ஒளிக்கீற்று..!




(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நேரம் பிற்பகல் மூன்று மணிக்கு மேலாகிறது. வீட்டிற்குள் புழுக்கம்.. மனதிற்குள்ளும்… காதைக் கிழித்துக் கொண்டிருந்த வானொலிப் பெட்டியை நிறுத்தினார். துவாயை உதறித் தோளில் போட்டுக் கொண்டு கைத் தடியை எடுத்துத் தட்டித் தட்டிப் பார்த்தவாறு கார்த்திகேசு மாஸ்ரர் வீட்டுப் படியால் மெல்ல இறங்கி நடக்கிறார்.
வளவில் கறுத்தக்கொழும்பான் மாமரம் இந்தத் தடவை அதிகமாகக் காய்த்திருக்கிறது. அடிவளவில் உள்ள விளா மரத்தால் பழங்கள் விழுந்துகிடக்கின்றன. பலா மரமும் பெரிய அளவுகளில் காய்த்திருக்கிறது.
கண்கள் இரண்டும் நன்றாக மங்கிப்போய்விட்டன. பார்வை துப்பரவாகத் தெரியவில்லை. காலை வேளையில் மாத்திரம் சிறிது ஒளிக்கீற்றுப் போல் தெரியும். அந்த ஒளிக்கீற்றில்கூட எந்தப் பொருளையும் அடையாளம் காண்பது சிரமம்.
கைத்தடியின் உதவியுடன் காலடியை கணக்காக வைத்தவாறு அவரால் வளவில் எந்த மூலைக்கும் தட்டுப்படாமல் போய்வர முடியும். மாமரத்தின் கீழ் போடப்பட்டிருந்த சாய்மனைக் கதிரையைக் கைத்தடி யால் ஒரு தட்டுத் தட்டிவிட்டு அதில் மெல்ல சாய்ந்தார். மாமரச் சருகொன்று அவர் மார்பில் பறந்துவந்து விழுந்தது. அதனைக் கீழே தட்டிவிட்டவரின் எண்ணங்கள் பின் நோக்கி நகர்கின்றன……….
மூத்த மகள் தாமரைச்செல்வி… அவளது மூன்று செல்லப் பெண் குஞ்சுகள். அவர்களைத் தூக்கித் திரிந்த, மழலை பொழிந்த ஒவ்வொரு கணங்களும் நினைவுத் திரையில் வருகின்றன… ஏதோ விதமான விம்மல்…! கண்கள் கனத்தன… பெரிதாக ஒருமுறை செருமி.. நெஞ்சுப் பாரத்தைக் குறைக்க முயற்சித்தார்.
பயிற்றப்பட்ட ஆசிரியராகக் கடமையாற்றி, பிற் காலத்தில் ஒரு மகாவித்தியாலயத்தின் அதிபராகி ஓய்வு பெற்றவர் கார்த்திகேசு. வளைந்து கொடுக்காத பிடிச்சிராவிக் குணம். சற்றுக் கொதிக்குணம் கொண்ட கார்த்திகேசுவிடம் எந்த வேளையிலும் எதிர்த்தொரு வார்த்தைதானும் பேசாத பணிவுள்ளம் கொண்டவர் அவர் மனைவி யோகேஸ்வரி.
முதல் பிள்ளையும் கடைசிப் பிள்ளையும் பெண்கள், நடுவில் மூன்று ஆண் பிள்ளைகள். பெண் பிள்ளைகள் இருவரையும் யாழ் நகரின் பிரபல மகளிர் கல்லூரி ஒன்றில் தான் சேர்த்துப் படிப்பித்தார். க. பொ. த. உயர்தரப்
பரீட்சை சித்திபெற்ற மூத்த மகள் செல்விக்கு தமிழ் இலக்கிய இரசிகத்தன்மை அதிகம். கவிதை, கதை, கட்டுரை வாசிப்பதில் அலாதிப் பிரியம். கவிதைகள் சிலவும் எழுதிப்பார்த்தாள். ஒரு நாள் தான் படித்த கல்வி நிலையத்தில் நடை பெற்ற நூல் வெளியீட்டு விழாவிற்குத் தன் தோழியுடன் சென்றிருந் தாள். மேடையில் முழங்கிய ஒரு கவிஞன் அவள் மனதில் நிறைந்து விட்டான். அவன் கவிதைகளை உச்சரித்தவிதம், பேச்சின் உணர்ச்சி, அவன் தோற்றம் எல்லாம் அவளை…
கார்த்திகேசு மாஸ்ரர் அந்த நாள் வரை, தினசரி கடமை முடிந்து பாடசாலையால் வரும்போதும், பத்தொன்பது வயது நிரம்பிய, பருவ எழில் பொங்கி நின்ற தன் மகளை குழந்தையென்று எண்ணித் தானோ, இனிப்பு, ‘கன்டோஸ்’ அல்லது பழவகை ஏதாவது கொண்டுவந்து “செல்வி..” என மகளை அழைத்து அவளிடம் கொடுத்து மகிழ்ந்தவர்..
மகளின் காதல் செய்தி காதில் விழுந்ததும் திக்கித்துப் போய் விட்டார். அவரால் நம்பவே முடியவில்லை. அன்பு பொழிந்த மகளிடம் முகம் கொடுத்துப் பேச முடிய வில்லை. சாப்பிடவும் முடியாமல் சில தினங்கள் தவித்தார். முகச்சவரம் செய்யாததால் தாடியும் கடிக்கத் தொடங் கியது. பாடசாலையில் சக ஆசிரியர்களிடம் வழமை போலச் சரிவரப் பேசமுடியவில்லை. சக ஆசிரியரும் கார்த்திகேசுவின் உற்ற நண்பருமான வேலுப்பிள்ளை மாஸ்ரர் அன்று பாடசாலை மதிய இடைவேளையின் போது…
“என்ன மாஸ்ரர்.. இந்தக் கோலம்… ஒரு கிழமையா கேக்கிறன்… ஒண்டுமில்லை.. ஒண்டுமில்லையெண்டு.. பேசாமல் போறீர்… என்ன.. பிரச்சினை… என்னட்ட சொல்லும்.. என்னால் உதவ முடியுமெண்டா.. உதவுறன்…” என்றார்.
“ஒண்டுமில்லை…” கார்த்திகேசரின் கண்கள் கலங்கு கின்றன. “மாஸ்ரர்… என்ர… பிள்ளை… மூத்த மகள்.. என்ன செல்லமா… வளர்த்தனான்… ஆரையோ.. விரும்பு றாளாம்..” கிணற்றுக்குள்ளிருந்து வந்த குரல்போல
வேலுப்பிள்ளையர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.
“கார்த்தி…அட.. இதுதானா… விஷயம்.. இதுக்குத் தானா… தாடி வளத்துக் கொண்டு… யோசிச்சுக்கொண்டு திரியிறாய்… இது இந்தக் காலத்தில சின்ன விஷயமப்பா… அந்தந்த வயசில இப்படி ஏதும் குறுக்கிடும்தான்… ஒண்டு சொல்லட்டோ… பிள்ளைக்கு கல்யாணத்தைச் செய்து வையன்…”
‘ஆரைச் செய்து வைக்கச் சொல்லுறாய்…” என்று சற்று உரக்கக் கேட்டார் கார்த்திகேசர்.
“பிள்ளைக்குப் புத்தி சொல்லி ஒரு நல்ல இடத்தில செய்து வையன்..”
“அவள் வளந்து நல்லாப் படிச்சு உத்தியோகம் கிடைச்ச வுடன என்ர அக்காவின்ர மகனைத்தான் செய்துவைக்க வேணுமெண்டு.. அக்காவோட எப்பவோ கதைச்சு வைச்சனான்..இப்ப இதைக் கேள்விப்பட்டவுடன்.. என்னால் நம்ப முடியல்ல..அவள் குழந்தைப் பிள்ளை.. போன கிழமையும் பள்ளிக்கூடத்தால நான் போனவுடன்.. ‘அப்பா.. சொக்களேற்.. கொண்டந்தனீங்களோ..’ எண்டு ஓடிவந்தவள்.. அவள் எப்படி…….?”
“எட.. என்னப்பா..நீ.. ஐம்பத்திரண்டு வயதுக்கு மேலாகியும் சின்னப்புள்ள மாதிரி பேசுறாய்.. பிள்ளைக்கு இப்ப என்ன வயது.. அவள் பெரிய பிள்ளை.. பத்தொன்பது வயது முடிஞ்சுதெண்டு சொன்னனீ…. .. சரி… சரி.. நான் சொன்னபடி செய்.. ஒண்டுக்கும் யோசிக்காதை..! ஒண்டு சொல்லுறன்.. பிள்ளை விடாப்பிடியா நிண்டா.. புத்தி சொல்லிப்பார்..! இல்லாட்டி அதிகம் ஒண்டும் யோசிக் காதை.. கடுமையா பேசிப்போடாத… இந்தக் காலத்துப் பிள்ளையள்… அந்தப் பெடியனையே விசாரிச்சுச் செய்து வை..” என்று இழுத்தார் வேலுப்பிள்ளை மாஸ்ரர்.
“நான்.. நம்ம சிநேகிதன் பண்டிதர் நல்லதம்பியிட்ட விசாரிச்சனான். பொடியன் நல்ல இடத்துப் பெடியன் தான். பண்டிதர்ர சொந்தக்காரப் பெடியன் தானாம்… என்று மெல்ல இழுத்தார் கார்த்திகேசர்.
“பின்னென்ன…… யோசிக்கிற.. அவங்கள் அந்த மாதிரி இடத்து ஆட்களப்பா… அறிவாளிகள்.. படிச்ச பரம்பரை யள்.. எல்லாம் நல்லதா நடக்கும்.. ஒப்பேற்றிவை..சரியே..” என்று முத்தாய்ப்பு வைத்தார் வேலுப்பிள்ளையர்.
கார்த்திகேசு மாஸ்ரருக்கு மனது ஓரளவு தெளிந்தது. ‘கன்டோஸ் பக்கெற்’றுடன் வீடு சென்றார். மகளை அன்பாக அழைத்து ‘கன்டோஸை’ கொடுத்து விபரம் கேட்டார்.
‘ஒரு கிழமைக்குப் பிறகு இண்டைக்குத் தான் மகளோட அன்பா பேசுறார்.. மனைவி யோகேஸ்வரிக்கும் மனது குளிர்ந்தது. மகளின் பிடிவாதத்தை அறிந்துகொண்ட மாஸ்ரர், மௌனமாகச் சம்மதத்துக்கு சமிக்ஞை காட்டினார். ஆனாலும் உரிய முறைப்படி இரு பகுதியினரும் பேச்சுக்கள் நடத்தித் திருமணம் ஒப்பேற ஆறு வருடங் களுக்கு மேலாகிவிட்டது.
மகளும் மருமகனும் அரசாங்க உத்தியோகம் பார்க்கத் தொடங்கி விட்டனர். அடுத்தடுத்து மூன்று பேரப் பிள்ளைகள்.. பெண் குஞ்சுகள்..!
மூத்த பேத்தி இளநிலா.. பப்பாப்பழம்போல.. இள மஞ்சள் நிறத்தில்.. அத்தனை பேருக்கும் செல்லச் சிட்டு… அழகாலும் அறிவாலும் அனைவரையும் ஈர்த்திடுவாள்… இரண்டாவது பேத்தி… நாவல் பழத்தழகி. பேரனின் பிரியத்துக்குரிய சூட்டி..இரவும் பகலும் பேரனின் தோளில் கிடந்தால் தான் அவளுக்கு உறக்கமே வருமாம்.! மூன்றாமவள் வார்த்தெடுத்த சித்திரம். ஆறு மாதக் குழந்தையாக…….
அத்தனையும் நினைக்க.. நினைக்க… பொங்கி வருகிறது விம்மல்..கண்ணீர்.. கண்களை மூடி மூடித் திறக்கிறார். வாயைக் கையால் பொத்தி.. செருமி..செருமி..நினைவுத் தொடரில்…..
யுத்த மேகங்கள்.. கொடுமைகள் மனித உயிர்கள் மலிவாகிப் போய்விட்டன.. தினசரி ஏக்கடி.. ‘பங்கர்’ வாழ்க்கை.. பொருட்கள் தட்டுப்பாடு.. ஆயுதங்கள் முதன்மையாகிவிட்டன.
மகள் குடும்பம் புலம்பெயர்ந்து சென்றுவிட்டது. அதேபோல மூன்று ஆண்மக்களும் புலம்பெயர்ந்து விட்டனர். கடைசி மகளும் நுண்கலைப் பட்டதாரியாகிக் கலியாணமும் ஒப்பேறி புலம் பெயர்ந்து விட்டனர். மனைவி யோகேசு மாத்திரம்…… வெறுமையான வாழ்க்கை..கடிதங்கள் தான் உறவாடிக்கொண்டிருந்தன..
சருகுகளின் மேல் கோழி, நாய், பூனை நடந்து சிறிது சலசலத்தாலும்.. ‘ஆரோ வருகினம்… என்ர பேத்தியள் வாறாங்க..’ என்றுதான் அந்தச் சத்தத்தை உற்றுக்கேட்பார்.
எல்லாப் பிள்ளைகளுக்கும் திருமணமாகி பதின்மூன்று பேரப் பிள்ளைகள் வந்துவிட்டனர்.
‘ஏதோ மனுசி யோகேசோட.. எல்லாம் பேசிப் பேசி ஒருவாறு பொழுது போச்சுது.. இரண்டொருக்கா.. பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும்….. அவளின்ர.. நாலா வதாப் பிறந்த பெடியன்.. என்ர பேரனையும்..இன்னும் பாக்க முடியல.. பாப்பம்… அவங்களுக்கும் காலம் சரி வந்ததும் வருவினம்.. அது மட்டும் என்ர சீவன் கிடக்கும்…ம்…..’
‘கண் பார்வை மங்கினாலும் கண்ணாக எனக்கிருந்த யோகேசும் ஒருநாள் காச்சல்ல ஒரு சொல்லு.. சொல்லாம போயிற்றா.. சட்டென வீசின காத்தில அணைஞ்ச விளக்குப்போல..யோகேசு சட்டென போயிற்றா… இப்ப.. இந்தக் கைத்தடியோட தான் பேசிக்கொண்டு வாழுறன்.. இரண்டு வருஷத்துக்கு முந்திக் கூட.. எல்லா இடமும் சைக்கிளில் போய் அலுவல் எல்லாம் பாத்து வந்தனான்…இப்ப.. இந்த கைத்தடி….’
‘பின்னேரத்தில்.. ஒரு போத்தல் பனங்கள்ளு கொண்டு வந்து தந்திற்று போனவன்.. இப்ப அதுக்கும் தட்டுப்பாடா போயிற்று…இரவு நித்திரை வாறதுக்காக.. ஒரு ‘றாம்’ சாராயம் எடுக்கிறன்.. ஆனாலும் சரியா நித்திரை வரமாட்டுதெங்குது….’
‘நேற்று வந்த கடிதத்தைப் பார்த்த பிறகு… என்னவோ.. ஒரு மாதிரி உசாரா இருக்குது… என்ர மூத்த மகள் குடும்பம் வருகுதாம். என்ர பேத்தி.. இளநிலா எப்பிடி வளர்ந்திருப்பாள்… யூனிவசிற்றிப் படிப்பு முடிச்சிற்றா ளாம்… சட்டப் படிப்பு படிச்சிருக்கிறாளாம்… இங்கிலிசும் பிரெஞ்சும் அந்த மாதிரிப் பேசுறாளாம்.. இங்க கொழும்பில சட்டப் பேராசிரியராயிருக்கிற சிறிய தகப்பனிட்டச் சொல்லி ஏதோ சட்ட ஆய்வு செய்யப் போறாளாம். யாழ்ப்பாண தேசவழமைச் சட்டத்தைப் பத்தின ஆய்வாம். என்ர பேத்தி… கொஞ்சக் காலம் இஞ்ச தங்கப் போறாளாம்……’
‘வந்த கடிதத்தை அந்த மனுசி வாசிச்சுக் காட்டின நேரம் தொடக்கம் எனக்கு முப்பது வயது குறைஞ்ச மாதிரி இருக்குது…’
‘சரி.. அடுத்த கிழமை பிள்ளை குடும்பம் வரமுதல் இஞ்ச எல்லா வசதிகளும் செய்துவைக்க வேணும்.. மாம்பழம், பலாப்பழம் எடுத்து வைக்கவேணும்.. அந்த மனுசியிட்ட சொல்லி விறாத்துக் குஞ்சுகளும் சேவல்களும் வாங்க வேணும்.. வீடு வளவு துப்பரவாக்கி, வீட்டுச் சாமான்கள் ஒழுங்காக்கவேணும்…’
ஓர் உரத்த செருமலுடன் கைத்தடியை எடுத்துத் தட்டித் தட்டிக் கொண்டு வீச்சாக நடந்து வீட்டுக்குள்வந்த கார்த்திகேசு மாஸ்ரர், வானொலிப் பெட்டி இருக்கு மிடத்தை அளந்து நடந்தமாதிரி நேரேபோய் அதனை இயக்கினார்.
‘நாளை முதல் கொழும்புக்கும் யாழ் நகருக்கும் நேரடி சொகுசு பஸ் சேவை ஒழுங்காக நடைபெறவுள்ளது. மதவாச்சியிலும் வவுனியாவிலும் மட்டும் சோதனை நிலையங்கள் இயங்கும். பயணிகள் சிரமமின்றி இரவு பகல் பிரயாணம் செய்யலாம்…’ எனச் செய்தியறிக்கை தொடர்ந்தது…
மாஸ்ரரின் கண்களில் ஒளிக்கீற்று.. சிறிது மின்னல் கோடுகள் தெரிந்த மாதிரி… எழுந்து கைக்கெட்டிய மாதிரி இருந்த சிறிய கிளாசு நிறைய ‘மென்டிஸ்’ சாராயத்தை ஊற்றி ஒரே மூச்சில் இழுத்தார். ஒரு செருமல்.. உசாராக…..மேசையில் அந்த மனுசி போட்டு மூடி வைத்திருந்த சாப்பாட்டைப் பல நாட்களுக்குப் பிறகு இன்று நிறைவாகச் சாப்பிட்டு முடித்தார். அவருக்கு வயது குறைந்துதான்விட்டது போலும்…!
– இளங்கோவன் கதைகள், முதற் பதிப்பு: வைகாசி 2006, உமா பதிப்பகம், கொழும்பு.