண்ணும் சொல்லாமல் போகிறது என்றால்…. 

முறைத்துக்கொண்டதுபோல அங்கிருந்து வேகமாகக் கிளம்பினான். 

வண்டிக்காரர்கள் நாட்டுப்பாடல்களை நீட்டிப் பாடிக்கொண்டே போனார்கள். அது ஒரு ஏக்கப் பாட்டு. பிரிந்துபோகிற ஒரு மனசு அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் சொல்லுவதாக அமைந்திருந்தது. பாட்டின் அர்த்தத்தை வேம்புலு கவனிக்கவில்லை. ஆனால் அந்த ஒலித் துயரம்தான் மனசை என்னவோ செய்தது. தான் நிரந்தரமாகக் குடும்பத்திலிருந்து துண்டுபட்டுப் போய்விட்டதாக நினைப்பு வந்ததும் கண்கள் பொங்கின. இறங்கி ஊரைப் பார்த்து ஓடுவமா என்று தோன்றியது. வண்டியின் லம்பலினால் தடுமாறியவன் பாரக்கயிற்றை இறுகப் பற்றிக்கொண்டான். 

வண்டிச் சவாரி நாலாட்டின் புத்தூரோடு சரி. அவைகள் அங்குள்ள ஜின்னிங் பாக்டரியைப் பார்த்து திரும்பின. இனி அவன் ரோடு வழியாக நடந்துதான் போகணும் கோவில்பட்டிக்கு. 

ஒரு சக கிராமத்தானுடைய வழித்துணை கிடைத்தது. அவனோடு பேசிக்கொண்டே நடந்தான். அவனுடன் சமமாக எட்டுப் போட்டு நடக்கமுடியவில்லை. “என்னா இளவட்டம் இம்புட்டுத்தானா நடை?” என்று கேட்டது சங்கடமாக இருந்தது இவனுக்கு. 

ஓட்டமும் நடையுமாக அவனைத் தொடர்ந்தான். நடக்கும் போதே வேம்புலுக்கு வயிறு பசித்தது. போகிற வழியிலுள்ள மாமரத்து கிணறில் இறங்கி தண்ணீர் குடித்து அலுப்புத் தீர முகம் கால் கழுவி, கொஞ்சம் களைப்பாறிவிட்டுத் திரும்பவும் போட்டி போட்டுக் கொண்டு எட்டி நடந்தார்கள். வயிற்றுக்குள் போன தண்ணீர் ‘கொடக், கொடக்’ என்று குலுங்கும் சத்தம் கேட்டது. கொஞ்சநேரத்தில் வயிறு வலிக்கிறமாதிரியும் இருந்தது. 

இவர்கள் நுழைகிறபோது, கோவில்பட்டி திருவிழா களைகட்டி யிருந்தது. ஒரே இரைச்சல், ஒலிச்சத்தம் – கூப்பாடு இப்படி எங்கே பார்த்தாலும் ‘முட்டாசு’க் கடைகள்; கரையான் புத்துமாதிரி உயரமாகக் குவித்து வைக்கப்பட்ட சேவுக் குவியல்கள். கருப்பட்டி நிறத்திலும் சீனி நிறத்திலும் வட்டமாக அடுக்கி ஒழுங்கு செய்யப்பட்ட முட்டாசு அரைத்தூண்கள். 

பீடிக்கம்பனிகளின் விளம்பரங்கள்தான் ஒலி எழுப்புவதில் போட்டிபோட்டு அதில் மும்மரமாய் ஈடுபட்டிருந்தன. ஒரு இடத்தில் பீடிகளை சூறை போட்டார்கள். வேம்புலு தனது காலடியில் வந்து விழுந்த ஒரு பீடியை எடுத்தான். அதைக் குடித்துப் பார்க்க ஆசை வந்தது. பற்றவைத்து ஒரு இழுப்பு இழுத்தவுடனே இருமலும் அருவருப்பும் வரவே தூரயெறிந்தான். இந்தக் களேபரத்தில் தன்கூட வந்தவனை எந்த இடத்தில் தப்பவிட்டானோ தெரியவில்லை. 

ஒத்தையிலேயே நடந்தான். பார்க்கிற காட்சிகள் ஒன்றுமே மனசில் எட்டவில்லை. ஆனாலும் நிற்காமல் நடந்து பார்த்துக்கொண்டே போனான். 

கோவில் மேட்டில் குடை ராட்டினம் – ஊஞ்சல் ராட்டினங்கள் சுற்றுகிறதை – அதில் குழந்தைகளும், பெரியாட்களும்கூட கொந்தளிப் புடன் சுற்றுகிறதை கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருந்தான். பலூன்களின் விதங்கள், குழல் ஊதல்களின் ஓசைகள், யாவற்றையும் விட கூடியிருந்தோரின் மனங்கள் நிறைந்த ஆனந்தத்தால் துள்ளின. 

நேரம் ஆக ஆக வேம்புலு சோர்ந்தான். இனி செய்வதின்னது என்று தோன்றவில்லை. அங்கே ஓரிடத்தில் கொஞ்சம் ஒதுக்கத்தில் நாலைந்து இளைஞர்கள் சுத்தமாக உடுத்தி, பார்க்க அந்தஸ்தாகக் காணப் பட்டார்கள். இவர்கள் ஒருவேளை இங்கேயுள்ள பெரிய பள்ளிக் கூடத்தில் படிப்பவர்களாக இருக்கலாம். 

தங்களையே பார்த்துக்கொண்டு வரும் இவனை அவர்கள் ஒரு பிரியத்தோடு பார்ப்பதுமாதிரி இருந்தது. அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு நறுக்கிய கொய்யாப்பழம் இருந்தது. கடித்துத் திங்க வேண்டிய பழத்தை ஆரஞ்சுச்சுளைபோல அழகாக நறுக்கித் திங்க ஆரம்பிக்கும் வேளை வேம்புலு கொஞ்சம் தயங்கினான். தலையை ஆட்டி அவர்களே கிட்டே வரும்படி கூப்பிட்டார்கள். என்ன ஏது என்று கேட்காமலேயே ஒவ்வொருவரும் ஒரு நறுக்கலை இவனைப் பார்த்து நீட்டினார்கள். வேம்புலுவின் கை நீளவில்லை. 

“என்ன வேணும்?” என்று கேட்டார்கள். தன்னுடைய ஊர் இன்னது என்றும், இங்கே ‘தீர்த்தம்’ பார்க்க வந்ததாகவும், தனக்குத் தெரிந்த ஒரு வீடு இங்கே உண்டென்றும், ஆனால் அது எங்கே இருக்கு என்று தெரியலை என்றும் சொன்னான். 

“அந்தத் தெருவோட பெயர் தெரியுமா?” 

தெருவுக்குக்கூட பெயர் உண்டா? ஊருக்குத்தான் பெயர் உண்டு. “ஏதாவது ஒரு அடையாளமாவது ஞாபகம் இருக்கா ?” 

இவன் மனசில் சட்டென்று ஞாபகத்துக்கு வந்தது. அந்தத் தெருவில் ஒரு அவிழ்த்துப்போட்ட தேர் நிற்கும். அந்தப் பிள்ளைகள், “அவுத்துப் போட்ட தேர்” என்கிற வார்த்தையைக் கேட்டது வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டார்கள். 

அவர்களிலிருந்து ஒருவன் முன்வந்து இவனைக் கூட்டிக்கொண்டு அந்தத் தெருவுக்குப் போனான். போகும்போது கொடுத்த கொய்யாப்பழத்தின் ஒரு நறுக்கலை வேம்புலு வாங்கிக்கொண்டான். நிஜமாகவே அந்தப் பழம் ரொம்ப இனிப்பாக இருந்தது. 

தெருவில் அந்தத் தேரைப் பார்த்ததும் வீடு தெரிந்துவிட்டது. 

– தினமணி கதிர், ஜூலை 1980.

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *